Thursday, May 13, 2021

அம்மா விட்டுச்சென்ற திசை - சென்ஷி சிறுகதை

அம்மா விட்டுச்சென்ற திசை
- சென்ஷி

ஆம் ! சிறுவயதிலிருந்து என்னை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிற முதலிரண்டு அச்சங்களைப் போலன்றி மூன்றாம் அச்சம் பற்றிய துக்கம் என்னுள் எழவில்லை. 
 
என் ஒவ்வொரு அச்சங்களும் என் உடலின் பாகத்தில் ஒவ்வொரு அறையாகத் திறந்திருக்குமென நம்பினேன். அவ்வப்போதைய நிகழ் சூழலுக்கேற்ப அது தன்னுடைய வாசலை சிறிதாகவோ பெரிதாகவோ ஆக்கிக்கொள்கின்றன. அதில் என்னை முழுமையாக மூழ்கடித்தும் விடுகின்றன. குறிப்பாக தெரிந்தவர்களிடம், அக்கம்பக்கத்தினரிடம், நண்பர்களிடம் கடன் கேட்டு கிடைக்காத துயர், செலவைப் பற்றி எண்ணும் போது கிடைக்கின்ற அச்சத்தில் மூழ்கிவிட்டபின், அச்சம் என் இடது கை சுண்டுவிரலில் ஆரம்பிக்கிறது. எதிர்பார்த்த பணம் கிடைக்காத எல்லா நிமிடங்களிலும் சுண்டுவிரலில் யாரோ தன்னுடைய விரலைக் கோர்த்துப்பிடித்துக்கொண்டு பதற்றத்துடன் என்னுடன் அலைவது போலிருக்கும். அதிக வாகன போக்குவரத்து நெரிசல் கொண்ட சாலையில் பத்திரமாய் சாலை கடத்தலைப் போன்ற - பதைபதைப்பு என்னுடன் ஓடிவரும். நேரமாக ஆக சுண்டுவிரல் பாரம் தாங்காது நோக ஆரம்பிக்கும். தனியே ஒடிந்து விழாவிட்டால் நானே அறுத்து எறிந்துவிடலாமா என்ற யோசனை வருமளவு என்னை அது பலமாய் ஆக்கிரமித்திருக்கும். யாரேனும் ஆதுரமாய் என்னைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு உனக்கு நான் இருக்கிறேன் என்று சொல்ல மாட்டார்களா என்று ஏங்குமளவுக்கு அழுகை வரும். எத்தனை வயதானால் என்ன! எனக்கென்று ஒரு தோள் கிடைத்துவிட்டால் அழுதுதீர்த்துவிட மாட்டேனா நான். 
 
ஆம் ! எனக்கான தோளை நான் இன்னமும் தேடிக் கொண்டுதான் இருக்கிறேன். சுமை இடமாற்றத்திற்காக அல்ல. என்னுடைய துயரங்களை நிச்சயம் அத்தோளிடம் பகிர்ந்து கொள்ள மாட்டேன். என்னுடைய கைகளை அந்த தோளில் மேல் இறுக்கப்பிடித்துக் கொள்ள வேண்டும். அதனுடைய அசட்டு சந்தோசங்களை நிச்சயம் என்னுடையதாக ஆக்கிக்கொள்வேன். சப்தமாக சிரித்து வைப்பேன். தொலைதூரத்தில் கண் பார்வைக்கு சிறிதாய் தெரிகின்ற முழுமையாய் அகப்பட்டுக்கொள்கின்ற அந்த மலையின் அளவு பாசம் கிடைத்தால் போதும் என்ற எண்ணம் ஓடுகிறது. 
 
தோளின் மீதமறும் அச்சம் பற்றி உனக்குத் தெரியுமா ? 
 
அது நம்மை பைத்தியம் பிடிக்க வைத்துவிடும். இரண்டு தோள்களிலும் தன்னிரு கால்களை போட்டுக்கொண்டு தலைபிடித்து அமரும் குழந்தை போல பொறுப்புகளை சுமந்து செல்லும் அச்சம். கண்ணுக்கு தெரியாத விரிசல் கொண்ட தண்ணீர்ப்பானையைச் சுற்றி ஈரம் விரவுதல் போல உங்களைச் சுற்றி நசநசப்பாக்கும். இது என்னுடைய வேலையே இல்லை என்று உங்களை அலறல் கொள்ள வைக்கும். முதுகை வேகமாக சுவரில் மோதிக்கொண்டு ஆசுவாசப்படுத்திக்கொள்ள தோன்றும். வெளிச்சத்திலிருந்து நகர்ந்து இருட்டிற்கு ஓடிப்போவது மாத்திரமே தற்காலிக தப்பித்தலை தரும். உங்கள் முதுகின் மேலூறும் கண்கள் இருட்டை ஊடுருவக்கூடாதென்பது முக்கியம். ஆனால் எப்பொழுதும் பொறுப்பின் மீதான அச்சமே நம்மை இயக்குகிறது. வெறுமனே இயக்குதல் மாத்திரம் அல்ல சமயங்கள் வேட்டைநாயின் துரத்தலைப் போல துரத்தியடிக்கும். பரபரப்பு. வேகம். ஓட்டம். நின்று நிதானித்து பொறுப்பை எண்ணிக்கொள்ள முடியாது. அது நம் வேலையாக இருக்கலாம் குடும்பமாக இருக்கலாம் அல்லது வெளியே சொல்லத் தயங்கும் உங்களது பரிபூர்ண காதலாக இருக்கலாம். காதலைக்கூட நாமே வெளியேற்றி சொல்லக்கூடிய அளவிலாய் அமைவது அல்லது பொறுப்பைக் குறித்து யோசிக்கும்போது! 
 
தலையை பற்றிப்பிடிக்கும் அச்சம் - மிகவும் பிடித்தமானது. ஏனெனில் இதை நானே எனக்காக உண்டாக்கிக்கொள்வது. தேவையில்லாத பிரச்சினைகளில் மூக்கை நுழைத்து, தனது கருத்தை பேசுவது போன்றதல்ல அது. சற்று விந்தையானது. உயிர் போய்விடவும் கூடுமென்பதில் உங்களுக்கு விந்தைத்தன்மை கிடைக்குமெனில், நீங்களும் முயற்சிக்கலாம். முழுக்க முழுக்க என்னைத் தண்டித்துக்கொள்வது போன்றது என்று இதனை நேரிட்டு கண்டு திடுக்கிட்ட சிலர் கூறினாலும், இவ்வச்சம் குறித்த விவரணைகளை நீங்கள் அறிய வேண்டும். ஏனெனில் என்னால் இவ்வச்சத்தை எளிதில் கையாளமுடியும். இவ்வச்சத்திலிருந்து தப்பித்துவிட முடியும். 
 
 தளும்ப தளும்ப தண்ணீர் நிரம்பப்பட்ட வாயகன்ற தொட்டியில் தலையை கவிழ்த்து மூச்சு முட்டும்வரை உங்களால் கண்களைத் திறந்து வைத்துக்கொண்டு தொட்டியின் அடியாழத்தைக் காண இயலுமா. வெளியிலிருந்து தொட்டியின் மீது படர்ந்து உள் நுழையும் வெளிச்சம் சிறிது சிறிதாக குறைந்து இருள் மாத்திரமே உங்கள் கண்களுக்கு தெரியும் வரை காத்திருக்க வேண்டும். மூச்சை இறுக்கப்பிடித்துக்கொண்டிருக்கும்போது உங்கள் கால்கள் தரையைத் தொட்டிருந்தாலும், தலையின் மீது அந்த அச்சம் ஏறிக்கொள்ளும். ஆனால் இந்த அனுபவத்தை உயரம் அதிகமான கட்டிடங்களின் விளிம்புகளில் நின்று முயற்சிக்கக்கூடாது. ஏனெனில் ஒருமுறை கழுத்தை பின்னால் மடித்து அன்னாந்து முகம் தூக்கி உச்சியைக் கண்ணால் அளந்தறிய முயலா ஓர் கட்டிடத்தின் உச்சியிலே ஏறி நின்று காற்றின் வேகத்தை அனுசரித்தவாறு விளிம்பில் பத்திரமாக நின்றபடி எட்டிப் பார்த்ததற்கு தற்கொலை முயற்சி என்று கூறி தனிமைச்சிறையில் அடைக்க முயற்சித்தனர். அங்கு வழி தெரியாது கண்ணாடியின் வழி தெரியும் பாதையை முட்டிக் கொத்தும் பறவையாக நானிருப்பதை உணர முடிந்தது. 
 
அசாத்தியமான சுத்தம் குறித்த பயமும் எனக்குண்டு. உடலை எப்படி சுத்தப்படுத்தினாலும் எப்படியேனும் ஒரு கறை கண்ணில் பட்டுவிடுகிறது. வெளியில் இருக்கும் அழுக்கு என்னை துரத்துவது போலவும் அது தன்னை எச்சரிப்பது போலவும் காணுதல் உண்டு. உடல் முழுக்க பாலை மணலை மாத்திரம் சூடிக்கொண்டு அலைதலில் இறையச்சம் விட்டுப்போய்விடுன்பதால் சொர்க்கம் புக வழியில்லாமலிருப்பதால் சொர்க்க நினைவுகளிலிருந்து என்னை துண்டித்துக்கொண்டு வாழ்கிறேன். இதில் கிடைத்த நன்மைகளாவன.. 
 
தொலைந்து போதல் குறித்த அச்சத்திலிருந்து என்னால் எளிதில் விடுபட்டு விட முடிகிறது. ஜனக்கூட்டம் மிகுந்த பொருட்காட்சியில் தொலைந்து போன குழந்தையாய் உருவகித்துக்கொள்ளமுடியும். பிரயாணத்தில் ஏற்படப்போகும் விபத்தில் தனியாய் காயமின்றி தப்பித்து திசை தெரியாது அலைதலை போன்றது அது. நான் வெறும் உடல் மாத்திரமல்ல என்பதை எனக்கு அழுத்தமாய் நிரூபிக்க கிடைத்த ஒரு யாத்திரை தேவைப்படுதலை போன்றது அது. 
 
வேண்டி விரும்பி மணற்சேறுகளிலும், விலங்கினங்களின் கழிவுகள் மீதும், காய்ந்து உதிர்ந்த மரப்பட்டைகளின் மீதும் ஒரு பூச்சியாய் என்னை அலையச் செய்கிறது. 
 
 மனம் பிசைதலைப்பற்றிய அச்சம் 
 
எனக்கு மீண்டும் மீண்டும் இருதய ஒலி பலமாகக் கேட்டுக் கொண்டிருக்கும். மூச்சு விடுவதற்கு இத்தனை சிரமப்படுத்திக்கொள்ளவேண்டுமா என்றும் தோன்றும். பெரும்பாலும் ஆதுரமானதற்கு ஆறுதலுக்கானதற்காகவே இது தேவைப்படும். யாருக்கான பிரார்த்தனைகள் முக்கியமானவை என்ற குழப்பத்தில் ஆழ்த்தும் இந்த பிசைதல். எல்லோருக்கும் நல்லவளாக இருத்தலென்பது கடினமென்பதை பிரார்த்தனையில் தோற்கடிக்கச்செய்யும். எதிரிகளின் குற்றம் குறைகள் நீங்க பிரார்த்தித்து புது மனிதியாய் திரும்புதல் வரம். எல்லா சிரமங்களும் நம் கண்பார்வைக்கு எட்டாத வரை மாத்திரமே. கண்களைப் பொத்திக்கொள்வது போல என்றேனும் இதயத்தை துடிக்காது வைக்க உடலின் உள் நுழையும் ஒரு கரம் இருந்தால் எத்தனை நலம் பயக்குமென யோசிப்பேன். 
 
சப்தம் பற்றிய அச்சம் 
 
 வெளியின் அதிர்வு சப்தம். அச்சுகள் அற்ற சுவடுகள் பதியாத ஓட்டம். குறி வைத்து எய்துவிட்டு, தைத்து வாதை உணர்ந்து பின் திரும்பும் கலை. எப்போதும் என்னைச் சுற்றிலும் சப்தங்கள் புதைவதில்லை. 
 
என் மௌனத்தை கலைக்க அவன் செய்த மாயம் என்ற எண்ணத்தில்தான் இவ்வளவு நேரமும் படுக்கையிலிருந்து நகராமல் இருந்தேன். ஆனால் நேரமாக ஆக சப்தத்தொனி மாறியிருந்தது. அவனிடம் எனக்கு காதலை விட அதிகமாய் பயம் இருந்தது. நேராக எழுந்து அவனருகே சென்றேன். அந்த கண்ணாடியில் எனது உருவம் தவிர்த்து அவன் நின்றிருந்தான். அவனையும் தவிர்த்து ஏதேனும் பிம்பம் கிடைக்குமானால் அது வெளிச்சத்தினுடையதாக இருந்தது. எத்தனை முயன்றும் அவன் மேல் விழுகின்ற வெளிச்சத்தை என்னால் தவிர்க்க இயலவில்லை. மெதுவாய் மிக மெதுவாய் வெயில் அந்த கண்ணாடியில் தன் நாவை சுழற்றி என் பிம்பத்தினை இரையாக்கிக் கொண்டிருந்தது. அதிக வெளிச்சத்தில் நிழல் பிம்பம் தேடுதல் என்றும் சாத்தியமற்றது என்பதை நான் தெரிந்துகொண்டேன். 
 
சவரத்திற்கான அலங்கார முயற்சிகளில் கவனமாக ஈடுபடுதலில் வெளிச்சம் தொந்தரவு செய்யவில்லை போலும். கண்ணாடியிலிருந்து வெயில் மெல்ல தரையில் படிந்து ஈரமாக்கிக்கொண்டிருந்தது. ஆனால் வெயிலின் சத்தமும் சரசரப்பும் என்னை நோக்கியே இருந்தன. 
 
வார்த்தைகள் மீதுள்ள அச்சம் 
 
கோபம் குறைந்த பின்பு அவனைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். எங்கு திரும்பினாலும் என் கண்களுக்கு அவன் தெரிய ஆரம்பித்தான். என் கண்ணில் கிடைக்கும் அச்சங்களை முழுமையாகக் கண்டுணரத் துடிக்கும் ஒரு வேட்டைமிருகத்தின் சுபாவம் அவனிடமிருந்தது. அவனிடம் பேசுவதற்காக மௌனத்தின் துணை கொண்டு வார்த்தைகளை சேர்க்க ஆரம்பித்திருந்தேன். மனங்கொள்ளாத அளவு வார்த்தைகள் சேர்ந்திருந்தது. மனத்தில் நிலைகொள்ளாத வார்த்தைகள் மேலும் மேலும் உடல் முழுவதும் சூழத்தொடங்கின. என்னைச்சுற்றிலும் சொல்லாத வார்த்தைகள் சூழ்ந்து கொண்டன. சாப்பிடும்போது, தும்மும்போது, முகம் கழுவும்போது வார்த்தைகள் நழுவுதல் கண்டு வேதனையுற்று செயல் மறந்திருந்தேன். அதி தீவிர மௌனம் கொண்ட என் அறை முழுவதும் வார்த்தைகள் நிறைந்து விட்டன. மூடப்பட்ட அறைக்கதவை வார்த்தைகள் முட்டி மோதி திறக்க முயற்சித்தன. 
 
சுயம்புகளான வார்த்தைகள் மொத்தமும் ஒன்றையொன்று உடைத்து இறக்கும் தருவாயிலும் என்னால் கண்கலங்கி பார்க்க முடிந்ததேயொழிய சொல்லியிராத எனது வார்த்தைகளை காப்பாற்ற முடியவில்லை. உள்ளடங்கிய பழைய வார்த்தைகள் வெளியேறிய வார்த்தைகளுடன் கொண்ட காதலில் புதிய வார்த்தைகள் பிறந்திருந்தது. எனது ஓசைகள் ஆகாதவரை மௌனத்தை சுற்றி சுழலும் வார்த்தைகள் பிரியத்தின் சொல்மயக்கம் கொள்ளவைக்கக்கூடியவை. 
 
இந்த அச்சங்கள் உடலிலிருந்து உற்பத்தியானவையே. இன்றைய நாளில் அத்தனை அச்சங்களையும் வெளியில் கழற்றிவிட்டு, நாளைய பொழுதைப் பற்றி யோசித்து படுக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டுதான் படுக்கையில் கிடப்பது. ஆனால் விடாப்பிடியாக எப்படியேனும் நாளைய பொழுதின் நினைவு உறக்கத்தை கெடுத்துவிடுகிறது. 
 
தனக்கு விருப்பமான அச்சங்களற்ற கனவைக் காணுதல் என்பது இத்தனை கடினமாய் இருக்குமென்று நான் நம்பவில்லை. அச்சங்கள் அகற்றுதல் எளிதானதா என்ன!? 
 
இதுவும் உங்களைக் குறித்து எனக்கு அடிக்கடி வரும் கனவுதான் . இருள் சூழ்ந்த இருபுறமும் மரங்கள் அடர்த்தியாய்க்கொண்டிருந்த நீண்ட மண் சாலையில் உங்களுடன் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று என் கையைவிட்டு விட்டு நீங்கள் தொலைந்து போயிருந்தீர்கள் . பரிதவித்துக்கொண்டிருந்தேன். எந்த திசை சென்று மறைந்தீர்கள் என்று அறிய முடியாததொரு நிலை. உங்கள் கண்களில் இட்டிருந்த மையை எடுத்து சூனியத்தில் அப்பிவிட்டது போல அடர்த்தியானதொரு இருட்டில் எங்கு சென்று தேட. நிராகரித்துவிட்டு சென்ற அழுத்தம் இதயத்தை பிசைந்து கொண்டிருந்தது. ஆனால் நீங்கள் தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கும்போது எந்த திசையை முகம் பார்த்திருந்தது என்று என்னால் சரியாக கணிக்க முடியவில்லை. உடைக்கப்பட்ட அறையின் உள் நுழைந்த காற்றிற்கு ஏற்ப நாணலாய் நீங்கள் உங்களை கயிறுக்கு ஒப்புக்கொடுத்து சுற்றிக்கொண்டிருந்தீர்கள். கண்களை மூடியிருந்தீர்கள். அதனால் ஓரமாய் நின்று அழுதுகொண்டிருந்த என்னை நீங்கள் கண்டிருக்க முடியாது. தன் வாழ்வு பற்றிய அச்சத்திடமிருந்து தப்பிக்க நீங்கள் தைரியத்தைக் கைக்கொண்டதன் பலன். 
 
 இறப்பதற்கு முதல் நாள், அம்மா என்னைத் தனியே விட்டுச் சென்ற திசையிலிருந்து ஒரு சொல் கிடைத்திருந்தது. ’காத்திரு’- என்பதாக அது இருந்தது. 
 
உடல்விட்டுப் போன எனது மூன்றாம் அச்சம் தரையிலிருந்து வெறும் இரண்டடி தூரத்தில் தொங்கிக் கொண்டிருந்தது.

*

நன்றி: சென்ஷி