நன்றி : ஆசிப் மீரான் , குங்குமம்
திருவோணப் பண்டிகையாயிற்றே, மக்களைப் பார்க்க மாவேலி மன்னன் வருவாரே!' என்ற எண்ணமெல்லாம் இல்லாமல்இன்றும் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது வெயில்.
சனிக்கிழமை விடுமுறை நாள்தானென்றபோதும் சில அலுவல்களைச் செய்து முடிக்க ஜெபல் அலி வரை போக வேண்டியிருந்தது. திருவோணப் பண்டிகை தினம் வரும்போதெல்லாம் திருவனந்தபுரத்தில் கட்டடக்கலை வகுப்புகளுக்குச் சென்ற நாட்களும், விடுதியில் தங்கியிருந்து 'ஓண ஸத்ய' உண்ட நாட்களும் நினைவுக்கு வரும்.
கல்லூரி காலங்களில் மலையாள நண்பர்கள் ஓணம் பற்றிச் சொல்லும் கதைகளை விடவும் விடுதியில் தலை வாழையிலையில் முப்பதிற்கும் அதிகமான காய்கறி பதார்த்தங்களுடன் வழங்கப்பட்ட 'ஓண ஸத்ய' வின் சுவைக்கு நாக்கு அடிமைப்பட்டுப் போனதால் மலையாளிகளை விடவும் ஓணப்பண்டிகைக்காக நான் அதிகம் எதிர்பார்ப்போடு காத்திருப்பதாக நண்பர்கள் கேலி செய்ததென்னவோ உண்மைதான்.. ஓணத்தின் போது எல்லோரும் வீடுகளுக்குச் சென்று விடுவதால் ஓண விடுமுறை முடிந்து விடுதியில் ஓணக்கொண்டாட்டம் ஓண ஸத்யவோடு கோலாகலம் பெறும்.
கொல்லத்தில் நாங்கள் தங்கியிருந்த போது, வாடகை வீட்டின் உடைமையாளரான பணிக்கரின் வீட்டில்தான் எல்லா வருடங்களிலும் ஓண விருந்து எங்களுக்கு. பணிக்கரின் மனைவி, ' இல நெறச்சு கறி வைக்கேண்ட திவஸமானு மக்களே! பக்ஷே அம்மய்க்கு வய்யா!' என்று சொல்லிக் கொண்டே இலை நிறைய ஏராளமாகச் சமைத்து, சாப்பிட அழைத்து மகிழ்வார்.
படிப்பு முடிந்து சென்னையில் பணிபுரிந்த காலங்களில் ஓணமோ, 'ஸத்ய'யோ இல்லாத சோகம் துபாயில் பணிக்காக வந்ததும் மாறி விட்டது.
கேரளியர்களுக்கு வளைகுடாநாடுகள் புகுந்த வீடென்பதால் ஏர் இந்தியா மூலம் டன் கணக்கில் காய்கறிகளைக் கொண்டு வந்து 'ஓண ஸத்ய' ஒரு குறையுமில்லாமல் நடத்துவதில் அவர்கள் தேர்ந்திருந்தார்கள்.
துபாய் வந்த ஆரம்ப காலங்களில் குறிப்பிட்ட சில கேரள உணவகங்களில் மட்டுமே ஸத்ய கிடைக்குமென்பதால் பெரும் கூட்டமும் ஆரவாரவுமாக இருக்கும்.
மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தனது 'டேஸ்ட் பட்' உணவகத்தில் அவரே விளம்பியதால் துபாயின் கராமாவே போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த வரலாறும் உண்டு இந்த 'ஸத்ய'க்கு.
பின்னாட்களில் ஓண ஸத்ய பெரும் வியாபாரமாகி விட்டதால் 'சரவண பவனிலும் ஓண ஸத்ய என்று அறிவிப்பு வைக்குமளவுக்கு நிலைமை போய் விட்டது. தலப்பாகட்டி பிரியாணியில் கூட ஒண ஸத்ய அடுத்த ஆண்டு கிடைத்தாலும் ஆச்சரியமில்லை.
'ஓண ஸத்ய'வில் இலை நிறைந்து பல வண்ணங்களில் உணவு நிறைவது ஓரழகென்றால் கஸவு செட்டணிந்து 'முல்லப்பூ' சூடி சேர நன்னாட்டிளம் நங்கையர் நீள்கூந்தலை உலரவிட்டு நடந்து வருவதைக் காண்பது பேரழகு.
எல்லா வருடமும் ஓணம் வரும்போதும் 'ஓண ஸத்ய' எங்கே சாப்பிடுவது என்ற குழப்பமே வரும். முப்பதில் தொடங்கி நூறு திர்ஹாம் வரை ஏராளமான வகைகளில் ஓண ஸத்ய இருந்தாலும் தனி 'நாடன்' கேரள உணவகங்களில் சாப்பிடுவதுதான் என் வழக்கம். இதற்காகவே எந்த உணவகத்தில் என்ன கிடைக்குமென்ற தகவலைச் சேகரித்து வைப்பதும்.
ஜெபல் அலி சென்றிருந்ததால் திரும்பி வருகையில் 'டிஸ்கவரி கார்டனில்' வைட் ரேஞ் உணவகம் போனால் கூட்டம் இல்லை. ஆனால் கல்லைக் கண்டால் நாயைக் காணோம் கதையாக வண்டி நிறுத்த இடமில்லை. இந்த மடமில்லையென்றால் சந்தை மடமென்று அங்கிருந்து 'நெல்லற' உணவகம் வந்தால் மதியம் இரண்டரை மணியாகியிருந்தும் அந்தக் கால ரஜனி படத்தின் முதல் நாள் காட்சி போல பெரும் கூட்டம். காத்திருந்தாலும் சாப்பாடு கிடைக்குமென்ற உறுதி இல்லாததால் தப்பித்து ஓடி 'ரெட் பெப்பர்' போனால் சமீபத்து ரஜனி பட முதல் நாள் மாதிரி காத்தாடியது. 'என்ன விசயம்?' என்று கேட்டால் 'ஸத்ய கழிஞ்ஞு'ன்னு படத்தைத் தூக்கிட்டோம்குற மாதிரியே சொன்னானுங்க..
'போயும் போயும் நாக்குக்கு அடிமையாகி விட்டாயே அற்பப் பதரே!' என்று மனசு ஒரு பக்கம் சொன்னாலும் 'ஸத்ய'யில் விளம்பப்படும் இஞ்சிப்புளியை நினைத்ததும் அரசியல்வாதிகாலைப் போல மனசாட்சியைக் குழி தோண்டி மூடி விட்டு அருகிலிருந்த உணவகம் நோக்கி வண்டி தன்னால் நகர்ந்தது.
அருகில் நிலா உணவகம் தென்பட்டது. இங்கும் சாப்பாடு இல்லையென்றால் இந்தப் பழம் புளிக்குமென்று நடையைக் கட்டி விட வேண்டியதுதான் என எண்ணியவாறே உணவகத்திற்குள் நுழைந்தால் ஒரு மேசை மட்டும் ஆளில்லாமல் இருந்தது.
மணி மூன்றாகி இருந்ததால் ஸத்ய கிடைக்குமோ என்றொரு ஐயம். பணியாளர் ஒருவரிடம் நம்பிகை தளர மெல்ல விசாரித்தேன்
"சார் இரிக்கு. ஸத்ய உண்டு" என்று சொன்னதும் 'செந்தமிழ் நாடெனும்போதிலே' என்று கேட்டது போலானது எனக்கு.
வாழையிலையில் பரிமாறப் போகும் உணவுக்காகக் காத்திருந்த போது பர்தா அணிந்த பெண்கள் சாப்பிட்டு விட்டு வெளியே வந்து கொண்டு இருந்தார்கள்.
நான்கு பேர் அமரும் மேசையில் நான் மட்டுமே அமர்ந்திருந்தேன். என்னைப் போலவே உண்பதற்குத் தாமதமாக வந்த மூன்று சேட்டன்மார்கள் "இவிடெ இரிக்காமோ? வேற ஆளுண்டோ?" என்று கேட்டு நான், "இல்லை"யென்றதும் எனது மேசையில் அமர்ந்தார்கள்
நேரமாகி விட்டதால் கூட்டம் குறைந்து போயிருந்தது. நிதானமாக அமர்ந்து நிதானமாக ரசித்து ருசித்துச் சாப்பிட. முடிந்தது. மாம்பழ புளிஸ்ஸேரியும், இஞ்சிப்புளியும், அன்னாசி பச்சடியும், அடப்பிரதமனுமாக... அடடா!! நல்லவேளையாக சொத்தெதுவும் எனக்கில்லை. இருந்தால் எழுதிக் கொடுத்திருப்பேன்.
கூட்டமில்லாததால் விளம்புதலும் ஸத்யவுக்கான ஒழுங்கோடு நடந்தது. இலையின் இடது ஓரத்தில் உப்பு, மாங்காய், எலுமிச்சை ஊறுகாய்கள் சர்க்கர வரட்டி என்று அதன் ஒழுங்கோடு ஒவ்வொரு பதார்த்தங்களாக வந்தன. வழக்கமாகக் கூட்டுகறியில் கொஞ்சம் சொதப்புவார்கள். இங்கே அதுவும் அமர்க்களம். நாவின் சுவை மொட்டுக்களெல்லாம் உயிர்த்தெழுந்து நர்த்தனமாடின.
'ஆவஸ்ய்முள்ளது வாங்ஙிச்சு கழிக்கு' என்று சொன்னதால் வெட்கம் மறந்து திரும்பத் திரும்ப மாம்பழ புளிஸ்ஸேரியில் மையம் கொண்டேன்.
என் மேசையில் உடனிருந்த சேட்டன்மார்களும் உண்டு கொண்டிருந்தார்கள். கேரளம் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டிருப்பது குறித்து பேச்சு தொடர்ந்தது. அதில் ஒருவர் ஓணம் ஊரில் கொண்டாட வேண்டியவரென்பதும், கொச்சி விமான நிலையம் மூடப்பட்டதால் கோயம்புத்தூர் வந்து சார்ஜா வழி அவசரமாக வந்திருக்கிறார் என்பதும் பேச்சு வழியாகப் புரிந்தது.
இயற்கையை மனிதர்கள் தொடர்ந்து உதாசீனப்படுத்துவதும் இயற்கை பெருங்கோபம் கொண்டு திருப்பி அடிப்பதும் தெரிந்தும் மனிதர்கள் ஏன் தொடர்ந்து அதே தவறைத் திரும்ப செய்கிறார்கள் என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருந்தது.
"இம்முறை ஊரில் ஓணம் களையிழந்து விடும். முகாம்களில் கோடித்துணி இல்லாமல் கொண்டாடும் நிலையை நினைக்க முடியவில்லை" என்றார் சேட்டன்களில் ஒருவர்
"வீட்டுக்கு போன் செஞ்சேன். 'எங்களாலதான் கொண்டாட முடியல. நீயாவது எங்களுக்கும் சேர்த்து கொண்டாடு'ன்னு அம்மா சொன்னாங்க. அதான் உங்க கூட வந்தேன். இல்லாட்டி நமக்கென்ன ஓணம்?" என்றார் இன்னொரு சேட்டன். சொல்லும்போதே கண்கள் லேசாகக் கலங்கி விட்டது அவருக்கு.
"கழிக்கடோ! எல்லாம் செரியாகும்" ஆறுதலாகச் சொன்னார் அவர்களில் மூத்தவரைப் போலத் தோன்றியவர்.
சட்டென்று ஓர் அமைதி. எனக்குமே கூட 'ஓண ஸத்ய' சட்டென்று சுவை குன்றிப் போய் விட்டதைப் போல் ஓர் உணர்வு.
உள்ளுக்குள் உறையும் சோகங்களைச் சுமந்து கொண்டுதான் பலரும் வாழ்க்கையைக் கொண்டாடுவதாக பாவனை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது போல.
'பாலட ப்ரதமன்' நான் விரும்பிச் சுவைக்கும் பாயாசம். ஆனாலும் அது பரிமாறப்பட்டும் குடிக்கும் மனநிலையில் இப்போது நானில்லை. நான் இலையை என் பக்கமாக மூடிய அதே நேரம் அவர்களும் உணவருந்தி விட்டு இலையை எதிர்ப்பக்கமாக மடித்தார்கள். நான் அவர்களைப் பார்த்த அதே நேரம் அவர்கள் என்னையும் பார்த்தார்கள்.
நான் உடனே, " எனக்குப் புரிகிறது. இது சோகமான ஓணம் என்பதால் இலையை அப்படி மடித்திருக்கிறீர்கள். தமிழ்நாட்டில் நாங்கள் இப்படித்தான் மடிப்போம் என்பதால் நான் இப்படி மடித்து விட்டேன் " என்றேன் தெரியாமல் செய்து விட்ட உணர்வுடன்.
"ஓ!! நீங்க தமிழ் நாடா? நான் கேரளான்னு நெனச்சேன். நல்லா மலையாளம் பேசுது நீங்க" என்று உடைந்த தமிழில் சிரித்து விட்டு கூடவே " நீங்க செஞ்சது தப்பில்ல. இது எங்க ஊர்ப்பழக்கம். நாங்க இப்படித்தான் எப்பவும் மடிப்போம்" என்றார் அந்த மூத்த சேட்டன்.
நான் தமிழ்நாட்டில் இலையை எப்படி மடிப்பது என்று காரணம் சொல்லிக் கொண்டிருந்தபோது நாங்கள் நால்வரும் ஒன்றாக வந்திருப்பதாக எண்ணி, அனைவருக்கும் சேர்த்து மொத்தமாக 'பில்' கொண்டு வந்து விட்டார் உணவக ஊழியர்.
நான் பதறிப் போய், எனக்கான தொகையைக் கொடுக்க முன்வந்ததும் அறிமுகமில்லாத அந்த சேட்டன், " எங்க ஊர்ல மழை வெள்ளம் வந்து ஓணத்தோட வெளிச்சமே இல்லாமப் போயிடுச்சு. ஆனா, தமிழ்நாட்டுல இருந்து நீங்கல்லாம் எவ்வளவு உதவி உடனே செஞ்சிருக்கீங்க? அத நெனச்சா ரொம்ப சந்தோசமா இருக்கு. கஷ்டத்துல கைகொடுக்குறவன் தான் மனுசன். ஊரு விட்டு ஊரு வந்து உங்க நாட்டுக்காரங்க செஞ்ச உதவி சாதாரணமானதில்ல. தயவு செஞ்சு அதுக்கு நாங்க செய்ற சின்ன உபகாரமா இது இருக்கட்டும். தெய்வமாகத் தந்த வாய்ப்பா நெனச்சுக்கிறேன். தயவுசெஞ்சு மறுக்காதீங்க" என்று சொல்லி விட்டு அவரே பணம் கொடுத்து விட்டார்.
"ஓண ஆஸம்ஷகள் சேட்டா!!" என்றேன்.
"நன்றி" என்றார் சேட்டன் அழகுத் தமிழில்.
**