Saturday, January 24, 2015

குகைச் சித்திரங்கள் - தாஜ் கவிதை


குகைச் சித்திரங்களைக் காண
காலங்களில் நின்று கொண்டிருக்கும்
பாறை அடுக்கில் இறங்கி
மெல்லிய ஒளிக்கீற்றில் புலப்படும்
ஆதி ஸ்தலம் எட்ட
தடையில்லா தெளிவு வேண்டும்

மனப் போக்கில் ஆங்காங்கே
என்றைக்கோ கீறப்பட்ட கோடுகளின்
மங்கலான சித்திரங்களை
துடைத்து தடவி மழுங்கலைப் பார்க்கவும்
இருண்ட கால கேளிக்கைகளின்
மூர்க்கத்தை உணர முடியும்

வண்ணப்பூக்கள் சிந்தை மயக்கும்
நந்தவனத்தில் மகரந்தம் தேடி
வட்டமிடும் பூச்சி தொடங்கி
சிறகு முளைக்க உயரப் பறக்கும் பட்சி
அலைமோதும் மோப்ப நாயின் அலைச்சல்
வேட்டை மிருகத்தின் பாய்ச்சல்
துள்ளியோடும் புள்ளிமானின் வேகம்
அந்தரத்தில் வட்டமிடும் கழுகு
மலர்கள் சூடிய விழிகளது கிறக்கம்
காலடியில் கிடக்கும் விவேகமென
ஆங்காங்கே திட்டு திட்டாகக் காணும்
கோடுகளின் நிழலான நிகழ்வுகள்
மனதை பேதலிக்க வைக்கின்றன
கருத்த நாகரீகத்தின் நேற்றைய காட்சிகளாக!

**
Image Courtesy : http://en.wikipedia.org/wiki/Lascaux
நன்றி : தாஜ்

Saturday, January 10, 2015

எஸ்.எல்.எம். ஹனிபாவின் காதல் கதை

அன்புள்ள ஆபிதீன், அஸ்ஸலாமு அலைக்கும். இது, எனது வாழ்நாளில் நானெழுதிய காதல் கதை. தொகுதியில் இடம்பெறாத கதை. இலங்கையில் வீரகேசரி பத்திரிகையில் பிரசுரமானது. கதையின் நாயகனே நான்தான். - ஹனீபாக்கா

***
சிவப்புக்கல்லு மூக்குத்தி

“தம்பி எப்பிடி?”

“வாங்கய்யா வாங்க”

“இன்றைக்கு வெள்ளென கடை திறந்தாப்போல…”

“நான் வழமையா சுப்ஹு தொழுத கையோட வந்திடுவன்” இரும்புக் கதிரையை மெதுவாக இழுத்து, எனது இடப்பக்கம் சண்முக நாதன் ஐயா அமர்ந்து கொண்டார்.

“உடனலம் எப்பிடி? முகம் வாடினாப்போல… மாஜிதா கெம்பஸிலரிந்து வந்தவவோ? பேத்திட பாடென்ன? அவக்கு இப்ப இடுப்பு வலி சுகம்தானே?”

ஒரு மூச்சில் முழுக் குடும்பத்தவர்களின் குசலத்தையும் ஐயா கேட்டு முடித்தார்.

“இரவெல்லாம் தூக்கமில்ல ஐயா. பி.பி.ஸி. கேட்டு.. இரவின் மடியில் கேட்டு, பிஸ்மில்லாகானின் ஷெனாய் கேட்டும் தூக்கமில்ல. யாரிட்டாவது சொன்னாத்தான் மனசு விடியும்”

“அப்பிடியென்ன?”

கண்ணாடியைக் கழற்றி மேசையில் வைத்து விட்டு ஐயா கேட்டார்.

நானோ நினைவின் வழியைத் தூசு தட்டித் துலக்குகிறேன்.

நேற்றுப் போலிருக்கிறதய்யா. நாற்பது வருஷம். நான் அய்ந்தாம் வகுப்பில் படிக்கிறேன்.

வகுப்பில் பத்துப் பேர். அய்ந்து பெண்கள், இந்திராணி, சுகிர்தா தேவி, ஜானகி, பியவதி, ராஹிலா என்று…

“ஹாஜியார்! ஸலாமலைக்கும்!”

“வ அலைக்குமுஸ்ஸலாம்!”

“வயல்ல அறக்கொட்டியான், எண்ணெய் வேணும், பம்மையும் தரணும்”

அவசரமாக கைமுழுத்த வியாபாரம்.

“ஐயா! என்ன சொன்னேன்?”

“உங்கட வகுப்பில படிச்ச ஜானகி…”

“ஓமோம். அப்பெ ஓட்டமாவடி ஸ்கூல்ல தமிழ் மாணவர்களும் படிக்கிற… சிங்கள மாணவர்களும். பேப்பர் மில்லில வேலை பார்க்கிற ஹின்னி அப்புஹாமிட பியவதி, சந்திரபால,

மகேந்திரபால எல்லோரும் படிச்சம்”

எவ்வளவு சந்தோஷமான நாள்கள்… எங்களுக்குள்ள ஒரு மனஸ்தாபம் வரலிய.

நானும் ஜானகியும்தானய்யா வகுப்பில் நல்லாப் பாடுவம். தியாமூர்த்திட்ட மிருதங்கம், பியவதிட்ட சுருதிப் பெட்டி, சங்கீத வாத்தியார் தர்மலிங்கம் ஐயாட்ட வயலின்…

நானும் ஜானகியும் பாடுவம்.

ஏது பாராய் முகம் ஏழையின் மீதே

ஏகனே யோகனே மாயனே தியாகனே

ஏது பாராய் முகம்…

ஜானகியின் மூடிய விழிகளில் மைத்தீட்டி, நாசி மடலில் சிவப்புக்கல் மூக்குத்தி, எண்ணெய்க் கசிவில் ஜால் அடிக்கும்.

நானும் கண்களை மூடி இசையில் கரைவேன்.

மூடி விழிகளுக்குள் ஜானகி – ஜானகி மட்டும் நர்த்தனமாடினாள்.

விடியற கையோட நான் பள்ளிக்கு வந்திடுவன். புத்தகத்தை மேசையில வீசிட்டு – ஜனாகி வாற ஒழுங்கையைப் பார்த்து நிற்பேன்.

காட்டு விதானையார் வேலியோரத்தாலே கையொழுங்கை. மருங்கைப் பழம் போல் குருத்து மணல். ஜானகி கஸ்தூரி மஞ்சள் பூசிய முகம் இரட்டைப் பின்னலில் குண்டு மல்லிகைக் கொத்து – பச்சைக்கரை மஞ்சள் பட்டுப் பாவாடை, கொண்டையைத் தழுவும் வெள்ளிக் கொலுசு.

ரெண்டு வெள்ளை முயல் குட்டிகள் பதுங்கி… பதுங்கி  வருவதைப் போல அவளது பாதங்கள் அந்த ஒழுங்கையில் மிதந்து வரும்.

காலைச் சூரியனின் தங்கக் கதிர்கள் வெள்ளிக்கொலுசில் விழுந்து… பஞ்சவர்ணக் கோலிக் குண்டுகள்… கெண்டைக் காலில் டால் அடிக்கும்.

அப்படித்தான் ஐயா ஜானகி நடந்து வருவாள்.

புத்தகத்தை மேசையில் அழகாக அடுக்கி வைத்து விட்டு – ஸ்கிப்பிங் கயிறோடு மைதானத்துக்குப் போவம்.

வெறும் மணலில் அய்ம்பது தடவைகள் – ஒரே மூச்சில் எனது கையிலிருக்கும் கயிறு என்னைச் சுற்றி வரும்.

பதினைந்து, பதினாறு, பதினேழு…

ஜானகி களைத்துப் போய் நின்று விடுவாள்.

கண் கொட்டாமல் என்னைப் பார்த்துப் பூரிப்பாள்.

வியர்வை நெடி பரவி நிற்கும்.

“ஐயா! உரமிருக்கா? உரத்துக்கு மேல உரம் போடுறம் – வெள்ளாமை வெளுத்துப் போய்த்தான் கிடக்கு. ஒரு மூடை உரம் வாங்க ரெண்டு மூடை நெல் விக்கோணும். ஒரு போத்தல்

நோய் எண்ணெய்க்கு ஆயிரம். கமக்காரன் பதராப் போனான்”

“தம்பி சேகர்! உரக் கொம்பனிகளை விடவும் உரத்தில் கலப்படம் செய்யிற கொம்பனிகள்தான் நாட்டில கூடிப் போச்சி. எ.பி.ஸில நல்ல உரமிருக்கா பாருங்க”

ஐயா! இப்படியே நாள்கள் நகர்ந்து போயின. ஒரு நாள் கயிறடிக்கும் போது ஜானகிட மூக்குத்தி காணாமல் போட்டுதையா.

நானும் அவளும் தேடிக் களைச்சிப் போனம். அந்த வருஷம்தான் எங்கட செயினம்பூ பெரியம்மா மக்காவுக்குப் போக வெளிக்கிட்டுது.

அந்த நாளையில தண்ணிக்கப்பல்… மக்காவுக்குப் போய் வர ஆறு மாதம்.

ஐயா! இத்தனை வருஷத்தில எங்கட பெரியம்மாவைப் போல் ஒரு அழகியை நான் பார்த்ததில்ல. அப்படி அழகு, அப்படியொரு வசீகரம்.

ஜானகி ராமன்ட ‘அம்மா வந்தாள்’ படிச்ச நீங்களோ? அதில வாற ஐயர் பெண்டாட்டி அலங்காரத்தம்மாளை ஒளிச்சிப் போட்டு பெரியம்மாவைக் காட்டலாம்.

பெரியப்பாட நாற்பத்தைந்து வயசில, பதினெட்டு வயசு பெரியம்மாவை வசியம் செய்து மணம் முடிச்சிட்டாராம். பில்லி, சூனியம், வசியம் என்று பேர் போன வைத்தியர். கர்ப்பிணியைப்

பார்த்து வயிற்றில் இருக்கிற சிசு ஆணா பெண்ணா என்று அப்பவே சொல்லிப் போடுவாரு.

எங்கட ஊரில மூக்குத்தி போடுற ஒரேயொரு பெண்ணும் பெரியம்மாதான்.

சிவப்புக்கல்லு மூக்குத்தி.

மக்காவுக்குப் போக வெளிக்கிட்டதும் – நகையெல்லாம் கழட்டி பரிசப் பெட்டில வச்சிட்டா. பெரியம்மாட்ட இருந்துதான் நான் பள்ளிக்குப் போவன்.

மறு நாள் பெரியம்மாக்குத் தெரியாம மூக்குத்திய பள்ளிக்குக் கொண்டு பெய்த்தேன். வழமைக்கு மாறாக ஜானகியும் அன்று நேரத்தோட வகுப்புக்கு வந்திருந்தாள்.

நெற்றி, முகம், கழுத்தென்று வியர்வை முத்துக்கள்…

இவள் மூக்குத்தியைத் தேடிக் களைத்துப் போய்விட்டாள் என்று எனது மனம் சொல்லிற்று.

“ஜானி! நேற்று ‘புட்போல்’ அடிக்கும் போது உன்ட மூக்குத்தி கிடைச்சிட்டுது”

“எங்கே?”

“இதென்ட மூக்குத்தியில்ல… தங்கமோ? பொன்னோ? நான் மாட்டேன்” என்றாள்.

கடைசில சம்மதிக்க வெச்சிட்டேன்.

மூக்குத்தியை வாங்கிப் போட்டுப் பார்த்தாள். முடியல்ல.

வகுப்பில என்னையும் ஜானகியையும் தவிர வேறு எவருமில்ல.

அவள் கையிலிருந்த மூக்குத்தியைப் பிடுங்கி நான் போடத் தொடங்கினேன்.

என் நாசி அவள் நெற்றிப் பொட்டில்… குங்குமப் பொட்டைக் கலைத்து…

நெஞ்சு படபடக்க அடி வயிற்றில் புகைந்து…

நூறு மீற்றர் ஓட்டப் போட்டியின் ஆரம்ப நிலையில் நான் …

ஜானகியின் நெற்றியிலும் முகத்திலும் கழுத்திலுமாக மாறி மாறி முத்தமிட்டேன்.

முதல் முத்தம்… முதல் காதல் மறக்க முடியலய்யா.

சண்முகநாதன் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்.

மறுநாள் ஜானி பள்ளிக்கு வரல்ல… ஜானகியை நான் ஜானி என்றுதான் அழைப்பேன்.

பத்து நாளாப் போச்சிது… பத்து வருஷம் போல…

ஜானகிட வீடும் தெரியாது. ரயில் ரோட்டைக் கடந்து, கோயில் கடந்து… சவக்காலை கடந்து போகணுமாம்.

பியவதியும் இந்திராணியும் போய்ப் பார்த்து வந்தார்கள். ஒன்றும் சொல்லவில்லை.

பத்து நாளைக்குப் பிறகுதான் ஜானி வந்தாள். என்னை ஒரு யுகம் கடந்து போனது.

முகமெல்லாம் கஸ்தூரி மஞ்சளை அப்பியிருந்தாள். பட்டுப்பாவாடை, மஞ்சள் ரவிக்கை. வழமைக்கு மாறாக நீல நிறத்தில் தாவணி… காற்றில் பறந்து பறந்து சேதி ஒன்றை சொல்லத் தவித்தது போல்…

ஒழுங்கைக்குள் முயல் குட்டிகள் இறங்கியதும் - நான் பறந்து போனேன்.

ஒரு தேவதை போல் அவள் குருத்து மணல் ஒழுங்கையில் மிதந்து வந்தாள்.

“ஜானி!”

அவள் தலை குனிந்திற்று. உடல் வெளுத்துச் சோர்ந்து போய்…

“ஐயா! வழமைக்கு மாறாக அவள் அன்று மணத்தாள். அப்படி மணத்தாள். எப்படி என்று எனக்குச் சொல்லத் தெரியல்ல. அய்ம்பத்தைந்து வயதைக் கடந்து நிற்கிறேன். இன்றைக்கும் அந்த மணம் என் நாசிது துவாரங்களில் அலை பாய்கிறது.

அதற்கடுத்த இரண்டு மூன்று நாளையில எனக்குப் பெரியம்மை உடல் பூராவும் அள்ளி எறிஞ்சிட்டிது.

சந்தனமும் பன்னீரும் குழைத்துப் பூசி வேப்பங்குழையில படுக்கப் போட்டு வெள்ளைத் துணியால உம்மா போர்த்தி விடுவாள்.

கருக்கலில் வாப்பா சந்தனத்தில் வேப்பங்குழையைத் துவட்டி அம்மனை அழகுக் குழந்தையாக்கி தாலாட்டுப் பாடுவார்.

“அம்மா பாலகன் மீது இரக்கம் காட்டி தணி தாயே…!”

பாணிச் சேவலை தலையைச் சுற்றி வாசலில் வாப்பா வீசிடுவார்.

“என்ன சோனகப் புலியும் தமிழ்ப் புலியும் கதைச்சிக் கொட்டுது”

ஐயாவின் பக்கம் ஒண்ணரைக் கண்ணைச் சிமிட்டியவாறு ஹோட்டல் இஸ்மாயில் உரையாடலைக் குலைத்திட எத்தனித்தான்.

“பத்து நாளைக்குப் பிறகுதான் அம்மனுக்கு தீர்த்தம்”.

மஞ்சள் சோறாக்கி, முட்டை பொரித்து, துள்ளுமா இடித்து, நெல்லுப் பொரித்து - மச்சம் எடுக்க மாட்டார்கள்.

என் வயசுச் சிறுவர் சிறுமிகளையெல்லாம் வீட்டிற்கழைப்பார்கள். கிணற்றடிக்கு என்னை அழைத்து தலையில் தண்ணியை ஊற்றி…

மஞ்சள் வேப்பந்துளிர், சந்தனக் குழையல் என்று மேலெல்லாம் பூசி, வெள்ளைத் துணியை உடுத்தி, இன்னொரு வெள்ளைத் துணியால் போர்த்தி, என்னைச் சுற்றி சிறுவர் சிறுமியர்களுக்கு வாழையிலையில் படைப்பார்கள்.

சிறுவர்களெல்லாம் நேர்ச்சையை வாங்கிக் கொண்டு “போறம்…போறம்…போறம்” என்று திரும்பிப் பார்க்காமல் போவார்கள்.

“மஃரூப் செக் போடணும், பேங்கிற்குப் போயிட்டு வா”

“ஹாஜியார்! பசுவுக்கு நஞ்சுக் கொடி விழல்ல, கன்றுக்கு பாலுமில்ல, உங்கட மகன்ட கடையில மருந்து வாங்கிக் கொடுத்தேன், சரிவரல்ல”

“போங்க, கைபோட்டுத்தான் எடுக்கணும், பதினைந்து நிமிசத்தில வாறன்”

“கட்டாயம் வரணும் ஹாஜியார்!”

“ஐயா அப்பமும் பிளேன்டியும்”

“கதையை முடிச்சிட்டுக் குடிப்பம்”

“அம்மனுக்குப் பார்த்து இரண்டு கிழமைக்குப் பிறகுதான் பள்ளிக்குப் போனேன்”

புத்தகங்களை மேசையில வீசிப் போட்டு ஜானி வரும் ஒழுங்கைக்குள் ஓடினேன்.

முதலாம் மணி அடித்தும் ஜானகி வரல்ல. உடலும் உளமும் சோர்ந்து அடிவயிறு பற்றி எரிந்தது.

ஜானகி வரும் வழியில் பியவதி வந்து கொண்டிருந்தாள்.

“ஹனிபா! நம்ம ஜானகி ஏறாவூர் ஸ்கூலுக்கு மாறிப் போயிட்டாள்”.

மெசின்கார லெப்பை உப்புப் பிரம்பால் ‘சுளீ’ரென்று முதுகில் விளாசியதைப் போல.

மனசு…

பல்லியின் வால் அறுந்த துண்டின் அவலம்.

ஐயா! அடுத்த நாள் புத்தகங்களையெல்லாம் தம்பிப் பிள்ளை ஓவிசியர் தோட்டத்து முந்திரிகைக் காட்டிற்குள்ளே மறைச்சிப் போட்டு – ஏறாவூருக்குப் பஸ் ஏறிட்டன்.

பஸ்ஸுக்கு பத்து சதம். உமாட உண்டியலுக்குள்ள ஈக்கிலப் போட்டு காசி எடுப்பேன். எனக்கு ஏறாவூரில காசீம் ஸ்டோருக்கு முன்னாலுள்ள ஸ்கூலத்தான் தெரியும்.

பென்னம் பெரிய மர நிழலில நிப்பன். பள்ளி கலையும். ஜானகி மட்டுமில்ல.

அந்த கிழமை அப்படியே தொலைந்தது.

அந்த வயசில அந்த ஏமாற்றம், இந்த வயசிலயும் என்னைத் துரத்துகிறது.

எல்லா இடத்திலயும் எல்லாரிட்டயும் நான் ஏமாந்து போகிறேன். இத்தனைக்கும் வெளில நான் ஓர் எச்சரிக்கையான மனிதன் என்று பெயர். தப்புக்கணக்கு போலும்.

அதற்குப் பிறகு ஜானகியைக் காணவேயில்லை.

இருபத்தைந்து வருடத்திற்குப் பிறகு 1980 கறுவாக்கேணி மீராவோடை ரோட்டிலிருக்கின்ற என்ட தோட்டத்து தென்னம்பிள்ளைக்கு தண்ணீர் வார்த்துக் கொண்டிருக்கும் போது, அந்த வீதியால் ஒரு பெண் நடந்து…

அதே நட, பூமிக்கு நோகாத நட, இரண்டு வெள்ளை முயல் குட்டிகள்…

‘கேற்’றிற்கு ஓடிப் போனேன். எனது ஓட்டமும் நடையுமான அவசரத்தை அறிந்து கொண்டதைப் போல…

கொஞ்சம் பெருத்து… கொஞ்சம் உயர்ந்து, முகமும் பளீர் என்று…

நாசி மடலில் அதே மூக்குத்தி, மௌத்தாப் போன ஹாஜியானி பெரியம்மாட… சிவப்புக்கல்லு மூக்குத்தி… என்னைப் பார்த்துக் கலங்குவதைப் போல…

“ஜானகி!” என்றேன்.

“நீங்க?”

“நல்லாப் பார் பார்ப்பம்”

“ஹனிபாண்ண”

“இஞ்செ எங்கே?”

“நான் மீராவோடையில், தமிழ்ப் பகுதிக்குள், காளி கோயில் பக்கத்தில் வீடு”

“எனக்கிது தெரியாதே”

நாலைந்து தடவைகள் தோட்டத்து வளவில் அப்படிச் சந்தித்துக் கதைத்திருப்பேன்.

ஒரு சனிக்கிழமை காலை இப்படிக் கதைத்துக் கொண்டிருக்கும் போது பால்கார சின்னவன் என்னைத் தேடி வந்தான்.

“அண்ணன் ஜானகியைத் தெரியுமோ?”

“நானும் ஜானகியும் ஒன்றாய் படித்தவர்கள்”

“ஜானகி என்ட பெரியப்பாட மகனைத்தான் கட்டியிருக்கிறா”

“அப்படியா?”

ஜானகி விடை பெற்றுச் சென்று விட்டாள்.

சின்னவன் விட்ட பாடில்லை. என்னைப் பற்றிய கதையை அவனுக்குத் தொட்டுக் காட்டினேன்.

அதன் பிறகு பதினைந்து வருடங்களாக ஜானகியை நான் பார்க்கவேயில்லை.

இருபத்தைந்து வருட உத்தியோக வாழ்வில் இருபது இடங்களில் அலைக்கழிந்து மூன்றாவது ஈழப் போர் தொடங்கிய போதுதான் ஊர் வந்து சேர்ந்தேன்.

ஜானகி வாழ்ந்த ஊரும் உருக்குலைந்து போனது. ஜானகி பற்றிய நினைவுகளும் வாலைச் சுருட்டிக் கொண்டன.

நேற்று திடீரென சின்னவன் வந்தான். என்னையே பார்த்துப் பார்த்து கதைக்காமல் நின்றான்.

“சின்னவன் எப்படிச் சுகம்?”

“நல்லம் அண்ணே”

“மகள் கனடாவிலதானே”

“ஓம் அண்ணே”

“என்ன வந்தாய்?”

அவன் மௌனம் புதிராய்க் கிடந்தது.

“சொல்லு சின்னவன்”

“அது வந்து… உங்கட ஜானகி போன கிழமை செத்துப் போனாள் அண்ணே. இரண்டு நாள் காய்ச்சல்.. இரவெல்லாம் கதைச்சிப் பேசியிருந்தவள், காலையில் கண் மூடிக் கிடந்தாளாம்.

நானும் இளையவளைக் கனடாவுக்கு அனுப்ப கொழும்புக்குப் போய் நேற்றுத்தான் வந்தன். எனக்கும் அவளைக் கடைசியாகப் பார்க்கக் கிடைக்கல்லை. காய்ச்சல் வந்த மறுநாள் ஜானகி இந்தப் பொட்டலத்தை உங்ககிட்ட என்னிடம் கொடுத்து கொடுக்கச் சொன்னதாக அவள்ற இளைய மகள் பவானி தந்தாள் அண்ண”

வெள்ளைத் துணியில் முடிந்து…

நூறு மீற்றர் ஓட்டப் பந்தயத்தின் ஆரம்பக் கோட்டில் நான். அதே பதறல்.

எனக்கும் ஒன்றும் பிடிபடவில்லை. பொட்டலத்தை பரக்க பரக்க அவிழ்த்து…

சிவப்புக்கல் மூக்குத்தி.

நாற்பது வருடங்களுக்கு முதல் நான் ஜானிக்கு மாட்டிவிட்ட சிவப்புக்கல் மூக்குத்தி…

என்னைப் பார்த்துக் கண் கலங்கிற்று.

***

நன்றி : ஹனீபாக்கா  slmhanifa27@gmail.com