Friday, July 27, 2018

சும்மா இருத்தலே சுகம் - ராஜ சுந்தரராஜன்


சும்மா இருத்தலே சுகம் - ராஜ சுந்தரராஜன்
_______________________________

‘காலம் என்றொன்று இல்லை’ என்பது சில ஞானியர் கூற்று. அதன் வழி அவர்கள் உணர்த்த முயல்வது, ‘காலமே துன்பத்திற்குக் காரணம்’ என்பதை.

“ஓரிடத்தில் சும்மா இருக்கிறீர்கள். அதுவழியே ஒரு கார் போகிறது. அழகிய கார். அதுபோல் ஒரு கார் வாங்கவேண்டும் என்று விரும்புகிறீர்கள். பணம் இல்லை. பாடுபட்டுச் சேர்க்கிறீர்கள். வாங்கப் போகும் போது, அங்கே அதைவிட அழகிய கார்கள் விற்பனைக்கு நிற்கின்றன. முந்திப் பார்த்த காரும், வாங்கிய பிறகு, முன்பு நாடிய திருப்தியைத் தருமா என்பதும் ஐயம்.”

இது ஜித்து கிருஷ்ணமூர்த்தி (ஜே.கே.) அவர்களின் சொற்பொழிவுகள் ஒன்றில் நான் கேட்டது.

அவர் மேலும் சொன்னார், “கண்ணில் தெரிகிறதே அது நிகழ்காலம்; அதுவே, மூளையில், அழகிய கார் எனப் பதிவாகுகையில், இறந்தகாலம்; அதை வாங்க வேண்டும் என விரும்புவதிலிருந்து பின் எல்லாமே எதிர்காலம்.”

||ஆசையே துன்பத்திற்குக் காரணம்|| என்று கண்டுரைத்த புத்தர் ஆனால் ‘ஆசை என்றால் என்ன?’ என்று விளக்கினார் இல்லையாம். அது இன்னதென்று காட்டியவர் ஜே.கே. என்கிறார்கள்.

ஜே.கே. என் செவி கேட்க மேலும் சொல்லுவார்: “நிகழ்காலத்தை இறந்தகாலம் ஆக்கி அதை எதிர்காலத்தின் மீது சுமத்துவதே ஆசை.”

அதாவது, ‘நிகழ்காலத்தில் வாழ்வோம் எனில் துக்கம் இல்லை,’ என்கிறார். இயேசுவும்: “வானத்துப் பறவைகள் தங்களுக்காக விதைப்பதில்லை, அறுப்பதில்லை, சேமிப்பதில்லை... ” (மத். 6:26)

ஆனால் பிழைப்புக்கு உழைக்கிற நமக்குக் ‘காலநீட்சி’ உண்டுதானே? அதன் அடிப்படையிலேயே (காலம் = தூரம் / வேகம்), கார் உருவாக்கப் படுகிறது; வேளாண்மை முயலப்படுகிறது.

‘காலநீட்சி’ இன்னதென்று காண்பிக்கும் அமெரிக்கப் பெண்கவி ஒருவரின் ஒரு கவிதை அடி: Rain is the lake stretched in time.

யாதும் ஊரே யாவரும் கேளிர்;
தீதும் நன்றும் பிறர்தர வாரா;
நோதலும் தணிதலும் அவற்றுஓர் அன்ன;
சாதலும் புதுவது அன்றே; வாழ்தல்
இனிதுஎன மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்
இன்னாது என்றலும் இலமே; மின்னொடு
வானம் தண்துளி தலைஇ, ஆனாது
கல்பொருது இறங்கும் மல்லல் பேரியாற்று
நீர்வழிப் படூஉம் புணைபோல் ஆர்உயிர்
முறைவழிப் படூஉம் என்பது திறவோர்
காட்சியின் தெளிந்தனம் ஆகலின், மாட்சியின்
பெரியோரை வியத்தலும் இலமே;
சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே. 
 

எல்லாம் நம்ம ஊருதான்; எல்லாரும் நம்ம சொக்கார சொந்தக்காரங்கதாம்; நல்லது கெட்டது மற்றவங்களால வர்றது இல்லை; நோய்நொடி படுறதும் தணியுறதும் அதுபோல ஒன்னுதான்; சாவுறதும் புதுசு இல்லை; செயலா வாழ்றதுதான் இன்பம், விட்டுவிலகுறது துன்பம்னு சொல்றதும் இல்லை; ‘மின்னலோடு வானம் துளித்துளியாப் பெய்தது, பெருகி, மலையோடு மோதி இறங்குமே அந்த வேகமான பேராற்று நீர்ல சிக்குன படகு போல, உயிரும் கட்டுண்டு ஊழ்வழிப் போகும்’கிறது, ரிஷிகள் கண்டுசொல்லித் தெளிவானதுனாலே, ‘மாண்புமிகு’க்களைப் பாராட்டவும் மாட்டோம்; எளியவர்களை எடுத்தெறிஞ்சு பேசவும் மாட்டோம்.

ஊழ் = உதிர்தல். துளி என உதிர்ந்து பெருகி ஆறெனப் பாய்கிறதாக உவமம். ‘பிறர்தர வாரா’ என்றதினால், அவை நாமே உதிர்த்தவைதாம். மின்னல் = பகட்டு, ஆர்ப்பாட்டம். கல்பொருது = நிறுவப்பட்ட கருத்துகள், மரபுகளோடு மோதி. ‘புணை’ என்றதினால், ‘ஆர் உயிர்’ = அரிய உயிர் என்று ரொமான்ற்றிசைஸ் ஆகாமல் ‘கட்டப்பட்ட உயிர்’ (உயிர்வளர்த்தல்) என்று பொருள்படும்.

இதில், காரிய பலாபலனைத் தருவதற்கு ஒரு கடவுள் இல்லை பாருங்கள்! இதுதான், இந்த மனநிலையோடு கூடிய வாழ்க்கைதான் நமக்குத் தமிழ் மூதாதையர் பரிந்துரைத்தது. ஆனால் இங்கிருந்த அரசர்களும் மக்களும் சண்டை போட்டுக்கொண்டுதான் கிடந்தார்கள். கிடக்கிறோம். நம்மால் துளி தலைவதே ஊழ். ஆகவே, உணவுக்கு உழைப்பதற்கு மேல், எதையாவது சாதிக்க வேண்டும் என்று ஆசைப்படாமல், சும்மா இருங்கள்!

The time you enjoy wasting is not wasted time.
- Bertrand Russell

*

July 25, 2014

நன்றி : ராஜ சுந்தர ராஜன் (G+)