Thursday, August 29, 2013

கம்யூனிஸ்டுகளும் சீர்காழியும் - கவிஞர் தாஜ்

'காங்கிரஸ் தலைவர் பெரும் மதிப்பிற்குரிய சோனியா காந்திக்கு... ' என்றொரு தலைப்பில் இரண்டு நாட்களுக்கு முன் என் ஃபேஸ்புக் பக்கத்தில் கடிதமென்று எழுதி இருந்தேன். அதில், வர இருக்கும் பாராளுமன்ற தேர்தல் குறித்தும் இன்னுமான சில விமர்னங்களோடும் எழுதி இருந்தேன்.

அந்தக் கடிதத்தில் பாரதிய ஜனதாவின் ஜரூரையும் காங்கிரஸின் முடக்க நிலையையும் சுட்டி... மதவாதக் கட்சி ஆட்சிப் பொறுப்பிற்கு வருவதை பெரும்பான்மையோர் விரும்பவில்லை என்றும், ஆனால்..., காங்கிரஸை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அந்த பெரும்பான்மையோருக்கு இருக்கிறது என்றும் இந்த முறை சோனியாவே பிரதமராக வரவேண்டும் என்றும் எழுதி இருந்தேன். 

இன்றைய மத்திய அரசு வலதுசாரி போக்கு கொண்டது. ஆட்சியில் தோற்றும் போன அரசு.  இதற்கோர் மாற்று அரசு பதவிக்கு வரவேண்டுமென்றால்.. அது இடதுசாரி அரசியல் சிந்தை கொண்ட கம்யூனிஸ்டுகள் வருவதென்பதுதான் சரியான சிந்தனையாக இருக்கும். முதலாளித்துவ அரசுக்கு மாற்றாக, தொழிலாளர்கள் /  விவசாயிகள் மற்றும் ஏழை எளியோர்களை அரவணைக்கும் அரசொன்று பதவியில் அமர்வதென்பது தான் நீதியாகவும்/ சமன்பாடு கொண்டதாகவும்/ சரியான சிந்தனையாகவும் இருக்கும். இதனில் இரண்டு கருத்திருக்க முடியாது. சரியான சிந்தனையாளர்கள் இதன்படிக்கு விரும்புகின்றார்கள் என்றாலும்... இந்தியாவில் உள்ள இடதுசாரி சிந்தைக்கொண்ட கம்யூனிஸ்ட்டு கட்சி மேற்கு வங்கம் / கேரளா நீங்கலாக இந்தியாவில் தங்களது தளத்தை இழந்து காலம் பல ஆகிறது என்பதே... யதார்த்த நிலை! பின் எப்படி அவர்கள் எல்லா மாநிலங்களிலும் பரவலாக எம்.பி.களைப் பெற்று ஆட்சிக்கு வரமுடியும்? அதனால்தான் நான் என் கட்டுரையில் அக் கட்சியினை முன்னிலைப்படுத்தியோ முதன்மைப்படுத்தியோ எழுதவில்லை.

இதன் பொருட்டு நண்பர் சாதிக் தன் ஆதங்கத்தை அக் கட்டுரையின் மறுமொழியில் தீர கொட்டி இருக்கிறார்:

// எரியிற கொள்ளிக்கட்டையில கம்மியா சுடுறதாலே தானே சுட்டுக்க முடியும். நம்ம காம்ரேட்களை, பார்த்த சொல்லுங்கண்ணே, "எல்லாத்துக்கும் பதிலே அவுங்கதான். ஆனா..., ஏன் தூங்குறங்களேன்னு தெரியல!" நம்ம வட்டாரத்தில இருந்த கம்யூனிஸ்டுகளையே இன்றைக்கு காணலேண்ணே! ஆனா கொடிமரம் மட்டும் இருக்கு ! வயித்தரிச்சல் தங்கமுடியல! //
 
*
நண்பர் சாதிக்கின் ஆதங்கம் சரிதான். 1971-ல் இருந்து எம்.ஜி.ஆர். தி.மு.க.வை விட்டு பிரிந்தது வரை. அல்லது... அதன்பின்னாலான ஓர் பத்து வருடம் வரை நான் நன்கு அறிவேன் சீர்காழி வட்டம் கம்யூனிஸ்ட்டுகளின் ஆதிக்கம்
கொண்டதாக இருந்தது. எங்கள் வட்டம்... ஓர் விவசாய பூமி! விவசாயத் தொழிலாளர்களின் பூமி. தவிர, தலித்துகள் மெஜாரிட்டி கொண்ட பூமி! (இன்றைக்கும் சீர்காழி... அவர்களுக்கான தனித் தொகுதிதான்!) . அந்தக் காலக்கட்டத்தில் வலது கம்யூனிஸ்டுகளும் இடது கம்யூனிஸ்டுகளும் இங்கே அதிகம்! 'அண்ணங்கார்' (நாயுடு வகுப்பு)என்கிற வலது கம்யூனிஸ்ட் தலைவரும் 'ராமமூர்த்தி' (பிராமண வகுப்பு) என்கிற இடது கம்யூனிஸ்ட் தலைவரும் பொதுவில் நேர்மையானவர்கள். பொது மக்களிடம் நன்மதிப்பு பெற்றவர்கள். அதையெல்லாம் விட கட்சிக்காக உண்மையாக உழைத்தவர்கள்! அவர்களின் நேர்மைக்கு உதாரணமாக இன்றுவரை அவர்களை சீர்காழிப் பகுதி மக்கள் மதிப்புடனேயே நினைவு கூறுகிறார்கள்.
 
*
 
[இதில்... ராமமூர்த்தி, ஒரு தலித் பெண்ணை பெரிய விளம்பரமின்றி திருமணம் செய்துகொண்டவர்! அவருக்குப் பிறந்த பிள்ளையொன்று மகா சிரமத்திற்கிடையில் டாக்டருக்கு படித்து முடித்து பக்கத்து கிராமம் ஒன்றில் அரசு மருத்துவ மனையில் பணிப்புரிகிறார் என்பது சந்தோஷமான செய்தி!]

*
சீர்காழிக்கு... மேற்கே உள்ள கிராமங்களில் வலது கம்யூனிஸ்ட்டுகளின் ஆதிக்கம் அதிகம்.! மற்றைய எல்லா திக்கு கிராமங்களிலும் இடது கம்யூனிஸ்ட்டுகளின் ஆதிக்கமே அதிகம். கிட்டத்தட்ட திராவிட கட்சிக்கு நிகராக! (அன்றைக்கு திராவிடக் கட்சியென்றால்... அது தி.மு.க.தான்) அந்த அளவில் எங்கள் பகுதியில்  வலதும் இடதுமான கம்யூனிஸ்டுகள் சிறந்திருந்தார்கள். அப்பொழுதெல்லாம்... கம்யூனிஸ்ட் சார்பிலான விவசாய ஊர்வலம் என்றால்.... சீர்காழி திணறிப்போகும்! நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகளோடு ஆயிரக் கணக்கான விவசாயப் பெண்கள் ஆண்களென சாரை சாரையாக  அணிவகுத்து வந்து குவிந்துவிடுவார்கள்! மாதம் தவறாமல் இடதுசாரி கம்யூனிஸ்ட்டுகள் கூட்டம் ஊரில் கட்டாயம் இருக்கும். இதில் பெரும்பாலும் பாவலர் வரதராஜன் அவர்களின் அரசியல் இசை நிகழ்ச்சிதான். அவரது பாடல்களுக்காகவும் அவரது அரசியல் பேச்சுக்காகவும் எங்க ஊரில் ஏகப்பட்ட ரசிகர்கள்! எல்லா கட்சியிலும் அவருக்கு இங்கு ரசிகர்கள் இருந்தார்கள்!

*
மாதம் தவறாமல் பாவலரின் இசை நிகழ்ச்சி நடைபெறும் அந்த நிகழ்ச்சி மேடையின் ஓர் ஓரமாக ஒல்லியான கருத்த ஒரு பையன் கையில் 'கிட்டாரோடு' இருப்பார். பாவலர் 'டீ' குடிக்கும் இடைவெளியில் அந்த கிட்டார் பையன் மைக்கில் கிட்டார் வாசித்து காமிப்பார். அந்தப் பையனை பாவலரின் தம்பி என்பார்கள். பெயர்: இளைய ராஜா! ஆமாம்... அதே இளைய ராஜாதான் இன்றைய திரை இசைச் சக்ரவர்த்தியேதான்! வறுமையின் பிடியில் இருந்தவர்களை இடது கம்யூனிஸ்ட் போற்றி பாதுகாத்தது. இன்றைக்கு நீங்கள் இளைய ராஜாவிடம் 'கம்யூனிஸ்ட்டுகளைப் பற்றி கேட்டால்... 'கிலோ என்ன விலை?' என்று கேட்பார். தவறாக நினைக்கவேண்டாம். தத்துவ விசாரங்களை யாரும் கேட்காமலேயே  அள்ளி இறைக்கும் அளவிற்கான ஞானி அவர்! ஞானத்தில் முக்தியும் பெற்றுவிட்டவர்! அவர்களை ஒத்தவர்களுக்கு பழசெல்லாம் மறந்து போவது இயற்கை! அதுவோர் நிலை! இது பெரிய விசயமே இல்லை!

*
மீண்டும் சீர்காழி வட்டத்தின் கம்யூனிஸ்ட்டு கட்சிகளின் போக்கையும் வளர்ச்சியையும் மட்டுமே பார்ப்போம். உப சங்கதிகள் போதும்.

சீர்காழி வட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் வளர்ச்சி என்பதெல்லாம்... எம்.ஜி.ஆர். தி.மு.க.வில் இருந்து பிரியும் வரைதான். அத்தருணத்தில் வலது / இடது கம்யூனிஸ்ட்டுகள் ஒருசேர எம்.ஜி.ஆரை தீவிரமாக ஆதரிக்க... இரண்டு கம்யூனிஸ்ட் தொண்டர்களும் எம்.ஜி.ஆரை விமர்சனம் வைக்காமல் ஏற்று கொண்டார்கள்! பிற்காலத்தில், இரண்டு கம்யூனிஸ்ட்டுகளும் தி.மு.க.வை ஆதரித்த போது... இரண்டு கம்யூனிஸ்ட் தொண்டர்களில் பெரும்பகுதியினர் எம்.ஜி.ஆரை விட்டு பிரிந்துவர சம்மதிக்கவில்லை. எம்.ஜி.ஆரையே காரல்மார்க்ஸாக/ லெனினாக/ மாசேதுங்காக... கண்டு அ.தி.மு.க.வோடு ஐக்கியமாகிவிட்டார்கள் அவர்கள்! எங்கள் வட்டத்தில் வலது / இடது கம்யூனிஸ்ட் தலைவராக இருந்த  அண்ணங்காரும் / ராமமூர்த்தியும் இயற்கையை எய்திவிட... எங்கள் தொகுதியில் கம்யூனிஸ்டு கட்சியும் பரிதாபமாகச் செத்துப் போனது!

மேற்கண்ட யதார்த்த சம்பவம் சீர்காழி தொகுதிக்கு மட்டுமல்ல தமிழகத்தில் கம்யூனிஸ்ட்கள் மிகுதியாக இருந்த அத்தனை தொகுதிக்கும் பொருந்தும்.

அதன்பின், கம்யூனிஸ்டுகள் தமிழகத்தில் உயிர்த்தெழவே இல்லை. எம்.ஜி.ஆரை உன்னத நிலைக்கு உயர்த்திவிட்டு இவர்கள் மாண்டுவிட்டார்கள். அவர்களது கணக்கில்... இன்னொரு 'சரித்திரம் மன்னிக்காத குற்றம் இது!' இதனையொட்டி நண்பர் சாதிக் போன்றோருக்கு மஹா வருத்தம். அதனைவிட, இன்றைய கம்யூனிஸ்டுகள் முன்னைய மாதிரி கிராமம் தோறும் கட்சியை வளர்க்க முனைவதுமில்லை. சாதிக்கின் ஆதங்கத்தில் அர்த்தமிருக்கிறது. அது நமக்குப் புரிவது மாதிரி அவர் நேசம் பாராட்டும் கம்யூனிஸ்டுகளுக்கு புரிவதில்லை. நாம் என்ன செய்ய முடியும்? ஜெயலலிதா, கூட்டணிக் கிடையாது என்றும் அறிவித்து பார்த்துவிட்டார். நாளை பாரதிய ஜனதாவையே பாராளுமன்றத்தில் அவர் ஆதரிப்பார் என்பதும் தமிழக கம்யூனிஸ்டுக்களுக்கு தெரியும். இத்தனைக்குப் பிறகும் கட்சியை வளர்க்காது அவரது வீட்டு புழக்கடைப் பக்கம் வட்டமிட்டுக் கொண்டிருந்தால் எப்படி?

இதில் விசேசமான ஒரு செய்தி அவர்கள் கருணாநிதி வீட்டுப் பக்கம் போகாததுதான்.


சாதிக்கிற்கு நம் அனுதாபங்கள்.
***



நன்றி : தாஜ்   , பாவம் சாதிக்!

***
புகைப்படம்: அப்துல் ஹமீத் கல்வி அறக்கட்டளை நடத்திய கல்வி விழா ஒன்றில், பாலுசாமி நாடார் அறக்கட்டளை தலைவர் திரு.ராமர் அவர்களால் பொன்னாடைப் போர்த்தி, முகம்மத் சாதிக் கௌரவிக்கப்படுகிறார்.

Saturday, August 24, 2013

ஊருக்கு ஊர் யாக்கூபுகள் இருக்கிறார்கள்...




'இசைக் குயில்' யாக்கூப்
Photo taken by H. Abedeen


 ***
பைத்தியங்களை எனக்குப் பிடிக்கும் - 1

பைத்தியங்களை எனக்குப் பிடிக்கும் - 2
 



பைத்தியங்களை எனக்குப் பிடிக்கும் - 3
 

தாஜ்

பைத்தியங்கள் திரிதலுக்கு
பெயர்பெற்ற எங்க ஊரில்
இன்றைய தினங்களில்
எப்பவும் தென்படும்
அப்படியான ஒருவன்.. யாகூப்!
எங்க மஹல்லா.

யாக்கூபுக்கு
பிரசித்தியான பட்டபெயர் ஒன்றும் உண்டு.
ஒரு காலத்தில்
அவனது இசைக் கீர்த்திக்காக
ஊர்கூடி, பெரியவர் ஒருவரால்
வழங்கப்பட்ட பட்டபெயர் அது.
'இசைக்குயில்'!

அவனது வசந்தமானப் பருவத்தில்
'இசைக்குயில்' யாக்கூபை
ஊரில் தெரியாதவர்கள் இருக்க முடியாது.
ஜில்லா பூராவும் பிரபல்யமான ஒருவன்
எங்கனம் சொந்த ஊரில் தெரியாமல் போவது?

எனக்கெல்லாம்
பலவும்
விளங்கவராத காலத்திலேயே
அவன் அப்படியொரு பிரபல்யம்!
அவனது எட்டாவது வயதிலேயே
பாட மேடையேறியவன் அவன்!

உருது குடும்பம்.
உருது அவனுக்கு தந்தை மொழிதான்.
தாய் மொழி...? சொல்கிறேன்.

அவனது தாய்,
சிங்கப்பூர் சிட்டிசன்.

உருது பேசும் தமிழனை மணந்த
சினக்காரி ஒருவளுக்கு பிறந்த மகள்!

அந்த மகளை,
தமிழத்து உருதுக்காரனான
யாக்கூப்பின் தந்தை மணமுடிக்கிறார்.

அப்படிப் பார்க்கப் போனால்
யாக்கூப்பின் தாய்மொழி
'பாதி சைனா'!

சீர்காழி வீட்டில் தெக்னி பாஷை!
ஆனாலும்...
அனது தமிழ் படு சுத்தம்!

எங்கப் பக்கம்
உருதுகாரர்கள் பேசும் வழுவிய தமிழை
அவன் மறந்தும் பேசி
நான் கேட்டதில்லை.

தமிழ் மட்டுமல்லது
யாக்கூபிற்கு
இன்னும், மூன்று நான்குப் பாஷைகள் அத்துப்படி!
உருது, இந்தி, ஆங்கிலம் என்று
மூன்றும் அவனுக்கு சரளமாக வரும்!
உருது இந்திப் பாடல்களை
அட்சரம் பிசகாமல் பாடுவான்!

உயர்நிலைப் பள்ளியில்
எனக்கு அவன் சீனியர்.
அப்போதெல்லாம் அவனை நான்
தள்ளி நின்றுதான் பார்க்க முடியும்.
அப்பவே...
அத்தனைக்கு புகழ் கொண்டிருந்தான்!

எப்பவும்
அவனுடன் பல்வேறு தினுசான
மாணவர்கள் கூட்டம் சதா
'யாக்கூப்... யாக்கூப்' என்று ஜபித்தபடிக்கு
கூடவே இருந்துக் கொண்டேண்டிருக்கும்.
அவர்களில் பெரும்பாலானோர்கள் இந்து மணவர்கள்.
ஊர் வி.ஐ.பி. பிள்ளைகள் என்பது துணை செய்தி.

படிப்பல்லாத மற்றைய சங்கதிகளில்
யாக்கூப் கெட்டி என்கிற போது
எந்த சக மாணவர்களுக்கும்
அவனை பிடிக்கத்தானே செய்யும்!

அவனது
பருவக்காலத்து விசேச கூறுகளை
தெரிந்தறிந்தவர்கள்...
இன்றைக்கு நினைவு கூர்ந்து சொன்னால்,
கேட்பவர்கள் நம்பமாட்டார்கள்.
மேலெழும் வியப்பு
அவர்களை நம்பவிடாது.

அப்பொழுது அவன்
மாவட்ட அளவில்
மிகச் சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன்.
ஃபுட்பால், வாலிபால், பேஸ்கெட் பால்,
ஹாக்கியென
அவன் ஆடாத விளையாட்டு இல்லை!
எல்லாவற்றிலும் நம்பர் ஒன்!

தவிர,
வேகத்தாண்டுதல், உயரத்தாண்டுதல்,
100 மீட்டர், 200 மீட்டர், 800 மீட்டர்
ஓட்டப்பந்தியம் என்று
அனைத்து விளையாட்டுகளிலும் கெட்டி!
வால்யூம்...
வால்யூமாக பைண்ட் செய்யும் அளவுக்கு
அவன் வென்ற விளையாட்டுச்
சான்றிதழ்களை கண்டு நான் மலைத்திருக்கிறேன்!

அவனது
வேறோரு விளையாட்டாக,
ஜாதி வித்தியாசம் பாராதும்
சமத்துவமாகவும்
எல்லா பிரிவுகளிலிருந்தும்
இரண்டுக்கு மேற்பட்ட
காதலிகளை வட்டமிட வைத்திருப்பான்!
அவன் வைத்திருப்பான் என்பதைவிட
அந்தப் பெண்கள்
அவனை மொய்த்தார்கள் என்பதுதான் சரி.

அவனோடான காதலுக்கு வீட்டில்
தடைச் சொல்கிறார்கள் என்று
பெரிய குடும்பத்து
சைவப் பிள்ளைமார் வகுப்பைச் சேர்ந்த ஓர் பெண்
தற்கொலைக்கு முயன்றதை
நான் அறிவேன்.

ஆனால்...,
தன்னை நேசிக்கும் பெண்களின்
பிடி தளர்ந்து போகாத வகையில்
மந்திரமாய்
சில காந்த வித்தைகளையும் வைத்திருந்தான்.
அதிலொன்று இசை!
எல்லா தரப்புகளிலிருந்தும்
அங்கீகரிக்கப்பட்ட குரல்!

அவன் அன்றைக்குப் பாடி,
அரங்கம் அதிர கைத்தட்டலை பெற்ற
இந்துஸ்தானியையும்,
கவாலி, கஸலையும் வித்தியாசப்படுத்தி
புரிந்துக் கொள்ளவே
எனக்கு
அதன் பிறகான
இருபது வருடங்கள் பிடித்தது.

தவிர,
பள்ளிப்பருவத்திலேயே
அவன் எல்லா
இசைக்கருவிகளையும் நுட்பம்கூட்டி வாசிப்பான்.
எனக்கு எழுதவரும் என்றதோர் காலகட்டத்தில்
அவனுக்கு நான்
சில இஸ்லாமியப் பாடல்களை
எழுதிக் கொடுத்திருக்கிறேன்.
அவற்றிற்கு அவன்
படு எளிதாக
பிரமாதமாக அமைக்கும்
இசை நேர்த்தியைக் கண்டு வியந்திருக்கிறேன்!

எப்பவுமே
வசீகரம்கொஞ்ச மிடுக்காய் பேசுவதும்,
அப்படியோர் நடை நடப்பதும்,
லாவகமாக சிகரெட் பிடிப்பதும்
அவனது ஸ்டையில்.
அவன் அன்றைக்கு சிவாஜி ரசிகன்.
பின்னே இப்படியெல்லாம்
முத்திரை பதிக்காமல் இருக்க முடியுமாயென்ன?

அவனது இன்னொரு மிடுக்கான ஸ்டைல்...
அவ்வப்போது
பிரமாதமாகப் பொய் பேசுவான்.
யாரும் அவனை மறுக்க முடியாத
ஸ்தளத்தில் நின்று பேசுவதால்..
அடுக்கடுக்காய் பொய் மேவும்!
அது அலங்காரமாக நெய்யப்படும்
ஆடைமாதிரியான பொழிவில் இருக்கும்!
குடும்பத்தின் வறுமை
அவனை சக்கையாய் பிழிந்து
நாறாக காயப் போடுகிற போதெல்லாம்
அதைத்தான் அணிவான்.
எல்லோரும் அதை ஏற்றுக் கொள்ளும்படி
அத்தனை கச்சிதமாக
அவனுக்கு அது பொருந்திப் போகும்.

அவனுக்கு ஓர் அண்ணன் இருந்தார்.
அவர் உயர் நிலைப் பள்ளி ஒன்றில்
'டிரில்மாஸ்டராக' பணியெடுத்தார்.
இவனது கலைகளில்
பாதிக்கு மேல் அவர் அறிவார்.
சரியாகச் சொன்னால்
அண்ணன்தான் தம்பியின் முதல் குரு!

தம்பியை ஊக்குவித்து
அவனது முன்னேற்றத்தை
கண்டு ரசிப்பவராகத்தான்
வெகுகாலம் இருந்தார்.
தம்பி புத்தி பேதலித்துப் போகும் வரை.

அந்தத் தெருவில் நடந்தேறிய
ஏதோ ஓர் தகறாரில்
சிலர் கூடி
யாக்கூபின் பிடறியில்
பச்சை மட்டையிலான தாக்குதல் நடந்தேற
அவன் மாறத் தொடங்கினான்.
பாதி தெளிவு பாதி பிதற்றல் என்றிருந்த அவன்
முக்கால்... முழுமையென மாறி
பின்னர்
வடக்கும் தெற்குமாக நீளும்
ஊரின் மெயின் ரோட்டில் அலைய ஆரம்பித்தான்.

அவனுக்கு வைத்தியம் பார்ப்பது
குடும்ப கௌரவத்தை குலைக்கும்
கல்யாணம் ஆகாத தம்பிக்கு
பைத்தியமென தெரியவந்துவிடும் என்பதாக
அந்த அன்பு அண்ணன் மறுத்துவிட...
பின்னர் வைத்தியமே இல்லை அவனுக்கு.
அலையாய் அலைந்து
கிட்டியதை தின்று
கிடைத்ததை உடுத்து
அழுக்குப் பிண்டமாக
இன்றைக்கும் அலைகிறான்.

ஊரில்
என் நண்பர்கள் சிலர்
"யாக்கூபிற்கு மேடைப்பாடல்கள்
எழுதி தந்தமையால்தான்
அவனுக்கு
இந்தப் பைத்தியம் ஏற்பட்டது" என்பதுண்டு.
எத்தனையோ விசயங்களுக்கு
மனவலியோடு
சிரித்துவிட்டுப் போய்விடுகிற நான்
இதற்கும் நான் சிரித்துவிட்டு போய் இருக்கிறேன்.

*
இன்று காலையில்
கடைவீதி சென்றிருந்த போது கூட
யாக்கூபை நான் பார்த்துவிட்டுதான் வருகிறேன்.
பள்ளிவாசல் பக்கமுள்ள
வேப்பமரத்தடி டீக்கடையின் வாசலில் நின்றான்.
சாவகாசமான நேரத்தில்
அவனை எங்கே பார்த்தாலும்
"மிஸ்டர் யாக்கூப்" என்று அழைத்து பேச தவறமாட்டேன்.
அவன் பேசும்போது பேச்சு
இப்பவெல்லாம் கோர்வையாக இருக்காது.
விட்டு விட்டு துண்டு துண்டாகதான் வரும்.
அந்தத் துண்டுகளை இணைத்தால் கூட
அர்த்தம் புரியாது.

சில நேரம்...
நான் ஒன்று பேச அவன் ஒன்று பேசுவான்.
சமயங்களில் சரியான பதிலும் வருவதுண்டு.

அவனை சந்திக்கும் நேரங்களில்
கட்டாயம்
அவனோடு டீயும் சிகரெட்டும் பகிர்ந்து கொள்வேன்.
பலவற்றை மறந்தவனாக காணப்பட்டாலும்,
எந்த முத்திரை குத்தப்பட்டு
அவன் சீர்குலைந்திருந்தாலும்
சிகரெட் புகைப்பதில் மட்டும்
இப்பவும் அவனிடம்
அதே ஆதி முத்திரை!
கொஞ்சமும் மாறாத லவகம்!

இன்றைக்கு அவன் ஆடை
வழக்கத்தைவிட மிகமிக அழுக்காக இருந்தது.
அவனது உலகத்தில் பிரவேசிக்க
இன்னும் எனக்கு பயிற்சி வேண்டும்.
அரை குறைகள் எல்லாம்
அவனை மாதிரி
முழுமையாகிவிட முடியாது.

*
பின்குறிப்பு:

யாக்கூபின் கீர்த்திகளை
இங்கே எழுதி இருக்கிறேன் என்றாலும்
பத்தில் ஒரு பங்கைக் கூட
சொல்லிவிடவில்லை என்று எனக்குத் தெரியும்.

நியூகாலேஜில்
அவன் படித்தக் காலத்தில்
ராணுவ வீரர்களுக்கு மகிழ்வூட்டும்
விசேச கச்சேரிகளை
எல்லைக்கே சென்று
அவன் செய்திருக்கிறான் என்பதையோ...

திரை இசைப் பாடகர்
தி கிரேட் பாலசுப்ரமணியன்
திரைக்கு வரும் முன்
யாக்கூபை பாடவைத்து மகிழ்ந்ததையோ...
இங்கே நான் எழுதினால்
உங்களில்...
எத்தனைப் பேர்கள் நம்புவீர்கள்!

***


நன்றி : தாஜ்   satajdeen@gmail.com

மறுமொழிகள் :

Thameem Azel  : Multi talent personality hats off

Taj Deen  : தமீம்... உங்களது வார்த்தைகள் சந்தோஷத்தைத் தருகிறது. நன்றி.

Raheemullah Mohamed Vavar : சாதாரணங்கள் என்று ஒதுக்கித் தள்ள அவ்வளவு அவசரப்படக் கூடாது என்பதற்கு இந்த நண்பர் யாக்கூப் இன்னுமொரு உதாரணம், உணர்வுகள் உளப் பூர்வமாக இருக்கிறது, கொச்சை தெரியவில்லை, நல்ல குணம் வெளிப்பட்டிருக்கிறது

Abu Haashima Vaver : மனசை கனக்க வைக்கும் செய்தியை மனதை வருடி விடும் வரிகளில் சொல்லி கலங்க வைத்து விட்டீர்கள். இப்பேற்பட்ட திறமைசாலி மனநிலை மாறியதை நினைத்தால் வருத்தம் ஒரு புறம்... இறை நாட்டம் மறுபுறம் என மனதை அலைபாய வைக்கிறது.  யாக்கோபின் நினைவு எளிதில் மனதை விட்டும் மறையாது தாஜ் அண்ணே...

Deepa Janakiraman  : /குடும்பத்தின் வறுமை
    அவனை சக்கையாய் பிழிந்து
    நாறாக காயப் போடுகிற போதெல்லாம்
    அதைத்தான் அணிவான்.
    எல்லோரும் அதை ஏற்றுக் கொள்ளும்படி
    அத்தனை கச்சிதமாக
    அவனுக்கு அது பொருந்திப் போகும்.// அருமை தாஜ் அண்ணே..யாக்கூபுகளுக்கு சொல்வதற்கு நம்மிடம் எதுவும் மிஞ்சாமலே போய்விட்டது.

Taj Deen : தீபா ஜானகிராமன்... நன்றிமா. தங்கையின் வார்த்தைகளை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது. யாக்கூப் மாதிரியானவர்களோடு சமூகத்தில் பின்னிப் பிணைந்து வாழ்கிற ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஓர் உறுத்தல் இருந்துக் கொண்டே இருக்கிறது. இப்படியாவது கொஞ்சம் இறக்கிவைப்போம் என்றுதான் இத் தலைப்பில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Taj Deen : எங்க அபு வெகு நாட்களுக்குப் பிறகு நையாண்டி இல்லாமல் பதிந்த கருத்துப் பதிவு இது என்பதில் சிரிப்பு வருகிறது. உங்களுக்கு எங்கள் யாக்கூப் மன சலனத்தை தருகிறார். வருடங்களாக நான் அனுபவித்த சலனம்தான் இது. எனக்குத் தெரியும் உங்கள் வலி. இதுதான் வாழ்க்கை.

 Taj Deen : அன்பிற்குறிய ரகிமுல்லா... எங்க யாக்கூப் உங்களை கிலேசம் கொள்ள வைத்துவிட்டார் என்றே நினைக்கிறேன். திமுகவில் இருந்து அதிமுக பிரிந்த போது, நாகூர் ஹனிஃபா கருணாநியோடு தங்கிவிட்டார். இந்த மாவட்டத்தில் அவரையொத்த இஸ்லாமியப் பாடகர்கள் அதிமுகவுக்கு வேண்டும். எம்.ஜி.ஆர். அவர்களின் பிரதிநிதிகள் யாக்கூப்பின் வீட்டுக்கு வந்து(அப்போது அவன் பைத்தியமாகவில்லை) எம்.ஜி.ஆர். அழைக்கிறார் நீ தட்டாமல் எங்களுடன் வரவேண்டும் என்கிறார்கள். உன்னை எம்.ஜி.ஆர். பெரிய ஆளாக சினிமாவிலும் ஆக்கிவிடுவதாக சொல்லி இருக்கிறார். கட்டாயம் நீ எங்களுடன் வரத்தான் வேண்டும் என்று உரிமையுடன் அழைக்கின்றனர். நான் அப்போ அங்கே நிற்கிறேன். அவர்களுக்கு யாகூப் சொன்ன பதில் என்னத் தெரியுமா ரஹிமுல்லா... 'காமராஜைப் பாடிய வாயால் இன்னொருவரை பாடமாட்டேன்' என்றுவிட்டான். இத்தனைக்கும் வீட்டு அடுப்பில் பூனைத் தூங்கிய நேரம். சிலிர்த்துப் போய்விட்டது எனக்கு. அவனும் அவனது அண்ணனும் காங்கிரஸ் சார்பு கொண்டவர்கள்தான். அதற்காக தேடிவந்த மதிப்பிற்குறிய அழைப்பை அவன் வேண்டாம் சொன்னது அதிகம்தான். இன்றைக்கு அவன் பைத்தியம். நான் இன்னும் அப்படி முத்திரைத் தாங்காதவன்தான். அவனுக்கு வந்த அழைப்பு மாதிரி எனக்கு வந்திருக்கும் பட்சம் குறைந்தது இத்தனை எளிதில் உதறியிருக்க மாட்டேன்.

Raheemullah Mohamed Vavar : கொண்ட கொள்கையில் இத்தனை உறுதியா, இந்த காலத்தில் இதுவெல்லாம் கற்பனைக்கே எட்டாத உண்மைகளில்லை அதிசயங்கள், உதறுபவன் பயித்தியக் காரன் என்பதற்கொப்பவே பிழைக்கத் தெரியாமல், ஆமா போ போ நான் பயித்தியம்தான் என்று சொல்லும் பைத்தியங்களை அவர் பைத்தியமாக்கி விட்டாரோ, விந்தை மனிதர்


Giritharan Navaratnam : //அவனுக்கு வைத்தியம் பார்ப்பது
    குடும்ப கௌரவத்தை குலைக்கும்
    கல்யாணம் ஆகாதத் தம்பிக்கு
    பைத்தியமென தெரியவந்துவிடும் என்பதாக
    அந்த அன்பு அண்ணன் மறுவிட...
    பின்னர் வைத்தியமே இல்லை அவனுக்கு.
    அலையாய் அலைந்து
    கிட்டியதை தின்று
    கிடைத்ததை உடுத்து
    அழுக்குப் பிண்டமாக
    இன்றைக்கும் அலைகிறான்.// இந்த முட்டாள்களின் வறட்டுக் கெளரவம்தான் அவனது அலைவுக்குக் காரணம். மனோவியாதிகளில் பல வகைகளுண்டு. ஒழுங்கான மருத்துவ சேவையினைப் பெற்றிருக்குமிடத்தில் அவனும் ஒழுங்காக வாழ்ந்திருக்கக்கூடிய சாத்தியங்களுண்டு. எனக்குத் தெரிந்து பலர் ஒழுங்காக மாத்திரைகளை எடுத்துக்கொண்டு , நல்ல பதவிகளில், மணமுடித்து ஒழுங்காக வாழ்ந்துவருகின்றார்கள். அவர்கள் ஒழுங்காக மாத்திரைகளை எடுப்பது மிகவும் முக்கியம். நண்பர் தாஜின் எழுத்தில் யாகூப்பின் வாழ்க்கை நெஞ்சினைக் கனக்க வைக்கிறது.


Taj Deen : அன்பு கிரி..., உங்களின் ஆதங்கம் புரிந்துக் கொள்ளக் கூடியது. என்னையொத்த சிலர், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வைத்திய முறையைகளையும் அதன் பயன் குறித்தும் அவரது அண்ணனிடம்(இப்போது அவர் இல்லை) சினேகத்துடன் சொல்லத்தான் செய்தோம். சொல்கிற போதெல்லாம் சரியென்றே சொல்வார். வீட்டுக்கு போய் வந்தப் பிறகு அவரது பேச்சு வேறு மாதிரியாக இருக்கும். நிஜத்தில், பெரும்பாலோருக்கு வீட்டுக்கார அம்மாவின் அறிவுரை என்பது ஆண்டவனின் கட்டளையைவிட அதிக வலுக்கொண்டது. அத்தனைச் சீக்கிரம் அதனை வீட்டுக்காரர் உதாசீணம் செய்துவிட முடியாது. குடும்ப அரசியல் என்பது உலக அரசியலை விட கொடுமையானது. அந்த அண்ணனுக்கு ஏழு பிள்ளைகள். ஏழும் பெண்பிள்ளைகள். சொத்து என்று பார்த்தால் சில லட்சங்கள் போகும் வாழும் வீடுதான். யாக்கூப் இப்படியே இருந்துவிடும் பட்சம்.. வீட்டிற்கு உரிமை கொண்டாத சட்டத்திலேயே இடமில்லை. ஆக... அவன் அப்படி இருப்பதுதான் பிரச்சனையற்றது என்பது குடும்ப அரசியலின் வெளிப்பாடாக இருந்த்து. இதில் மூன்றாம் மனிதர்கள் அத்தனை எளிதில் தலையிட முடியாததோர் 'வாழும் மனித நாகரீகம்' கட்டிப் போட்டு விடுகிறது. இதில் யார்தான் என்ன செய்ய முடியும்? உங்களுக்கு மன கிலேசத்தை தந்தமைக்காக... ஸாரி. தவிர, உங்களது பாரட்டுதல்களுக்கு நன்றி.


Abu Haashima Vaver : குடும்பங்கள் இப்படித்தான் இருக்கிறது...
    இவன் தாலி கட்டுகிறான்
    அவள் இவனை
    சங்கிலி போட்டே கட்டி விடுகிறாள்.
    அதையும் தகர்த்து உதவி செய்பவர்கள்
    வெகு சிலரே...
    ஊருக்கு ஊர் யாக்கூபுகள் இருக்கிறார்கள்.


Abu Haashima Vaver : என் தாய் மாமாவுக்கு ஒரு மகன் இருந்தான்.
    அழகாக இருப்பான். நான் 16 வயதில் இருக்கும்போது அவன் பிறந்தான். பத்து வயதுவரை நன்றாகவே வளர்ந்தான்.
    அதன்பிறகு அவனுக்கு மன வளர்ச்சி குன்றியது.
    அவனால் யாருக்கும் எந்த துன்பமும் நேர்ந்ததில்லை.
    வீட்டிலேயேதான் வளர்ந்தான். இருபத்தைந்து வயது வரை.
    கண்ணசந்த நேரங்களில் வெளியே சென்று விடுவான்.
    அப்படித்தான் ஒருநாள் ...
    பக்கத்திலிருந்த ரயில் நிலையம் வரை சென்று விட்டான்.
    இவனை திருடன் என்று நினைத்து
    அங்கே நின்று கொண்டிருந்த
    காவல்துறை மிருகமொன்று அடித்துத் துவைத்து விட்டது.
    சரியாக பேச வராத என் மைத்துனன்
    தான் திருடன் இல்லை என்று கூட சொல்லத் தெரியாத
    அந்த வாயில்லாத ஜீவன்
    ரத்தம் சொட்ட சொட்ட அடிபட்டான்.
    அதுபோதாதென்று
    அந்த காவல்துறை மிருகம்
    அவன் அடிவயிற்றில் பூட்ஸ் காலால் பல முறை மிதித்தது.
    அதில் அவன் சிறுநீரகங்கள் சிதைந்து
    நினைவிழந்து விழுந்தான்.
    வெகுநேரம் கழிந்து அவனை அறிந்த ஊர் நண்பர் ஒருவர்
    ஆட்டோவில் ஏற்றி வீடு கொண்டு வந்து சேர்த்தார்.
    என்ன சிகிச்சை கொடுத்தான் பலனில்லாமல்
    இரண்டே நாளில் இறந்து விட்டான்.
    அவனை சந்தூக்கில் சுமந்து சென்ற நினைவுகள் இப்போது கண்ணீராய் ....


Kulachal Mu Yoosuf : அற்புதமான பதிவு. வேறெதும் சொல்வதற்கில்லை.

Monday, August 19, 2013

Pandit Jasraj - Miyan ki Todi

Pandit Jasraj with Appa Jalgaonkar (harmonium) and  Nizamuddin Khan (tabla)
a. "Is nagari main" in Khyal vilambit ek taal , b. "Allah jane allah jane" in Khyal drut teen taal

Thanks to : Harini Calamur
***

Sunday, August 18, 2013

வீழ்ச்சிக்கான கூறுகள்! - சீர்காழி இறையன்பன்

மர்ஹும் ஆளூர் ஜலால் அவர்களின் 'நாவூரும்மா' சிறுகதையை நண்பர் அஷ்ரஃப் சிஹாப்தீன் வலைப்பதிவில் படித்துவிட்டு மேலும் தேடியபோது கவிஞர் பஷீர் அஹ்மது என்கிற சீர்காழி இறையன்பன் அவர்களின் இந்த நேர்காணல் கிடைத்தது. முஸ்லிம் முரசு இதழில் வந்திருக்கிறது (ஜூன் 2011 / சந்திப்பு : தரமணியார், சோதுகுடியான்.) எனவே  முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய பதிவு (முனைவர் தாஜ் அல்ல!) . இணையத்தில் பகிர்ந்த ஜெ.ஜஹாங்கீர் (எ) கவிஞர் சோதுகுடியானுக்கு நன்றி சொல்லி நானும் பதிவிடுகிறேன். - ஆபிதீன்

***
 

வீழ்ச்சிக்கான கூறுகள்!

முஸ்லிம் கட்சி பல கூறுகளாகி பலமிழந்து போனதற்குக் காரணம் முஸ்லிம் தலைவர்கள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி சேரும் போது தனது தொண்டர்களை அவர்களிடம் இழந்தது. சிறு எலும்புத்துண்டு, பதவிகளுக்காக அக்கட்சிகளில் அவர்கள் இணைந்தது. ரவுணா சமுத்திரம் பீர் முஹம்மது, திருப்பூர் மைதீன், பக்கர் போன்று இன்றுள்ள தலைமுறையைக் கவரும் பேச்சாளர் இன்று இல்லாமல் போயினர். வஹாபிகள் வருகையிலான பாதிப்பு. சூடான், பங்களாதேஷ், இலங்கை போன்ற நாடுகளிலிருந்து குறைந்த ஊதியத்துக்கு ஆட்கள் வளைகுடா வேலைக்குச் சென்றதனால் 25,000 மாத ஊழியம் பெற்ற தமிழக முஸ்லிம்கள் 10,000 ரூபாய் பெறும் நிலையால் அரபுலக வருமானம் குறைந்தது. பொருளாதார நலிவு தொடங்கியது, தலைமைப் பதவி வேண்டுமென்பதற்காக தனித்தனி அமைப்புகள் சமூகத்தில் தோன்றின. முஸ்லிம் அரசியல் கட்சிக்கு சரியான, சக்தி வாய்ந்த தலைவர் கிடைக்கவில்லை. அதனால், இளைஞர்கள் மத்தியில் சாத்வீகப் போராட்ட உணர்வு மழுங்கியது. ஆலிம்கள் ஆங்கிலக் கல்வி ஹராம் என்று கூறியதன் விளைவாக சமூகம் விலகி நின்றது. தக்னி முஸ்லிம், பிராமணர் கல்வியில் வேகமாக முன்னேறி முதன்மை பெற்றனர். வெள்ளையர் மீதான எதிர்ப்பு வெறியை ஆங்கிலக் கல்வி மீது காட்டியதால் சமூகத்திற்குள் பெருத்த பின்னடைவும் மரண அடியும் கிடைத்தது. ஆங்கிலக் கல்வி வேண்டாம் என்ற ஆலிம் இனம் இன்று தங்கள் பிள்ளைகளை ஆங்கிலக் கல்விக்கு அனுப்பி வேகமாக முன்னேற்றுகின்றது. நாடார் சமூகம் நலிவுற்றவர்களுக்கென கல்வி நிதி நிலை ஏற்படுத்தி தம் சமூகத்தை தூக்கி நிறுத்துகிறது. நம் சமூகத்தில் ஆழமாக அது போன்ற பொருளாதார வலிமை ஏற்படுத்தப்படவில்லை. கல்லூரிக் கல்விக்கு உதவுகிறோம். பள்ளிக் கல்விக்கு உதவமாட்டோம் என்கின்றனர். அந்தெந்த நிலைகளில், காலக்கட்டங்களில் தேவையுணர்ந்து தீர்த்து வைக்கவேண்டும். அது உயர்வுக்கு வழி வகுக்கும். வெளிநாடு சென்று பொருளீட்டி வந்து வாழும் நிலையுள்ளது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களில் தமிழகத்தில் தொழிற்சாலைகள் அமைக்கப் படுவதாகக் கூறப்படுகிறது. சீர்காழியை சுற்றியுள்ள பகுதிகளில் அமைக்கப்படவில்லை. கூட்டு தொழில் முயற்சி இல்லை, பைத்துல்மால் போன்றவை இல்லை. பொதுப் பத்திரிகைகளில் 10 முஸ்லிம்களே எழுதிக் கொண்டுள்ளனர். வாய்ப்பு தரப்பட்டால் மற்றவர்களும் எழுதுவர். பேராசிரியர்கள் இதழ்களில் எழுதுவதில்லை. பொது நிகழ்வுகளில் கலந்து கொள்வதில்லை. சமூகத் தொண்டு செய்யும் எண்ணமில்லை. சோம்பேறியாக மாறிவிட்டனர். இஸ்லாத்தின் மீதான பற்று அவர்களுக்கு போதிக்கப்படவில்லை. வாழ்க்கைக் கல்வி மட்டும் பெற்றுள்ளனர். முஸ்லிம் இதழ்கள் எழுதுவோருக்கு காசு தருவதில்லை. பொதுப் பத்திரிகைகள் தருகின்றன. பணம் தரப்படாததால் மக்கள் ஆர்வப் படுவதில்லை. எழுதி என்ன ஆகப்போகிறது என்றெண்ணுகின்றனர். பெரும் தனவந்தர்கள் சந்தா தருகின்றனரே தவிர இதழின் ரேப்பர் கழற்றுவதில்லை. என்ன எழுதி இருக்கப் போகின்றனர் என்ற எண்ணம். அதே சமயம் பொது வார, மாத இதழ்களை வாசிக்கின்றனர். கூட்டு முயற்சியாக டிரஸ்ட் அமைத்து செயல்படணும். நூல் எழுதுவோருக்கு பணம் உதவணும். கடந்த 10 ஆண்டுகளில் நிரம்ப நூல்கள் வெளியாகியுள்ளன. நூல் வெளியீட்டு விழாவில் புத்தகம் பெறும் புரவலர் தரும் பணம் மற்றும் நூல் விற்பனை மூலம் சமாளிக்கின்றனர். செய்யது முஹம்மது ஹஸன் காலத்தில் முஸ்லிம் முரசு அரசு கெஜட் புத்தகம் போல் வரும். ஆளூர் ஜலால் வந்த பிறகு கவர்ச்சியாக இருந்தது. தற்கால முஸ்லிம் முரசு முந்தைய முரசுகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டு புதுமை, புரட்சி, வளர்ச்சி என எழுச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. போட்டி வைத்து கதை, கட்டுரை இதழில் எழுத வைக்கணும். சிங்கப்பூர், துபாய் வேலையிலிருந்த மாப்பிள்ளைகளே அன்றிருந்த பெண்களுடைய பிரதான விருப்பமாகவிருந்தது. இன்று நிலைமை வேறு. குடும்ப வாழ்வியல் தேவை, கால வளர்ச்சிக் கேற்றவாறு பயணித்தலுக்கு கல்வி அவசியம் என்றுணர்ந்த பெண்களின் தாய்மார்கள் தமது பெண்களை படிக்கவைத்து விட்டனர். அவர்கள் படித்த ஆணை இல்லறத் துணைவனாக எதிர்பார்க்கின்றனர். பல பெண்கள் முபல்லிஹா பட்டம் பெற்றிருப்பதை திருமண அழைப்பிதழ்கள் மூலம் அறிய முடிகிறது. 500 பேர் கொண்ட சிறிய ஊர் கோவில்புத்தூர் 25 பெண்கள், 40 ஆண்கள் பட்டதாரிகளாக உள்ளனர். பொருளாதாரத் தேவையிருக்கும் பெண்கள் மட்டும் பணிக்குச் செல்கின்றனர். சீர்காழி சுற்றியிருக்கும் பகுதிகளில் பெண்களை எளிதாக தலாக் கூற முடியாது. ஏழையாகவிருந்து அரபு நாட்டுப் பணம் வந்த பிறகு தனது மனைவியை தலாக் கூறி செல்வந்தப் பெண்ணை மணமுடிக்கும் போக்கை கையிலெடுத்தன் காரணமாக ஜமாத்தார் கடுமையான முடிவெடுத்தனர். தலாக் சொல்லும்போது வாங்கிய பணம், நகை, செலவுத் தொகையோடு ஐந்து லட்சம் ரூபாய் சேர்த்து வழங்கணும் என்று முடிவெடுக்கப்பட்ட பின்பு தலாக் நடைபெறவில்லை. அமையவிருக்கும் மாநில அரசுக்கு சொல்ல விரும்பும் வேண்டுகோள், மாவட்டந்தோறும் பெண்கள் கல்லூரி, நர்சிங் கல்லூரி ஏற்படுத்தணும். முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கணும். வெளிநாட்டு வேலையை மட்டுமே நம்பியிருக்கும் ஒரு சமூகத்துக்கான அவசியத் தேவையெனக் கருதி இதனை நிறைவேற்றித்தரணும்.

***

Thursday, August 15, 2013

பைத்தியங்களை எனக்குப் பிடிக்கும் - 1 - தாஜ்

எனக்கும்தான். ஃபேஸ்புக்கில் சின்னதொரு தொடரை ஆரம்பித்திருக்கிற இந்த சீர்காழி பைத்தியத்தை ரொம்பவே பிடிக்கும்! மறுமொழிகளை அவசியம் படியுங்கள். முக்கியமாக சமீம் ஜாவேதின் மறுமொழியை. கண் கலங்கிவிடும்.  துபாய் பைத்தியம்
***

 பைத்தியங்களை எனக்குப் பிடிக்கும் - 1 

-தாஜ்

பைத்தியம் என்று நான் முதலில் கண்டது
ஒரு பெண் பைத்தியத்தைத்தான்.
பெண் பைத்தியம் என்று தீர்மானமாக
கூறிவிட முடியாது.
அம்மா பைத்தியம்
அல்லது
பைத்தியக்கார அம்மா என்பதுவே
சரியாக இருக்கும்.

என் ஆரம்ப தொடக்கப் பள்ளிக் கூடம்
வீட்டில் இருந்து
ஒரு மைல் தூர அளவில் இருந்தது.

எங்கள் மகல்லாவில் இருந்த
சின்னக் கடைத் தெருவை தாண்டி
தாடாளம் பெருமாள் கோவில்
தேர் ஓரமாய்
கொள்ளிடம் முக்குட்டு
பெரிய கடை வீதி
மணிக்கூண்டை கடந்துப் போனால்...
தேர் மேற்கு வீதி மையத்தில்
பள்ளிக்கூடம்.

காலையில் போவதும்
மத்திய உணக்கு வருவதும்
உணவு முடித்து போவதும்
மாலை வீடு திரும்புவதெல்லாம்
நடந்தேதான்!

இப்படி போகவும் வரவுமான நேரத்தில்
தாடளான் பெருமாள் கோவில் தேரடிக்கு
எதிர்புறம் உள்ள பெருமாள் கோவில் தெரு அருகில்
அந்தப் பைத்தியக்கார அம்மாவை
அடிக்கடி பார்க்க நேரும்.
பகலில் எந்த நேரமும்
தானே பேசியப்படி
சதா இப்படியும் அப்படியும்
பெருமாள் கோவில் தெருவுக்கும்
மெயின் ரோட்டிற்கும் என்று
விரைவாய் அலையும்!
அந்த அம்மாவை சந்திக்காமல்
அந்த இடத்தை நான் கடந்தது இல்லை.

அதன் உறவினர்கள்
பெருமாள் கோவில் தெருவில் இருப்பதாகவும்
அந்த அம்மா வாழ்ந்த வீடும் கூட
அதே தெருவில் இருப்பதாகவும்
அந்த அம்மாவுக்கு கிறுக்குப் பிடித்துவிட்டது என்று
புருஷன்காரனே அடித்து துரத்திவிட்டுவிட்டு
வேறொருத்தியோடு குடும்பம் நடத்துவதாகவும்
அந்த தெருவாசிகளான
என் பள்ளிக்கூட நண்பர்கள் சிலர்
சொல்லக் கேட்டிருக்கிறேன்.
அந்த அம்மாவின்
புருஷன் பெயர் கூட
ராஜகோபாலன் என்பார்கள்.
எனக்கு அவர் யார்யென்றெல்லாம் தெரியாது.

புருஷன் சேர்த்துக் கொண்ட
சக்களத்தியை கண்டமேனிக்கு திட்டியப்படிதான்
அந்தப் பைத்தியக்கார அம்மாவும்
அலைப்பாய அலைந்து திரியும்.
வெயில் காலமென்றால் சொல்லவே வேண்டாம்.

பைத்தியக்கார அம்மாவைப் பார்த்து
என்னையொத்த சிறுவர்கள்
'ராஜகோபாலன்' என்று கூறி விட்டு
வேகமாக ஓடுவார்கள்.
சிறுவர்களுக்கு
தினமும் சளிக்காத விளையாட்டு அது.

புருஷனின் பெயரை கேட்ட மாத்திரத்தில்
அந்தப் பைத்தியக்கார அம்மா
சில நேரம் வெட்கம் தாளாமல்
நாணிக் கோணி சிரிக்கும்.
சில நேரங்களில் முறைத்து சிடுக்கவும் செய்யும்.

சில நேரங்களிலோ
தன் புருஷன் பெயரை
எப்படி மரியாதை இல்லாமல்
இந்தப் பொடியர்கள் சொல்லலாம் என்கிறபடிக்கு
விரட்டிக் கொண்டு அடிக்கவும் வரும்.
பொடியன்கள் ஓட்டமாய் ஓடவும்
தாடாளன் கோவில் எல்லைவரைத்தான்
அந்த அம்மா விரட்டும்.
சற்றைய நாழிகெல்லாம்,
தனக்கான
தனது தெருவருகேயே திரும்பியும் விடும்.

ஆரம்ப தொடக்கப் பள்ளிக்கூடத்தில் இருந்து
ஹைஸ்கூலில் எட்டாவது போகும் வரை
நாள் தப்பாமல் கண்ட
அதே இடத்தில் வைத்து
'பைத்தியத்தை சுமந்து திரிந்த'
அந்த அம்மாவை கண்டதாக ஞாபகம்...
பசுமை.
பிறகு....? அந்த அம்மா....????

அந்த அம்மா பெற்ற பிள்ளையொருவன்
படித்து வளர்ந்து
பட்டணத்துக்கு வேலைக்கு போன நேரம்,
தன் தாயையும் அழைத்துப் போய்
உடன் வைத்துக் கொண்டதாக
நம்பகமான ஒரு தகவல்.
மனதுக்கும்
நிம்மதியாக இருந்தது அப்போது.

***

மறுமொழிகள் :

Saleemadilsath Kajakaja பைத்தியம் என்ற வரிகளை படிக்கும் போதே மனதளவில் கலங்குகிறது. மனநிலை சரியில்லாதவர்.. எங்கள் ஊரில் முடுக்குதெருவில் இப்படி மனநலம் சரியில்லாத ஒரு அம்மா இன்றும் இருந்தாங்க. எக்கச்சக்க சொத்து சொந்த உறவுகளே ஏமாற்றி இப்படி இந்தநிலை.. அவங்களுக்கு பாத்ரூம் அறைமட்டுமே தெருவில் கடக்கும்போதே தெரியும் ஒரு பழைய தட்டு, தண்ணீர் செம்பு. மனசு கலங்கி கண்ணீரே வந்துவிடும். அவங்க பக்கதில் சோரு குப்பை தொட்டி போல இரைஞ்சிகிடக்கும் .. ஊட்டிவிட்டு பாதுகாக்க ஆளில்லை. வேடிக்கைபார்த்துவிட்டு வேதனைபட்டு என்வீடு வருவதை தவிற வேறு வழி எனக்கு தெரியலை.. அருகில் சென்றாலே அடித்துவிடுவார்களோ என்ற பயம்..

T.n. Gopalan தாஜ் எனக்கும் பைத்தியக்காரர்கள் பலர் மீது ஈர்ப்பிருந்ததுண்டு...ஆங்கிலத்தில் வெளுத்து வாங்கிய ஒரு முதியவர் அவ்வ்ப்போது தன் பிள்ளைகளுடன் சில நாட்கள் இருந்துவிட்டுப் போவார் பின்னர் தெருவில் அலைவார். என் பெற்றோரின் எச்சரிக்க்கைகளை மீறி ஷெல்லி ஷேக்ஸ்பியர் என்று ஏதாவது சொல்லிக்கொண்டிருக்கும் அவருடன் பேச்சு கொடுப்பேன்...அதிகம் பேசாத மன நிலை பாதிக்கப்பட்ட ஒரு இளைஞர் நண்பன் ஒருவனின் உறவினர் அவரை தெருவில் எங்கு பார்த்தாலும் நின்று சில வார்த்தைகள் பேசிவிட்டுத்தான் போவேன்...இன்னும் ஒருவரிடம் கொஞ்சம் உரிமை எடுத்து ஏதோ அறிவுரை சொன்னதில் கோபம் வந்து அந்த நபர் என்னுடன் பேசுவதையே நிறுத்திக்கொண்டார்..அதன் பிறகு சில மாதங்களிலோ என்னவோ இறந்துவிட்டார்...அவர்களின் மன நிலை குறித்து என் மண்டையை உடைத்துக்கொள்வேன் ஒன்றும் விடை கிடைக்காது...ஆனால் அத்தகைய மனிதர்களை ஏளனமி செய்யும் எவரைக்கண்டாலும், சிறுவர்களாயினும் சரி எனக்குக் கடுங்க்கோபம் வரும்...எளியோரை இகழ்வதுதானே நம் சமுதாயம்

Taj Deen ஐய்யா நீங்கள், நிறைய எழுத வேண்டிய / கட்டாயம் எழுத வேண்டிய / சங்கதிகளை கொஞ்சம் போல தொட்டுக் காமித்துவிட்டு போய்விட்டீர்கள். நான் எழுத இருக்கிற தொடர்ச்சியில் அதுவும் உண்டு. எனக்குத் தெரிந்து சென்னை கீழ்ப்பாக்கம் மனநல காப்பகத்தில் இருப்பவர்களில் பெரும்பாலானோர், நீங்கள் குறிப்பிடும் ரகம்தான். அதுமாதிரியே காப்பகத்திற்கு போகாமல் நான் சார்ந்த நவீன இலக்கிய வட்டத்தில் கூட நபர்கள் உண்டு. ஒருவன் நிறையவே பேசினால்.. நாம் கண்னை மூடிக்கொண்டு 'டிக்' செய்துவிடலாம். அவர்களேதான்.

Taj Deen சகோதரி சலீமாதில்ஷாத், நீங்கள் குறிப்பிட்டிருப்பது அத்தனையும் உண்மை. ஊருக்கு ஊர் அவர்களின் இருப்பு உண்டு. மனிதாபிமான அடிப்படையில் நீங்கள் கவனித்து கனிவு கொண்டிருக்கின்றீர்களே அதுதான் இங்கே பெரிசு. இந்த மாதிரியான அவதானிப்புதான் நம்மை நமக்கு காட்டித்தரும். வாழ்த்துக்கள்.

Taj Deen சகோதரி சலீமாதில்ஷாத், உங்களது இந்தக் கருத்துப் பதிவை, T.n.Gopalan, தனதுப் பதிவில்... அதாவது என் பதிவை ஷேர் செது அதில் உங்களது கருத்தை முக்கியம்தந்துப் பதிந்திருக்கிறார். ஐயாவுக்கு நன்றி சொல்லுங்கள்.

Saleemadilsath Kajakaja எளியோரை இகழ்வது தானே நம் சமுதாயம்.. உண்மைதான் அண்ணா... நன்றிகள்

Taj Deen அறியாமல் செய்யும் அவர்களது தவறுகளை புரிந்துக் கொள்வோம். மன்னிப்போம். சரிதானே சகோதரி.

Sameem Javeed எங்கள் ஊரில் ஒரு பெரியவர் இருந்தார்.
மனநலம் பாதிக்கப்பட்டவர்.
மகன் பெரிய டீக்கடை வைத்திருந்தார்.
பெரியவரோ மகன் கடைக்கு எதிரில் நின்று
வருவோர் போவோரிடம் எல்லாம்

கை நீட்டி காசு கேட்பார்.

மகனுக்கு இது அவமானமாக இருக்கும்.
தந்தையைத் திட்டுவார்.
அடிக்கக்கூடப் போயிருக்கிறார்.

நான் அப்போது சின்ன பையன். ஓரமாக நின்று
அந்தப் பெரியவரை நினைத்து
அழுதுகொண்டிருப்பேன்.
இப்போதும்கூட தனிமையில் அழுகிறேன்.
அந்தப் பெரியவர் என் தந்தைதான்
 
 

Taj Deen சமீம்..., எனக்கு என்னச் சொல்வதென்றே தெரியவில்லை. வாழ்க்கை இப்படித்தான் கதளி ஆடும். உங்களின் பதிவுக்கும், நிஜத்தின் பக்கம் நின்று தயங்காமல் சொன்னதற்கும் என் பிரியம் கொண்ட மகத்தான நன்றி.

Saleemadilsath Kajakaja சமீம்.. சகோ என்ன சொல்வதென்றே தெரியல. hat's off- அதுவும் ஒருவகை மனநோய் தான் சகோ. எங்கள் பெரியப்பா உறவுமுறை. அவரும் இப்படிதான் 4மகன்கள் நல்ல வசதி வீடுவாசல் என. ஆனாலும் அவர் மதரஸாவில் பலரிடம் கையேந்திபிச்சை கேட்பார் பிள்ளைகள் பேத்தி பேரன்கள் சொல்லிபார்த்து கேக்கலை, தொழுதுவிட்டு வரும் மகன்களிடமே பிச்சைகேப்பார். அவர்போக்கில் விட்டு விட்டனர். பிறரிடம் வாங்கும் பணத்தைகொண்டு தினம் டாக்டரிடம் ஊசி போடசொல்லி தொல்லைகொடுப்பதே அவர்வாடிக்கை. ஒவ்வொரு டாக்டரிடம் ஒரு ஒரு வியாதி சொல்லி பணத்தை கொடுப்பார். உங்களுக்கு ஒன்றுமில்லை நான் ஊசி போடமாட்டேன் என யாராவது சொல்லிவிட்டால் ஒப்பாரி வச்சி அழுவார், அங்கே கூட்டம் கூடி விடும். இதற்கு பயந்தே நர்ஸ் அவருக்கு சத்து ஊசி போட்டு பணத்தை வாங்கி கொள்ளும்.இப்ப அவர் உயிரோடு இல்லை, 2வருஷமாகுது, உங்க போஸ்ட் பார்த்தும் அவர் நினைப்பு வந்துவிட்டது,

***

நன்றி : தாஜ்

Wednesday, August 7, 2013

இன்குலாபின் தந்தையும் இந்துப் பெருமக்களும்

இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துகள். 'காக்கைச் சிறகினிலே’ இதழிலிருந்து... (ஜூன்2013) இன்குலாப் அவர்களின் வாழ்க்கைத் தடத்தைப் பதிவிடுகிறேன், நன்றியுடன்.. - ஆபிதீன்
***
 
வெளிநடப்புச் செய்தவர்
 
..... ..... ......
 
வைத்தியர் சீனிமுகமது ஆழ்ந்த இறைநம்பிக்கை கொண்டவர். அவரைப் பற்றி நான் நினைவு கூறும்போதெல்லாம் அவர் வெள்ளிக்கிழமை ஜும்மாத் தொழுகைக்குச் செல்லும் கோலந்தான் நினைவுக்கு வரும். ஒரு வேளை தொழுகையை விட்டவரல்லர். அந்தத் தொழுகைக்கெல்லாம் கைவைத்த பனியன், வெள்ளை லுங்கியுடன் வீட்டுக்கு அருகில் உள்ள பள்ளி வாசலுக்கே சென்று திரும்புவார். கோடை கொளுத்தும் நாட்களில் பள்ளிவாசலை ஒட்டியுள்ள சேகப்பா தர்காவிலே பகல் (லுஹர்) தொழுகையை முடித்துவிட்டு ஒரு தூக்கமும் போட்டுவிட்டு மதியம் வீட்டுக்குச் சாப்பிட வருவார். காலையிலும் மாலையிலும் அவர் நடத்தி வந்த சித்த மருத்துவமனைக்கு (பஹீறா ஹோம் ஆஸ்பத்திரி என்று பெயர் வைத்திருந்தார்) சென்று விடுவார். சில சமயங்களில் நள்ளிரவுகளில் நான் விழித்துப் பார்க்கும்போது, சித்தர்கள் வைத்திருக்கும் கைத்தடி ஒன்றில் கை ஊன்றியபடி ‘தசுவ’ மணி மாலையை உருட்டிக் கொண்டு தியான நிலையில் இருப்பார். தர்கா தைக்காவிலே படுக்கும்போதும் ஓய்ந்திருக்கும் பிறநேரங்களிலும் படிப்பதற்கு ஏதாவது ஒரு நூல் அவர் தலையணை ஓரத்திலோ மருத்துவமனை மேசையிலோ இருக்கும். அது மௌலானா ரூமியின் மஸ்னவி ஷரிபின் தமிழாக்கமாக இருக்கலாம்; யோகி சுத்தானந்த பாரதியின் மொழிப்பெயர்ப்பு நூலான ‘இளிச்சவாயானகவும்’ இருக்கலாம். இதழ்கள் என்றால் தாவூத்பாஷாவின் ‘தாருல் இஸ்லாமாக’ இருக்கலாம். அல்லது கல்கி வார இதழாகவும் இருக்கலாம்.
 
வெள்ளிக்கிழமை ஜூம்மாவுக்குப் போகும்போது அரைக்கைப் பனியனுக்கு மேல் வெள்ளைக் கமிஸ் அணிந்துகொள்வார்; லுங்கிக்குப் பதிலாக பைஜாமா போட்டுக்கொள்வார். பிடரிவரை தொங்கும் தலைமுடியை மக்கத்துத் தொப்பி அரைவட்டமாக மறைந்திருக்கும். அவருடைய நண்பர் அன்பளிப்பாகக் கொடுத்த மஞ்சள் நிற மக்கத்து சால்வை சட்டைக்குப் பின்புறம் முக்கோணவடிவத்தில் அமையுமாறு முன்பக்கத்தை ஜிப்பாவுக்குள் வைத்துக் கட்டி இருப்பார். ஒரு பெருநாளின் கொண்டாட்ட உணர்வு கொண்டவராகத் தோன்றுவார். அன்று மதியம் கறியும் சோறும். ஆனால் ஜும்மாத் தொழுகைக்கு நான் போகாமல் சாப்பாடு கிடையாது. ஒழுங்காக ஜூம்மாவுக்குப் போய் வருவேன்.
 
கடவுளை மறுக்காத எந்த மதத்தவரும் அவருக்குக் ‘காஃபிர்’ இல்லை. நாத்திகன் மட்டுமே காஃபிர்.

‘ஜூம்மா’ தொழுகை முடிந்தவுடன் பல சமயங்களில் சொற்பொழிவாற்ற தொழுகையின் முதல் வரிசைக்குச் சற்று முன் சென்று ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்று சலாம் சொல்லுவார். இறை நம்பிக்கையின் ஆழத்தை வலியுறுத்துவார். சூஃபி ஞானிகளின் தர்காக்களுக்க்ச் செல்வது தவறாகாது; ஆனால் பிரார்த்தனை செய்வதுதான் தவறென்பார். பில்லி, சூனியம், பேய்பிடித்தாடுவது, பேய்விரட்டுவது முதலியவற்றைக் கண்டிப்பார். கீழக்கரையில் இன்றுவரை நீடிக்கும் ‘கைக்கூலி’க் கொடுமையைக் கடுமையாகக் கண்டனம் செய்வார்.
 
சொன்னபடி வாழமுயன்ற மனிதர் அவர். கைம் பெண்ணாக இருந்த அம்மாவைத்தான் தம் பதின் வயதில் மணந்தார். என் தாய் தன் பதின்மூன்றாவது வயதிற்குள்ளேயே முதல் திருமணம் செய்விக்கப்பட்டு ஒரு குழந்தையைப் பெற்று அதைச் சாகவும் கொடுத்தார். என் தாயும் தந்தையும் இயல்பாக வாழ்ந்து என்னை ஒன்பதாவது பிள்ளையாகப் பெற்றனர். இசுலாமிய மார்க்கம்  கைம்பெண் திருமணத்தை இயல்பான ஒரு வாழ்க்கை முறையாக்கியது. எனினும் பால்ய மணத்தைத் தடைசெய்யவில்லை. இன்றளவும் இளம்பிள்ளைத் திருமணத்தைச் சரியானது என்றுதான் இஸ்லாமிய அறிஞர்கள் பலர் வாதிடுகின்றனர். என் தந்தையும் இளம் பிள்ளைத் திருமணத்தை எதிர்த்துப் பேசியது இல்லை.
 
மற்றபடி இஸ்லாமிய சமுதாயத்தில் புரையோடிப்போயிருக்கும் மூடத்தனங்களையும் கைக்கூலிக் கொடுமைகளையும் எதிர்த்துப் பிரச்சாரம் செய்துவந்தார். (கைக்கூலி என்பது மணமகனுக்க்கு மணமகள் வீட்டார் தரும் பணம் மற்றும் விலையுயர்ந்த பொருள்கள். மாப்பிளையுடைய தகுதிக்கு ஏற்ப கூடும் குறையும். பல சமயங்களில் இத்தொகை சில இலட்சங்களைத் தாண்டும்).
 
அன்றைய ஜூம்மாவுக்குப் பிறகு அவர் கைக்கூலிப்பிரச்சனையைப் பற்றிக் கடுமையாகச் சாடினார். ஜூம்மா முடிந்து பள்ளிவாசலிலிருந்து அவர் தெருவில் இறங்கி நடந்து வந்துகொண்டிருந்தார். அவரைச் சூழப் பலர் அவர் பேசியது குறித்துக் கருத்துக் கூறியபடி வந்தனர். ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு பள்ளிவாசல் இருந்தாலும் ஜூம்மா தொழுகை என்பது ஊர் கூடித் தொழுவது. அது நடுத்தெருவில் உள்ள குத்பா பள்ளிவாசலில் மட்டும்தான் நடைபெரும். அந்த பள்ளிவாசல் அழகிய வெலைப்பாடு அமைந்தது. பூ வேலைப்பாடு செய்யப்பட்ட வலிய தூண்களால் தாங்கப்படுவது. வள்ளல் சீதக்காதிதான் அந்தப் பள்ளிவாசலைக் கட்டியவர்.
 
அந்த நடுத்தெருவில் தான் அன்று அந்த நிகழ்ச்சி நடந்தது. தந்தையைச் சூழவந்த பலருள் என் அண்ணனும் இருந்தார். அவரை ஒட்டியபடி நான் வந்துகொண்டிருந்தேன். அப்படி நாங்கள் வந்தபோது வேற்றுத்தெருவைச் சேர்ந்த ஒருவர் என் தந்தையைப் பார்த்துத் தகாத சொற்களால் ஏதேதோ பேசினார். என்ன பேசினார் என்று என்னால் நினைவுபடுத்த முடியவில்லை. ‘ஜூம்மா முடிந்தபின் இவற்றையெல்லாம் பேசுவதற்கு நீ யார்?’ என்பதுதான் அவர் கூச்சலிட்டதன் சாரம்சம். என் தந்தை அமைதியாக பதில் சொல்ல முயன்றார். ஒரு மருத்துவக் குடியில் பிறந்த ஒருவர் கைக்கூலிப் பழக்கத்தையெல்லாம் கண்டிக்க முன்வரலாமா? என்பதுதான் அவரின் கோபத்திற்குக் காரணம்., ‘வைத்தியத்தை ஒழுங்காகப் பாரும்’ என்று கத்தியதாக நினைவு. அங்கு வந்தவர்கள் சமாதானப்படுத்தி பிரிந்து விட்டார்கள்.
 
வீடு வந்த தந்தை எங்களிடம் இயல்பாகப் பேசினாலும் அந்த நிகழ்ச்சி அவரை வெகுவாகப் பாதித்துவிட்டது என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடிந்தது, என்னதான் சமமாகப் பழகினாலும் பிரச்சினை என்று வந்துவிட்டால் பிறந்த குடியையே இழிவுபடுத்தும் சூழல் அவர் நம்பிக்கைகளைத் தோற்கடித்தது என்று கருதுகிறேன். என் தந்தை, என் அண்ணன், நான் என்று இந்தச் சமூக இழிவை ஏதோ ஒரு வகையில் கடந்து வந்தவர்கள்தாம்.
 
வைத்தியம் நன்றாகத்தான் நடந்துகொண்டிருந்தது. அந்த நிகழ்ச்சி ‘சமூகப் பிரச்சனைகளில் நீ  தலையிடாதே’ என்று எச்சரிப்பதாக இருந்தது. அவர் மனதில் பலவகையான சிந்தனைப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன போலும். ஒருநாள் தமது சித்த மருத்துவமனையை உத்தரசோசமங்கைக்கு மாற்றப்போவதாகச் சொன்னார். சுற்றியுள்ள கிராமங்களில் அவர் மருத்துவத் திறனைப் பற்றி மக்கள் அறிந்திருந்தார்கள். உத்தரசோசமங்கையும் அத்தகைய கிராமங்களால் சூழப்பட்ட பகுதிதான். அதனால் அங்கு அவர் தொழில் தொடங்குவதில் எந்தப் பிரச்சனையும் இல்லை.
 
திருஉத்தரசோசமங்கை மாணிக்கவாசகரால் பாடல்பெற்ற தலம். அப்பொழுது அந்த ஊரில் ஒரு முசுலிம் வீடு கூடக் கிடையாது. அங்கு அப்பா, அம்மா, அண்ணன் ஆகியோர் போய்விட்டனர். தேவிப்பட்டினத்தைச் சேர்ந்த என் தாத்தா ஒருவர். கை தேர்ந்த சித்த மருத்துவர். அவரும் தந்தையுடன் போய் சேர்ந்துகொண்டார். சித்த மருத்துவமனை சிறப்பாக செயல்படத் தொடங்கியது. களரி, பூக்குளம், எக்ககுடி, சிக்கல் என்று தொடங்கி முதுகுளத்தூர் வரையிலும் உள்ள ஊர்களில் இருந்தெல்லாம் மருத்துவமனக்கு வந்தார்கள்.
 
நான் கீழக்கரையில் அரசினர் அமீதியா உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தேன். மூத்த அக்காள் வீட்டில் தங்கியிருந்தேன். அக்காள் கணவரும் சித்த மருத்துவர்தான். மூத்த அக்காளைப் பற்றி தனியாகச் சொல்ல வேண்டும். தொடக்க காலத்தில் எனது பிடிவாதமான பேச்சுகள் அக்காளுக்கு எரிச்சல் மூட்டும். என்னை எப்பொழுதும் கண்டித்தபடி இருப்பாள். நானும் சண்டை போடுவேன். ஆனால் மிக அருமையான பாடகி. இதுகுறித்து நான் ஏற்கனவே எழுதியுள்ளேன். எங்கள் அண்னன் திரைப்பட மெட்டில் பாட்டுக்கள் எழுதிப் பாடச்சொல்வார். அக்காவின் இனிமையான குரலில் அந்தப் பாடல் எங்கள் வீட்டு வாசற்கூடத்தில் அரங்கேறும். அதைப் பார்த்துக்கொண்டிருந்த நானும் திரைப்பட மெட்டில் பாட்டு எழுதி பாடச் சொல்வேன். சின்னப்பயல் என்று அலட்சியப்படுத்தாமல் நான் எழுதியதையும் அழகாகப் பாடிக்காட்டிவிடுவார். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் நான் தீவிரமாக பங்கேற்பது என் அம்மாவிற்குப் பிடிக்கவில்லை. அஞ்சினார். ஒருமுறை ‘இவன் இப்படிப் போறானே’ என்று அக்காவிடம் அம்மா சொல்லி வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். அப்பொழுது அக்கா சொன்னது நினைவிலிருக்கிறது இன்னும்:
 
"இவன்  உனக்குப் பொறக்கிற புள்ள இல்லை. எனக்குப் பொறக்க வேண்டியவன்.”
 
பள்ளி விடுமுறை நாட்களில் உத்தரசோசமங்கைக்குப் போய்வருவேன். அந்த ஊர் எனக்கு ரொம்பப் பிடித்துப் போய்விட்டது. குறிப்பாக ஊரிலுள்ள ஏரி. நாள்தோறும் நீந்தி விளையாடுவேன். அண்ணன்தான் நீச்சல் கற்றுத் தந்தார். மாலையில் அங்குள்ள இளைஞர்களுடன் எனக்கும் சிலம்பம் கற்றுத் தருவார். கோயிலைச் சுற்றிப் பார்ப்பது எனக்குப் பிடிக்கும். அந்த ஊரில் மாடுமேய்க்கும் சிறுமி என்னைவிட மூத்தவள். எனக்குக் கோயிலை சுற்றிக் காட்டுவாள். கோயில் கோபுரத்தில் உள்ள படிகளில் ஏறி உச்சிக் கோபுரம் வரை என்னை அழைத்துச் சென்று காட்டினாள். கண்ணுக்கெட்டிய தொலைவுவரை ஏரியும் குளங்களும் வயல்வெளிகளுமாய்ப் பார்த்து வியந்து நின்றேன்.
 
தந்தை திருஉத்தரசோசமங்கை கோயிலிலும் இரண்டொரு முறை சித்தர் பாடல்களைப் பற்றிப் பேசினார். அன்று எனக்கு அது பெரிதாகத் தெரியவில்லை. ஆனால் மாணிக்கவாசகர் பாடல் பெற்ற தளத்தில் ஒரு இசுலாமிய சித்த மருத்துவரை அழைத்துப் பேசவைத்துக் கேட்ட அம்மக்களின் பெருந்தன்மை, மதச்சகிப்புணர்வு முதலியவற்றை இன்று நினைத்துப் பார்த்தாலும் வியப்பாகத்தான் இருக்கிறது.
 
கீழக்கரையிலிருந்து என் தந்தை வெளியேறியதன் பொருளை ,சித்தர் பாடல்கள் பற்றி கைலாசபதி எழுதிய ஒரு கட்டுரையைப் படித்தபோதுதான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அந்தக் கட்டுரையில் கைலாசபதி இப்படிக் குறிப்பிட்டிருப்பார்.
 
‘நமக்குப் பிடிக்காத சபையிலிருந்தும் நாம் எழுந்து போய்விடுவது போல நமக்குப் பிடிக்காத சமூகத்திலிருந்து ஒதுங்கி தனி வாழ்வு நடத்தினர் தாவோயிகள். நீதாம் கூறுவதுபோல அவர்கள் அவ்வாறு விலக்கிகொண்டதே ஆட்சேபத்தைத் தெரிவித்ததற்குச் சமானமாகும்’
 
தம் இறுதி மூச்சுள்ளவரை என் தந்தை ஆழ்ந்த மதநம்பிக்கையுள்ளவராக இருந்தார். நான் புதுமுக வகுப்பு படிக்கும்போது அவர் திடீரென்று மாரடைப்பால் காலமானார். அவர் இறப்பிற்கு திருஉத்தரசோசமங்கை கிராமம் முழுக்கடைப்புச் செய்து கீழக்கரையில் எங்கள் வீட்டில் குழுமிவிட்டது.

***
நன்றி : இன்குலாப், 'காக்கைச் சிறகினிலே’ இதழ் (ஜூன்2013), இதழ் தந்த நண்பர் எச். பீர்முஹம்மது. கட்டுரையை தேர்வு செய்து என்னை 'டைப்' செய்யவும் வைத்த சாதிக்கிற்கு ஸ்பெஷல் நன்றி.

Thursday, August 1, 2013

குளச்சல் மு. யூசுபின் உரை (வாசிக்காமல் விட்டது!)

அன்புள்ள தாஜ்,

உள்ளூர் விருது பெறும் விழாவில் வாசிப்பதற்காக இந்தக் கட்டுரையைத் தயார் செய்து வைத்திருந்தேன். ஆனால்,அங்கே கூடியிருந்தவர்களில் பலரும்  இதை உள்வாங்குகிற அளவுக்கு ஆரோக்கியமான மனநிலையில் இருப்பதாக எனக்குப் படவில்லை. பெருந்தனக்காரர்களின் கூட்டம் அது. நான் மிக எளிமையாகக் காட்சியளிப்பதாகவும் சிலாகித்தார்கள்.  இது, இயல்பான தோற்றம் என்பதைக் கூட அவர்களால் விளங்கிக் கொள்ள இயலவில்லை. கல்வித்தகுதியைப் பற்றியெல்லாம் கூட விசாரித்தார்கள். இந்த அப்பாவிப் பெருமக்களை ஏமாற்ற எனக்கு மனமில்லை என்பதாலும்தான் கட்டுரையை வாசிக்காமல் விட்டேன். (அவார்ட் தொகை பற்றிய கட்டுரை பிறகு எப்போதாவது....)


 குளச்சல் மு. யூசுப் 

***

அனைவருக்கும் வணக்கம்.

மகாகவி உள்ளூர் பரமேஸ்வரஐயர் நினைவு விருதுக்கு என்னைத் தேர்வு செய்த அனைவருக்கும் நன்றி. திருவாளர்கள்: பத்மநாபன்தம்பி, திருவல்லம் பாஸ்கரன்நாயர், ரமேஷன்நாயர், கே.எம். ஜார்ஜ், நீலபத்மநாபன், மாதவன்,
ஐயப்பப்பணிக்கர், சிற்பி பாலசுப்ரமணியம், பேராசிரியர் நாச்சிமுத்து, நகுலன், கவிஞர் சுகுமாரன் போன்ற படைப்பாளிகள், கல்வியாளர்கள், இப்போது, பேராசிரியர் பாலமோகன்தம்பி உட்பட பலர் பெற்று பெருமைப் படுத்திய விருதால் நான் இன்று பெருமை பெற்றிருக்கிறேன்.

இது வழக்கமாகச் சொல்லும் தன்னடக்கம் அல்ல!

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன், திருவனந்தபுரத்தில் நான் வாழ்ந்த  மிகக்குறுகிய காலத்தில், “அச்சாறுக் கச்சவடமும் ஐலண்ட் எக்ஸ்பிரஸும்” என்றொரு கதை எழுதினேன். இதன் பின்னணி, கேட்பவர்களுக்கு சுவாரஸ் யமாக இருக்கலாம். ஆனால், அதன் அப்போதைய அனுபவ நிலையை விவரிக்க எந்த எழுதுகோலாலும் இயலாது. இந்தக் கதையை எழுதிய பிறகு, பத்துக்கும் அதிகமான வீடுகள் மாறியிருக்கிறேன். ஆகவே, அந்தக் கதையும் தற்போது என்னிடமில்லை. காகிதக் கட்டுகளையும் புத்தகங்களையும் வீடு வீடாகச் சுமந்துத்திரிய இயலாதென்பதால், புத்தகங்களை மட்டும் வாசிப்பு ஆர்வமுள்ள நண்பர்களிடம் கொடுத்து விட்டு, எழுதியவற்றை சேர்த்து வைத்து, ஒரு தகப்பன் ஸ்தானத்தில் நின்று, எரியூட்டிவிடுவது வழக்கம். குலவழக்கப்படி, என்னுடைய படைப்புகள், அடக்கம் செய்யப்பட வேண்டும். இதற்கான, காணி நிலமோ இடங்ஙழி மண்ணோ சொந்தமாக இல்லை. ஆக, எனது எழுத்தில் சோகசுத்தி செய்துகொள்ளும் நோக்கமிருந்ததே தவிர பிரசுர ஆர்வம் இருக்கவில்லை.

வாசிப்பதிலும் எழுதுவதிலும் எந்த அளவுக்கு ஆர்வமிருந்ததோ அதேஅளவில் வெறுப்புமிருந்தது. ஒரு குடி நோயாளியின் அதே மனோபாவம். விடவும் முடியவில்லை; விடாமலும் முடியாது. குறிப்பிட்ட அந்தக் கதைக்கான தளம், சாட்சாத் அச்சாறுக் கச்சவடம்தான். 1988 இல் திருவனந்தபுரம், அட்டக்குளங் கரையில் நான் ஒரு சிறு பலசரக்குக் கடை விரித்தேன். கொள்வாரும் இருந்தனர். ஆனால், கடையைத் திறந்து, வேலையாளிடம் ஒப்படைத்து விட்டு நான் ஏதாவது வாசிப்புசாலைக்குப் போய்விடுவேன். தமிழின் ஓயாத வாசகனாகிய நான், மலையாள படைப்புகள் பரிச்சயமானதும் காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் நுழைந்தது போலானேன். மலையாள மொழியை நான் எப்படிக் கற்றுக்கொண்டேன் என்று கேட்டால், தெளிவாகச் சொல்லத் தெரியவில்லை. தமிழ் மொழியை எப்படிக் கற்றேனோ அதுபோல்தான் என்று சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். ஒன்பதே மாதத்தில் கடை திவாலானது. என்னுடைய சேமிப்பும் மனைவியின் நகைகளுமாக நயாபைசா மிச்சமில்லாமல் ஆரம்பித்த கடை அது. பிழைக்க வேறு வழியுமில்லை. தைக்காடு, கன்னேட்டு முக்குப் பகுதிகளில் முட்டை வியாபாரியாக பல நாட்களும் பீமாபள்ளி பகுதியில் துணி வியாபாரியாக பல நாட்களும் திருவல்லம் பகுதிகளில் தீப்பட்டி வியாபாரியாக பல நாட்களும் எதை யெல்லாமோ செய்து பார்த்து விட்டு கடைசியில் ஊறுகாய் வியாபாரம் ஆரம்பித்தேன். சைக்கிளில் ஒரு பெட்டியைக் கட்டி வைத்து ஒவ்வொரு கடை யாகச் செல்ல வேண்டும். அதிகமும் கரமன, கிள்ளிப்பாலம் பகுதிகள்தான்.

இதே தமிழ்ச்சங்க வாசலில் பலமுறை நின்று இளைப்பாறியிருக்கிறேன். சிறு கடைகளில்தான் அட்டை ஊறுகாய் விற்பனையாகும். அப்போது, ஷாப்பிங் மால்களெல்லாம் இல்லை. கடைகள், ஒன்று அதல பாதாளத்திலும் மற்றொன்று பூமியின் உச்சியிலும் இருக்கும். சைக்கிள் மிதித்துச் செல்வதற் கான உடல்வலுவில்லை. இரண்டு நாட்கள் அலைந்து திரிந்தும் சைக்கிளுக்கு வாடகை கொடுப்பதற்குக்கூட விற்பனையாகவில்லை. ஏதாவதொன்று கை
கொடுக்கவில்லையென்றால் விட்டு விடுதலையாகி விடும் குணம் ஏற்கனவே வாய்த்திருந்தது. ரூமில் போய் உட்கார்ந்து யோசித்தேன். யோசிப்பதற்கு ஒன்றுமில்லை. முடிவு செய்தேன். ஊறுகாய் வியாபாரத்தையும் தலை முழுகி விட வேண்டியதுதான். ஊறுகாய் அட்டைகளின் லேபிள்களைக் கிழித் தெறிந்து விட்டு, பண்டலாகக் கட்டி, சைக்கிளில் வைத்து, தம்பானூர் ரெயில்வே ஸ்டேஷனுக்குக் கொண்டுசென்றேன். ஏதோ ஒரு டிரெயின் நின்றது. அதில் தூக்கி வைத்துவிட்டுத் திரும்பிப் பாராமல் வந்து விட்டேன். அது ஐலண்ட் எக்ஸ்பிரஸ்தானா என்று இப்போது சந்தேகம் இருக்கிறது. திரும்பி ரூமுக்கு வந்து எழுதிய கதைதான் ”அச்சாறுக் கச்சவடமும் ஐலண்ட் எக்ஸ்பிரஸும்.” நேராக திரும்பி வந்து, இயந்திரத்தனமாக எழுதி விடுகிற அனுபவமல்ல அது. ஒருவாறாக மனதைத் தேற்றி விட்டு பிறகு எழுதினேன். அனுபவங்களுக்காக  வாழ்ந்தால் அதை மிக எளிதில் படைப்பாக மாற்றி விட இயலும். தவிர்க்கவே இயலாத அவல வாழ்க்கையை எழுதுவதன் மூலம் மீண்டும் வாழ்ந்து பார்ப்பதென்பது மிகப் பெரிய மனத்தொந்தரவான விஷயம். அனுபவம் சார்ந்த படைப்பிலக்கியம் மனதுக்குப் பிடித்தமானதாக இருந்தாலும் அது தரும் மனத்தொந்தரவு மிகச்சிரமமாகவும் இருந்தது. திருவனந்தபுரத்திலுள்ள எனது இந்த அனுபவங்கள் மொத்தம் ஒன்றரை வருட காலம் மட்டும்தான்.

இப்படியான, விளிம்புநிலை வாழ்க்கையிலிருந்து இலக்கியப் பாதையில் அதுவும் மொழிபெயர்ப்பை நோக்கித் திரும்பியது, எதிர்பாராத நிகழ்வோ திட்டமிட்ட நிகழ்வோ அல்ல. வாழ்க்கை அவலங்களினூடே எழுத்தும் வாசிப்பும் தொடர்ந்துகொண்டிருந்தது. தமிழில் வந்த மொழிபெயர்ப்பு நூல்களை வாசிப்பதும் வாசிப்புக்குத் தடங்கலாக இருக்கும் இடங்களில் திருத்தங்கள் செய்துபார்ப்பதும் வழக்கமாக இருந்தது.  மிகப்பெரிய இலக்கிய ஆளுமைகளின் மொழியாக்கங்களைக்கூட இப்படி திருத்தம் செய்து உள்ளூர மகிழ்ந் திருக்கிறேன். இந்த மகிழ்ச்சி, மனித இயல்புதான். இப்படியான அனுபவங் களை வைத்து, சில மொழிபெயர்ப்புகளையும் செய்து பார்த்தேன். வைக்கம் முகம்மதுபஷீரின் பால்யகால சகி, பாத்தும்மாடெ ஆடு, உப்புப்பாக்கொரான உண்டாயிருந்நு, சப்தங்ஙள், மதிலுகள்போன்ற மிகமுக்கியப் படைப்புகளைப் பலமுறை மொழிபெயர்த்திருக்கிறேன். புதிதாக வீடு மாறும்போது பழையன கழிந்து விடும். இவ்வளவு சாதனங்களினிடையே கொஞ்சம் பேப்பர் இருந்தால் என்னவாகிவிடப்போகிறது என்று சொல்லி தடுக்கும் மனைவியையும் மீறி. அப்போதெல்லாம், பதிப்பகங்களோ கல்வியாளர்களோ படைப்பாளிகளோ யாருமே என் நட்பு வளையத்தில் கிடையாது. இப்படியாக நான் மொழியாக்கம் செய்ததுதான் ஸ்மாரஹ ஸிலகள். இது புத்தகமாக வெளிவந்ததுகூட எதிர் பாராத நிகழ்வுதான். இப்படியாக மொழிபெயர்ப்புப் பக்கம் வந்தேன்.

திரைப்படங்களின் சிடி வடிவமும், எழுத முடியாமல் தோள் பட்டையில்  வலியும் ஏககாலத்தில் வந்தன. கடன் சம்பந்தமான முன்னனுபவங்கள் பல இருந்தும், துணிந்து கடனுக்கு ஒரு கம்ப்யூட்டர் வாங்கினேன். மெல்ல விழுந்தெழுந்து சுயமாகவே, கம்ப்யூட்டர் படித்தேன். பழைய மலையாளத் திரைப் படங்களை கம்ப்யூட்டரில் பார்க்க  ஆரம்பித்தேன். ஐம்பது அறுபதுகளில் வெளிவந்த மலையாளத் திரைப்படப் பாடல்கள் என்னுள் மிகப்பெரிய ஆச்சரியத்தைத் தூண்டின.

அப்படியே தமிழ் லிபியில் எழுதினால் எந்தத் தடையுமில்லாமல் தமிழர்களால் புரிந்து கொள்ள இயலும் விதமாக அந்தப்  பாடல்கள் அமைந்திருந்தன. ஒரே மொழியை இரண்டு விதமாக உச்சரிப்பது போல் தோன்றியது. இந்த உற்சாகத்தில் தமிழிலிருந்து மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட சங்க இலக்கியங்களை வாசிக்க ஆரம்பித்தேன். பண்டித மொழிக்கும் வெகுஜனங்களின் புரிதலுக்குமிடையே  இருக்கும் மிகப்பெரிய இடைவெளிகள் தெரிய வந்தன.

மலையாளத்திற்கும் தமிழுக்கும் பொதுவானதும் வழக்கிலுள்ளதுமான சொற்களைக்கூட தவிர்த்து விட்டு அந்த இடத்தில் சமஸ்கிருதத்தைப் பயன்படுத்தியிருப்பதாக உணர்ந்தேன். இயல்பாகவே இது, கவித்துவத்தை இல்லாமல் செய்திருந்தது.  இது குறித்த  போதாமை, சமஸ்கிருதக் கலப்பை குறைத்து, பழந்தமிழ் இலக்கியங்களை மலையாளத்தில் மொழியாக்கம் செய்ய என்னைத் தூண்டியது. இதற்கு வசதியாக, முதலில் சித்தர் பாடல்களை எடுத்துக்கொண்டேன்.

இதில் சிலவற்றை மொழியாக்கம் மலையாளிகளான நண்பர்களிடமும் உறவினர் களிடம் வாசிக்கக் கொடுத்தபோது அவர்களால் மிக எளிதாக வாசிக்கவும் புரிந்து கொள்ளவும் முடிந்தது. சமஸ்கிருதம் கலந்த மலையாளத்தைச் சிரமத்துடன் வாசித்தவர்கள் இதை மிக எளிதாக வாசித்தார்கள். மலையாள நாவுகள் சமஸ்கிருதத்திற்கு வழங்க மறுக்கின்றன என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. இப்படியாக, நாலடியாரை மலையாளத்தில் மொழியாக்கம் செய்தேன்.

இதை, பிழை திருத்தித் தருவதாகக் கேட்டு வாங்கிய ஒரு மலையாளி நண்பர், தன்னுடைய பெயரில் வெளியிட்டது தனிக்கதை.

அனுபவங்களின் வெளிச்சத்தில் ஒருவன், நல்ல படைப்பாளியாக வருவதை யாருமே மறுக்க மாட்டார்கள். ஆனால் வெறும் அனுபவ வெளிச்சத்தில் மொழிசார்ந்த சிந்தனைகள் உருவாவதை மொழியியல் ஆய்வாளர்களால் ஒருபோதும் ஏற்க இயலாது என்று நினைக்கிறேன். மொழியென்பது வெகு ஜனங்களுக்குரிய கருவி. ஆகவே, அனுபங்கள் சார்ந்த மொழியியல் சிந்தனை களை முன்வைத்து ஆய்வுகள் நிகழ்வதுதான் சரியாக இருக்க முடியுமென்பது என்னுடைய கருத்து.

இந்த விருதுக்கு என்னைத் தேர்வு செய்த அனைவருக்கும், குறிப்பாக, திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. மு. முத்துராமன்; செயலாளர் திரு. க. வானமாமலை; சிறப்புரையாளர் முனைவர் திரு. மா. நயினார்; நன்றியுரை வழங்கும் திரு. ஜி. மாணிக்கம் மற்றும் தமிழ்ச் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விமர்சனங்கள் மூலம் என்னை மெருகேற்றிய  எழுத்தாளர் சி. சொக்கலிங்கம் அண்ணன், கவிஞர் எச்.ஜி. ரசூல் மற்றும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற தோழர்களையும் என்னுடைய முதல் நூல் உட்பட பெரும்பாலான நூல்களை வெளியிட்ட காலச்சுவடு நிறுவனத்தையும் நன்றியுடன் இந்நேரம் நினைவு கூர்கிறேன்.

நன்றி வணக்கம்.

***
நன்றி : குளச்சல் மு. யூசுப் ( http://www.facebook.com/KulachalMuYoosuf ) , தாஜ்
***

தொடர்புடையவை..