ஆலிஸ் வாக்கரின் புகழ்பெற்ற புதினம் The Color Purple - அன்புள்ள ஏவாளுக்கு என்னும் பெயரில் தமிழில் 2019 சென்னை புத்தகக் கண்காட்சியில் எதிர் பதிப்பகம் வெளியிடவுள்ளது. வாழ்த்துகள் ஷஹிதா
------------
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு :
பஷீரின் பாத்துமாவின் ஆடு நாவலில் ஒருகாட்சி, ஊதல் இசைக்கும் பிச்சைக்காரனைப்பார்த்துவிட்டு குழந்தையொன்று வீட்டுக்குள் ஓடி வந்து “பீப்ளி பீச்சண மிஸ்கீன்” வந்திருப்பதாக அறிவிக்கிறது. குழந்தையின் மழலையும் கீச்சுக்குரலும் மலையாளத்தின் கொச்சையும் தேனாய் வழியும் இந்த வாசகத்தை எப்படி மொழிபெயர்ப்பது? ஆலிஸ் வாக்கரின் இந்த நாவலின் மொழியும் அப்படிப்பட்டது தான். எளிமையான இனிமையான மழலைமொழி போன்ற கறுப்பர்களின் இந்த ஆங்கிலத்தை( கறுப்பினத்தவருக்கு மட்டுமே சரியாகப் புரியும்படியான) அதன் தன்மை மாறாமல் மொழிபெயர்ப்பது கிட்டத்தட்ட அசாத்தியமாகவே இருந்தது.
அமெரிக்காவுக்கு அடிமைகளாய் இழுத்து வரப்பட்டு ஆங்கிலம் கற்றுத்தரப்படாத/கற்றுக்கொள்ளயியலாத ( வெள்ளைத்தாளோ, எழுதுகோலோ அவர்கள் கையிலிருப்பது கடுங்குற்றமாக பார்க்கப்பட்டது) நிலையில் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் அவர்களாகவே அவர்களுக்கென சமைத்துக்கொண்ட பாஷை இது. கொச்சையான அந்த மொழியையே அவர்கள் பல தலைமுறைகளாகப் பேசிவந்திருக்கின்றனர்.
//I DON’T NEVER GIT USED TO IT//
//HE SAY, NAW, CANT SAY I IS//
Flawed English என்றே சொல்லப்படும் இப்படியான குறைபட்ட ஆங்கிலத்தை அச்சொட்டாய் தமிழுக்குப் பெயர்ப்பது உண்மையில் சிக்கலானது. சீலியும் ஷுக்கும் கடவுளைப் பற்றி பேசிக்கொள்ளும் அத்தியாயத்தை மொழிபெயர்த்தபோது தான் என் மொழிப்புலமையின் போதாமையையும் இந்தப் புத்தகத்தை மொழிபெயர்ப்பதிலுள்ள உச்சபட்ச சவாலையும் முழுமையாக உணர்ந்தேன்.
பர்பிள் எனும் கருஊதா வண்ணத்துக்கான ஒரு சொல்லும் தமிழில் இன்றுவரையிலும் உருவாக்கப்படவில்லை என்றே அறிகிறேன். கத்திரிப்பூவண்ணம், நாவற்பழநிறம் என்றெல்லாம் தான் நாம் இட்டு நிரப்ப வேண்டியிருக்கிறது. தி கலர் பர்பிள் எனும் தலைப்பை அப்படியே மொழிபெயர்க்க இயலாமல், “கடவுளின் கைப்புண்” “சீலியின் கடிதங்கள்” என்றும் இன்னும் என்னவெல்லாமோ வும் எழுதிப்பார்த்து “அன்புள்ள ஏவாளுக்கு” என்பதில் தொனிக்கும் நாவலில்பயிலும் கடிதத்தன்மையில், கறுப்பினப் பெண்களின் வாழ்கையையும், அவர்களுக்குள் நிலவும் சகோதரத்துவமும் நட்பும் அவர்களின் துயர் துடைத்து நிமிர்ந்து நிற்க உதவுவதில் இருக்கும் உலகளாவிய (universal) தன்மையை ஏவாளின் பெயர் உணர்த்துவதில் நிறைகிறேன்.
உங்களால் முடியும் ஷஹிதா என்று ஊக்கம் கொடுத்து, ஆப்ரிக்கக் கொச்சையை பேச்சுவழக்கில் எழுதவிருந்த எனக்கு, “அது மரபில்லை” என்று சரியான நேரத்தில் அறிவுறுத்தி உதவிய மொழிபெயர்ப்பாளர் திரு.ஆர்.சிவகுமார் அவர்களுக்கும் என்னுடைய நச்சரிப்புகளுக்கு முகம் சுளிக்காமல் நாவல் மொழிபெயர்ப்புப் பயணத்தில் கூடவே இருந்து உதவிய நண்பர்கள் எழுத்தாளர்கள்: தூயன், த.ராஜன், ராகவன் சாம்யெல் ஆகியோருக்கும், மெய்ப்புத்திருத்துவதிலும், மொழிபெயர்ப்புப் பணியின் கடுமையில் நான் சோர்ந்தபோதெல்லாம் மீண்டெழ உதவிய கவிஞர் பரமேசுவரிக்கும் என் நன்றியும் அன்பும்.
தன் தோழியான கறுப்பினப்பெண்மணி ஒருவரிடம், நான் குறுஞ்செய்தியில் அனுப்பும் கேள்விகளைக் கேட்டு, அவருடைய பதில்களையும் உடனுக்குடன் திருப்பியனுப்பி உதவிய( டெக்ஸாஸில் வசிக்கும் ) என் பள்ளித்தோழி சுபாஷிணியின் உதவியில்லாவிட்டால் என்ன செய்திருப்பேன் என்று நினைத்துப்பார்க்கவே அச்சமாகயிருக்கிறது.
பெரும்பான்மையான நேரங்களில் கணிணித்திரையிலிருந்து கண்ணெடுக்காமலே அவர்கள் கேள்விகளுக்கு பதிலளித்த என்னை இத்தனைக்காலம் பொறுத்துக்கொண்ட கணவருக்கும் குழந்தைகளுக்கும் முத்தம்.
மொழிபெயர்ப்புப் புத்தகங்களை சமர்ப்பணம் செய்வது மரபில்லையென்றாலும் நான் எழுதுவதில் தானே எழுதுவதாக மகிழும் மகன் அர்ஷதுக்கு இந்த புத்தகத்துக்காக மாதக்கணக்கில் நான் உழைத்த மணித்துளிகளைச் சமர்ப்பிக்கிறேன்.
ஷஹிதா
டிசம்பர் 10 2018
புதுக்கோட்டை
*
அட்டை வடிவமைப்பு : சந்தோஷ் நாராயணன்
Thanks : Shahida , Asif & Karthigai Pandian