Wednesday, May 15, 2019

மூலாதாரம் (சிறுகதை) - நீல. பத்மநாபன்

நீல பத்மனாபன் அவர்களின் 'இரண்டாவது முகம்' சிறுகதைத் தொகுப்பிலிருந்து,  நன்றியுடன்...

*
மூலாதாரம் (சிறுகதை)

ஆப்பரேஷன் தியேட்டருக்குள் அவனைக் கொண்டுவந்து உயர்ந்த ஒரு படுக்கையில் படுக்க வைக்கிறார்கள். பீறிட்டுக் கிளம்பும் ரத்தத்தின் செக்கச் சிவப்பு அந்த அறைக்குள் சூழ்ந்து நிற்பதாய் அவனுக்குத் தோன்றியது.

ஒருவன் வந்து அவனை எழுந்து உட்காரச் செய்கிறான். உட்கார்ந்திருக்கும்போது மிளகாயை அரைத்துத் தேய்த்ததைப் போன்ற அந்தப் பழைய வலி ஜிகுஜிகுவென்று மூலாதாரத்தில் இருந்து மேலே மேலே எழும்பி வரத் தொடங்கியது.

'இப்படியே குனிஞ்சு உட்கார்ந்துக்கணும்... வேறொண்ணுக்கும் இல்லை. இங்கே விலாப் புறத்தில் ஒரு சின்ன ஊசி போடணும்...' என்று கூறி மெல்லப் பிடித்து முன்னால் குனிய வைக்கிறான் ஒருவன்.

தன் சிரத்தையை விலாவில் ஒருமுகப்படுத்தி விட்டு முதுகெலும்பில், ஸ்தம்பிக்கச் செய்யும் ஊசி போடுவதற்கான தந்திரம்தான் அதுவென்று அவனுக்குத் தெரிந்தேதான் இருந்தது.

யாரோ பின்பக்கம் வந்து முதுகு, விலாப்புற சருமத்தில் எல்லாம் ஸ்பிரிட்டைத் தடவுவது புலனாகிறது. ஸ்பிரிட்டின் குளுமையை உணரும்போதே அவன் கவனம் முழுதும் குத்து விழப் போகும் முதுகுப் புறத்திலேயே லயித்து நிற்கிறது.

'அப்பா ...'

சுரீர் என்று கோணி தைக்கும் ஊசியைப்போன்ற பெரிய ஒரு ஊசியால் அவன் முதுகில் ஒரு குத்து...

மருந்து உள்ளே பாய்ந்து ஏறிக்கொண்டே இருக்கிறது...

திடீரென்று வலக் காலை யாரோ வெட்டி இழுப்பதைப் போன்ற ஒரு உணர்வு...

'ஐயோ...' என்று கத்தி காலை அவன் உயர்த்தியதும் முன்னால் நின்றவன் காலைப் பிடித்து யதாஸ்தானத்தில் வைத்துவிட்டு... அவனை மெல்லப் பின்னால் மல்லாந்து சாய்த்துப் படுக்க வைக்கிறான்.

கண்கள் கட்டப்பட்டும் அவனுக்கு நடப்பவைகளை உணரமுடிகிறது.

அவன் இடுப்பின் கீழ் ஒன்றுமே இல்லை என்ற ஸ்தம்பனாவஸ்தை... தலையும் இடுப்பும் மட்டுமே உள்ள ஒரு முண்டம்தான் தான் என்று அவனுக்குத் தோன்றியது. அவன் கால்கள் இரண்டையும் விரித்து மேலே தொங்க விடுகிறார்கள். பிருஷ்டத்தை முன்னால் இழுக்கிறார்கள்... அவன் வயிற்றின் மீது கத்தி, கத்திரி முதலிய ஆயுதங்கள் வைப்பதும் எடுப்பதுமாக துரித கதியில் வேலை நடக்கிறது.

டாக்டர் பூமிநாதன் தன் சிஷ்யர்களுக்கு இன்ஸ்ட்ர க்ஷன்ஸ் கொடுப்பதிலிருந்து ஆப்பரேஷன் செய்வது அவரில்லை என்று தெரிந்து கொண்டபோது, நேற்று அவர் வீட்டுக்குப்போய் கொடுத்த ஐம்பது ரூபாயை நினைத்துக் கொண்டான் அவன்.

ஒரு மணி நேரமோ, ஒரு யுகமோ ஆகியிருக்கலாம்... அவனை மீண்டும் ஸ்ட்ரெச்சர் வண்டியில் கிடத்தித் தள்ளிச்சென்று வார்டில் கொண்டுவந்து படுக்க வைக்கிறார்கள்...

களைப்பு...

தாகம்...

மின்சார விளக்கின் மயங்கிய வெளிச்சம்...

வேதனை இப்போது முழு மூச்சாய் தன் கை வரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டிருந்தது. கை நரம்பு வழி சொட்டுச் சொட்டாய் இறங்கி வரும் க்ளுக்கோஸ் நீர் ஸ்டேன்டில் தொங்கவிடப்பட்டிருந்த குப்பியில் க்ளூக்கோஸ் நீர் முக்காலும் தீர்ந்து விட்டிருப்பதாய் தெரிகிறது... உடம்பு இப்போது வெடவெடவென்று நடுநடுங்கத் தொடங்கிவிட்டது... பற்கள் குளிரில் சடசடவென்று அடித்துக்கொண்டன..

எலும்பை உறைய வைக்கும் ஒரே குளிர்... அஞ்சு ரூபாய் சம்பளத்தில் அவனைக் கவனிக்க நிற்கும் பையன் என்ன செய்வதென்று தெரியாமல் விழிக்கிறான்...

சாவகாசமாய் ஒரு நர்ஸும் (தவறு, சிஸ்டரும்) ஒரு ஆஸ்பத்திரி அட்டன்டரும் வருகிறார்கள்... காலியாகி விட்ட க்ளூக்கோஸ் பாட்டிலை ஸ்டான்டிலிருந்து எடுத்துவிட்டு, முழுசாய் க்ளூக்கோஸ் நீர் நிரம்பியிருந்த இன்னொரு பாட்டிலை அவர்கள் தொங்க விடும்போது 'ஐயோ... எனக்குக் குளிர் தாங்க முடியவில்லையே... டிரிப் போதும்...' என்றெல்லாம் பற்கள் தந்தியடிக்க, நாக்குழற அவன் சொல்லி முடித்தான்...

'அது நீ சொன்னால் போதுமா? பெரிய டாக்டர் சொல்லியிருக் கார். உனக்கு மூணு பாட்டில் டிரிப் தரணுமுண்ணு...!' என்று விட்டு அவர்கள் போய் விட்டார்கள்...

வெடவென்று அவன் விறையல் - நடுக்கம் கூடியது. இந்த நடுக்கத் தின் இடையிலும், 'அது நீ சொன்னால் போதுமா...? பெரிய டாக்டர் சொல்லியிருக்கார், மூணு பாட்டில் டிரிப் தராமல் உன்னை விடப் போவதில்லை...' என்று அவர்கள் சவால் விட்டதை நினைக்கும்போது அவனுக்குச் சிரிப்புப் பொத்துக்கொண்டு வந்தது... கொல்லபுரம் ஆஸ்பத்திரி சவரியை அவனுக்கு ஞாபகம் வந்தது! ஆமா... சவரி அனாதை பிரேதங்களை ஆஸ்பத்திரி பிரேத வண்டியில் போட்டு இழுத்துக்கொண்டுபோய் இடுகாட்டில் புதைப்பவன், ஆறு மாசம் முன்னால் 'செத்துப் போனான்... கொண்டு போய் புதை!' என்று டாக்டர் சொல்லிவிட்ட ஒரு அனாதைப் பிரேதத்தை, பிரேத வண்டியில் இழுத்துக்கொண்டு இடுகாட்டுக்கு வந்தான். வழக்கம்போல் மூக்கு முட்ட குடிச்ச சாராயத்தில் மிதந்துகொண்டிருந்தான் சவரி. உண்மையில் உயிர் போயிராத அந்த நோயாளி, அந்தப் பிரேத வண்டியின் அகோர நாற்றம் சகிக்க முடியாமல் எழுந்து உட்கார்ந்தான். அதைக் கவனிக்காமல் அவனைப் புதைக்க சவரி ஆயத்தமாவதைக் கண்டு, 'ஐயோ... என்னையா புதைக்கப் போறே... நான்தான் சாகவில் லையே...' என்று பயத்தால் அலறினானாம்... 'டேய் படுவா... ஆயிரம் ரூவா சம்பளம் வாங்கும் பெரிய டாக்டரே சொல்லியாச்சு, நீ செத்தாச்சுண்ணு... பிறகு நீயா சொல்லுவது சாகல்லேண்ணு...!' என்று விட்டு கர்மமே கண்ணாகி அவனைப் பிடித்திழுத்து குழிக்குள் போட்டுப் புதைத்தானாம் சவரி...

நேரம் எவ்வளவு சென்றதோ தெரியவில்லை ... விழிகளில் அனல் மழை பெய்வது போலிருந்தது... அடி வயிற்றில் சிறுநீர் கட்டி நிற்பது சகிக்க முடியாத உபாதையாக இருந்தது. கண்களைச் சிரமப்பட்டுத் திறந்து பையனிடம் சைகையால் ஒண்ணுக்குப் போக வேண்டுமென்று தெரிவித்தபோது, அவன் வார்டின் மூலையில் தூங்கி வழிந்து கொண்டிருந்த ஒரு நர்ஸிடம் போய் கேட்டுவிட்டு வந்து சொன்னான். 'இப்போ ஒண்ணுக்குப் போகக் கூடாதாம்... நாளைக்குத்தான் எடுப்பாங்களாம்...

' ஐயோ இது வேறா? அதுவரை இந்தப் பிராணாவஸ்தையை எப்படிச் சகித்துக்கொண்டிருப்பது!

உடம்பின் நடுக்கம் கூடிக்கொண்டிருந்தது. அந்த இரண்டாவது குப்பியிலிருந்த குளுக்கோஸ் நீரும் தீர்ந்துவிட்டது. மூன்றாவது குப்பியுடன் நர்ஸ் அங்கே வந்ததைக் கண்டதும் வெறி பிடித்தவனைப்போல், 'இது என் தேகம்... யாரு சொன்னாலும் சரி, இதில் இன்னும் டிரிப்பைக் குத்த நான் சம்மதிக்க மாட்டேன்...' என்று அவன் கத்தினான். அவன் கூச்சலைக்கேட்டு பக்கத்து பெட் நோயாளிகள் தலை உயர்த்திப் பார்த்தார்கள். அந்த வழி வந்த ஒரு டியூட்டி டாக்டர் ஓடி வந்தார் 'ஷிவரிங் இருக்குமானால் டிரிப் கொடுக்க வேண்டாம்...' என்று அவர் சொன்னபோது, நர்ஸ் என்னமோ முணுமுணுத்தவாறு குப்பியை எடுத்துக் கொண்டு நடந்தாள்.

ஸிரின்ஜும் மருந்துமாக ஒருவன் வந்தான். கையில் டெஸ்டோஸ் குத்தி வைத்து ‘அரிப்பு இருக்குதா?' என்று கேட்டான். உச்சியிலிருந்து உள்ளங்கால்வரை பலவித வலிகளாலும் உபாதைகளாலும் துடித்துக்கொண்டிருந்த அவனுக்கு அரிப்பைத் தெரிஞ்சுக்கவா முடிகிறது! 'என்னவோ எனக்குத் தெரியல்லே...' என்று அவன் முணுமுணுத்தான். அந்த ஆள் மருந்தை இன்ஜெக்ஷன் செய்தான். சற்று நேரத்தில் கை வீங்கிவிட்டது. தலையிலும் ஒரு மயக்கம்... பென்ஸிலின் அலர்ஜி. ரியாக்ஷன் முதலிய வார்த்தைகள் கனவில் கேட்பதைப்போல் அவனுக்குக் கேட்டது. பிறகு வேறேதோ மாற்று மருந்துகளைக் குத்தி வைப்பதையும் தெரிந்துகொள்ள முடிகிறது.

எப்படியோ அன்றைய இரவுப்பொழுது கழிந்தது. மூல துவாரத்திற்குள்ளே நுழைத்துத் தைக்கப்பட்டிருந்த குழாய் பயங்கர வேதனையாகவும் ரோதனையாகவும் இருந்தது.

அவன் அண்ணா, அண்ணாவின் மனைவி, அண்ணன் குழந்தைகள் எல்லோரும் பார்க்க வந்தார்கள்.

'டாக்டர் பூமிநாதனை வீட்டில் போய்ப்பார்க்கிறேன். பத்து நாளில் வீட்டுக்குப் போய்விடலாம்...' என்றான் அண்ணா .

அவர்கள் போய்விட்டார்கள். பையன் தூங்கி வழிந்து கொண்டிருந்தான், முப்பத்தஞ்சி வயசாகியும் தான் கல்யாணம் பண்ணிக்கொள்ளாமல் இருந்துவிட்டது தவறா என்று அவன் மனம் கேட்டுக்கொள்கிறது.

டாக்டர் வந்து பார்த்தார். பயில்ஸ், பிரஷர் முதலிய வார்த்தைகள் அவன் செவியில் கேட்டன. கூட வந்தவரிடம், 'இன்னொரு ஆப்பரேஷன் தேவைப்படலாம்' என்றும் சொல்வது கேட்கிறது.

இந்தத் தடவை ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டுவந்தபோது, கை நரம்புக்குள் ஒரு ஊசி போட்டார்கள்... ஸிரின்ஜிலிருந்து மருந்தை அவன் நரம்புக்குள் பீச்சியடித்தவாறு அவன் விழிகளையே ஒருவன் உற்று நோக்கிக் கொண்டிருந்ததுதான் அவனுக்குத் தெரியும்... பிறகு, தன் விழிகள் எப்போது மூடிக் கொண்டன என்று அவனுக்கு ஞாபகம் இல்லை... கண் விழித்தபோது விண் விண் என்று வேதனை தெறிக்க வார்டில் படுத்திருப்பது அவனுக்குத் தெரிந்தது.

பிறகு பழைய அவஸ்தைதான்... மலம் வெளியேறுகையில் “சுள் சுள்' என்று மூலத்திலிருந்து எழும்பிய வேதனையின் வீச்சில் அவன் மரண தேவதையை உள்ளமுருகி கதறியழைத்துக் கரைந்தான்...

அடிக்கடி ஆஸ்பத்திரி கம்பவுண்டர் ரப்பர் உறை போட்டிருந்த விரலை இவன் மல துவாரத்துக்குள் விட்டு மருந்தைத் தடவிக் குடையும்போது இவன் உயிர் சாவூர் வாசலை முட்டி மோதி விட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தது.

பத்தாவது நாள்...

வேதனையில் ஒரு குறைவும் இல்லை ... 'வீட்டுக்குப் போகலாம்... போகப் போகச் சரியாகி விடும்...' என்று ஆஸ்பத்திரியிலிருந்து அவனை டிஸ்சார்ஜ் செய்துவிட்டார்கள்...

அண்ணாவின் வீட்டில் கிடந்தவாறு சதா தெறித்துக் கொண்டிருக்கும் வேதனையை அனுபவிக்கவே நேரம் போதாமல் இருக்கையில், வேலை தேடும் வேலையை எப்படி மேற்கொள்ள முடியும்?

நாள் சென்றுகொண்டே இருந்தும் வேதனை மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டுதான் இருந்தது. பாத்ரூமுக்குள் வைத்து அவன் விழிகளில் இருந்து பொன் ஈக்கள் பறந்தன... கடவுளே... இப்படி ஒரு வேதனை உலகில் வேறு யாருக்கும் வரக் கூடாது...

நடக்கையில் சொட்டுச் சொட்டாகப் பழுப்பு வடியத் தொடங்கிவிட்டது. மூலத்தில் மட்டுமல்ல, பிருஷ்டத்து எலும்புகள், இடுப்பு, முதுகு, கால்கள் - இங்கெல்லாம் விண் விண் என்று வலி...

டாக்டர் ரிஷிகேசனின் பிரைவேட் நர்ஸிங் ஹோமில் அவனைக் கூட்டிக் கொண்டுவந்து அட்மிட் பண்ணினான் அவன் அண்ணன். பக்கத்தில் பாத்ரூம் இருந்த இருபத்தி மூன்றாம் நம்பர் அறை. தனி அறை. ஒருநாள் வாடகை பத்து ரூபாய், டாக்டர் பீஸ், மருந்து விலை, பரிசோதனை சார்ஜுகள் வேறு.

அங்கே வந்த அன்றே அவனை ஆப்பரேஷன் தியேட்டருக்குக் கொண்டு வந்து பரிசோதனை செய்தார்கள். தூக்க மருந்தைக் குத்தி வைத்தும் அவனுக்குத் தூக்கம் வரவில்லை. அவனைப் படுக்க வைத்து சைக்கிள் பம்ப் போலிருந்த ஒன்றை மூலத் துவாரத்துக்குள்ளே நுழைத்து சுழற்றுகையில் வேதனையில் வெட்டிப்போட்ட ஆட்டுக் கிடாவைப்போல் அவன் துடித்துத் துவண்டான். ஆனால் உடம்பை அசைக்காமல் இருக்க மூன்று நான்கு பேர்கள் யம கிங்கரர்களைப்போல் அவனை வலுவாய்ப் பிடித்திருந்தார்கள்... இவ்வளவு பயங்கரமான வேதனைக்குப் பின்னும், தான் சாவாமல் மிஞ்சியிருப்பது அவனுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

அறையில் கொண்டுவந்து படுக்க வைத்தபோது ரத்தத்தாலும், அயோடினாலும் அவன் வேஷ்டியின் பின் பக்கம் முழுதும் தொப்பு தொப்பென்று நனைந்து விட்டிருந்தது. எழுந்து அந்த வேஷ்டியை மாற்றி வேறு வேஷ்டி உடுத்தி விட்டு அவன் படுத்தான்...

சமயா சமயத்திற்கு அண்ணா வீட்டிலிருந்து அவர் குழந்தைகள் மாறி மாறி உணவு கொண்டுவந்து தந்துவிட்டுப்போனார்கள். சிகிச்சை முறையாக நடந்துகொண்டிருக்கிறது... டாக்டர் ரிஷிகேசன் காலை மாலை இரு தடவை வந்து பார்த்து விட்டுச் சென்றார். காலையில் எழுந்த உடன் ஆயின்மென்டை விரலில் புரட்டி மூலத் துவாரத்துக்குள் நுழைத்து மருந்தை அவனாகவே போட்டுக்கொள்ள டாக்டர் பழக்கித் தந்தார். வலியால் கண்ணிலிருந்து நீர் வழிந்தும், ஆயின்மென்ட் புரட்டிய விரலை வலுக்கட்டாயமாய்த் தனக்குத் தானே உள்ளே நுழைத்து மருந்து புரட்டுவதை அவன் விடாமல் செய்து வந்தான்.

இரவில் படுக்கப் போகும்போது லிக்விட் பாரபின் - காலையில் ப்ருடேப்... இருந்தும் பாத்ரூமில் இருக்கும்போது வலி அதன் க்ளைமாக்ஸை சேரும்...

வலியின் அவதியில் உணவு செல்லவில்லை. தாகம் தெரியவில்லை. இருந்தும் யந்திர ரீதியில் அவை நடந்தன... அடிக்கடி ஆப்பரேஷன் தியேட்டருக்குக் கொண்டுசென்று தலைகீழ் நிறுத்தி எதை எதையோ உள்ளே போட்டுக் குடைந்தெடுத்தார்கள். சற்று பெரிய ஊசியால் மருந்து குத்தி வைத்தார்கள்.

வேதனையில் ரோதனையில் இரவில் நித்திரை தேவியும் அவனை அண்ட மறுத்தாள், தூக்க மாத்திரை உபயோகிக்க வேண்டியிருந்தது.

பத்து நாட்களுக்கு ஒரு முறை பில் வந்தது. அவன் அண்ணன்தான் ரூபாய் கொடுத்துக்கொண்டிருந்தான்.

 மூன்றாவது தடவை வந்து பில்லுக்குப் பணம் கொடுத்துவிட்டு வந்த அண்ணாவின் மனைவியிடம் அவன் சொன்னான்... 'இங்கே வந்ததில் வலியில் ஒரு குறையும் இல்லை ... அதிகமாகத்தான் இருக்கு...!'

'டாக்டர் அல்ஸர் என்கிறார்...'

இங்கே செலவும் அதிகம்... வீட்டுக்குப் போயிடுவோம்.'

'வீட்டில் வைத்து வலி கூடினால் என்ன செய்வது?'

'இப்போ இங்கே என்ன செய்கிறாங்க! இப்போ இருப்பதைவிட இனியும் அதிகமாக ஒன்றும் இல்லை .'

அந்த நர்ஸிங் ஹோமிலிருந்து, காலடிகூட எடுத்து வைக்க முடியாமல் வேதனையின் கனம் கீழே இழுக்க, கூனிக் குறுகி, அவன் வெளியேறி டாக்ஸியில் ஏறுகிறான். கார் அவன் அண்ணாவின் வீட்டை நோக்கி விரைந்தது.

(05.10.1972 , சதங்கை 11/1972)
*
நன்றி : நீல. பத்மநாபன் & ஏடகம்

இன்னொரு பதிவு :
‘ஃபைல்கள்’ முன்னுரை – நீல. பத்மநாபன்

No comments:

Post a Comment