Saturday, December 19, 2020

அவரவர் தலையெழுத்து - அசோகமித்திரன்

அசோகமித்திரனின் ‘அழிவற்றது’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து இந்த ’கர்ணபரம்பரைக் கதை’யைப் பதிவிடுகிறேன். காலச்சுவடு பதிப்பகத்தாருக்கு நன்றி. 

*

 அவரவர் தலையெழுத்து

அந்த குரு ஒரு மகத்தான மனிதரும்கூட. அவருடைய குடும்ப வாழ்க்கை ஊருக்கு வெளியே ஒரு சிறு குடிசையில், அவருக்கு ஒரு சிஷ்யன், மிகுந்த கூர்மையும் ஆற்றலும் உடையவன். உணவருந் தும் நேரம் தவிர அவன் குடிசைக்கு வெளியே பயிற்சியில் ஈடுபட்டிருப்பான்.

குருவின் குடிசையில் ஒரு குழந்தையின் குரல். அவருடைய மனைவி ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.

நள்ளிரவு. ஒரு கிழவர் குடிசைக் கதவைத் திறக்க முயலுவதைச் சிஷ்யன் பார்த்துவிட்டான்.

கிழவர் பதறிப்போய்விட்டார். “நான் மனிதர் கண்ணிலேயே பட மாட்டேனே? உன் கண்ணுக்குத் தெரிந்துவிட்டேனே?" என்று அதிர்ந்துபோய் விட்டார்.

சிஷ்யன் அவர் கையைப் பிடித்தான். “நீங்கள் யார்?”
“நான் தான் பிரம்மா.”
"அதுதான் குழந்தை பிறந்தாகிவிட்டதே?”
"இன்னும் ஒரு பணி பாக்கியிருக்கிறது.”
“என்ன ?”
"இதெல்லாம் நான் சொல்லக் கூடாது."
சிஷ்யன் கை இறுகியது. "பிறந்த குழந்தையின் தலையெழுத்தை எழுத வேண்டும்.”
"என்ன எழுதப்போகிறீர்கள்?"
"எனக்கே தெரியாது. என் எழுதுகோலைத் தலையில் வைப்பேன். அது எழுதிவிடும். என் கையை விடு. நேரமாகிறது."
"எனக்கொரு வாக்குறுதி வேண்டும். அப்போதுதான் கையை விடுவேன்."
"என்ன ?"
"தலையெழுத்து என்ன எழுதப்படுகிறதோ அதை என்னிடம் சொல்ல வேண்டும்."
“அதெல்லாம் மனிதருக்குத் தெரியக் கூடாத ரகசியம்.”
சிஷ்யன் கை இன்னும் சிறிது இறுகியது.
"சரி, சொல்கிறேன். ஆனால் நீ ஒரு வாக்குறுதி தர வேண்டும்.”
"என்ன ?"
"எக்காரணம் கொண்டும் அந்த ரகசியத்தை யாரிடமும் சொல்லக் கூடாது."
"சரி.” சிஷ்யன் அந்தக் கிழவரின் கையை விட்டான். கிழவர் உள்ளே சென்றார். ஒரு நிமிடத்திற்குள் திரும்பி வந்துவிட்டார். அவர் முகம் வாடியிருந்தது.
"என்ன?" என்று சிஷ்யன் கேட்டான்.
"என்ன சொல்வது? இவ்வளவு உத்தமமான மனிதருக்கு இப்படி யொரு பெண்ணா?"
"ஏன்?"
"ஒழுக்கம் கெட்ட வாழ்க்கையைத்தான் அவள் வாழ வேண்டி - வரும்."

சிறிது காலத்தில் அந்தக் குடிசையில் இன்னொரு குழந்தையோசையும் கேட்டது. இம்முறையும் சிஷ்யன் கிழவர் கையைப் பிடித்துவிட்டான். அவருடைய எழுதுகோலைப் பிடுங்கிக் கொண்டுவிட்டான்.

“இதெல்லாம் மனிதருக்குச் சொல்லக் கூடியதில்லையப்பா. என்னை விட்டுவிடு."
"என் கண்ணில் நீங்கள் தென்பட்டுவிட்டீர்கள். ஆதலால் இந்தக் குழந்தையின் தலையெழுத்தையும் சொல்லியாக வேண்டும்."

கிழவர் தன் தலையில் அடித்துக்கொண்டு குடிசைக்குள் சென்றார். திரும்பி வரும்போது அவர் முகத்தில் வேதனை தெரிந்தது.
"இந்த மகாத்மாவுக்கு இப்படியொரு மகனா?”
"ஏன்?"
"இவன் பிணம் காப்பவனாக வாழ்வான்."

சிஷ்யன் குருவைப் பிரியும் காலம் வந்துவிட்டது. அவனுக்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு. பெரிய அறிவாளியாகப் பெரியவர்கள் கொண்டாடினார்கள். அவனுக்கு மணமாயிற்று. குழந்தை பிறந்தது. ஆனால் அவன் கண்ணில் பிரம்மா மீண்டும் சிக்கவில்லை. பிரம்மா அவன் சிந்தனையிலிருந்து மறைந்துவிட்டார்.

ஒரு நாள் அவன் குளித்துவிட்டுத் தலையைக் கோதிவிட்டுக் கொண்ட போது ஒரு முடி உதிர்ந்தது. அது நரை மயிர். அவனுக்குப் பிரம்மா நினைவு வந்தது. அவன் குருவைத் தேடிப் போனான். அவர் குடிசையிருந்த அடையாளமே கிடைக்கவில்லை. அருகி லிருந்த கிராமத்தில் விசாரித்துப் பார்த்தான். ஒரு நாள் யாரோ குருவின் இரு குழந்தைகளையும் தூக்கிச் சென்றுவிட்டார்கள். அடுத்த தினம் குரு, அவருடைய மனைவி இருவரும் உயிரை விட்டார்கள்.

சிஷ்யனின் தந்தையார் காசியில் கடைசி நாட்களைக் கழிக்க வேண்டும் என்றார். சிஷ்யன் அவரைக் காசியில் கொண்டுபோய் விட்டான். கங்கைக் கரையில் அரிச்சந்திர கட்டத்தில் குளிக்கச் சென்றான். ஒரு படி சறுக்கிக் கங்கையில் விழுந்தபோது ஓர் இளைஞன் சிஷ்யனைக் காப்பாற்றினான். இளைஞனை சிஷ்யன் அடையாளம் கண்டுகொண்டுவிட்டான். "என்ன செய்கிறாய்?” என்று கேட்டான்.

"இந்த மயானத்தின் குத்தகைதாரருக்கு நான் அடிமை. பிணங்கள் வெந்துகொண்டிருக்கும்போது ஒரு காலையோ கையையோ பிய்த்துக் கங்கையில் போடுவது என் வேலை."
"உனக்கு ஒரு அக்கா உண்டல்லவா?"
"அவளைப் பற்றிப் பேச வேண்டாம்."
"ஏன்?"
"இந்தக் காசியிலேயே ஒழுக்கங்கெட்டவள் அவள்தான்."

சிஷ்யன் குருவின் மகளைத் தேடிப் போனான். ஊருக்கு வெளியில் ஒரு குடிசையில் இருந்தாள். அவள் குழந்தையாக இருந்தபோது மிகவும் அழகாக இருந்த அவள் முகம் இப்போது வயதை மீறிய கிழடு தட்டியிருந்தது. அவள் சிஷ்யனை அடையாளம் கண்டுகொண்டுவிட்டாள்,

"அழாதே. உன் தலையெழுத்தை மாற்றிவிடுகிறேன்."
"எனக்குத் தலையெழுத்து என்று ஏதாவது பாக்கியிருக்கிறதா?"
"நூறு முத்துகளைக் கொடுத்தால்தான் உன்னைத் தீண்டலாம் என்று அறிவித்துவிடு."
"எனக்கு நான்கு செப்புக் காசுகள் தர மாட்டார்கள்...."
"நான் சொன்னதைச் செய்யம்மா, வந்த நூறு முத்துகளை அடுத்த பகலுக்குள் தானதர்மத்துக்குப் பயன்படுத்திவிடு. ஒரு காசு கூடச் சேர்த்து வைக்காதே."
"இதெல்லாம் நடக்கும் காரியமா?" "முயற்சி செய்வோம். ஒரு காசைக்கூட மீதம் வைத்துக்கொள்ளாதே. உன் தர்மம் உன்னைக் கடைத்தேற்றிவிடும்.”

யார் வந்தாலும் "நூறு முத்து” என்றாள். இரவு முடியப் போகும்போது ஒருவர் தலையை மூடிக்கொண்டு வந்தார். அவ ளுக்கு அன்று வருமானமே கிடையாது. ஆனால் பல்லைக் கடித்துக் கொண்டு, "நூறு முத்து” என்றாள். அந்த மனிதர் நூறு முத்துகள் கொடுத்துவிட்டுப் போனார்!

மறுநாள் பகலுக்குள் அவள் நூறு முத்துகளையும் பணமாக்கிக் காசியிலுள்ள ஏழை விதவைகளைத் தேடிப் போய் அவ்வளவு பணத்தையும் விநியோகம் செய்துவிட்டாள்.

அன்று மாலையும் யாரும் அவளை நாடவில்லை. நூறு முத்துகளுக்கு எங்கு போவது? அவள் தொழிலுக்கு அன்று விடுமுறை என்று நினைத்தாள். ஆனால் பொழுது விடியப்போகும் நேரத்தில் அந்த முக்காடு மனிதர் நூறு முத்துகள் கொண்டுவந்து கொடுத்தார். அன்று அவள் அனாதையாக விடப்பட்ட கிழவர்களுக்கு அவள் பணத்தையெல்லாம் விநியோகம் செய்தாள். இப்படித் தினமும் அவள் ஆதரவற்றவர்களைத் தேடித் தேடிப்போய் தர்மம் செய்தாள். அவளுடைய தலையெழுத்து மாறிப்போய் விடாமல் தினம் அந்த முக்காடு மனிதர் அவளிடம் நூறு முத்துகள் கொண்டுவந்து கொடுத்துவிட்டுப் போனார்.
***

சிஷ்யன் தென்னிந்தியாவுக்குப் போக வேண்டியிருந்தது. பாண்டிய நாட்டில் அமோக வரவேற்பு. அப்போது முத்துக்குளிப்பு நடந்து கொண்டிருந்தது. அவன் அன்று இரவு கடற்கரையில் தங்க வேண்டியிருந்தது. நள்ளிரவில் விழித்துக்கொண்டான். கடலோசை ஓர் அபூர்வ இசையை எழுப்பிக்கொண்டிருந்தது. ஒரு மனித உருவம் கடலிலிருந்து தரைக்கு ஓடி வருவதைச் சிஷ்யன் பார்த்தான். அவன் நெருங்குவதற்குள் ஒரு குழியில் எதையோ போட்டுவிட்டு அந்த உருவம் மீண்டும் கடலுக்கு ஓடியது. சிஷ்யன் அந்தக் குழியருகே சென்றான். மீண்டும் அந்த உருவம் கடலிலிருந்து ஓடி வந்தது. சிஷ்யனைப் பார்த்தவுடன், "ஐயோ, இங்கேயும் நீ வந்துவிட்டாயா?" என்றது. பிரம்மா!

"இங்கே யார் தலையெழுத்தை எழுதிக்கொண்டிருக்கிறீர்கள்?"
"உன் குரு குமாரியிடம் எதையோ சொல்லிவைத்துப் போய் விட்டாய், அவள் தினமும் நூறு முத்து கொடுத்தால்தான் அவளைத் தொட முடியும் என்று சொல்லிவிட்டாள். அவளுடைய தானதர்மங்களால் இன்று காசியில் அவள் தான் பெரிய புண்ணியசாலி."

சிஷ்யனுக்குக் கண்களில் கண்ணீர் துளித்தது.

"சரி, சரி, வழியை விடு, நான் முத்துக் குளிக்கப் போக வேண்டும்.”
“நீங்கள் எதற்கு ..."
"யார் அவளுக்குத் தினமும் நூறு முத்துத் தருவான்? அன்றிலிருந்து அவள் தலையெழுத்துப்படி நடக்க வேண்டும் என்று நான்தான் தினம் நூறு முத்து கொண்டுபோகிறேன்.” கிழவர் அவசரம் அவசரமாகக் கடலுக்குள் ஓடினார்.

"இதுதான் இவர் தலையெழுத்து போலிருக்கிறது” என்று சிஷ்யன் சொல்லிக்கொண்டான்.
***
(உலகத்தமிழ் பொங்கல் மலர் , ஜனவரி 2005)
*