Monday, January 27, 2014

ஆமையரப்பாவும் ஆட்டுக்குட்டியும் ( 4 & 5 ) - எஸ்.எல்.எம். ஹனீபா

01 to 03  : http://abedheen.blogspot.ae/2014/01/blog-post_12.html
***

04
 
மச்சிக்குப் பேரு செய்னம்பு. மாமியப் போல சரியான வெள்ளெ. ராத்தாவும் வெள்ளெதான். எங்கட குடும்பத்தில நான் மட்டுந்தான் கறுப்பு. வாப்பாட வாப்பா போல எண்டு மரியெம் மாமி செல்லுவா. மச்சிக்கு நல்லா நீஞ்சத் தெரியும். உசன் மச்சான்தான் அவள நீச்சல் பழக்கின. ராத்தாக்கு மச்சிதான் நீச்சலக் காட்டிக் குடுத்தா.
ரெண்டு மூணு தரம் தண்ணிக்குள்ள தியாமுட்டி தியாமுட்டி… பார்த்திருக்கக்கொள கைய நீட்டி நீட்டி ஓடைய பின்னுக்கிழுத்து – பின்னங்களால் ரெண்டும் தண்ணிய உதைச்சி உதைச்சி….
ஒரு நாளைய கூத்து – ராத்தாக்கும் நீஞ்சத் தெரியும்… இன்னும் ரெண்டு வருசத்திலெ நானும் நீஞ்சப் பழகிருவென்.
மச்சியும் ராத்தாவும் போட்டி போட்டு நீச்சலடிப்பாங்கெ.
மாமிர ஊட்டுக் கரையிலெ சின்ன ஓடெ. ஓடைக்கு மேலால ரெண்டு தென்ன மரங்கள் கரையில் கையைக் குத்தி தண்ணிக்கு மேலால சாஞ்சி படுக்குது. இருந்தாப்போல வானத்தப் பார்த்து தலெ விரிச்சு ஆடும்.
ராத்தாவும் மச்சியும் மரத்திலெயிருந்து குதிரெ ஓடுவாங்கெ. ஓடையத் தொட்டுத் தொட்டு தென்ன மரங்கள் ஊஞ்சலாடும்.
மரவட்டுக்குள்ள மைனாக் குஞ்சுகள். பயந்து பயந்து – கேவிக்கேவி சிறகடிச்சி மாயும். பாவம்.
மச்சிக்கும் ராத்தாக்கும் பயமேயில்லெ. ஆளுக்கொரு மரத்தில போட்டிப் போட்டு ஏறுவாங்கெ.
தென்னெ மரத்திர உச்சிக்குப் போய்  வாளெ மீனெப் போலெ தலெக்குத்தின குதிப்பாங்கெ. குதிச்சா குதிச்சதுதான்.
அப்பிடியே கொஞ்சத்தூரம் சுழியோடிப் போய், ஓடெத் தொங்கலில உடும்பப் போலெ தலெயத் தூக்கி சடாரெனத் தாண்டு போவாள் மச்சி. ராத்தாக்கு சுழியோடத் தெரியாது. நீஞ்ச மட்டுந்தான் தெரியும்.
நான் இடுப்பு மட்டுத் தண்ணிலெ – சிரட்டையாலெ தண்ணிய அள்ளி அள்ளி தலெயில ஊத்திக்கிட்டு பயத்திலெ நிப்பென். அந்த நேரம் பார்த்து எனக்குத் தெரியாமெ விலாங்கு மீனப் போலெ வந்து – என்ட கவட்டுக்குள்ளால பூந்து சுழியோடிப் பெய்த்திருவாள் மச்சி. நான் பயத்திலெ தண்ணிக்குள்ள தாண்டு தாண்டு தியாமுட்டுவென்.
கண்ணாலெயும் மூக்காலெயும் தண்ணி புரெயேரி சிரசிலடிக்கும். உசிரு போறாப்போலெ இருக்கும். மச்சியோடெ செரியான கோவம் வரும்.
ஆத்துக்கு வீசப்போன மாமாவும் உசன்மச்சானும் கரையேறி வந்தா – ராத்தாவும் மறெஞ்சி மறெஞ்சி கரையேறி புன்னெ மரத்திலெ மறைஞ்சிருவா. ராத்தாக்கு மச்சானெக் கண்டா செரியான வெக்கம்.
மச்சி மட்டும் பொழுது உச்சிக்கு வந்தும் கரையேறெ மாட்டாள். தண்ணிலெயே மிதப்பாள்.
குட்டிக்குட்டி அலெயெல்லாம் மச்சிர தொடெய தொட்டுத் தொட்டு விளையாடும்.
கழுத்து மணிக் கோர்வையிலெ, கால் கொலுசில பொழுதிட பார்வெ பட்டு பச்செ, சிவப்பு, நீலமெண்டு சொலிக்கும்.
அப்படியே அவள் தண்ணிலெ மினுங்குவாள். இருந்தாப்லெ பெரிய அலெயொண்டு மச்சிட துண்டுப் புடெவெய உருவியெடுத்திட்டு ஓடெயிலெ ஓடும்.
மச்சியும் சுழியோடிப் போய் துண்டுப் புடெவெயெ எட்டிப் புடிச்சி … எழுந்து நிற்கெ … நான் அவள்றத்தெ…
மச்சிட தொடெயும் காலும் எப்பிடி வெள்ளெ…. முத்திப் பழுத்தெ பிலாச்சுழெ போலெ.
மச்சி துண்டுப் புடெவெயெ உரிஞ்சி உரிஞ்சி உடுப்பாள். நான் அவளக் கடெக்கண்ணாலெ பாப்பென். அவளும் என்னப் பாத்திடுவாள்.
“குட்டியான் செரியான ஹராங்குட்டிடி”
ராத்தா கைகொட்டிச் சிரிப்பாள்.
பொழுது உச்சாலெ கெளியும் மட்டும் ஓடெயும் நாங்களும் பட்டதுபாடுதான். குளிச்சி முடிச்செ கையோடெ என்னெயும் ராத்தாவெயும் மச்சிட தோணியிலெ ஏத்திக்கிட்டு பெரியெ ஓடெக்குக் கொண்டு போவாள். மச்சிர கையிலெ சவள். நான் முன்னணியித்திலெ ராத்தா நடுத்தோணியிலெ.
கொண்டெக் காத்தில தோணி தொடுக்காமலே பெரியோடெப் பக்கம் போகும். எங்களோடெ பந்துக்கா, பூக்கள், புச்சித்தேங்கா, அடிமட்டெ எல்லாம் போட்டிப் போட்டுக் கொண்டு ஊர்வலமா வரும். அப்பிடியே உப்பாத்துக்குப் போய் முகத்துவாரத்தாலெ கடலுக்கெ போயிடுமாம்.
பெரியோடெ மேட்டுலதான் வண்ணாரக் குடியெல்லாம் இரிக்காங்கெ. எங்களுக்கு உடுப்பு வெளிக்கிற பெரிய வண்ணாத்திர ஊடும் அங்கெதான். ஓடெக்கரெய ஒட்டினாப்லெ நீள நீளமான புடவெக் கொடிகள். வருசக் கூலிக்கு உடுப்பு வெளிக்கிற, அஞ்சு மரெக்கா நெல்லுக்கு ஒரு குடும்பத்திக்கு ஒரு வரிசம் பூரா வெளிக்கெணும்.
மோகினிப் பட்டிச் சோமன், பன்றுட்டிச் சேலெ, பச்செ வடம், சுங்காவடிச்சேலெ எண்டு வண்ணார வெட்டெயில நெறெஞ்சி கிடக்கும். மணச்சாமான் போட்டு வெளுத்த உடுப்புகள் காத்திலெ மணக்கும்.
நானும் மச்சியும் ராத்தாவும் புடவெக் கொடில புடவைகளெ மோந்து மோந்து பாப்பெம்.
காத்தும் மணந்தான், ஓடெயும் மணந்தான்.
எங்கடெ ஊரு வண்ணார ஆக்களெல்லாம் நல்லெ மனிசர். பத்தெட்டுக் குடிதான். நல்லெ ஒத்துமெ. அவங்கட கதெயச் சொல்லப் போனா அதுக்கொரு யுகம் வேணும்.
வண்ணாரெ ஆக்களெண்டாலும் மானம் மரியாதெயோடெ வாழ்ந்த மனிசர். எங்கடெ ஆக்கள் அவங்கள்ளெ செரியான அன்பு. அவங்களுக்கும் எங்கட ஆக்கள்ளெ செரியான மதிப்பும் மரியாதெயும்.
எங்கடெ பெரிய வண்ணாதி எங்கடெ உம்மாவ ராத்தாண்டு கூப்பிடுவா. இப்பெல்லாம் அந்தக் கனிவோடெ கூப்பிர்ர மனிசரக் காணேலாது.
“தங்கச்சியோ… உம்மா சோறு திங்க வரட்டாம்”
உசன் மச்சான்ட சத்தம் ஓடெக்கரெயெல்லாம் காத்திலெ அள்ளிட்டு… காதில புகுந்தது.
புறவத்திலெரிந்த மச்சி கொல்லாப் பக்கம் சவளப் போட்டு மெதுவாகத் தோணியெத் திருப்பி விட்டாள்.
“தங்கச்சியோ… உம்மா சோறு திங்க வரட்டாம்”

**

05
 
அழகான ஆட்டுக்கால. வாப்பாவும் நானும் கட்டிப்போட்டம். ஆமையர் மூத்தப்பாட்ட போய் ஆடும் வாங்கி வந்திட்டம்.
“வெள்ளெச்சிம்மா” ராத்தாதான் பேர் செல்லித் தந்தவ.
எந்தக் காட்டுலெ நிண்டாலும், வெள்ளெச்சிண்டு ஒரு சத்தம் வெச்சாப் போதும். காலுக்குள்ளெ வந்து வெள்ளெச்சி நிக்கும்.
ஆலங்கொத்து, தவிட்டங்கொத்து, இத்திக் கொத்தெண்டு ராப்பகலா சாப்பாடுதான். வெள்ளெச்சிர வவுறும் மத்ரசாவிலெ ஓதித்தாறெ லெவ்வெட வவுறும் ஒண்டுதான். முட்டி வவுறு.
குட்டித்தாச்சி வெள்ளெச்சி.
எனக்கி லெவ்வெண்டாச் செரியான பயம். ஓதித் தரக்கொள்ள ரெண்டு அடி போடாட்டி அவருக்குப் பத்தியமில்லெ. ஊரிலெ கஞ்சா புடிக்க வாற பொலிசெண்டாலும் பயந்தான். பள்ளி வளவுக்குள்ள மையத்திப் புட்டில நிக்கிற பேய்க்கும் பயந்தான். பேயெ நான் இன்னும் கண்ணால காணல்லெ. மத்தப்படி வேறொண்டுக்கும் பயமில்லெ.
ஆமையரப்பாவும் பேய்க்கு ஊதிப் பாப்பாரு. செய்த்தானுக்கும் ஊதிப் பாப்பாரு….
ஆமையரப்பாவெ நினைக்க நினைக்க…. அவர்ர புட்டிக்கெ ஆடு வாங்கப் போன நாளெ எனக்கி மறக்க ஏலாது. இந்த வயசுக்குள்ள அப்படியொரு காச்சியெ நான் காணல்லெ. ஆடு வாங்கிவர ஆமையரப்பாட்ட போன அண்டுத்தான் எங்கட ஊரெச் சுத்தி கடலுக்குப் போற பெரியாத்தெ முழுசாத் தெரியும்.
வாப்பா கரைல நிண்டு “மாமா”ண்டு சத்தம் வெச்சாரு… வாப்பாட சத்தம் ஆத்தங்கரெ, கண்ணாக்காடுண்டு இரெஞ்சிட்டுப் போய் – மா… மா.. மா… மா ண்டு எண்டெ காதெ சுத்திச் சுத்திக் கேட்டது.
நானும் திருப்பி, மா.. மா.. ண்டென். எனக்கிப் புறத்தாலெ ஆறும் கண்ணாக்காடும் மா… மா… ண்டது. எனக்குச் செரியான கொண்டாட்டாந்தான். அதெப்படிண்டு எனக்குச் செல்லத் தெரியெல்லெ.
எங்கடெ சத்தம் கேட்டவுடனெ அக்கரெயிலரிந்து ஆமையரப்பா தோணியெடுத்திட்டு வந்தாரு.
அப்பா புறவத்திலரிந்து தொடுக்க, நானும் வாப்பாவும் முன்னணியத்தில… வாப்பாட மடிக்குள நானிருந்தென்.
நாங்கெ போன நேரம் பொழுது அசரால சாஞ்சிட்டு.
தோணி கரெ தட்டிட்டு. புட்டிக்குள கால் வெச்சாந் தெரியும், கிடுகிடெண்டு ஒரே இரெச்சல்….
வக்கா, சாம்பல் கொக்கு, தாக்கத்தியான், மொட்டத் தலையான், அடெசல் மான் ண்டு ஒண்டெ ஒண்டு திரத்தி திரத்தி ஒண்டெ ஒண்டு கொத்திக் கொத்தி சண்டெ போட்டு, அது பெரிய களறி.
ஆத்துக்கு நடுவுல பென்னம்பெரிய புட்டி. புட்டி நிறைய கண்ணாக்காடு. கண்ணாக்காட்டுக்கு நடுவுலான் அப்பாட ஊடும் ஆட்டுக்காலெயும். கொஞ்சந் தள்ளி கொட்டுக் கிணறும்.
அந்தப் பக்கம் வீசப் போற எல்லாத் தோணிகளும் அப்பாட புட்டியெச் சுத்திச் சுத்தி வலம் வருவாங்க. மக்காவுக்குப் போன மூத்தம்மா எனக்கிட்ட சென்னா, அல்லாட பள்ளியெ சுத்திச் சுத்தி ஓர்ரதா. அப்படித்தான் ஆமையரப்பாட புட்டியெ சுத்தி வீசப் போற ஆக்களெல்லாம் தோணியெ ஓட்டுறாங்க. அவ்வளவு சங்கெ ஆமையரப்பாக்கு.
“மாமா! இவனெ கூட்டிட்டுப் போங்க. நான் கறிப்பாட்டுக்கு நாலு தூண்டல் போட்டுப் பாக்கென்”.
வாப்பா வந்த தோணிலரிந்து தூண்டல் போடத் தொடங்கிட்டாரு.
அப்பாட ஊட்டுக்கு முன்னால கறித்தட்டு போல வரம்பு போட்ட நாலு வரவெ. ரெண்டு மரெக்கால் விதைக்குமெண்டு வாப்பாக்கிட்ட அடிக்கொரு தரம் செல்லுவாரு.
அப்பாட ஊடு வளவெச் சுத்தி பத்துப் பதினெஞ்சு தென்ன மரங்கள், வானத்தெத் தொட்டாப் போல. குலெ குலெயா இளநியும் தேங்காயும்.
பழுத்த தேங்காயெல்லாம் வரவெக்குள்ள சிதறிக் கிடந்தது. ஊட்டெண்டா தேங்க உழுந்தெ கையோட நான் போய்ப் புறக்கிடுவென்.
இஞ்செண்டா எல்லா வேலெயும் அப்பாட கையக் காத்துக் கிடக்கும் போல. அப்பாட மூத்தம்மாக்கு ஒரு புள்ளெதான். அதுவும் பொம்பளப் புள்ளெ. சின்ன வயசிலெ நாலு நாள் வாந்தி பேதி வந்து மௌத்தாப் பெய்த்தா. அதுக்குப் புறவு புள்ளப் பூச்சில்லெ. புள்ளெ மௌத்தாப்போன கையோட ஊரெ விட்டு வந்து புட்டிக்குள்ள குடிலொண்டக் கட்டிக்கிட்டு வந்தவர்தான் ஆமையரப்பா. நாப்பது வருசமா இந்தப் புட்டிக்கு அவர்தான் ராசா.
ஆமையரப்பாவும் அவர்ர ராசதானியும்.
கொக்குகளும் நீர்க்காகங்களும் உலகத்தில உள்ள அத்தனெ பறவெ பக்கிசாரங்களும் அவர்ர மக்கள். அது எத்தெனயோ சாதி. அப்பாட அனுமதியோடெதான் அவங்கள்ளாம் புட்டிக்கெ நுழையணும்.
புட்டியெ வளெச்சி அப்பா எனக்குக் காட்டினாரு. கண்ணாப் பத்தெயில, கைக்கெட்டின தூரத்திலெ பறவைகள்ற கூடுகள். கூட்டுக்குள்ளெ மஞ்சள், கறுப்பு, பழுப்பு நிறங்கள்ளெ முட்டைகள்.
“இது நத்தை கொத்திர முட்டெ. இது தாக்கத்தி கொக்குட முட்டெ. இது நீர்க் காகத்திட முட்டெ. இது இளநீலம், அண்டக் காகத்திட முட்டெ”.
அப்பா செல்லித் தந்தாரு. “ஒரு முட்டெயையும் கையால தொடப் போடாதுரா மனெ”. இது அப்பாட கண்டிப்பான உத்தரவு. முட்டெய அளெஞ்சா தாய்ப்பறவை கூட்டெ உட்டு அப்புறப்படுத்திடுமாம்.
அநியாயம். இந்தக் கொக்கு குருவிகளாலாம் நம்மடெ ஊரில மீனும் இறாலும் பெருகி வழியுது. இதுகள்ற எச்சிலத் திண்டு திண்டுதான் மீன்களெல்லாம் கொழுத்து பெரிய பெரிய சினையும் வெச்சி….
அப்பாட கண் தெரிய ஆரும் கொக்குக் குஞ்சுகளெ எடுக்கேலாது. ராவில கொக்கடிக்கப் போறவங்களுக்கெல்லாம் அப்பா ஒரு சட்டம் போட்டிருக்காரு.
பச்ச மரத்திலெ கூடு கட்டி வாழ்ற பறவைகளெ அடிக்கேலாது. பட்டெ மரத்திலெ வாழ்றத மட்டும் கறிப்பாட்டுக்கு புடிக்கச் செல்லுவாரு.
அவர்ரெ அனுபவத்திலெ பச்செ மரம் கூட்டுக் குடும்பம். பட்டெ மரமெல்லாம் தனிச்சவங்கடெ தங்குமிடம்.
கூட்டிலெ அடெப்படுக்கிற கொக்கு நம்மட அமானிதம் என்பாரு.
புள்ளெ இல்லாத அவருக்கு, இந்தப் பறவைகளும் ஆடுகளுந்தான் அவர்ர சொத்தும் இனசனமும்.
ஆத்தில மீன் நிறெஞ்சி வழியுது. இவனுகள்ற வாய்க்கு கொக்குக் கறி வேணுமாம். ஆமையரப்பா புறுபுறுண்டு கதைக்கிறது எண்டெ காதுக்குக் கேக்குது.
“என்ன பேரன்! ஆட்டுகளெ ஆட்டுக்காலையிலெ ஏத்துவமா?
“தம்பியோவ்… வாங்க”
ஆமையரப்பா வாப்பாக்கு குரல் விட்டாரு. கண்ணாக் காடும் புட்டியும் “தம்பியோவ்….” ண்டு சொல்லிச் சொல்லிக் கரெஞ்சி போனது.
நானும் அப்பாவும்
கால….. கால…. கால…. கால….
ஆடுகள் ஒவ்வொண்டா முன்னங்கால மரக்குத்திலெ தூக்கி வெச்சி ஒரே பாய்ச்சல்லெ புரவாடிக்குள்ள புசுபுசுண்டு ஏறி நிறெஞ்சிட்டு.
“பேரன், உனக்குப் புடிச்செ ஆட்டக் காட்டு பாப்பம்”
நான் வெள்ளெச்சிய காட்ட, அவர்ர கையிலரிந்த கவுத்த வெள்ளெச்சிர கழுத்தில போட்டு,
வெள்ளெச்சி அடம்புடிச்சி அடம்புடிச்சி அலறத் தொடங்கியது. புரெயிலரிந்து மெதுவாகத் தூக்கி நிலத்திலெ விட்டாரு. தோளில கிடந்த துண்டெ எடுத்து தலையிலெ போட்டுக்கிட்டு –
“பிஸ்மில்லா, அல்லாட கிருபையால என்டெ பேரனுக்கு பட்டி பெருகணும்” வானத்தப் பார்த்து – வாப்பாட கைல கொடுத்தாரு.
வாப்பாவும் தோளில கிடந்த துண்ட தலையில போட்டு – பவ்வியமா வாங்கிட்டாரு.
என்டெ கைல களக்கம்பும், மீன் கோர்வையும். வாப்பாட கைல வெள்ளெச்சி.
பயத்திலெ வெள்ளெச்சி தோணிக்குள்ள ஒடுங்கிட்டு. புட்டிலெ பறவெ பக்கிசாரங்களெல்லாம் மேகத்திலரிந்து இறங்கி வந்து கண்ணாக்காடுகளில மிதக்கத் தொடங்கிட்டு.
நடு ஆத்திலரிந்து புட்டியெப் பாத்தென். மரங்கள்ற கைகள்ள பெரிய பெரிய வெள்ளெப் பூக்கள். கொண்டல் காத்தில அசைந்து அசைந்து…
சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, சாய மயிலே சாய்ந்தாடு
ராத்தா படிச்சித் தாற பாட்டு காதுக்குள்ள வந்து போனது.
கொக்குகளும் பறவைகளும் சாய்ந்தாடம்மா, சாய்ந்தாடம்மா சாய மயிலே சாய்ந்தாடு.
எங்கடெ கால்கள் ஊர்க் கரையைத் தொட்ட போது ஆமையரப்பாட புட்டியெ பொழுது நெருப்புத் தண்ணிக்குள்ள போட்டிருந்தது.
***
 
நன்றி : ஹனீபாக்கா

Tuesday, January 14, 2014

வேட்டிக்குள்ளே இருந்த விஷயம்!

லா, நீங்கள் எதிர்பார்க்கும் ஆபாசப் பதிவல்_லா.   பக்கா ஆன்மீகப் பதிவு. ஆனால் விஷயம் வேட்டிக்குள்ளேயிருந்துதான் கிளம்பியது என்பது நிஜம். நோ நோ... குழப்பம் பயம் கூடவே கூடாது. சொல்கிறேன், போனவருடம் கேரளா டூர் போய்விட்டு பொள்ளாச்சி வழியாகத் திரும்பும்போது உடுத்திருந்த ஆடைகள் எல்லாம் நனைந்திருந்ததால் (டூர் கிளம்பும்போதே நதீம் வெடைத்தான், 'காரைக்காலுக்கு போறோம்டு நெனப்பு போலக்கிது வாப்பாவுக்கு..' என்று) ஒரு வேட்டி எடுத்தேன். உடுத்துவதற்காகப் பிரித்து உள்ளே கையை விட்டபிறகுதான் அது தட்டுப்பட்டது. சின்னதுதான், ஆனாலும் அதி முக்கியமானது. ஆமாம், ஞானி வேதாத்திரி மகரிஷி சொன்ன உபதேசம் , அழகிய விளம்பரமாக. சல்யூட் ராம்ராஜூக்கு. டெக்ஸ்டை தட்டச்சு செய்தால் அதற்கும் சில பதிப்பகக் குரங்குகள் கையைக் கடித்தாலும் கடிக்கும். ஆதலால் இமேஜை மட்டும் இங்கே காட்டுகிறேன். காப்பி செய்ய வசதியாக டெக்ஸ்ட்தான் தேவையென்றால் இங்கே போகவும். pdfஆக வேண்டுமா? நம்ம சென்ஷியை தொடர்பு கொள்ளவும்! இனிய பொங்கல் வாழ்த்துகள்.  - ஆபிதீன்
***

Sunday, January 12, 2014

ஆமையரப்பாவும் ஆட்டுக்குட்டியும் - எஸ்.எல்.எம். ஹனீபா

எல்லாம் பூந்து வால் மட்டும் இருக்கக்கொல ஹனீபாக்கா கதெ எழுதத் தொடங்கியிருக்காரு. - ஹனீபாக்கா!

***

01

என்டெ சின்ன வயசுக் கதெ. அப்பெ நான் படிக்கப் போகல்ல. ஆட்டுக்குட்டியக் கண்டா அதுக்குப் புறத்தால போயிருவன். மேய்ச்சலுக்கு வாற ஆட்டில எனக்கு விருப்பமான குட்டியப் புடிச்சி, வாழ நாரால கட்டி விளையாடுவென். திடீரெண்டு நாரப் பிச்சிட்டு குட்டி ஓடிடும்….

மனசும் கூடவே ஓடும்.

இப்படித்தான் ஒரு நாள் ஆமையரப்பா ஊட்ட வந்தாரு. நான் ஊராட்டு ஆட்டுக்குட்டியப் புடிச்சிட்டு…. கட்டி விளையாடுறதப் பார்த்திட்டாரு….

ஏன் வந்தார், எதுக்கு வந்தாரு எண்டெல்லாம் ஞாபகமில்லெ.

போறப்ப, “தம்பி சாய்ந்தரம் இவனக் கூட்டிட்டு வாடிக்கு வாங்க”

ஆமையரப்பா வாடிக்குப் பெய்த்தாரு.

ஆமையரப்பா அசல் ஆமையைப் போலான். மூணு முழ கொட்டான் மனுஷன். நல்ல கறுப்பு. கட்டையான பெரிய வவுறு. பழுப்புல அரக்கை வாலாமணி. வெள்ள தாடியும் தலையில தொப்பியும்.

ஆமையரப்பாட்ட ஒரு மாதிரியான உப்புத்தண்ணி வாசம் வரும். எங்க வாப்பாட்டயும் அந்த வாசந்தான். ஆத்தில, கடல்ல தொழில் செய்யிற எல்லாரிட்டயும் அந்த வாசந்தான்.

தடுமல் மூக்கோட வாப்பாவ கட்டிப் புடிச்சிக்கிட்டுப் படுத்தா நல்லாருக்கும். தலப்பாரம் குறெஞ்சிரும்.

மெய்தான், இது என்டெ கதெ மட்டுமில்லெ. ஆமையரப்பாட கதையுந்தான்.

ஐ.பி. ஆறுமுகமும் இதுக்குள்ள வருவாரு, ஆட்டுக்கள்ளன் ரமுழாரும் வந்து போவாரு. பழைய மனுசர்ர கதெ கேக்கப் புதுசா இருக்கும்.

ஆமையரப்பாக்கு ஏன் அப்படிப் பேரெண்டு இண்டைக்கும் விளங்கல்ல…

எங்கெட ஊர்ல அப்படித்தான் பேரு.

உம்மா, வாப்பா ஒரு பேரு வெப்பாங்க. பள்ளிக்கூடத்தில இன்னொரு பேரு. கூப்பிர்ர வேறொரு பேரு. பதிவுல, அது வேற. கடெசில ஆரோ ஒருத்தன் வெச்ச பட்டப்பேருதான் மௌத்தாகி மண்ணுக்குள்ள போன புறவும் நிலெச்சி நிக்கும்.

ஆமையரப்பா, வாப்பாக்கு மாமா. எனெக்கி மூத்தப்பா. அந்த நாளெய பேர நினெச்சா புதினமா கிடக்கு.

புகையிலயெரு, வத்தக்காயெரு, கொச்சிக்காயெரு, கத்தரிக்காயெரு, புடலங்காயெரு, கால்ராத்தலெரு, ஈக்கிலெரு, அரிப்பாரு, அதக்க விழுங்கியெரு, பூலாவெரு, புறப்பட்டாரு, மாலையெரு, கிராணம் பாத்தாரு, புக்கையெரு, சோவையெரு, களட்டிக்காயெரு, பனமரத்தாரு…

இத எழுதப்போனா பொழுது விடிஞ்சிடும்.

இண்டெக்கி யாரு இப்பிடி பேரு வெக்கிர, எல்லாம் அறபுப் பேரு.

அண்டெக்கி எல்லாம் மரக்கறிப் பேரு, சைவப் பேரு.

இண்டெக்கி அர்த்தம் பாத்து, கணக்குப் பாத்து வெக்கிற பேரு. முதலாம் நம்பர், அஞ்சாம் நம்பர், எட்டாம் நம்பர்… எல்லாம் அரசியலுக்கு வாசான பேராம். நம்பருக்கா எழுத்தெ மாத்தினா தலெயெழுத்தும் மாறுமாம்.

பேத்தி வாராள். என்ன காலையிலேயே எழுத்துக் கிறுக்கு.

முப்பது ரூபாய்க்கு பராட்டாவும் சம்பலும் வாங்கிட்டு வாங்க.

மெய்தான், இது ஆமையரப்பாட கதெ.

***


02

என்னைக் கூட்டிவரச் சென்ன கையோட, ஆமையரப்பா ஏறு கடப்பால ஏறி புறவளவுக்க போனாரு. பிலா மரம் காய்க்கத் தொடங்கினா, ஆரையும் அந்தப் பக்கம் வாப்பா போக உடமாட்டாரு. அடி மரத்திலயும் வேர்லயும் பிலா வடுக்கள்... கழுத்தில ஆலங்கா மணிக் கோர்வ போல வரிசையாக் கிடக்கும்.

வாப்பாவும் நானும் பிலா மரத்தச் சுத்தி பன மட்டயால வேலி கட்டுவம். மர ஊசால நான் குத்திக் குடுக்க வாப்பா சும்பாக் கவுறால இறுக்கிக் கட்டுவாரு.

பிலா மரத்துக்கு பாவாட தச்சாப் போல இருக்கும்.

வாப்பாட ஒவ்வொரு காரியமும் அழகா, நுப்பமா, கறாரா இருக்கும். வாப்பாட கைலெ இருக்கிற கத்தி பளபளன்னு மின்னும். என்னத் தொடவும் விடமாட்டாரு.

வேலி கட்டினா என்னெ, மீன் கூட பின்னினா என்னெ, காத்தாடிக் கம்பு கமுகு வைரத்திலெ சீவிச் சீவி...

அதுவும் ஒரு அழகுதான்.

அவங்கல்லாம் செய்ற தொழில செப்பமெண்டாக்கள், தெய்வமெண்டாக்கள். செப்பமெண்டாலும் தெய்வமெண்டாலும் அழகுதான.

அப்படித்தான் அந்தக் கால மனிசர்.

இவனுகளுக்கு கிழப்பிக் காட்டினாத்தான் அழகு. அவங்களுக்கு மூடிக் காட்டினாத்தான்...

அப்படித்தான் வாப்பா பிலா மரத்தெ மூடிக் காட்டினாரு.

ஆமையரப்பா, வேலிய நீக்கிப் பாத்த கையோட வானத்தெப் பாத்து மாஷா அல்லாஹ் எண்டு பிலா மரத்துக்கு துஆ கேட்டாரு.

நான் ஏறு கடப்பிலெ ஏறி நிண்டு இதெல்லாம் பாத்துக்கிட்டன்.

என்னெக் கைல புடிச்சிக் கூட்டி வந்த ஆமையரப்பா, "தம்பி! இந்த முறெயும் எனக்கொரு துண்டுப் பழம் அனுப்பணும்"

"கட்டாயம் மாமா"

"மெய்தான், புதுசா ஏதோ நெல்லு வந்திருக்காமே, என்னெயோ போர் ண்டானுகள். உங்கட கூட்டாளி கந்தையா ஓவிசர்தான் போடிமாருக்கெல்லாம் ஆளுக்கொரு பக்கெட்டுக் குடுத்தெயாம்"

"ஓம் மாமா எச்.ஃபோர்"

"ஓம் தம்பி, அதான் பேரு, எனக்கும் ஒரு சுண்டு நெல்லுத் தாங்களென். புட்டிக்குள்ளெ ஒரு வரவுத் துண்டு செரிக்கட்டி வெச்சிரிக்கென். கொத்து நெல்லா கொத்துவொம்"

"கட்டாயம் தாரன், தலெமழெயோடு வாங்கிட்டுப் போங்க"

"மாமா, உங்களுக்கிட்டெ சீனட்டி நெல்லு இருக்கா? வாப்பா கேட்டாரு"

"அதென்னத்துக்கு தம்பி, ரெண்டு மாசத்தில வெட்டணும், ரெண்டு நாள் பிந்தினாலும் வெறும் கதிர்தான் மிஞ்சும், எல்லாம் கொட்டிரும். சோத்துக்கு நல்லாருக்கும். நாம நாய் பாடா பட்டு வெள்ளத்திலெயும் தண்ணிலெயும் அழிய உடலாமா?

இளங்கலையென்ல விதைங்க. வெள்ளத்துக்கும் நிண்டு புடிக்கும், சோத்துக்கும் நல்லாருக்கும்"

ஆமையரப்பா தலையெ ஆட்டி ஆட்டி வாப்பாவோட கதெச்சாரு. வாப்பாவும் தலெய ஆட்டி ஓம் போட்டாரு.

வாசல்ல, பாயும் தண்ணிக் கோப்பெயும்.

"இரிங்க சாச்சா" உம்மா மண்டபத்துக்குள்ள இருந்து தேயிலெ ஊத்துற சத்தத்தோடு உம்மாட சத்தமும்...

உம்மாட ஒரு கைலெ தேயிலெயும் இடது கைலெ சீனி போத்தலும்.

அப்பா, வலது உள்ளங்கைலெ சீனியக் கொட்டி, நாக்கெ நீட்டி, நக்கி நக்கி - 'த்ச்' கொட்டி நாலு முடறு குடிச்சி, சீனிக்கையெ நல்லா நக்கி, வலது தொடெயிலெ தட்டி எழும்பிட்டாரு.

ஆத்துக்கு போற ஒழுங்கயிலெ ஆமையரப்பா. பொழுது பத்தெக்குள்ள இறங்கிட்டு.

***


03

விடிஞ்சா வெள்ளிக்கிழமெ.கொத்துவா நாள். வெள்ளிக்கிழமெண்டா எங்கட ஊர்ல பெருநாள்தான்.

கிழமெய்ல ஒரு நாள்தான் பகச்சோறு. அது வெள்ளிக்கிழமெய்ல. ஒவ்வொரு நாளா எண்ணியெண்ணி இருப்பெம்.

இறெச்சிக் கறியும் புளித்தண்ணியும் வயிறு முட்டப் புடிக்கலாம்.

வாப்பாக்கு வெள்ளிக்கிழமெயும் வேலதான். ஒரு வேலெ முடிஞ்சா இன்னொரு வேலெ. அவர்ர காலடியிலெ வேலெ காத்துக்கிட்டுக் கிடக்கும்.

போன கிழமெ தொடக்கம் கூட பின்னுற வேலெ.

கர வலெயில மீன் காலம்.

வாப்புமாமா, மலாயரு, மாத்தாண்டன் மாமா, சண்முகத்தாரு, கொல்லாவரு, பறங்கியரு ண்டு எல்லாருக்கும் வாப்பாதான் மீன் கூடெ பின்னிக் குடுப்பாரு.

கவுறு போட்டுப் பின்னிக் குடுக்க அஞ்சு ரூவா.

கவுத்திலெ உறியும் கூடெயும்.

எங்கட ஊர்ல மீன் கூட பின்றத்திலெ வாப்பாவ அடிக்க வேறாள் இல்லெ. நல்லா முத்தி விளெஞ்ச பிரம்புலெ அழகழகா இளெப்பாரு.

பிரம்படித் தீவுக்குப் போய், பிரம்பு வெட்டி வருவாரு. மத்தவங்க வெட்டிவாற பிரம்பு வாப்பக்குப் புடிக்காது.

நல்லா முத்தின பிரம்பு, சுரவணியம் பழத்தெப் போலெ மினுங்கும். அடிப்பிரம்பிலெ கறுப்புக் கறுப்பா பட்ட கிளெம்பும்.

எங்கட ஓதுற பள்ளி லெவ்வெட கைலயும் அப்படிப் பிரம்புதான்.

முரட்டுக் கைகள், முத்தின பிரம்பு, மனுசனுக்கு விசரு வந்து அடிச்சாருண்டா, முதுகத் தீச்சிட்டுப் போவும்.

வாப்பாட ஒவ்வொரு காரியமும் அவர்ர கையாலெ செஞ்சாத்தான் அவருக்குப் பத்தியம்.

உம்மாவ கையுதவிக்குக் கூப்பிட்டா… வாப்பா ஒண்டெச் செல்ல உம்மா வேறொண்டெச் செய்வா. ஒரே சண்டெதான்.

உம்மா-வாப்பா சண்டெ எப்பான் முடியுமோ. அல்லாவுக்கு வெளிச்செம்.

இப்பெல்லாம், உம்மாவ, வாப்பா ஒண்டுக்கும் கூப்பிட மாட்டாரு. நான் பெரியாளாப் போனென். என்னெத்தான் கூப்பிடுவாரு. வாற வருசம், அரிவரி படிக்க ராத்தாவோட பள்ளிக்கூடம் போவப்போறென்.

சொண்டுக் கத்தியெ எடுத்திட்டு வா, மர ஊசியும் சணலும் கிடக்கிறெ கடவத்தக் கொண்டா…

உம்மாட்ட முட்டித் தண்ணில வாங்கிட்டு வா

பொழுது விடிஞ்சா வாப்பா ஒவ்வொண்டா செல்லுவாரு. நானும் ஓடியோடி ஒவ்வொண்டாச் செய்வென்.

வாப்பாக்கு என்னில சரியான இரக்கம்.

ஆமையாரப்பா ஊட்ட வந்து போய், விடிஞ்சா ஒரு கிழமெ.

இன்னும் அப்பாட ‘புட்டி’க்க என்னக் கூட்டிட்டுப் போகெல்ல.

“ஆட்டுக்குட்டிக்கு முதல்ல கால கட்டணுண்டா மன, அதுக்குப் புறவுதான் ஆட்டக் கொண்டு வரணும். மழைல ஆடு நனெஞ்சா செத்துப் போவும்”.

“நாளெக்கி ராத்தாவும் நீயும் ஓடக்கரெ மாமிட்ட போய், பத்து கிடுகு மட்ட வாங்கிட்டு வரணும்”.

மாமிட்ட போரெண்டா எனக்கி இல்லண்டெ கொண்டாட்டம். போற வழியெல்லாம் வாக மரக் காடுதான். நாம எண்ணிக்கிட்டு இரிக்கெம், காடுண்டா மரங்களெண்டுதான், காட்டுக்குள்ள விதம் விதமான குடும்பங்கள். மனிசரில்லாத குடும்பங்கள்.

ஒவ்வொரு மரத்திலெயும் பொன்னி வண்டுகள் ஆட்டுக்குட்டிகளெப் போல மேஞ்சிக்கிட்டுக் கிடக்கும். மேலெல்லாம் தங்கத் தண்ணிலெ போட்டு எடுத்தாப் போல மினுமினுக்கும்.

பெரிய ஈக்கில்ல பொன்னி வண்டுற தலெய நூலால கட்டி. – ரெண்டு கையாலெயும் சுத்தச் சுத்த வண்டு சிறகெ விரிச்சி விரிச்சி மூச்சு விடாம, ஈக்கில சுத்திச் சுத்திப் பறக்கும்.

பாக்கிறதுக்கு பெருநாளைல அலிக்குட்டி ஓடாவியார்ர தொட்டி ஊஞ்சல் போல இருக்கும்.

ஓடக்கரையெல்லாம் வாக மரமும் புங்க மரமுந்தான். புங்க மரம் நல்ல கறுப்பு. வண்ணார வெட்டைல காச்சலுக்கு ஊதிப் பாக்கிற சீனியன் கட்டாடியன் போல.

வாக மரம் நல்ல வைரமெண்டு வாப்பா செல்லுவாரு. கிறுக்கூஞ்சல் செய்ய நானும் மச்சிட காக்கா உசன் மச்சானும் வாக மரத்திலெதான் அச்சுச் செய்வம்.

ஒரு மரத்த ஒரு நாளெக்கெல்லாம் கிடந்து தறிப்பெம். மரத்திலெ கத்தி ஏறாது. அப்பிடி வைரம். கசறுக் கட்டி போல…

உசன் மச்சான் படிக்கப் போகல்லெ. மாமாவோட ஆத்துக்குப் போற. மாமா வீச, மச்சான் தொடுப்பான்.

அணியத்திலெரிந்து – அவன் சவளை, தோணிய அணைச்சாப்லெ – திடீரென ஆத்துக்குள்ள சவளெக் குத்தி… ஆறு குழிவிட்டு குழிவிட்டு சிரிக்கிறாப் போலெ இருக்கும். அழகா இருக்கும்.

கையெ ஆத்துக்குள்ள விட்டா, சிரிப்பூ அகப்படாது, சிதறிப் போகும்.

ஆத்துக்குள்ள சவளெப் போட்டு – சின்னச் சின்ன தண்ணி மடுவெத் தோண்டித் தோண்டி உசன் மச்சான் தோணி உடுவான். நான் தோணிட தொங்கல் அணியத்திலெரிந்து பாத்துக்கிட்டு இருப்பென்.

தலை சுத்தும்.

(ஆமை நகரும்)
***

Thursday, January 2, 2014

அறியும் ஆர்வமுள்ளவனே அறிவாளி! - ராஜேந்திர யாதவ்

ராஜேந்திர யாதவ் எழுதிய 'வானம் முழுதும்' (sara aakash) நாவலிலிருந்து சுவாரஸ்யமான ஒரு விவாதம்.   "நீங்க உங்க ஹிந்து தர்மத்தை உலகத்திலேயே உயர்ந்த மதமா நெனக்கலியா? ' என்று கதாநாயகன் கேட்டதில் விவாதம் சூடுபிடிக்கிறது. (இப்படி முஸ்லீம்கள் தங்கள் மதம் பற்றி  செய்தால் என்னாகும் என்று நினைத்தாலே கதி கலங்குகிறது. கதி என்ன, கொத்துக்கறிதான்!). மாஸ்தி வெங்கடேஸ அய்யங்கார் எழுதிய கன்னட நாவலான 'சிக்கவீர ராஜேந்திரன்'-ல் வரும் பிரமாதமான இன்னொரு விவாதத்தை (இதில் ஹிந்துமதம் வாகை சூடும், முன்னெச்சரிக்கையாக சொல்லி வைக்கிறேன்!)  பிறகு பதிவிடுகிறேன். முதலில் ஹிந்தி. சரியா ?  நன்றி. - ஆபிதீன்

***


"உலகம் ரொம்ப முன்னேறிட்டுது சமர் தம்பி. இந்த ஆர்.எஸ்.எஸ். பாஷை அரபிக் கடலைத் தாண்டி ஒருத்தருக்கும் தெரியாது. உலகம் அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு தயாரிச்சுக்கிட்டு இருக்கு. நீங்க என்னன்னா உங்க சாணிக் கலாச்சாரத்தைக் கட்டிக்கிட்டு மாரடிக்கிறீங்க. இதுமாதிரி பெருமையடிச்சுக்கறதுக்கு முன்னாடி மற்ற கலாச்சாரங்களையும் நாகரிகத்தையும் புரிஞ்சுக்க எப்பவாவது முயற்சி பண்ணுவீங்களா? பழைய இடிபாடுகளும், வேதாந்த புஸ்தகங்களும், ரோமிலேயும் , எகிப்திலும்கூட ஒண்ணும் கம்மியில்லே. சீன நாகரீகம் உலகத்துக்குக் கொடுத்ததிலே பாதிகூட வேறயாரும் கொடுத்ததில்லே. கிறிஸ்தவர்களை நீங்க வேணும்னா திட்டலாம். மதம் மாத்தறாங்கன்னு வையலாம். ஆனா அவங்கதானே எதுவுமே தெரியாத மக்களிடையே போய் எவ்வளவோ கஷ்டப்பட்டுப் பள்ளிக்கூடம் திறந்து, ஆஸ்பத்திரிகட்டி, தங்களோட வாழ்க்கையையே தங்களோட மதத்துக்காக அர்ப்பணிக்கிறாங்க? நீங்க என்ன பண்றீங்க? உலகநன்மை, உலகநன்மைன்னு வாயால சொல்லிக்கிட்டு, கொஞ்சம் ஆவேசம் அதிகமாச்சுன்னா இமயமலைக்கு ஓடிடறீங்க. பணக்காரனா இருந்தா சாமியார்களை சோறுபோட்டு வளர்க்க தர்மம் எழுதி வைக்கிறான். ஏழையா இருந்தா மொட்டை அடிச்சிக்கிட்டு சாமியாராகி மூக்குப் பிடிக்கத் திங்கறான்."

"நீங்க ஒரு பக்கத்தையே பாக்கறீங்க" என்றேன் நான்.

"அது ஒரு பக்கமா, ரெண்டு பக்கமா அப்படீன்னெல்லாம் எனக்குத் தெரியாது. நமக்கு முன்னோடியா இருக்கறது, நம்மை பலி வாங்கிக்கிட்டு இருக்கறதை நான் பாக்கறேன். உங்க நாட்டிலே பாலும், தேனும் ஆறாய் ஓடுச்சி, பால் மாரி
பெஞ்சுது. ஆனா இன்னிக்கு உலகத்திலேயே காட்டுமிராண்டு நாடு உங்களுதுதான். உங்க மதம்தான் எல்லாத்தைவிட விஞ்ஞானப் பூர்வமில்லாத மதம். மனிதனின் அறிவு வளர்ச்சியை மறந்துட்டு, நடைமுறை சாத்தியமில்லாததையெல்லாம் வாழ்க்கையோட லட்சியமாகக் காட்டற மதம், உலகத்திலே இருக்கிற ஞான, விஞ்ஞான விஷயங்கள் எல்லாத்தயும் தன்னோட வேதங்களில பூந்து தேடற மதம், உண்மையாகவே ரொம்ப பரிதாபப்படவேண்டிய மதம். நீங்க சொல்றதைக் கேக்கறப்போ லக்னோவில் இன்னிக்கு ரிக்சா இழுக்குற நவாப் பரம்பரை ஆளுங்க ஞாபகம்தான் வருது." என்றவர் தன் பேச்சுக் குறித்துத் தானே உரக்கச் சிரித்தார்.

நான் மிகவும் பிரயாசைப்பட்டு, "இந்த வெளி விஷயங்களை நாம் என்னிக்கும் முக்கிய விஷயமா நெனச்சதில்லே, அதனால்தான் நாம இன்னொரு நாட்டுமேலே படையெடுத்துப் போனதுமில்லே, மதத்தைப் பரப்பறதுக்காகப் புனிதப்போர் என்கிற பெயரிலே சண்டையும் போட்டதில்லே, நம்ம குறிக்கோள் எப்பவும் ஆன்ம சாந்தியும் முன்னேற்றமுந்தான்" என்றேன்.

இம்முறை அவர் சிகரெட் பிடிப்பதைப் பாதியில் நிறுத்தி 'ஹஹ்ஹா' என்று சிரித்தார். "வக்கத்துப்போனதை மறைக்க அருமையான வாய்ஜாலம். இதைத்தான் ஏழ்மையை ஆராதிக்கறதுன்னு மத்தவங்க சொல்றாங்க. வெளியிலே போய் தாக்குதல் நடத்தாததுக்கு காரணம் ஆன்மீகமும் இல்லே, மண்ணும் இல்லே. உங்ககிட்டே வலிமை கெடயாது. அவ்வளவுதான். இல்லாதபோனா தங்களுக்குள்ளே சண்டை போட்டுக்கறதிலேயும் நீங்க ஒண்ணும் சளைச்சவங்க இல்லியே! வல்லமை படைச்ச அசோகனும் , கனிஷ்கனும் வெளிநாட்டுக்காரங்க மேலே பெரிய தயவு காட்டினாங்கன்னும் கிடையாதே!" என்றவர் பாதியில் அதைவிட்டு, "பழைய சரித்திரமும் வேண்டாம், கற்பனைகளும் வேண்டாம். நான் நேரே ஒரு கேள்வி கேக்கறேன். இன்னிக்கு நீங்க உங்க நாட்டிலே எவனை வேணும்னாலும் புடிச்சி 'உனக்கு எவ்வளவு ஆன்மசாந்தி கிடைச்சிக்கிருக்கு'ன்னு கேட்டுப்பாருங்க. இந்த ஆன்ம சாந்தி,.கீன்ம சாந்தியெல்லாம், கோவில் குளம்னு தானம்செய்றவங்க கிட்டேயும், கோயில் பிரசாதத்தை ஒருபிடி பிடிக்கிற பண்டாரங்கள் கிட்டேயும்தான் இருக்கு."

கத்திக்கிழிக்கிற இவர் பேச்சை நறுக்கென்று நிறுத்தும் வண்ணம் என்ன கேள்வி கேட்கலாம் என்று என் மனம்  பரபரத்தது. திடுதிப்பென்று "இந்த உலகம் எப்படி தோன்றுச்சு?" என்று கேட்டேன்.

அவர் உரக்கச் சிரித்தார். "நீங்க பழங்கால ரிஷிகள் மாதிரி வாக்குவாதம் பண்ண ஆரம்பிச்சுட்டீங்களே! உலகம் உண்டானதுதான் ரொம்ப சின்ன விஷயமாச்சே, பிரம்மா என்னடா தனியா இருக்கோமே, பொழுதே போகலியேன்னு 'நான் நிறைய மனுஷனா ஆயிடுவேனாக'ன்னாரு! அவர் தன் குணங்களை விரிச்சுக்கிட்டாரு, அதுதான் 'ப்ரக்ருதி' (இயற்கை) அப்படீங்கற தத்துவம். இல்லேன்னா அல்லா 'குன்' அப்படீன்னாரு. உலகம் உண்டாயிடுச்சி. இதிலே என்ன பிரச்சினை?" பிறகு  மூக்கால் புகைவிட்டவண்ணம் சிகரெட்டைத் திறந்த கதவு வழியாக தூக்கியெறிந்தார். சிரித்துக் கொண்டே 'சமர்ஜி! இன்று உலகத்தின் தோற்றத்தைப் பத்தி விஞ்ஞானிகள் சொல்றதே இறுதியான உண்மைன்னு நான் சொல்லலே. ஆனால்  இந்தக் கட்டுக்கதையெல்லாத்தையும் விட அது உண்மைன்னு தோணலே? அறிவுக்கு எல்லையே இல்லே. இன்னும் யோசிச்சுக் கண்டு பிடிப்போம்." பிறகு எழுந்து சோம்பல் முறித்து, "நாமும் சரியான ஆளுங்கதான். சந்திச்ச கையோட
உலகத்தோட இறந்தகாலம், எதிர்காலம் எல்லாத்தையும் பத்திக் கவலைப்பட ஆரம்பிச்சிட்டோம் பாத்தீங்களா? முதல்லே பாத்ததையும் இப்ப பாத்ததையும் வச்சுகிட்டு இவன் பெரிய வாயாடின்னு நீங்க நினைச்சுக்கலியே?' என்றார்.

"இல்லையில்லை, உங்ககிட்டேயிருந்து யோசிக்கவும் , சிந்திக்கவும் நெறயா கிடச்சிருக்கு" என்று வெட்கத்துடன் சொன்னேன்.

"அப்ப நீங்க ஒண்ணும் சரியான ஹிந்து கிடையாது. சரியான ஹிந்துன்னா யோசிக்கறதே கிடையாது. ஆன்மீக ஞானமாகட்டும் ,லஞ்சமாகட்டும், கறுப்புப் பணமாகட்டும் அவன் சுருட்ட மட்டும்தான் பார்ப்பான். போகட்டும், நான் பேசினதும் ஏதாவது உங்களைத் துன்புறுத்தியிருந்தா மன்னிச்சுக்குங்க. விவாதம் செய்ய ஆரம்பிச்சா எனக்கும் ஒண்ணும் நினைவிலேயே இருக்கறதில்லே. எனக்கு சரின்னு பட்டதை சொல்லிடுவேன்."

"அப்படித்தானே இருக்கணும்:" என்று நான் "நான் உங்ககிட்டே பல விஷயங்கள் குறித்து பேசணும்" என்றும் கூறினேன்.

"கட்டாயம், கட்டாயம், இனிமே நாம அடிக்கடி சந்திப்போம்" என்று ஷிரீஷ் சொன்னார். "கொஞ்சம் உங்ககிட்டேயிருந்து நான் கத்துக்குவேன். சிலதை நீங்க மறுபரீசீலனை செய்ய விரும்புவீங்க."

"என்கிட்டேயிருந்து கத்துக்க என்ன இருக்கு?" என்று நான் வெட்கப்பட்டேன். தலையைக் குனிந்துகொண்டு, "நான்தான் நிறைய தெரிஞ்சுக்கிட்டேன். பல விஷயம் புதுசா இருந்தது" என்றேன்.

"இல்லையில்லை, நான் எதையும் முழுமையா நெனைக்கிறதில்லே. எந்த ஒண்ணும் வளர்ச்சி அடையுது. அதனாலே எல்லாம் தெரிஞ்சவன் ஒருத்தனும் கிடையாது. அறியும் ஆர்வமுள்ளவனே அறிவாளிங்கறதுதான் என் அபிப்ராயம். சிறிது ஆர்வம் இருக்கறவரைதான் அவன் அறிவாளி. அதுக்கப்புறம் அவனுக்கும் லைப்ரரி புஸ்தகத்துக்கும் வித்தியாசம் கெடையாது....' என்றார்.

**

நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், சென்ஷி