Saturday, August 24, 2013

ஊருக்கு ஊர் யாக்கூபுகள் இருக்கிறார்கள்...
'இசைக் குயில்' யாக்கூப்
Photo taken by H. Abedeen


 ***
பைத்தியங்களை எனக்குப் பிடிக்கும் - 1

பைத்தியங்களை எனக்குப் பிடிக்கும் - 2
 பைத்தியங்களை எனக்குப் பிடிக்கும் - 3
 

தாஜ்

பைத்தியங்கள் திரிதலுக்கு
பெயர்பெற்ற எங்க ஊரில்
இன்றைய தினங்களில்
எப்பவும் தென்படும்
அப்படியான ஒருவன்.. யாகூப்!
எங்க மஹல்லா.

யாக்கூபுக்கு
பிரசித்தியான பட்டபெயர் ஒன்றும் உண்டு.
ஒரு காலத்தில்
அவனது இசைக் கீர்த்திக்காக
ஊர்கூடி, பெரியவர் ஒருவரால்
வழங்கப்பட்ட பட்டபெயர் அது.
'இசைக்குயில்'!

அவனது வசந்தமானப் பருவத்தில்
'இசைக்குயில்' யாக்கூபை
ஊரில் தெரியாதவர்கள் இருக்க முடியாது.
ஜில்லா பூராவும் பிரபல்யமான ஒருவன்
எங்கனம் சொந்த ஊரில் தெரியாமல் போவது?

எனக்கெல்லாம்
பலவும்
விளங்கவராத காலத்திலேயே
அவன் அப்படியொரு பிரபல்யம்!
அவனது எட்டாவது வயதிலேயே
பாட மேடையேறியவன் அவன்!

உருது குடும்பம்.
உருது அவனுக்கு தந்தை மொழிதான்.
தாய் மொழி...? சொல்கிறேன்.

அவனது தாய்,
சிங்கப்பூர் சிட்டிசன்.

உருது பேசும் தமிழனை மணந்த
சினக்காரி ஒருவளுக்கு பிறந்த மகள்!

அந்த மகளை,
தமிழத்து உருதுக்காரனான
யாக்கூப்பின் தந்தை மணமுடிக்கிறார்.

அப்படிப் பார்க்கப் போனால்
யாக்கூப்பின் தாய்மொழி
'பாதி சைனா'!

சீர்காழி வீட்டில் தெக்னி பாஷை!
ஆனாலும்...
அனது தமிழ் படு சுத்தம்!

எங்கப் பக்கம்
உருதுகாரர்கள் பேசும் வழுவிய தமிழை
அவன் மறந்தும் பேசி
நான் கேட்டதில்லை.

தமிழ் மட்டுமல்லது
யாக்கூபிற்கு
இன்னும், மூன்று நான்குப் பாஷைகள் அத்துப்படி!
உருது, இந்தி, ஆங்கிலம் என்று
மூன்றும் அவனுக்கு சரளமாக வரும்!
உருது இந்திப் பாடல்களை
அட்சரம் பிசகாமல் பாடுவான்!

உயர்நிலைப் பள்ளியில்
எனக்கு அவன் சீனியர்.
அப்போதெல்லாம் அவனை நான்
தள்ளி நின்றுதான் பார்க்க முடியும்.
அப்பவே...
அத்தனைக்கு புகழ் கொண்டிருந்தான்!

எப்பவும்
அவனுடன் பல்வேறு தினுசான
மாணவர்கள் கூட்டம் சதா
'யாக்கூப்... யாக்கூப்' என்று ஜபித்தபடிக்கு
கூடவே இருந்துக் கொண்டேண்டிருக்கும்.
அவர்களில் பெரும்பாலானோர்கள் இந்து மணவர்கள்.
ஊர் வி.ஐ.பி. பிள்ளைகள் என்பது துணை செய்தி.

படிப்பல்லாத மற்றைய சங்கதிகளில்
யாக்கூப் கெட்டி என்கிற போது
எந்த சக மாணவர்களுக்கும்
அவனை பிடிக்கத்தானே செய்யும்!

அவனது
பருவக்காலத்து விசேச கூறுகளை
தெரிந்தறிந்தவர்கள்...
இன்றைக்கு நினைவு கூர்ந்து சொன்னால்,
கேட்பவர்கள் நம்பமாட்டார்கள்.
மேலெழும் வியப்பு
அவர்களை நம்பவிடாது.

அப்பொழுது அவன்
மாவட்ட அளவில்
மிகச் சிறந்த ஸ்போர்ட்ஸ்மேன்.
ஃபுட்பால், வாலிபால், பேஸ்கெட் பால்,
ஹாக்கியென
அவன் ஆடாத விளையாட்டு இல்லை!
எல்லாவற்றிலும் நம்பர் ஒன்!

தவிர,
வேகத்தாண்டுதல், உயரத்தாண்டுதல்,
100 மீட்டர், 200 மீட்டர், 800 மீட்டர்
ஓட்டப்பந்தியம் என்று
அனைத்து விளையாட்டுகளிலும் கெட்டி!
வால்யூம்...
வால்யூமாக பைண்ட் செய்யும் அளவுக்கு
அவன் வென்ற விளையாட்டுச்
சான்றிதழ்களை கண்டு நான் மலைத்திருக்கிறேன்!

அவனது
வேறோரு விளையாட்டாக,
ஜாதி வித்தியாசம் பாராதும்
சமத்துவமாகவும்
எல்லா பிரிவுகளிலிருந்தும்
இரண்டுக்கு மேற்பட்ட
காதலிகளை வட்டமிட வைத்திருப்பான்!
அவன் வைத்திருப்பான் என்பதைவிட
அந்தப் பெண்கள்
அவனை மொய்த்தார்கள் என்பதுதான் சரி.

அவனோடான காதலுக்கு வீட்டில்
தடைச் சொல்கிறார்கள் என்று
பெரிய குடும்பத்து
சைவப் பிள்ளைமார் வகுப்பைச் சேர்ந்த ஓர் பெண்
தற்கொலைக்கு முயன்றதை
நான் அறிவேன்.

ஆனால்...,
தன்னை நேசிக்கும் பெண்களின்
பிடி தளர்ந்து போகாத வகையில்
மந்திரமாய்
சில காந்த வித்தைகளையும் வைத்திருந்தான்.
அதிலொன்று இசை!
எல்லா தரப்புகளிலிருந்தும்
அங்கீகரிக்கப்பட்ட குரல்!

அவன் அன்றைக்குப் பாடி,
அரங்கம் அதிர கைத்தட்டலை பெற்ற
இந்துஸ்தானியையும்,
கவாலி, கஸலையும் வித்தியாசப்படுத்தி
புரிந்துக் கொள்ளவே
எனக்கு
அதன் பிறகான
இருபது வருடங்கள் பிடித்தது.

தவிர,
பள்ளிப்பருவத்திலேயே
அவன் எல்லா
இசைக்கருவிகளையும் நுட்பம்கூட்டி வாசிப்பான்.
எனக்கு எழுதவரும் என்றதோர் காலகட்டத்தில்
அவனுக்கு நான்
சில இஸ்லாமியப் பாடல்களை
எழுதிக் கொடுத்திருக்கிறேன்.
அவற்றிற்கு அவன்
படு எளிதாக
பிரமாதமாக அமைக்கும்
இசை நேர்த்தியைக் கண்டு வியந்திருக்கிறேன்!

எப்பவுமே
வசீகரம்கொஞ்ச மிடுக்காய் பேசுவதும்,
அப்படியோர் நடை நடப்பதும்,
லாவகமாக சிகரெட் பிடிப்பதும்
அவனது ஸ்டையில்.
அவன் அன்றைக்கு சிவாஜி ரசிகன்.
பின்னே இப்படியெல்லாம்
முத்திரை பதிக்காமல் இருக்க முடியுமாயென்ன?

அவனது இன்னொரு மிடுக்கான ஸ்டைல்...
அவ்வப்போது
பிரமாதமாகப் பொய் பேசுவான்.
யாரும் அவனை மறுக்க முடியாத
ஸ்தளத்தில் நின்று பேசுவதால்..
அடுக்கடுக்காய் பொய் மேவும்!
அது அலங்காரமாக நெய்யப்படும்
ஆடைமாதிரியான பொழிவில் இருக்கும்!
குடும்பத்தின் வறுமை
அவனை சக்கையாய் பிழிந்து
நாறாக காயப் போடுகிற போதெல்லாம்
அதைத்தான் அணிவான்.
எல்லோரும் அதை ஏற்றுக் கொள்ளும்படி
அத்தனை கச்சிதமாக
அவனுக்கு அது பொருந்திப் போகும்.

அவனுக்கு ஓர் அண்ணன் இருந்தார்.
அவர் உயர் நிலைப் பள்ளி ஒன்றில்
'டிரில்மாஸ்டராக' பணியெடுத்தார்.
இவனது கலைகளில்
பாதிக்கு மேல் அவர் அறிவார்.
சரியாகச் சொன்னால்
அண்ணன்தான் தம்பியின் முதல் குரு!

தம்பியை ஊக்குவித்து
அவனது முன்னேற்றத்தை
கண்டு ரசிப்பவராகத்தான்
வெகுகாலம் இருந்தார்.
தம்பி புத்தி பேதலித்துப் போகும் வரை.

அந்தத் தெருவில் நடந்தேறிய
ஏதோ ஓர் தகறாரில்
சிலர் கூடி
யாக்கூபின் பிடறியில்
பச்சை மட்டையிலான தாக்குதல் நடந்தேற
அவன் மாறத் தொடங்கினான்.
பாதி தெளிவு பாதி பிதற்றல் என்றிருந்த அவன்
முக்கால்... முழுமையென மாறி
பின்னர்
வடக்கும் தெற்குமாக நீளும்
ஊரின் மெயின் ரோட்டில் அலைய ஆரம்பித்தான்.

அவனுக்கு வைத்தியம் பார்ப்பது
குடும்ப கௌரவத்தை குலைக்கும்
கல்யாணம் ஆகாத தம்பிக்கு
பைத்தியமென தெரியவந்துவிடும் என்பதாக
அந்த அன்பு அண்ணன் மறுத்துவிட...
பின்னர் வைத்தியமே இல்லை அவனுக்கு.
அலையாய் அலைந்து
கிட்டியதை தின்று
கிடைத்ததை உடுத்து
அழுக்குப் பிண்டமாக
இன்றைக்கும் அலைகிறான்.

ஊரில்
என் நண்பர்கள் சிலர்
"யாக்கூபிற்கு மேடைப்பாடல்கள்
எழுதி தந்தமையால்தான்
அவனுக்கு
இந்தப் பைத்தியம் ஏற்பட்டது" என்பதுண்டு.
எத்தனையோ விசயங்களுக்கு
மனவலியோடு
சிரித்துவிட்டுப் போய்விடுகிற நான்
இதற்கும் நான் சிரித்துவிட்டு போய் இருக்கிறேன்.

*
இன்று காலையில்
கடைவீதி சென்றிருந்த போது கூட
யாக்கூபை நான் பார்த்துவிட்டுதான் வருகிறேன்.
பள்ளிவாசல் பக்கமுள்ள
வேப்பமரத்தடி டீக்கடையின் வாசலில் நின்றான்.
சாவகாசமான நேரத்தில்
அவனை எங்கே பார்த்தாலும்
"மிஸ்டர் யாக்கூப்" என்று அழைத்து பேச தவறமாட்டேன்.
அவன் பேசும்போது பேச்சு
இப்பவெல்லாம் கோர்வையாக இருக்காது.
விட்டு விட்டு துண்டு துண்டாகதான் வரும்.
அந்தத் துண்டுகளை இணைத்தால் கூட
அர்த்தம் புரியாது.

சில நேரம்...
நான் ஒன்று பேச அவன் ஒன்று பேசுவான்.
சமயங்களில் சரியான பதிலும் வருவதுண்டு.

அவனை சந்திக்கும் நேரங்களில்
கட்டாயம்
அவனோடு டீயும் சிகரெட்டும் பகிர்ந்து கொள்வேன்.
பலவற்றை மறந்தவனாக காணப்பட்டாலும்,
எந்த முத்திரை குத்தப்பட்டு
அவன் சீர்குலைந்திருந்தாலும்
சிகரெட் புகைப்பதில் மட்டும்
இப்பவும் அவனிடம்
அதே ஆதி முத்திரை!
கொஞ்சமும் மாறாத லவகம்!

இன்றைக்கு அவன் ஆடை
வழக்கத்தைவிட மிகமிக அழுக்காக இருந்தது.
அவனது உலகத்தில் பிரவேசிக்க
இன்னும் எனக்கு பயிற்சி வேண்டும்.
அரை குறைகள் எல்லாம்
அவனை மாதிரி
முழுமையாகிவிட முடியாது.

*
பின்குறிப்பு:

யாக்கூபின் கீர்த்திகளை
இங்கே எழுதி இருக்கிறேன் என்றாலும்
பத்தில் ஒரு பங்கைக் கூட
சொல்லிவிடவில்லை என்று எனக்குத் தெரியும்.

நியூகாலேஜில்
அவன் படித்தக் காலத்தில்
ராணுவ வீரர்களுக்கு மகிழ்வூட்டும்
விசேச கச்சேரிகளை
எல்லைக்கே சென்று
அவன் செய்திருக்கிறான் என்பதையோ...

திரை இசைப் பாடகர்
தி கிரேட் பாலசுப்ரமணியன்
திரைக்கு வரும் முன்
யாக்கூபை பாடவைத்து மகிழ்ந்ததையோ...
இங்கே நான் எழுதினால்
உங்களில்...
எத்தனைப் பேர்கள் நம்புவீர்கள்!

***


நன்றி : தாஜ்   satajdeen@gmail.com

மறுமொழிகள் :

Thameem Azel  : Multi talent personality hats off

Taj Deen  : தமீம்... உங்களது வார்த்தைகள் சந்தோஷத்தைத் தருகிறது. நன்றி.

Raheemullah Mohamed Vavar : சாதாரணங்கள் என்று ஒதுக்கித் தள்ள அவ்வளவு அவசரப்படக் கூடாது என்பதற்கு இந்த நண்பர் யாக்கூப் இன்னுமொரு உதாரணம், உணர்வுகள் உளப் பூர்வமாக இருக்கிறது, கொச்சை தெரியவில்லை, நல்ல குணம் வெளிப்பட்டிருக்கிறது

Abu Haashima Vaver : மனசை கனக்க வைக்கும் செய்தியை மனதை வருடி விடும் வரிகளில் சொல்லி கலங்க வைத்து விட்டீர்கள். இப்பேற்பட்ட திறமைசாலி மனநிலை மாறியதை நினைத்தால் வருத்தம் ஒரு புறம்... இறை நாட்டம் மறுபுறம் என மனதை அலைபாய வைக்கிறது.  யாக்கோபின் நினைவு எளிதில் மனதை விட்டும் மறையாது தாஜ் அண்ணே...

Deepa Janakiraman  : /குடும்பத்தின் வறுமை
    அவனை சக்கையாய் பிழிந்து
    நாறாக காயப் போடுகிற போதெல்லாம்
    அதைத்தான் அணிவான்.
    எல்லோரும் அதை ஏற்றுக் கொள்ளும்படி
    அத்தனை கச்சிதமாக
    அவனுக்கு அது பொருந்திப் போகும்.// அருமை தாஜ் அண்ணே..யாக்கூபுகளுக்கு சொல்வதற்கு நம்மிடம் எதுவும் மிஞ்சாமலே போய்விட்டது.

Taj Deen : தீபா ஜானகிராமன்... நன்றிமா. தங்கையின் வார்த்தைகளை அத்தனை சீக்கிரம் மறக்க முடியாது. யாக்கூப் மாதிரியானவர்களோடு சமூகத்தில் பின்னிப் பிணைந்து வாழ்கிற ஒவ்வொரு நிமிடமும் ஏதோ ஓர் உறுத்தல் இருந்துக் கொண்டே இருக்கிறது. இப்படியாவது கொஞ்சம் இறக்கிவைப்போம் என்றுதான் இத் தலைப்பில் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

Taj Deen : எங்க அபு வெகு நாட்களுக்குப் பிறகு நையாண்டி இல்லாமல் பதிந்த கருத்துப் பதிவு இது என்பதில் சிரிப்பு வருகிறது. உங்களுக்கு எங்கள் யாக்கூப் மன சலனத்தை தருகிறார். வருடங்களாக நான் அனுபவித்த சலனம்தான் இது. எனக்குத் தெரியும் உங்கள் வலி. இதுதான் வாழ்க்கை.

 Taj Deen : அன்பிற்குறிய ரகிமுல்லா... எங்க யாக்கூப் உங்களை கிலேசம் கொள்ள வைத்துவிட்டார் என்றே நினைக்கிறேன். திமுகவில் இருந்து அதிமுக பிரிந்த போது, நாகூர் ஹனிஃபா கருணாநியோடு தங்கிவிட்டார். இந்த மாவட்டத்தில் அவரையொத்த இஸ்லாமியப் பாடகர்கள் அதிமுகவுக்கு வேண்டும். எம்.ஜி.ஆர். அவர்களின் பிரதிநிதிகள் யாக்கூப்பின் வீட்டுக்கு வந்து(அப்போது அவன் பைத்தியமாகவில்லை) எம்.ஜி.ஆர். அழைக்கிறார் நீ தட்டாமல் எங்களுடன் வரவேண்டும் என்கிறார்கள். உன்னை எம்.ஜி.ஆர். பெரிய ஆளாக சினிமாவிலும் ஆக்கிவிடுவதாக சொல்லி இருக்கிறார். கட்டாயம் நீ எங்களுடன் வரத்தான் வேண்டும் என்று உரிமையுடன் அழைக்கின்றனர். நான் அப்போ அங்கே நிற்கிறேன். அவர்களுக்கு யாகூப் சொன்ன பதில் என்னத் தெரியுமா ரஹிமுல்லா... 'காமராஜைப் பாடிய வாயால் இன்னொருவரை பாடமாட்டேன்' என்றுவிட்டான். இத்தனைக்கும் வீட்டு அடுப்பில் பூனைத் தூங்கிய நேரம். சிலிர்த்துப் போய்விட்டது எனக்கு. அவனும் அவனது அண்ணனும் காங்கிரஸ் சார்பு கொண்டவர்கள்தான். அதற்காக தேடிவந்த மதிப்பிற்குறிய அழைப்பை அவன் வேண்டாம் சொன்னது அதிகம்தான். இன்றைக்கு அவன் பைத்தியம். நான் இன்னும் அப்படி முத்திரைத் தாங்காதவன்தான். அவனுக்கு வந்த அழைப்பு மாதிரி எனக்கு வந்திருக்கும் பட்சம் குறைந்தது இத்தனை எளிதில் உதறியிருக்க மாட்டேன்.

Raheemullah Mohamed Vavar : கொண்ட கொள்கையில் இத்தனை உறுதியா, இந்த காலத்தில் இதுவெல்லாம் கற்பனைக்கே எட்டாத உண்மைகளில்லை அதிசயங்கள், உதறுபவன் பயித்தியக் காரன் என்பதற்கொப்பவே பிழைக்கத் தெரியாமல், ஆமா போ போ நான் பயித்தியம்தான் என்று சொல்லும் பைத்தியங்களை அவர் பைத்தியமாக்கி விட்டாரோ, விந்தை மனிதர்


Giritharan Navaratnam : //அவனுக்கு வைத்தியம் பார்ப்பது
    குடும்ப கௌரவத்தை குலைக்கும்
    கல்யாணம் ஆகாதத் தம்பிக்கு
    பைத்தியமென தெரியவந்துவிடும் என்பதாக
    அந்த அன்பு அண்ணன் மறுவிட...
    பின்னர் வைத்தியமே இல்லை அவனுக்கு.
    அலையாய் அலைந்து
    கிட்டியதை தின்று
    கிடைத்ததை உடுத்து
    அழுக்குப் பிண்டமாக
    இன்றைக்கும் அலைகிறான்.// இந்த முட்டாள்களின் வறட்டுக் கெளரவம்தான் அவனது அலைவுக்குக் காரணம். மனோவியாதிகளில் பல வகைகளுண்டு. ஒழுங்கான மருத்துவ சேவையினைப் பெற்றிருக்குமிடத்தில் அவனும் ஒழுங்காக வாழ்ந்திருக்கக்கூடிய சாத்தியங்களுண்டு. எனக்குத் தெரிந்து பலர் ஒழுங்காக மாத்திரைகளை எடுத்துக்கொண்டு , நல்ல பதவிகளில், மணமுடித்து ஒழுங்காக வாழ்ந்துவருகின்றார்கள். அவர்கள் ஒழுங்காக மாத்திரைகளை எடுப்பது மிகவும் முக்கியம். நண்பர் தாஜின் எழுத்தில் யாகூப்பின் வாழ்க்கை நெஞ்சினைக் கனக்க வைக்கிறது.


Taj Deen : அன்பு கிரி..., உங்களின் ஆதங்கம் புரிந்துக் கொள்ளக் கூடியது. என்னையொத்த சிலர், நீங்கள் குறிப்பிட்டிருக்கும் வைத்திய முறையைகளையும் அதன் பயன் குறித்தும் அவரது அண்ணனிடம்(இப்போது அவர் இல்லை) சினேகத்துடன் சொல்லத்தான் செய்தோம். சொல்கிற போதெல்லாம் சரியென்றே சொல்வார். வீட்டுக்கு போய் வந்தப் பிறகு அவரது பேச்சு வேறு மாதிரியாக இருக்கும். நிஜத்தில், பெரும்பாலோருக்கு வீட்டுக்கார அம்மாவின் அறிவுரை என்பது ஆண்டவனின் கட்டளையைவிட அதிக வலுக்கொண்டது. அத்தனைச் சீக்கிரம் அதனை வீட்டுக்காரர் உதாசீணம் செய்துவிட முடியாது. குடும்ப அரசியல் என்பது உலக அரசியலை விட கொடுமையானது. அந்த அண்ணனுக்கு ஏழு பிள்ளைகள். ஏழும் பெண்பிள்ளைகள். சொத்து என்று பார்த்தால் சில லட்சங்கள் போகும் வாழும் வீடுதான். யாக்கூப் இப்படியே இருந்துவிடும் பட்சம்.. வீட்டிற்கு உரிமை கொண்டாத சட்டத்திலேயே இடமில்லை. ஆக... அவன் அப்படி இருப்பதுதான் பிரச்சனையற்றது என்பது குடும்ப அரசியலின் வெளிப்பாடாக இருந்த்து. இதில் மூன்றாம் மனிதர்கள் அத்தனை எளிதில் தலையிட முடியாததோர் 'வாழும் மனித நாகரீகம்' கட்டிப் போட்டு விடுகிறது. இதில் யார்தான் என்ன செய்ய முடியும்? உங்களுக்கு மன கிலேசத்தை தந்தமைக்காக... ஸாரி. தவிர, உங்களது பாரட்டுதல்களுக்கு நன்றி.


Abu Haashima Vaver : குடும்பங்கள் இப்படித்தான் இருக்கிறது...
    இவன் தாலி கட்டுகிறான்
    அவள் இவனை
    சங்கிலி போட்டே கட்டி விடுகிறாள்.
    அதையும் தகர்த்து உதவி செய்பவர்கள்
    வெகு சிலரே...
    ஊருக்கு ஊர் யாக்கூபுகள் இருக்கிறார்கள்.


Abu Haashima Vaver : என் தாய் மாமாவுக்கு ஒரு மகன் இருந்தான்.
    அழகாக இருப்பான். நான் 16 வயதில் இருக்கும்போது அவன் பிறந்தான். பத்து வயதுவரை நன்றாகவே வளர்ந்தான்.
    அதன்பிறகு அவனுக்கு மன வளர்ச்சி குன்றியது.
    அவனால் யாருக்கும் எந்த துன்பமும் நேர்ந்ததில்லை.
    வீட்டிலேயேதான் வளர்ந்தான். இருபத்தைந்து வயது வரை.
    கண்ணசந்த நேரங்களில் வெளியே சென்று விடுவான்.
    அப்படித்தான் ஒருநாள் ...
    பக்கத்திலிருந்த ரயில் நிலையம் வரை சென்று விட்டான்.
    இவனை திருடன் என்று நினைத்து
    அங்கே நின்று கொண்டிருந்த
    காவல்துறை மிருகமொன்று அடித்துத் துவைத்து விட்டது.
    சரியாக பேச வராத என் மைத்துனன்
    தான் திருடன் இல்லை என்று கூட சொல்லத் தெரியாத
    அந்த வாயில்லாத ஜீவன்
    ரத்தம் சொட்ட சொட்ட அடிபட்டான்.
    அதுபோதாதென்று
    அந்த காவல்துறை மிருகம்
    அவன் அடிவயிற்றில் பூட்ஸ் காலால் பல முறை மிதித்தது.
    அதில் அவன் சிறுநீரகங்கள் சிதைந்து
    நினைவிழந்து விழுந்தான்.
    வெகுநேரம் கழிந்து அவனை அறிந்த ஊர் நண்பர் ஒருவர்
    ஆட்டோவில் ஏற்றி வீடு கொண்டு வந்து சேர்த்தார்.
    என்ன சிகிச்சை கொடுத்தான் பலனில்லாமல்
    இரண்டே நாளில் இறந்து விட்டான்.
    அவனை சந்தூக்கில் சுமந்து சென்ற நினைவுகள் இப்போது கண்ணீராய் ....


Kulachal Mu Yoosuf : அற்புதமான பதிவு. வேறெதும் சொல்வதற்கில்லை.

3 comments:

 1. மேலும் சில மறுமொழிகள்...

  Abdul Majeed : பிட்டுபிட்டாகச் சொன்ன விஷயங்களை, ரொம்பநாளா எதிர்பார்த்திருந்த எழுத்தை... இன்று 'ஓரளவு'க்கு முழுமைப்படுத்தியிருக்கிறீர்கள். பின்னூட்டத்தில் சொல்லியிருக்கும் எம்ஜியார் மேட்டர், மனக்கனத்தை மேலும் கூட்டுகிறது

  Taj Deen : மஜீத்... சந்தோஷம். யாக்கூப் குறித்து அன்னும் கூட செய்தி இருக்கிறது. எழுதினால் நம்ப மாட்டார்கள் என்கிற கணக்கில் விட்டுவிட்டேன். ஓர் இஸ்லாமியத் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் கச்சேரியில்... எதிரே அமர்ந்திருக்கும் ரசிகர்கள் பெரியவர்கள் எவ்வளவு கூச்சலிட்டாலும், முகம் சுழித்தாலும் கர்நாட இசையில், இந்துஸ்தானி இசையில் அரை மணிக்கும் குறையாமல் சாதகம் செய்வதை தவிர்க்கவே மாட்டான். ரசிகர்கள் எத்தனை நோட் எழுதி அனுப்பினாலும் அவ்வளவு சீக்கிரம் ஹனிபாவின் பாடல்களை பாடமாட்டான். தமிழ்ப் படப்பாடல்கள் குறைவாகவும், கிளாசிக்கான இந்திப் பாடல்களையுமே பாடுவான். அப்போ என்ன வயதிருக்கும் அவனுக்கு... 23 அல்லது 24தான் இருக்கும். எழுதினால் நம்புவார்களா? அவன் புல்புல்தாரா வாசித்தால் சொக்கிப் போகாதவர்களே இருக்க முடியாது. நடக நடிப்பும் அப்படிதான். நம்புவார்களா? என்னை கவிஞரே என்று மூச்சுக்கு மூச்சு அழைத்ததும், மேடையில் எனக்கு அநியாயத்துக்கு புகழ் மொழி பரப்பி பேசியதும் அவந்தான். எழுதி நான் கூலி என்று வாங்கியதும் அவனிடம்தான். மேடைக்கச்சேரிதோறும் அம்பது அறுபதுன்னு அன்றைக்கு தந்திருக்கிறான். நிறைய எழுதலாம்.

  ReplyDelete
 2. அன்புள்ள தாஜ் இந்த நேரத்தில் இந்த கவிதைக்காக நான் எப்படி உங்களிடம் எனது உள்ளத்தை பகிர்ந்துக்கொள்வது என்பது தெரியவில்லை. கவிதைக்காக மகிழ்வாதா இசைக்குயின் நண்பர் என்பதால் வருந்துவதா என்று தெரியவில்லை.

  நியூகாலேஜில்
  அவன் படித்தக் காலத்தில்
  ராணுவ வீரர்களுக்கு மகிழ்வூட்டும்
  விசேச கச்சேரிகளை
  எல்லைக்கே சென்று
  அவன் செய்திருக்கிறான் என்பதையோ... இந்த வரிகள் படித்தபோது உடல் சிலிர்த்தது. மனிதன் நன்றாக இருந்தாலும் மனநலம் குன்றினாலும் ஒருநாள் செத்துவிடுவான் அது படைத்தவன் கட்டளை ஆனால் இசைக்குயில் இனி சாகமாட்டார். ஒரு கவிஞனாய், ஒரு நண்பனாய் நீங்கள் உங்கள் இதயத்தை அவருக்கு அளித்து இருப்பது தெரிகிறது. நன்றி.

  ReplyDelete
  Replies
  1. ராமராஜன் மாணிக்கவேல்...
   நட்பிற்குறிய தங்களுக்கு,

   இசைக்குயில் யாக்கூபின்
   கடந்த இருபத்தைந்து வருடக்கால நிலை....
   காழ்ப்பற்று கவனம் கொள்ளும்
   எவர் மனதையும் சலனப்படுத்தக் கூடியதே!

   யாக்கூப்பை குறிது சொல்லவந்த
   என் பத்தி செய்திகள் கொஞ்சமே!

   அவன் தனது இறக்கத்தையும் ஏற்றத்தையும்
   தன் முப்பதுவருட காலத்திற்குள்
   எட்டித் தொட்டு முடித்துவிட்டவன்!
   பின்னர் மெள்ள
   காலத்தின் சிக்கல்களுக்குள்
   சிறைப்பட்டு
   சிதையத் தொடங்கிவிட்டவன்!

   இன்னும் எழுத
   அவனது
   வெற்றியும் தோல்வியும் அவ்வளவு உண்டு.
   அவன் குறித்த அவலம்...?
   அதனிலும் மேல்!

   காலம் நேரம்நல்கி வாய்ப்பும் அளித்தால்...
   கட்டாயம் எழுதுவேன்.
   எழுதவும் எழுதணும்.

   பின்குறிப்பு:
   யாக்கூப்பைப் பற்றிய செய்திகளை
   நான்
   கவிதை தொட்டு எழுதியிருக்கலாம்
   ஆனால்
   அது கவிதை அல்ல.
   உங்களது மயக்கம்
   எனக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும்...
   நிஜம் இதுதான்.

   நன்றி,
   - தாஜ்

   Delete