இச் சிறுகதையை வாசித்து முடித்த நாழியில், '9940786278'-யை தேடி இழுத்து, நச். அந்த முனையில் கௌதம சித்தார்த்தன்! குழப்பமான குரலோடு 'ஹலோ... ?' . ஒவ்வொருதரமும் அழைக்கிற போதும் இப்படியான தடுமாற்றம் அவரிடம் எதிரொலிப்பதை நான் ரசிக்கவே செய்கிறேன். 'தலைவரே..., நான் தாஜ்!' என்றால், 'அட... நீங்களா? எங்கே ஆளையே காணல?' என்பார். இப்போதும் அப்படித்தான்.
முந்தாநாள்தான் அவரை அழைத்து, கால்காசுக்கு போறாத இலக்கியச் சங்கதிகளை, அரைமணிக்கும் அதிகம் பேசினேன். என்றாலும், அவரிடமிருந்து இப்படியானதொரு எதிரொலிப்பு என்பது...., அவரது ஸ்டைலாகவே போய்விட்டது!
முந்தாநாள் கிடக்கட்டும், காலையில் பேசி, பிற்பகலில் அவரை நான் அழைத்தாலும் கூட, 'ஹலோ... ?' என்று ஆரம்பித்து.., என் அறிமுகத்திற்குப் பிறகு, 'அட... நீங்களா...? எங்கே ஆளையே காணலையே?' வியப்பு செய்த பின்தான் பேசுவார். நண்பர்களின் பெயர்களை செல்லில் பதிவு செய்ய மறக்கும் 'சோம்பல் நோய்' இது!
நவீன இலக்கியவாதிகளில் பலர், இந்த நோய்க்கு ஆட்பட்டவர்களே - என்னையும் சேர்த்து! நான் அத்தனை பெரிய 'ந.வி.' இலக்கியவாதி இல்லாது போனாலும், இந்த நோய் என் வயதின் செல்லமாக எனக்கும் வந்து சேர்ந்திருக்கிறது! நான் கிடக்கட்டும். இந்தப் படைப்பிலக்கியவாதிகள், அவர்களது 'படைப்பு மாந்தர்களோடு' சதா நேரமும் அளவளாவவே டைம் போதாது. அத்தனைக்கு குசலம் கொண்டு நெகிழ்ந்து கொண்டிருப்பார்கள். இந்தக் கூத்தில், நண்பர்களின் பெயர்களை வேலைமெனக்கெட்டு செல்லில் ஏற்றவும்தான் ஏது ஸார்... நேரம்?
கௌதம சித்தார்த்தன் நவீன இலக்கியத்தில் எனக்கும் சீனியர். ஒரு காலத்தில், சிற்றிதழ்களை, 'க்ரியா'வில் தேடிப் பிடித்து வாங்கி, வாசிக்கத் துவங்கிய தருணம், தன் படைப்புகளில் அவர் அசாத்திய திறமைகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்! கௌதம சித்தார்த்தனையும் சேர்த்து, எல்லா 'கிங்'குகளையும் வாசித்து, அதனையெல்லாம் எழுத்தில் நான் கக்கத் துவங்கி, பேனாவையும் பேப்பர்களையும் துவம்சம் செய்துக் கொண்டிருந்த போது, அவர் தனது படைப்புகளை நிறுத்திவிட்டு, இலக்கிய ஸ்தலம் விட்டும், விடுதலை கொண்டுவிட்டார்!
பின் நவீனத்தை தமிழில் மிக அழகாக தொட்டு காமித்துக் கொண்டிருந்தாரே.... கௌதம சித்தார்த்தன் என்றொருவர்... அவர் எங்கே போனார்? என்று எல்லோரையும் மாதிரி நானும் தேட, கிட்டவில்லை அவர். அவர் எழுதிய பிரபல சிறுகதையான 'தம்பி'யை சப்புக் கொட்டி வாசித்தது நினைவுகளில் எழும் போதெல்லாம் நிலழாக கௌத சித்தார்த்தன் பின்தெரிந்து கொண்டிருப்பார்!
தனது படைப்புகளை சிறுகதையாக மட்டுமே படைத்தளித்தவர் கௌதம சித்தார்த்தன். கூடுதலாக, வளமான கட்டுரைகள் பலவும் எழுதி இருக்கிறார் என்றாலும், நாவல் எதுவும் எழுதவில்லை. என் நினைவுகள் ஊனம் கொண்டிருக்காவிடில், இது சரி.
தமிழ் இலக்கிய வட்டத்தில் எழுதப்படாத சட்டமொன்று உண்டு. நாவல் என்று ஒன்றை எழுதினால்தான் படைப்பாளி இங்கே அங்கீகாரம் பெற முடியும். அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இஸ்டத்திற்கு கற்பனை காட்டுக்குள் 'கொம்பனை' துரத்தி வர்ணித்து கொண்டே மேற்கு தொடர்ச்சி மலைகளின் கீர்த்திகளை ஒருசேர கண்டமேனிக்கு பிணாத்தியபடிக்கு இரணூறு முண்ணூறு பக்கத்திற்கு ரொப்பி அதனை நாவலாக்கலாம். ஓ.கே., பெண்களை மாறி மாறி நிர்வாணமாக்கி எத்தனை நூறு பக்கத்திற்கும் நட்டுக் கொண்டிருக்கும் ஆண்குறியோடு வட்டமிட்டு வட்டமிட்டு அந்தப் பெண்களை குத்திக் கிழித்து காமம் சொட்ட, நாவல் மேல் நாவல் எழுதலாம். அங்கீகாரம் உண்டிங்கே. இப்படியான அங்கீகாரத்தை கௌதமன் சித்தார்த்தன் வலியத் தேடிப் பெறாது போனதினால்..., பெரிய பிரஸ்ஸுகள் அவரை தேடவில்லை. அவரும் அன்றைக்கு கவலைப்பட்டதாக தெரியவில்லை.
எட்டு வருடங்களுக்கு முன்னால், இலக்கியத்தின் பக்கம் தலையுயர்த்திய அவர், திரும்பவும் ஏனோ மாயமானார். இவர் எழுதிய பின் நவீனப் படைப்புகளின் சரியான கூற்றுகள் பிடிபடாமல் முட்டி மோதிக் கொண்டிருந்தவர்கள் எல்லாம்..., இன்றைக்கு இலக்கிய உலகில் ஜாம்பவான்கள்! தோலில் லேப்டாப்பும், கையில் பாஸ்போர்ட்டுமாய் உலகம் பூரவும் தங்கள் இலக்கியத்தை பரப்பக் கிளம்பியிருக்கும் இந்த நாளில், சித்தார்த்தன் ஆரம்ப வகுப்பு மாணவனாட்டம் இலக்கிய வட்டத்திற்குள் மீண்டும் அட்டனன்ஸ் கொடுத்து, ஜரூர் காண்பித்துக் கொண்டிருக்கிறார்! எல்லா இலக்கிய சிற்றிதழ்களிலும் எழுத ஒப்புதல் தந்தவராக, எழுதியும் வருகிறார். அவரது வேகம் 'குமுதம்' வார இதழையும் விடவில்லை.
இந்த வார குமுதம் (29.8.2012) இதழில், அவரது 'சோமு என்னும் ஈமு' வெளிவந்திருக்கிறது. குமுதம் வாசகர்களை அவர் மனதில் கொண்டு இக்கதையை எழுதி இருந்தாலும், அவர்களே அறிந்து உணர முடியாததோர் பின் நவீனத்துப் பின்னலாக இதனை படைத்து, முத்திரை பதித்திருக்கிறார். கச்சிதமான வார்த்தைகளில் சொல் சுத்தமாக கதையை அவர் படைத்திருக்கும் விதம் மலைக்கவைக்கிறது. உயர்ந்த வகை நகைச்சுவை கதையோட்டத்தில் பிரமாதமாக வெளிப்பட்டிருக்கிறது. வாசிப்பவன் 'வாசிப்பு தரம்' கொண்டிருந்தால் மட்டுமே சிக்கக் கூடிய புரிதலாக அந்த நகைச்சுவை இருக்கிறது. தமிழ் சினிமாவைப் பற்றிய அவரது கிண்டல் ரொம்பவும் வித்தியாசம்! சமூகத்தையும் நம்ம சினிமாவையும் சரியாகத்தான் படம் பிடித்திருக்கிறார்!
இக்கதை, ஈரோட்டு ஈமு மாஃபியாக்கள் கைதில் சிக்குவதற்கு முன்பு எழுதியதாக அறியமுடிகிறது. கதையெழுதிய வேகத்தில் இது வெளிவந்திருந்தால்..., இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். ஓர் யானையும் அதன் குட்டியையும் முன்நிறுத்தி, ரஜினிகாந்தின் இமேஜை சிதைத்து தேவர் எடுத்திருந்த 'அன்னையோர் ஆலையம்' படத்தைப்பற்றியும், தமிழில் மிகச் சிறந்த பின்நவீனத்துவப் படமான 'மந்திரப் புன்னகை'யையும் இக்கதையில் குறிப்பு செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருக்கும் பட்சம், 'சோமு என்னும் ஈமு' இன்னும் முழுமை கொண்டிருக்கும்.
- தாஜ்
***
சோமு என்னும் ஈமு
கௌதம சித்தார்த்தன்
// 'ரஜினிகாந்தைக் கொலை செய்வதென்று
தீர்மானித்துவிட்டேன்; ஆமாம்,
தமிழ் சினிமாவின்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைத்தான்....' //
தீர்மானித்துவிட்டேன்; ஆமாம்,
தமிழ் சினிமாவின்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைத்தான்....' //
என் செல்பேசியில் வந்திருந்த இந்தக் குறுஞ்செய்தியைப் படித்ததும் வெலவெலத்துப் போனேன். ஒருவேளை தமாஷாக இருக்குமோ...? மனம் நிலை கொள்ளாமல் தவித்தது. அப்புறம் தமிழ் சினிமாவின் கதி? சற்றைக்கெல்லாம் ஒரு முடிவுக்கு வந்தவனாக செல்பேசியில் அந்த எண்ணைத் தொடர்புகொண்டேன்.
"இன்னும் 25 நிமிடங்களில் உங்களை வந்து சந்திக்கிறேன்..." என்றது அந்த மர்மக் குரல். அட பெத்தராயுடா! அது இன்னும் ஆபத்தாச்சே.... உடம்பில் ஒரு நடுக்கம் ஏறியடித்தது. பயம் கலந்த பதட்டத்துடனும் தவிப்புடனும் காத்திருந்தேன்.
சரியாக 25ஆம் நிமிடத்தில் வந்து சேர்ந்தார் 'அவர்'. தோளில் தொங்கிக் கொண்டிருந்த குஞ்சலங்கள் பதித்த பை இந்திக்காரர் போல அடையாளப்படுத்தியது. நாளைக்கு போலீஸ் என்கொயரியில் கணினி முன்னால் அடையாளம் சொல்ல அமரும்போது சொல்வதற்கு வாகாக, அவரது அங்கலட்சணங்களை நோட்டம் விட்டேன். முப்பதைத் தாண்டிக் கொண்டிருக்கும் அவர், சாவகாசமாக அமர்ந்து தனது 'கனமான' பையைக் கழட்டி மேஜையின் மீது வைத்துவிட்டு ஆசுவாசமானார். 'பேக் கே பீச்சே கியா ஹை?'
அவரோடு பேசப்பேச என்னுள்ளிருந்த பரபரப்பு பறந்தோடிவிட்டது. பதட்டப்படாதீர்கள், கிச்சிலிபாளையம் வட்டார 'காக்கும் கடவுள் கோச்சடையான்' ரசிகர்மன்ற நிர்வாகிகளே, விஷயம் இதுதான்;
அப்பா - அம்மா பழனிமலையில் மொட்டையடித்து வைத்த பெயர் பழனிச்சாமி; கோலிவுட்டுக்காக நியூமராலஜி பார்த்து தானே சூட்டிக்கொண்ட பெயர் ஆதவன் பழனிசுவாமி. கடந்த 10 வருடங்களில் தமிழின் புகழ்பெற்ற இயக்குநர் செம்மல்களிடமெல்லாம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர். தற்போது ஒரு படம் இயக்கும் தணியாத தாகத்தில் அலைந்து கொண்டிருப்பவர்.
அந்தந்த காலகட்டத்திற்கேற்ப ஒவ்வொரு முறையும் ஒரு புதிய திரைக்கதையோடு கோலிவுட்டின் இண்டு இடுக்குகளிலெல்லாம் நுழைந்தவர். ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் ஒரு கதை;
"விக்ரம், வாசனையை நுகரமுடியாத வினோதமான நோய்கொண்டவராக இருக்கிறார். அமலாபால் தனக்குள் வைத்திருக்கும் இருவாட்சிப்பூவின் அற்புதமான நறுமணத்தை அவருக்கு நுகரக் கொடுத்து அந்த நோயை எப்படிப் போக்குகிறார் என்பது ஒரு கதை. சூரியாவுக்கு, ஒரு விபத்தில் தலையில் அடிபட்டு, உருவங்கள், காட்சிகள், எழுத்துக்கள் எல்லாமே இடவலமாகத் தெரிகின்றன. அவருக்காகவே ஸ்பெஷலாகத் தயாரிக்கப்பட்ட கண்ணாடியைப் போட்டுக்கொண்டு இருக்கிறார். கிளைமாக்ஸில் கொகெய்ன் கடத்தும் பிரகாஷ்ராஜ், ஜோதிகாவைக் கடத்துகிறார். ஜோதிகாவை மீட்கப்போகும்போது சூரியாவின் விசேஷமான கண்ணாடி உடைந்து போக, அவர் எப்படி மீட்கிறார் என்பது இன்னொரு கதை. தன்னைவிட வயது அதிகமான பெண்ணைத்தான் காதலிக்க வேண்டும் என்ற கொள்கையுடைய சிம்புவுக்கு ஒரு கட்டத்தில்...."
"சரி, ஆதவன் - இப்போ என்ன விசேஷம்?"
இப்படி ஒழுங்காய் கோலிவுட்டின் விதிகள் பிரகாரம் போய்க்கொண்டிருந்த ஆதவனின் வாழ்க்கையில் நுழைந்தார் நவீன தமிழ் இலக்கியவாதியான சேசோபா (சேரன் சோழன் பாண்டியன்).
ஆதவனுக்கு உலக இலக்கியத்தைக் கரைத்துக் குடிக்க வைத்தார். இருவரும் சோறு தண்ணியில்லாமல் உலக சினிமாவிலிருந்து, பின்நவீனத்துவம் வரை பிரித்து மேய்ந்தார்கள். சேசோபாவின் தொடர்ந்த வாதப் பிரதிவாதங்களில் ஆதவன் மெல்ல மெல்ல ஒரு பின்நவீனத்துவப் பார்வை கொண்ட தமிழ் சினிமாக்காரராக மாற்றம் பெற்றார்.
தமிழின் முதல் பின்நவீனத்துவ சினிமா எடுப்பதென்ற முடிவில் தயாரிப்பாளரைத் தேட ஆரம்பித்தார் ஆதவன்.
தமிழின் முதல் பின்நவீனத்துவ சினிமாக்காரராக தன்னை உருவகப்படுத்தினார்.
"நான், தமிழின் முதல் பின்நவீனத்துவ சினிமாக்காரர் சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பாதேவர்தான்" என்றேன். ஆதவன் வியப்புடன் என்னைப் பார்த்தார்.
அவரது முதல் படமான தாய்க்குப்பின் தாரத்திலிருந்து, புகழ்பெற்ற எம்.ஜி.ஆர். போன்ற படிமங்களை உடைத்து மிகச் சாதாரணமான, ஆடுமாடுகளை புகழேணியில் ஏற்றும் படிமங்களாக மாற்றுவதில் கில்லாடி அவர் என்றேன். புகழின் உச்சியிலிருந்த எம்.ஜி.ஆரை 'வேட்டைக்காரன்', 'நல்லநேரம்', போன்ற படங்களில் கொஞ்சம் கொஞ்சமாகத் துணைநடிகராக மாற்றியிருக்கும் தொழில்நுட்பத்தை விளக்கினேன். 'ஆட்டுக்கார அலமேலு'வின் ஆட்டையும், வெள்ளிக்கிழமை விரத'த்தில் பாம்பையும் கதாநாயகர்களாக நடிக்கவைத்து அந்தத் தத்துவத்தை ஒரு வெற்றிச் சூத்திரமாக மாற்றியவர் தேவர் என்றும், படத்தில் நடித்த ஆட்டை திரையரங்குகளில் தோன்றவைத்து சூப்பர்ஸ்டார்களின் புகழை வஞ்சப்புகழ்ச்சியாக மாற்றியவர் என்றும் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.
"அதுமட்டுமல்ல, நெம்பர், 2 ம் நீங்கள் ஆகமுடியாது. அவர் பேராசிரியர் அல்ல; இராமநாரயணன்."
"தேவரின் தத்துவ நீட்சியாக ஜனரஞ்சக சினிமா தளத்தில் இந்தப் புகழ்மிக்க நாயக பிம்பங்களை மிகப் பெரிய நையாண்டி செய்தவர். குரங்கு, பூனை, எலி என்று அங்கதத்தின் பன்முகத்தன்மை கொண்ட நோக்கில் சமூகத்தை எள்ளி நகையாடியவர். சமூகத்தில் கட்டமைத்திருக்கும் புகழைக் கேள்விக்குள்ளாக்கியவர்" என்றேன்.
இவர்கள் எல்லோருமே ஒரு தீர்க்கமான தத்துவப் பின்புலத்தில் இருந்து வந்தவர்கள் அல்லரென்றும், எம்.ஜி.ஆர். கால்சீட் கொடுக்காமல் சொதப்பியதால்தான் தேவர் இந்த முடிவை எடுத்தாரென்றும், இதற்குப் பின்னணியில் இருப்பது வெறும் ஜனரஞ்சகச் சந்தைதானென்றும் விவாதித்தார் ஆதவன்.
நீங்கள் சொல்லும் இருவரும் இந்தப் படிமத்தை ஒரு சிந்தனாபூர்வமாகவோ, தத்துவமாகவோ உடைக்கவில்லையென்றும், தி.பாகவதர், பி.யூ.சின்னப்பா காலத்திலிருந்து எம்.ஜி.ஆர். வழியாக இன்றைய ரஜினிகாந்த் வரை கட்டமைக்கப்படும் நாயக பிம்பத்தை உடைத்தால்தான் இன்றைக்கு அந்தப் படிமம் இப்படிப் பூதாகரமாக வளர்ந்திருக்காது என்று ஆவேசமாகப் பேசினார்.
"ரஜினிகாந்த் என்பது ஒரு சாகாவரம் பெற்ற படிமம். இதைப் பற்றி உலக சினிமாவின் தலைசிறந்த கோட்பாட்டாளர் கில்லஸ் டெல்யூஸ் என்ன சொல்கிறாரென்றால்..."
"சரி, ஆதவன், இப்போ என்ன விசேஷம்?"
இந்தப் பின்நவீனத்துவ எழவெல்லாம் தெரியாத, சிலகோடிகளைக் கொட்டிப் படம் எடுக்கும் தயாரிப்பாளருக்கு பல கோடிகளை லாபம் அள்ளித்தர வேண்டும். அதேசமயத்தில் தனது கொள்கைக்கேற்றபடியும் இருக்க வேண்டும். இந்த பாழாய்ப்போன பத்திரிகைகளும் பாராட்டித் தொலைக்க வேண்டும். உலகப்பட ரேஞ்சுக்கு எடுத்திருக்கான்யா என்று கோலிவுட் வாயைப் பிளக்க வேண்டும். கடவுளே! இப்படி எத்தனை 'வேண்டும்கள்'... ஆனால், இத்தனை மாங்காய்களையும் ஒரே கல்லில் அடித்துவிடும் வாய்ப்பு நம் பழனிசுவாமிக்கு நேர்ந்ததுதான் பேரதிர்ஷ்டம்!
அவரது தயாரிப்பாளர் தேடும் யாத்திரை ஈரோட்டில் கொண்டுவந்து சேர்த்தது. வளமான ஈரோட்டு மண்ணும் மனிதர்களும் அவருக்குள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தினார்கள். ஆனால், ஈரோட்டுக்காரர்கள் அரசியலில் முதலீடு செய்வதில்தான் ஆர்வம் காட்டினார்கள். அடுத்தப்படியாக ஈமுக் கோழியில்.
ஒவ்வொரு முறையும் ஈரோட்டில் புதிய புதிய தொழில்கள் வடிவெடுக்கும். ஆண்மை விருத்திக்குப் பயன்படுவதாகச் சொல்லப்படும் மண்ணுளிப் பாம்பு வியாபாரம், நாகரத்தினக் கல் வியாபாரம், விண்வெளி ஆராய்ச்சிக்குப் பயன்படுவதாகச் சொல்லப்படும் இரிடியம் வியாபாரம், சித்த ஆயுர்வேத மருந்துகளுக்கான அரியவகையான அகர்மரம் வளர்ப்பது, டேட்டா எண்ட்ரி. என்று யாராலும் கற்பனை செய்யமுடியாத கணித சூத்திரத்தில் பலகோடிகள் புழங்கும் வியாபாரங்கள். டேட்டா எண்ட்ரியை இப்படியெல்லாம் அபாயகரமான தொழில்துறையாக உருவாக்கலாம் என்ற சூத்திரத்தை ஒபாமாவிடம் சொல்லியிருந்தால் இந்தியர்களைக் கண்டு நடுங்கியிருப்பார்.
இந்தமுறை ஈரோட்டைப் பிடித்திருப்பது ஈ.மு.
ஈரோட்டின் ஈமுக் கோழி தொழில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்ததை நொடியில் புரிந்துகொண்டார் ஆதவன்.
இதன் தாய்மண்ணான ஆஸ்திரேலியாவில்கூட இத்தொழில் இவ்வளவு முதலீட்டுடன் நடக்காது. பலகோடிகளையெல்லாம் தாண்டிய மில்லியன் டிரில்லியன் பணம் இத்தொழிலில் புழங்குகிறது. ஒரு ஈமுக் குஞ்சின் விலை 10,000. அதை ஆறுமாதம் வளர்த்துக் கொடுத்தால் ஒருலட்சம். அதைப் பார்த்துக் கொள்வதற்கு மாதாமதம் 10,000. பத்துக் குஞ்சுகளுக்கு மேல் வாங்கினால், 'விலையில்லாப் பொருளாக' இரண்டு பவுன் தங்கக்காசு. என்றெல்லாம் பல திட்டங்கள் மூலம் பணத்தை அள்ளிக் கொண்டிருந்தார்கள் ஈமு அதிபர்கள். நடிகை நமீதா, ஈமு வாடிக்கையாளர்களைப் பார்த்து 'மச்சான்ஸ்' என்று விளிப்பதும், பாக்கியராஜ் தனது வெள்ளந்தியான பேச்சில் ஈமு புகழ் பாடுவதும்... இவ்வளவு முதலீட்டில் உற்பத்தி செய்யும் இக்கோழிகளை என்ன செய்கிறார்கள்? இதன் நிழலாக நடக்கும் சீட்டாட்டத்தின் சூத்திரம் என்ன என்பதெல்லாம் ஈமு அதிபர்களுக்கும் பத்திரிகைகளுக்குமே வெளிச்சம். இன்றைய தேதியில் வெளிவந்து கொண்டிருக்கும் அனைத்துப் பத்திரிகைகளிலும் ஈமுவின் ஈஸ்ட்மென்கலர் விளம்பரம்தான்.
இதைப்பற்றி விரிவாக ஒரு சர்வே எடுத்துப் பார்த்து, ஈமு மார்க்கெட்லயே மிகமிகமிக... பெரிய தொழிலதிபராக, ஈமு மாஃபியாவாகத் திகழும் ஒருவரை மிகுந்த சிரமங்களுக்கிடையில் கண்டுபிடித்தார் ஆதவன். அதிபரின் உபயோகத்திற்கான கார்கள் மட்டும் 37 இருப்பதாகவும் அதில் பி.எம்.டபிள்யூ. 3 என்றும் தற்போது சத்தியமங்கலத்தில் ஒரு ஹெலிபேடு (வானூர்தித்தளம்?) கட்டியிருப்பதாகவும் கசிந்த செய்திகளின் பரவசத்துடன் அதிபரை அணுகினார். ஐந்து நிமிடம் ஒதுக்கிய ஈமு அதிபர், ஆதவனைப் பிடித்துப் போகவே, மேலும் 25 நிமிடங்கள் ஒதுக்கி தயாரிப்பாளராக இருக்க சம்மதம் தெரிவித்தார்.
"படத்திற்கு பட்ஜெட் எவ்வளவு?" என்றார் ஈமு அதிபர்.
"ஒன்றே முக்கால் கோடி..." என்றார் ஆதவன்.
"100 கோடி ரூபாயில் படம் எடுக்கலாம்; ஆனால், இரண்டு நிபந்தனைகள்" என்றார் ஈமு.
கண்ணா லட்டு தின்ன ஆசையா....
"நிபந்தனை 1. ஈமு கோழியைச் சுற்றித்தான் கதை இருக்க வேண்டும்.
நிபந்தனை 2. ரஜினிகாந்த் நடிக்க வேண்டும்."
கண்ணா இன்னொரு லட்டு தின்ன ஆசையா...
மகிழ்ச்சிப் பெருக்கில் திக்குமுக்காடிப் போனார் ஆதவன்.
இந்த நிபந்தனைகள் கோடம்பாக்க சினிமாக்காரர்களுக்கு வேண்டுமானால் பெரும் சிக்கலாக இருக்கலாம். ஆனால், பின்நவீனத்துவச் சிந்தனை கொண்ட ஆதவன் பழனிசுவாமிக்கு லட்டு.
தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'நான் ஈ' என்னும் படம் அவரது மனக்கண்ணில் நிழலாடியது. 'இந்தப் படத்திற்குள் பின்நவீனத்துவச் சிந்தனை கொண்ட ஒருபார்வை இருக்கிறதென்று' சேசோபா அவரிடம் கதைத்த வார்த்தைகள் தலைக்குள் கிர்ரென்று ஏறின.
ரஜினிகாந்த் என்னும் சாகாவரம் பெற்ற படிமத்தைக் கொன்றே தீரவேண்டும்.
அடுத்த 55ஆவது நிமிடத்தில் 'சோமு என்னும் ஈமு' கதையோடு அவரைப் பார்த்துக் கதைசொல்லி அட்வான்ஸும் வாங்கிவிட்டார்.
"ஸாரி... தப்பா எடுத்துக்காதீங்க, கதையை உங்ககிட்டே சொல்ல முடியாது. ரஜினிசார் கதை... லீக்காய்டும்..." என்றார் ஆதவன்.
"அதனாலென்ன... பரவால்லே..." என்று தப்பித்தேன்.
"நான் உங்ககிட்டே வந்திருப்பதன் முக்கியக் காரணம்... நீங்க எனக்கொரு உதவி செய்யணும்..." என்றார்.
"சொல்லுங்கள் ஆதவன்..." என்றேன் கலவரத்துடன்.
ரஜினிகாந்த் எனக்குத் தெரிந்தவர் என்று யாரோ சொல்லிவிட்டார்கள். "அவரிடம் ஒரு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கித் தரவேண்டும்" என்றார்.
எனக்கு ரஜினிகாந்தைத் தெரியும் ஆனால், அவருக்கு என்னைத் தெரியாது என்ற ஜோக் ரொம்பப் பழசாகி விட்டதால், "எழுத்தாளர் ஒருவருக்கு ரஜினிசார் நன்கு தெரிந்தவர். அவரிடம் நீங்கள் முயற்சி செய்யுங்கள்' என்று அவரின் முகவரியைக் கொடுத்து அனுப்பி வைத்தேன்.
தமிழ் சினிமாவிற்கு விமோசனமே இல்லையா?
***
நன்றி: குமுதம் (29.8.2012) இதழ்.
தட்டச்சு & வடிவம்: தாஜ் | satajdeen@gmail.com
***
நன்றி : கௌதம சித்தார்த்தன் | E-Mail : unnatham@gmail.com
***
கௌதம சித்தார்த்தனின் 'தம்பி'யை இங்கே பார்க்கலாம்.
தமிழ் சினிமா குறித்த நல்ல படபிடிப்பு நல்ல விறு விருப்பு .
ReplyDeleteஒரு விருவிருப்பான தொடர்கதையின் முதல் அத்தியாயம் படித்தது போல் இருக்கிறது.
ReplyDelete