Sunday, November 17, 2019

மனநிலையும் வினைவிளைவும்

மௌலவி எஸ். அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்களின் ‘ஞானக்கோட்டையின் தலைவாசல்’ என்ற நூலில் (மூலம் : பக்தர்களின் பாதை – இமாம் கஸ்ஸாலி) உள்ள ஒரு பகுதியைப் பகிர்கிறேன். வல்ல நாயன் நமக்கு தெளிவைத் தருவானாக, ஆமீன்! - AB

 
மனநிலையும் வினைவிளைவும்

'எங்கு திரும்பினாலும் அங்கு காணப்படுகிற முன்னேற்றங்கள் அத்தனைக்கும் மனிதனின் சலியாத உழைப்பே மூலக் காரணமாக அமைந்திருக்கிறது' என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

நான் கேட்கிறேன் : இரவு பகல் என்று பாராது சலியாமல் உழைக்கிறவர்களில் ஒரு சாரார் வாழ்க்கையில் ஏன் பின்தங்கி நிற்கிறார்கள் என்ற வினா உங்கள் எண்ணத்தில் தோன்ற வில்லையா? முயற்சிக்குப் பின்னால்தான் - உழைப்புக்குப் பின்னால்தான் முன்னேற்றம் ஏற்படுகிறது என்பது உண்மை. நீங்கள் இந்தக் கருத்தைத்தான் வலியுறுத்துகிறீர்கள். ஆனால் முன்னேற்றத்துக்கு உழைப்பு ஒன்றைத் தவிர்த்து வேறு எந்த காரணமும் கிடையாது என்ற முடிவுக்கு நீங்கள் வந்து நிற்கக் காரணம் என்ன?

பஸ்ராவைச் சேர்ந்த அறிஞர் ஒருவர் தம்மீது வீசப்பட்ட வினா ஒன்றுக்கு கொடுத்த விளக்கம் இங்கு நம் சிந்தனைக் குரியது என்று எண்ணுகிறேன்.

"நான் நாற்பது ஆண்டுகளாக முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். இரவு நேரத்தில்கூட நான் பாடுபடுகிறேன். இருந்தும் தொடர்ந்தாற்போல் மூன்று நாட்கள் சாப்பிடும் அளவுகூட என்னிடம் வசதி இல்லை ...?" என்று ஒருவன் கேட்டபோது அந்த அறிஞர் வியப்போடு ஏறிட்டுப் பார்த்தார்.

சுருக்கம் கொண்ட முகமும் குழிவிழுந்த கண்களும் காய்ந்துபோன உதடுகளுமாக நின்று கொண்டிருந்தான் அந்த மனிதன்.

“உன் வயது என்ன?"

"ஐம்பதுக்கு மேலாகிவிட்டது. பத்து - பன்னிரண்டு வயதிலேயே நான் உழைக்க ஆரம்பித்துவிட்டேன். அப்போது அன்பு காட்டுவதற்கு யாருமே இல்லை."

அறிஞர் கேட்டார் : "ஏறக்குறைய 40 ஆண்டுகள் நீ கேட்ட பிரார்த்தனையை இன்னும் இறைவன் நிறைவேற்றித் தரவில்லை ! அப்படித்தானே?"

அந்த மனிதனுக்குப் புரியவில்லை. “பிரார்த்தனை செய்யவில்லை. எனக்குப் போதிய அளவு மார்க்க ஞானம் கிடையாது. நான் எப்போதும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்..."

அறிஞர் மெதுவாகச் சிரித்துக் கொண்டார்.

"நான் சொல்வதைக் கவனித்துக் கேள். நான் சொல்லும் செய்தி உன் வாழ்க்கையில் வரவேற்கத் தகுந்த திருப்பத்தைக் கொடுக்கக் கூடும்” என்று அமைதியோடு ஆரம்பித்த அறிஞர் தொடர்ந்தார்.

உன் நிலையை நினைத்துப் பார்க்கும்போது அடுப்பை எரியவிடாமல் ரொட்டி தயாரிக்க முற்படுகிற மனிதனின் நிலைதான் என் மனத்தில் தோன்றுகிறது. இப்படி நடந்து கொள்ளும் மனிதனை நீ பார்க்க நேரிட்டால் அவன் எடுக்கிற முயற்சியில் ஒரு போதும் பயன் கிடையாது என்று உனக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அதே போன்ற வேறொரு தவற்றைக் காலமெல்லாம் நீ செய்து கொண்டிருக்கிறாய் என்று நான் சொன்னால், என் வார்த்தையில் உனக்கு நம்பிக்கை பிறக்காது. ஏனெனில் மனிதர்களில் பெரும்பாலோருக்குத் தமது குறையை உணர்ந்து கொள்ளும் சக்தி கிடையாது.

உன்னோடு சேர்ந்து வாழ்கிறவர்களைக் கவனித்துப் பார். அவர்களில் சிலர் முயன்று வேலை செய்கிறார்கள்; தமக்குத் தேவையானதைப் பெற்றுக் கொள்கிறார்கள். வேறு சிலர் உன்னைப் போலவே தமக்கும் தம் தேவைகளுக்கும் நடுவில் நீண்ட இடைவெளியைப் பார்க்கிறார்கள்.

முயற்சியைப் பொறுத்தவரை - உழைப்பைப் பொறுத்த மட்டில் இந்த இரு சாராரும் ஒரே நிலைமையில்தான் இருக்கிறார்கள். எனினும் விளைவைப் பொறுத்தவரையில் ஒரு சாராருக்கு மறுசாரார் முற்றிலும் வேறுபட்ட நிலைமையில் இருக்கிறார்கள். முதல் சாரார் செல்வத்தை அடிமைப்படுத்தி வைத்திருக்கிற அதே நேரத்தில் இரண்டாம் சாரார் வறுமையின் பிடியில் அடிமைப்பட்டுக் கண்ணீர் வடிக்கிறார்கள்.

இந்த வேறுபாடு முயற்சியில் கிடையாது என்று உனக்குத் தெரியும். ஏனெனில் இரு சாராரும் ஒரே வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் யோசித்துப் பார். வெளிச்செயலில் வேறுபாடு இல்லை என்றால் மனச்செயலில்தான் வேறுபாடு இருக்க வேண்டும். இந்த இரு சாராரின் மனநிலையைப் பார்க்கும் சக்தி உனக்கு இருந்தால், வெள்ளைக்கும் கறுப்புக்குமுள்ள வேறுபாடு அவர்களின் மனப் பண்புகளில் இருப்பதைக் காணலாம்.

"செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொறுத்தவை" என்று பெருமானார் கூறியிருக்கிறார்கள். 'செயல்கள்' எனும் வார்த்தையில் மனிதனின் முயற்சியும் உழைப்பும் அடங்குகின்றன. எனவே முதல் சாரார் முயற்சியால் முன்னேறுகிறார்கள் என்று சொல்வதைவிட எண்ணத்தினால் உயர்கிறார்கள் என்று கூறுவது மிகப் பொருத்தமானது. உண்மையும் அதுதான்!

வெற்றியடைகிற முதல் சாரார் வலிமை வாய்ந்த எண்ணம் படைத்தவர்கள் - அல்லது பயிற்சியின் மூலம் தம் எண்ணத்தை வலிமைப்படுத்திக் கொண்டவர்கள். தமக்கு இதுதான் தேவை. என்று குழப்பமில்லாமல் தெளிவாகத் தெரிந்து கொண்ட அவர்கள், அதனை இறைவன் நிச்சயமாக நிறைவேற்றிக் கொடுப்பான் என்று உறுதியுடன் நம்புகிறவர்கள் - வேறு வார்த்தைகளில் சொல்வதானால், தவக்குல் என்பது ஒரு வகையில் பிரார்த்தனைதான். தமக்குத் தேவைப்பட்ட ஒன்றை அடைவதற்காக அவர்கள் 40 ஆண்டுகள் பிரார்த்தனை செய்ய வேண்டியதில்லை!

உண்மையில், எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைத் தேடித் தருவது அவர்களின் முயற்சியா அல்லது அவர்களின் உள்ளத்தில் நிலைத்து நிற்கிற 'தவக்குல்' என்ற பண்பா என்று நீயே யோசித்துப் பார்த்துக் கொள்.

தோல்வியடைகிற இரண்டாம் சாரார் முதல் சாராருக்கு எல்லா வகையிலும் மாறுபட்டவர்கள். அவர்களைப்பற்றி நான் கூறவேண்டியதில்லை.

உன்னிடமுள்ள குறைகள் அனைத்துக்கும் அவர்கள் உரிமையாளர்கள். ஏனெனில் மனநிலையைப் பொருத்தமட்டில் உனக்கும் அவர்களுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. -

பஸ்ராவைச் சேர்ந்த அந்த ஞானியின் விளக்கம் உங்கள் வினாவுக்கு விடை கொடுக்கும் என்பது என் நம்பிக்கை.

*
நன்றி : அஃப்சரா பதிப்பகம்

1 comment:

  1. மிக அருமை. எண்ணத்தின் தீர்க்கம் தான் எல்லாம்.

    ReplyDelete