Monday, August 13, 2012

காடாறு மாதம் நாடாறு மாதம் - கவிஞர் விக்ரமாதித்யன்


முன்குறிப்புகள் : தாஜ்

முன் குறிப்பு - 1

கவிஞர் விக்ரமாதித்யன் நம்பி என்கிற சிறப்புடன் விளங்கும் கவிஞர் விக்ரமாதித்யன், தனது வரலாற்றை குமுதம் தீராநதியில் எழுதத் துவங்கி இருக்கிறார். முதல் அத்தியாயம் இம்மாத (ஆகஸ்ட் - 2012) தீராநதியில் வெளிவந்திருக்கிறது. இந்த முதல் அத்தியாயம், அவரது நடு நிலைப் பள்ளிப் படிப்புடன் தொடங்குகிறது. திருநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட அவர், தான் படித்ததாக இந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிற  'மாதிரவேளூர்' என்கிற கிராமம் எங்களது தாலுக்காவை சேர்ந்தது! சீர்காழியில் இருந்து சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவு. நம்பி விக்ரமாதித்தியன், தனது இளம்பருவத்திலேயே இத்தனை தூர வித்தியாசத்தை காண்பித்திருப்பதென்பது இன்றைக்கு அவர் கவிதையில் காட்டும் வித்தியாசத்தை விட, தனித்துவம் மிக்கதாக இருக்கிறது!  

நம்பி, தனது இடைக்காலத்தில் வாழ்ந்த நீண்ட சென்னை வாழ்க்கைக்குப் பிறகு, தற்போது தனது மண்ணான திருநெல்வேலியில்தான் வாழ்ந்து வருகிறார். இருந்தும், சுமார் 50-வருடங்களுக்கு முன் தான் படித்த கிராமத்தை, நடுநிலைப் பள்ளியை, அதன் ஆசிரியர்களை, இனாமாக தங்க வைத்து உணவிட்ட விடுதி வாழ்க்கையை, அக்கிராமத்தின் சுற்றுவட்டாரப் பகுதிகளை... என்று ஒன்றுவிடாமல் துல்லியமாக அவர் நினைவுக் கூர்ந்திருக்கும் விதம் வியப்பை தருகிறது! அதனை வெளிப்படுத்த அவர் உபயோகித்திருக்கும் நிஜங்களின் மொழியோ..., அவர் எழுதும் அந்த வரலாற்றுக் கூற்றுகளோடு நம்மை ஐக்கியப்படுத்திவிடுகிறது.

நம்பியை எனக்குத் தெரியும். அவரது கவிதை என்னை வசீகரித்ததை வைத்துமட்டும் சொல்லவில்லை. ஒரு குறிப்பிட்ட காலக்கட்டங்களில், சென்னையில்  அவரை மாதம் தோறும் சந்தித்திருக்கிறேன். மணிக்கணக்கில் அளவளாவி இருக்கிறேன். அந்தச் சந்திப்பின் போதெல்லாம் அவர் சீர்காழிக்கு பக்கத்து கிராமத்தில் தான் படித்தப்  பள்ளிப்படிப்பு குறித்து சொன்னதில்லை. அவரது கவிதைகள், கவிதைச் சார்ந்து அவர் எழுதிய சில புத்தகங்கள், மற்றும் அவரது கட்டுரைகள் என்று  அவரை நிறையவும் படித்திருக்கிறேன். அதில் ஒன்றிலும் அவர், அந்தக் கிராமத்தைச் சுட்டி எழுதினாரில்லை.

இடைக்காலத்தில், இலக்கிய நண்பர்கள் சிலரால் அவரது சீர்காழி கிராமத்து பந்தத்தை அறிந்து, கூடுதல் தகவலுக்கு இங்கே எனது ஊரைச் சார்ந்த, நம்பியை அவரது பள்ளிப் பருவம் தொட்டு அறிந்த நண்பர் ஒருவரின் தபிபுயும் என்னுடன் படித்தவனுமான 'இறச்சிக் கடை' விஸ்வநாதனை கேட்டு விசாரித்து நேர் செய்து கொண்டேன். பேச்சுப் போக்கில் அவன், பல வருடங்களுக்கு முன் எங்களது ஊரிலுள்ள பிரபலமான முருகன் பிரஸில் எங்கள் இருவருக்கும் இடையே நடந்த உரையாடலை நினையூட்டினான். அந்த நினையூட்டல் நம்பியைப் பற்றியதுதான் என்று கூடுதல் தகவலாக சொன்னான். நான் என் நினைவுகளை பின்னோக்கி பரிசோதித்தேன்.

எனது இளம் பருவத்தில், எங்களது பகுதியில் இருந்த, 'சுத்தானந்த ஜோதி மறுமலர்ச்சி மன்றம்' என்கிற, 'S.J.மறுமலர்ச்சி மன்றம்' இஸ்லாமிய இளைஞர்களை கொண்ட சமூக சேவை அமைப்பில், நான் பொறுப்பில் சில காலம் இருந்தேன். இதன் மிகப் பெரிய பணி, இஸ்லாமிய திருமணங்களின் போது, கல்யாண விருந்துப் பறிமாறுவதும், கூடுதல் கறி கொட்றாவோடு திருப்தியாகச் சாப்பிடுவதும், மாப்பிள்ளை வீட்டாரிடமும், பெண்வீட்டாரிடமும் அதையும் இதையும் சொல்லிப் பிடுங்கும் நூறு, இருநூறு பணத்தில் எல்லோருமாக கட்டாய சச்சரவுடன் பங்கு பிரித்துக் கொள்வதுமாக இருக்கும்.

உப பணியாக, மாப்பிள்ளை ஊர்வலத்தின் போது பங்கெடுத்து , இறைவனை / இறைத்தூதரை கோரஸாக புகழ்பாடும் சடங்கும், மணத் தம்பதியினரை நூறு வயசு வாழ நிர்ப்பந்தித்து (வயசுக்கு மீறிய) வாழ்த்திப் பாடும் இன்னொரு சடங்கும் எங்களுக்கு உண்டு. அப்படிப் பாடும் பாடல்கள், பெரும்பாலும் அக்காலக்கட்டத்தில் பிரபலமான சினிமா பாடல்களின் மெட்டில் புனைந்ததாகவே இருக்கும். இப்படி சில பல பாடல்களை அன்றைக்கு நானும் எழுதியதுண்டு. பின் நாளில், என்னைவிட வயதில் குறைந்த, ஆனாலும் நட்புவட்டத்தில் இருந்து கொண்டிருந்த நண்பர் சாதிக், 'இப்படியான பாடல்களை எல்லாம் நீங்க எழுதாதிங்கண்ணே' என்று அழுந்தச் சொன்ன பொழுதில், அது சரியென்று எனக்கும் பட , அந்தப் புனித மிக்க பாட்டுக்குப் பாட்டெழுதும் போக்கைவிட்டேன். சாதிக் ஏன் அப்படிச் சொன்னார் என்பதும், உடனே நானும் அதனைக் கைவிட்டேன் என்பதும்  இங்கே இப்போது வேண்டாம்.

அப்படி பாட்டுக்கு பாட்டெழுதிய காலத்தில், அந்தப் பாடல்களை சில நேரம் பிரஸில் அச்சில் பதிய வேண்டியும் இருக்கும். அதையொட்டி, எங்கள் ஊரின் பிரபல்யமான முருகன் பிரஸுக்கு எழுதிய பாடல்களை கொண்டு சென்று தரவும், அது அச்சு ஏறும் முன் புரூப் பார்க்கவும் செல்ல வேண்டி இருக்கும். அப்படி ஒருதரம் புரூப் பார்க்கப் போன போது, அந்தப் பிரஸில், நண்பன் 'இறச்சிக்கடை' விஸ்வநாதன் உட்கார்ந்திருதான். தனது அண்ணனுக்கு வேண்டிய ஒருவர் இந்த பிரஸில் கவிதைப் புத்தகம் ஒன்றை அச்சிடுகிறார் என்றும், அதை எழுதிய அந்தக் கவிஞரோ சாராயம் குடித்துவிட்டு தன் வீட்டுத் திண்ணையில் மல்லாந்து கிடக்க, நான் அது விசயமாக ஒன்றும் புரியாமல் இங்கே உட்கார்ந்திருக்கிறேன் என்றான்.

முழுமை பெறாத அந்தக் கவிதைத் தொகுப்பின் பக்கங்களை எடுத்து வாசித்துப் பார்த்தேன். ஒன்றும் புரியவில்லை. முத்தியதோர் பைத்தியம், சாராயம் போதை தலைக்கேறிய நிலையில், தமிழ் வார்த்தைகளை அடுக்கு வரிசையில் அடுக்கு அடுக்காகப் பிரித்து எழுதி வைத்திருப்பது மாதிரி பட்டது. அந்த நண்பனிடம் நான் உரிமையோடு மனதில் பட்டதைக் கேட்டேன், "அந்த ஆள், என்ன பைத்தியமா?". நான் கேட்டதுதான் தாமதம், முருகன் பிரஸ் பணியாட்கள், அதன் உரிமையாளர் என்று அனைவரும் சிரித்தார்கள். என் நண்பனும் சிரித்தபடி நெளிந்தான். நான் அப்படி தடிமனாய் கிண்டல் அடித்த அந்த எழுத்து புதுக் கவிதை சார்ந்தது என்றோ, அதை எழுதிய கவிஞன்தான் இன்றைக்கு நான் மதிக்கும் கவிஞர் விக்ரமாதித்யன் நம்பி என்றோ, அன்றைக்கெனக்கு தெரியாது!

முன் குறிப்பு - 2:

தன் சார்ந்த வரலாற்றை, தனது இடைக்காலத்தில் எழுதிய கவிஞர் கண்ணதாசன், அதற்கு அவரது பார்வையில் மிகப் பொருத்தமான, நுட்பம் சார்ந்த தலைப்பாக 'வனவாசம்' என்று பெயரிட்டிருந்தார். அதாவது, திராவிட இயக்கத்தில் அவர் தங்கி இருந்த காலத்தை அப்படி அவர் கருதினார், அல்லது அப்படி அவர் நமக்கு சுட்டிக்காண்பித்திருந்தார். இன்றைக்கு, தனது வாழ்வின் பெரும் பகுதியை இலக்கியம் இலக்கியம் சார்ந்த அலைச்சல் என்றே துலைத்துவிட்ட கவிஞர் விக்ரமாதித்தியன், தன் வரலாற்றுப் பதிவுக்கு 'காடாறு மாதம் நாடாறு மாதம்' என்று தலைப்பிட்டிருக்கிறார். என் பார்வையில் இத்தலைப்பு கவிஞர் கண்ணதாசன் தன் வரலாற்றுக்கு இட்டத் தலைப்பையும் மிஞ்சுவதாக இருக்கிறது! இத்தனை விசேச நுட்பம் கொண்ட தலைப்புகள், கவிஞர்களுக்குதான் சாத்தியம் போலும்!  


***
காடாறு மாதம் நாடாறு மாதம் - கவிஞர் விக்ரமாதித்யன்

மாதிரிவேளூர். கொள்ளிடக் கரையோரமுள்ள சிற்றூர். சிதம்பரம் - சீர்காழி - பிரதான சாலையில் - வல்லம்படுகை பாலம் கடந்ததும் - ஆனைக்காரன் சத்திரம்; அதிலிருந்து மேற்கே மூன்று கல் தொலைவு. கொள்ளிடம் என்று ரயில்வே ஸ்டேஷனும் கிழக்கே மகேந்திர பள்ளி போகிற பாதையில் இருக்கிறது. 63-64 கல்வியாண்டின் போது, மாதிரவேளூரில், முத்துசுவாமி விஸ்வநாதன் நடுநிலைப்பள்ளி என்று இலவச உணவு விடுதியுடன் ஒரு பள்ளி தொடங்கினார்கள்.

எங்கள் அத்தான் (பெரியம்மா மகள், அக்கா கணவர்) ஆனைக்காரன் சத்திரம் சரகப் பள்ளித் துணை ஆய்வாளராக இருந்தார்கள். அப்போது, எஸ்.எஸ்.எல்.சி. வரையிலுமாவது படிக்கட்டும் என எண்ணி, அங்கே என்னைச் சேர்த்து விட்டார்கள். மூன்று வருஷம்; ஏழு, எட்டு, ஒன்பதாம் வகுப்பு அந்த கிராமத்தில்தான்.

ஊருக்கு வடக்கே ஆறு; அதற்கும் முன்னாகவே வாய்க்கால்; கிழக்கே மாதலீஸ்வரர் கோயில்; மேற்கே பெருமாள் கோயில்; தெற்கே பள்ளிக்கூடம்; சுற்றிச் சூழவும் வயல். மின்சாரம் கிடையாது; பேருந்து விடவில்லை. வண்டி, சைக்கிள் வரும் போகும்; மழைக்காலத்தில் ஆனைக்காரன் சத்திரம் பாதை சேறும் சகதியுமாக கிடக்கும்; போக முடியாது.

'கப்பல்காரச்செட்டியார் வீடு' என்பார்கள், சீர்காழியில்; அவர்களுக்கு மாதிரவேளூரில் நிறைய நிலம்; ஒரு பண்ணை வீடு; அங்கேதான் அறுவடைக்காலத்தில் நெல்மூட்டைகளை அடுக்கி வைத்திருப்பார்கள். பண்ணை வீட்டுக்கு அண்டையில் இருந்த காலி இடத்தில்தான் கீற்றுக்கொட்டகை போட்டு வகுப்பறைகள்; ஏற்கனவே இருந்த ஒரு கட்டிடத்தில் எட்டாம் வகுப்பு. பக்கத்தில் உள்ள தொடக்கப்பள்ளியில் படிக்கும் சிறுவர் சிறுமிகள் சிலரும் பெண்பிள்ளைகள் பண்ணை வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தார்கள்; அக்ரஹாரத்திலுள்ள ஒரு வீடுதான் பையன்கள் தங்குமிடம்.

சாப்பாடு, பண்ணை வீட்டின் ஹாலில். காலையில் நொய்க்கஞ்சி அல்லது பழையது; மதியமும் இரவும் சோறு; ஏதாவது ஒரு குழம்பு. ஒரு கறி, மோர். "அன்னம்பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்.." தேவாரப்பாடல் சொல்லி, "பகுத்துண்டு பல்லூயிர் ஓம்புதல்" குறள் கூறி முடித்த பிறகுதான் சாப்பிட வேண்டும்; நெற்றியில் திருநீறு இல்லாமல் இருக்கக் கூடாது; மற்ந்துபோய் விபூதி பூசாமல் வந்துவிட்டு, கரும்பலகை எழுத்தை அழித்துத் தீற்றிவிட்டு வருவதெல்லாம் நடக்கும்.

ஆஸ்டல் பையன்களில் அநேகம் பேரும் சீர்காழி தாலுக்காவைச் சேர்ந்தவர்கள்; பெரிய பையன்கள்; சனி - ஞாயிறானால் தவறாமல் ஊருக்குப் போய்விடுவார்கள்; வீட்டை நினைத்து மறுகுபவனைப் பார்க்க முடியாது.

காலையில் எழுந்ததும் வாய்க்காலுக்குத்தான் போயாக வேண்டும்; கோடைக்காலத்தில் ஆறு. வழியில் ஒரு பலசரக்குக் கடை; எந்நேரமும் சிலோன் ரேடியோ பாடிக் கொண்டிருக்கும்; அதுதான் ஒரே ஒரு பொழுதுபோக்கு அந்த ஊரில்.

தலைமையாசிரியர் சம்பந்தம் பிள்ளை, பள்ளியின் வளர்ச்சியிலும் மாணவர்களின் உயர்விலும் அக்கறை கொண்டவர்; கல்வி உதவித் தொகை கிடைக்கச் செய்வது, பேச்சு, விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள வைப்பது, 'ஸ்டடி ஹவர்ஸ்' ஏற்படுத்தி மேற்பார்வையிடுவது, மாணவர் மன்றம் அமைத்து ஊக்குவிப்பது எல்லாவற்றிலும் தலைப்பட்டு நடத்துவார்; வருஷா வருஷம் தவறாமல் நூலகத்துக்கு புஸ்தகங்கள் வாங்குவார்; அவர் தான் தெரிவு செய்வார். தமிழாசிரியர் பூவராக சாமியைக் கலந்து கொண்டு உயர்நிலைப் பள்ளியாக்கி, மாவட்டத்தில் ஓர் இடம் பெறச் செய்ய வேண்டும் என்ற குறிக்கோளில் முனைப்பாக இருப்பார்.

நூலகப்பொறுப்பு, சுசீலா டீச்சர்; வகுப்பு நேரம் இல்லாத சமயம் பார்த்துதான் புஸ்தகங்கள் கேட்டு வாங்க முடியும்; அப்படிப் படித்தவைதாம், தமிழ்த் தென்றல் திரு.வி.க.,மறைமலையடிகள், சொல்லின் செல்வர் ரா.பி.சேதுப்பிள்ளை, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.ப.விஸ்வநாதம், பன் மொழிப் புலவர் கா.அப்பாதுரையார், சிலம்புச் செல்வர் மபொ.சிவஞானம், டாக்டர் மா.இராசமாணிக்கனார், டாக்டர் அ.சிதம்பரநாதன் செட்டியார் முதலான தமிழறிஞர் நூற்களெல்லாம்.

எழுத முற்பட்டதும் மாதிரவேளூரில்தான். 'சுதேசமித்திரன்' நாளிதளில் 'மாணவர் மலர்' என்றொரு பகுதி; பிரதமர் நேருவின் மறைவை நினைத்து, ரோஜா, கண்ணீர் சிந்துவதாக ஓர் உருவகக் கதை, ஒரு கவிதையெல்லாம் வெளியிட்டு, பாரதியார் கவிதைகள், மனோன்மணியம் அனுப்பியிருந்தார்கள்; பள்ளி முகவரியுடன் வந்திருந்ததனால், வகுப்பாசிரியர் கலியபெருமாள் முதல்... தலைமையாசிரியர் வரை நல்ல மதிப்பு.

மாணவப்பருவம்தானே, வாழ்க்கை அமைதியாகப் போய்க் கொண்டிருந்தது. விடுமுறை நாள்களில் ஆச்சாள்புரத்திலுள்ள அக்கா வீட்டுக்குப் போய்விடலாம். (பாடல்பெற்ற ஸ்தலம்; திருஞான சம்பந்தருக்குத் திருமணம் நடந்த ஊர்; தேவாரத்தில், திருநல்லூர்.) என்னுடைய 'வெறுஞ் சோற்றுக்குத்தான்' கதை, மாதிர வேளூர் ஆச்சாள்புரப் பின்புலமும் வாழ்வனுபவமும் உள்ளதுதான்.

அறை நண்பர்களான கல்யாணசுந்தரம் அவருடைய ஊரான பனைமங்கலத்துக்கும் காந்தி, கொண்டலுக்கும் அழைத்துக்கொண்டு போயிருக்கிறார்கள்; எங்களுடன் படித்த சாமியப்பன், தென்னந்தோப்புக்கு நடுவில் இருக்கும் தங்கள் குடியிருப்புக்குக் கூட்டிக் கொண்டு போய் இளநீர் பறித்துக் கொடுப்பதை வழக்கமாகவே வைத்திருந்தார்; இளைய தமிழய்யா தங்கராசுவின் அழைப்பில், இதேபோல உள்ளூர்க் குடியிருப்புக்கு சென்றிருந்த போது, கேக், மிக்ஸர், தேநீர் விருந்தளித்து, பல்லடம் மாணிக்கம் கவிதைத் தொகுப்பும் தந்து அனுப்பி வைத்தார். (பல்லடமும் அவரும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஒன்றாகத் தமிழ் பயின்றவர்கள்.) சீர்காழி / சிதம்பரம் கோயில்களுக்குக் கூட்டிக் கொண்டு போன நண்பர்களும் இருக்கிறார்கள். எல்லாம் நல்லபடியாகத்தான் இருந்தன. கலியபெருமாள் சார், தன் திருமணத்திற்குப் பையன்கள் எல்லோரையும் அழைத்திருந்தார்; சீர்காழியில் ஒரு சத்திரத்தில் நடந்த அந்த கல்யாணத்துக்கு நாங்கள் போயிருந்தோம்.

சாயங்காலம், கோயிலில் 'பிரேயர்' உண்டு; குருக்கள், தேவாரம், திருப்புகழ், பாரதியின் 'தேடியுனைச் சரணடைந்தேன் தேச முத்துமாரி' எல்லாம் பாடுவார்; கூடவே நாங்களும் பாட வேண்டும். ஆஸ்டல் லீடர், அட்டெண்டன்ஸ் எடுப்பார்.

பிரேயர் நேரத்தில் இல்லையென்றால் மீல்ஸ்-கட்; அதிகபட்சத் தண்டனையே இதுதான். சனி, ஞாயிறில் ஊருக்குப் போய்விட்டுப் பிந்தி வந்தால், பையன்கள் சண்டை போட்டு அடித்துக் கொண்டால், சிதம்பரம் போய் சினிமா பார்த்துவிட்டு வந்து மாட்டிக் கொண்டால், இந்த மாதிரி தவறுகளுக்கு மீல்ஸ்-கட்தான் தண்டனை.

காலையில் என்றால் பிரச்சனையில்லை; இருக்கவே இருக்கின்றன இரண்டு டீக் கடைகள்; இட்லி கிடைக்கும்; எப்படியோ சாப்பிட்டுவிடலாம்; ராத்திரி எட்டு மணிக்கெல்லாம் ஒன்றும் கிடையாது. தட்டைக் கழுவிக் கொண்டு வந்து, சாப்பிட உட்கார்ந்த பிறகு எழுந்து போக வேண்டியதெல்லாம் நேரும்.

ஸ்காலர்ஷிப் வருகிற நாள்களில், பையன்கள், விடுதிக் காப்பாளரிடம் அனுமதி பெற்று, சிதம்பரம் போய் யூனிஃபார்ம் துணி, நோட்டு, புஸ்தகம் எல்லாம் வாங்கிக்கொண்டு, படமும் பார்த்துவிட்டு வருவதுண்டு; மற்ற நேரங்களில் எப்படிக் கேட்க முடியும். எதற்கும் துணிந்த பையன்கள் சில் பேர் புதுப்படம் வந்ததும் போய்ப் பார்த்துவிடுவார்கள். சனி ஞாயிறில்.

சிதம்பரம் செல்வதில் ஒரு கணக்கு இருக்கிறது. ஒன்றரை மணிக்கெல்லாம் மத்தியச் சாப்பாடு; முக்கால் மணி நேரத்தில் போக வேண்டும்; ஆற்றைக் கடக்கப் பதினைந்து நிமிஷம்; வல்லம் படுகைக்குப் பத்து நிமிஷம்; சிதம்பரம் இருபது நிமிஷம்.

கொள்ளிடத்தில் தண்ணீர் கொஞ்சமாகத்தான் போகும்; மணலாக விரிந்து கிடக்கும் ஆறு; ஆழமான இடமென்றால் இடுப்பளவு தண்ணீரில் இறங்கிக் கரையேறி, நடுத்திட்டுக்கு நடந்து, மறுபடியும் இப்படியே சென்றால் எதிர்கரை; கிழக்கே திரும்பிப் போனால் வல்லம் படுகை; எட்டி நடந்தால் சிதம்பரம்; வடுகநாதன் தியேட்டர் வந்துவிடும். இதேமாதிரி திரும்பி வந்தால் பிரேயரில் கலந்து கொள்ளலாம்; எதற்கும் ஆஸ்டல் லீடரிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டுத்தான் போவார்கள்; பிரேயர் முடிவதற்குள் வந்துவிட்டால் அட்டெண்டன்ஸ் போட்டு விடுவார்.

'காதலிக்க நேரமில்லை' ரிலீஸ்; ஞாயிற்றுக்கிழமை மதியம் நானும் மணி என்கிற நண்பனுமாகப் புறப்பட்டுவிட்டோம். எல்லாம் சரியாக இருந்தன. பாலையாவின் நடிப்பு, நாகேஷின் காமெடி, ரவிச்சந்திரனின் இளவயது, காஞ்சனாவின் தோற்றம் என்று பேசிக் கொண்டே வந்துவிட்டோம்; படம் பார்த்த சந்தோஷம்.

கால் மணி நேரம் லேட்டாகி விட்டது எப்படியோ; ஆனாலும் ஒரு சமாதானம், பிரேயர் முடிவதற்குள் போய்விடலாம்; என்ன ஆகிவிடும். ஆனால் ஆகிவிட்டது. சோதனைக்கு, அன்றைக்குப் பார்த்து வார்டன் வந்துவிட்டுப் போயிருக்கிறார்.

ஸ்டடி - ஹவர்ஸ் முடிந்து சாப்பிடப் போனோம்; பயந்தது போலவே நடந்தது. வார்டன், எங்கள் பெயரை வாசித்துவிட்டு, 'மீல்ஸ்-கட்' என்று அறிவித்தார்; அப்படியும், "பிரேயர்க்கு வந்துவிட்டோம், பிந்திவிட்டது." என்று சொல்லிப் பார்த்தோம். விதிகளும் ஒழுங்குமுறைகளும் மாற்ற முடியாதவைதாமே. அன்றிரவு..., அன்னம் பாலிக்கப்படவில்லை.

***
தட்டச்சு & வடிவம்: தாஜ்
***
நன்றி: தீராநதி ( ஆகஸ்ட்/ 2012) , விக்ரமாதித்யன்
நன்றி : தாஜ் | http://www.tamilpukkal.blogspot.com/  | satajdeen@gmail.com
***

1 comment:

  1. அவர் இயல்புக்கு இதை எழுத ஒப்புக்கொண்டது
    நமது முதல் அதிர்ஷ்டம்

    படித்து வியப்பது அடுத்துதான்!

    ReplyDelete