முகப்புத்தகத்தில் யூமா வாசுகி பகிர்ந்தது (நன்றி: ‘மலையாள மனோரமா’ நாளிதழ் , கும்க்கி)
------
தாங்கள் அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் துன்பங்களை வெளி உலகத்துக்கு தெரிவிக்கவேண்டும் என்று முடிவு செய்தபோது, தில்லியின் தெருக்குழந்தைகள், ஊடக செயல்பாட்டாளர்களைத் தேடிப் போகவில்லை. பதிலாக, அவர்கள் சொந்தமாக ஒரு பத்திரிகை ஆரம்பித்து, அதில் தாங்களே நிருபர்களானார்கள்! தெருக்குழந்தைகள் வெளியிடும் உலகத்தின் ஒரே பத்திரிகையான ‘பாலக்நாமா’ எட்டாயிரம் பிரதிகள் விற்பனையுடன் பதினான்காவது ஆண்டாகத் தொடர்கிறது.
குழந்தை விளையாட்டல்ல
இந்த குழந்தைப் பத்திரிகை
மிதுன் எம். குர்யாக்கோஸ்
“ரயில் விபத்துகளில் உயிரிழந்து தண்டவாளங்களில் சிதறிய சவங்களை எடுக்கும்படி அவர்கள் எங்களிடம் சொன்னார்கள். நடுங்கும் கரங்களால் அவற்றை நாங்கள் அள்ளியெடுத்தோம்!”
நிருபர் தன் பத்திரிகையின் முதல் பக்கத்தில் இப்படி எழுதினார். அது, ரயில் தண்டவாளங்களில் சேரும் சவங்களை அப்புறப்படுத்துவதற்கு தில்லி போலீஸ் தெருக்குழந்தைகளைப் பயன்படுத்துகிறது எனும் அதிர்ச்சியளிக்கும் வெளிப்படுத்தலாயிருந்தது. நாட்டின் தலைநகரில் இருக்கும் தெருக்குழந்தைகள் எதிர்கொள்ளும் கொடூரத்தை வெளியே அறிவித்த செய்தி.
தாங்கள் அன்றாட வாழ்க்கையில் அனுபவிக்கும் துன்பங்களை வெளி உலகத்துக்கு தெரிவிக்கவேண்டும் என்று முடிவு செய்தபோது, தில்லியின் தெருக்குழந்தைகள் ஊடக செயல்பாட்டாளர்களைத் தேடிப் போகவில்லை. பதிலாக, அவர்கள் சொந்தமாக ஒரு பத்திரிகை ஆரம்பித்து, அதில் தாங்களே நிருபர்களானார்கள்! கொடுந்துன்பங்களுக்கு ஆட்படுபவர்கள் அச்சிட்டு வெளியிடும் பத்திரிகை! தெருக்குழந்தைகள் வெளியிடும் உலகத்தின் ஒரே பத்திரிகை. பாலக்நாமா எனும் ‘தெருக்குழந்தை பத்திரிகை’ எட்டாயிரம் பிரதிகள் விற்பனையுடன் கடந்த பதினான்கு வருடங்களாக தொடர்ந்து வெளிவருகிறது.
பாலக்நாமா என்றால் ‘குழந்தைகளின் குரல்’ என்று பொருள். பத்திரிகையின் ஆசிரியர் முதல் செய்தி எழுதுபவர்வரை தெருவில் அலையும் பிஞ்சுகள்தான். இந்தப் பத்திரிகையின் தற்போதைய ஆசிரியர், பதினாறு வயதுடைய சம்பு. இவர் வயிற்றுப் பசிக்காக தில்லியின் தெருக்களில் காய்கறி விற்று அலைந்திருக்கிறார். தெருவிலிருந்து தெற்கு தில்லியில் இருக்கும் பாலக்நாமாவின் ஒற்றையறை அலுவலகத்துக்கு வந்தால், சம்பு ஆசிரியர். மாதம் ஒரு முறை ஆங்கிலத்திலும் இந்தியிலும் வெளியிடப்படும் பத்திரிகையின் தயாரிப்பில், சம்புவுக்கும் தோழர்களுக்கும் சற்றும் ஓய்வில்லை. எட்டு பக்கங்கள்கொண்ட பத்திரிகை. அவற்றில் அவர்கள் எழுதும் செய்திகளில், தெருவின் வேதனையைப் பார்க்கலாம்.
கண்ணீரில் ஊறிய பால்யத்தை செய்திகளால் வளப்படுத்திய, தெருக்குழந்தைகளின் கதை இது.
பாலக்நாமா அச்சடி ஆரம்பிக்கிறது
வருடம் 2002: தெருக்குழந்தைகளின் முன்னேற்றத்துக்காக செயல்படும் தன்னார்வ அமைப்பான ‘சேத்னா’, தில்லி தெருக்களிலிருந்து முப்பத்து ஐந்து குழந்தைகளைக் கண்டுபிடித்து, அவர்களுக்கு ஆரம்பக் கல்வி அளித்தது. பாட்டில்கள் பொறுக்கியும் போக்குவரத்து சிக்னல்களில் யாசித்தும் அலைந்த குருத்துகள் அவ்வாறு எழுத்துகள் கற்றார்கள். பிறகு எழுத்துகள் அவர்களை விட்டுச் செல்லவில்லை. தங்களைப்போன்றவர்களுக்கு ஆதரவாக இருக்க எழுத்துகளை எப்படிப் பயன்படுத்தலாம் என்று அவர்கள் சிந்தித்தார்கள்.
அந்த சிந்தனையிலிருந்து, சொந்தமாக ஒரு பத்திரிகை என்ற கருத்து உதித்தது. பிஞ்சுகள், ‘பட்தே கதம்’ எனும் பெயரில் அமைப்பு உருவாக்கினார்கள். அவர்களுக்கு சேத்னாவின் உறுப்பினர்கள் பத்திரிகை செயல்பாட்டில் அடிப்படைப் பயிற்சி அளித்தார்கள். செய்திகள் சேகரிக்கவும் அவற்றை தட்டச்சு செய்யவும் பிறகு கணிப்பொறியில் பத்திரிகையின் பக்கங்களை வடிவமைக்கவும் குழந்தைகள் கற்றுக்கொண்டார்கள். மனதிலுள்ள விஷயங்களை அவர்கள் செய்திகளாக்கினார்கள்.
பத்திரிகை தொடங்குவதற்கான அடிப்படை செலவுகளுக்கான தொகை, தெருவிலிருந்து கிடைத்தது. பிச்சை எடுப்பவர்கள் உட்பட்ட தெருக்குழந்தைகள், தங்கள் சம்பாத்தியத்திலிருந்து ஐந்து ரூபாய் வீதம் நன்கொடையளித்து பாலக்நாமாவின் பணப்பெட்டியை நிறைத்தார்கள். பத்திரிகையின் அச்சு செலவை ஏற்றுக்கொள்ள சேத்னா தயாரானவுடன், 2003 செப்டம்பரில் தெருவின் மனதறியும் அந்தப் பத்திரிகை வெளியானது; இந்த வகையில் உலகத்தின் முதலாவது பத்திரிகை என்ற பெருமையுடன். தொடக்கத்தில் பத்திரிகை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வெளிவந்தது. பிறகு அது இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை என்று ஆனது. 2013 முதல், மாதம் ஒரு பத்திரிகை என்று வெளிவருகிறது. இன்று தில்லி, யுபி ஆகிய இடங்களிலிருந்து பாலக்நாமா அச்சிட்டு வெளியிடப்படுகிறது. இரு மாநிலங்களிலும் நூற்றுக்கும் மேற்பட்ட தெருக்குழந்தைகள் பாலக்நாமாவின் சொந்த நிருபர்களாக இருக்கிறார்கள்.
குழந்தைத் தொழிலாளர் நிலையிலிருந்து வாழ்க்கைக்கு…
“கழிவுக் குவியலின் அருகே நடக்கும்போது நீங்கள் மூக்கைப் பொத்திக்கொண்டு சென்றிருப்பீர்கள். ஐந்தாம் வயதில் என் வாழ்க்கைப்பாட்டுக்காக அந்தக் குவியலை கையால் வாரியவள் நான்.” – பெங்களூரில் ஏற்பாடு செய்த சொற்பொழிவில், பெருமை மிக்க சபையைப் பார்த்து சாந்தினி இப்படிச் சொன்னார். தெருவிலிருந்து பாலக்நாமாவின் ஆசிரியராக வளர்ந்த சாந்தினி தன் வாழ்க்கையை அன்று அங்கே வெளிப்படுத்தினார். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தாய் தந்தையின் கட்டாயத்தின் காரணத்தால் தெருவுக்கு வந்தவர். அப்பாவின் மரணத்துக்குப் பிறகு வாழ்க்கை முற்றிலுமாக தெருவுக்கு வந்துவிட்டது. தன் வயதுடையவர்கள் பாலக்நாமா அலுவலகத்தில் வேலை செய்வதைப் பார்த்த அனுபவம்தான், சாந்தினியின் வாழ்க்கையை மாற்றியது. பத்திரிகையின் நிருபராகச் சேர்ந்த அவர், பிறகு அதன் ஆசிரியராக வளர்ந்தார். தெருவில் முடிந்துவிடக்கூடியதாக இருந்த வாழ்க்கையின் தலைப்பை சாந்தினி மாற்றி எழுதினார்.
ஷன்னோ படித்தான்; ஆசிரியரானான்
சாந்தினிக்கு முன்பு ஆசிரியராக இருந்த ஷன்னோவுக்கும் தான் சிறுவயதில் அனுபவித்த துன்பங்களின் துயர நினைவுகள் உண்டு. அவர் தான் எட்டு வயதுச் சிறுமியாக இருக்கும்போது, ஜீன்ஸ் பித்தான்கள் தயாரிக்கும் ஒரு தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். ஷன்னோவின் வார்த்தைகளில் சொன்னால், “வெளியே இன்னொரு உலகம் இருக்கிறது என்பதுகூடத் தெரியாமல், இரவு பகலாக தொழிற்சாலையில் தளைக்கப்பட்ட வாழ்க்கை.” மதிய உணவுக்காக சற்று நேரம் வெளியே வருவதுதான் ஷன்னோவுக்கு வெளி உலகத்துடனான ஒரே ஒரு தொடர்பு. அந்த தொழிற்சாலைக்குப் பக்கத்தில் சேத்னா அமைப்பு ஏற்பாடு செய்த முகாம், ஒரு முறை மதிய நேரமொன்றில் ஷன்னோவின் கவனத்தில் பட்டது.
உணவைக் கைவிட்டு அவர் அந்த முகாமுக்குச் சென்றார். ஷன்னோ சொல்கிறார்: “அங்கே என் வயதுடைய குழந்தைகள் எழுத்துகள் படிப்பதைப் பார்த்து நான் வியப்படைந்தேன். அடுத்து வந்த நாட்களில் நான் மதிய உணவு சாப்பிடாமல், தொழிற்சாலை பொறுப்பாளர்களின் கண்களை ஏமாற்றி முகாமுக்குச் சென்றேன். ஒரு நாள் நானும் எழுத்துகள் எழுதுவேன் என்று நான் அங்கே கனவு கண்டேன். நான் படிக்க ஆசைப்படுகிறேன் என்று என் அப்பா அம்மாவிடம் சொன்னேன். ஆனால், அனுமதி கிடைக்கவில்லை. குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக நீ தொழிற்சாலைக்குப் போய்த்தான் ஆகவேண்டும் என்று அவர்கள் சொன்னார்கள். ஆனால், நான் படிப்பதற்கே விரும்பினேன்.”
தான் ஆசைப்பட்ட வார்த்தைகளை கடைசியில் ஷன்னா சுவைத்தார். தொழிற்சாலையில் தான் உட்பட்ட குழந்தைகள் எதிர்கொள்ளும் துன்பங்களை பாலக்நாமாவில் தன் சொந்தப் பெயருக்குக் கீழே ஷன்னோ செய்தியாக்கினார். “பத்திரிகையில் அச்சில் வந்த என் பெயரை நம்ப முடியாமல் பார்த்துக்கொண்டிருந்தேன். என் முதல் பைலைன் (செய்தி எழுதும் நிருபரின் பெயர்). எனக்கு ஏதோ சக்தி கிடைத்திருக்கிறது என்று தோன்றிய நிமிடங்கள்.” – ஷன்னோ நினைவுகூர்கிறார். தொழிற்சாலையின் குழந்தைத் தொழிலாளர் என்ற நிலையிலிருந்து அவர், பாலக்நாமாவின் மிகச் சிறந்த ஆசிரியர் எனும் பெருமைக்கு அவர் வளர்ந்தார்.
பாலக்நாமாவின் ஆசிரியரின் வயது வரம்பு பதினேழு வயது. இருபது வயதான ஷன்னோ இன்று பாலக்நாமாவின் ஆலோசகராக இருக்கிறார்.
பாலக்நாமாவின் முக்கிய செய்தி
“தெருக்குழந்தைகள் அனுபவிக்கும் கொடூரங்களின் ஆழத்தை உங்களால் கற்பனை செய்துகூட பார்க்க முடியாது.” – பாலக்நாமா அலுவலகத்திலிருந்து ஷன்னோ சொன்னார். 2014 அக்டோபர் இதழில்தான், அந்த கொடூரத்தின் அதிர்ச்சியளிக்கும் விவரங்களை பாலக்நாமா வெளியிட்டது. “ரயில் தண்டவாளங்களில் இறப்பவர்களின் சிதறிய உடற்பகுதிகளை எடுத்து அப்புறப்படுத்துவதற்கு போலீஸ் தெருக்குழந்தைகளைப் பயன்படுத்துகிறது” என்ற வெளிப்படுத்தல் முதல் பக்கத்தில் முக்கியச் செய்தியானது. அதை எழுதிய நிருபரின் பெயரை பிரசுரிக்காமல்தான் பாலக்நாமா அன்று வெளியானது. பெயரை வெளியிட்டால், போலீஸ் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கும் என்று குழந்தைகள் பயந்தார்கள்.
இரண்டு குழந்தைகளின் அனுபவத்தை விவரிக்கும் செய்தியின் பகுதி இது: “ரயில் தண்டவாளங்களில் சவங்களைப் பார்க்கும்போது நாங்கள் போலீஸுக்குச் சொல்வோம். அவற்றை எடுக்கும்படி அவர்கள் எங்களிடம் சொல்வார்கள். ஆரம்பத்திலெல்லாம் பயந்து நடுங்கிக்கொண்டுதான் நாங்கள் அந்த வேலையைச் செய்தோம். இப்போது அது பழக்கமாகிவிட்டது. சவங்களை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதும் நாங்கள்தான். இறந்தவரின் பாக்கெட்டில் பணம் இருந்தால் அதை நாங்கள் எடுத்துக்கொள்ளலாம். இந்த வேலை என்பது, ஒரு வேளை சாப்பாட்டுக்கான வழிதான்.”
இந்த செய்தி மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விஷயத்தை ஏற்றுக்கொண்ட தேசிய சிறார் உரிமைப் பாதுகாப்பு சபை, போலீஸை கடுமையாக எச்சரித்தது. “அதன் பிறகு போலீஸ் இப்படிப்பட்ட நடவடிக்கைகளை நிறுத்திக்கொண்டதா?” ஷன்னோவிடம் கேட்டோம். “இல்லை. இப்போதும் ரயில் தண்டவாளங்களில் சவங்களின் உறுப்புகளை வாரியெடுப்பதற்கு நாங்கள்தான் தேவைப்படுகிறோம்.” – அவர் நிராதரவான சிரிப்புடன் பதில் சொன்னார்.
பாலக்நாமாவின் ஒவ்வொரு இதழும் செய்திகளால் வளம்பெற்றிருக்கிறது. இது, எட்டு வயதான ஒரு சிறுமியைப் பற்றிய செய்தி: “தில்லி தெருக்களில் சேரும் கழிவுகளையும் குப்பைகளையும் டிரக்கில் ஏற்றி, அவற்றை சுத்திகரிப்பு நிலையத்தில் இறக்கி, டிரக்கை சுத்தப்படுத்துவதுதான் அவளுடைய ஒரு நாள் வேலை. அதற்கான கூலியாக அவளுக்குக் கிடைப்பது, கழிவுகளின் துர்நாற்றமுடைய உணவு.”
போலீஸின் அடி: என் முதல் செய்தி
ஆசிரியர் சம்புவின் வார்த்தைகளில், என்றோ வாங்கிய அடியின் வலி இன்னும் இருக்கிறது. அப்பா அம்மாவுடன் பீகாரிலிருந்து தில்லிக்கு வந்த சம்பு ஒன்பதாம் வயதில் காய்கறி விற்பதற்காக தெருவிலிறங்கினார். “வாழவேண்டும் என்றால் தெருவிலிறங்கியே ஆகவேண்டும் என்று அப்பா சொன்னார்.” இடறும் குரலுடன் சம்பு சொன்னார்: “சிறிய கூடையில் காய்கறிகளுடன் நான் நகரத்தில் நெடுந்தொலைவு அலைந்தேன். நாளொன்றுக்கு அதிகபட்சம் அறுபது ரூபாய் கிடைக்கும். தில்லி போலீஸ்காரர்கள் சிலர் என்னிடம், ‘வியாபாரம் செய்யவேண்டும் என்றால் மாதம் முன்னூறு ரூபாய் லஞ்சம் கொடுக்கவேண்டும்’ என்று கேட்டார்கள். ‘உங்களுக்கு லஞ்சம் கொடுத்தால் என் குடும்பம் பட்டினி கிடக்கவேண்டியிருக்கும்’ என்று நான் சொன்னேன். அவர்கள் என் காய்கறிக் கூடையை தட்டியெறிந்தார்கள். லத்தியால் மீண்டும் மீண்டும் என்னை அடித்தார்கள். அடிபட்டு என் உடல் முழுதும் கன்றிச் சிவந்துவிட்டது...” சம்பு நினைத்துப்பார்க்கிறார்.
சம்பு அங்கிருந்து பாலக்நாமாவின் அலுவலகத்துக்குச் சென்றார். தன் அனுபவத்தை ஷன்னோவிடம் விவரித்தார். அதன் பிறகு வெளிவந்த பாலக்நாமா, சம்புவின் துயரங்களைச் செய்தியாக்கியது. இன்று, ஆசிரியரின் நாற்காலியிலிருந்து பேசும்போது, உறுதியான வார்த்தைகளில் சம்பு சொல்கிறார்: “இப்போது எனக்கு போலீஸின் மீது பயம் இல்லை.”
செய்தி வரும் வழி
வட இந்திய மாநிலங்களில் ஏறத்தாழ பத்தாயிரம் தெருக்குழந்தைகளுடன் பாலக்நாமா குழுவினருக்கு நேரடித் தொடர்பு இருக்கிறது. அவர்கள் பாலக்நாமாவின் கண்ணும் காதுமாக இருந்து செய்திகள் சேகரிப்பார்கள். பாலக்நாமாவின் முக்கிய நிருபர்கள் இருபத்து ஐந்து பேர். அவர்கள்தான் செய்திகள் எழுதுபவர்கள். இன்னும், இதழின் ஆசிரியர் குழுவில் எழுதப்படிக்கத் தெரியாத எழுபத்து ஐந்து பேர் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் செய்திகளை பாலக்நாமா ஆசிரியரிடம் சொல்வார்கள். அவர்களுக்கு ‘செய்தி சொல்லும் நிருபர்’ (பாத்தூனி ரிப்போர்ட்டர்) என்று பெயர்.
மாதந்தோறும் ஆசிரியரின் தலைமையில் ஆசிரியர் குழு கூடி, அடுத்த மாதம் வெளிவரும் செய்திகளை முடிவு செய்கிறது. ஒவ்வொரு நிருபரும் தன் செய்திகளை ஆசிரியரிடம் சொல்வார். அவற்றில் முக்கியமான செய்திகள் பத்திரிகைக்கு தேர்ந்தெடுக்கப்படும். பத்திரிகைக்கான புகைப்படங்களையும் நிருபர்கள்தான் எடுக்கிறார்கள். தெருக்குழந்தைகள் சிலருக்கு புகைப்படம் என்றால் பயம். ஒரு முறை, தன்னைப் படம் எடுப்பதைத் தடுத்த சிறுமியொருத்தி, தான் அனுபவிக்கும் துன்பத்தை காகிதத்தில் வரைந்து பாலக்நாமா குழுவினருக்குக் கொடுத்தாள் – கழிவுக் குவியலிலிருந்து உணவு சாப்பிடும் அவளது படம்தான் அது!
அச்சிடப்பட்டு வெளிவரும் பத்திரிகைகளை தெருக்களில் அலைந்துதிரிந்து விற்பவர்களும் நிருபர்கள்தான். தெருக்குழந்தைகளுக்குக் கொடுத்தது போக மிச்சமுள்ள பிரதிகளை விற்கிறார்கள். தெருக்குழந்தைகளுக்கு பத்திரிகை இலவசம். மற்றவர்களுக்கு ஐந்து ரூபாய்.
கடுமையான தலையங்கம்
தில்லி அரசாங்கத்தை கடுமையான மொழியில் விமர்சிக்கும் தலையங்கத்துடன் கடந்த செப்டம்பர் இதழ் வெளிவந்தது. “தெருநாய்களின் எண்ணிக்கையை கணக்கெடுக்க உங்களுக்கு நேரம் இருக்கிறது. தெருக்குழந்தைகளின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க இன்றுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்?” என்ற கேள்விதான் தலையங்கத்தின் தலைப்பு.
சில மாதங்களுக்குப் பிறகு வெளிவந்த பாலக்நாமா இதழ், அதிகாரிகளுக்கு அதிர்ச்சியளித்தது. வடக்கு தில்லியில் தெருக்குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பொறுப்பை பாலக்நாமா தானே ஏற்றுக்கொண்டது. அந்த இதழில் முதல் பக்கம் இருக்கும் தலையங்கம் இப்படிச் சொல்கிறது: “மனது வைத்தால் நாய்களின் எண்ணிக்கையை மட்டுமல்ல, தெருக்குழந்தைகளின் எண்ணிக்கையையும் கணக்கெடுக்க முடியும் அரசாங்கமே!”
தெருவின் குரல்
“பாலக்நாமா தெருக்குழந்தைகளுக்கு ஒரு பாதுகாப்புக் கவசம். தில்லியின் ஒவ்வொரு பகுதியின் பொறுப்பிலிருக்கும் நிருபர், அங்குள்ள தெருக்குழந்தைகளை மாதம் ஒரு முறை பார்க்கவேண்டும் என்பது பாலக்நாமாவின் சட்டம். தெருவில் திரிபவர்களின் துயரங்களை வெளி உலகத்துக்கு தெரிவிப்பதுதான் எங்கள் பத்திரிகை தர்மம்.” – சம்பு சொல்கிறார்.
“ஹோட்டல்களில் வேலை செய்யும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் தில்லியில் இருக்கிறார்கள். அவர்களைப் பார்ப்பதற்குக்கூட ஹோட்டல் உரிமையாளர்கள் எங்களை அனுமதிப்பதில்லை. ‘குழந்தைகளைத் துன்புறுத்தாதீர்கள். இன்று அவர்களுக்குச் சொந்தமாக ஒரு பத்திரிகை இருக்கிறது!’ என்று பாலக்நாமா நிருபர்கள், ஹோட்டல் உரிமையாளர்களிடம் சொல்வார்கள். உரிமையாளர்கள் இருக்கும்போது தங்கள் பெயரைச் சொல்லக்கூட குழந்தைகளுக்கு அச்சம். அவர்கள் மிகவும் பரிதாபமான நிலையில் இருக்கிறார்கள். எங்கள் நிருபர்கள் துப்பறிவாளர்களைப்போல. குழந்தைத் தொழிலாளர்கள் இருக்கும் தொழிற்சாலைகளின் உள்ளேகூட நாங்கள் ரகசியமாகப் புகுந்துவிடுவோம். சும்மா பொழுதுபோக்குபோல அங்கிருந்து சில விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்வோம். உரிமையாளர்களின் விவரங்களைச் சேகரிப்போம். பிறகு நேராக பாலக்நாமா அலுவலகத்துக்கு வந்து செய்தி தயாரிப்போம்.” – ஒரு ஆசிரியருக்கான கௌரவத்துடன் சம்பு சொல்கிறார்.
இந்தக் குழந்தைகள், பேனாவை வாளாக்கி, குழந்தைத் தொழிலாளர் முறைக்கு எதிராக போராடுகிறார்கள். பத்திரிகைதான் இவர்களின் சக்தி. இந்தப் பத்திரிகை தெருக்குழந்தைகளுக்கு, கொடும் வதைகளின் கண்ணீர்த் துளிகளுக்கு இடையில் நம்பிக்கையின் சிறிது வெளிச்சமாக இருக்கிறது. இந்த நாட்டில் என்றாவது குழந்தைத் தொழிலாளர் முறையும் யாசகமும் இல்லாதொழியும் என்று அவர்கள் கனவு காண்கிறார்கள்.
ஒரு நாள் நாங்களும் பள்ளிக்குச் செல்வோம், கழிவு நாற்றமடிக்காத உணவை வயிறு நிறையச் சாப்பிடுவோம், நல்ல உடைகள் அணிவோம், ஒரு நாள் நாங்களும் மனப்பூர்வமாகச் சிரிப்போம்!
*
தொடர்புடைய சுட்டி :
நம்மைச் சுற்றி: தெருவோரக் குழந்தைகளின் பத்திரிகை தேவதை
Tuesday, January 31, 2017
Monday, January 16, 2017
பணமே உன்னால் என்ன குணமே
SANJAY SUBRAHMANYAN presents "VEDANAYAKAM PILLAI"
38ஆம் நிமிடத்தில் ஆரம்பமாகிறது அந்த அமர்க்களம். மாயவரம் வேதநாயகம் பிள்ளையின் பாட்டை கீழே இணைத்திருக்கிறேன். நன்றி : RagamalikaTV & VasuBalaji
----
38ஆம் நிமிடத்தில் ஆரம்பமாகிறது அந்த அமர்க்களம். மாயவரம் வேதநாயகம் பிள்ளையின் பாட்டை கீழே இணைத்திருக்கிறேன். நன்றி : RagamalikaTV & VasuBalaji
----
Subscribe to:
Posts (Atom)