நண்பர் கார்த்திக் ஃபேஸ்புக்கில் எழுதிய அஞ்சலி...
இன்று காலை (22 Jan 2022) கொஞ்சம் சோம்பேறித்தனமாகவே விடிந்தது . விடுமுறை முடிந்தும் முடியாதது போன்ற ஒரு மனநிலை . ஜென் மாஸ்டர் திக் நியத் ஹான் சமாதி அடைந்த செய்தி அறிந்ததும் மனம் முற்றிலும் வேறோரு உணர்வு நிலைக்கு சென்று விட்டது. இதை வருத்தம் என்று சொல்வதற்கில்லை மீண்டும் அவரை அணுக்கமாக நினைவுகூறும் தருணமாகவே இதை உணர்ந்தேன்
திக் நியத் ஹான் , உலகம் முழுதும் பரவலாக அறியப்பட்ட ஜென் மாஸ்டர் , வியட்நாமில் பிறந்தவர் . இவரை நீங்கள் நேரடியாக கேள்விப்பட்டிருக்காவிட்டாலும் இவரின் எளிமையும் தெளிவும் பொதிந்த வாசகங்களை எங்காவது பார்க்கவோ கேட்கவோ செய்திருக்கலாம் . ஆன்மீக தளத்தில் மட்டும் தன்னை சுருக்கிக்கொள்ளாமல் சமூகத்தில் அமைதி போக்கிற்கான தேவையை முன்வைத்து தொடர்ந்து பேசி வந்தவர்.
1926 ல் பிறந்த திக் நியத் ஹான் , பதினாறு வயதிலேயே பெளத்த மடலாயம் ஒன்றில் சேர்ந்து துறவறம் பெற்றுக்கொள்கிறார் .அவரின் பெயரில் உள்ள திக் (Thich) என்பது புத்தரின் குலத்தில் வந்தவர் என்பதை சுட்டும் வார்த்தை . 1960 களில் வியட்நாம் போர் உச்சத்தில் இருந்த சமயம் இவரின் போருக்கு எதிரான கருத்துக்களினால் வியட்நாம் அரசு இவரை மீண்டும் வியட்நாமுக்குள் நுழைய அனுமதி மறுத்தது ( அப்போது பிரான்சில் இருந்தார் ) .
அதன் பிறகான தனது பெரும்பாலான நாட்களை அமெரிக்காவிலும் பிரான்சிலும் கழித்தார் . அமெரிக்க கருப்பின தலைவரான மார்ட்டின் லூதத் கிங் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர். வியட்நாம் யுத்தத்திற்கு எதிராக அமெரிக்காவில் எழுந்த எதிர்ப்பின் ஆரம்பப் புள்ளி திக் நியத் ஹான் அவர்களில் இருந்து ஆரம்பித்தது எனலாம் , அதை மார்ட்டின் லூதர் கிங் மேலும் முன்னெடுத்துச் சென்றார். திக் நியத் ஹான் இறுதிவரை தொடர்ந்து எல்லா விதமான போர்களுக்கும் , வன்முறைக்கும் எதிராகவே பேசிவந்திருக்கிறார்
திக் நியத் ஹான் அவர்கள் எனக்கு முதலில் அவரின் புகைப்படத்தின் மூலமே அறிமுகமானார் . சில வருடங்களுக்கு என் மனைவி பணி நிமித்தமாக கலந்துகொண்டிருந்த கான்பிரன்ஸ் ஒன்றில் மனநலம் குறித்த ஒரு விவாத்தத்தில் 'இக்கணத்தில் இருத்தல்' (minufulness ) என்ற அணுகுமுறையை விளக்கும் விதமாக திக் நியத் ஹான் அவர்களின் சிந்தனைகளும் புத்தகங்களும் முன் வைத்து விவாதிக்கப்பட்டிருக்கிறது.
கருத்தரங்கில் இருந்து அவர் வாங்கி வந்த புத்தகத்தில் இருந்த திக் நியத் ஹான் அவர்களின் புகைப்படத்தை பார்த்ததுமே எனக்கு இயல்பாகவே ஒரு ஈர்ப்பு உருவாகியது .அவர் முகத்தின் தெரிந்தது ஒரு புன்னகை என்று கூட சொல்லிவிட முடியாது .அதை ஒரு நிறைவு என்று வேண்டுமானால் சொல்லலாம், மேலதிகமாக வேறெதுவும் தேவையிருக்காத ஒரு பூரணம்.
அதன் பின் அவரை வாசிக்க ஆரம்பித்த போது அவரின் இருப்புக்கும் அவர் சொல்வதற்கும் இடையே வித்தியாசமே இல்லை என்பதை உணர முடிந்தது . பின்னர் அவரின் உரைகளையும் கேட்டேன் - அந்த ஒருமை உணர்வு முழுமை அடைந்தது . சில விஷயங்களை அறிதல்களாக ஆலோசனைகளாக, வழிகாட்டல்களாக ஒருவர் முன்வைப்பது வேறு ஆனால் அந்த தன்மையில் இருந்து கொண்டே அதை ஒருவர் அதைச் சொல்வது என்பது நம்மை அந்தரங்கமாகத் தொடுவது.
மகிழ்ச்சி என்பது எதிலிருந்தோ ,எதன் மூலமாகவோ , எதை அடைந்தோ பெறும் ஒன்றல்ல . மகிழ்ச்சி அல்லது ஆனந்தத்தில் (joy ) இருந்து தான் அனைத்தும் துவங்குகிறது . Mindfulness practice எனப்படும் 'இக்கணத்தில் இருத்தல்' என்பது எதனோடும் பிணைத்துக்கொள்ளாத , எதையும் நிபந்தனையாக்கிக்கொள்ளாத "அடிப்படையான மகிழ்ந்திருக்கும் நிலையை" அடைவதே என்கிறார் .
மனதும் உடம்பும் இக்கணத்தில் இங்கு இருக்கும்போது, அதை நாம் கவனிக்கும் போது , நமக்குள் நாம் குவியும் போது, வாழ்வெனும் மலர் இயல்பாகவே நமக்குள் மலர ஆரம்பிக்கிறது . உயிர்த்திருத்தல் என்பதே ஒரு அற்புதமாகிறது . மகிழ்ந்திருக்க அல்லது ஆனந்தித்திருக்க தேவையான அத்தனை சாத்தியங்களும் அந்தந்த கணத்திலேயே பொதிந்துள்ளது என்பதை அறியும் தருணமது .
இக்கணம் என்பது நிறையும் போது , நிறைந்து ததும்பும்போது , மனதுக்கு எங்கோ , எதுவோ என்று பரபரக்கும் தேவை எழுவதில்லை. கடந்த காலம் குறித்த ஏக்கங்களோ, எதிர்காலம் குறித்த பயங்களோ , நிகழ்காலம் குறித்த போதாமைகளோ நம்முள் படர்ந்து நம்மை திணற அடிப்பதில்லை . இப்படி குவிந்த ஒரு புள்ளியில் உருவாகும் தெளிவு ஞானத்தின் முதற்படி ஆகிறது .
இந்த தெளிவு உருவாக்கும் மனவிரிவு கொண்டே நாம் மற்றவர்களையும் புரிந்துகொள்ளவும் அன்பு செய்யவும் முடியும் என்கிறார் . அதிலிருந்தே பிறர் மீதான முற்றான compassion பிறக்கும் என்கிறார் . நம்மை நாம் அன்பு செய்யாமல் பிறர் மீது அன்பு செலுத்த முடியாது .அந்த புள்ளியிலேயே நீ அல்லது நான் என்றும் பிரிவும் மறைய ஆரம்பிக்கிறது. இந்த இடத்தில் நான் வள்ளலாரையும் நினைவுறுத்திக்கொண்டேன் .இந்த மனநிலை தான் 'வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்' என்று சொல்லும் இல்லையா ?
திக் நியத் ஹான் அடிக்கடி சொல்லும் வார்த்தை ஒன்று உண்டு 'Bring your mind home, to your body ' என்று .இதுவே ஆரம்பம் , இதுவே பயிற்சி , இங்கிருந்தே அனைத்தும் ஆரம்பிக்கிறது.
ஞானியர் மரணம் என்றுமே வருத்தம் அளிப்பதல்ல . அவர்களுடனான நம் தொடர்பு என்றைக்குமானது (eternal ). அவர்கள் உணர்த்தும் விஷயமும் என்றைக்குமானவை. மரணம் என்ற சுழற்சியை வெகு இயல்பாக கடந்து செல்லும் வாழ்க்கையை அவர்கள் முன்னரே அமைத்துக்கொண்டு விடுகிறார்கள் . இந்த தருணம் நாம் அவர்களையும் , அவர்கள் அளித்துச்சென்ற ஞானத்தையும் நெருங்கி உணர இன்னுமொரு வாய்ப்பு.
*
நன்றி : கார்த்திக்