தமிழில் : யாழினி
*
மனதில் பெரும்தூரங்களில் மறைத்து கிடந்த நினைவுகளை கிளைத்துப் போடத்தான் வந்திருப்பான் இந்த பேனா வியாபாரி. என் நிம்மதியை கெடுக்கவே வந்திருக்கிறான்.
இன்றைய பகல் முழுவதையும் அறைக்குள்ளேயேதான் கழித்தாக வேண்டும்.மண் பானை நிறையத் தண்ணீரும், ஆறாம் நம்பர் பீடியையும் பரமேஸ்வரன் கொண்டு வந்திருந்தான். ஜீவனுள் குளிரை பரப்புகின்ற நீர் பானை நிறைய. நாலு மிடறு தண்ணீர் ஒரு பீடி. மீண்டும் தண்ணீர். மீண்டும் பீடி. இப்படியே இந்தப் பொழுதைக் கழித்தாக வேண்டுமென்பதுதான் இன்றைய நிலை.
ஜன்னல்களையும் கதவுகளையும் இறுக்க அடைத்து அறைக்குள்ளேயே முடங்க வேண்டும். இல்லையெனில் என் தனிமைக்கு உபத்திரவம் நேரும் வகையில் யாரேனும் வரக்கூடும். நான் மனிதர்களை அதீதமாக நேசிப்பவன் என்று பலரால் கருதப்படுகிறேன். அதில் எனக்கு சந்தேகந்தான். என்னை நெருங்கி வருகிறவர்கள் வெகுசிலர்தான். பெட்டிக்கடைக்காரன். பக்கத்து டீக்கடைக்காரன். இந்த வீட்டு சொந்தக்காரன் மற்றும் சில நண்பர்கள். இவர்களையும் வெறுக்கவும் பயப்படவும் செய்கிறேன். அதற்காகத்தான் கதவுகளில் மறைந்தே கிடக்கின்றேன். யாராவது அழைத்தால் கதவில் விடுபட்ட சிறிய துவாரம் வழியாக கண்டுகொள்ள முடியும். கீறலைப்போன்ற சிறிய துவாரம். இவர்களைத்தவிர வேறு யாருக்காகவும் கதவு திறக்கப்படுவதேயில்லை. வெகு நேர அழைப்புகளில் நா குழறி நான் உறங்கியிருப்பேன் என்றோ அல்லது செத்திருப்பேன் என்றோ போய்விடுவார்கள். செத்தவனிடத்தில் கடனை மீட்ட முடியாதே.
அணைந்த பீடியின் முனையை தீமூட்டி நாற்காலியில் குறுகி வழிந்தேன். மனத்தினூடே ஏதேதோ நினைவுகள். பணக்காரனாவதைப்போலவும் காதலியின் தந்தை என்னிடம் மன்னிப்பு கேட்பதை போலவும். இப்படியே பலதுமாக....
நடந்தேறவியலாத நினைவுகளை கலைத்ததது யாரோ கதவை தட்டும் சத்தம்தான். பயமும் வெறுப்பும் தோன்றுகிறது. ஒருவேளை தபால்காரனாவிருக்குமோ...? அவனது வரவைத்தான் மனப்பூர்வமாக எதிர்பார்க்கிறேன். கதவு துவாரத்தின் வழியாக பதுங்கி பார்த்தேன். அறிமுகமில்லாத ஒருவன் நின்று கொண்டிருக்கின்றான்.
" டப்.. டப்... "
"கொஞ்சம் கதவைத் திறக்கறிங்களா..? "
மறுபடியும் பார்த்தேன். இதுவரை பார்த்திராதவன். கடன் மீட்டிச்செல்ல வந்தவன் போலில்லை. இவனை முதல் முறையாகத்தான் பார்க்கிறேனென்பதை ஊர்ஜிதப்படுத்திய பிறகு சற்று கவுரவத்துடன் சத்தமாக கேட்டேன்.
" யார்ரா அது.."
"எக்ஸ்க்யூமி .."
"எவன்டான்னு கேக்கறேன்ல."
"உங்களப் பாக்கணும் சார்..."
"எவன்டானு கேட்டேனே..."
அவன் பெயரைக்கூறினான். நிச்சயமானது. நிச்சயமாக நான் பார்த்திராதவன். உள்ளே வந்தது எங்காவது கடன் வசூலிக்க வந்த ஏஜண்டாக இருந்தால் கொன்றுவிடவேண்டும். கதவைத்திறந்தேன். உள்ளே வந்தான். கருப்பான அதிக உயரமில்லாத மனிதன். வியர்வையில் நனைந்து இருக்கின்றான்.
"என்ன...?"
விவரம் இதுதான். வேலைதேடி பட்டணம் வந்திருக்கின்றான். எனது கதைகளை படித்தும் அதற்கு ஆராதகனாகவும் இருக்கின்றான். நல்ல கலைஞனாகும் எண்ணமுள்ளவன். ஆனால் பட்டணம் வந்ததது கலைஞனாகவல்ல.
ஊருக்குத் திரும்பிச் செல்லவேண்டும். கையிலுள்ள பணமெல்லாம் செலவாகிவிட்டது. அவனிடத்தில் ஒரு நல்ல பேனா பார்க்கர் பேனா இருப்பதாகவும், அதை வாங்கிக்கொண்டு கொஞ்சம் பணம் கேட்கிறான்.
"இதயம் நிறைந்த எனது ரசிகனே, நீ தவறு செய்துவிட்டாய்.. எனது பர்சில் கரன்சி நோட்டிருக்குமெனக் கருதிய நீ யாரப்பா..?" என கேட்கத் தோன்றியது. கேட்கவில்லை.
‘’இந்தப் பேனாவ பாக்கெட்ல குத்திட்டு நடக்கிறளவுக்கு நானில்ல. இதுவரைக்கும் உபயோகப்படுத்தினதுமில்ல.’’
அவனிடத்தில் அனுதாபம் தோன்றியது. எந்தக் கஷ்டங்களையும் அறியாது வளர்ந்திருக்கின்றான். உலகத்தை இப்பொழுதுதான் அறியத்தொடங்குகிறான். பணமிருந்தால் கொடுத்திருக்கலாம். பேனாவை வாங்காமலே. பேனா எனக்கு அவசியப்படுகிறதென்றாலும்..எழுதுகோலில்லாத எழுத்தாளன் நான்.
" நீங்க வேற எங்காவது போய் கேளுங்க" என அமைதியாக கூறினேன்.
அவன் மீண்டும் வேதனையுடன் கேட்டான்.
"ஏன் அப்படி சொல்றீங்க..?"
"கையில் பணமிருக்கறவங்க இங்க ஏராளமா இருக்காங்க. அவங்களத்தான் நீங்க கேட்டிருக்கணும் "
”ஒரு பத்து ரூபாய் போதும் சார். பெரிய உதவியா இருக்கும்."
பத்துரூபாய். கேட்கவே நடுக்கமாக இருக்கின்றது, அதைப் பார்த்து வெகு காலமாகிவிட்டது.
"ஒரு விஷயத்த தெரிஞ்சிக்குங்க.."
"என்ன..?'
"எங்கிட்ட ஒரு பைசாக்கூட இல்ல. ரெண்டு நாளாச்சு நான் சாப்பிட்டு. இன்னைக்கு ஒரு டீக்கூட குடிக்கல. வெளில போகணும்னா ஒரு அழுக்கில்லாத துணிகூட இல்ல."
"சார் நீங்க.... நீங்க நினைச்சா" என்றவன் பேனாவை வெளியில் எடுத்தான். இளம் நீல நிறமுள்ள தங்கம் மின்னுகிற பார்க்கர் பேனா .
"நீங்க ஒண்ணு செய்யுங்க. அதோ அங்க தெரியற பங்களா வீட்ல கேட்டுப்பாருங்க'
ஏதோ முனகியபடி வெளியேறினான். ஜன்னலையும் கதவையும் இறுக்க அடைத்து, பழைய நிலைக்கே மீளுகிறேன். பேனாக்காரனையும், அவனின் கஷ்டங்களையும் மறக்க முடிந்தது. ஆனால் பேனா மனதில் இருந்து மறையவில்லை. இளம் நீல நீறமுள்ள தங்க நிற மூடியுடன் பார்க்கர் பேனா.
என்னிடத்திலும் அப்படி ஒரூ பேனா இருந்தது. அதை இழந்திருந்தேன். இதைச்சுற்றி வேதனைகள் மட்டும்தான். ஓமனா தந்தது. தூரங்களுக்கு அப்பால், ஒரு சிறிய வீட்டில் என்னுடனான கனவுகளோடும் எதிர்பார்ப்புகளோடும் ஒதுங்கி வாழ்கிறாள்.
சிறு வயதில் இருந்தே அவளைத்தெரியும் என்றாலும், அவளுடைய உருவம் சரியாக அவ்வயதுகளில் நினைவில்லை. ஆறுவருடங்களுக்கு முன்பிருந்த முகம் தான் மனதில் தேங்கி நகர்கிறது.
ஒரு வாழை இளம் கன்றை போல வெளிறி மெலிந்த பன்னிரெண்டு வயதிற்குச் சொந்தக்காரி. இறக்கம் கூடிய பாவாடையுடன் அமைதியாக இருப்பவள், இன்று போல் இல்லை.
களங்கம் அற்ற கண்களில் உலகம் முழுவதையும், நிரப்பியபடி என்முன் நிற்பாள். கதவில் சாய்ந்து, விரல் நுனியில் நீண்டு படர்ந்த நகங்களால் கீறீய படியே, நான் எழுதுவதையோ, படிப்பதையோ பார்த்துக்கொண்டிருப்பாள். என்ன எழுதுகிறனென கேட்டதே இல்லை. ஆனால் அவள் கண்களுள் ஒராயிரம் கேள்விகள் இருக்கும்.
" என்ன ஓமனா?"
பேசமாட்டாள், முகத்தினின்று வழியத்தொடங்கும் வெட்கத்தோடே, கதவில் மறைந்து கொண்டு மறுபடியும் என்னைப்பார்க்கத் தொடங்குவாள். அவள் வளர்ந்திருக்கிறாள் என்பதை அறிந்து கொண்டேன்.
ஊரைவிட்டு வந்த பிறகுதான் அவளை அதிகமாக நினைக்கத் தொடங்கினேன். என் கனவுகளின் பெரும்பாகமாய் இருந்தாள். நூற்றுக்கும் அதிகமான கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் சிறிய அறைக்குள் தனித்திருக்கும் போதும், கிராமத்தைப் பற்றியும், அங்குள்ள சொந்தங்களையும் சிநேகிதர்களையும் நினைக்கின்றேன். தென்னந்தோப்புகளும், மணற்பரறப்பும் கவிதை வழிகின்ற கண்களோடு, நினைவுகளில் தெரிகின்ற அவள் முகமும்.
இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஊருக்கு வந்திருக்கிறேன். வீட்டில் உள்ளவர்க்கெல்லாம், பிரியப்பட்டவனாக இருந்தேன் அன்று. இன்று இல்லை. கல்லூரியில் படிக்கும் போது ராஜாவாக சுற்றித்திரிந்தேன். தற்போது வேலைக்காக காத்திருக்கும் ஒரு இளைஞனாக நிற்கின்றேன். ஓமனா வளர்ந்திருக்கிறாள். ஒன்பதாம் வகுப்பில் படிக்கிறாள். அவளது கண்களில் நட்சந்திரங்கள் உதிக்கத்தொடங்கியிருக்கிறது. கண்ணங்களில் ரோஜா இதழ் விரிகிறது. நான் சென்றதும் அவள் என்னை காண ஓடி வந்திருக்கவில்லை. அவளுடைய அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும் போது தான் பலமுறை தெளிவதும், மறைவதுமாக இருந்தது அந்த வானவில்.
சுவர்களுக்கு பின்னால் அவளின் சுவாசம் என் காதுகளுக்கு எட்டியது. மெள்ள கண்ணாடி வலையல்கள் இடைவெளி விட்டுவிட்டு சிரிக்கின்றது. சன்னல் கம்பியைப் பிடித்துக்கொண்டு சிகரெட் புகைத்து வெளியே பார்த்துக்கொண்டிருந்தேன். வளையோசை கேட்டுத் திரும்பினேன். ஓமனா நிற்கின்றாள்.
" என்ன கேக்கறதுன்னு தெரியலையா?"
”இங்கதானிருந்தியா"
பதில் இல்லை. முகம் தாழ்த்தி, நாற்காலியை விரல்களால் சுரண்டிக்கொண்டிருந்தாள்.
”ஓமனா என்னை மறந்திட்டியா?”
”நீங்க தான் மறந்திட்டீங்க”
………. மெளனம்.
எதுவும் பேசாதிருந்தாள்.
படபடக்கின்ற இதயத்தை நீவிக்கொண்டு கூறினாள்
”மறந்து வாழ முடியாது”
எல்லாம் மறந்த நிசப்தங்களில் பேசவற்ற நிலைக்கு சஞ்சரிக்க விட்டிருந்தாள். சினேகமுள்ள ஒரு புறாவைப்போல என் நெஞ்சோடு பற்றிக்கிடக்கிறாள். என் முத்தங்களுக்காய் காத்திருக்கிற அவள் உதடுகளிலும் கன்னங்களிலும் முத்தமிட்டேன்.
”ஓமனா நான் உன்னவன்.. உனக்கு மட்டுமானவன்” வெட்கம் கொண்டு சிவந்து கண் மூடி நிற்கின்றாள் முத்தம் வேண்டி.
”ஓமனா”
”ம்”
”உன்னைப் பார்க்கத்தானே வந்தேன். எனக்கு எதுவும் தரமாட்டியா?”
”என்ன வேணும்?”
”முத்தம்”
என் கையை கிள்ளிவிட்டு சொன்னாள்
”தேவையில்லாதது பேசாதிங்க”
”தேவையானதைத்தானே கேட்டேன்”
”ம்ஹூம்”
”தரலைன்னா இனிமேல் உன்னைப்பார்க்க வரவே மாட்டேன்”
சரியென்று வெட்கத்துடன் மெதுவாக என் உதடுகளில் உதட்டை ஒற்றி எடுத்தாள். காலடி ஓசை கேட்கவே சட்டென விலகி நின்றோம். குறத்திப்பூனை. எனக்கு சிரிப்பு வந்தது. அவளும் சிரித்தாள்.
”இந்தப் பூனையைக் கொல்லணும்”
”கஷ்டப்படுவேன், அது நான் வளர்க்கிற பூனை”
”அது தான் இவ்ளோ கொழுப்பு, பொறாமை.. பார்க்கிறது பாரு”
பூனை புரிந்து கொண்டாற்போல் வேறு அறைக்கு ஓடியது.
”பட்டணத்தில் இருந்து வரும்போது எனக்கு எதுவும் வாங்கிட்டு வரலையா’
எனது பையை பரிசோதித்தாள். ஒன்றும் இல்லை.
”இதென்ன புக்”
”பாரு”
புத்தகத்தை வெளியில் எடுத்துப் படித்தாள்.
”புத்தகத்தை வெளியிட்டிருக்கீங்க. எனக்கு ஒரு காப்பி அனுப்பலை’ என்றாள் கோபமாக
”உனக்காகத்தான் கொண்டுவந்தேன்”
”பொய், இப்பத்தானே சொல்றீங்க”
”நிஜமா, உனக்கு கதை படிக்கப்பிடிக்குமா?”
“எல்லோரும் எழுதறதைப் படிக்க மாட்டேன் கொஞ்ச பேரோடது மட்டும் தான்’
”யாரோடது?”
”ஒருத்தர் இருக்கார்”
”யாரது?”
”ம்ம்ம்….தெரியாது’
நான் அவளிடமிருந்து புத்தகத்தை வாங்கி, ஏடுகளை புரட்டிக்கொண்டு
”பேனா குடு”
”ஏன் உங்க கிட்ட இல்லையா?”
”இல்ல”
”எழுத்தாளர் நடக்கிறதெல்லாம் எழுதணுமே”
”என்கிட்ட பேனா இல்ல. என்னோடது எல்லாமே ஒரு குறும்புக்கார பொண்ணு பறிச்சுட்டா’
”நிஜமாத்தான் சொல்றீங்களா, பேனா இல்லையா?”
”இல்ல”
அவள் பேனா எடுத்து வந்தாள். இளம் நீல நிறமுள்ள தங்கம் போல் மின்னுகிற பார்க்கர் பேனா. அவளுடைய அப்பா கொடுத்தது. அவர் உத்தியோகமுள்ளவர். புத்தகத்தின் உள் தாளில், ‘என் ஓமனாவிற்கு’ என்று எழுதி நீட்டிய கையெழுத்து ஒன்றையும் இட்டுக்கொடுத்தேன்.
அன்று இரவே திரும்பினேன். ஏனோ இதயம் கனத்திருந்தது. வயல்வெளியில் இருந்து மண் மேடேறி திரும்பிப்பார்த்தேன். மூங்கில் காடுகளும், குளமும், சுண்ணாம்பு பூசிய வீடுகளும் தெரிந்தது. நினைவுகளில் இனிக்கின்ற கனவுகளோடு அந்த நீல நிற பாவாடையும் மெல்ல மறையத் தொடங்கியது.
பட்டணத்திற்கு திரும்ப அதிகாலை ஆகிவிட்டது. அறைக்கதவை திறக்க சாவியை எடுக்கும் போது தான் பார்த்தேன். இளம் நீல நிறமுள்ள தங்கம் போல் மின்னுகிற பார்க்கர் பேனா. அதைச்சுற்றி ஒரு துண்டுக் காகிதம். பிரித்துப் பார்தேன். இடப்பக்கத்தில் சாய்த்தபடி எழுதியிருக்கிறாள்.
“Forget me not”
பேனாவையும் துண்டு காகித்தையும் நெஞ்சில் பதித்தபடி, நாற்காலியில் சாய்ந்தேன். அவளது சிநேகம் அவசியப்படுகிறது எனக்கு.
அவள் செய்தது முட்டாள்தனம்தான். விலை கூடிய பார்க்கர் பேனா அது. பேனா எங்கே என அம்மா கேட்டால் என்ன சொல்வாள். என்னிடத்தில் கொடுத்ததையா? எங்காவது தொலைந்ததென்றோ யாராவது திருடி விட்டார்களென்றோ கூறியிருப்பாள். எதைச் சொல்லி இருந்தாலும் அதற்குத்தக்க கிடைத்திருக்கும்.
அந்தப்பேனா எனக்கு ஜீவனாக இருந்தது. யாருக்கும் கொடுக்கவில்லை. நண்பர்களுக்கு அதில் எதிர்ப்புதான். பெண்களுக்காக வக்காளத்து செய்பவன் என்று நினைத்தார்கள். அதில் எனக்கொன்றும் வருத்தம் இல்லை.
பேனா இன்னும் என்னிடத்தில் தான் இருக்குமென்று நினைத்திருப்பாள். ஆனால் பேனா என்னிடத்தில் இல்லை. போன வருடம் தான் அதை இழந்தேன்.
படிப்பு முடிந்ததும் தான் எதார்த்த வாழ்க்கைக்கும் கனவுகளுக்கும் உள்ள வேறுபாடுகளை அறியத்தொடங்கினேன். வேலைக்கென்ற எனது எல்லா முயற்சிகளும் பயனில்லாமல் போனது. இறுதியில் ஒரு வேலை கிடைக்காது இவ்வீட்டிற்கு வருவதில்லை என்ற லட்சியத்தோடு வீட்டை விட்டு வெளியேறினேன். எங்கெல்லாமோ சுற்றிக்களைத்து கடைசியில் இந்த நகரத்திற்கு வந்து சேர்ந்தேன். இங்கு ஏற்கனவே பழக்கப்பட்ட பத்திரிகைகளும் நண்பர்களும் இருந்தனர். துன்பங்களால் நிறைந்த கசப்பான அனுபவங்கள், மீண்டும் மீண்டும் தன்னை வரிசைப்படுத்திக் கொண்டே இருந்தது. பட்டினிகளை அறிந்தேன். நல்ல நட்பையும் அதன் ஆழத்தையும் தெரிந்து கொண்டேன்.
ஊரைப்பற்றியும் உறவுகளைப்பற்றியும் நினைக்கவேயில்லை. சகோதரர்கள் தாய் தகப்பன் எதையும் சிந்திக்கவேயில்லை. கையில் சல்லிக்காசில்லாது பட்டினிகள் தேகத்தை தளர்த்து போட்டிருந்தாலும், உதவிகேட்டு வீட்டிற்கு எழுதவில்லை. சகோதரர்கள் குடும்பமாக இருக்கிறார்கள். பிறகு அப்பாவிற்கு என் நிலை எழுதலாமென்றால் தன்மானம் இழக்கவும் விரும்பவில்லை. அப்பா ஏற்கனெவே என் விதியை நிர்ணயித்தவர். ‘உனக்கும் எனக்கும் எந்த உறவுமே இல்ல’. அப்பாவை எந்த குறையும் சொல்ல நான் தயார் இல்லை கௌரவமும் அபிமானமும் நிறைந்த குடும்பத்தலைவர். மருமக்கள் நல்ல உத்தியோகத்தில் இருப்பவர்கள். ஊரில் அப்பாவிற்கென்று நல்ல பேர் உண்டு, அப்படி ஒருவரின் மகன் சமூகத்தின் அவலங்களையும் கழிவுகளையும் எழுதி நிரப்புவதை எந்த தகப்பன் விரும்புவார். அது இயல்புதானே. அது தீவிரமானது தன் மகனுக்கொரு காதல் இருப்பது. அதுவும் அப்பாவிற்கு தெரியாமல் இருப்பதுதான்.
”ஏன்டா மீதி இருக்கிற நாலு பசங்க எனக்கு ஏதாவது கெட்ட பேர் வாங்கி தந்திருக்காங்களா?”
அது சரி தான். வாழ்க்கைத்துணையை தீர்மானித்ததன் பேரில்தான் அவர்களின் காதலும் அமைந்திருந்தது. அப்படியென்றால் லைசன்ஸ் உள்ள காதல். கடைசியாக அப்பாவின் கட்டளையும் இதுதான்.
’இனிமேல் அவளுக்கு கடிதம் எழுதக்கூடாது, அவள் வீட்டிற்கு போகக் கூடாது, அவளை விட்டுடு’
நான் அமைதியாக இருந்தேன்.
”என்னடா பதில் பேசமாட்டேங்கறே?”
”அவளை விடமுடியாது, அதுக்காக நீங்க காத்திருக்க வேண்டியதில்லை” என்றேன். அப்படி முகத்தில் அடித்தாற் போல் அப்பாவை பேசியது வருத்தமேதுமில்லை. இது போல காட்சிகளை சினிமாவிலும் நாடகங்களிலும், கதைகளிலும், இப்போது என் வாழ்க்கையில் நிஜமாகவும் பார்க்கிறேன்.
பணத்திற்காக யாரையும் அணுகவில்லை. பத்திரிக்கையில் இருந்து அவ்வப்போது ஏதாவது பணம் கிடைக்கும். சில நேரங்களில் நண்பர்களின் தயவில் காப்பியோ உணவோ கிடைத்துவிடும். உலகத்தில் எல்லாவற்றிலும் இருந்து அகன்று கரி படிந்த நான்கு சுவர்களை கொண்ட அறையில் சுருண்டு கிடக்கிறேன். இதற்கிடையில் தான் வீட்டில் இருந்து கடிதம். முகவரி ஒரு பத்திரிகை அலுவலகத்தில் இருந்து. எனக்கென்று சொந்தமாக முகவரி இல்லை. பெரியண்ணா தான் எழுதி இருக்கிறார்.
’….. வீட்டை விட்டுப் போனதிலிருந்து உன்னைப்பற்றி எந்த விவரமும் இல்லை. ராதாவிற்கு திருமணம் நிச்சயத்திருப்பது உனக்கு தெரியாது. …..’
ராதா என் தங்கை, அம்மாவின் அக்கா மகள்.
’…. கிழக்கு கோபாலகிருஷ்ண நாயர் தான் வரன்…..’
கோபாலகிருஷ்ணனைப் பார்த்திருக்கிறேன் அவ்வளவு நெருக்கம் இல்லை. நாற்பது வயதிருக்கும்.
’….ஏதோ உத்தியோகத்தில் இருக்கிறார்…இருநூறு ரூபாய் சம்பளம். நம்ம பாக்கியம்..இந்தக் கல்யாணம் முடிஞ்சா நமக்கு எந்த கஷ்டமும் இல்லை…நீயும் முடிந்தவரை ஏதாவது உதவணும்…’
நல்ல காரியம். ராதா குழந்தையாக இருந்தபோதே அப்பா இறந்துவிட்டார். அவளுக்கு ஒன்பது வயதாகும்போது அம்மாவும். என் அம்மா தான் அவளை வளர்த்தாள். அம்மா அவளிடம் பிரியமாக இருந்தாள் பெண் பிள்ளை இல்லாத காரணத்தால். எனக்கும் ஒரு தங்கை இருக்க வேண்டும் என ஆசை இருந்தது, ராதாவை சொந்தத்தங்கையாக நினைக்க அதுவும் காரணம். பெரியம்மா எப்போதும் கூறுவாள்
“ நீ தாண்டா அவளுக்கு செல்லம் கொடுத்து கெடுக்கறது”
பெரியம்மா இறந்திலிருந்து எந்த விதத்திலும் துன்பம் நேராது பார்த்துக்கொண்டோம். அவளை ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது தான் அம்மாவின் கனவு. அது நிறைவேறும் முன் அம்மாவும் இறந்துவிட்டாள்.
இதோ திருமணம் ஆகப்போகிறது. ஒரு மனைவியாகவும் தாயாகவும் எனது தங்கை சந்தோஷமாக வாழப்போகிறாள். நன்றாக வாழவேண்டும். திருமணத்தை கம்பீரமாக நடத்த வேண்டும். எங்கள் வீட்டில் இனியொரு விசேசம் இல்லை. நானும் ஏதாவது உதவியாக வேண்டும். ஆனால்……..
அண்ணன் நினைத்திருப்பார். நான் நல்ல உத்தியோகத்தில் பணப்புழக்கத்தில் இருப்பதாக. திருமணத்திற்கு இன்னும் இரண்டு வாரம் இருக்கிறது. போகவேண்டும்.
என் செல்லத்தங்கைக்கு திருமணம். அதைக் கண் கூட காண வேண்டும். ஆனால் நாலு பேர் மத்தியில் கம்பீரமாக நிற்கப் பணம் வேண்டுமே. ஒரு நல்ல சட்டை வேட்டி கூட இல்லை. போக முடியுமா. நான் அங்கு இல்லை என்றாலும் என் வாழ்த்துக்கள் அவளுக்கு எப்போதும் இருக்கும்.
நான் கல்லூரியில் சேர பணம் குறைவாக இருந்தபோது ராதாவின் செயினை அடகுவைத்துத்தான் சேருவேன். அவள் அதற்கு வருத்தப்படவில்லை. அண்ணன் படித்து பெரியாளாக வேனும். அதுதான் அவள் எண்ணம். செயினை திருப்பவே இல்லை. அவதி காலம் முடிந்து ஏலத்திற்கும் போனது. அவளைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு தர்மசங்கடமாக இருக்கும். அதை கவனித்தவள்,
”எனக்கு செயினோ வளையலோ ஒன்னும் வேணா, அதை ஏலத்தில போனதால எனக்கு எந்த வருத்தமும் இல்ல”
அவள் கல்லூரியில் படிக்கும்போது எப்போதாவது கடிதம் போடுவாள். நான் சோம்பேறி என்பதால், பதில் எழுவதில்லை. .. ஓமனக்காவை பார்த்தேன். நீங்க லெட்டர் போட்டிருக்கிறதா சொன்னாங்க… எனக்குத்தான் பதிலே போடறதில்லை… என்ற குறையோடுதான் இருக்கும் அக்கடிதம்….. ஓமனாவிற்கு ஃபோட்டோ புக்கெல்லாம் அனுப்பறீங்க…எனக்கு ஏன் அனுப்பலை….
லீவில் ஊருக்கு வந்தால் என் பெட்டியை ஆராய்ந்துவிடுவாள். ஓமனாவின் ஃபோட்டோவைப்பார்த்து பெரும்பாடு படுத்திவிட்டாள். கடைசியில் ஒரு பட்டுப்பாவாடை வாங்கிக் கொடுத்தால் சொல்ல மாட்டேன் என்ற பேரத்தில் தான் அடங்கினாள். அவளின் தேவைகளையும் குறைகளையும் என்னிடம் தான் கூறுவாள். சண்டையிடுவாள். கோபப்பட்டு சட்டென சகஜ நிலைக்கும் வந்துவிடுவாள். ஒரு திருவிழாத் தும்பியைப்போல துள்ளிப்பறந்தவள் இனி குடும்பஸ்திரியாகப் போகிறாள்.
திருமணத்திற்குப் போக முடியாது, வாழ்த்தும் ஏதாவது பரிசும் அனுப்ப வேண்டும். நான் போகவில்லை என்றால் வருத்தப்படுவாள். வாழ்வில் கழிவுத்தடாகங்களில் நான் தத்தளிப்பதை அறிந்திருக்கமாட்டாள்.
கல்யாணப்பரிசாக என்ன அனுப்புவது.. செயின்.. அதற்கு நிறையப் பணம் வேனுமே. ஒரு வாட்சாவது… அதற்கும் பணம் வேண்டும். ஒரு சேலையாவது கொடுக்க வேண்டும். நாற்பதோ ஐம்பதோ ரூபாய் வேண்டுமே.
நேரம் இருட்டி விட்டது. விளக்கைப் பற்றவைத்து மீண்டும் யோசிக்கத் தொடங்கினேன். பிரசாத் நினைவிற்கு வந்தான். புகைபடிந்த லாந்தர் வெளிச்சத்தில் பிரசாத்திற்கு கடிதம் எழுதினேன். ஐம்பது ரூபாய் உடனே அனுப்பவும். அச்சிடுவதற்காய் வைத்திருக்கும் புத்தகக்கணக்கில் சேர்த்துக்கொள்ளவும். பணம் உடனே அனுப்பவும்.
14-ஆம் தேதி திருமணம். 12ஆம் தேதியாவது பார்சல் அனுப்பவேண்டும். நாட்களை எண்ணிக் காத்திருந்தேன். ஒன்பது….பத்து..பதினொன்று…பனிரெண்டு..
தபால்காரரை எதிர்பார்த்திருந்தேன், பணம் இல்லை. என்ன செய்வேன். எதுவும் செய்யவில்லை என்றாலும் கஷ்டமாகிவிடும். பணம் வேணுமே ஐம்பது ரூபாய். நாற்பது ரூபாயாக இருந்தாலும் போதும். பணம் கிடைக்க என்ன செய்வது. திருடலாமா? எவனுடையவாவது இரும்புப்பெட்டியில் பூட்டி இருக்கும் பணத்தை எடுப்பது தார்மீகமாக எந்தத்தவறும் இருப்பதாய் எனக்குத் தோன்றவில்லை. அதற்குண்டான திறமையும் எனக்கில்லை. திருட்டென்றாலும் திறமை வேண்டுமே. நன்மைகளுக்கான சாஸ்திரங்களை மட்டும் கற்றிருந்தேன். அது தேவையற்றதென்று தோன்றியது. யோசித்திருக்கையில் மேசை மேலிருந்த பார்க்கர் பேனா தட்டுப்பட்டது.
பட்டணத்தில் பிக் பஜாரில் பக்கத்து வீட்டில் இருக்கும் கடையில் செகண்ட் ஹேண்ட் பொருட்கள் வாங்கிறார்கள். ஆனால் பார்க்கர் பேனாவை எப்படி விற்க முடியும். ஓமனா நேசத்தோடு தந்ததாயிற்றே. அதில்தான் எழுதிக்கொண்டிருக்கிறேன். மாதம் இருபதோ முப்பதோ தேடித்தருவதும் அதுதான். இப்பேனாவை முன் வைத்துதான் அவளை சொப்பனங்களில் காணுகிறேன். அதை விற்பது கடினமான வலியாகுமே. வேறு எந்த வழியும் இல்லை. தான் ஆசையாகக் கொடுத்த பேனா விற்கப்பட்டுவிட்டதென்றால் என்ன நினைப்பாள்? அவள் என்னுடையதானவள். இக்கட்டான இந்த நிலைமையைக் கூறி மன்னிப்பு கேட்டால் மன்னிக்காதிருப்பாளா...? ராதாவின் திருமணம் இன்னொரு தடவை நடக்கப்போவதில்லையே. பேனா இன்னொன்று வாங்கலாம்.
கொளுத்துகிற வெயிலில் நடக்கத்தொடங்கினேன். செருப்பும் இல்லை…குடையும் இல்லை. ஒரு பொருளை விற்பதால் குறைவாகத்தான் கருதுகிறார்கள், கௌரவம் இடிந்து விழுவதாயும். ஆனால் அதெல்லாம் பழங்காலம் ஆகிவிட்டது. என்னைப் பொறுத்தவரை இனி தகர்ந்து விழும்படியாய் கௌரவக்கோட்டை எதுவும் இல்லை.
முன்பொருநாள் இது போன்றதொரு விற்பனை நிலை படிக்கும்போது நிகழ்ந்தது. பரிட்சைக்குப் பணம் கட்ட எனது மோதிரத்தை விற்க வேண்டியிருந்தது. யாரிடமும் சொல்லாமல் பதுங்கி வெட்கித்தான் அந்தக் கடைக்கும் சென்றிருந்தேன். இன்று யாராவது கேட்டால் என் காதலி தந்த பேனாவை விற்கப்போகிறேன் என்று உரக்கக்கூறுவேன்.
சுட்டெரிக்கும் வெயில். கடைக்குள் செல்ல சங்கடமாக இருக்க காரணம் அழுக்கு நிறைந்த என் உடை. சவரம் செய்து மூன்று மாதங்களாகிவிட்டதால் தாடி அதிகமாக வளர்ந்திருந்தது. பார்ப்பவர்கள் என்னைப் பிச்சைக்காரன் என்றோ, திருடன் என்றோ கருதுவார்கள். போலீசில் பிடித்துக் கொடுத்து விடுவார்களோ.
எந்தக் குழப்பமும் இல்லாமல் பேனாவை விற்றேன். அதிக நேரம் அவனிடம் கெஞ்சித்தான் முப்பத்தைந்து ரூபாய் வாங்கினேன், பணத்தை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு வெளியில் வந்தேன். பசியும் தாகமும் வாட்டியது. சேலை வாங்கி முடித்ததும் தான் ஒரு காப்பி குடிக்க வேண்டுமென்று முடிவு செய்திருந்தேன்.
-சில்க் பேலஸ்- முன்னூறு நானூறு என்று விலைப்பிடித்த சேலைகள். என் பட்ஜெட்டிற்கு தகுந்தாற்போல் வெகுநேரம் தேடி ரோஸ் கலரில் ஒரு புடவை எடுத்தேன். முப்பத்தி இரண்டு ரூபாய். ராதாவிற்கு ரோஸ் கலர் பிடிக்கும். புக்கிங் டிப்போவில் இருக்கும் இளைஞன் எனக்கு நன்கு பரிச்சயம் ஆனவன்தான். அழகாக பேக் செய்து தபாலில் அனுப்பியதும்தான் எனக்கு சுவாசம் சீரானது.
இரண்டு பேப்பர் ஒரு பென்சில் வாங்கியது. மீதி பதினாலனா இருந்தது. ஹோட்டல் மதினாவிற்கு சென்றேன்.
மாலையில் இரண்டு கடிதம். ஓமனாவிற்கும் ராதாவிற்கும் எழுதினேன். மைதீர்ந்து விட்டதால் பெண்சிலில் எழுதுகிறேன் என்று ஓமனாவிற்கு ஒரு பொய்யையும் எழுதினேன்.
ஒரு வாரத்திற்குப்பிறகு ஓமனாவின் கடிதம் வந்தது,
’…..ராதாவுடைய திருமணம் நல்ல படியாக முடிந்தது. நீங்க வருவீங்கன்னு நினைச்சுத்தான் கல்யாணத்திற்குப் போனேன்.. நமக்கு காத்திருக்க மட்டும் தான் விதி… ராதா மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வசதியானவங்க…அவளுக்குக் கொண்டு வந்த பொருளெல்லாம் விலைமதிப்பற்றது. சேலையெல்லாம் முதல் தரமானது. கல்யாணப்பரிசுகள் நிறைய கிடைச்சிருக்கு. இவ்வளவு விலை குறைவான சேலையை நீங்க அனுப்பினது ராதாவிற்கு வருத்தம் தான்….கல்யாணத்திற்கு மறுநாளே ரெண்டு பேரும் கிளம்பிட்டாங்க…வேலைக்கு குட்டிமாலுவை கூட்டிட்டு போயிருக்கா..அந்த சேலையை அவளுக்குத்தான் கொடுத்தா…. கேட்டதற்கு அந்த சேலை வேலைக்காரிக்குத்தான் சரியாயிருக்குன்னு சொன்னா.. எனக்குப் பிடிக்கல..கஷ்டமா இருந்துச்சு….இனி எப்ப உங்களைப்பார்ப்பேன்….’
இப்படியே கடிதம் நீளுகிறது.... கடிதம் படித்ததும் நீங்கள் நினைத்ததைப்போல நான் வருத்தப்படவில்லை.ஒரு உத்தியோகஸ்தனின் மனைவியானதும் என் தங்கைக்கு தன்னம்பிக்கை அதிகமாயிருக்கிறது. சேலையின் தரம் தெரியுமளவிற்கு முன்னேறி இருக்கிறாள். அவளுக்கு வாழ்க்கை உன்னதமாக கிடைத்திருக்கிறது.
ராதா நலமாக இருக்கிறாள். ஒரு பெரிய பங்களா வீட்டில் எந்த கஷ்டமும் இல்லாது இருக்கிறாள். நலம் விசாரித்து மூன்று மாதத்திற்கு முன்பு கடிதம் எழுதி இருந்தேன்…பதில் அனுப்ப அவளுக்கு நேரம் இல்லாமல் போயிருக்கலாம்..
என் பிரியமான தங்கை... அவளின் உறவுக்கு சுபமிடுகிறேன். இதயத்தில் ஒற்றைத்துளி வெளிச்சம் ஓமனா. அவளிடம் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
*