Monday, May 26, 2014

சிறை பட்ட மேகங்கள் - சு.மு.அகமது

பிணமான  உணர்வோடு படுக்கையிலிருந்து உத்தரத்தை பார்த்த என் கண்களில் நிழலாடியது கச்சிதமாக வட்ட வடிவில் வட்ட முடிச்சு போடப்பட்ட சுருக்கான கயிறு. கயிறு காற்றில் லேசாக அசைந்தது என் கழுத்தில் தடம் பதிக்க காத்திருக்கிறேன் என்பதாய்.

                      உள்ளங்கைகளின் மேல் தலை வைத்து இடது காலின் மேல் வலது காலை வைத்துக்கொண்டு  மல்லாந்து படுத்திருந்த எனக்கு தலையின் பாரம் தாங்க மாட்டாது கைகள் வலிக்கத் துவங்கியது.கழுத்தும் 
இறுகிப்போனதாய் தெரியவே சற்று ஒருக்களித்து படுத்தேன். கழுத்தில் சுருக்குக்கயிறு இறுக்கும் போது வலி இதை விட அதிகமாக இருக்குமோவென்று  யோசித்தேன்.எதற்கும் லாயக்கற்ற எனக்கு வலியின் ஸ்பரிசம் மட்டும் தேனாய் இனித்திடுமா என்ன? எண்ணங்கள்அதன் அலைவரிசையில் பாய்ந்தோடியது. திகைத்துப்போனவனின் அரண்ட பார்வையாய் மரணம் குறித்த மெல்லிய பயச்சாயல் ரேகைகளாய் மாறி நெற்றியில் படர்ந்தது. வியர்வை அரும்புவதற்காய் தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்தது.

                     என்ன தான் இருந்தாலும் சாமண்ணண் இப்படி செய்திருக்கக்கூடாது.     “ஏண்டா நாதாரி காச திருப்பித்தர வக்கில்லைன்னா ஏண்டா வாங்கனும்.எனக்கு தெரியாது காசு வட்டியோட நாளைக்கு காலையில வந்து சேர்ந்துடனும்.இல்லைன்னா நடக்கிறதே வேற”-மிரட்டிவிட்டு சென்றுவிட்டார்.

                    வட்டிக்கு காசை கடனாக வாங்கினவன் சரியான சமயத்தில் காசை திருப்பி தரவில்லை என்றாலும் அல்லது வட்டி கட்ட தாமதமானலும் இது போன்ற ஏச்சு பேச்சுக்கு இடமாவது நான் கண்கூடாய் பல இடங்களில் 
பார்த்தது.நானே கூட பணம் வசூல் செய்யும் கட்டப் பஞ்சாயத்து கும்பலில் கடைசி வரிசையில் முதலாவதாய் தான் நின்றிருப்பேன். முன்னால் நிற்பவனின் கத்தல் பேச்சு மட்டும் தான் காதில் விழும்.பணம் வாங்கினவன் பாவம் மிடறு விழுங்கிகொண்டிருப்பான்.முகம் சிவந்து போய் நாணிக்கோணி ஒரு ஜந்துவாய் தான் காட்சியளிப்பான்.இவைகள் ஏதுமற்று கஞ்சி போட்ட சட்டை கணக்காய் விறைப்பாய் மொறப்பாய் நின்று பேசுபவர்களுக்கு கடைசியில் பத்து பதினைந்து தட்டு செல்லத்தட்டுகளாவது கிடைக்கும்.அவைகள் இலவசமாய் தான் அளிக்கப்படும்.அதற்கு வட்டி கிடையாது. ஏனடா மொறைப்பாய் நின்றோமென்று அவனே கடைசியில் நினைக்கும் படியாய் செய்துவிடுவார்கள் இவர்கள்.நான் மட்டும் 
தனியனாய் கவனமாய் என் சுவாசக்காற்று கூட அவன் மீது விழாத வண்ணம் தூரமாகவே நின்றிருப்பேன்.மனசுன்னு  ஒண்ணு இருக்குதுல்ல? அதுக்கு யாரு பதிலு சொல்றதுன்ற மாதிரி தான் நினைத்து கொள்வேன். ஆனால் என் பங்குக்கு மட்டும் சாயங்கால நேரத்தில் ஒரு கட்டிங் உள்ளே தள்ளிவிடுவேன் அவர்கள் செலவில் சிக்கன் 65 சகிதம்.

                     இப்போது எனக்கே இந்த கதி ஏற்படுமென்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. சாமண்ணண் பெரிய ஆளாய் இருக்கலாம்.ஆனால் கூட மாட ஒத்தாசையாயிருக்கும் என்னையே மிரட்டிவிட்டு சென்றுவிட்டாரே 
என்பதை தான் என்னால் சீரணிக்க முடியவில்லை.

                      ஜில்லென்ற காற்று முகத்தில் பட்டு கடந்தது.முன்பு கூட காற்று வீசிக்கொண்டு தானிருந்தது.  அரும்பின வியர்வைத்துளிகள் மீது காற்று பட்டதால் சில்லிடுகிறதோ என்னவோ?

                     திடீரென்று எனக்கு ஞாபகம் வந்தது.அன்று வெங்கிளியானிடம் பணம் வசூலிக்க சென்ற போது சந்தடியின்றி காலையிலேயே பொழுது புலரும் முன்பேயே அவனது வீட்டிற்கு முன்பு சென்று நின்றுவிட்டோம். 

                   சாமண்ணண் இதில் கில்லாடி.யாருமே எதிர்பார்க்காததையெல்லாம் செய்துவிடுவார்.நமக்கே சில சமயங்களில் எப்படி இவர் இதையெல்லாம் செய்கிறாரென்ற ஆச்சரியம் ஏற்படும்.ஒரு உதை விட்டாரென்றால் எழுவதற்கு ஐந்தாறு நாட்களாவது ஆகும் உதைப்பட்டவனுக்கு..இத்தனைக்கும் நன்றாக படித்தவர்.முதுகலை பட்டமும் எம்.பில்லும் பெயருக்கு  பின்னால் எப்போழுதுமே ஒட்டிக்  கொண்டிருக்கும்.நான் மட்டும் என்னவாம்.எம்.காம் படித்திருக்கிறேன்.எனக்கு தேவையா  இதெல்லாம்.நினைப்பதுண்டு.ஆனால் நினைப்பே பிழைப்பதற்கான ஆதாரமாகிவிடுமா?  நான் வங்கியில் தான் வேலை செய்து கொண்டிருந்தேன்.என்ன ஒரு நாள் நான்கு ஐநூறு ரூபாய் நோட்டுகளை கட்டோடு கட்டாய் வைத்து நகர்த்தினேன்.அது கள்ளநோட்டாய் இருக்கிறதென்று பணத்தை எடுக்க வந்த வாடிக்கையாளர் கூற ஏக களேபரமாகி போலீஸுக்கு  போகாத குறையாய் என்னை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள்.தனியாருக்கு சொந்தமானதால் நான் தப்பித்தது 
தம்பிரான் புண்ணியம் தானென்று சொன்னார்கள்.அந்த வங்கியில் இருந்த போது பெற்ற கடன் வசூல் செய்யும் அனுபவத்தை தான் செயல்வடிவில் இப்பொழுது இவருக்காக செய்து கொண்டிருக்கிறேன்.

                       என்ன தான் இருந்தாலும் மரக்கட்டை மனசும் பிணமான உணர்வும் என்னை ஆட்கொண்டிருந்த வேளையில் தான் நான் பிணம் சுவாசிப்பதையும் மரக்கட்டையில் அசைவுகளையும் உணர ஆரம்பித்தேன்.ஒரு வேளை பிணங்களின் நகரில் வசிக்க நேர்ந்ததால்  என் சுவாசத்தையே நான் உணர ஆரம்பித்தேனா? மரக்கட்டை உடலின் உணர்ச்சிகளுக்கான கொந்தளிப்புக்கு ஆசையே காரணமென்று கூறிய மகானின் தேடலில் என்னை தள்ளிவிட்ட  பெருமை சாமண்ணணை தான் சேரும்.அவர் தானே எனக்காக சுருக்குக்கயிற்றுக்கு வழி வகுத்தவர்.

                கயிறு ஊசலாடிக்கொண்டிருந்தது.’உயிரே ...உயிரே...வந்து என்னோடு கலந்துவிடு.’   தென்றலாய் பாடல் வரிகள் என் காதில் வந்து விழுந்தது.பாடல் வரிகள் தாலாட்டுவதாய் தான்  இருக்கிறது.அவள் மடியில் நான் படுத்திருந்தால் இன்னும் சுகமாய் இருந்திருக்கும்.

                எல்லாம் ’உயிரே’ திரைப்படம் வெளியான நேரத்தில் தான் தொடங்கியது.அவளை நான் காதலித்த மாதிரி தான் உணர்ந்தேன்.அவளும் எப்பொழுதாவது என் மீது பார்வையை மோத விடுவாள்.திருமணம் செய்து கொள்ள தீர்மானித்து என் விருப்படியே எல்லாம் இனிதே நிறைவுற்றது.இரண்டு குழந்தைகளை எனக்காய் பெற்றேடுத்தாள்.அதற்காக மட்டும் தானா அவள்?ஆசையை அழித்துக்கொண்டவன் அவள் பால் கொண்டது காமம் மட்டும் தானா?என் இச்சையை பூர்த்தி செய்து கொள்ள அவளுக்கு நான் கொடுத்த விலை இரண்டு குழந்தைகள். இது சரியா? இல்லையென்று நான் உணர்ந்த போது தான் அவளுக்கும் இது உறைத்திருக்க வேண்டும்.அவள் படித்திருந்த படிப்பின் ஞாபகம் வேறு 
வந்து தொலைக்க அதுக்கு மட்டும்  தானா நான்.என் படிப்பு என்ன ஆவது போன்ற குழப்பங்கள் குழப்ப குழம்பிய மனதுடன்  இருந்த அவளது குழப்ப நேரத்தில் தான் என்னையும் வேலையிலிருந்து நீக்கினார்கள். ஏதோ  உட்கார எதோ வீழ்ந்த கதையாய் இதையே காரணமாய் வைத்து ஊதலில் வைத்த பழம் போல்  சீக்கிரமே பழுத்துவிட்டாள்.மலிவு விலையில் வாங்கின பிளாஸ்டிக் நாற்காலி சற்று மடங்கினாலும் பட்டென்று உடைந்து வீழ்வது போல் வாழ்க்கையும் உடைய,எனக்கு சிறிதளவும் சந்தேகமே ஏற்படவில்லை நான் தான் இத்தனைக்கும் காரணியாய் இருந்திருக்கிறேன் என்பது.பெண்ணுரிமைக்கும் மதிப்பளிக்கும் கூட்டத்தினருள் நானும் ஒருவனாய் இருந்ததினால் அவளது செய்கைகளை கண்டும் காணாது விட்டிருந்தேன்.விளைவு  இரண்டு குழந்தைகளை பெற்றெடுத்த பின்பு விவாகரத்து வரைக்கும் நீண்டிருக்கிறாள்.ஏதும் அறியாத என்னவென்றும் புரியாத இரண்டு பிள்ளைகளும் தடுமாறுகின்றனர்.அவர்களது வாழ்விற்கான ஆதாரம்?நானின்றி அமையாது அவர் உலகு.அதனால் அவர்களுக்காகவாவது நான் இந்த உலகில் உழல வேண்டும்.

               சுருக்குக்கயிற்றை சுருட்டி வைக்க நினைத்த போது தான் மறுபடியும் நினைவுக்கு வந்தது அவளுக்கு நான் அளித்த சுதந்திர வாழ்வு பற்றி.என்ன தான் இருந்தாலும் இவள் இப்படி செய்திருக்கக்கூடாது.முழுமையாக வக்கீல் படிப்பு கூட முடிக்காத நிலையில் தான்  திருமணமே நடந்தேறியது.நான் அனுமதித்த பிறகு தான் படிப்பையே  முடித்து வக்கீலானாள்.  வக்கீலானதால் தான் நீதிமன்றத்துக்கே நேரடியாய் சென்றுவிட்டாளோ என்னவோ?

                    ”ஆர்டர்..ஆர்டர்...ஆர்டர்...”சடாரென திரும்பி படுத்தேன்.தொலைக்காட்சியில் ஏதோ விளம்பரப்படம்.எதற்கானதை எதற்கு பயன்படுத்துவதென்ற வரைமுறையே இல்லாமல் போய்விட்டதாய் உணர்ந்தேன்.”வாய்தா...வாய்தா...”என்றால் “வாய்...தா வாய்...தா” என்று 'திரித்து்ரைப்பது கூட வாடிக்கையாகிவிட்டது.

                     கன்னக்கதுப்பில் சூடான திவலைகள் உருளத்துவங்கியிருந்தன.காதோர முடிக்கற்றை நனைந்து போனதில் காற்று பட்டு ஈர உணர்வை அணு அணுவாய் அனுபவித்தேன்.எரிச்சலுற்ற மனதுக்கு இதமான அனுபவமாய்பட்டது அது.மரணத்தையும்  இதே உணர்வோடு அனுபவிக்க முடியுமா என்னால்?எனக்குள்ளேயே கேள்வி எழுந்து  விடையின்றி அடங்கிப்போனது.மகிழ்ச்சியான வாழ்வில் திளைப்பவர்களென்று நாம் நினைப்பவர்கள் வாழ்விலும் ஏதோ ஒரு மூலையில் மெல்லிய சோகம் இழையோடுவது  சில  சமயம் புரிபடாது போய்விடுகிறது.அழகிய பட்டுப்புடவையின் எதாவது ஒரு மூலையில் சலவைத்தொழிலாளி இட்டு வைக்கும் அடையாளக்கரும்புள்ளி போல்தான் வாழ்விலும்  சில  கரும்புள்ளிகள் நிரந்தரமாய் தங்கிவிடுகிறது.சிதிலமடைந்த வாழ்வில் சிலந்திவலைகளாய் பின்னிப்பிணைந்திருக்கும் அவைகளற்ற நிலையில் வாழ்வது சாத்தியமற்று தான் போகிறது.  வாழ வக்கற்ற கையாளாகாதவன் பேசுகிற பேச்சா இது?இல்லை அவனுக்கு இந்த யோசனையின் பலம் புரியுமா?புலம் பெயரும் ஆசையில் தான் எல்லாவற்றையும் இழந்துவிடுகிறான் இவன்.வேலையாகட்டும் மனைவி மக்களாகட்டும்.எல்லாமும் 
எல்லாமாய் எவைகளுமற்று தனித்து நிற்க அவனால் முடியுமா?தனி மரம் தோப்பாகாது. தனித்தவன் சொல் எடுபடாது.யோசனை மட்டும் பலமாகத்தான் இருக்கிறது.

                    கண்களில் மீண்டும் பாழாய் போன சுருக்குக்கயிறு தெரிந்து தொலைத்தது.எதாவது  செய்ய வேண்டுமே இதை.இல்லையேல் என்னையே இது விழுங்கிவிடும்.’அச்சம் தவிர். துணிந்து எழு’.நன்றாகத்தான் இருக்கிறது.ஆசையை தவிர்த்தாயிற்று.அச்சத்தை எப்படி தடுப்பது.

              இடுப்பில் கட்டியிருந்த லுங்கி தளர்ந்திருந்தது.சுதாரித்து எச்சரிக்கை கலந்த அவசரத்தோடு லுங்கியை சரிசெய்து கொண்டேன்.

             பயமே கூடாது.பயந்தாலும் பயந்தது போல காட்டிக்கொள்ள கூடாது.இரண்டு நாட்களாய் வயிற்றை குமட்டிக்குமட்டி வாந்தியெடுத்துக்கொண்டு தான் இருக்கிறேன்.வயிறே  காலியாகிவிட்டதாய் ஒரு உணர்வு.உடல் எடையிழந்து காற்றிலே பறப்பதாய் உணர்த்துகிறது.  நடை  தளர்ந்து எதையோ இழந்துவிடப்போகிறோம் என்று பயப்பட்டாலும் ‘ஒண்ணுமில்ல’ என்று பயத்தை வெளிக்காட்டாது தைரியப்பட்டிருந்தேன்.தைரியப்பட்டிருப்பதாய் நடித்தேன்.உள்ளுக்குள் ஒரு 
உதறல் இருந்தது நிச்சயமாக.துல்லியப்பட்டு போன அந்த உணர்வை உணர்ந்த எனக்கு மூன்றாம் நாள் பேரிடி காத்திருந்தது.வழக்கமாய் வயிறு குமட்ட  ஒரு புரட்டலோடு வெளியே வந்து வீழ்ந்த சிவப்பு கங்குகள் தரையில் பட்டு சிதறின போது நெஞ்சிலே நெருப்புச்சூட்டின் எரிச்சல் அதிகமானதை உணர்ந்தேன்.எனக்குள் உறைந்த குவியலின் கிடங்குகளில் பதுக்கப்பட்டிருந்த உதிரம் விரயமாவதை கண்டு பயந்து பயச்சாயலின் வண்ணத்தை என் மீது பூசிக்கொண்டேன்.பயத்தின் விரல் பிடித்து நடை பழக  துவங்கினேன்.தடுமாற்றத்தை தவிர்க்க தத்தளித்து தரை தொட முற்படும் போது தான் பெரிய மாற்றமொன்று என்னுள் நிகழத்துவங்கியிருந்தது.சதைகட்டுகள் சுருங்கின தோல்பையாய் தளர ஆரம்பித்திருந்தது.நான் வாழ என் வாழ்விற்கு இனியும் ஏதேனும் அர்த்தம் கற்பிக்க முடியுமா.யோசிக்க துவங்கினேன்.

                உத்தரத்தில் அந்தர வீரனாய் ஊர்ந்து கொண்டிருந்த பல்லி ஒன்று எனது நிலை கண்டு அதிர்ச்சியில் ஊர்வதை மறந்து என்  மார்பின் மீது சொத்தென்று வந்து வீழ்ந்தது.பதறிப்போய்  அலறலின்றி எழுந்து நின்று 
கொண்டேன்.பல்லி என்னை பார்த்து பாவமாய் ஒரு உச் கொட்டிவிட்டு எனக்கு துணையாய் தன் வாலை துண்டித்து விட்டுவிட்டு ஓடியது.வாலின் துள்ளல் மனதிலே உண்மையாகவே ஒரு வித அருவெறுப்பை உண்டாக்கியது.நல்ல வேளை  நான் படுத்திருந்தேன்.நின்ற நிலையில் அது என் உச்சந்தலையில் வீழ்ந்திருந்தால்...ஐயோ அப்போதே எனக்கு சங்கு ஊதியிருப்பார்கள்.உச்சியில் மரணம் என்பது கௌளி வாக்கு. வாழ்வின் உச்சியான வயோதிகத்தில் மரணம் என்று புரிந்து கொள்ளும் பக்குவம் இருக்கிறதா நமக்கு.பல்லியின் கண்களில் மிகுந்திருக்கும் நம்பிக்கை கூட நமக்கில்லாது போகிறதே. இழந்து போன வால் மீண்டும் உருவாகுமென்ற நம்பிக்கையில் தானே அது தன் வாலை விடுத்து எதிரிக்கு போக்கு 
காட்டி தப்பிக்கிறது.பஞ்சமா பாதகம் செய்கிறவனுக்கு கூட பிறந்ததும் மரணத்தை நோக்கி தான் நமது பயணம் என்பது புரியும் போது மரணம் குறித்த  பயம் நமக்கெதற்கு.

            என்ன இருந்து என்ன செய்ய.நான் இந்த உலகில் இருந்து என்ன சாதித்துவிடப் போகிறேன்.எதற்கும் லாயக்கற்றவன் பந்தபாசம் ஆசை பயம் எல்லாவற்றையும் விடுத்து  உலகில் பிறகெதற்கு வாழ்வது.அதுவும் ஒரு 
வாழ்வாகுமா?

         உத்தரத்துக்கு சென்றடைந்துவிட்ட பல்லி மீண்டும் உச் கொட்டியது.சுருக்குக்கயிற்றின் மீது ஒரு சாகச வீரனை போல லாவகமாக கீழிறங்கி வந்து பின்பு மேலேறி சென்று கொண்டிருந்தது.  அதையே கண் கொட்டாது பார்த்துக்கொண்டிருந்தேன்.வாழ்வில் ஏற்ற இறக்கங்கள் சகஜம்  என்பதை குறியீடாக (சிம்பாலிக்காக) அது உணர்த்துவதாய் உணரப்பெற்றேன்.
      
        ‘சலக்புலக்’-என்ற சப்தம் வர அப்போது தான் அதை நான் கவனித்தேன்.அறையில் இருந்த இரண்டுக்கு இரண்டடி கண்ணாடி தொட்டியில் ஆரஞ்சு நிற மீன் ஒன்று உயிருக்கு உருகொடுக்கும் ஏதோ ஒன்றை தன் வயிற்றில் சுமந்து கனத்த வயிறோடு நீருக்குள் சுற்றி வந்து கொண்டிருந்தது.கண்ணாடியின் ஊடே உலகை காணும் கண் இரப்பையை மூடாத அதன் கருப்பு உருண்டை கண்களில் தான் சுதந்திரமாய் திரிவதான அசாத்திய நம்பிக்கை ஒளிர்ந்தது.மனம் தெளிந்த நீரோடையை போன்றானதாய் உணர்ந்தேன்.மெதுவாக சன்னலோரம் சென்று நின்று கொண்டேன்.தோட்டத்தில் வண்ண வண்ண மலர்கள் பூத்துக்  குலுங்கி கொண்டிருந்தன.காற்றில் தலையசைத்து என்னை அவை அழைப்பதாய் உணர்ந்தேன்.மலர்ந்த மலர்களின் பிரகாச முகங்களில் எனது இருப்பை அவை அங்கீகரிப்பதாய் தெரிந்த ரேகைகள் கண்டு பூரித்துப்போனேன்.வெற்றிலையில் பாக்கு சீவலை தூவியதான வண்ணக்கலப்போடு வண்ணத்துப்பூச்சி ஒன்று பூக்களை மொய்த்துக்கொண்டிருந்தது.அரை வட்டமடித்து முன்பு நுகர்ந்த பூவிடமே திரும்பி வந்து  மறுபடியும் திரும்பித் திரும்பி ...அதன் முயற்சி எதையோ சொல்ல விழைந்தது.எல்லாம்  மங்கலாய் தெரிவதாய் உணர்ந்தேன்.கண்களில் நீர் பெருக்கெடுத்திருப்பதை உணர்ந்தேன்.  வண்ணத்துப்பூச்சி ஆதரவாய் என் தலை முடியை கோதுவதாய் உணர்ந்தேன்.சிலிர்ப்பான  அந்த உணர்வுக்குள் மூழ்க துவங்கினேன்.

           ” என்னங்க எழுந்திரிங்க.என்ன தான் ஞாயிற்றுக்கிழமையா இருந்தாலும் இப்படியா தூங்கறது.பசங்க உங்களுக்காக காத்துகிட்டிருக்காங்க.எழுந்திருங்க”.செல்லமாய் கிணுகிணுத்தாள் மனைவி அவனது தலையை கோதியபடி.

      சோம்பலை முறித்து எழுந்து கொண்டவன் அறையிலிருந்து வெளியே வந்தான்.மனைவி குளித்து முடித்து ‘ஜம்’மென்றிருந்தாள்.கோகுல் சந்தனப்பவுடர் மணம் கமகமத்தது.நெருங்கினான்.இட்லி தட்டிலிருந்து இட்லியை எடுத்துக்கொண்டிருந்தவளுக்கு  உதவுவதாய் கையை இட்லி தட்டுக்கு கொண்டு சென்றான் அவளது இடையை உரசியவாறு.

          ‘உம்’...என்றாள்.பயந்தவன் போல் கையை வெடுக்கென்று நகர்த்தி கொண்டவன் நொடியில் இடையில் கைச்சொருகி அவளை அருகில் அணைத்தான்.

          ‘சீ...என்ன இது’ செல்லமாய் சிணுங்கினவள் கூடவே ‘ஆமா நாளைக்கு பேங்க் ஆடிட்டுக்கு போன வருஷம் வந்தாரே அதே கேசவன் தானே வர்றாரு.ரெகார்ட்ஸ் எல்லாம் ரெடியா இருக்கா.நான் எதாவது ஹெல்ப் பண்ணட்டுமா?’ என்றாள்.

          ‘நோநோ...லீகல் அட்வைஸ் வேணா உங்கிட்ட கேட்டுக்கலாம்.இது அக்கவுண்ட்ஸ். நானே இதுக்கு போதும்.அதில்லாம மேனேஜருக்கு என்ன பெரிய வேலை.அதெல்லாம் அந்தந்த செக்ஷனே பாத்துக்கும்.ஐயா சும்மா பிலைண்ட் சைன் பண்றவன் தானே.நோ ப்ராப்ளம்’ என்றவாறு பாத்ரூமுக்குள் நுழைந்தான்.உள்ளேயிருந்தபடியே,

             ’உன் வக்கீல் தொழிலுக்கு அடிஷனலா இன்னிக்கு கொஞ்சம் என் முதுகு தேச்சுவிடேன்’என்றான் கெஞ்சலாக.

             ‘ஆச ...நான் மாட்டேன்ப்பா.ஏற்கனவே நான் குளிச்சாச்சு’என்றவள் திறந்திருந்த பாத்ரூம் கதவுக்கு முன்னால் வந்து நின்றிருந்தாள்.

       என்ன நினைத்தானோ தெரியவில்லை திடீரென்று’இன்னிக்கு வேணாம் அடுத்த வாரம்  பாத்துப்போம்’என்றான் நமுட்டுச்சிரிப்புடன்.உதட்டை பிதுக்கி காண்பித்து பழிப்புக்காட்டி  சென்றுவிட்டாள் அவள்.         குளித்து முடித்து 
வெளியே வந்தான் அவன்.

           ‘என்னங்க பக்கத்து வீட்டு தாத்தாவுக்கு இருமல் அதிகமாக இருக்காம்.எதாவது மருந்து கொடுத்தனுப்புங்க’என்றவளிடம்           ‘சரி ஆவட்டும்’என்றவாறு ரூமுக்குள் நுழைந்தவன் கண்களில் பட்டது காற்றில் ஆடியபடி தலைகீழாய் தொங்கும் பாம்பாய் சுருக்கிடப்பட்ட கயிறு.லேசாய் புன்முறுவல்  முகத்தில் படர்ந்து அடங்கியது.ஷார்ட்ஸையும் டீ-சர்ட்டையும் அணிந்து கொண்டவன்,’டேய் குட்டீஸ்  ஓடியாங்க’என்றான்.

          பிள்ளைகள் இருவரும் ஓடி வந்தனர்.அதற்குள் மணலும் மரத்தூளும் தவிடும் நிறைந்த பாக்ஸிங் கிட் பேக்கை எடுத்து உத்தரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சுருக்குக்கயிற்றில் மாட்டிவிட்டிருந்தான்.பாக்ஸிங் கிட் கயிற்றில் தொங்கி ஊஞ்சலாடியது.அவன் பாக்ஸிங் கிளவுஸை கைகளில் அணிந்து கொண்டு ஆக்ரோஷமாக அதன் மீது தன் குத்துக்களை இறக்கி கொண்டிருந்தான்.பக்ஸிங் கிட் பேக் ஒவ்வொரு குத்துக்கும் முன்னும் பின்னும் ஆடியாடி களைத்திருந்தது.குழந்தைகள் இருவரும் வாய் பிளந்தபடி அப்பாவின் குத்துக்களை ரசித்தபடி இருந்தனர்.ஒவ்வொரு குத்தும் இவனது மனதிலிருந்த எதோ ஒரு பாரத்தை குறைத்தபடி இருப்பதாய் உணர்ந்தான்.மனம் பாரம் குறைந்த வண்டியாய் சலனமற்று தன் தன்மைக்கு தன்னை மாற்றிக்கொண்டிருந்தது.சுவற்றில் குத்துக்களின் ஒலி அதிர்வலைகளை உள்வாங்கி கொண்டிருந்தது மிரட்சியுடன் பல்லி இழக்காத முழுமையான தன் வாலோடு.

***

நன்றி :        
- சு.மு.அகமது  (எஸ்.முஸ்தாக் அகமது)
42,திருவள்ளுவர் தெரு,
காமராஜபுரம்,பட்டாபிராம்,
சென்னை - 600 072,
தமிழ்நாடு,இந்தியா.

**
மேலும் சில சிறுகதைகள் :

எண்களால் ஆன உலகு - சு.மு.அகமது


பருந்தானவன் - சு.மு.அகமது

3 comments:

 1. நன்றி சகோதரர் ஆபிதீன் அவர்களுக்கு.

  ReplyDelete
 2. நண்பர் அகமதுவின்
  'சிறை பட்ட மேகங்கள்'
  என் ஆர்வமான வாசிப்பை
  கோரி பெற்றது இன்னொரு கதை.
  நுட்பம்சார்ந்து
  சொல்ல ஆசைப்பட்டு
  அப்படியே சொல்லியும் இருக்கிறார்.

  இந்தக் கதையில்
  கந்துவட்டி உலகம் விசாலமாக
  சொல்லப்பட்டிருக்கிறது.
  பெரிய படிப்பாளிகள் எல்லாம்
  இந்த உலகில் சிக்கி தவிப்பது சோகம்!

  எந்த ஊர்களிலும்
  ஹிருதயமே இல்லாதவர்களே
  இந்த தொழிலில்
  கொடிக்கட்டிப் பறப்பவர்களாக இருக்கிறார்கள்.

  நடைமுறை உலகில்
  சாமானியனாக
  நடுத்தர வர்க்கத்தினனாக
  வாழ்வது
  எல்லா காலங்களிலும் கஷ்டமானதுதான்.

  இந்தக் கதையில்
  அந்த 'நாட்' அழுத்தமாகவே பின்னப்பட்டிருக்கிறது.
  சுருக்காக அது...
  தலைக்கு மேலே தொங்குகிற அளவுக்கு!

  மனைவி அறியாமல்
  தேவையை முன்வைத்து(அல்லது ஆசை)
  செய்துவிடும் ஒரு பிழை
  ஒருவானை என்னமாய் படுத்திவிடுகிறது!

  நாயகன் கனவில் கொள்ளும்
  அதிர்ச்சியென்ன...
  சாதாரணமானதா!?

  கதையின் போக்கில்...
  கடைசியில்
  ஆண்மையோடு
  எதையும்
  எல்லாவற்றையும்
  சமாளிக்க முடியும் என்கிற பாங்கில்
  நாயகன் உறுதி பெறுவதில்
  கதை ஆசிரியரைவிட
  நமக்குத்தான்
  அந்த முடிவு பெரிய ஆருதலாகிப் போகிறது.

  அகம்மதுக்கு
  வாழ்த்தும் பாராட்டும்

  - தாஜ்

  ReplyDelete
 3. நன்றி தாஜ் பாய்.வாழ்த்துக்கள்.விரிவான அலசலுக்கு.உளவியலை மையப்படுத்தின படைப்பு.ஆழ்ந்த வாசிப்பில் அதை நன்கு உணர்ந்து வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்.தொடர்ந்து எழுத முயற்சிக்கிறேன்.அன்புடன் முஸ்தாக்.

  ReplyDelete