Saturday, October 24, 2015

பென்னேஸ்வரனின் அற்புதமான பதிவு

வடக்குவாசல் இதழின் 'சனிமூலை'யில் ராகவன் தம்பி என்ற புனைபெயரில் வெளியான நண்பரின் இந்தப் பதிவை பாராட்ட வார்த்தையில்லை. அவசியம் வாசியுங்கள்.
*

நண்பர் ஒருவரிடம் இறைநம்பிக்கை குறித்துப் பேசிக்கொண்டிருந்த போது தான் கடவுள் நம்பிக்கையற்றுப் போனது குறித்து சில சமயம் வருத்தப் படுவதாகவும் பிரச்னைகள் தன்னை அழுத்தும்போது ஏதாவது கடவுளை நம்பி இருந்தால் தேவலையாக இருந்திருக்குமே என்கிற எண்ணம் தனக்குள் எப்போதாவது எட்டிப் பார்ப்பதையும் தான் உணர்வதாகச் சொல்வார். தன்னை ஒரிடத்தில் தனியாக நிறுத்தி வைத்து விட்டு சற்று எட்டி நின்று தன்னையே பார்த்து எதையும் அவதானிக்கும் அந்தப் போக்கு எனக்கு எப்போதும் பிடிக்கும். அது ஒரு சித்தரின் மனப்பாங்கு. இது எனக்கெல்லாம் இந்த ஜென்மத்தில் வாய்க்காது.
பொதுவாக சொல்வார்கள். ஒரு மனிதன் நாத்திகனாக மாறவும் சடங்குகளில் நம்பிக்கையற்றுப் போகவும் இங்கர்சால், பகத்சிங், தந்தை பெரியார், போன்றோரின் நூல்களைப் படிக்கத் தேவை இல்லை. ஹரித்வார், கயா, காசி போன்ற புனிதத் தலங்களுக்கு ஒருமுறைசென்று வந்தால் போதும். அதே போல மற்ற மதங்களிலும் அந்தந்த மதங்கள் உயர்வாகப் போற்றும் முக்கியமான ஸ்தலங்களுக்கு ஒருமுறை போய்வந்தால் போதும். தானாகவே இறைநம்பிக்கை சற்று தடுமாற்றம் காணும். சடங்குகள் மீதான நம்பிக்கை வலுவாக ஆட்டம் காணும்.
இப்படிக் கடவுள் நம்பிக்கை மற்றும் சடங்குகள் குறித்து சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் மனதில் நிழலாடியது.
கிருஷ்ணகிரியில் அப்பா இறந்து போனார். பதின்மூன்று நாட்கள் காரியங்கள் நடந்தன. இறப்பு தொடர்பான மாத்வ பிராமணர்களின் சடங்குகள் மிகவும் கடுமையானவை. குளிரும் மழைச் சாரலும் நடுக்கித் துன்புறுத்தும் டிசம்பர் மாதத்தில் வெட்ட வெளியில் வயற்காட்டில் பத்து நாட்கள், ஒரு நாளைக்குக் குறைந்தது பத்துமுறை கிணற்று நீரில் முங்கிக் குளித்து ஈரத் துணி உடுத்திக் கொண்டு கடும் பட்டினியுடன் மாலை நான்கு மணி வரை தொடர்ந்த சடங்குகள். இப்படிப் பதின்மூன்று நாட்கள் காரியங்கள் முடித்து இரண்டாம் நாள் பால் ஊற்றும் போது ஒரு கலசத்தில் சேகரித்த அப்பாவின் அஸ்தியில் கொஞ்சம் தனியாக வைத்து இருந்ததை ஆச்சார் (புரோகிதர்) என்னிடம் கொடுத்தார். அஸ்திக்கு வேண்டிய மந்திரங்கள் சடங்குகளை செய்து முடித்து விட்டதாகவும் தில்லிக்கு அந்தக் கலசத்தை எடுத்துச்சென்று யமுனையிலும் கங்கையிலும் கரைக்க வேண்டும் என்றும் சொன்னார். அப்படிக் கரைக்கும் போதும் புரோகிதர் யாரும் தேவையில்லை என்றும் வெறுமனே எடுத்துச்சென்று ஆற்றில் கரைத்து விட்டு குளித்து விட்டு முடிந்தால் பிராமணர்கள் யாருக்காவது அன்னதானம் செய்து விட்டு வருமாறும் கூறியிருந்தார்கள்.
ஊரில் காரியங்கள் முடித்து தில்லி திரும்பி வந்ததும் முதலில் யமுனையில் அஸ்தியைக் கரைப்பதற்குக் கிளம்பினேன். இங்கே சாக்கடை கலக்காத யமுனையைக் கண்டுபிடிப்பது என்பது மிகமிகக் கஷ்டமான காரியம். ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு பல இடங்களில் அலைந்து திரிந்தேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுப்புறச் சூழல் அத்தனை கெட்டுப் போகத் துவங்காத தில்லியில் இந்த கதி என்றால் யமுனை இப்போது எப்படி இருக்கும் என்று சற்று கற்பனை செய்து பார்க்கலாம். எங்கெங்கோ தேடித் தடவி அலைந்து திரிந்து ஒரிடத்தை நானும் யதார்த்தா நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த குணசேகரனும் தேடிக் கண்டுபிடித்தோம். அது தில்லி நகரிலிருந்து பலகிலோமீட்டர்கள் தள்ளியிருந்த ஒரு சிறு கிராமம். அங்கு ஓடும் யமுனையும் ஊருக்குள் ஓடும் யமுனையை விடப் பெரிய அளவில் ஒன்றும் சுத்தமாக இல்லை. எல்லா ஓடைப் பிரிவுகளிலும் சாக்கடை கலக்காமல் ஓரிரண்டு பிரிவுகளில் சற்றுத் தெளிவான நீர் பாய்ந்து கொண்டிருந்தது. ஆனால் ஒரேயடியாக சுத்தமான நீர் என்றும் சொல்ல முடியாது. அஸ்தியைக் கரைக்கலாம் என்னும் அளவில் தெளிவு. ஆனால் குளிக்கும் அளவுக்கு சுத்தமாக இல்லை. எனவே ஏகப்பட்ட ஆராய்ச்சி, பயணம் மற்றும் தேடல்களுக்குப் பிறகு கிட்டிய அந்த யமுனைத் தண்ணீரில் ஒரு பகுதி அஸ்தியைக் கரைத்து விட்டு பெயருக்குத் தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து குளித்தேன். யமுனை முடிந்தது. இப்போது இன்னும் ஒரு கலசத்தில் இருக்கும் அஸ்தியை கங்கையில் கரைக்க வேண்டும்.
மிச்சமிருந்த அஸ்தியைக் கரைக்க ஹரித்வார் தனியாகப் பயணப்பட்டேன். ஹரித்வார் அடைந்ததும் பேருந்து நிலையத்திலேயே ஒரு சைக்கிள் ரிக்க்ஷா பிடித்தேன். அஸ்தியைக் கரைக்க வைத்து குளிக்க வைத்து மீண்டும் பேருந்து நிலையத்தில் விடுவதற்கு இருபது ரூபாய் என்றான். ஒப்புக்கொண்டு ஏறி உட்கார்ந்தேன். ஹரித்வார் அநியாயத்துக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஊர். ரிக்க்ஷா ஓட்டி என்னை உட்கார வைத்து அநேக தூரம் ரிக்க்ஷாவை நெட்டித் தள்ளிக் கொண்டே வந்தான். அப்படி உட்கார்ந்து வருவதற்கு மிகவும் கூச்சமாக இருந்தது. சுமார் இருபது நிமிட நெட்டித் தள்ளலுக்குப் பிறகு கங்கை ஆற்றின் ஒரு கரையில் நின்றது ரிக்க்ஷா.
ரிக்க்ஷாவில் இருந்து நான் இறங்குவதற்கு முன்பே குறைந்தது ஒரு நூறு பண்டாக்களாவது ஏறக்குறைய என்னைத் தாக்குவது போன்ற பாவனையில் சூழ்ந்து கொண்டார்கள். அஸ்திக்கலசம் வைத்திருந்த கிருஷ்ணகிரி ராணி சில்க் ஹவுஸ் மஞ்சள் துணிப்பையை ஆளுக்கொரு பக்கம் வலுவாக இழுக்கத் துவங்கினார்கள். 'யாரும் எனக்குத் தேவையில்லை' என்று உரக்க நான் போட்ட கூச்சலைக் கேட்க யாருக்கும் பொறுமை இல்லை. என்னை ஆக்ரோஷமான போட்டியின் ஒரு பொருளாக மாற்றி ஆளுக்கு ஆள் தங்கள் வலிமையைக் காட்டிக் கொள்ள யுத்தம் செய்வதைப் போன்ற ஒரு இரைச்சலில் தொடர்ந்து அவர்கள் ஈடுபட்டார்கள். நான் சளைக்காமல் அந்த மஞ்சள் பையை வலுவாக இழுத்து என்னிடம் வைத்துக் கொண்டு ஆற்றை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன். மஞ்சள் பையை என்னிடம் பறி கொடுத்த பண்டாக்கள் வேறு வகையான தாக்குதலில் இறங்கினார்கள்.
"அந்த ஆத்மா நேரா நரகத்துக்குத்தான் போகும்.''
"அநாதையா போகப்போகுது''
"வாரிசு இல்லாத ஆத்மாவா''
இப்படி காதுக்கு வெகு அருகாமையிலேயே கூச்சல் போட்டுத் தொடர்ந்து கொண்டிருந்தது ஒரு கூட்டம். தாங்க முடியவில்லை. இனி வேறு வழியில்லை. யாருக்காவது எதாவது கொடுத்தால்தான் அடுத்து நகர விடுவார்கள் என்கிற நிலையும் உருவானது. இருப்பவர்களில் சற்று பலசாலியாகத் தோற்றமளித்த ஒருவனைத் தேர்ந்தெடுத்தேன். அந்தப் பண்டா சற்று அருகாமையில் நெருங்கிப்பேசிய போது மட்டமான சாராயத்தின் வாடையும் பீடிப்புகையின் சருகு வாடையும் லேசாக அடித்தது.
அவனிடம் சொன்னேன்-
உனக்குக் கொஞ்சம் பணம் கொடுக்கிறேன். மற்ற எல்லோரையும் நிறுத்து. "எவ்வளவு வேண்டும் என்று சொல்.''
"ஆயிரம் ரூபாய் கொடு''
"ஆயிரம் ரூபாய்க்கு உனக்கு ஒரு வேலையும் கிடையாது. எல்லா மந்திரங்களும் சொல்லி இந்த அஸ்திக்கான சடங்குகளை ஊரிலேயே முடித்து விட்டோம். எனக்கு அஸ்தியை வெறுமனே கரைக்க வேண்டும். என்னைத் துரத்தி வரும் மற்றவர்களை நீ நிறுத்தினால் போதும். சும்மா கரையில் வந்து உட்கார்ந்து கொள். அதுபோதும். நூறு ரூபாய் வாங்கிக் கொள்'' என்றேன்.
சிறு தயக்கத்துக்குப் பிறகு சரி என்றவன் கூட்டத்தில் மற்றவர்களைப் பார்த்துக் கத்தினான்- "விலை படிந்து விட்டது. நீங்கள் போகலாம்.''
அடுத்த நொடியில் அந்தக் கூட்டம் சுத்தமாகக் கரைந்து போனது. அத்தனை கூட்டமும் எங்கே போனது என்று தெரியவில்லை. கரையில் அந்தப் பண்டாவும் நானும் தனித்து விடப்பட்டோம். கரையில் ஒருவன் இலைத் தொன்னையில் துலுக்க சாமந்திப் பூக்கள் வைத்து விற்றுக் கொண்டிருந்தான். அவனிடம் ஒரு தொன்னை பூ வாங்கச் சொன்னான் பண்டா. அவனிடம் நான் மீண்டும் உறுதிப் படுத்திக் கொண்டேன். "நீ மந்திரங்கள் எதுவும் சொல்லத் தேவையில்லை.''
நீ கொடுக்கும் வெறும் நூறு ரூபாய்க்கு நான் எதற்கு மந்திரங்கள் சொல்ல வேண்டும்?' என்று நிஷ்டூரியத்துடன் பதில் சொல்லிக் கரையில் அமர்ந்தான் பண்டா. துண்டு சுற்றிக்கொண்டு கங்கையில் கால் நனைத்தேன். கங்கை நீரின் முதல் ஸ்பரிசத்தில் ஒரு ஆயிரம் தேள்களின் கொட்டுக்கள். வலியக் காலைப் பின்னிழுத்து மீண்டும் தயக்கத்துடன் பின்னர் சற்றுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மீண்டும் கால் நனைத்து நின்றேன். அஸ்திக் கலசத்தைக் கையில் எடுத்து கரையில் வாங்கிய பூக்களுடன் சேர்த்துக் கரைக்க ஆயத்தமானேன்.
பண்டாவின் அவசரக் குரல் என்னை நிறுத்தியது. ஒரு நிமிஷம். நான் வேதப் பிராமணன். ஓரிரண்டு மந்திரங்களாவது சொல்லாமல் உன்கிட்டே காசு வாங்கினால் அது அதர்மமான காரியம். கலசத்தைக் கையிலே வைத்து சூரியனைப் பார்த்து நின்னு நான் சொல்ற ஒரு சின்ன மந்திரத்தை சொல்லு போதும் என்றான் அந்தப் பண்டா.
மந்திரம் எல்லாம் வேண்டாம்னு முன்னாடியே நான் சொல்லிட்டேன். பேசிய காசைத் தந்து விடுவேன்.
"அப்படி வெறுமனே காசு வாங்க மாட்டேன். நான் சொல்ற மந்திரத்தை திரும்பச் சொல்லு போதும்'' கொஞ்சம் தயங்கி விட்டு 'சொல்லு' என்றேன்.
"ஹே கங்கா மாதா''
"ஹே கங்கா மாதா''
யாருடையது என்று கேட்டான். அப்பாவின் அஸ்தி என்று சொன்னேன். அப்பா பெயர் மற்றும் கோத்திரம் கேட்டான். சமஸ்கிருதம் அல்லாத உள்ளூர் இந்தியில் மந்திரத்தைத் தொடர்ந்தான். "விஸ்வாமித்ர கோத்திரத்தை சேர்ந்த என் தகப்பனார் கிருஷ்ண ராவ் சர்மாவின் அஸ்தியை உன்னுடைய பாத கமலங்களில் சேர்ப்பிக்கிறேன்.''
நான் திருப்பிச் சொன்னேன்.
"நான் இந்த நாளில் பிராமணர்களுக்கு ஸ்வர்ணதானம் செய்வேன்.''
நான் பிரேக் போட்டேன் - "நஹி''
'பிராமணர்களுக்கு அன்னதானம் செய்வேன்'
"பில்குல் நஹி''
"சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லு''
"சொல்ல மாட்டேன்''
பரவாயில்லை. பிராமணர்களுக்கு போஜனத்துக்கு ஐந்நூறு ரூபாய்தான் ஆகும்.
"இல்லை. மாட்டேன்''
அடிச்சி கங்கையிலே தூக்கி எறிவேன்.
கண்பார்வை படும் தூரத்தில் ரிக்க்ஷாக்காரன் சாய்ந்து உட்கார்ந்து பீடி புகைத்துக் கொண்டிருந்தான்.
"தைரியம் இருந்தா கிட்டே வந்து பாரு. உன்னையும் இழுத்துக் கொண்டுதான் இந்த கங்கையிலே உயிர் விடுவேன்.''
"நீ அப்பா மேலே பாசம் இல்லாத பாவி. அந்த ஆளு நரகத்துக்குத்தான் போவான்.''
"அதைப்பத்தி நீ கவலைப்படாதே.''
ஒரு மாதிரி கைநடுக்கத்துடன் சற்று ஒதுங்கி நின்று பீடி புகைக்கத் துவங்கினான் அந்தப் பண்டா. அந்த நேரத்தைப் பயன்படுத்தி கங்கை பிரவாகத்தில் அஸ்தியைக் கரைத்துவிட்டு மூன்று முழுங்குப் போட்டுக் கரையேறினேன். அவன் முணுமுணுப்பான குரலில் கெட்ட வார்த்தைகளில் என்னைத் திட்டிக் கொண்டிருந்தான். துணி மாற்றிக் கொள்ளும்போது என்னருகில் வந்தான் பண்டா. நூறு ரூபாய் பத்தாது. முன்னூறாவது வேணும் என்றான்.
குடுக்கறதை வாங்கி இடத்தைக் காலி பண்ணு என்று சொல்லிக் கொண்டே பண்டா கையில் நூறு ரூபாயைக் கொடுத்து விட்டு ரிக்ஷாவில் ஏறினேன். அவன் ஆக்ரோஷத்துடன் என் சட்டையைப் பிடித்தான். நான் வலுவுடன் உதறிக் கொள்வதற்கு முன்பு ரிக்ஷாக்காரன் சடாரென்று இறங்கி வந்து அந்தப் பண்டாவைப் பிடித்து அவன் முகத்தில் மிகவும் வலுவாக ஓங்கிக் குத்தினான். அதை எதிர்பார்க்காத பண்டா ஆடிப்போனான். அதிர்ச்சியில் உறைந்த அவன் ஒரு நொடி சமாளித்துக் கொண்டு ரிக்ஷாக்காரனைப் பார்த்து ஆவேசத்துடன் கத்தினான்
"மாதர்சோத்''
ரிக்க்ஷாக்காரன் அவனை மீண்டும் ஆக்ரோஷத்துடன் இடுப்புக்குக் கீழே ஓங்கி எட்டி உதைத்தான். பண்டா வலியில் நெளிந்து கொண்டே தரையில் புரண்டான். அவன் முகத்தில் அதீதமான பீதி தெரிந்தது. ரிக்க்ஷாக்காரன் ஒன்றும் நடக்காதது போல என்னை ஏறி உட்காரச் சொல்லி விட்டு நெட்டித் தள்ளிச் செல்ல ஆரம்பித்தான். ரிக்க்ஷாவில் உட்கார்ந்து கொண்டு சற்று பயத்துடன் பண்டாவைத் திரும்பிப் பார்த்தேன். அவன் சுதாரித்து எழுந்து உட்கார்ந்து கொண்டு சிரமத்துடன் பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொள்ள ஆரம்பித்தான். ஒரு திருப்பத்தில் கண் பார்வையில் இருந்து மறைந்தான்.
காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாததால் அசுரப்பசி எடுத்தது. பேருந்து நிலையத்துக்கு வந்ததும் ரிக்க்ஷாக்காரனை ஏதாவது சத்த சைவ உணவு விடுதிக்குப் போகச் சொன்னேன். காலையில் இருந்து என்னுடன் இருக்கிறான். அவனையும் என்னோடு சேர்ந்து சாப்பிடச் சொன்னேன். மிகவும் தயங்கினான். ஒன்றும் பிரச்னையில்லை. வந்து சாப்பிடு. சவாரிக்கான பணத்தைத் தனியாகக் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னேன். அழுக்கான துண்டினால் முகத்தையும் கைகளையும் துடைத்துக்கொண்டு என் எதிரே உட்கார்ந்து கொண்டான். ரொம்ப நேரமாக அவனுடன் ரிக்க்ஷாவில் சவாரியாக உட்கார்ந்தும் அவன் பெயர் கேட்காதது ஞாபகம் வந்தது.
"முஹமது அனீஸ்'' என்றான்.
வீட்டில் இருப்பவர்களுக்கும் சாப்பாடு வாங்கிக்கொள்வாயா என்று கேட்டேன்.
நீண்ட தயக்கத்துக்குப் பிறகு ஒப்புக் கொண்டான். வீட்டில் ஏழு பேர்கள் என்றான். ஓட்டல் காரரிடம் அவனுக்கு வேண்டிய அளவு ரொட்டி மற்றும் சப்ஜியைக் கட்டிக்கொடுக்கச் சொல்லிப் பணம் கொடுத்து விட்டு அவனுக்கும் சவாரிக்குப் பணம் கொடுத்து விட்டு பேருந்து நிலையத்துக்கு பஸ் பிடிக்க விரைந்தேன்.
இரவு தில்லி சேர்ந்ததும் ஊரில் இருக்கும் அண்ணாவை தொலைபேசியில் கூப்பிட்டு சொன்னேன்.
"அப்பாவோட அஸ்தியை கங்கையில் கரைச்சுட்டேன்.''
அக்கா குறுக்கிட்டுக் கேட்டாள் பிராமண போஜனம் ஏதாவது ஏற்பாடு பண்ணியா?
'ஆமாம். ஏழு பேர் சாப்பிட்டு இருப்பாங்க'.
*
நன்றி : வடக்குவாசல், Yadartha K Penneswaran & Majeed