Tuesday, May 22, 2018

“ சான் ராத் " - கனவுப் பிரியன்

“ சான் ராத் "


நிலம், பண்பாடு மற்றும் அரசியல் காரணங்களால் ' பழைய உலகம் ' எனப் பெயர் பெற்ற புவியின் கிழக்கு அரைக்கோளத்தில் இளவேனிற்க்காலம் குடி வந்து அமர்ந்த நேரம் அது.

அதனால் வெயிலுக்கும் குளிருக்கும் வாக்கப்படாத, உடலுக்கு உகந்த ஒரு இளம் காற்று ஊர் முழுக்க ஏகாந்தமாய் ஊடுருவிப் பரவி இருந்தது.

வரலாற்றுப் பாரம்பரிய அரேபிய மெக்காவின், உம்முல் குரா (நகரங்களின் தாய்) பல்கலைக் கழகத்தின் கார் பார்க்கிங்கில், வந்த வேலை முடிந்த சந்தோசத்தில் சோம்பல் முறித்தபடி நின்றிருந்தான் அனீஸ்.

பகல் பனிரெண்டு மணிக்கெல்லாம் வந்த வேலை முடிந்து விட்டது. இனி சாயங்காலம் கிளம்பினாலும் நாளைக்காலை ரியாத் சென்று சேர்ந்து விடலாம் என்ற எண்ணம் அவனுக்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

கூடு திரும்புதல் தான் எத்தனை சுகமானது.

பயணக் காதலர்களாக இருந்தாலுமே அவர்கள் என்ன அல்பட்ரோஸ் பறவையா…? தொடர்ச்சியாக ஐந்து வருடங்கள் எல்லாம் தூங்கியபடியும் சாப்பிட்டபடியும் வானில் தொடர்ச்சியாக பறக்க.

கடலும் கடல் சார்ந்த நெய்தல் நில ஊரில் இருந்து பாலை வந்த சாதாரண கடற்காகம் அவன். அதனால் வீடடைதல் என்பது அவனளவில் ஆசுவாசம்.

லேப்டாப், டூல் பேக் எல்லாம் காரில் போட்டுவிட்டு, மூன்று தினம் முன்பு அவனுடன் ரியாதில் இருந்து வந்த அலுவலக பாகிஸ்தானி டிரைவர் ஜலால் சாச்சாவுக்கு (சித்தப்பூ) போன் செய்தான்.

அவரும் டெலிவெரி வேலையை முடித்திருப்பாரா என்ற எண்ணங்களுடன்.

“ வந்த வேலை முடிஞ்சிருச்சு, நீங்க எங்க இருக்கீங்க சாச்சா "

“ இஸாரா இப்ராஹீம் (இப்ராஹீம் தெரு) ல இருக்கிற ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஸ்டோரில் நிற்கிறேன் "

“ அப்படியா, நான் சாந்திரம் ரியாத் கிளம்பலாம்ன்னு இருக்கேன் "

“ எனக்கும் இன்னைக்கு வேலை முடிஞ்சிரும், ஆனா நான் நாளைக்குத் தான் ரியாத் கிளம்புவேன் "

“ தங்கப் போறீங்களா, ஏன், என்ன விசேஷம் "

“ இன்னைக்கு சான் ராத் (பௌர்ணமி). கொண்டாட வேணாமா "

“ ஓ .....என்ன பிளான் "

ஜலால் சாச்சா சொன்ன பிளான் கேட்டு ஆர்வமாய் அவனும் ரியாத் திரும்பும் பயணத்தை மறுநாள் என மாற்றி, அவருடன் சேர்ந்து கொள்வதாக தெரிவித்தான்.

யுனிவெர்சிட்டி கார் பார்கிங்கில் இருந்து வண்டி எடுத்து, தங்கி இருக்கும் ஹோட்டல் போகும் வழியில் இருந்த மலையாளி கடை சென்று மோட்டா ரைசும் மத்தி மீன் குழம்பும் கேரட் பொரியலுமாக வெளுத்து கட்டிவிட்டு அறைக்கு வந்து நல்ல மதிய தூக்கத்துடன் கலந்துரையாடி விட்டு ஆறு மணி வாக்கில் எழுந்து ஹோட்டலில் இருந்து நடந்தே வந்து சற்று அருகில் இருந்த ரெஸ்டாரண்டில் “ ஏட்டா ஒரு லிப்டன் சாய் " என்றபடி ஒரு பழம்புரியை (வாழைக்காயைகடலை மாவில் முக்கி எடுத்து விற்றால் அது பஜ்ஜி. அதையே வாழைப்பழத்தை கடலை மாவில் முக்கி எடுத்து விற்றால் அது பழம்புரி) பேப்பரில் வைத்து பண்டைய முன்னோர்கள் செய்தது போலே எண்ணையை பிழிந்து எடுத்து விட்டு கையில் மிஞ்சிய எண்ணையைக் கண்டு பொருட்படுத்தாது ரோட்டின் வெளி ஆட்களை வேடிக்கை பார்த்தபடி சாப்பிடத் துவங்கினான்.

எப்பொழுதுமே வெளிநாட்டு ஆட்களை தன்னகத்தே கொண்ட, இன்னமும் தன் அடையாளத்தை மாற்றாத பண்டைய மெக்கா நகரத்து நிலம் சூடும் இல்லாது குளிரும் இல்லாது சமநிலையில் இருப்பது கூட வெளிவாழ் மக்களுக்கு ஒரு வகை இயற்கை கொடை.

அண்டைய தேசங்களில் இருந்து வரும் இஸ்லாமியர்களுக்கு மெக்காவில் வாழும் ஒவ்வொரு நாளும் முடிந்த மட்டும் அதிகபட்ச அமல்களை (பிராத்தனைகளை) செய்துவிட வேண்டும் என்ற தேட்டம் இருந்தபடியே இருக்கும். தன்னை மறந்து சிந்தனை வயப்பட்டு இஹ்ராம் எனும் இரண்டு தைக்கப்படாத துணியை உடலில் சுற்றியபடி கடந்து செல்லும் வித விதமான அதிலும் கூடுதலாய் வயதான ஆட்களை பார்த்தபடியே டீ குடித்து விட்டு ஹோட்டல் வந்து சேர்ந்தான் அனீஸ்.

பலவித வெளிநாட்டவர்கள் வந்து செல்லும் இடம் என்பதால் ஹோட்டலின் வரவேற்ப்பு அறையில் ஒவ்வொரு நாட்டின் நேரத்தையும் காட்டும் கடிகாரங்கள் ஏழு எட்டு வித விதமான நேரத்துடன் காட்சி அளித்தன உள்ளூர் நேரம் மணி 6.30 ஆனதையும் காட்டியபடி.

அனீசின், ரியாத் அலுவலகத்தில் ஸ்ப்ளிட் டூட்டி என்பதால் இந்நேரம் மேனேஜர் வந்திருப்பான் என்று எண்ணியபடி ரூம் வந்து டிவியின் சத்தத்தை குறைத்து விட்டு மொபைலை கையில் எடுத்தான்.

“ சார், நான் நாளைக்குத் தான் கிளம்புறேன் "

மறுமுனையில் மேனேஜர் “ போன வேலை முடிஞ்சிருச்சா "

“ ஆமா"

“ நான் செக் வாங்க அடுத்தவாரம் அப்துர்ரஹ்மானை அனுப்பலாமா "

“ ம்ம்"

போன் துண்டிக்கப்பட்டது. வரவு வரப்போகிறது என அறிந்தால் மேற்கொண்டு மேனேஜர் எதையும் யாரைப் பற்றியும் துருவிக் கேட்பதில்லை.

இரவு மிதமான உணவை எடுத்துக் கொண்டு ஹோட்டலிலே தொழுது விட்டு மனதிற்குள் லேசான பயம் கலந்த புது ஆர்வம் சூழ்ந்திருக்க காரை எடுத்துக் கொண்டு மெக்கா நகரில் இருந்து சாலியல் கபீர் ஊர் போகும் வழி நோக்கி வண்டியை செலுத்தினான்.

அது ரியாத் செல்லும் ஹைவே ரோடு என்பதால் இரவும் வண்டிகளின் போக்குவரத்து அதிகமாகத்தான் இருந்தது. வீசும் லேசான இளம் காற்றுக்கும் ரோட்டின் நடுவில் இருந்த பேரிச்சை மரங்கள் தேர்வுக்கு படிக்கும் குழந்தைகள் போல மெல்லமாய் ஆனால் தொடர்ச்சியாய் உடல் அசைத்தபடி இருக்க ஹைவேயில் யு-டர்ன் எடுத்து அந்த ஒற்றையடி ரோட்டின் பக்கம் அனீஸ் வந்து சேர்ந்த போது மணி இரவு 9.

மருதாணி வைத்த மணப்பெண்ணின் கை போல திட்டு திட்டாய் சில குன்றுகளின் நிழல்கள் பூமியில் படிந்திருக்க பதினான்காம் முழு நிலவின் வெளிச்சப் பிரவாகம் பூமி எங்கும் வழிந்து பெருக்கெடுத்து ஓடியது.

பகலுக்குப் போட்டியான ஒரு வெளிச்ச இரவின் ஒளி மழையில் நனைந்தபடி அந்த இடம் காட்சி அளித்தது. எப்பொழுதும் விளக்குகள் அதிகம் இல்லாத இடத்தில் தான் நிலா வெளிச்சத்தின் முழு வீச்சையும் காண இயலும்.

சுற்றிலும் மஞ்சள் நிற மூன்றடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் கொஞ்சம் கடைகளுக்கு நடுவே அந்த ஒற்றையடி சிமென்ட் பாதை மேல் நோக்கிச் சென்றது.

ஏற்கனவே நான்கு ஐந்து கார்கள் அந்த இடத்தில் நின்றிருந்தன. அதனுடன் சேர்த்து தனது காரையும் நிறுத்திவிட்டு வெளியே வந்து தலையை உயர்த்தி அண்ணாந்து அதைப் பார்த்தான்.

' ஜபல் அல் நூர் ' (ஒளி மலை)

முதன் முதலாக அல் குர்ஆன், நபிகள் பெருமானார்க்கு முஹம்மது நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அருளப்பட்ட ஹீரா குகையை தன்னகத்தே கொண்ட 2100 அடி உயரம் கொண்ட ஜபல் அல் நூர் மலை பௌர்ணமி நிலவின் வெளிச்சத்தில் சாந்தமான கம்பீரத்துடன் காட்சி அளித்தது.

சின்ன சின்னதாய் ஆங்காங்கே மேலே ஏறும் ஆட்கள் குட்டி குட்டியாய் சிறிய வெள்ளைப் புள்ளிகளாய் தெரிந்தார்கள்.

கரடுமுரடான ஒரு ஒழுங்கு இல்லாத புருட் சாலட்டின் மீது மெலிதாய் உருகி வழிந்து ஓடும் வெண்ணிலா ஐஸ்கிரீம் போல அந்த மலை மீது நிலவின் ஒளி பரவி உருகி வழிந்துக் கொண்டிருந்தது.

மரங்கள் செடி கொடிகள் இல்லாத வெறும் பாறைகளை மட்டும் தன்னகத்தே கொண்ட பொட்டல் மலை என்பதால் உச்சி வரை நிலவின் வெளிச்சத்தில் தெளிவாய் காண முடிந்தது.

ரமலான் மாதத்தின் ஒரு இரவில் தான் இந்த மலையில் அல் குர்ஆன் அருளப்பட்டது. அதனால் ஒரு இரவின் மடியில் இந்த மலையில் ஹீரா குகையை காண்பதென்பது ஒரு அபரிமிதமான சுகம்.

அதைத் தேடியே இந்த நள்ளிரவுப் பயணம்.

ஜலால் சாச்சாவுக்கு போன் செய்தான். “ நான் வந்திட்டேன், நீங்க எங்க இருக்கீங்க "

“ கீழயா இருக்க "

“ ஆமா, கடைகள் இருக்குல்ல அது பக்கத்துல வண்டியை நிறுத்திட்டு நிக்கிறேன் "

“ வண்டிய பூட்டிட்டு மேல வா. நாங்க மலை ஆரம்பிக்க இடத்துல நிக்கிறோம். "

“ சரி" என்றபடி ஆரம்பத்தில் இருந்த ஒரு பக்காலாவில்(பெட்டிக்கடை) ஏறி ஒரு தண்ணீர் பாட்டிலும் ஒரு ஸ்பிரைட் பாட்டிலும் வாங்கி பேன்ட் பாக்கெட்டின் இருமருங்கிலும் சொருகிக் கொண்டு சற்று வேகமாக மேல் நோக்கி நடக்கத் துவங்கினான்.

மலைக்குச் செல்லும் ஆரம்ப பாதை சற்று நேர்செங்குத்தாக இருக்கும். அத்தனை எளிதாக யாரும் காரை ஓட்டிக் கொண்டு மலையின் ஆரம்பப் பாதைவரை செல்லக் கூடாது என்ற எண்ணத்தில் அந்த சிமென்ட் ஒற்றைப் பாதை ரோடு செங்குத்தாகப் போடப்பட்டுள்ளது போலத் தோன்றியது.

ஜலால் சாச்சாவும் மற்றும் சிலரும் காத்திருக்கிறார்களே என்ற உந்துதலில் சற்று ஓட்டமும் நடையுமாக செங்குத்துப் பாதையில் ஏற அவர்களை அடையும் போது மூச்சிரைக்க ஆரம்பித்து விட்டது அனீசுக்கு.

ஜலால் சாச்சாவுடன் நடுத்தர வயது நான்கு பேர் வெள்ளை நிற சேர்வானி (ஒரு வகையான ஜுப்பா) உடை அணிந்து மெல்லிய ரம்யமான ' ஊத்' வாசனைத் திரவியத்தின் வாடை சூழ்ந்திருக்க நின்றிருந்தனர்.

சிறிய அறிமுகத்திற்குப் பின் அனைவரும் மலை மீது இருக்கும் ' ஹீரா குகை ' நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.

பௌர்ணமியாக இருப்பதனால் குளிர் நிலவின் வெளிச்சப் பிரவாகத்தில் மலையின் மேலே செல்லும் பாதை துல்லியமாகத் தெரிய அனைவராலும் ஏற முடிகிறது. மற்ற நாட்களில் மலை உச்சியில் உள்ள ஹீரா குகை அருகே சிறிய வெளிச்சம் தெரியும் மேலே செல்லும் பாதை எல்லாம் கறுத்த இருட்டுக்குள் காணவே இயலாது.

மலைக்கு மேலே செல்லும் பாதையும் கோர்வையாக இல்லாமல் எங்கெங்கோ மேலும் கீழுமாக கரடுமுரடாக செல்வதால் பகலில் வேண்டுமானால் செல்லலாம். மற்றபடி இரவு நேரத்தில் பௌர்ணமி நாளில் செல்வது சாத்தியப்படும் ஒரு அதீத சுகம்.

பகலில் வெயில் பட்டு சுள் என கோபக்கனல் வீசும் கூரிய கரும் பாறைகள், நிலவின் ஒளி வெள்ளத்தில் மினுமினுக்கும் ஒரு யோகியின் முகம் போல தீர்க்கமான அதே சமயம் மெல்லிய புன்னகையுடன் கூடிய சாந்த முகம் போல காட்சி அளித்தன.

கொஞ்சம் கொஞ்சமாய் மேலே ஏற ஏற நன்கு மூச்சிரைத்தது அனீசுக்கு.

அவர்கள் பேசிக்கொண்டே ஒருவர் பின் ஒருவராக குறுகியமலைப் பாதையில் நடக்க, அனீஸ் பேசாமல் தண்ணீர் கொஞ்சம் குடித்து விட்டு அந்த பாட்டிலை ஏன் சுமந்தபடி நடக்கவேண்டும் என்று எண்ணி தண்ணீர் பாட்டிலை ஒரு ஓரமாக பாறையில் வைத்து விட்டு நடந்தான். ஆங்காங்கே நிலவின் வெளிச்சத்தில் சிலர் மேலே ஏறுவது காண முடிந்தது. அதை பார்க்க பார்க்க மனதிற்குள் மலைப்பாக இருந்தது. இன்னமும் நீண்ட தூரம் ஏற வேண்டுமே என்று மூன்றில் ஒரு பாகம் ஏறியதும், கிடைத்த ஒரு சிறிய சமதளமான பாறையில் நின்று ஆசுவாசப்படுத்திக் கொண்டார்கள். கீழே மஞ்சள் வெளிச்ச ஹைவேயில் வண்டிகள் கடந்தபடியேதான் உள்ளன.

மனிதன் பயணித்தபடியே உள்ளான்.

நகர்வு என்பது இந்த பிரபஞ்சத்தின் முக்கிய நிகழ்வாக உள்ளது. யாரோ எதற்காகவோ எங்கோ நகர்ந்தபடியே உள்ளார்கள்.

அரபா போகும் பாதையில் உள்ள வீடுகள் வெளிச்சத்தில் மூழ்கி இருந்தன.

அனீஸ் மொபைலில் மணி பார்த்தான்,9.50 என்றது. சற்று திரும்பி மேலே ஏறி வந்தப் பாதையை அவன் திரும்பி நோக்கியபோது தலை சுற்றுவது போலத் தோன்றியது.

இடை இடையே மிகவும் கடினமான வளைவு பாதையில் இரும்புக் கம்பிகள் போட்டிருந்ததால் அதை பிடித்தபடி மேலே ஏறினார்கள்.

அதிகம் போனால் அங்கிருந்து கால் மணி நேரம் கடந்திருக்கும். அனீசுக்கு நன்கு தலை சுற்ற ஆரம்பித்தது. கால்கள் உதறத் துவங்கின. வீசும் மெல்லிய காற்றைத் தாண்டி உடல் வியர்க்கத் துவங்கியது.

மூச்சு முட்டியது.

தனது கட்டுப்பாட்டுக்குள் தான் இல்லை என்பதை உணரும் தருவாயில் அவனையும் அறியாமல் “ சாச்சா" என அழைக்க அவன் முன்னே சற்று அழைக்கும் தொலைவில் சென்று கொண்டிருந்தவர்கள் ஐவரும் கீழே வந்து அவனை நடுவில் நிறுத்தி முன்னும் பின்னுமாக நடக்க துவங்கினர். இரண்டு நிமிடத்தில் மீண்டும் ஒரு சமதளம் வந்தது அதில் ஒரு மர பெஞ்சும் அதன் மேல் மரக்கூரையும் இருந்தது.

(மதிய நேரம் வெயில் காலத்தில் யாரேனும் ஏறினால் இளைப்பாற வசதியாக ஆங்காங்கே சமதளப் பகுதியில் இதைப் போன்ற மர பெஞ்சும் வெயில் விழாது இருக்க மரக் கூரையும் காணலாம்) மர பெஞ்சில்,சாச்சாவாலும் உடன் வந்தவர்களாலும் கைத்தாங்கலாக உட்கார வைக்கப்பட்டான்.

ராட்டினத்தில் சுற்றுவது போல இருந்தது அவனுக்கு. கண்களை இறுக்க மூடினாலும் நிற்பதாக இல்லை. சுயபலம் இழப்பதை உணர்ந்து அவர்கள் வருத்தத்துடன் விசாரிக்க அவன் சாச்சாவிடம் சைகையில் “ நீங்க போங்க. என்னால முடியல " எனக் கூற “ ஒத்தையில எப்படி இங்க தனியா இருப்ப " என்று கேட்டவர்களிடம் “ எனக்கு ஒன்னும் ஆகாது நீங்க போங்க " என்றபடி தன்னையும் மீறி மரபெஞ்சில் கண் மூடி சாய்ந்தான்.

ஏதேனும் பெரிய கிரேன் கொண்டு அவனை அப்படியே தூக்கி தரையில் வண்டியின் அருகில் சேர்த்தால் நன்றாக இருக்கும் எனத் தோன்றியது அவனுக்கு. வந்திருக்கக் கூடாதோ ரியாத் சென்றிருக்க வேண்டுமோ என்ற எண்ணம் எல்லாம் தலைத்தூக்கத் துவங்கியது.

எந்த வித உடல் சுளிவும் இன்றி சுலபமாக மேலே ஏறும் தன்னைவிட வயது மூத்த சாச்சாவும் மற்றவர்களும் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணமெல்லாம் ஓடத் துவங்கியது.

சில காரியங்களை செய்ய இயலாதபோது உங்கள் உடலே உங்களுக்கு ஒத்துழைக்காத போது அதுவும் பக்தி சார்ந்த விஷயமாக இருந்தால் உங்கள் இயலாமை, நீங்கள் நிராகரிக்கப் படுகிறீர்கள் என்ற பிம்பத்தை உண்டாக்குவதால், மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என வதைக்கும் எண்ணங்களுக்குள் உங்களை நீங்களே தள்ளும்போது இன்னும் பலஹீனமாவீர்கள். அவன் தன்னை பலஹீனமாக உணர்ந்தான்.

காலத்தை திட்டாதீர்கள். காலம் நானாக இருக்கிறேன் என்றான் இறைவன். இந்த காலம் தான் எல்லாவற்றிக்கும் மருந்து.

அந்த வெளிச்ச இரவில் அனீஸ் மீண்டும் கண் விழித்த போது முக்கால் மணி நேரம் கடந்திருந்தது.

படுத்தபடியே கண் விழித்து சுற்றிலும் நோட்டம் இட்டான். இரண்டு காலி வாட்டர் பாட்டில் சரிந்து தரையில் கிடந்திருந்தன. ஓரமாய் அவன் பேன்ட் பாக்கெட்டில் இருந்து எடுத்து வைத்த ஸ்பிரைட் பாட்டிலும் அதே மர பெஞ்சில் அமர்ந்திருந்தது.

தலை சுற்றுகிறதா தன்னை தானே கேட்டுக் கொண்டான். சுற்றுவது போலவும் இருந்தது சுற்றாதது போலவும் இருந்தது அவனுக்கு. வாய் கசப்பிற்கு ஸ்பிரைட் குடிப்போம் என மெல்லமாய் எழுந்து அமர்ந்து அருகில் இருந்த பாட்டிலை எடுத்து குடிக்க ஆரம்பித்தான்.

அந்த புளிப்பு, அப்போதைய உடனடி தேவை போல இருந்தது. ஆர்வத்துடன் நன்கு கண் விழித்து குடிக்கத் துவங்கினான்.

சற்று நேரம் கழித்து அவனுக்கு எதிரே இருந்த பாதையில் ஒரு வயதான பெரியவர் கைத்தடி ஊன்றி மலையில் இருந்து மெதுவாக கீழே இறங்கிக் கொண்டிருந்தார். முழுக்க வெள்ளை ஆடை அணிந்திருந்தார். பளீர் வெள்ளை தாடி. பளிச் முகம். கையில் பழுப்பு நிற தடிமனான ஊன்றுகோல். அனீஸை பார்த்து மெலிதாக சிரித்தார்.

அனீசுக்கு பதினான்கு வருடங்கள் முன் இறந்துவிட்ட அவன் தந்தையை பார்ப்பது போல இருந்தது அவரின் முகம் உடல்வாகு எல்லாம். அவனும் அவரைப் பார்த்து மெலிதாக சிரித்தான்.

“ ஸலவாத் ஓது " என்று அனீஸை பார்த்துச் சொல்லியவர் மீண்டும் மலைப் பாதையின் படிகளை நோக்கி கைத்தடி அழுத்தி ஊன்றி கீழே இறங்கத் துவங்கினார்.

“ அல்லாஹும்ம ஸல்லி அலா நூரிக்க செய்யதினா முஹம்மதின் நபியில் உம்மி வஅலா ஆலிஹி வஸஹபிஹி வஸல்லிம்" அவனுக்கு பரிசயமான ரிதத்தில் சொல்லிப் பார்த்தான் ஸலவாத்தை.

உடலில் ஏதோ பரவுவது போல இருந்தது.

மூன்று நாள் காய்ச்சலில் படுத்தவன் காய்ச்சல் சரியானதும் தளர்ந்த ஆனாலும் வலி இல்லாத உடலை காண்பது போல அனீஸ் தன்னை உணர அப்பாவின் ஞாபகம் சூழ்ந்தவனாக மெலிதாய் ஸலவாத் ஓதியபடி தனியாய் மேலே ஏறத் துவங்கினான்.

வாயில் மீதம் இருந்த, குடித்த ஸ்பிரைட் சுவை இதமாக இருந்தது அவனுக்கு. யார் அந்த பெரியவர் இன்னும் பேசி இருக்கலாமோ. ஒருவேளை அப்பாவோ. இல்லை அப்பா இவ்வளவு வெள்ளையாக இருக்க மாட்டார்கள். எப்படி மயங்கினேன்..? என்ன ஆச்சு எனக்கு...?. இவ்வாறு பலவாறான சிந்தனைகள் சூழ்ந்து கொள்ள ஸலவாத் ஓதியபடி மேலே ஏறிக் கொண்டிருந்தான் அனீஸ்.

' நவிரம்' என்று அழைக்கிறது மலை உச்சியை தமிழ் மொழி. ஜபல் அல் நூர் மலையின் உச்சியை அடைந்து ஒரு அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு மீண்டும் இறக்கம் வரும் அதில் உட்கார வசதியாக பாறைத் திட்டுகள் உள்ளன. இங்கு மட்டும் மஞ்சள் விளக்குகளின் வெளிச்சம் உள்ளது. அதன் வலப்பக்கம் தொழுவதற்கு வசதியாக இரும்பு கிராதிகள் சூழ்ந்த ஓர் சமதளம் உள்ளது. அதற்கு நேர் எதிரே இரண்டு பாறைகளுக்கு இடையே ஒரு சாதாரண உடல் கொண்ட ஆள் நுழைவதற்கான பாதை அதை கடந்தால் சின்னஞ்சிறிய ஹீரா குகை.

குகைக்கு எதிரே இருக்கும் பாறை திட்டுக்களில் அமர்ந்து கொண்டு பார்த்தால் மலை உச்சியில் வந்து நிற்கும் ஆள் அடையாளம் தெரியும்.

நீண்டநேர இடைவெளிக்குப் பின் மலை உச்சியில் வந்து நிற்கும் அனீஸை பார்த்த ஜலால் சாச்சா சந்தோஷ முகத்துடன் பாறை திட்டில் இருந்து அவனை நோக்கி வேகமாக வந்தார். ஜலால்

சாச்சாவை பார்த்த சந்தோஷத்தில் அனீசும் வேகமாக அவரை நோக்கி இறங்கி வந்தான்.

வந்து விட்டான் என்ற சந்தோசமும் அடைந்து விட்டேன் என்ற சந்தோசமும் சங்கமித்துக் கொண்டன. அனீஸை கட்டி அணைத்தவர் “ நாரே தக்பீர் அல்லாஹு அக்பர். நாரே ரிஸாலத் யா ரசூலல்லாஹ் " என்றார் சந்தோஷ பூரிப்பில்.

அனீஸ் கண்களில் நீர் கோர்க்கத் துவங்கியது. சாச்சாவின் கண்களிலும்.

குகைக்கு செல்லும் வழியை காட்டி “ ஜாவ் பேட்டா...” என்றார் ஜலால் சாச்சா மனம் குளிர.

மெதுவாக இறங்கி இரு பாறை இடுக்கின் வழியாக அந்த சிறிய குகைக்குள் அனீஸ் நுழைந்தான்.

ஏற்கனவே அங்கு இருவர் இடமில்லாத காரணத்தால் ஓட்டி அமர்ந்திருந்தனர். அவர்கள் அருகில் அனீசும் போய் அமர்ந்து கொண்டான்.

குகையில் அமர்ந்து பார்த்தால் அதன் பாறை இடுக்கின் வழியாக தூரத்தில் உலகின் முதல் பள்ளி “ காபா“ தெரிகிறது. இன்று விஞ்ஞான தொழில் நுட்பத்தின் காரணமாக வெளிச்சத்தில் மூழ்கி வெள்ளை பளிங்கு துண்டு போல அந்த இடமே காட்சி அளிக்கிறது.

1439 வருடங்கள் ஆகி விட்ட இந்த ஹிஜ்ரி எனும் கால வெள்ளம் வரும் முன்னமே, தனது நபித்துவம் வரும் காலத்திற்கும் முன் இங்கு அமர்ந்திருந்து நபிகள் பெருமான் தியானம் செய்த இடம்.

அவர்கள் காபாவையே பார்த்துக் கொண்டிருந்த அதே பாறை இடுக்கு இன்னமும் மாறாமல் அப்படியே இருக்கிறது அதனிடத்தில் தான் இப்போது உள்ளோம் என்பதே அனீஸ்க்கு மட்டுமல்ல அங்கிருக்கும் அனைவருக்கும் ஒரு பரவச நிலையை உண்டாக்கி இருந்தது.

பெருமானாரை பற்றி நினைக்க நினைக்க அனீஸ்க்கு அழுகை வரத் துவங்கியது.

எத்தனை இன்னல்கள். இதோ வெகு அருகில் இருக்கும் தாயிப் ஊரில் உள்ளவர்கள் கல்லால் எறிந்தது முதல் சொந்த ஊரான மெக்காவில் உறவினர்களால் பட்ட கஷ்டங்கள் மட்டுமல்ல இத்தனை வருடங்கள் தாண்டியும் இன்னமும் முஸ்லிம் 'பெயர்தாங்கிகள்' கூட பெருமானார் பற்றி திரித்தும் முறித்தும் பேசுவதை எழுதுவதை நினைத்து அழுகை வந்தது.

பெருமானாரைப் பற்றி கிஞ்சித்தும் அறியாமல் இஸ்லாம் அறிய நினைப்பதால் விளையும் கேடு இது. பெருமானார் பற்றியும் அவரின் வாழ்வுநிலை பற்றியுமல்லவா இஸ்லாமிய சமூகம் பேசி இருக்கவேண்டும்.

குகைக்கு வெளியே சிலர் காத்திருப்பதைக் கண்டு அவர்களும் வர எண்ணி அந்த இடத்தில் இருந்து வெளியே வந்தான் அனீஸ்.

ஜலால் சாச்சாவும் உடன் வந்த மற்றவர்களும் தனித்தனியாய் ஏதோ ஓதியபடி அமர்ந்திருக்க அனீஸும் தனியாய் நிலவின் வெளிச்சத்தில் லேசான காற்றில் குளிர்ந்த பாறையில் சாய்ந்தபடி கால் நீட்டி அமர்ந்து கொண்டான்.

கி.பி 610 ஆகஸ்ட் 10ஆம் தேதி (ரமலான் பிறை 21) இரவு இதே இடத்தில் தான் அல் குர்ஆன் முதன் முதலாக அருளப் பட்டது.

வானவர் ஜிப்ரீல் நபிகள் பெருமானாரை நோக்கி “ இக்ர (ஓதுவீராக) " என்றார்.

“ நான் ஓதி அறிந்திலேன் (உம்மி நபி / பள்ளி செல்லாதவர்) " என்றார்கள் பெருமானார்.

மீண்டும் ஜிப்ரீல் “ ஓதுவீராக" என்றார்.

மீண்டும் பெருமானார் “ நான் ஓதி அறிந்திலேன் “ என்றார்கள்.

மூன்று முறை இங்ஙனம் நிகழ்ந்த பின் “ இக்ர பிஸ்மி ரப்பிகல்லதீ (உங்கள் இறைவனின் திருப்பெயரைக் கொண்டு நீர் ஓதுவீராக)....... மனிதனை ரத்தக்கட்டியில் இருந்து அவன் படைத்தான். எழுதுகோலைக் கொண்டு அவன் கற்றுக் கொடுத்தான் " என்பதாக அது தொடர்ந்து 22 வருடங்கள் 5 மாதங்கள் 14 நாட்கள் ஆயின முழு அல் குர்ஆனும் பூரணமாய் அருளப்பட.

எதுகை மோனை சந்தம் லயம் மற்றும் அனைத்து கல்யாண குணங்களையும் கொண்ட அழகிய கவிதை வடிவம் தானே ' அல் குர்ஆன்'

பிற்காலத்தில் யாரேனும் " முஹம்மது நபி எங்காவது படித்திருப்பார் " என்ற புரட்டுக் கதையை கட்டிவிடக்கூடாதே என்பதற்காக நிகழ்த்தப்பட்ட சம்பவம் போலத் தோன்றும் " வானவர் ஜிப்ரீல் அவர்கள் ஓதுவீராக என்பதும் நான் ஓதி அறிந்திலேன் என்பதும் " காண.

அந்த புனிதமிகு அல் குர்ஆனின் முதல் தோற்றுவாய் இந்த இடமே.

அதுவும் ஒரு ரமலான் இரவில் நிகழ்ந்தது. இன்றும் இரவு அதே குகை அருகில் என்பதே அனீஸ்க்கு எதையோ அடைந்து விட்ட சந்தோசம்.

“ அல்லாஹ்வின் சின்னங்களை நினைவு கூறுங்கள் " என்கிறான் இறைவன்.

இதையே சலபிகள் / வஹாபிகள் அப்படி ஒன்றும் போக வேண்டிய அவசியமில்லை என்பார்கள் இந்த இடத்திற்கு. அவர்களைப் பொறுத்தவரை மதினாவிற்கே போகவேண்டிய அவசியமில்லை. அது ஏன் பெருமானாரே அவசியமில்லை என்பார்கள்.

20 நவம்பர் 1979 ல் மக்காவிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்து அதை கைப்பற்றியவர்கள் தானே இந்த வஹாபிகள்.

முஸ்லீம்கள் பற்றி தவறான அப்பிராயம் உலகில் பரவச் செய்ய அவர்களின் ஒற்றுமையை சிதறடிக்க உண்டாக்கப் பட்டது தானே வஹாபியிசமே.

இஸ்லாத்திற்கு எதிரானவர்களுக்கு பெருமானார் மீது பாசம் எப்படி வரும்.

அனீஸின் எண்ணங்கள் பெருமானாரைச் சுற்றியே வந்தது. ஒவ்வொரு நபிக்கும் தரப்பட்டது போல பெருமானாருக்கு கிடைத்த அற்புதம் ' அல் குர்ஆன் ' என எண்ணினான்.

ஈஸா அலைஹிஸ்ஸலாம் (ஏசுநாதர்) அவர்கள் வியாதியஸ்தர்களை குணப்படுத்தும் அற்புதம் கொண்டவர்களாக இருந்தார்கள். அவர்களின் (உம்மத்தார்கள்) சமூகத்தார்கள் மருத்துவத் துறையில் இன்று நிரம்பி வழிகிறார்கள்.

அதைப் போல இஸ்லாமியர்கள், இறைவன் குர்ஆன் வழங்கியதையே ஆதாரமாக வைத்து அவர்கள் கல்வியின் பக்கம் முழுவதுமாக முகம் திருப்பி இருக்கவேண்டும்.

உலகின் கடைசி நாள் வரைக்கும், புத்தகங்கள் தான் இனி வழி நடத்தும் என்பதை உணர்ந்து அறிவின் பாதையை நோக்கி நகர்ந்திருக்க வேண்டும்.

ஒரு சமுதாயத்தின் வெற்றி என்பது அவர்களின் கல்வியை சார்ந்தது என சுட்டிக்காட்டியும் பாராமுகமாக இருக்கும் நிலை மாற வேண்டாமா.

குறைந்த பட்சம் தன் மொழியில் ஹீரா குகையைப் பற்றியாவது, அது என்ன உயரம்...? என்ன தன்மையில் அதன் பாறைகள் உள்ளன....? அதற்காக பயணிப்பது பற்றியெல்லாம் நாமாவது எழுதவேண்டும் என எண்ணியபடி சற்று வலது பக்கம் முகம் திருப்ப

சற்று தள்ளி ஒரு பாறையில் கண்கள் மற்றும் முதுகு பக்கம் கருப்பு நிறம் கொண்ட வெள்ளை நிற இளம் ஆட்டுக் குட்டி நின்று கொண்டிருந்தது.

இது எப்படி இங்கு வந்தது. அதுவும் ஆட்கள் அந்த பக்கம் சென்று விடக் கூடாது என போடப்பட்ட இரும்பு கிராதிகளைத் தாண்டி.

அதுவும் 'காபா ' வை நோக்கி முகம் காட்டிய படி நின்றிருந்தது. சிறிது நேரம் கழித்து முகம் திருப்பி அனிசை பார்த்தது பின் சற்று தலை உதறியபடி மீண்டும் காபாவை பார்த்துக் கொண்டிருந்தது.

அனீஸ் அதைப் பார்த்தான். அதுவும் அனீஸை பார்த்தது. அவர்கள் இருவரும் பார்த்துக் கொண்டதற்கு பால் நிலா சாட்சியாக இருந்தது.

அனீஸூக்கு அந்த இரவில் அங்கு நிற்கும் அந்த ஆடு அதிசயமாகத் தோன்றியது. மயங்கிக் கிடந்த அனீஸ் மேலே வந்து சேர்ந்தது ஜலால் சாச்சாவுக்கு அதிசயமாகத் தோன்றியது. அதிசயங்களின் கண்ணி தொடர்ந்தபடி தான் உள்ளது

“ லகது குன்து கப்லல் யவ்மி
உன்கிரு சாஹிபி
இதா லம்யகூன் தீனி
இலா தீனிஹி தானி
வகது சாரா கல்பி
காபிலன் குல்ல சூரத்தின்
..............................................அரபி கஸீதா "

*

நன்றி : முஹம்மது யூசுப்

Thursday, May 10, 2018

நான் பட்ட பாடு - மஜீத்

எங்கே சென்டர் போட்டா என்ன... படிக்கிற பசங்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயமான்னு பேசற குரூப்பு எதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியும். சனியனுக கெடக்கட்டும். ஒரு காலத்துல பேஸ்புக்குலயே கிடந்த மஜீத் , கூகுள் ப்ளஸ்ல இந்தப் பதிவைப் போட்டிருந்தார். படிச்சுப் பாருங்க. - முகநூலில் ஷாஜஹான் 
*

நீட் படுத்தும் பாடு
கிருஷ்ணசாமி மரணம்
இதெல்லாம் இப்பதான் எல்லாருக்கும் தெரியுது

நான் பட்ட பாடு 
இன்னும் என்னென்னவோ உங்களுக்கு புரியவைக்கும்..
கிருஷ்ணசாமியோட மரணம் என்னை எவ்வளவு பாதிச்சிருக்கும்னு யோசிச்சுப் பாருங்க....

2008

சின்னமகன் +2 முடிச்சவொடனே ஃப்ரெண்ட்ஸ்லாம் சேந்து, முடிஞ்சவரைக்கும் எல்லா மெடிகல் காலேஜ், ஆல்இண்டியா கோட்டா, என்ஆர்ஐ கோட்டா எல்லாத்துக்கும் அப்ளை பண்ணிருந்தானுக... (அதுல முக்கியமா ஆல் இண்டியா கோட்டாங்கிறது, எல்லா மாநிலத்துல இருக்குற அரசு மெடிக்கல் காலேஜ்லயும் இருக்குற மொத்த சீட்ல 10% மத்திய அரசுக்கு தந்துரனும். அதுக்கு ஆல் இண்டியா மெடிகல் கவுன்சில் எக்ஸாம் வைக்கும். தமிழ்நாட்ல வடமாநில மாணவர்கள் படிக்கிறது இப்டிதான். இதுக்கு எக்ஸாம் சென்டர் நம்ம பையங்களுக்கு சென்னைலகூட தரமாட்டாங்க.. சீட் கெடச்சாலும் டெல்லி, சிக்கிம்னு தருவானுக... ஆனா பரிச்சை மட்டும் வேற மாநிலத்துல எழுதனும்.. அவனுகளுக்கு மட்டும் அவங்க ஊர்லயே எழுதிருக்கிறலாம்)

விஷயத்துக்கு வர்றேன்.. மகனுக்கு பெங்களுர்ல செண்டர் போட்ருந்தாய்ங்க...

சரியா எக்ஸாம் சமயத்துல காவிரிப் பிரச்னை, கலவரம், தமிழர்களை தாக்குறதுன்னு இருந்துச்சு நெலவரம்.. பயந்து நானும் கெளம்பிட்டேன் கூட்டிக்கிட்டு.. மொதநாளே ட்ரெய்ன்ல போய் ஹோட்டல்ல தங்கி, எக்ஸாம் சென்டர் எங்க இருக்குன்னு விசாரிச்சு, 40 நிமிசத்துல போய்ரலாம்னு தெரிஞ்சுக்கிட்டு, அடுத்தநாள் ஒரு ஆட்டோல (டாக்ஸி லேட்டாகும், ஆட்டோலதான் ட்ராஃபிக்கா இருந்தாலும் சீக்கிரமா போகமுடியும்னு உள்ளூர்க்காரர்கள் ஐடியா. 9:30க்கு எக்ஸாம். 9மணிக்கு கேட் க்ளோஸ்.) 7 மணிக்கு கெளம்பினோம். ஆட்டோ ட்ரைவரும் அந்த ஸ்கூல் தெரியும்னு சொன்னாரு. 7:50க்கு போய் சேந்தோம்.

இறங்குனவொடனே பாத்தா காம்பவுண்டுக்கு வெளியெ மரத்தடிகள்ல புள்ளைங்க, பெத்தவங்க கூட்டம்.. ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டதுல ஒரு உள்ளூர்க்காரர் ஹால்டிக்கெட்டை வாங்கிப் பாத்துட்டு, உங்க செண்டர் இந்த ஸ்கூல் இல்லைன்னு சொன்னாரு.. பதறிட்டோம்.. ஸ்கூல் பேரெல்லாம் சரியா இருந்துச்சு, கடேசி வார்த்தை ஏரியா பேராம். அந்த ஏரியா சிட்டியோட அடுத்த மூலைல இருக்காம். அப்டியே ப்ளாங்க் ஆயிட்டேன். அங்க போய்ச்சேரமுடியுமான்னு விசாரிச்சா சிரமம், 1 மணி நேரத்துக்கு குறையாம ஆகும்.. ட்ராஃபிக் இருந்தா முடியாதுன்னாங்க.. அந்த நேரத்துல கார்ல வந்து மகனை இறக்கிவிட்டுட்டு கெளம்புனவரு, ஒரு செகண்டு நின்னு விசயத்தைக் கேட்டுட்டு, உங்களுக்கு நெறைய சான்ஸ் இருக்கு. கெளம்புங்கன்னு சொன்னாரு... காரு சரியா வராது, ஆட்டோதான் வசதி, எங்கூட வாங்க ஆட்டோல ஏத்திவிடுறேன்னு சொல்லிட்டு, 5 நிமிசத்துல ஆட்டோக்காரர்ட்ட விசயத்தை சொல்லி ஏத்திவிட்டார். அந்த 5 நிமிசத்துலயும், நான் நேரா அங்கெ கொண்டுபோய்விட்டா, நிச்சயம் டயத்துக்கு போகமுடியாது ஆட்டோதான் நல்லதுன்னு சமாதானம் சொன்னார்.

சொன்னதுமாதிரியே ஆட்டோக்காரர் ஒவ்வொரு சிக்னல்லயும் நொழஞ்சு நொழஞ்சு போய் மொத ஆளா நின்னு, போய்க்கிட்டே இருந்தாரு. காரா இருந்திருந்தா கொறைஞ்சது முக்கால் மணிநேரம் கூடுதலாயிருக்கும்.. சரியா 9 மணிக்கு போய் சேந்தோம்.. சின்ன கேட்டை அப்பதான் பூட்டிட்டுப் போனாங்களாம்.. தூரத்துல, சுமாரா 500மீட்டராச்சும் இருக்கும், ஹாலுக்குள்ள புள்ளைங்க போய்க்கிட்ருந்தது தெரிஞ்சிச்சு.
என்னோட குறுக்குபுத்தி வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சு.. கதவுப்பக்கம் லைட்டா நோட்டம் விட்டேன்.. சும்மா கொண்டிதான் மாட்டிருந்தாய்ங்கெ.. நமக்குதான் கை நீளமா, உள்ளவிட்டு தொறந்துட்டு, நீ போ, கேட்டா கதவு சும்மாதான் சாத்திருந்துச்சு தள்ளிவிட்டுட்டு வந்தேன்னு சொல்லச்சொல்லி அனுப்பிவிட்டேன்.. (இல்லைனா கடேசி முயற்சியா கேட்ல ஏறிக்குதிக்க ஒரு ப்ளான் பி யும் வச்சிருந்தேன்) அவனும் ஒரே ஓட்டமா ஓடி சேந்தான்... உள்ள விட்டுட்டாய்ங்கெ. அவன் உள்ளபோன அடுத்த நிமிசம் ஒரு பியூன் ஒரு பெரிய பூட்டோட ஓடியாந்து, நான் சும்மா சாத்திவச்ச கதவை பூட்டிட்டுப் போனாரு.

இப்பதான் முக்கியமான எபிசோடு ஆரம்பிச்சிச்சு..

இறங்கும்போதே ஆட்டோக்காரர்ட்ட கொஞ்சம் இருங்க போகவேணாம், பணம்வந்து தர்றேன், ஹோட்டலுக்கு போகவேண்டிவந்தாலும் வரும்னு சொன்னேன் அவரும் சரின்னு வெய்ட் பண்ணாரு.. என்னோட களேபரத்தை பத்தி கவலைப்படாம, நான் கம்பிநீட்டிருவனோன்னு சந்தேகப்படாம, கண்ணைமூடிக்கிட்டு, தியானத்துக்குப் போய்ட்டார். இப்ப எனக்குதான் ஆட்டோ அடையாளம் தெரியலை.

நின்ன ஒவ்வொரு ஆட்டோடிரைவரையும் உத்துப்பாத்து எங்காளைக் கண்டுபுடிச்ச நொடில, எனக்கு என்னவோ பண்றமாதிரி இருந்துச்சு.. நெஞ்செல்லாம் கனமா இருந்தமாதிரி இருந்துச்சு.. கண் லேசா சொருகுச்சு..மூச்சு விட சிரமமா இருந்துச்சு...வேர்க்க ஆரம்பிச்சிருச்சு.. லைட்டா பயம் வந்துச்சு.. என்ன பண்றதுன்னு தெரியலை... ஆட்டோ டிரைவர்ட்ட விசயத்தை சொல்லி, இங்க பக்கத்துல ஏதாவது ஆஸ்பிடல் இருக்கானு கேட்டா, அவரு எனக்கு இந்த ஏரியா சுத்தமா தெரியாது, நீங்க ஏறுன இடம்தான் என் ஏரியா.. ஆனா ஒரு ரவுண்டு அடிச்சி கண்டுபுடிப்போம்னு சொன்னாரு.. ஒரு 7-8 நிமிசத்துல லெஃப்ட் சைடுல நாந்தான் கண்டுபுடிச்சேன்.. ஹாஸ்பிடல்னு போட்ருந்துச்சு.. அவரு ரைட் சைட்ல பாத்துக்கிட்டு ரோட்டையும் பாத்துக்கிட்டு ஓட்டுனாரு.. யூட்டர்ன் அடிக்கிறதுக்கே, 3 கிமீ போய்ட்டு வரவேண்டிருந்துச்சு வந்துசேந்தா, ஆஸ்பிடல் வாசலை கண்டுபுடிக்கிறதுக்கு சுத்தி சுத்தி வரவேண்டியதாப் போச்சு.. பெரிய்ய்ய்ய காம்பவுண்டு....ஆட்டோ டிரைவர்ட்ட சொன்னேன்.. நீங்க கூடவே இருங்க.. இப்ப எம்பையனையும் அவன் எக்ஸாம் எழுதுற இடத்தையும் தெரிஞ்ச ஒரே ஆள் நீங்கதான். அதனால கூடவே இருங்க.. சார்ஜ் எவ்வளவு ஆனாலும் தந்துர்றேன்னு சொன்னேன்.. சரின்னு கேட்டுக்கிட்டு வாசல்ல நின்னுக்கிட்டார்.. அப்ப எங்கிட்ட இருந்த ஃபோன் Sony S500.. wifi கிடையாது.. ஏர்டெல் டேட்டா ரோமிங் இல்லை.. லாக் இல்லை.. ஸ்லைட் பண்ணுனா ஓப்பன் ஆயிரும்.. ஒய்ஃப் நம்பரை டயல் பண்ணி, கான்டாக்ட்ல Wife னு மாத்திட்டேன்..

உள்ள யாரை விசாரிச்சேன், எப்டி போனேன்னு இப்பவரைக்கும் தெரியாது. எனக்கு நெனைப்பு இருக்குறதெல்லாம், ரெண்டு இடத்துக்கு போனேன், தொப்பலா வேர்த்து இருந்தேன், ரெண்டு டாக்டர் வந்து பாத்தாங்க, ரெண்டாவது இடம் ஒரு சின்ன அறை, ரெண்டாவது பாத்த டாக்டர் முகம் நெனப்பு இருக்கு.. சில ப்ளட் டெஸ்டு, ஒரு ஈசிஜி எல்லாம் எடுத்துப் பாத்தாரு.. என்னாச்சுன்னு கேட்டாரு.. ஒரு மணிநேரக்கதையை ஒரு நிமிசத்துல சொன்னேன்.. டோன்ட் ஒர்ரின்னு சொல்லிட்டு, ஒரு ஊசியும் போட்டுட்டு போனாரு. ரொம்பநேரம் தூங்கவேண்டிவருமா? பையன் வெளிய வந்து தேடுவான்.. நான் வேணா ஆட்டோ டிரைவரை அனுப்பிவைக்கவா? எக்சாம் முடிஞ்சதும் அவனை கூட்டிட்டு வரச்சொல்லின்னு கேக்கவும்.. மறுபடியும் டோன்ட் ஒர்ரி சொல்லிட்டு, தூக்கம்லாம் வராது.. கொஞ்சநேரம் ரெஸ்ட் எடுங்க, தூக்கம் வந்தா தூங்குங்க, நான் ஒரு ஒருமணிநேரத்துல எழுப்பிவிடுறேன்.. டோன்ட் ஒர்ரின்னு மூனாவது தடவையும் சொன்னாரு

10 நிமிசத்துல திரும்பி பிளட் ரிசல்ட், ஈசிஜி யெல்லாம் எடுத்துட்டு வந்து, நத்திங் சீரியஸ்... சம் சார்ட் ஆஃப் மைனர் ஷாக், ஃபார்ச்சுனேட்லி இட் வாஸ் நாட் சோ பேட்.. நீங்க இப்பவே கூட போகலாம்.. எப்டியும் இன்னும் ஒன்றை மணிநேரம் இருக்கு எக்ஸாம் முடிய.. அதுவரைக்கும் நீங்க இங்கயே ரெஸ்ட் எடுங்கன்னு சொன்னபிறகுதான் எனக்கு நிம்மதியா இருந்துச்சு.

தேங்க்யு, வெளில ஆட்டோடிரைவர்ட்ட தகவல் சொல்லிட்டு வந்து படுத்துக்கிறலாமான்னு கேட்டதுக்கு, தாராளமான்னு சொன்னாரு..

நான் இருந்த அறை சூழ்நிலைக்கும், அந்த ஆஸ்பிடல் சைசுக்கும் சம்பந்தமே இல்லை..ஏதோ ஸ்டாஃப்ஸ்க்கு எக்ஸ்ட்ராவா இருந்த ரெஸ்ட் ரூம் மாதிரியே இருந்துச்சு.. ஆட்டோக்காரர்ட்ட இன்ஃபார்ம் பண்ணப்போய்ட்டு வர்றப்பதான் பாத்தேன், ஆஸ்பிடல் பேரு, சைசு எல்லாத்தையும்.. பையன் வெளில வர்றநேரத்துக்கு கெளம்பிட்டேன்.. டாக்டரைக் கேட்டேன்.. கூட்டிட்டு வந்தாங்க, அன்ட்டாசிட் டாப்லெட் மட்டும் எழுதித்தந்துட்டு, ஃபீஸ் எவ்ளொன்னு கேட்டேன்... சொன்னாங்க, நல்லவேளை மறுபடியும் நெஞ்சு அடைக்கலை.. வெறும் 130 ரூபாய்...... நம்பவே முடியலை... ஆர் யு ஷ்யூர் ஆர் யூ ஷ்யூர்னு ரெண்டுமூனு தரம் கேட்டுட்டு கட்டிட்டு வந்து சேந்தேன்.

வீட்ல வந்துதான் ஆஸ்பிடலை நெட்ல தேடி கண்டுபுடிச்சா, நாராயணா ஹிருதாலயா... கார்டியாலஜில ஒன் ஆஃப் த பெஸ்ட் ஹாஸ்பிடல், நெறைய ஃப்ரீ ட்ரீட்மென்ட்லாம் செய்றாங்கன்னு போட்ருந்துச்சு..

அதிர்ச்சி சின்னதா இருந்ததுக்கு டாக்டர் ஃபார்ச்சுனேட்னு சொன்னது மாதிரி, குத்துமதிப்பா நான் அங்கே, அவர்ட்ட போய் சேந்ததுக்கு நானும் இன்னொரு ஃபார்ச்சுனேட் சேத்துக்கிட்டேன்.

அது மட்டும் அன்னிக்கு கொஞ்சம் ஸ்ட்ராங்கா இருந்திருந்தா அன்னக்கி எம் பொணம் என்னபாடு பட்ருக்கும்? வெளில வந்த என் பையன் என்ன பாடு பட்ருப்பான்? குடும்பம்?? 

இந்த பதிவும் வந்திருக்காது...

இதெல்லாம் டெல்லில உக்காந்து இருக்குற சில திமிர் புடிச்ச வெறிநாய்கள் வேணும்னே செய்ற அடாவடித்தனம்.. ரொம்ப சிம்பிளா முடிக்கவேண்டிய காரியங்களை, தென்னிந்தியர்கள்னா அதுவும் மதராஸின்னா வன்மத்தோட கர்வம்கட்டி அடிக்கிதுக.. இதுல முக்கிய பங்கு குஜராத்தியான கேதான் தேசாய் (ஆமா, பெட்டுக்கடில தங்ககட்டியா புடிச்சாய்ங்கெல்ல, அந்த வெறிநாய்தான்) அன்னிக்கு இந்தியன் மெடிக்கல் கவுன்சில் சேர்மன்... மாட்டிக்கிட்டதுக்கு அப்புறமா இன்னிக்கு அதைவிட பெரிய போஸ்ட்ல.... யோக்கிய சிகாமனி மோடியின் சாதனை...

என் பையங்க ரெண்டுபேருக்கும் கட்டாஃப் மார்க் சொல்லிவச்சாப்ல 91.6%.. பெரியபையன் அன்னிக்கு (2004) தமிழ்நாடு வச்ச என்ட்ரன்ஸ் எக்ஸாம்ல 50%கூட வாங்கமுடியல..

அவனை உக்ரைன்ல மெடிசின் படிக்க வைச்சேன்.. சின்னவனுக்கு கட்டாஃப் பத்தலை..பாண்டிச்சேரில பிரைவேட் காலேஜ்ல படிக்க வைச்சேன்...

அரசுக்கு செலவு வைக்காம, என்னோட சம்பாத்தியத்துல படிச்ச ரெண்டுபேருமே, வெளிநாட்டுக்கு போக விரும்பலை. தமிழ்நாட்டுலயே, அரசு மருத்துவர்களா, எங்க ஏரியாவுலயே (ரூரல்) விரும்பிக்கேட்டு வேலை பாக்குறாங்க...

*

நன்றி : மஜீத்