Thursday, March 28, 2019

புதிய விடியல் - குளச்சல் மு. யூசுஃப் நேர்காணல்

புதிய விடியல் : 2018 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமி தமிழ் மொழிபெயர்ப்புக்கான விருது தங்களுக்கு கிடைத்திருப்பதில் புதிய விடியல் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது. உங்களது எழுத்துப்பணி மேலும் வளர இறைவன் அருள் புரிவானாக!


மலையாளத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்க்கப் பட்ட திருடன் மணியன்பிள்ளை நூலுக்காக உங்களுக்கு சாகித்ய அகாதமி விருது வழங்கப்பட் டுள்ளது. 2010 லேயே பஷீரின் எழுத்துக்கள் உங்கள் மொழிபெயர்ப்பில் வெளிவந்து தமிழ் இலக்கிய உலகில் வெகுவாக பேசப்பட்டு விட்டது. ஆகவே, இவ்விருது தாமதமாக வழங்கப்பட்டுள்ளதாக வருத்தம் ஏதும் உள்ளதா?

குளச்சல் யூசுஃப்: கிடைக்குமென்ற நம்பிக்கையே இல்லாதபோது வருத்தம் ஏற்படுவதற்கான இடமே இல்லை. முதல் காரணம், இப்படியான ஒரு விருதை வாங்குவதற்கான பொருளாதார நிலையோ, அனுசரணை சீலமோ, அவர்களே இனம் கண்டு கொள்வதற்கான செல்வாக்கோ இல்லாதவன் நான். பரிந்துரைக்கச் சொல்வதை அவமானமாகக் கருதுபவன். பரிந்துரை செய்யட்டுமா என்று கேட்டவர்களைக்கூட பேசாமலாக்கிய திறன் பெற்றது எனது நாவின் தடித்தனம்.

ஆறேழு வருடங்களுக்கு முந்தைய ஒரு நிகழ்வு இது. சாகித்ய அகாதமி விருதின் தேர்வுக் குழுத்தலைவராக இருந்த ஒருவர் என்னை அலைபேசியில் தொடர்புகொண்டு, ‘மொழி பெயர்ப்புக்கான இந்த ஆண்டின் சாகித்ய அகாதமி விருதை உங்களுக்கு வழங்குவதாக முடிவு செய்தோம். இப்போது, வேறு ஒருவரைத் தேர்வு செய்ததாக பத்திரிகையில் செய்தி வந்திருக்கிறது. ஆகவே, உங்களுடைய மொழி பெயர்ப்புகளை முன்வைத்து கோவையில் ஒரு கருத்தரங்கம் ஏற்பாடு செய்துள்ளோம். அதில் நீங்கள் கலந்துகொள்ள வேண்டும்’ என்று அழைப்பு விடுத்தார். பெயர் மாற்றத்துக்கான காரணம் என்னவென்று எனக்கு மட்டுமல்ல, அவருக்கும் தெரியவில்லை.


புதிய விடியல் : நாஞ்சில் மண்ணுக்கே உள்ள தனித்துவத்தின் வெளிப்பாடுதான் குளச்சல் யூசுஃபின் உருவாக்கமா? இலக்கியத்துக்குள் நுழைந்த தருணம் எப்போது? உங்கள் உள்ளே இருந்த எழுத்தாளரை எப்படி, எப்போது அடையாளம் கண்டுகொண்டீர்கள்?


குளச்சல் யூசுஃப் : தனித்துவ மண் என்ற புளகாங்கிதம் நாஞ்சில் மண்ணுக்கு மட்டுமே உரித்தானதல்ல. நெல்லை, மதுரை, கோவை, தஞ்சையென தமிழ்நாட்டில் வேறு பல புளகாங்கிதங்களும் உண்டு. குமரி மாவட்டம், குளச்சலிலுள்ள ஒரு பள்ளியில் வெறும் ஐந்தாம் வகுப்புடன் எனது கல்வி முற்றுப்பெற்றது. ஏழு வயதில் துவங்கிய வாசிப்புக்கும், 12 ஆவது வயது முதல் வாழ்க்கையை நகர்த்துவதற்காகப் பட்ட துயரங்களுக்குமிடையே 1983,84 காலகட்டங்களில் சில சிறுகதைகளும் கட்டுரைகளும் நாகர்கோயில் வானொலி நிலையத்துக்காக சில கவிதைகளும் எழுதியதுதான் எனது எழுத்து வாழ்க்கையின் தொடக்கம். உண்மையைச் சொல்வதானால், எழுத்தாளனாக என்னை அடையாளம் கண்டவர்கள், நான் எழுதிய சிறு கதையை தனது பெயரில் பிரசுரித்து பத்திரிகை நிருபராகச் சேர்ந்த, இப்போது சன் தொலைகாட்சியில் பணியாற்றும் நண்பரும், நான் எழுதிய கட்டுரையை வலுக்கட்டாய மாகப் பிடுங்கிச் சென்று பத்திரிகைக்கு அனுப்பியவரும், மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தின் தொலைதூரக் கல்வியில் சேர்த்து என்னைப் படிக்க வைக்க முயற்சி செய்தவரும், எனது மளிகைக்கடையின் கட்டட உரிமையாளருமான தலைமையாசிரியர் சுப்ரமணியம் அவர்களும்தான்.

புதிய விடியல் : சுய எழுத்துக்களைக் காட்டிலும் மொழிபெயர்ப்பின் மீது தீவிர காதல் ஏன்? குறிப்பாக மலையாள மொழியின்மீதான அலாதி பிரியம்?


குளச்சல் யூசுஃப் : பிரசுர நோக்கம் சிறிதளவுமில்லாத எனது எழுத்தும் வாசிப்பும் தன்னார்வத்தின் அடிப்படையிலானவை. நான் புரிந்துகொண்டவற்றை, என்னை பிரமிக்க வைத்தவற்றை மற்றவர்களும் அறியச் செய்ய வேண்டுமென்று விரும்புகிறவன். ஆனால், ‘கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும் வேட்ப மொழிய’ இயலாத நிலையில் மொழிபெயர்ப்பின் மூலம் உரையாடினேன். இது பிழைப்புக்கான மார்க்கமாக மாறிய நிகழ்வுகள் எனக்கு வாய்த்தப் பதிப்பகத்தை அடிப்படையாகக் கொண்டவை.

மலையாள மொழிமீதான அலாதி பிரியத்துக்குக் காரணம், நான் நடத்தி வந்த மளிகைக் கடையில் பொட்டலம் கட்டுவதற்காக வந்த பழைய புத்தகங்களில் வைக்கம் முஹம்மத் பஷீரின் பாத்துமாவின் ஆடு, பால்யகால சகி, எங்க உப்பப்பாக்கொரு ஆனையிருந்தது என்னும் மூன்று மலையாள குறு நாவல்களும் இருந்தன. எனது வாசிப்புப் பழக்கத்தை அறிந்திருந்த, மலையாளம் தெரிந்த ஒரு வாடிக்கையாளர், பஷீரைக் குறித்தும் அவரது படைப்புகள் குறித்தும் நிறைய சொன்னார். அவரால் தூண்டப்பட்ட நான், என்றாவதொரு நாள் மலையாள மொழியைக் கற்று இதை வாசிப்பேன் என்ற திட நம்பிக்கையுடன் அதைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டேன். திரைப்பட சுவரொட்டிகள், பத்திரிகை தலைப்புகள் என எழுத்துக்கூட்டி வாசிக்கத் தொடங்கினேன். மலையாளம் வசப்பட்டது. பிறகு, புத்தகங்களையும் எழுத்தையும் வாசிப்பையும் கலாச்சாரமாகக் கொண்ட மலையாள மொழிக்குள், காய்ந்த மாட்டுக்குக் கம்பங்கொல்லை கிடைத்தது போல் புகுந்து மேய்ந்தேன்.

புதிய விடியல் : இந்தியாவில், முஸ்லிம் என்பது எந்தத் துறையிலும் சிக்கலை எதிர் கொள்ளும் அடையாளமாகவே உள்ளது. இதற்கு எழுத்துத் துறையும் விதிவிலக்கல்ல. அப்படியான சிக்கல் எதையும் எழுத்தாளர் யூசுஃப் எதிர்கொண்டிருக்கிறாரா?

குளச்சல் யூசுஃப் : பலமுறை எதிர்கொண்டிருக்கிறேன். எல்லா முனைகளிலிருந்தும். இது தந்திரமான முறையில் நிகழ்ந்தவை என்பதால் குறிப்பிட்டுச் சொல்ல இயலாது. கிறிஸ்தவர்களுக்குப் பெரும்பாலும் பொதுவான பெயர் இருக்கும். மதம், நம்பிக்கை கள், சமூகங்கள் சார்ந்து நியாயமான சில கருத்துக் களை இவர்களால் தமது சொந்தப் பெயர் களில் எழுத இயலும். இதற்குரிய வகையில் பிரசுர வாய்ப்புக்களும் எதிர்வினைகளும் இருக்கும். ஆனால், நியாயமான கருத்தாக இருந்தாலும் எனது பெயரில் எழுதிவிட இயலாது. மதக்கண்ணோட்டத்துடன் அணுகுவார்கள். எதிர்வினைகளும் அப்படித்தான் இருக்கும். இதில் நடுநிலைப் பத்திரிகைகளும் தனிநபர்களும்கூட விதிவிலக்கு அல்ல.

மிக அண்மைக்கால சிறு நிகழ்வொன்றைக் குறிப்பிடுகிறேன். நாகர்கோயிலில் புதிதாகக் கட்டப்பட்ட மேம்பாலத்தின் கீழ்ப்பகுதி நல்ல நிழற்பாங்காகவும் விசாலமாகவும் காற்றோட்டமுள்ள பகுதியாகவும் அமைந்திருக்கிறது. ஒரு மோட்டார் சைக்கிளின் பின்னால் அமர்ந்திருந்த நான், வாகனத்தை ஓட்டி வந்த முத்துசாமி என்ற நண்பரிடம், “பாலத்தின்கீழ் இலக்கியக் கூட்டம் நடத்தலாம் போலிருக்கிறதே?” என்றேன். நண்பரும் இதை தனது முகநூல் பக்கத்தில் இலக்கியக் கூட்டம் நடத்தும் அளவுக்கு மேம்பாலம் தரமானதாக இருக்கிறதென்று நான் சொன்னதாக வேடிக்கையாகக் குறிப்பிட்டு விட்டார். உடனே, என்னை விமர்சிப்பதுபோன்ற சில பின்னூட்டங்கள் வந்தன. நண்பருக்குக் கோபம் வந்து விட்டது. “உங்களுக்கெல்லாம் பெயர்தான் பிரச்சினை போலிருக்கிறது” என்று வெகுண்டெழுந்தார்.

புதிய விடியல் : பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு முன், இடிப்புக்குப் பின், பாஜக அதிகாரத்திற்கு வந்தபோது என ஏறக்குறைய மூன்று தலைமுறை முஸ்லிம் சமூகத்தை பார்த்திருக்கிறீர் கள். இந்தக் காலத்தினூடாக முஸ்லிம் சமூகத்தின், அரசியல், பொருளாதார எழுச்சி – வீழ்ச்சிகளை எப்படி எடை போடுகிறீர்கள்?

குளச்சல் யூசுஃப் : மத உணர்வுகளின் அடிப்படையில் ஜனநாயகக் கட்டமைப்பைக் குலைத்துப்போட்ட பாபரி மஸ்ஜிதின் தகர்வு, அப்போது சமூக நல்லிணக்கத் தகர்வாகவே கருதப்பட்டது. பிந்தைய நிகழ்வுகளும் இதை உறுதிப்படுத்தின. இரு சமூகங்களிடையே மதச்சுவர் எழும்பியது. முஸ்லிம் சமூகம் தன்னை தனிமைப்படுத்திக்கொள்ள துவங்கியது. கலந்து வாழ்ந்த பகுதிகளிலிருந்துப் பாதுகாப்பு என்று கருதிய பகுதிகளை நோக்கிக் குடி பெயர்ந்தார்கள். பரஸ்பர நம்பிக்கைகள் சீர்குலையும் நிலை உருவானது. ஏற்கனவே, பொருளாதாரத்திலும் கல்வியிலும் பின்தங்கியிருந்த முஸ்லிம் இளைஞர்களின் உணர்வு கள் மடைமாற்றமாகி விடாமல், அரசியல் விழிப்புணர்ச்சி பெறுவதற்கு தமிழகத்தில் புதிதாக உருவான இஸ்லாமிய அமைப்புகள் உதவியாக அமைந்தன.

ஏழு சதவிகித மக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம், அமைப்புகளாகப் பிரிந்து செயல்பட்டதால் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், இக்கட்டான சூழ்நிலையிலும் நல்லிணக்கச் சூழலைத் தக்க வைத்துக்கொள்ள இயன்றது என்பதை நான் நல்ல விஷயமாகப் பார்க்கிறேன். விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமின்மை, இழப்புதான் என்றாலும் அவர்களை அரசியல் குடையின் அணிதிரட்ட இயன்றது என்பது நல்ல அறிகுறி.

பொருளாதாரத்தைப் பொறுத்தவரைக்கும் பெருநிறுவனங்களின் ஆதிக்கம், அரசுப்பணி களை எதிர்பார்க்காமல் குறுந்தொழில் செய்யும் பெருமளவு முஸ்லிம்களின் வீழ்ச்சிக்குக் காரணமாக அமைந்தது. அரசியல் இலாபத்துக்காக உருவாக்கப்படும் தீயில் வணிக நோக்கத்துடன் எண்ணெய் வார்ப்பதும் சேர்ந்தபோது முஸ்லிம்களின் மிச்சமிருந்த வணிகப்பாதுகாப்பும் கேள்விக்குள்ளானது. மொத்த வீழ்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப் பாக வங்கி, காப்பீடு போன்ற துறைகளை இறைநம்பிக்கையுடன் இணைப்பதைக் குறிப்பிடலாம்.

கேரளத்தின் சில பகுதிகளில் முஸ்லிம் செல்வந்தர்கள் சிலர் கொடுக்கும் வட்டியில்லா கடன் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? உங்களுக்கு இருபதாயிரம் ரூபாய் தேவைப்படுகிறது என்று வையுங்கள். அவர்கள் பத்து இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளை படகு வடிவத்தில் மடித்து உங்களிடம் கொடுப்பார்கள். அதை நீங்கள் திருப்பிக் கொடுப்பதுவரைக்கும் படகுக்கு வாடகைச் செலுத்த வேண்டும். இதுதான் அந்த வட்டியில்லா கடன். இறையியல் சார்ந்து எவ்வளவு போலித்தனமாக வாழ்கிறோம் பாருங்கள்? அண்மையில், ‘அழகிய கடன்’ கொடுக்கும் ஒரு அமைப்பை அணுகி, கல்விக்கடன் பற்றி பேசினேன். “நாங்கள் கை வண்டி வாங்கவும் காய்கறி விற்கவும் கடன் கொடுக்கிறோம்” என்றார்கள். ஏற்கனவே நாம் அதைத்தானே செய்துகொண்டிருக்கிறோம் என்றால், பதிலுக்கு அவர்கள் நான்கு குர்ஆன் வசனங்களையோ மூன்று ஹதீஸ்களையோ மேற்கோள் காட்டக்கூடும்.


புதிய விடியல் : இலக்கிய ஆர்வமும் வாசிப்பு பழக்கமும் தற்போது முஸ்லிம் சமூகத்தில் எப்படி இருக்கிறது?

குளச்சல் யூசுஃப் : கலை இலக்கியத் துறைகளில் முஸ்லிம்களின் பங்களிப்புக்கு முன் எப்போதையும் விட பெருமளவில் பின்னடைவு ஏற்பட்டிருப்பதை உணர முடிகிறது. புதிய இயக்கங்களின் வருகையால் ஏற்பட்ட மிகப்பெரிய பாதகமாக நான் உணர்வது இதுதான். வாசிப்புப் பழக்கத்தைப் பொறுத்தவரைக்கும் முஸ்லிம்களின் பங்களிப்பு அதல பாதாளத் தில் உள்ளது. கலை - இலக்கியங்களில் சிறந்து விளங்குபவர்கள்தான் அறிவுத்துறை யிலும் சிறந்து விளங்குகிறார்கள், சாதனையாளர்களாக பரிணமிக்கிறார்கள் என்பதை முஸ்லிம் சமூகம் கண்டுகொள்ளத் தவறி விட்டது.

புதிய விடியல் : பெருமளவில் கேரள முஸ்லிம் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளை உள் வாங்கிக்கொண்டதன் வெளிப்பாடு உங்கள் எழுத்துக்களில் பிரதிபலிப்பதைப் பார்க்க முடிகிறது. கேரள முஸ்லிம்களுடன் ஒப்பிடும்போது தமிழக முஸ்லிம்கள் எந்தத் துறையில் இன்னும் முன்னேற வேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்...?

குளச்சல் யூசுஃப் : ஏற்கனவே சொன்னதுதான். வாசிப்பைக் கலாச்சாரமாகக்கொண்ட கேரள சமூகத்தில் முஸ்லிம்களின் கலை - இலக்கியப் பங்களிப்பு என்பது சராசரிக்கு எந்த வகையிலும் குறைவானதல்ல. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மலப்புரம் மாவட்டத்தில்தான் அதிக நூல்கள் விற்பனையாவதாகவும் புதிதாக கட்டப்படும் வீடுகளில் புத்தகங்கள் வைப்பதற்கென்று தனி இடம் ஒதுக்கப்படுவதாகவும் வாசித்தேன். புத்தக வாசிப்பும் கலை - இலக்கியப் பங்களிப்பும் அவர்களை அரசியல் விழிப்புணர்வு பெற்றவர்களாகவும் மாற்றியிருக்கிறது. இதன்மூலம், பெரும்பான்மை மதஅரசியலுக்கும் சிறுபான்மை மதஅரசியலுக்குமான வேறுபாடுகளை கேரள பொதுசமூகம் புரிந்து கொண்டிருக்கிறது.

கலைகளைக்கூட காரண காரியங்களுடனும், இறையியல் சார்ந்தும், அறிவியல் நோக்குடனும் அணுகும்போக்கு தமிழக முஸ்லிம்களிடையே அதிகரித்துள்ளது. இதில் மாற்றத்தை ஏற்படுத்தும் பொறுப்பும் புதிதாக வந்த இயக்கங்களுக்கு இருக்கிறது. வீதி நாடகம் போன்ற குறியீட்டுக் கலைகளில்கூட மேற்சொன்ன காரண காரியங்களைத் தேடும் பார்வை, கலை இலக்கியத்துறைகளுக்கு மட்டுமல்ல, மக்களுக்கும் ஊறு செய்யக் கூடியது.

கல்வித் துறை யில் முஸ்லிம்களின் பங்களிப்பு பெரும்பாலும் மொழியியல் சார்ந்ததாகவே இருக்கிறது. நாட்டார் வழக்கு, கலைகள் குறித்த ஆய்வுகள் போன்ற பல்வேறு துறைகளில் முஸ்லிம்களின் பங்களிப்பு மிகக்குறைவாக உள்ளது. கல்வியைப் பொருளாதார அபிவிருத்திக்காக மட்டுமே பார்க்கும் போக்கில் மாற்றம் ஏற்பட வேண்டும். முஸ்லிம்கள் கவனம் செலுத்தாத துறைகள் வேறுவகையில் இட்டு நிரப்பப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

புதிய விடியல் : வைக்கம் பஷீர் மீதான ஆர்வத்திற்கு காரணங்கள் ஏதும் இருக்கிறதா?

குளச்சல் யூசுஃப் : மலையாளம் தெரிந்த யாருமே வைக்கம் முஹம்மத் பஷீரின் படைப்பு கள்மீது ஆர்வம் காட்டாமல் இருக்க மாட்டார்கள் என்பது முதல் காரணம். அடுத்து, குமரி மாவட்டத்தின் குளச்சல்போன்ற கடலோரப் பகுதி முஸ்லிம்களுக்கும் இதன் மிக அருகிலுள்ள முஸ்லிம்களுக்குமிடை யிலான கலாச்சார ஒற்றுமைகளை விடவும், பல நூறு மைல் தொலைவிலுள்ள கேரளக் கடலோரப் பகுதி முஸ்லிம்களுக்கிடையிலான கலாச்சார ஒற்றுமைகள் மிகவும் நெருக்கமானவை.

எங்கள் பகுதியிலுள்ள முஸ்லிம்கள் கைலிக்குப் பதிலாக, கேரள முஸ்லிம் கள்போல் வேட்டி உடுத்துவார்கள். முந்தைய தலைமுறை யிலுள்ள பெண்கள், கேரள முஸ்லிம் பெண்கள்போல் கச்சமுறி, குப்பாயம் போன்ற ஆடை களை அணிவார்கள். இதுபோன்ற பல்வேறு ஒற்றுமைகளை ஆபரணங்களிலும் பார்க்க முடியும். உணவுப் பழக்கங்களை எடுத்துக்கொண்டால் கேரள பாணியிலான புட்டும், ஒறட்டியும் இங்கே முன்னிலை வகிக்கும். அதாவது, மொழியும் கலாச்சாரப் பின் புலமும் வைக்கம் முஹம்மத் பஷீர்மீது நான்கொண்ட ஆர்வத்துக்கு மேலதிக காரணங்களாகச் சொல்ல முடியும். ஆனால், இதையெல்லாம்விட அழுத்தமான காரணம், பாத்தும்மாவின் ஆட்டுக்கு வைக்க வேண்டிய கஞ்சித்தண்ணியை ஆனும்மா குடிப்பதால் உருவாகும் அக்கா – தங்கைக்கு இடையிலான பிரச்சினையை உலகளாவிய அனுபவமாக மாற்றத் தெரிந்த பஷீரின் கதைச்சொல் முறைதான்.

புதிய விடியல் : முஹம்மது நபியின் வாழ்க்கை வரலாற்றை மொழிபெயர்த்த அனுபவம்?

குளச்சல் யூசுஃப் : இஸ்லாம் குறித்து நான் எழுதிய முஹம்மத் நபி (ஸல்) வாழ்க்கை வரலாறு, பாரசீக மகாகவிகள் ஆகிய நூல்களுக்காக முதலில் சென்னை ரஹ்மத் பதிப்பகம் முஸ்தஃபா அண்ணனுக்கு நன்றி சொல்லியாக வேண்டும். அவர்தான் முதன் முதலில் இஸ்லாமிய ஆய்வுகளின் பக்கம் என்னை வரவழைத்து, எல்லா அர்த்தங்களிலும் உதவி யாக இருந்தார். தனது இஸ்லாமிய வரலாறு மூன்று பாகங்களையும் செப்பனிடும் பணி யையும் ஒப்படைத்தார். என்னுடைய கல்வித்தகுதியையும் இஸ்லாமிய அறிவையும் குறித்து அறிந்திருந்தும் இந்த மாபெரும் பணியை எப்படி என்னிடம் ஒப்படைக்கத் துணிந்தார் என்று தெரியவில்லை. அதில், உள்ளதை உள்ளபடி செப்பனிட நான் விரும்ப வில்லை. செய்கிற பணியில் ஆழ்ந்தப் புரிதலும் செய்நேர்த்தியும் இருந்தால்தான் மனத் திருப்திக் கிடைக்கும். ஆகவே, அதை மூலநூலாகக்கொண்டு, இஸ்லாமிய வரலாற்றின் மீது மேலும் ஆழமாக கவனம் செலுத்தினேன்.

ஏறத்தாழ மூன்றாண்டுகள் நீண்ட இந்தப் பணியின்போதுதான் இஸ்லாத்தைக் குறித்தும் அறிந்துகொள்கிறேன். இது சார்ந்த புரிதல்களின் அடிப்படையில்தான், ஹுஸைன் ஹைகலின் ஹயாத் முஹம்மத் நூலை, முஹம்மத் நபி (ஸல்) என்னும் பெயரில் மொழியாக்கம் செய்தேன். ஓராண்டு கால முழு உழைப்பையும் செலுத்த நேர்ந்த இந்த மொழியாக்கம் தொடர்பாக முதலில் ஒரு சில ஆலிம்களைச் சந்தித்து பேசினேன். இதை, மதரஸா சான்றிதழ் இல்லாத நான் மொழியாக்கம் செய்வதில் அவர்களுக்கு உடன் பாடில்லை என்பதையும் அதே சமயம், அதை அவர்கள் பெயரில் வெளியிடுவதில் முரண் பாடில்லை என்பதையும் புரிந்துகொண்டேன்.

ஏறத்தாழ பத்தாண்டுகளுக்கு முன், இதே நூலை ஒருவர் மொழிபெயர்த்துத் தரும்படி கேட்டுக் கொண்டார். செய்து முடிக்க எடுத்துக்கொள்ளும் காலஅவகாசம் குறித்தும் அதற்கான மதிப்பூதியம் குறித்தும் பேசினேன். “இது இறைப்பணி அல்லவா? இலவசமாக செய்யலாமே?” என்றார். நமக்குதான் தடித்த நாவு ஆயிற்றே? “நேற்றுவரை சைக்கிள் மிதித்த நீங்கள் இன்று காரில் உலா வருவதற்குக் காரணமும் இறைப்பணிதானே?” என்று கேட்டதுடன் அந்த உறவும் முறிந்து போயிற்று.

புதிய விடியல் : உங்களது மொழிபெயர்ப்பின் நுட்பம் என்ன? ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்க்கும் கலையிலிருந்து மலையாளம் வேறுபடுகிறதா?

குளச்சல் யூசுஃப் : மூலமொழி ஆங்கிலமாகவோ மலையாளமாகவோ இருக்கலாம். ஆனால், அதன் கதாபாத்திரங்களும் நிகழ்வுகளும் மனிதர்களைச் சார்ந்தவை. எந்த மொழி சார்ந்தவர்களாக இருப்பினும் அவர்களது தேவைகளும், ஏக்கங்களும், ஏமாற்றங்களும், இன்பதுன்பங்கள் தரும் அகவய உணர்வுகளும், வலியும் ஒன்றுதான். நான் உணர்ந்துகொண்டவரைக்கும் இதுதான் நுட்பம். இதைக் கற்பனையிலும் வாழ்வியல் சார்ந்தும் அனுபவித்து உணர்ந்து எழுதுகிறேன். இதனுள் படைப்பு சார்ந்து எஞ்சியிருப்பவை, காலமும் சூழலும். அதிகப்படியான தேடுதலையும் உழைப்பையும் இதில்தான் செலவிட வேண்டியதிருக்கும்.

புதிய விடியல் : ‘மணியன் பிள்ளையுடெ ஆத்ம கதா’ என்னும் மலையாள சுயசரிதையை தமிழில் மொழிபெயர்த்ததற்குக் குறிப்பிட்ட காரணங்கள் ஏதாவது உள்ளனவா?

குளச்சல் யூசுஃப் : ஆமாம். விளிம்பு நிலை மக்கள் குறித்தும் சமூகப் போராளிகள் குறித்தும் நான் மொழியாக்கம் செய்த நூல்களின் வரிசையில்தான் திருடன் மணியன் பிள்ளையும் வருகிறது. சமூக உன்னதர்களின் வாழ்வியல் பதிவுகளை விடவும் விளிம்பு நிலை மக்களின் வாழ்வியல் பதிவுகள்தான் சமூக அமைப்பைச் சரிவரப் புரிந்து கொள்வதற்கான சிறந்த வழியென்று நான் கருதுகிறேன்.

புதிய விடியல் : தற்போதைய முற்போக்கு முஸ்லிம் எழுத்தாளர்கள் என்று தங்களை கூறிக் கொள்ளும் சிலர் முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் அடையாள பாதுகாப்பிற்கான உணர்வுகள், போராட்டங்களை வஹாபியத்துடன் இணைத்துச் சித்தரிக்கின்றனர். இத்தகைய எழுத்துக்களுக்கு சில தமிழ் நாளிதழ்களும் களம் அமைத்துக் கொடுக்கின்றன. இது சரியான நிலைபாடா? உங்களது கருத்து என்ன?

குளச்சல் யூசுஃப் : ஏற்கனவே குறிப்பிட்ட கலை – இலக்கியம் சார்ந்து செயல்படுபவர்கள் தங்களது துறையில் பின்னடைவு ஏற்படுவதற்கான காரணிகளை வஹாபியம் என்றும் தீவிர வாதம் என்றும் கருதுகிறார்கள். இதன் நீட்சியாக மூட நம்பிக்கை, வரதட்சணை, ஆர்ப்பாட்டமான விழாக்கள், பெண் வீட்டார் செலவில் திருமணங்கள், பெண் கல்வியை மறுப்பது, பள்ளிவாசலுக்குள் பெண்களை அனுமதிக்காமை, ஜகாத் என்னும் பெயரில் உழைக்க மறுக்கும் கூட்டத்தை உருவாக்குவது, ஊர் விலக்கம் செய்வதுபோன்ற சமூகச் சீர்கேடுகளுக்குத் தங்களை அறியாமல் முட்டுக் கொடுக்கிறார்கள். ஒட்டு மொத்தமாக ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்ற நிலைபாட்டைத் தான் இதற்குக் காரணமாகச் சொல்ல இயலும். இதில், தமிழ் நாளிதழ்களின் பங்கைக் குறிப்பிடுவதானால், ஒரு பிரிவினர் தங்கள் கருத்தைச் சொல்கிறார்கள். அதை நாங்கள் பிரசுரிக்கிறோம் என்று வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்கிறார்களே தவிர, அதன் நியாயங்கள் குறித்த எந்தப் பரிசீலனைக்கும் தங்களை உட்படுத்திக் கொள்வதில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்த வரைக்கும் மேற்சொன்ன சமூகச் சீர்கேடுகளுக்கு எதிரான மனப்பாங்கை முஸ்லிம் இளைஞர்களில் அதிகமானோரும் கொண்டிருக்கிறார் கள். இதற்காக, அவர்கள் மீது பயங்கரவாதிகளென அடையாளப் படுத்த உருவாக்கிய வஹாபி என்ற சொல்லைப் பயன் படுத்துவது குறித்து நான் ஒரு தமிழ் நாளிதழுக்கு மறுப்புக் கட்டுரை எழுதினேன். வழக்கமாக, முஸ்லிம்கள் எழுதும் கட்டுரைகளில் குர்ஆன் வசனங்களும் வழவழத் தன்மை யும் இருப்பதால் பிரசுரிக்கப்படுவதில்லை என்று கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய மறுப்புக் கட்டுரை என்ன காரணத்துக்காக நிராகரிக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால், ‘வாசல்படிவரை வந்து விட்டது வஹாபிஸ தீவிரவாதம்’ என்று மூன்றாவது நாள் தலையங்கம் வருகிறது. வஹாபி என்னும் சொல் தவறானப் பயன்பாட்டுக்கு வந்துவிட்ட நிலையில் சமூகத்திலுள்ள பெரும்பான்மை இளைஞர்கள்மீது இதைப் பயன்படுத்துவது சரியா என்று முஸ்லிம் எழுத்தாளர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்பது தான் என்னுடைய நிலைபாடு.

புதிய விடியல் : விருதுபெற்ற நிலையில் இந்தக் கேள்வியை கேட்காமல் பேட்டியை முடிக்க இயலாது. விருது தருபவர்களின் அறிவு நாணயம் கேள்விக்குட்படுத்த முடியாத ஒன்று அல்ல. மத்திய அரசுக்கு எதிரான எதிர்ப்பைக் காட்ட விருதை மறுப்பதை ஒரு ஆயுதமாக இலக்கியவாதிகள் பயன்படுத்தும் சூழலில் உங்களது கருத்து என்ன?

குளச்சல் யூசுஃப் : அரசு விருதை மறுப்பது என்பது ஒரு குறியீடு, இது மனஆதங்கத்தின் வெளிப்பாட்டு உத்தி. அரசால் கௌரவிக்கப்பட்ட ஒரு குடிமகன் அரசுக்கெதிரான தனது எதிர்ப்பை அல்லது வெறுப்பை அஹிம்சை வழியில் வெளிப்படுத்து கிறான். வாரமொரு விருது கிடைக்குமெனில் மக்களுக்கெ திரான ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒவ்வொன்றைத் திரும்ப ஒப்படைத்து விடலாம் தான். தற்போது செய்யும் தவறை விட அதிகமான தவறை அரசுகள் செய்யாது என்ற உத்தரவாதம் இருந்தாலாவது இருப்பதைத் துறந்து விடலாம். இப்படியான சூழலில் விருது பெறும்போது பெற்ற அதே புகழை, துறக்கும் போதும் பெறுவதைத் தவிர வேறு எதையும் அடைய இயலாது. என்னைப் பொறுத்தவரைக்கும் விருதைத் துறப்பது என்பது நிகழ்வின் தீவிரத்தைப் பொறுத்தது. தீவிரத்துக்கான அளவுகோல் எதுவென்பதை முடிவு செய்யும்போது ஏற்கனவே சொன்ன உத்தரவாதப் பிரச்சினை மேலெழும்.

*
நன்றி : குளச்சல் யூசுஃப், புதிய விடியல் / Wafiq Sha

Thursday, March 7, 2019

'என்னாம்மா செய்றாஹா இஹ?' என்றாள் அஸ்மா

'அடியே, இதுக்குப் பேருதான் வெக்கம்' என்றேன்.


*
கூகுள் ப்ளஸ்ஸில் , 2014-ல் பகிர்ந்த ஒரு தமாஷ் இது. G+ முடியப்போகிறது இல்லையா, அதனால் அப்பப்ப இதுபோல் அஸ்மா ஜோக்குகள் வரும்!


Sunday, March 3, 2019

அறுந்த பட்டமும் அடிமை வாழ்க்கையும் - லி. நௌஷாத்கான்

'நல்லதைப் படிப்போம், வருங்காலத்துக்கு நல்லதை விதைப்போம். விதை முயற்சியில் உங்கள் மனங்களில் விழுந்தால் மரமாவேன்; ஏற்க மறுத்தால் மீண்டும் விதையாவேன்.' என்று  தன் சிறுகதைத் தொகுதியான 'வெள்ளைக் காகிதத்தில் ஒரு கரும்புள்ளி' முன்னுரையில் குறிப்பிடும் இளைஞர் லி. நௌஷாத்கானின் முப்பத்தெட்டாயிரத்து ஒன்னாவது சிறுகதை இது. ஆமாம், அவ்வளவு வேகத்தில் நிஜமாகவே எழுதுகிறார் (சினிமா ஆசை!). நாவல்கள் மட்டும் நானூத்தி இருபது எழுதியிருப்பதாகவும்  இதுவரை நாற்பது மட்டுமே வெளியாகியிருப்பதாகவும் தன்னடக்கத்தோடு கூறும் இவர் ஒரு M.B.A பட்டதாரி. இலக்கியத்தில் முனைவர் பட்டம் வாங்கியவர் என்று இணையம் சொல்கிறது. 'வெறும் கதைசொல்லியாக மட்டுமல்லாமல் கதையின், கதாபாத்திரங்களின் அனைத்துத் தன்மைகளையும் அறிந்த அறிவு கொண்டவர் என்று 'உலகத் தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத் தலைவரான' கவிஞர் வதிலைபிரபாவும் சொல்கிறார். கு.ப. ராஜகோபாலன், எம்.வி. வெங்கட்ராம் போன்ற மேதைகளின் எழுத்தைப் படித்து மேலும் உயர - அபுதாபியில் வாழும் - இந்தக் கும்பகோணம் இளைஞரை வாழ்த்துகிறேன்.
 

P.S. : இந்தக் கதையின் கடைசியில் வரும் பத்தி உடைகிறதே, ஏன் என்று கேட்டதற்கு அது கவிதைண்ணே என்றார் நௌஷாத். இருக்கலாம். அதைச் சேர்த்தோ நீக்கியோ படிக்கவேண்டியது வாசகர்கள் விருப்பம். நன்றி. - AB
*

அறுந்த  பட்டமும் அடிமை  வாழ்க்கையும்
லி. நௌஷாத்கான் 

ப்பிட்ட  வரை  உள்ளளவும்  நினை ,அன்னமிட்ட  கைகளை  குறை  கூறாதே ,திண்ண  வீட்டுக்கு  துரோகம்  செய்யாதே   என்று  உணவை  பற்றி  பல  பழமொழிகள்  உள்ளது .எந்த  எதிர்பார்ப்பும்  இல்லாமல்  நம்  பசிக்கு  அன்னமிட்ட  கைகளைத்  தான்  குறை  சொல்லக் கூடாது .அதே சமயத்தில்  காசை  வாங்கி  கொண்டு  ருசி  இல்லாத தரம்  குறைந்த  உணவை  தர  கூடியவர்களை  திட்டக் கூடாது ,குறை  கூறக் கூடாது   என்று  எந்த  சட்டமும் ,சாஸ்திரங்களும்  சொல்ல வில்லை …..

சாப்பாடு  சரி  இல்லைன்னா  கடையை  மாத்துன்னு  நீங்க  சொல்லலாம் ,ஆனா  அந்த  கடைய  விட்டா  வேறு  கதி  இல்லைன்னா  என்ன  பண்ண  முடியும்?

அயல் நாட்டிற்கு  பிழைக்க  வந்து மனசால்  செத்து  போன  ஒரு  இளைஞனின் கதை

வீட்டிற்கு  வாசு  ஒரே  பிள்ளை.அம்மா  தனலட்சுமி  ஹவுஸ் ஒய்ப் ,அப்பா  செந்தில்  நாதன்  ஒரு   பெட்டிக்கடை  வைத்து  பிழைப்பு  நடத்துகிறார். பையனை  ஏதோ அவங்க  சக்திக்கு   முடிஞ்ச  வரை  காலேஜ்  வரைக்கும்  படிக்க  வச்சாங்க  

.அம்மாவுக்கு  எழுத  படிக்க  தெரியாது .அப்பா  சீக்குல  படுத்ததாலே   கடைய  கவனிக்க  முடியல.குடும்ப  தேவைக்காக  ஒருவர்  குடும்பத்துக்காக  சம்பாதிக்க  வேண்டிய  சூழ்நிலை   ஏற்பட்டது எத்தனை  காலத்துக்கு  தான்  குடும்பம்  கஷ்டப்பட்டுக்கிட்டே   இருக்க  முடியும் ..அதனால்  வேறு  வழியில்லாமல்  தனது  ஒரே  மகன்  வாசுவை  பஞ்சம்  பிழைக்க  அயல்  நாட்டுக்கு  அனுப்பினார் …..

வாசுவின்  குடும்பம்  நடுத்தர  குடும்பம்  என்றாலும்  வாசு  செல்வந்தன்  பிள்ளை  போல்  வளர்க்கப் பட்டான் தனி  அறை ,இரண்டு  பேன் ,தனி  டிவி ,மியூசிக்  பிளேயர்  ,  பேட் ,செல்  போன்  ,ரீடிங்  டேபிள்  என்று  அனைத்து  வசதிகளையும்  அவர்  தந்தை  செய்து  கொடுத்திருந்தார். பெரும்பாலான  வேலைகளை  செந்தில்நாதனே  செய்து  முடிப்பார் எல்லாரும்  பேச்சுக்கு  தான்  சொல்வார்கள்  உன்னை  பாலூட்டி  தேனூட்டி  வளர்த்தேன்  என்று ,ஆனால்  செந்தில்  நாதன்  தன்  மகனை  சீராட்டி  ,பாராட்டி  பாலூட்டி ,தேனூட்டி  வளர்த்தார் .அவன்  மீது  ஒரு  தூசு  படாமல்  கண்ணின்  இமை  போல்  பாதுகாத்து  பாசத்துடன்  வளர்த்தனர் …..உண்ண  ருசிகரமான  சத்தான   உணவு ,உடுத்த  வித  விதமான  ஆடைகள்  என்று  தன்  சம்பாத்தியத்தில்    பாதியை  தன்  மகனுக்காக  செலவு  செய்தார்.மொத்தத்தில்  ராஜா  வீட்டு  கண்ணு  குட்டியாக  வாசு  வளர்ந்தான்.

வாசுவுக்கு  கோழி ,கொக்கு ,காடை ,இறால்  என்றால்  ரொம்ப  அலாதி  பிரியம் ஆனால்  தனலட்சுமி  அதுவெல்லாம்  செஞ்சு   கொடுக்க  மாட்டாள்   ஏன்னா  அவளுக்கு  அந்த  பிராணிகளை  சுத்தம்  செய்யவும்  தெரியாது ,எப்படி  செய்யணும்னு  தெரியாது ….ஆனா  செந்தில்நாதன்  தன்  மகனுக்காக  சுத்தம்  செய்து  சரியான  மசாலாக்களை  போட்டு  பக்குவமாக  சமைத்து  தருவார் இப்படி  வாசுவுக்காக  ஒவ்வொரு  விஷயத்தையும்  பார்த்து  பார்த்து  செய்தார்  செந்தில்  நாதன் …. வாசுவுக்கு  எல்லாமே  அவன்  அப்பா  தான் செந்தில்  நாதனுக்கு  எல்லாமும்  தன்  பையன்  தான் ….செந்தில்  நாதனும்  வாசுவும்  அப்பா  பிள்ளை  மாதிரியே  இருக்க  மாட்டாங்க . ஒரு  மாமன்  மச்சான்  போல  நண்பர்கள்  போல  கல கலன்னு   சந்தோசமா  மனச  விட்டு  எல்லாவற்றையும்  பற்றி  பேசுவாங்க .தோளுக்கு  மிஞ்சினா  பெத்த  பிள்ளைய  தோழனா  பார்க்கணும்னு    எல்லோரும்  சொல்லுவாங்க  ஆனா  எந்த  அப்பாவும்   செய்ய  மாட்டாங்க  ஆனா  மத்த அப்பாக்களை  போல  செந்தில்நாதன்  இல்லை.

பெத்தபுள்ள  தோளுக்கு  மிஞ்சினா  தோழன் என்கிறதை  வாக்கா ,வாக்கியமா  மட்டும்  சொல்லாம   வாழ்கின்ற  வாழ்க்கையில  வாழ்ந்து  காட்டினார்.பையனை  சந்தோசமா  வாழ  வைக்கணும்னு  ரொம்பவும்  ஆசைப்பட்டார் ஆனா  அதற்கு  அவர்  பொருளாதாரம் போதியதாய்  இல்லை .பையனுக்கு  வருங்காலத்துக்கு  வேண்டி  நிறைய  செய்யணும்னு ஆசைப்பட்டார்   இந்த  நேரத்துல  பார்த்து  சீக்குலயும்   படுத்துட்டார் .கடன்  வேற  நிறையவே  இருந்தது வீட்டு  லோன் ,பெட்டி  கடை  லோன் ,சீட்டு  பணம்  என்று  எல்லாமும்  அந்த  குடும்பத்தின்  மீது  விழுந்தது. செந்தில்நாதன்  படுத்த  படுக்கையானதால்  குடும்ப  பொறுப்பு  வாசுவின்  மீது  விழுந்தது .தன்  குடும்பம்  கடன்  துயரில்  இருந்து  மீண்டு  வர  அயல்தேசம்  வந்தடைந்தான் ….

ஏஜென்ட்  மூலம்  அந்த  துபாய்  வேலை  கிடைத்து  இருந்தது ஒரு  பாலைவனத்துக்கு  அருகே  உள்ள  சுமார்  150 பேர்  வேலை  செய்ய  கூடிய  கம்பெனி அது .12 மணி  நேர  வேலை .மாதத்திற்கு   ஒரு  விடுமுறை ,கம்பெனி  கேம்ப்  அக்காமடேஷன் .விடுமுறை  நாளில்  மட்டுமே  கேம்ப்பை  விட்டு  வெளி  வர  முடியும் ஆனால்  அந்த  பகுதியை  விட்டு  வெளி  வருவதற்க்கே   பாதி  நாள்  போய்  விடும் இதனால்  மாதத்திற்கு  ஒரு  நாள்  கிடைக்கும்  விடுமுறைக்கு  கூட  உடல்  அசதியால்  வெளி  வர  பிடிக்காது ஒரு  பக்கம்  உடல்  அசதி  மறு  பக்கம்  மனசு  சிறைப்பறவை  போல்  அவதி  பட்டது .

நாங்கள்  வேலை  பார்ப்பது  எரிவாயு  உற்பத்தி  செய்ய  கூடிய  நிறுவனம்  அதனால்   சமைப்பதற்கு  கூட  கேம்ப்பில்   எந்த  வித  அடிப்படை  வசதியும்  இல்லை .கம்பெனி  சமைப்பதற்கு  எந்த  வித  வசதியும்  செய்து  தருவதற்கு  தயாராக  இல்லை . சாப்பாடு  ஹோட்டலில்  தான்  அந்த  பகுதியில்  ஒரே  ஒரு  ஹோட்டல்  மட்டுமே  இருந்தது ..

அந்த ஹோட்டலை  விட்டால்  வேறு  எங்கும்  சாப்பிட  ஹோட்டல்  எதுவுமில்லை .அந்த  ஹோட்டலில்  காலையில்  ரொட்டியும்  ,மதியம்  மோட்டா  சோறும் ,இரவு  காய்ந்து  போன  குபூஸும்தான்  கிடைக்கும் ..நம்  நாட்டை  போல்  வாய்க்கு  ருசியான  சாம்பார் ,ரசம்  எல்லாம்  அங்கு  கிடைக்காது சப்ஜி  ,தால் ,பாலக் ,என்று  வாய்க்கு  நுழையாத  ,ருசி   இல்லாத  வெளி  நாட்டு   முறையில்   சமைக்க  பட்ட  உணவே  கிடைத்தது ..

அந்த  சாப்பாடை  விட்டாலும்  வேறு  சாப்பாடு  கிடைக்க  வாய்ப்பில்லை பசித்தால்  புலி  கூட  புல்லை  திண்ணுமாம் ….முதல்  இரண்டு  மாதம்  ஏனோ  தானோ   என்று   சரியாக  சாப்பிடாமல்  ஏதோ  மனதின்  தைரியத்தில்  நாட்களை  ஓட்டி  விட்டேன் ,அதன்  பின்  வந்த  மாதங்களில்  வேலை  பளு  காரணமாக  உடல்  சோர்வு  அடைய  தொடங்கியது .பிடித்தாலும்  பிடிக்கா  விட்டாலும்  வாழ்க்கை  கப்பல்  ஓட இந்த  நரகத்தில்  போராடி   தான் ஆக வேண்டும் ..ஆனாலும்  அப்பப்ப  ஊர்  நினைவுகளில்  மூழ்கி  மனசு  சந்தோசப்  பட்டு  கொள்ளும் ஆனால்  சில  சமயங்களில்  ஊரில்  எப்படி  இருந்தோம்  இங்கு  இப்படி  வாழ்கிறோமோ  என  எண்ணி  மனசு  கனத்து  போனதும்  உண்டு .

ஊர்ல  ராஜா  போல  தனி  ரூம் ,ரெண்டு  ஃபேன் ,டிவி ,ரேடியோ  என  ஜம்முன்னு  வாழ்ந்தவன் .என்  ரூம்ல  ஆறு பேரு  வரைக்கும்  தூங்கலாம்  இருந்தாலும்  அப்பா  நான்  டிஸ்டர்ப்  இல்லாம  தூங்கணும்கிறதுக்காக  பெரிய  வீடா வாடகைக்கு  எடுத்து  எனக்கு  தனி  ரூமு  கொடுத்தாரு ..ஆனா  இப்ப  இங்க  நான்  இருக்குற  குருவி  கூடு   போல   இருக்குற  கம்பெனி  கேம்ப்ல  ரெண்டு  அல்லது  மூணு  பேரு தான்  தங்க  கூடிய  இடத்துல  அடுக்கு  கட்டில்  போட்டு  ஒரு  சின்ன  இடத்துல  எட்டு  பேரு  அல்லது  பத்து  பேரை  தங்க  வச்சு  இருக்கானுங்க ..ரூமுக்கு  ஒரு  புதிய  ஆளு  நுழைஞ்சா  ஒரு  கெட்ட  வாசனை  அடிக்கும்  ஆனா  அந்த  நாத்தத்துல இருந்து, இருந்து  தங்கி, தங்கி  அது  பெருசா  என்னை   பாதிக்கலை ….ஒரு காலத்துல மூட்ட  பூச்சினா  என்னன்னுனே  எனக்கு  தெரியாது ஆனா  இப்பவெல்லாம்   மூட்ட  பூச்சி  கடி  இல்லாம  தூங்கினதா  சரித்திரமே  இல்லாம  போச்சு ….டெய்லி  காலைல  எந்திரிச்சா  பாத்ரூமுக்கு  கியூவுல  நிக்கணும் ,ஒரு  அவசரத்துக்கு  கூட  பட்டுன்னு  பாத்ரூம்  போக  முடியாது .எல்லாமே  வேக  வேகமாக  நடக்கணும் .பாத்ரூம்  போனா  பத்து  நிமிஷம்  தான்  அதுக்கு  மேல  உள்ளே  இருந்தா  கியூவுல   நிக்குற  அடுத்தவன்  முட்டுவான் ….ரூம்ல  வாய்  இருந்தும்  ஊமையாக  தான்  இருக்கணும்  அவனவன்  போன்ல  சாங்கை   போட்டு  விட்டு  ஹெட்  போனை  சொருகிவிட்டானா   அவ்வளவு  தான்

அவனவன் ,அவனவன்  வேலையை  பார்ப்பான் .இந்த  நாட்டில்  வருவதே  பணம்  சம்பாதிக்க  தான்  அதனால்  மனிதர்கள்  பணத்தின்  பின்  ஓடும்  மிருங்கங்களாக   இருந்தனர்  ..ஒன்றாக  பணி  செய்தும்  யார்  மீதும்  நம்  நாட்டை  போல்  எந்த  வித  நட்பும்  தோன்றவில்லை நட்பை  விடுங்கள்  ஒரு  ஆத்திர  அவசரத்துக்கு  எவனும்  வர  மாட்டான் .ஒரு  உடம்பு  சரி  இல்லைன்னாலும்  நாம்ம  தான்  பார்த்துக்கணும் .ஒரு  ஆறுதலான  வார்த்தை  கூட  எவன்கிட்ட  இருந்தும்  வராது.அதிகமா  பேசுன்னா   ஏதாவது  உதவி   கேட்போம்னு   கூட பணி  செய்யுற  ஆளுங்களோட  நினைப்பு ……

எத்தனை  கஷ்டப் பட்டாலும்  ,துயரப் பட்டாலும்  அப்பாவுக்கு  வார வாரம்  வெள்ளிக்கிழமை  போன்  செய்து  விடுவேன் .அப்பாவிடம்   பேசும்  போது  குரல்  திக்கும் ,பேசுவதற்கு  வார்த்தைகள்   அதிகம்  இருந்தும்  பேச  முடியாமல்  தவிப்பேன் …ஒரு  வழியாக  என்  கஷ்டங்களை  அப்பாவுக்கு  தெரிய  விடாமல்  பேசி  விடுவேன் ….பேசி  முடித்ததும்  கொஞ்சம் மனசுக்கு  நிறைவாக  இருக்கும் .அப்பாவின்  குரலை  கேட்கும்  போது  ,எத்தனை  வலிகள் இருந்தாலும்  மனசுக்கு  ஆறுதலாக  இருக்கும் ..அப்பாவுக்கு  உடம்பு  தளர்ந்து  இருந்தாலும்  அவர்  மனசுக்கு  தரும்  ஆறுதல்  இழந்து  போன  என்  இளமைக்கு  புத்துணர்ச்சி  தரும் .அம்மாவிடம்  அதிகம்  பேச  மாட்டேன்  எப்ப  பார்த்தாலும்  குடும்பப்  பிரச்சனை ,கடன்  பிரச்சனை ,வீட்டு  பிரச்சனைன்னு  சொல்லி  வாடி  போய்  இருக்கும்  என்  மனதை  மேலும்  காயப்படுத்தி  விடுவாள் அம்மா  பாசக்காரி  ஆனால்  எப்படி  பேச  வேண்டும்  என்று  தெரியாது சூதுவாது  தெரியாத  இந்த  உலகத்தை  இன்னமும்  அறியாத  ஐம்பது  வயது  குழந்தை ,மனசுல  ஆயிரம்  பாசம் ,நேசம்  வச்சிருப்பா ஆனா  இந்த  பாழா  போன  பணத்தாலே   என்  மனச  காயப்படுத்தி  விடுவா .எத்தனை  கஷ்டம்  வந்தாலும்  எதிர்த்து  நின்று  சிங்கம்  போல  இருந்தவர்  என்  அப்பா அவரிடம்  பேசும்  போது  எனக்கு  வரும்  தெம்பு ,வைராக்கியம் ,முயற்சி ,நம்பிக்கை  எல்லாம்…!
மற்றவர்களிடம்  பேசும் போது அந்த உணர்வெல்லாம் எனக்கு கிடைப்பதில்லை.அப்பா  மட்டும்  என்  கூட  இருந்தா  இந்த  உலகத்தையே  என்  காலடியில்  கொண்டு  வர  முடியும்  

எல்லார்க்கும்  அம்மா  பத்து மாசம் வயித்துல  இருந்து  சுமந்தாங்கன்னா  எங்க  அப்பா  என்னை  இருபத்தி அஞ்சு வருஷம்  அவரு  மனசுல  இருந்து  சுமந்தாரு ….நான் என்றால்   அது  நான்  இல்லை நான்  யாருன்னா  என்  அப்பாவோட  நகல் ,பிரதிபலிப்பு ,நிழல்  என்று  கூட  சொல்லலாம் .ஏன்  என்றால்  எனக்கு  எல்லாமுமாக  இருந்தவர்  என்  அப்பா  தான் ….எனக்கு  பிடித்தவைகள்  எல்லாம்  எனக்கு  கிடைக்க  வேண்டும்  என்று  நினைத்தவர் ..எனக்கு  தேவையானதை  பார்த்து  ,பார்த்து  செய்தவர்

எல்லாரும்  சொல்வாங்க  மாதா ,பிதா  ,குரு  ,தெய்வம் ன்னு ….எனக்கு  எல்லாமும்  என்  அப்பா  தான் ….என்  பிதாவுக்கு  அப்புறம் தான்  அந்த  மாதா  தெய்வம் எல்லாம் …..நான்  துபாயில்  எந்த  விஷயம்  செஞ்சாலும்   என்  அப்பாவின்  நினைவுகளை  ஒவ்வொரு  விஷயமும்  ஞாபகப்  படுத்தும் ….ஒரு  நாள்  கம்பெனி  அருகே  உள்ள  அந்த  ஹோட்டலில்  சிக்கன்  சாப்பிட்டேன் ,மிகவும்  ஆறி  போய்  இருந்தது  அந்த  சிக்கன்  துண்டு..

அந்த  சிக்கன்  துண்டை  சிறிது  எடுத்தேன்  கொஞ்சம் பிங்க்  கலரில்  இருந்தது நிறம்   மாறி  இருந்தும்  வேறு  வழி  இல்லாமல்  உண்டேன்  ஆனால்  என்னையும்  அறியாமல்  கண்ணில்  கண்ணீர்  வர தொடங்கியது …..காரணம்  எங்க  அப்பா  எனக்காக  விடியற்காலை  அஞ்சு மணிக்கே  எழுந்து  சந்தைக்கு  போய்  உயிரோடு  இருக்கிற  விடக்  கோழியை  வாங்கி  வந்து  காலை  12 மணிக்குள்ளே  எல்லா  மசாலாவும்  இட்டு  அதை  பக்குவமா  சமைத்து  அது  அடுப்படியில இருக்கிற  சூட்டோட  இருக்கிறப்பவே  எனக்கு  எடுத்து  வந்து  அவர்  கையாலேயே  ஊட்டி  விடுவார் அப்படி  வாய்க்கு  ருசியா  சாப்பாடு  போட்டு  வளர்த்த  அப்பா  நான்  இப்படி  சாப்பிடுறது  தெரிஞ்சா  நிச்சயம்  மனசு  உடைஞ்சு  போயிடுவாரு ,அதனாலே  தான்  நான்  எத்தனை  கஷ்டப் பட்டாலும்  என்  அப்பாவுக்காகவும்  என்  குடும்பத்துக்காகவும்   தினம் தினம்  உருகும்  மெழுகுவர்த்தியாய்  என்னை  உருக்கி  கொண்டு  என்  குடும்பத்துக்கு  வெளிச்சம்  தர  ஆசைப்  பட்டேன்.மாச  மாசம்  தங்குற  இடம் ,சாப்பாடு போக  ஒரு  நையாபைசா  கூட  எனக்குன்னு  எடுத்து  வைக்காம  குடும்பத்துக்காக  அனுப்பி  வைத்தேன்

வாழ்க்கை  நல்ல  படியாக  போய்  கொண்டு  இருந்தது …..என்  கடன்  முடிவடையும்  தருணம் ,அப்பா  சொன்னார் கண்ணா வாசு  நீ  மீண்டும்  அந்த  ஊர்ல  எங்கள எல்லாம் விட்டிட்டு  தனியா  கஷ்டப்பட  வேண்டாம் .நீ  சீக்கிரம்  வந்திடு ,உனக்கு  பொண்ணு  பாக்குறேன் ,உனக்கு   பிடிச்சிச்சுனா  கல்யாணம்  வச்சுக்கலாம்   அதன்  பிறகு  நீ  ஊரோட  வந்து  ஏதாவது பிழைப்பை  பாரு.நீ  எங்களோட  இருந்தா  தான்  எங்களுக்கு  சந்தோசம்ன்னு  சொன்னார்”.

அந்த  வாரம்  நான்  பெற்ற  இன்பத்தை  இந்த  உலகில்  யாரும்  பெற்று  இருக்க  மாட்டார்கள்.  என்  மனம்   வண்ணத்துப்பூச்சி  போல  ஆயிரம்  கனவுகளோடும்  ,கற்பனைகளோடும்  எல்லையில்லா  மகிழ்ச்சியில்   பறந்தது ….அப்பா  ,அம்மாவோடு  ஊரில்  காரில்  போவது  போலவும் ,வருங்கால  மனைவி  யாரென்று  தெரியாத  போது  முகம்   தெரியாத  என்  கற்பனை மனைவியோடு  படம்  பார்க்க  சினிமா தியேட்டர்  போவது  போலவும் ,அவளோடு  சின்ன  சின்ன  சேட்டைகள்  ,குறும்புகள்  செய்து  செல்ல  திட்டுகள்   வாங்குவது போலவும் ,இந்த  உலகை  பார்க்காத  என்   குழந்தையை  நான்  ட்ரோலியில்   வைத்து  கடற்கரையோரம்  வாக்கிங்  கொண்டு  செல்வது  போலவும்  ஆயிரம் கனவுகள் , கற்பனைகள்  …..

எத்தனை  சந்தோசம்  ,மகிழ்ச்சி ..நான்  நினைத்தவைகள்  எல்லாம்  நிஜமாக  கூடாதா  என  மனசு  ஏங்கியது ….

அப்பா  அனுப்பும்  பெண்ணின்  புகைப்படத்துக்காக  காத்துகொண்டு  இருந்தேன் என்  அப்பா  அம்மாவோட  என்  வருங்கால  மனைவியோட  என்  தாய்  நாட்டுல  நல்ல  படியா  செட்டில்  ஆகணும்  அது  தான்  என்  வாழ்க்கையோட  லட்சியமாக   இருந்துச்சு  ….நம்ம  ஊர்லயே  ஒரு  வேலை ,அப்பா ,அம்மா  ஆசை  பட்டமாதிரி  ஒரு  இடம்  வாங்கியாச்சு ,ஊர்ல  போய்  நல்ல  படியா  தொழில்  செஞ்சு   வீட்டை  கட்டிடலாம்  என்ற  நம்பிக்கை  மட்டும்  என்  நெஞ்சில்  இருந்தது …..

இன்னும்  இரண்டு  அல்லது  மூன்று   மாதத்தில்   என்  தாய்  நாட்டுக்கு  செல்ல  போகிறேன்  இந்த  நரகத்தில்  இருந்து  எனக்கு  விடுதலை  கிடைக்க  போகிறது  என்று  மனசு  சந்தோசப்பட்டு  கொண்டது ….

வாழ்க்கை  சில  நேரங்களில்  சினிமாவை  விட   அதிக  திருப்பங்கள்  வரும் ,சோதனைகள்  வரும் ,துயரங்கள்  வரும்  என்பதை  என்  வாழ்க்கையின்  மூலமே  நான்  அறிந்து  கொண்டேன்   ….

பெண்ணின் புகைப்படம்  வரும்  என்று  எதிர்பார்த்தவனுக்கு  அப்பாவின்  உடல்நிலை  சரி  இல்லை  அதனால்  ஆஸ்பத்திரியில்  சேர்த்து  இருக்கிறோம்  கொஞ்சம்  சீரியஸ்  என்று  செய்தி  வந்தது பதறி  அடித்துக்கொண்டு  எமர்ஜென்சி  லீவு  வாங்கி  கொண்டு  இந்தியா  சென்றேன் .அப்பாவை  காப்பாற்ற  வேண்டும்  என்றால்   பத்து  லட்சம்  செலவாகுமாம் ,அந்த  ஆப்ரேஷன்   கொஞ்சம்  மேஜர்  ஆப்ரேஷனாம். அப்பாவுக்கு  கொஞ்சம் சுகர்  கம்பிளைன்ட் வேறு   இருக்கு  வேளாவேளைக்கு  சரியா  சாப்பிடலைன்னாலும் ,டென்ஷன்  ஆனாலும்  கொஞ்சம்  மயக்கம்  வரும்  நானும்  அம்மாவும்  அப்பாவை  நல்ல  படியதான்  பார்த்துக்கிட்டோம்.

அந்த  ஆண்டவனுக்கு  கண்ணு  இல்லைன்னு  சொல்லலாம்  யாருக்கும்  மனசால  கூட  எந்த  கெடுதலும்  செய்யாத   எங்க  அப்பாவுக்கு கல்லீரல்ல  கேன்சரை  கொடுத்தான்  அந்த  கேடு  கெட்ட ஈவு இரக்கமில்லாத  ஆண்டவன் .இருக்கிறவனா  இருந்தா  வாரி  வாரி  கொடுக்கலாம்  ஆனா  நானோ  இல்லாதவன் .இப்ப  தான்  தட்டு  தடுமாறி ,முட்டி  மோதி  அடுத்தவனும் மனுஷனா  மதிக்கிற  மாதிரி  வளர்ந்து  வரும்  நிலையில  இந்த  சோதனையை  ,துன்பத்தை  அந்த  ஆண்டவன்  கொடுத்தது தப்பு …..அந்த  வியாதி  எங்க  அப்பாவுக்கு  பதில் எனக்கு  வந்தா  கூட  சனியன்  போனா  போயிட்டு  போதுன்னு  விட்டிடலாம்

என் குடும்பத்தோட   ஆணி  வேர்  ,தூண்  ,உயிர்  எல்லாமே   என்  அப்பா  தான் என்  அப்பாவ  எப்படியாவது  காப்பாத்திடணும்   அது  மட்டும்  தான்  என்  கண்ணுக்கு  தெரிஞ்சது  ..என்  அப்பாவை  விட   இந்த  உலகத்துல  எதுவும்  பெருசா  தெரியலை  சொத்து  பணம்  எல்லாம்  என்  அப்பா  கால்  தூசுக்கு  சமம்  அதனாலே  வேறு  வழி  இல்லாமல்  அவசரத்துக்கு  நான்  வாங்கிய  லேண்ட்டை  சேல் செய்தேன் எட்டு லட்சம்   மதிப்பு  உள்ள  இடம்  என்  சூழ்நிலை   அறிந்து  அந்த  நிலத்தை  அஞ்சு லட்சத்துக்கு தான் புரோக்கர் மூலமாக ஒருவன்  வாங்கினான் சீட்டு  பணம்  ரெண்டு  லட்சம்  கடன்  வாங்கினேன் ,உறவினர்  ஒருவர்  சகோதரி  உறவு  முறை  எனக்கு  வேண்டும் .அவர்  நகையை  அடமானம்  வைத்து  பாங்கில்  வைத்து  மூன்று லட்சம்   பணத்தை பெற்றேன் எப்படியோ  என்  அப்பாவை  காப்பாற்ற  ஆப்ரேஷனுக்குரிய   பணத்தை  சேர்த்து  விட்டேன் டாக்டர்   சொன்னார்  தம்பி  கவலை  படாதீங்க  அப்பாவுக்கு  எதுவும்  ஆகாது ..ஆபரேஷனுக்கு  அப்புறம்  அப்பா  நல்லபடியாய்  ஆயிடுவார் பழைய  மாதிரி  நீங்கள் உங்கள் அப்பாவை பார்க்கலாம் என்றார் .

ஒரு  வழியாக ஆப்ரேஷன்  நல்லபடியாக  முடிந்தது ..அப்பாவை  ஐ.சி .யு- வில்  பத்து  நாள்  வைக்க  வேண்டும்  என்றனர் .எனக்கு  லீவு  முடிந்து   விட்டதாலும் ,என்  கடனும்  என்  சூழ்நிலையும்  மீண்டும்  அந்த  நரகத்துக்கு போக  வைத்தது ..வர   மனமில்லாமல்  அப்பாவை  ஐ .சி .யு  அறைகண்ணாடி  வழி  மூலம்  பார்த்து  விட்டு  என்  உயிரை  அப்பா  காலடியில்  வைத்து  விட்டு  செத்த  பிணமாக  விமானத்தில்   ஏறி  மீண்டும்  அந்த  நரகத்துக்கு  சென்றேன் ….

ஒரு   மாதம்  அப்பா  அந்த  ஆஸ்பத்திரியிலேயே  தங்க  வைக்கப்பட்டார் அம்மா  கையில்  ,காதில் இருந்த  தங்க  நகையை  விற்று   அப்பாவுக்கு  வைத்தியம்   பார்த்தாள் ….யார்  கண்ணு  பட்டதோ  என்னவோ  தெரிய  வில்லை ….ஆஸ்பத்திரியில்  இருந்து  வீட்டிற்க்கு  வந்த சில  வாரங்களில்  அப்பாவின்    உயிர்  இந்த  உலகை  விட்டு  போனது ….அந்த  பாழாய்  போன  டாக்டர்   காலில்  எத்தனை   முறை  விழுந்து  இருப்பேன்  .நீங்க  தான்  எங்க  அப்பாவை  காப்பாத்தணும்   என்று ..ஒரு  தெய்வம்  போல  அவனை  நம்பி  இருந்தேன் ..லட்ச  கணக்குல  பணத்தை  வாங்கிட்டு  என்ன  வைத்தியம்  பண்ணான்னு  தெரியலை ஆப்ரேஷன்  பண்ண  ஒரு  சில  மாதத்திலேயே  அப்பா  செத்திட்டாரு.

அவருடைய  இறப்பு  என்  கண்ணின்  வசீகரத்தை எடுத்து சென்றது ..என்  உதட்டில்   இருந்து  உண்மையான புன்னகையை எடுத்து சென்றது ஒவ்வொரு  பிள்ளையும்  தன்  பெற்றோர்க்கு  கடைசி  கால  சடங்கை  நிறைவேற்ற   வேண்டுமாம்  என்  அப்பாவின்  இறப்பிற்கு  கூட  தாயகம்  வர  முடியாத  பாவியாகி  விட்டேன் ….நெஞ்சம்  வலித்தது துடித்தது ,கனத்தது ….அம்மாவுக்கு  எதுவும்  தெரியாதே ..அப்பா  இல்லாமல்  அம்மா  என்ன  என்ன  கஷ்டத்தை  அனுபவிப்பா ,அதை  நினைக்கும் போதே  மனசு  வலிச்சு ,இந்த  உலகமே  வேண்டாம்னு உயிரை  மாய்ச்சுக்கலாம்னா  நானும்  இல்லைன்னா   அம்மாவை  யார்  பார்த்துக்கவா ?என்ன  விட்டா  அம்மாவுக்கு  வேறு  நாதி   இல்லையே?

சீட்டு  கடன்  லோன் ,உறவினரான  சகோதரியின்  கடனுக்காக  அம்மாவை  தனியே  வேதனையில்  மூழ்கடிக்க  விட்டு  நானும்  அந்த  பழைய  நரகத்திலேயே  தினம்  தினம் நொந்து  நொந்து  சாகலாம்  என  முடிவெடுத்தேன் என்  வாழ்க்கையில்  மேடு  இருக்கிறதோ  இல்லையோ  ஆனால்  நிறைய  பள்ளங்கள்  இருக்கிறது தினம்  தினம்  விழுகிறேன் ,பல  காயங்களோடும் ,வலிகளோடும் சிகரம்  மேல  வெற்றி  என்னும்  இலக்கை  அடைய  போராடி  கொண்டு  இருக்கிறேன்  என்  தாயின்  புன்னகைக்காக. 

கண்ணு  இல்லாத ,இரக்கம்  இல்லாத  கடவுளே   என்  தாய்  அவள்  வாழ்நாள்  முடிவடைவதற்குள்ளாவது   அவளுக்கு  சந்தோசத்தை   தர  கூடிய  வகையில்  என்  வாழ்வில்   மாற்றத்தை   ஏற்படுத்து ……வாழ்க்கையில்  சோதனை  இருக்கலாம்  சோதனையே  வாழ்க்கையாக   கூடாது கடவுள்னா  இரட்சிக்கணும் ,துன்புறுத்த  கூடாது ?!

வாசுவின்  வாழ்வில்  போராட்டம்   தொடர்கதையாகிறது ………..

வெளியே
அழகாய்  மிளிரும்  அடுக்கு  மாடி  கட்டிடங்கள்
உள்ளே 
அலங்கோலமாய்   அடுக்கு  மாடி  கட்டில்கள்
முதுகு  தட்டி  உறங்க  வைப்பாள்  என்  அன்னை -இங்கோ
என்னை  உறங்க  விடாமல்
உடம்பை  இரணப்படுத்துகிறது -மூட்டப் பூச்சி
அம்மா  ஊட்டும்  அறுசுவை  உணவுக்கு  ஈடாகுமா ??
அரபு  நாட்டு  குளிர்சாதன  பெட்டிகளில்  கிடைக்கும்
காஸ்ட்லி  பிஸ்சாவுக்கும் ,பர்கருக்கும்
ஆற்று   நீராடல் ,வாய்க்கால்  பாய்ச்சல் ,பம்பு  செட்டு  குளிகை
மறந்தே  போச்சு
அனல்  கக்கும்   வெந்நீர்  குளியலில் ….
பாவாடை ,தாவணி  உடுத்தும்  கன்னியர்களின்
கலையழகை  கவலையில்லாமல் 
கள்ளத்தனமாய் ரசித்த 
விடலை  விழிகள்
ஏனோ  விகாரமாய் மேக்அப் பூசும்  பிலிப்பிணிகளின் சிலிகான் முகத்தை
ஆடை  குறைத்து காட்டும் வெள்ளை தோல்
உடலை இளமை இருந்தும்  ரசிப்பதில்லை-விரும்புவதில்லை 
அப்பாவின்  அனுசரணையான  அன்பு  பேச்சு
அம்மாவின்  மடி  சாய்ந்து 
கவலை  இல்லாமல்  உறங்கும்  கள்ளம் கபடமில்லாத
அந்த குழந்தை  பருவம்  மீண்டும்  கிடைக்குமா  என்ன ?
எல்லாம்  கனவில்  மட்டுமே
நடக்க  கூடிய 
கானலாய்  என்  காலம்  மாறி  போச்சு ….
அப்பாவின்  மரணம்  கேட்டு
உயிர்  மூச்சு  மட்டும்  தான்  நின்னு போக  வில்லை
வாழ்வின்  மற்றவைகள்  எல்லாம்
காணாமல்  போச்சு
இங்கு  அழுதால்  அழுவதற்கும்  யாருமில்லை
சிரித்தால்  சிரிப்பதற்கும்   யாருமில்லை
நான்  பார்க்கும்  முக  கண்ணாடியை  தவிர ….
ஏனோ  நட்பு ,உறவு  கூட  நாடகமாய்  தான்  தெரிகிறது …..
பல  சோதனை ,துயரம்  வந்த  போதும்
இந்த  நரகத்தில் 
பயணம்  செய்து  கொண்டு  இருக்கிறேன்
என்  தாயின்  புன்னகைக்காக ….
நான்  சேர்க்கும்  ஒவ்வொரு  காசும் 
தூக்கத்தை  மட்டும்  தொலைத்து  சேமித்தது   அல்ல ….
நிம்மதியை  தொலைத்து  சேமித்ததும்  தான் …..
என்  வாழ்க்கை  எப்படி ,என்ன  ஆக  போகிறது 
என்பது  அந்த  நீதி ,நேர்மை ,இரக்கம்  உள்ள  அந்த  ஆண்டவனுக்கே  வெளிச்சம் …..
உண்மையுடன்  இந்த நொடி பொழுது வரை உழைக்கிறேன்  ….என்  தாயின் 
புன்னகைக்காக …….!!
உயிர்  மூச்சுடன்  மெழுகை போல்  உருகி  கொண்டு  இருக்கிறேன்
அழிவது  நான்  என்றாலும்  பரவாயில்லை  ஆனால் 
என்  தாயின்  வாழ்வில்  ஒளி  பிரகாசமாய்  வீசணும் ….
அதுவே   என்  ஆன்மாவின்  துடிப்பு …….

***
நன்றி :  லி. நௌஷாத்கான்  & மணிமேகலைப் பிரசுரம்