Tuesday, March 22, 2016

குற்றவாளி - எம்.டி. வாசுதேவநாயர்

'ரக்த்தம் புரண்ட மண் தரிகள்' (ரத்தம் புரண்ட மண் துகள்கள்) தொகுப்பிலிருந்து . தமிழில் : யாழினி

*

மதிப்பிற்குரிய நண்பனுக்கு....

இக்கடிதம் கிடைக்கும்போது ஆச்சரியமாகத்தானிருக்கும் உங்களுக்கு எத்தனையோ வருடங்களுக்கு பிறகு எழுதுகிறேன். கடிதம் வாயிலாக நாம் அடிக்கடிப் பேசிக் கொள்வதில்லையென்றாலும்   இருவருக்கும் இருக்கும் நட்பு அகலுவதில்லை என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது. மனதில் தேங்கிக்கிடக்கும் ரகசியங்களை யாரிடமாவது சொல்லியே ஆகவேண்டுமென்றால் அது உங்களிடம் மட்டும்தான்.ஆத்மார்த்தமான சிநேகிதர்களென்று சொல்லிக் கொள்பவர்களிடத்தில் ரகசியங்களின் உலகமே நிலைத்து கிடக்கின்றது. நாம் அதற்குப் புறம்பானவர்கள். மிக்க மரியாதையுடன் நம் நட்பை  நினைவு படுத்திகொள்கிறேன்.

இதையெல்லாம் ஏன் எழுதுகிறேனென்று நீங்கள் நினைக்கலாம். கூறுகிறேன்.

எனது சிந்தனையெல்லாம் தீப்பற்றி எரிவதைப்போல உணருகிறேன். இதயத்தின் மூலை முடுக்கிலெல்லாம் அத்தீ பற்றிப் படருகிறது..  மரித்து விறைத்த ஒரு உடலை கட்டியணைக்க கை நீளுகின்ற ஒருவனது கடிதம் இது.. மரணம் மனமுவந்து எனை ஆசிர்வதிக்கப் போவதில்லை என்றாலும் நான் அதை நாடிப்போவதில் தவறில்லையே..  அதுதான் எனக்கிப்போது அவசியப்படுகிறது.. முடிவு செய்த பிறகுதான் இக்கடிதத்தை எழுதுகிறேன்.. தற்கொலையோடு முன்பெல்லாம் வெறுப்பாக இருந்தது.. விதியை முட்டாளாக்க கோழைகளான பெண்கள்  கண்டுவைத்த வித்தைதானிது என்பது என் எண்ணம்.. ஒரு ஆண் தற்கொலை செய்து கொண்டானெனில் அவன் அவ்வினத்திற்கே அவமானம் என்று நான் சொல்லியதுண்டு..

காதல் தோல்வியால் தூக்கு மாட்டி செத்துப்போன ரமணனின் ஆத்மாவைக்கூட  சாகும்வரை தூக்கிலிட வேண்டுமென நினைத்தவன்தான் இன்று தற்கொலை செய்ய முடிவெடுத்துவிட்டேன்..

வீட்டின் இரண்டாவது மாடியில் தனித்திருக்கிறேன்.. இருட்டை பிரகாசப்படுத்தி மேஜையின் மீது மெழுகுவர்த்தி தன்னை மாய்த்து கொண்டிருந்தது.. இந்த கட்டிடத்தின் சுற்று வட்டாரமே சூன்னியமாகிவிட்டது. இருள் கவ்விய குளிர் என்னை பயமுறுத்துகிறது..  இதே பதினோரு மணிக்குதான் அந்த நிகழ்ச்சியும் நடந்தது..
அதன் பின்னர் மணிக்கணக்கில் தவித்துக் கொண்டிருக்கின்றேன்..

முடிவாக நான் சாவதுதான் சரி. மரணத்தின் அமைதியில் நான் மூழ்குவதற்கு முன் உலகத்திற்கு எனது அருவறுக்கத்தக்க ஏடுகளை புரட்டிக்காட்டவேண்டுமென்று தீர்மானித்துவிட்டேன். இதோ ஒவ்வொரு ஏடாக புரட்ட்டத் தொடங்குகிறேன்.

மாதம் ஐநூறு ரூபாய் வரை சம்பளம் வாங்குகின்ற ஒரு உத்யோகஸ்தனின் மகனாகப்  பிறந்தேன். ஊருக்குள் முக்கிய பிரமுகர் அப்பா . அவர் பெயரை நிலை நிறுத்த வேண்டியதும் நான்தான். இதெல்லாம் உங்களுக்கு தெரிந்தது என்றாலும் எழுதுகிறேன்.

தாராளங்களின் மடித்தட்டில் கிடந்துதான் வளர்ந்தேன். வீட்டிலும் சரி வெளியிலும் சரி நல்லவனாகவே கருதப்பட்டேன். ஆனால் என் வாழ்க்கையே விடுகதை போல ஆகிவிட்டது நண்பா..

வெயில் தாழ்ந்த அந்திமாலை வேளையில் மைதானத்தில் ஒரு மூலையில் அமர்ந்து நாம் பேசிக்கொண்டிருப்போம்... காதலைப்பற்றியும் அதனூடான ஒழுங்குமுறைகளைப் பற்றியும்தான் அதிகமாக பேசிக்கொண்டிருப்போம், காதல் பரிசுத்தமும் திவ்யமும் நிறைந்ததுயென கூறுவீர்களே,..    காதலைப்பற்றிய உங்களது அபிப்ராயங்களை வெறுப்போடுதான் கேட்டுக்கொண்டிருப்பேன். "காதல் தரும் வலியிலும் கண்ணீரிலும் ஒரு ஆத்ம திருப்தியுண்டு' என நீங்கள் அடிக்கடி கூறுவீர்களே.  அதை நினைவு கூர்கிறேன்.. அதை கேட்கும்போதேல்லாம் எனக்கு சிரிப்புதான் வரும். காதலைபற்றின எனது தத்துவ சாஸ்திரமே உங்களுக்கு எதிராகத்தான் இருந்தது. மாமிசம் மாமிசத்தோடு சேர நடத்துகின்ற நாடகம்தான் காதல்.  ஆம் அப்படி மட்டும்தான் நான் காதலை நினைத்திருந்தேன்.

எத்தனையோ பெண்களிடத்தில் பழகியாயிற்று ஒருத்தியைக்கூட காதலித்திருக்கவில்லை.. ஒழுக்கமான எவனையாவது பார்த்தால் ஓங்கி குத்தவேண்டும் போலிருக்கும்.

நண்பா...  

உலகத்தின் எந்த ஒழுங்குமுறைகளுக்கும் நான் கீழடங்கப் போவதில்லை என்ற  திமிர் என்னிடமிருந்தது..எனது அனுபவங்களையெல்லாம் உங்களிடத்தில் ஏற்கனவே விவரித்திருக்கின்றேன்.

எப்படி இவ்வளவு ஒழுக்கம் தவறினேன்.இப்போதுதான் நினைக்கிறேன்.. 

பத்தோ பனிரெண்டோ பருவத்திலிருக்கும் போதே காம விகாரங்களின் மர்மங்களை எனக்கு உணர்த்தியவள் விதவையான எங்கள் வீட்டு வேலைக்காரிதான்..இதை ஏற்கனவே உங்களிடத்தில் சொல்லியிருக்க வேண்டும்.. 

உயர்நிலைப் பள்ளியில் படிக்கும்போதே நான் காதல் பைத்தியமாக இருந்தேன்..மாமிசம் நிறைந்த என்னுடலின் ஆராதகனாக இருந்தேன்..

குழந்தைத்தனம் நிரம்பித் தளும்புகின்ற ஒரு புஷ்பத்தை வருடியணைக்க யாருக்குதான் தோன்றாது.. ஆனால் பெண் அவ்விதத்தில் எனை ஆக்கிரமித்து இருக்கவுமில்லை.. மதுரம் நிரம்பி  நுரை  வழிகின்ற பானையில் இருக்கும் கள்ளை கண்ட *ஆர்த்திதான்  எனக்கு. உயர்ந்த.. *சாம்பத்தீகமான , பார்த்தால் பிடித்து போகின்ற அழகும் எனக்கிருந்ததால் பெரிதாக யாரிடமும் யாசித்துப் பெறவேண்டிய அவசியமில்லாதிருந்தது எனக்கு.

அப்படித்தான் நான்  நாச வழிக்கு  பயணிக்கத் தொடங்கினேன். அந்த மதுரக்கள்ளை அள்ளி அள்ளி பருகினேன்.. 

காமம் தந்த மயக்கத்தில் இந்த பிரபஞ்சத்தையும் சுற்றத்தையும் மறந்தேன் .
ஆத்மார்த்தமாக நேசிப்பது...! அதற்கு என் வாழ்வில் இடமிருக்கவே இல்லை. எந்த ஏடுகளிலும் அது குறிப்பிடவே இல்லை..

உங்களிடத்தில்  மறைத்த ஒரு விஷயம் நியாபகம் வருகிறது.. சுமார் மூன்று வருடங்களுக்கு முன் நடந்தது.. 

காலேஜ் லீவுக்கு வரும்போது என் உறவினர் வீட்டில்தான் தங்கியிருந்தேன்.. 

பக்கத்துவீட்டில் வறுமையான குடும்பம் ஒன்று இருந்தது. அதில் பதினாறு பதினேழு வயதுடன்  களங்கமற்ற இளம்பெண். அவளுடன் பழக வாய்ப்பு கிடைத்தது..காதலை ஒரு ஹாபியாக வைத்திருக்கும் எனக்கு அவளை வசப்படுத்த வெகு சீக்கிரத்தில் முடிந்தது..

அதிகமான வாக்குறுதிகளையும்.. வெள்ளித்துட்டுகளையும் உபயோகித்து அவளை தற்காலிக காதலியாக்கிக்கொண்டேன். கண்களிலும் இதழ்களிலும் வழிந்தோடிய காதலைக்கொண்டு பல இரவுகளை எனக்கு அவள்  பரிசாக்கினாள்...   லீவ் முடிந்ததும் நான் திரும்பி விட்டேன்.

நாடகங்களிலும் சினிமாக்களிலும் இந்த காட்சியை பார்த்திருப்போம்.. பிறகு ஒரு வருடம் கழித்து அங்கு சென்றிருந்தேன் அவளைக் காணவில்லை விசாரித்ததில் நான்கைந்து மாதத்திற்கு முன்னம் தற்கொலை செய்து கொண்டாளாம்.. கற்பமாக இருந்திருக்கிறாள். அவளது வாழ்க்கையை களவாடியவனை யாரும் அறிந்திருக்கவில்லை. 

அவளது முரட்டு மாமன் எவ்வளவு அடித்தும் அவள்  கூறவே இல்லை..   இப்பொழுது இதை  எழுதும்போது   அவள் முகம் மிகத் துல்லியமாக கண் முன் தோன்றுகிறது.. எனது கனவுகளில் இருள் முதிர்ந்து உதிரும் இரவுகளில் பயங்கரமானதொரு பிசாசாய் அணுகுவாள். நான் பயந்து அலறும்போது சிரிப்பாள்.. உடம்பெல்லாம் வியர்க்கின்றது. பேனா நகர மறுக்கிறது...    கைகள் கனக்கிறது..

எனது வாழ்க்கையையே முடித்துக்கொள்ள தூண்டிய சம்பவத்தை கூறுகிறேன்..

இடைப்பட்ட நாட்களில் எங்கள் வீட்டுக்கு புதிதாக ஒரு வேலைக்காரி வந்திருந்தாள். காலையில்தான் அவளைப் பார்த்தேன்.. கதவைத்  தட்டிவிட்டு எனக்கான காப்பியோடு வந்தாள். கட்டிலின் அருகிலிருக்கும் ஸ்டூலில் டம்ளர் வைக்கும் சத்தம் கேட்டு கண் விழித்தேன். அவள் நின்றிருந்தாள். புதிதாக வேலைக்காரி வந்து இருக்கிறாளென  
சமையல்கார கிருஷ்ணன் நேற்று கூறி இருந்தான். அவளை நேரில்  பார்த்ததும் பரவசமாகிவிட்டேன். மாமிசம் நிறைந்த சரீரம்....!  நாற்பது வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணைத்தான் எதிர்பார்த்தேன் .ஆனால் இளம் பெண். 

எத்தனை கொழுத்த பாகங்கள்..  முகத்திலிருக்கும் பிரகாசம் என்னை அவள் வசம் இழுத்து போடுகிறது..திரும்பி நடக்கும் போது அழுக்கு படிந்த அவள்  ஆடையில் தெளிகின்ற பின்தசை அசைவுகளை ரசித்தேன்.. காலை பதினொரு மணிக்கு காப்பியும் பலகாரமும் எடுத்து வந்தாள்.. அவளை வெகு உன்னிப்பாக கவனித்தேன்.. 

உயர்ந்து நின்ற மார்பகங்களுக்கிடையில்  எனது கண்கள் மாட்டிக் கொண்டதை கவனித்தவள் சற்று கூனிப்போனாள்.

காப்பியை ஆற்றியபடியே..கேட்டேன்.

உம் பேரென்ன...

லட்சுமி..

எப்ப வந்த,,,

நேத்துதான்..

முகமுயர்த்தாது பவ்யமாக பதிலளித்தாள். அடுத்து என்ன கேட்டபது..

எந்த ஊரு...
..................................

அவள் ஊரைச் சொன்னாள். தொடர்ந்து என்னுடனான பேச்சை வளர்க்காது அறையை விட்டுக் கடந்தாள். சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அவளிடம் பேச ஆர்வப்பட்டேன்..எனது அந்தரங்கத்திற்கு புதிதாக ஒரு
உருவம் கிடைத்ததை எண்ணி அவளைத் தொடர்ந்தேன்.. பொதுவாக மாலை நேரத்தில் வெளியில் நடப்பது என் பழக்கம். லட்சுமி வந்ததிலிருந்து எனது தினசரிகளில் சில மாற்றங்கள் ஏற்பட்டது.. அவளது ஒவ்வொரு அசைவுகளையும் கவனித்தபடியே அன்றைய பகலை கழித்தேன். காமம் உறுத்திய பசியோடு படுக்கையில் வீழ்ந்து  விடுவேன்.. ஒவ்வொரு நாளும் இன்றாவது..  இன்றாவது...

ஒரு மாலை நேரம் எனதறைக்குள் வந்தாள். சிகரெட் புகைச்சுருளில் எனது கனவுகளுக்கு வண்ணம் சேர்த்து கொண்டிருந்தேன். மேலே மூன்று அறைகளிருந்தது.. படியேறி வந்ததால்  முதலிலிருப்பது எனது அறைதான். 

இரண்டாவது என் தங்கையுடையது.. மூன்றாவது அறை பூட்டியே கிடக்கும்..  அம்மா இறந்த பிறகு அந்த அறையை உபயோகிப்பதேயில்லை. அப்பா இருப்பதெல்லாம் கீழேதான். மாடிக்கு வருவதே இல்லை. அறையை சுத்தம் செய்ய சீமாருடன்  நின்றிருந்தாள் லட்சுமி.  முன்னமே தீர்மானித்ததைபோல சாய்நாற்காலியில் சாய்ந்திருந்தேன் அறியாததைப்போல..

வீடு பெருக்கனுமே.... 

யாரிடமோ சொல்வதை போல கூறினாள்.

ம்ம்ம் பெருக்கலாமே...

என அவள் சாயலாகவே கூறியதும் வெட்கினாள்..

நான் என்ன புலியா மனுஷந்தானே....

என நாற்காலியிலிருந்து  எழுந்தேன். அவள் காலை மட்டும் உள்ளுக்குள் வைத்து கதவைப்பற்றி நின்று கொண்டிருந்தாள்

"என்னை பாத்தா பயமா இருக்க லட்சுமி....."

அவள் ஏதும் பேசவில்லை. நான் தைரியத்தை வரவழைத்துகொண்டு அவளது இடது கையை பற்றி இழுத்தேன்.. 

வலி தாளது கலவரமாய் என்னைப் பார்த்தாள்.. அந்த ஒற்றை  நிமிடம் அவள் உடல் மொத்தம் எனது அணைப்பில் துவண்டது. மாமிச பாகங்களை அழுத்தியபடி. மின்னுகின்ற அவளது கன்னத்தில் எனது முகம் அழுத்தினேன். இந்த சந்தர்ப்பத்தை எனக்கு  சாதகமாக்கி கொண்டாலென்ன....  அதற்கு தைரியம்  வரவில்லை. 

சாந்தா வந்து விடுவாள்..

."...............   லட்சுமி ராத்திரி நீ இங்க வருவியா..."

எந்த பதிலுமில்லை.

மாடிப்படிகளில் யாரோ  நடக்கும் சத்தம் கேட்டு அவள் என் பிடியிலிருந்து விலகி கொண்டாள். சாந்தா 

ஸ்கூலிலிருந்து  வந்தாள்.  எத்தனை ஆனந்தமான நிமிடம் அதை அபகரித்த அவளது வருகை எனக்கு எரிச்சலாக இருந்தது. புத்தகப்பையை மேஜை மீது வீசிவிட்டு எனது அருகே வந்தாள்.

'அண்ணா வர வியாழக்கிழமை எங்க ஸ்கூல் அனிவர்சரி. "

எனக்கு அவள் ஸ்கூல் அனிவர்சரி விவரம் கேட்க பிடிக்கவில்லை...

"அதுக்கு..."

'ட்ராமா., டான்ஸ் எல்லாமிருக்கு நான் டான்ஸ்ல சேந்திருக்கேன்...'

ம்ம்ம்ம் .... 

ஒரு குளிர்கால நடுக்கத்தை போல நான் முனகியது அவளுக்கு பிடிக்கவில்லை.

'பி. ஏ. பெயிலான உனக்கு ஸ்கூல் அனிவர்சரி துச்சமாத்தான் தெரியும்...' - கிண்டலடித்தபடியே அவளது அறைக்குள் சென்றாள். சிறு வயது முதலே குறுமபுக்காரியாக எப்போதும் துறுதுறுவென இருப்பாள்.இப்பொழுதும் 
அப்படித்தான். சேலை மாற்றிக்கொண்டு வெளியில் வந்தாள் அதிகாரமாக

லட்சுமீஈஈஈஈஈ ............

மாடிப்படிகளை பெருக்கி கொண்டிருந்தவள் திரும்பினாள்.

"காப்பி வேணும் இங்க எடுத்திட்டு வா...."

சாந்தாவிடம் வம்பிழுத்தேன்.

"நீ என்ன பெரிய மகராணியா... காப்பி கீழ போய் குடிக்க முடியாதோ... "என்றேன்..
  
"நீங்க என்ன பெரிய மகராஜவோ.... "  என தடதடவென படியிறங்கி ஓடினாள்.

சண்டையிட்டு கொண்டாலும் சிநேகம் நிறைந்தவள் என் தங்கை. எனக்கு எல்லா உறவும் அவள்தான். அவளுக்கு 

மூன்று வயதிருக்கும்போதே அம்மா இறந்து விட்டாள். செல்லமாகவே வளர்ந்தாள்.

நண்பா அதிகமாக இன்னும் விவரிக்க விரும்பவில்லை.

நான்கைந்து தினங்களின்  நிரந்தர வற்புறுத்தலுக்கு பிறகு லட்சுமி எனக்கு  கீழடங்கினாள்.  இரவில் அனைவரும் உறங்கியபின் ஒரு பூனையைப் போல பதுங்கி பதுங்கி எனதறைக்குள் வந்திருந்தாள்.

மறுநாள்  அவளை பார்க்கும் போது சோகம் நிரம்பியது முகத்தில். தலைகுனிந்தபடியே எனை கடந்து சென்றாள்.
.
                         ............... ......................       ..........


இன்று..

சாந்தாவுடைய பிறந்தநாள். அதனால் லட்சுமிக்கு அடுப்படியில் அதிக வேலை இருந்தது. மதியம் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தோம், அப்பாவின் நண்பர்களும் சுற்றமும் வந்திருந்தனர்.

எனது அறையிலிருந்து வெளியில் வராமலே இருந்தேன்.இப்போதெல்லாம் வெளியில் போவதே இல்லை. சினி மசாலா புத்தகங்கள். பிரஞ்சு ஆல்பங்கள் இதையெல்லாம் ரசித்தபடியே எனது நேரம் தீர்ந்திருக்கும். மாலைநேரத்தில் என் அறையை சுத்தம் செய்ய லட்சுமி வந்திருந்தாள். தனியாகத்தானிருந்தேன். ஒரே ஒரு இரவினூடான  அனுபவம் தான் எனக்கு அவளோடிருந்தது.. அழகு  நிறைந்த அவளது மாமிசத்திலிருந்து ஆனந்தத்தின் இன்பத்தை இனியும் இனியும் கவர்ந்தேடுக்கவேண்டும்.

"லட்சுமி..."

முகம் உயர்த்தினாள்

"இன்னைக்கு ராத்ரியும் வருவியா..."

பதிலொன்றுமில்லை.

அவள் எதுவும் கூறாது மௌனமாக சென்றது சம்மதத்தின் அறிகுறியாக வேண்டும்.  

பெண் ஒருமுறை ஒரு ஆணுக்கு கீழடங்கிவிட்டால் அவனுக்கு அடிமைதான்.. என்று ஏதோ புத்தகத்தில் படித்தது 

நினைவுக்கு வந்தது.

குளித்து முடித்து நல்ல வேட்டி சட்டை மாற்றிக்கொண்டு வெளியில் நடக்கத் தொடங்கினேன் இப்படி நடந்து வெகு நாட்களாகிவிட்டது விட்டது.வழியில் பழைய நண்பனை சந்திக்க நேர்ந்தது ஏதாவது நாலு வார்த்தை பேசிவிட்டு தட்டிக் கழிக்கலாமென்றால். அவன் அப்படி விடுகிறவனில்லை.ஏதேதோ பேசியபடியே டவுனை  சுற்றினோம்.

சென்னையிலிருக்கும்போது அவன் நர்ஸ் காதலியைப்பற்றி.. ஆங்கிலோ இந்தியன் தோழியைப்பற்றி... 

ஊரிலிருக்கும் நிரந்தர காதலியைப் பற்றி.. இப்படியே பல பேச்சுக்கள்..   இடையே டீக்கடைக்கும் சென்றிருந்தோம். தியேட்டருக்கு  அருகே செல்லும்போதுதான் ஆங்கில படம் இட்டிருப்பதை கண்டோம். எஸ்தர் விலாஸ் நடித்த 'ஜலதேவதை' என்ற படம். கோபி அந்தப் படத்தை பார்த்தே ஆகவேண்டுமென  நிர்பந்தித்தான்.முதல் காட்சி தொடங்கும் நேரம்தான். வீட்டில் சொல்லாமலே வந்து விட்டேன். நேரமாகிச் சென்றால் அப்பா என்ன சொல்வார். 

கோபியின் காரணமாய் தியேட்டருக்குள் சென்றேன்.

உள்ளாடைகளை இட்டுக்கொண்டு வாளிப்பான தேகத்தைக் காட்டிய படுக்கையறை காட்சிகள். காமத்தின் வாசல் திறக்கின்ற மாமிசங்களின் சலனங்கள்.. எனக்கு லட்சுமியை நினைவுக்கு வந்தது. பதினொரு மணிக்கு நிச்சயம் வருவாள்.இளமை தளும்புகிற லட்சுமி.. பதினெட்டு வயது நிரம்பியவள். திரையில் கண் பதித்து நடக்கபோகும் காட்சிகளை நினைத்துகொண்டேன்..

படம் விட இரவு ஒன்பதரை ஆனது. வெளியில் வந்ததும் மீண்டும் கோபிக்கு வேறொரு திட்டமும் இருந்தது. மது அருந்தலாமென. இருவரும் பாருக்கு சென்றோம். நுரை தள்ளிய அழகான  மதுபான பாட்டில்கள். மணி பத்தரை. கோபியிடம் விடைபெற்றேன்.

கால்கள் இடறுகிறது.. மதுவின் மயக்கமும்  சூடான காட்சிகளும் ஆகாயத்தில் பறப்பது போலிருந்தது.. இந்த நிலையில் அப்பா என்னைப் பார்த்தால்.. இவ்வளவு நேரம் எங்கிருந்தாய்  என்றால் ..  என்ன சொல்வது எனக்கது பெரிதாய் ஒன்றும் தோன்றவில்லை..

நல்ல வேளை அப்பா முற்றத்திலில்லை. தூங்கியிருப்பார். சமையல்காரன் மட்டும் சாப்பாட்டை வைத்துக்கொண்டு  எனக்காய் காத்திருந்தான். லட்சுமியை அடுப்படியில் காணவில்லை. கீழேயுள்ள ஒரு சிறிய அறையில்தான் அவள் படுத்திருப்பாள். கதவு சாத்தி இருந்தது. தூங்கி இருப்பாளோ..அல்லது மேலே எனக்காக காத்து.........  நானில்லை என்றதும் திரும்பியிருப்பாளோ...  சாப்பிடவில்லை. படிகளில் காலூன்ற முடியவில்லை. 

தலைக்குள் குருவிகள் பறப்பது போலிருந்தது.. வராண்டாவில் வரும்போது சாந்தாவின் அறையைக் கவனித்தேன். வெளிச்சமில்லாதிருந்தது   நல்லவேளை அவளும் உறங்கிவிட்டாள்  

என் அறைக்கதவு திறந்திருந்தது..ஒரே இருட்டாக இருந்தது யாரும் விளக்கு பொருத்தவில்லையா.. ஒருவேளை லட்சுமி அணைதிருக்கலாம்..

நீச்சலுடையில் எஸ்தர் விளசின் நினைவு வந்தது.. பாரில் நுரை தளும்பிய பாட்டில்களும்...சுகமான மயக்கங்களின் நினைவுகள் ரத்தத்தைச் சூடாக்கியது.  சத்தமில்லாது எனதறைக்குள் நுழைந்தேன்.  இருட்டு சன்னல் வழியாக மங்கிய வெளிச்சத்தில் அவள் எனது கட்டிலில் படுத்திருப்பது தெரிந்தது.. எனது கைகள் துடித்தது அவளை  அடைய துடிக்கும் பிரகாசம்  எனது கண்களில் தெரித்தது.. கிறுகிறுப்பாகவிருந்தது.. சத்தமில்லாது கதவை அடைத்தேன். எனக்கு தேவைப்பட்ட இருட்டின் திண்ணம் கூடி  இருந்தது. தீப்பற்றுகின்ற  காமத்தின் தேவையோடு கட்டிலருகில் சென்றேன். வெகுநேரம் எனக்காக காத்திருந்து தூங்கியிருக்கவேண்டும்..   

பாவம்..    நான் அவளுடைய வாயைப் பொத்தியபடி 

'சத்தம் போடாத நாந்தான்......' என்றேன்..

அவள் எனது பிடியிலிருந்த விலக முயற்ச்சித்தாள். இவ்வளவு நேரம் எனக்காக காத்திருந்து விட்டு இப்பொழுது  சம்மதிக்காமலிருப்பது எனக்கு ஆத்திரத்தை தூண்டியது. இதே படுக்கையில் சில தினங்களுக்குமுன் என் ஆசைகளுக்கு இணங்கியவள்தானே.. அவள் என் பிடியிலிருந்து  தப்பிக்க முயற்சித்தாள் நான் முறுக்கிக் கொண்டேன்.பக்கத்து அறையில் தூங்கி கொண்டிருக்கும் சாந்தா இதெல்லாம் கேட்டுவிடுவாளோ என்ற 
பயமுமிருந்தது. அவளது வாயை இறுக்கமாகப் பொத்தினேன். வெகுநேர போராட்டத்திற்கு பிறகு தான் அது நிகழ்ந்தது. அவள் கழுத்தில் ஏதோ தட்டுப்பட்டது என் கைகளில் .. 

நகையணிந்திருக்கிறாள்.. லட்சுமி நகையேதும் அணிந்திருக்கவில்லையே..!

திடிரென நெட்டிஎழுந்த பதட்டம்..  உடம்பு முழுவதும் மறத்து விட்டது.. மதுவின் மயக்கமோ... படமோ... எல்லாம் விலகியது..

நடுங்கிய  கைகளோடு மேஜை விளக்கை பற்றவைத்தேன்...

எனது கண்களில் கோடாலியை  வைத்து வெட்டியது போலிருந்தது..  மெத்தையில் வெயிலில் வாடிய வாழை இலைபோல கிடந்தாள்.. முக்கால்வாசி நிர்வாணமாக லட்சுமி இல்லை சாந்தா.....!

அந்த நிமிடத்தில் எனது இதயத்தில் தோன்றியவகளை  சொல்லவே முடியவில்லை....

படுக்கையில் இங்கிலீஷ் ரீடர் பாடப்புத்தகம் ஒடுங்கி கிடக்கிறது.. சாந்தா என்னைப் பார்த்தாள்.. நீர் நனைந்த விழி... முகம் வெளிறிப் போயிருந்தது.

எரித்துபோடுகின்ற நிமிடங்கள்

விளக்கு மங்க தொடங்கியது.. அதில் எண்ணை  இல்லைபோலும்.. அதிர்ச்சியிலிருந்து  மீளமுடியாத நான் கண் சிமிட்டுகையில் ஆடைகளை அள்ளிக்கொண்டு வெளியேறுகின்ற சாந்தாவைத்தான் பார்த்தேன்..

இருண்டு.. சூன்யம் நீளுகிறது...

என்னென்னமோ நடந்துவிட்டது... எப்படியென்று எதுவும் நினைவிலில்லை..ஆனால் நடந்தவையெல்லாம் நினைவிலுண்டு.. அப்படியே பற்றி எரிகின்ற எண்ணங்களோடு  எத்தனை நேரம் நின்றிருந்தேனோ... தெரியவில்லை..

பயங்கரமான இந்த இரவு விடிந்து உறக்கத்தை எழுப்பும்...பகல் வெளிச்சத்தில் அண்ணன் தங்கையை காண நேரும்...கிழக்கு  விடிந்து விடுமென்று நினைக்கும்போது பயமாக இருகின்றது..

அன்புத் தங்கையே... இனி அப்படி அழைக்க எனக்கு அருகதையில்லை.. இந்த பயங்கரம் எல்லா காலத்திலும் பேய்க்கனவாக ஒரு சம்பவமாக்கி உன்னைக் கொல்லுமே... யாரிடம் மன்னிப்பு கேட்பது..

எங்கிருந்தோ  தேடிப்பிடித்த மெழுகுவர்த்தியொன்றை பற்ற வைத்துத்தான் இக்குறிப்பை எழுதுகிறேன்..

என் மரணத்திற்குப்பின் எனை நினைத்து எந்த இதயமும் அழப்போவதில்லை..  எனக்காக ஒரு துளி கண்ணீர்கூட விழக் கூடாதென பிரார்த்திக்கிறேன்..

தூரத்தில் தண்டவாளத்தை பற்றிக்கொண்டு வருகின்ற ரயிலின் அலறல் கேட்கின்றது...

நண்பா நான் புறப்பட தயாராகிவிட்டேன்..

இத்துடன் இந்த கடிதத்தை முடித்துக் கொள்கிறேன்..

*
1. ஆர்த்தி : உடனடியாக அனுபவிக்க வேண்டுமென்கிற எண்ணம். 2. சாம்பத்தீகம் : செல்வந்தன்.
நன்றி : யாழினி

No comments:

Post a Comment