என் சீதேவி வாப்பா நாகூரில் 'மௌத்'தானபோது அவர்களின் பிரியத்திற்குரிய மச்சான் யூசுப், மலேசியாவிலிருந்து எனக்கு எழுதிய ஆறுதல் கடிதம் இது. மாமாவின் தமிழார்வம் பிரசித்தம். ‘அருளகம்’ என்று தன் ஏம்பல் வீட்டிற்குப் பெயரிட்டு ஆலிம்ஷாக்களால் அவதிப்பட்டார்கள். இப்போது ஊரார் மாற்றியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். ஏம்பல் போய் எப்படியும் முப்பது வருடங்கள் இருக்கும். சிங்கப்பூர் / மலேசியா 1996-ல் சென்றபோது மாமாவை சந்தித்திருக்கிறேன். உயிரை உருக்கும் அதே பாசம்! இப்போது மாமாவும் இல்லை. கொரோனா காலம் முடிந்து ஊர் சென்றால் குடும்பத்தாரைப் பார்க்க முயற்சிக்க வேண்டும், இன்ஷா அல்லாஹ்! - AB
----------
கோலாலம்பூர்
2/6/95
அஸ்ஸலாமு அலைக்கும்
அறிவார்ந்த என் அன்பு மாப்பிள்ளை
ஆபிதீன் அவர்களுக்கு
அன்புடன் மாமா எழுதுவது.
முத்துக் கோத்த கையெழுத்தில் முகவரி
எழுதியிருந்த தங்கள் முந்திய கடிதமும்
பிந்திய கடிதமும் கிடைக்கத்தான் செய்தன!
நான் படித்துக் கொண்டிருந்த போதே
பக்கத்தில் இருந்து கவனித்த நண்பர்கள்
கடிதத்தில் அழகிலும் கையெழுத்தின்
கவர்ச்சியிலும் மயங்கி
அதை அப்படியே அப்பிக்கொண்டு
சென்றவர்கள்
இறுதிவரை திருப்பித் தரவே இல்லை.
அட்ரஸையும் கிழித்துவிட்டு அவதிப்பட்டுக்
கொண்டிருந்தேன்.
இதற்கிடையில்
வாப்பா வந்துவிடுவார்கள் ; முகவரி
வாங்கிவிடலாம் என்று காத்திருந்தேன்.
முகவரி தரவேண்டியவர்கள் மூச்சை
அடக்கிக் கொண்டார்கள் என்ற தகவல்
கிடைத்தவுடன் மூச்சையாகிவிட்டேன்!
என்ன கொடுமை... என்ன கொடுமை...
போன வருஷத்தில் சில வாரங்கள்
என்னுடன் தங்கியிருந்துவிட்டு
மருமகள் .. கல்யாண விஷயமாகத்தான்
சடுதியில் புறப்பட்டார்கள்.
திரும்பி வரும் நேரந்தான் என்று தெம்பாக
இருந்து நேரத்தில்
திருவிளக்கு அணைந்துவிட்ட
சேதி வந்துவிட்டதே மாப்பிள்ளை; என்ன
செய்வேன்?
அறுபது வயசு ஒரு வயசா?
அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த அகால முடிவு?
சோகத்தில் முடிந்துவிட்ட மகள் .. கல்யாணம்
அவர்களைச் சுட்டெரித்து விட்டிருக்கலாம்
என்று என் தங்கை எழுதியிருந்தது!
நான் நம்பவில்லை.
எதையும் தாங்கும் இதயம் கொண்ட
என் மச்சான்
எதிர்பாராது நடந்த விஷயங்களுக்கு
எல்லாம் ஏங்கிப்போய் - இடிந்துபோய்
விடுவார்களா?
நான் நம்ப மாட்டேன்!
ஏம்பலும் அறந்தாங்கியும் ஒக்கூரும்
நாகூரும் எட்டிப்போய் இருக்கின்றன
உறவல்ல!
மாமாங்க காலமாய் ஒட்டிப்போய்
இருக்கின்ற உறவுதான்!
அதை எந்தச் சக்தியும் இடித்துத்
தகர்ந்துவிட முடியாது!
ஆபிதீனும் ஒரு ஹாரூன் ரஷீதும்*
இருக்கும் வரை
அந்தச் சொந்தம்
தொடர்கதையாகிக் கொண்டே வரும்.
மருமகள் ... வாழ்க்கை
மறுபடி சிறக்கவும் - சிரிக்கவும் -
செழிக்கவும் -
என் மனம் நிறைந்த வாழ்த்துகளை
மாலையாக்கிச் சூடுகிறேன்!
*‘காதருவி’ பாட்டியின் மானசீகமான
ஆசி தங்கள் குடும்பத்துக்கு
எப்போதும் உண்டு!
‘மடிந்து போன மாப்பிள்ளை’
என்று எழுதியிருந்தீர்கள்.
அதில் எனக்கு ஒப்புதல் இல்லை.
இடிந்து போன மாப்பிள்ளை
என்றால் ஏற்றுக் கொள்வேன்.
குத்துவிளக்கின் பெருமை
கும்மிருட்டில்தான் தெரியும்!
’மில்லியன்கள் புரளும்
இடத்தில் மிஸ்கீனாக’ வாழ்ந்தாலும்
அன்பு செய்வதற்கும்
ஆறுதல் கூறுவதற்கும்
அரவணைத்துப் போவதற்கும்
அது என்ன இடைஞ்சல்
செய்துவிடும்?
குடும்பத்தின் மூத்த பிள்ளை
நீங்கள்!
அந்தத் தகுதியை மட்டும்
தற்காத்துக் கொள்ளும்படி
தாழ்மையோடு
கேட்டுக்கொள்கிறேன்!
உங்களை நம்பித்தான் எல்லோரும் -
அம்மா உட்பட!
*மம்மசன் வம்சத்து வாரிசு
என்பதை நிரூபிக்க
நிச்சயம் முயற்சி செய்வீர்கள்
என்று மனப்பூர்வமாய்
நம்புகிறேன்.
வஸ்ஸலாம்.
அன்புடன் மாமா
K. M. யூசுப்
2/6/96
------------
ஹாரூன் ரஷீத் - சின்ன மாமாவின் பெயர்
‘காதருவி’ பாட்டி - யூசுப்மாமாவின் தாயார்
மம்மசன் - வாப்பாவின் செல்லப்பெயர்