Tuesday, August 11, 2020

ஆன்மீகப் பேரனுபவங்கள் - அமீர் அப்பாஸ்

ஹனீபாக்காவின் முகநூலில் இருந்து நன்றியுடன்...

*

ஆன்மீகப் பேரனுபவங்கள் -  அமீர் அப்பாஸ்

பெரும்பான்மை
வாதத்தின் பெயரால்
நீங்கள் ஒரு படுகொலை செய்யும் போது
அது படுகொலை ஆவதில்லை


நேர்ச்சை செய்து
விடப்பட்ட ஆடு
வெட்டப்படும் போது
அடையும் குதூகலத்திற்கு
ஒப்பானதாக மாறிவிடுகிறது


பெரும்பான்மை
வாதத்தின் பெயரால்
நீங்கள் ஒரு துரோகம்
செய்யும் போது
அது துரோகமாக மாறுவதில்லை


வரலாற்றின்
மகத்தான நீதியாக மாற்றப்பட்டு விடுகிறது
 

பெரும்பான்மை
வாதத்தின் பெயரால்
நீங்கள் ஒருவரின் வீட்டை அபகரித்தால்
 

அந்த வீட்டின் மூலப்பத்திரம்
உங்கள் பெயரிலேயே
உருவாகி விடுகிறது
 

பெரும்பான்மை
வாதத்தின் பெயரால்
ஒருவரின் ஆலயத்தை
நீங்கள் ஆக்ரமித்தால்
 

அந்த தவறு கூட
ஆன்மீகப் பேரனுபவமாக
மாறி விடுகிறது
 

அதிகாரத்தின்
கால்களில் மிதிபட்டு
ஆயிரம் ஆயிரம்
உயிர்களைப் பறித்த
செங்கல் சமாதி
 

பெரும்பான்மை வாதத்தால் ஆசீர்வதிக்கப்பட்டு
புண்ணியங்கள் போற்றும் திருக்கோயிலாகி விடுகிறது
 

பஞ்ச பூதங்களின்
பேராற்றலில் இருந்து புரிந்துகொள்ளப் பட்ட
பகவான்
 

இப்போது பஞ்சமா பாதகங்களின் வழியாக
பூஜை செய்யப்படுகிறார்
 

எல்லோரும்
மது அருந்தும்
ஒரு திருநாளில்
 

அதற்கு
தாய்ப்பால் என்று
பெயர்சூட்டி விடுவது
தர்மமாகி விடுகிறது

*

நன்றி : அமீர் அப்பாஸ்