Sunday, June 21, 2015

இசை : உத்தமர் உஸ்மான் (ரலி) பொன்மொழிகள்

இஸ்லாமிய அரசின் மூன்றாம் கலிஃபாவான உஸ்மான் (ரலி) அவர்களின் பொன்மொழிகளை இணைத்து தம்பி நாகூர் சகீர் ஹூஸைன் எழுதிய இந்தப் பாடல் அற்புதமானது. அதுவும் 'உயர்ந்த ஆடை அணிய நினைத்தால் கஃபனை எண்ணிப் பார் ; உயர்ந்த வீட்டில் வாழ நினைத்தால் கபுரை நினைத்துப் பார்' என்று கடைசியில் வரும் வரிகள் நம்மை உலுக்கி அழ வைத்துவிடும். இசையமைத்துப் பாடிய சகோதரர் A.T. ஷெரீபும் தன் பங்குக்கு அந்த வரிகளை கனத்தோடு இருமுறை சொல்கிறார். வாழ்க. ஆனால் , குர்ஆன் என்று அழகாகச் சொல்லாமல் கம்பீரம் என்று நினைத்துக்கொண்டு 'கெர்ஆவ்ன்' என்று கொட்டாவி விடுவதை மட்டும் அவர் குறைத்துக்கொண்டால் கேட்பதற்கு இன்னும் இதமாக இருக்கும். நல்லது, ஆண்டிற்கு ஒருமுறைதான் இம்மாதிரி ஆன்மிகப் பதிவு போட முடிகிறது (விளக்கம் : பாடலில்!).  இருவருக்கும் இறைவன் நற்பேறு அளிப்பானாக, ஆமீன்.

*


பாடல் வரிகள் :


சுபசோபனம் உரைத்தார் நபிகள் நாயகம்
சுவனத்தில் என் தோழர் உத்தமர் உஸ்மான்
குர்ஆனைத் தொகுத்தவர் நாஸிருல் ஃபுர்க்கான்
அமீருல் மூஃமினின் ஹஜ்ரத் உஸ்மான் கனி

இனிமையான குணமும் வசீகரப் பேழகும்
அமைதியும் அடக்கமும் உறுதியும் ஈகையும்
வானவர்கள் நாணமுறும் மென்மையானவர்

சுபசோபனம் உரைத்தார் நபிகள் நாயகம்
சுவனத்தில் என் தோழர் உத்தமர் உஸ்மான்

கூர்மையான வாளின் வீச்சு உடலைக் காயமாக்கும்
கூறும் தீய வார்த்தைகள் உயிரைக் காயமாக்கும்
கால்கள் சருகினாலும் நாவு தவறக்கூடாது
- இது போன்ற பொன்மொழிகள் உலக மாந்தர்க்கு
உறுதியோடு சொன்னார்கள் முஸ்ஹபு உஸ்மான்
உறுதியோடு சொன்னார்கள் முஸ்ஹபு உஸ்மான்

ஆண்டிற்கு ஒரு முறையேனும் துன்பம் வரல்லையெனில்
அவனை விட்டு அல்லாஹ் விலகி விட்டான் என்று
உறுதியோடு சொன்னார்கள் உஸ்மான் கனி
உறுதியோடு சொன்னார்கள் உஸ்மான் கனி

உயர்ந்த ஆடை அணிய நினைத்தால் கஃபனை எண்ணிப் பார்
உயர்ந்த வீட்டில் வாழ நினைத்தால் கபுரை நினைத்துப் பார்
மண்ணுக்கு இரையாகும் மனிதா - நீ
சுவையை மறந்திடு

இது போன்ற பொன்மொழிகள் உலக மாந்தர்க்கு
இதமாக எடுத்துரைத்தார் முஸ்ஹபு உஸ்மான்
இதமாக எடுத்துரைத்தார் உஸ்மான் கனி

சுபசோபனம் உரைத்தார் நபிகள் நாயகம்
சுவனத்தில் என் தோழர் உத்தமர் உஸ்மான்
*


நன்றி : நாகூர் கவிஞர் சகீர் ஹூசைன்

Saturday, June 20, 2015

ருசிக்காலம் - ஆபிதீன்

என்னே இறைவனின் கருணை!    ரமலான் முதல்நாளன்று என்னுடைய வேர்ட்பிரஸ் 'ஆபிதீன் பக்கங்கள்' பக்கத்தை முற்றிலும் அழித்து விட்டான்! ஒன்பது வருட உழைப்பு...  எத்தனை ஆயிரம் லிங்க்'குகள்... முக்கியமான PDF கள்...  ஒருவேளை, அங்குள்ள சிலரின் (தாஜ் அல்ல!) கவிதைகளைப் படித்துவிட்டு யாராவது கம்ப்ளைண்ட் செய்துவிட்டார்களா? காரணம் தெரியவில்லை.  ஹூம்ம்... இனி ஒவ்வொன்றாக அங்கிருந்தவற்றை இங்கே கடத்த வேண்டி...
...

அட,   என்ன அதிசயம்!  என் வேண்டுகோளுக்கு உடனே பதில் வருகிறது வேர்ட்பிரஸ்ஸ்லிருந்து,  'Hi Abedeen, Your site was flagged by our automated anti-spam controls. We have reviewed your site and removed the suspension notice.'  என்று....

நன்றிங்க, இருந்தாலும் இங்கேயும் போடுறேன். தீனுக்காக, மன்னிக்கவும், தீனிக்காக வாழும் இந்த துனியாவில் யாரையும் நம்ப இயலாது - இறைவனைத் தவிர!

இனி வருவது ருசிக்காலம்...

***

’பாம்பு புடிக்கிறத விட நோம்பு புடிக்கிறது ஈஸி’ என்று என் செல்லமகனுக்கு சொல்வதுபோல - கடித வடிவில் - ஒன்று தயார் செய்திருந்தேன் , ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு.  தலநோன்பு (முதல் நோன்பு) பிடிக்கிறேன் என்று தானும் தவித்து எங்களையும் அவன் தவிக்க விட்டுக்கொண்டிருந்த சமயம் அது. அப்புறம் மறந்து விட்டது. ’அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்’ என்ற தலைப்பில் அஹ்மது மீரான் ஃபைஜி எழுதிய கட்டுரையை நேற்றிரவு படித்தபோது கடிதம் ஞாபகம் வந்தது. தேடி எடுத்து பதிவிடுகிறேன். ஓவராக இலக்கியம் கற்ற அன்பர்கள் உபதேசம் செய்து தொல்லை கொடுப்பதால் அந்தக் கடிதத்தில் இருந்த சில வார்த்தைகளை அடித்துவிட்டேன், போதுமா? எப்படிலாம் பயமுறுத்துறாஹா! ரமலான் (வரும்) நேரத்தில் வீண் விளையாட்டு, சிரிப்பு, நையாண்டி என நேரத்தை வீணாக்கும் கும்பலில் நான் சேர்வதே இல்லை. தெரியும்தானே?

***

அன்புள்ள மகனார் அனீஸுக்கு,

ரமலான் முபாரக்.

ஆசிகளுடன் வாப்பா எழுதிக் கொண்டது. உனது மற்றும் உம்மா, லாத்தா , இன்னாச்சிமா ஆகியோரின் நலமறிய ஆவலாக இருக்கிறேன். அத்துடன் நமது வீட்டிலுள்ள கண்ணாடி மீன்தொட்டியில் உள்ள கலர் மீன்களின் நலத்தையும் எழுதவும். சென்றமாதம் , உனக்கும் லாத்தாவுக்கும் அனுப்பிய விலை உயர்ந்த வாட்சுகள் (நாலு திர்ஹம்) கொடுப்பதற்காக நம் வீட்டிற்கு வந்த என் நண்பர் , உங்கள் வீட்டில் உள்ள மீன் தொட்டியில் தண்ணீரைவிட மீன்கள் அதிகமாக இருக்கின்றன என்று கடிதம் எழுதியிருந்தார்.

நம் சோத்தூர் யானையை விட்டுவிட்டேனே... மறக்காமல் எழுதவும். யானை பார்ப்பதென்றால் எனக்கு எவ்வளவு பிரியம் என்பதும் வழக்கமாக நோன்புப் பெருநாள் விடுமுறையில் ஊர்வரும் நான் , தர்ஹா முன் நிற்கும் யானையை அலுக்காமல் பார்த்தவாறு 'கவிக்கோ'வின் குருடர்களின் யானை என்ற  கவிதையை முணுமுணுப்பதும் உனக்குத் தெரியும். தெரியாதது ஒன்றுண்டு. உன் வாப்பா முதலில் எழுதிய கவிதையே யானை பற்றிதான். யுகயுகமாய் எரிகோளம் என்னின் அரையடிக்கு மேலே என்று தொடங்கும் அந்த கவிதை , யானைகள் மட்டுமே படிக்க முடிகிற ஒரு சிற்றிதழில் வெளிவந்தது.

பிறந்ததிலிருந்து நம்மூர் யானைகளைப் பார்த்து வருகிறேன். குளிக்கப்போய் , கானாமப் போச்சு என்று ஊரையே கலங்கடித்த முதல் யானையிலிருந்து  (ஊர் மரைக்கார்களெல்லாம் தங்கள் சட்டை ஜோப்பை உற்றுப் பார்த்துக் கொண்டார்கள் அப்போது) ஒரு சர்க்கஸ் ஒட்டகத்திற்கு பயந்து ஓட்டமெடுத்த இப்போதைய மூன்றாம் யானை வரை. கூடவே, அவைகளைப் பிச்சையெடுக்கவைக்கும் தர்ஹா டிரஸ்டிகளின் நலன்களையும்.

நானும் இங்கு நலம். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அப்படித்தான் கூற வேண்டும். உன் பாட்டனார் ஹஸனப்பா மலேசியாவிலிருந்து எங்களுக்கு அந்த காலத்தில் அப்படித்தான் எழுதிக் கொண்டிருந்தார்கள். நீயும் குடும்பத்தை விட்டு எங்கோ போய் அப்படி எழுதுபவனாக ஆகிவிடக் கூடாது என்ற அக்கறையில் நான் எழுதும் சில கடிதங்களை , இந்த வாப்பா சுத்த போர்.. பெருசு பெருசா எழுதுறாஹா என்று சொல்லிக் கிழித்து விடுகிறாய் என்று உன் உம்மா எழுதியிருந்த கடிதத்தை நான் கிழித்துப் போட்டு விட்டேன்.

ஆனாலும் நான் உபதேசிப்பதை நிறுத்திவிடக் கூடாது என்று தோன்றுகிறது. இப்போது உனக்கு வெறும் பத்து வயதுதான் ஆகிறது. இப்போது வளையாமல் எப்போது வளையப்போகிறாய்.

நீ வளைவதெல்லாம் நடனத்திற்காக அல்லவா. சென்ற வருடம் நான் விடுமுறையில் வந்திருந்தபோது , ஸ்கூல் ஆண்டுவிழாவிற்காக நீ ரிகர்ஸல் எடுத்த பாட்டை இப்போது நினைத்தாலும் நடுக்கம் வருகிறது. ஒத்த ரூவா சைஸில் ஒரு மேட்டர் இருக்கு என்ற பாட்டுக்கு நீ உன் வகுப்பு குட்டிப்பெண்ணுடன் ஆடப்போவதாகச் சொன்னாய்.  நான் உன் பள்ளி வகுப்பாசிரியையிடம் சென்று இந்த பாட்டு வேணாம் வல்கராக இருக்கிறது என்று சொன்னதற்கு , அப்ப..வெத்தலைக்கு சுண்ணாம்பு வக்கிற பாட்டு கொடுக்குறேன் சார் என்று அவள் அப்பாவியாகச் சொன்னாள்.

கடைசியில் அந்த பாட்டுக்குத்தான் ஆடியதாகக் கேள்விப்பட்டேன். இதில் உன்னைக் குற்றம் சொல்ல ஏதுமில்லை. தேர்ந்தெடுத்த, நடன அசைவுகளை கற்றுத்தந்த  உன் ஆசிரியைகளின் தவறென்றும் சொல்ல முடியாதுதான்...

கதை எழுதுவது போல எதையோ சொல்வதற்கு எங்கோ போகிறேன். இந்த கடிதம் நான் எழுத ஆரம்பித்தது வேறு ஒரு முக்கியமான விஷயத்துக்காக. நோன்பு மாதம் வரப் போகிறது என் செல்ல மகனே... அதைச் சொல்லத்தான் இந்த மடல். இந்த வருடம் நீ கண்டிப்பாக தலைநோன்பாவது பிடித்தாக வேண்டும். வயது வந்த பிள்ளைகளுக்குத்தான் நோன்பு கடமையென்றாலும் அதற்கு தயாராக முன்பே சொல்லிவைப்பது வழக்கம்தான். இதை ஒழுங்காகப் பிடித்தால் அடுத்தடுத்த வருடம் எல்லா நோன்புகளையும் உன்னால் பிடிக்க முடியும். இல்லாவிட்டால் அது ஓடி விடும்.

எனக்கு எடுத்துச் சொல்ல உன் பாட்டானாருக்கு வழியில்லை. அவர்கள் ஐந்தாறு வருடங்களுக்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவார்கள். ஊருக்கு வந்தாலும் தொழுவதும் இல்லை. ஜூம்-ஆக்கு மட்டும் வருவார்கள். ஆனால் அங்கே வந்து தலையை தொங்கப் போட்டு குத்பா பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருப்பார்கள். அப்போதே தூக்கத்தில் தலை ஆடி ஆடி விழும். மலேயாவில் இப்படித்தான் தொழுவார்கள் போலும் என்ற நினைப்புடனேயே நான் அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டு என் தொழுகையை முடிப்பதுண்டு.

இந்த வாப்பாக்கு தொலுவவே தெரியலே போலக்கிது என்று குறைபடாதே. நான் எவ்வளவோ பரவாயில்லை. என் நண்பன் அஹ்மது மரைக்கான் , தொழும்போது தனக்கு முன்னால் - சுஜூதில் - குனிந்திருப்பவரின் கைலி வில்லங்கமான இடத்தில் கிழிந்திருப்பதைப் பார்த்து தன் கையால் அதை பொத்தினான். அந்த ஆள் ஊருக்குப் புதிது. இந்த ஊரில் இப்படித்தான் தொழுவார்கள் போலும் என்று தனக்கு முன்னால் குனிந்திருந்த , யாழ்ப்பாணம் தேங்காயை விடப் பெரிதான , இமாமின் 'தேங்கா'வை மெல்லப் பொத்த , துள்ளிக் குதித்து அவர் ஓடியது சுவாரஸ்யமான கதை. ஊர் வரும்போது விரிவாகச் சொல்கி... இல்லை, சில விஷயங்களை இப்போது நாம் பேசக் கூடாது. நீ என் தோள் உயரத்திற்கு வளர்ந்து தோழனான பிறகு சொல்கிறேன் - நீ கேட்டால்.

இந்தக் கடிதம் உபவாச நன்மை சொல்ல மட்டுமே.

என்னை நோன்பு பிடிக்க வைத்தது எனது தாயார், உன் பாட்டியா முத்தாச்சிதான். அவர்களும் திராவியா தொழுகைக்கு மட்டும்தான் ராவியத்தும்மா வீட்டுக்கு தோழிகளோடு போய் வருவார்கள் (இப்போதுதான் சங்கத்துப் பள்ளியில் திராவியா நடக்கிறது) . நீ தொழுவுக்கூட வாணாம்டா. சீராணி மட்டும் வாங்கிட்டு வந்துடு. பெரிய பெரிய ரஸ்தாலி பழம்டா.. என்பார்கள். திராவியா முடித்துவிட்டு உம்மா வரும்வரை பிள்ளைகள் நாங்கள் சுட்டாங்கி விளையாடிக் கொண்டிருப்போம். பேய்க்கதைகள் சொல்லிக் கொண்டிருப்போம். நோன்பு மாசத்தில் மட்டும் ஷைத்தான்களை அல்லா கட்டிவைத்து விடுவானாதலால் எங்களுக்கு பயமாக இருக்காது. ** வலிக்க வலிக்க இருட்டில் உம்மா-வாப்பா விளையாட்டு விளையாடுவோம்.* என் தோழிகளுக்கு சந்தோஷம் தாங்காது.

சீராணி வாங்கி முடித்ததும் காட்டுப் பள்ளிக்குப் போய் அங்கேயும் சீராணி. அதே வாழைப்பழம்தான்.  ஆனால் பூவன். எதுவானால் என்ன , சஹரில் , உறைத்த தயிரை சோற்றில் போட்டு , நிறைய சீணியும் போட்டு, அப்படியே பழங்களையும் பால்கோவாவையும் பிசைந்து தின்றால் வரும் ருசியே அலாதிதான். உருசைண்டா அதுதான் உருசை. சுள்ளாப்பு வேண்டுமானால் பொறித்த அல்லது பெரட்டிய கறி சேர்த்துக் கொள்ள வேண்டும். அம்மாதிரி சஹர் நேரம் இனி கனவு கண்டால் கூட வராது இங்கே.  ரசூலுல்லா புகழும், ரமலானனின் பெருமையும் பாடிக் கொண்டு தப்ஸ் அடித்தபடியே வரும் சஹர்பாவாக்களை இங்கே எப்படி காண்பது. நானே ஒரு பாவா அல்லவா.

என் நிலையை சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை உனக்கு. நீ ஒரு நல்ல வணக்கசாலியாக இருந்தால் உன் துஆக்களின்  வலிமையாலாவது துப்புகெட்ட எனக்கு நல்ல காலம் வராதா என்றுதான் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். படி நன்றாக. அவ்வளவுதான். மற்றபடி....இஸ்லாமியக் கடமைகள், அது சம்பந்தமான ஆயத்துகள் , நிறைவேற்றாவிட்டால் கிடைக்கும் நரகத்து தண்டனைகள் என்று உன்னை இப்போது ரொம்பவும் பயமுறுத்தப் போவதில்லை. போகப் போக நீயே பயந்து கொள்வாய். இப்போது வாப்பா சொல்வதைக் கேள்.

கடந்த இரண்டு வருடமாக நீ தலைநோன்பை அற்ப விஷயத்துக்காக விடுவது எனக்கு சரியாகப் படவில்லை. என் உம்மாவெல்லாம் எனது தலைநோன்பில் நான் எச்சில் முழுங்கியதற்காக ஏறி மிதித்தார்கள். மிதித்த மிதியில் வாந்தி வந்தது. அதுவும் கூடாதாம். முதல் தலைநோன்பில்தான் அப்படி தவறு செய்தேன். அடுத்த வருடம் என் ஸ்கூல் மேட் அப்துல்லா , ஒண்ணும் தெரியாதுடா...மறந்த மாதிரி திண்டுபுடனும் என்று , எச்சில் ஊற வைக்கும் எலந்தவடை கொடுத்து (காலையில் வரும்போதே அவன் சேதுராமாஐயர் கடையில் மாவுதோசை தின்றிருந்தான்) எவ்வளவோ முயற்சித்தும் நான் மசியவில்லை. பசியை அடக்கிக் கொண்டேன். தர்ஹா குண்டு போட்டதும் தலைநோன்பு திறக்க வகை வகையான பசியாற காத்திருந்தது. ஜாலூர் பராட்டாவும் லாப்பையும் தொட்டுக் கொள்ள இறைச்சி ஆனமும், வட்டலப்பமும்..... உயிர் கொடுப்பது தண்ணீர்தானென்று போட்டு மாட்டிய எல்லோரும் கடைசியில் சொன்னார்கள்.

நோன்பின் கட்டுப்பாடு என்பது நாம் சாப்பிடாமல் இருப்பது மட்டுமல்ல; மற்றவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து ஆசைப்படாமல் இருப்பதும்தான். அரபு நாடுகளில் ஏனோ இதை யோசிப்பதில்லை. சௌதியில்,  சகோதர மதத்தவர்களெல்லாம் நோன்பு நேரத்தில் வெளியில் சாப்பிடக் கூடாது; முத்தவாக்கள் சாட்டையால் அடிப்பார்கள். சில ஹோட்டல்கள் மட்டும் அந்த சகோதரர்களுக்கு பார்சல் சர்வீஸ் செய்யும் - வீட்டில் போய் சாப்பிட்டுக் கொள்ள. துபாய் அப்படி அல்ல. ரொம்பவும் கெட்டுப் போய் விட்டது. போகிற போக்கைப் பார்த்தால் நோன்பு நேரத்தில் நம்மைப் போன்ற அசல் முஸ்லீம்கள் வெளியில் சாப்பிடாவிட்டால் சாட்டையால் அடிப்பார்கள் போலிருக்கிறது.

பசியை அடக்குவது பற்றிச் சொன்னேன். அதற்கு மறுமையில் அல்லாஹ் கொடுக்கும் நன்மைகளை இருக்கட்டும். இம்மையிலேயே ஊரும் வீடும் கொடுக்கும் வெகுமதிகளை நினைத்துப் பார். எத்தனை விதவிதமான திண்பண்டங்கள், சாப்பாடு வகைகள்... நோன்பு வந்ததுமே முட்டை ஊற்றிய மஞ்சஆப்பமும் அதற்குத் தொட்டுக் கொள்ள கீரை பொருமாவும் வந்து விடுகிறது. ஊரெங்கும் இறால் போட்ட வாடா வாசம். குளிர்ச்சி தரும் கடப்பாசியை வண்ணவண்ணமாக காய்ச்சி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிவாசல்கள் எல்லாம் ஆட்டுத் தலைக்கறி போட்ட கஞ்சியில் மூழ்கிறது. மண்சட்டியில் ஊற்றிய சாதாரண நோன்புக் கஞ்சியானாலும் அதில் சமோசாவோ  சுண்டலோ போட்டால்தான் நோன்பு திறந்த வாய்க்கு ஒனவா இக்கிது. அதுதான் நோன்பாளிகளினுடைய சந்தன வாயை மேலும் மணக்க வக்கிது.

நான் இங்கு தங்கியிருக்கும் இடத்திலுள்ள பள்ளி அப்படியல்ல. மிகவும் சிஸ்டமடிக்காக செய்வார்கள். ஆளுக்கு ஒரு பேரீச்சம் பழம்.

'கீமான்' என்ற காக்கா கழகம் தடபுடலாக செய்கிறதுதான். ஆனால் ஒவ்வொரு பருக்கையிலும் இறைவனின் பெயருக்குப் பதிலாக தன் பெயரை அது போட்டுக் கொண்டு அலம்பல் செய்வதால் எனக்குப் பிடிப்பதில்லை.

இந்த தொந்தரவு வேண்டாமென்று , எந்த ஷேகா வீட்டில், பள்ளிகளில் பக்கா பிரியாணியும் ஹரீஷூம்ம் தக்குவா பண்டங்களும் கிடைக்குமோ அங்கே வண்டி எடுத்துக் கொண்டு போய் அமுக்கும் பகாசுரர்களுடன் இணைந்து கொள்வதுண்டு. அல்லது அரசாங்கக் கேரவான்களில் நுழைந்து மாட்டு மாட்டென்று - அநியாய விரயம் செய்வது எனக்குப் பிடிக்காததால் - மாட்டுவதுண்டு. அல்லது வேலையாகப் போகும் இடத்தில் , மூணு மடங்கு விற்பனை கூடிய சூப்பர் மார்கெட்களில் முடிப்பதுண்டு. அது பாயின் கடைதானா என்றெல்லாம் பார்ப்பதில்லை. பசிக்கும் நேரத்தில் கிடைக்கும் இரையைக் கொடுப்பது இறையென்று அறி என் மகனே...

எங்கள் கம்பெனி பட்டான் டிரைவர் மக்பூல் என்னிடம் மிகவும் குறைபட்டுக் கொண்டான் ஒருநாள் : இஃப்தார் சமயத்திலே போயும் போயும் ஒரு கா·பிர் - அந்த சிவ பர்பாத்-  எனக்கு ஆப்பிள் கொடுக்குறான்...

சிவப்ரஷாத்தைத்தான் அப்படி சொல்கிறான். பெயர்களை மாற்றிச் சொல்வது மக்குபூலின் வழக்கம் - என்னமோ இவன் பெயர் மஹா அழகு போல.

பட்டானின் இஸ்லாமிய பக்தியை நான் மெச்சுவேனாம். கம்பெனியில் இருக்கிற ஒரே ஒரு அடுத்த மதத்தவனையும் விரட்டி விட்டால் இன்னொரு மொம்மது முடிகான் வந்து சேர்வான். அந்தக் கொடுமை வேண்டாம். பாவம்...சிவப்ரஷாத் அப்பாவி. இன்று பிறை எத்தனை என்று சாதாரணமாக மேலாளர் ஒருநாள்  கேட்டதற்கு அவன் மிகவும் குழம்பிப்போய் அலுவலகத்துக்கு வெளியில் போய் நின்று ரொம்ப நேரம் வானத்தைப் பார்த்துக் கொண்டு ம்....சாந் ஏக்கி ஹைநா.. என்று குழம்பிப் போய் நின்றிருந்தான்.

பிறை பார்ப்பதில் நமக்கிருக்கும் பெரும் பிரச்சனைகளைச் சொன்னால் ஒருவேளை அவன் புரிந்து கொள்ளக் கூடும்தான். ஆனால் அப்போது சந்திரன் என்ற கிரகமே இருக்காது.

கொடுத்தால் என்னவாம்  என்று கேட்டதற்கு அந்தப் பட்டான் நான் இஸ்லாத்தின் விரோதி என்று கம்பெனி ஆட்களிடம் சொல்லிக்கொண்டு அலைகிறான். என் அரபியிடமும் சொன்னான். அவர் எனக்கு சம்பளம் கூடப் போட்டுக் கொடுத்தார்.

’தஅபான்’ என்று பட்டானை திட்டக்கூட செய்தாரே...

இந்த மாதத்தில் நன்மை செய்தால்தான் உண்டு. 1 X 70

அனீஸ், என் செல்ல மகனே , அந்தப் பட்டானைப் போல் நீ ஆகிவிடக் கூடாது. லகும் தீனுகும் வலிய தீன். இதன் அர்த்தத்தை , ஓதிக்கொடுக்க வந்து உன்னைக் காணாமல் ஒவ்வொரு நாளும் ஓடும் உம்மாத்தாவிடம் கேள். அதேசமயம் , இனிய இ·ப்தார்  நிகழ்ச்சி என்று பெரிய பெரிய போஸ்டர்கள் அச்சடித்து கைய்னாநதி, செய்லதாவெல்லாம் முசல்மான்களை அழைத்து திராவிடக் கஞ்சை திகட்டாமலூட்டி மகிழ்வதையும் முசல்களும் மான்களும் அவர்களை பதிலுக்கு அழைத்து தொப்பிக்கு மேல் தொப்பி போட்டு தோழமை கொள்வதையும் ஒரே கண்ணோடு ஜாக்கிரதையாகப் பார். அதற்காக நோன்பு திறக்க கோயிலுக்கோ சர்ச்சுக்கோ போவேனென்று அடம் பிடிக்காதே. எட்டென்றும் இருபதென்றும் ஏகத்திற்கு அடித்துக் கொண்டாலும் நலமிகு பள்ளி நம் பள்ளிதான் - ஆலிம்ஷாக்கள் சொல்கிறார்கள்.

எட்டு-இருபது (ரக்அத்) பேதமைகள் எனக்கு கிடையாது. ஒற்றுமை வேண்டி , பக்கத்தில் உள்ள எந்தப் பள்ளிக்கும் போவேன்- ஷியா பள்ளி தவிர.  ஆனால் ரமலானுக்குள் இறைவேதத்தை முழுக்க முடித்து விடவேண்டுமென்று புல்லட் ட்ரெயினை வாயில் ஓடவிட்டு ஓதும் பள்ளிகளில் மட்டும் தொழ முடிவதில்லை. நீண்ட நேரம் நின்றால் ஹைட்ரஸில் தொந்தரவு. இரண்டு பக்கத்திற்கு மேல் பண்ண வழியும் இல்லை. எனவே அப்படி சூழல் வந்தால் அறையிலேயே தொழுது விடுவது வழக்கம். எட்டுக்குக் குறையாத என் தொழுகை எட்டட்டுமாக, ஆமீன்.

மறுபடியும் எங்கோ போகிறேன். திராவியா தொழுகையெல்லாம் இருக்கட்டும். நோன்பு பிடிக்க கற்றுக்கொள். போன முறை உனது தலைநோன்பு நடுப்பகல் வரை தாக்குப் பிடித்ததாம்.  ஸ்கூலிலிருந்து திரும்பும்போதே பூனை போல மோப்பம் பிடித்துக் கொண்டு உம்மாவ்... எனக்கு டென் உல்லான்ஸ் என்று ஆர்டர் போட்டிருக்கிறாய் ஜோராக.

படுவா, நோன்புடா நீ.. சாயந்தரம் தொறக்கறதுக்குத்தானே செஞ்சிக்கிட்டிக்கிறேன்

எனக்கு இப்பவே தொறக்கனும்டி - பசியில் கத்தியிருக்கிறாய்.

வேறு வழியில்லாமல் சாவி கொடுத்த பாவத்தை அன்று உம்மாவும் உல்லானும் பங்கு போட்டுக் கொண்டார்கள். உன் லாத்தா எவ்வளவு பொறுமையாக அவளது தலைநோன்பின்போது இருந்தவள் - யாருக்கும் தெரியாமல் பிசின் போட்ட ரூஹாப்ஜா குடித்துக்கொண்டு. வாப்பாவெ அப்படியே உரிச்சி வச்சிக்கிறா என்று தெரியாமலா அவளைச் சொல்கிறார்கள்.

இந்த சாமர்த்தியங்களெல்லாம் வேண்டாம். ஏற்கனவே மேலத்தெருக்காரர்கள் நம் பக்கத்தில் தரிபியத் கிடையாது என்று ஏளனம் செய்கிறார்கள். இப்படிப்பட்ட இபாதத் திலகங்கள் நோன்பு முடிந்ததும் இம்மியும் மாறாமல் பழைய அதபு கெட்ட வேலைகளையெல்லாம் தைரியமாகச் செய்தால் நமக்கென்ன. இறைவேதம் அருளப்பட்ட  இனிய மாதமாவது இறைவனுக்கு பயந்து , மனிதனை நினைவு கூறச் சொல்லும் அற்புதக் கடமையான ஜகாத்ஐ  பசித்த ஏழைகளின் கண்ணில் காட்டுகிறார்களா இல்லையா. காட்டுவது சரியான கணக்கா என்று கேட்காதே.

முதலில் நீ தலைநோன்பு ஒழுங்காகப் பிடி. அது விரைவில் முழுமையடையும். இத்தனை கலவரங்களுக்குப் பிறகும் நம்மை உயிரோடு வைத்திருக்கிற அல்லாஹ்வுக்கு சுக்ர் செய்ய வேண்டாமா. வருடம் முழுக்க விதவிதமான பெயர்களில் நோன்பு பிடிக்கவோ அல்லது முக்கியமான நோன்பு மட்டும் ரமலானில் பிடித்தால் போதும் என்று சில ஆன்மீக அசிங்கங்கள் சொல்வது போலவோ செய்யத் தேவையில்லை. தலைநோன்பை 27-ம் கிழமை பிடித்தாலும் சிறப்புதான் என்றார் கோட்டபள்ளி ஆலிம்ஷா - சென்ற வருட விசேஷத்தின்போது. நீண்ட ’பயான்’ (பிரசங்கம்) செய்துமுடித்து , மைக்-ஐ ஆஃப் செய்யாமலேயே, ‘அப்பாடா..இன்னும் 3 நாள்தான் இருக்கு’ என்ற அவரது நிம்மதிப் பெருமூச்சு குறிப்பிட வேண்டியது.

சரி, நம் கொழுப்பைக் குறைக்கும் ரமலானால் உடல் இளைத்துவிடும் என்று கவலை உனக்கு வேண்டாம். பஞ்சம் , போர் என்று வதைபடும் இஸ்லாமிய நாடுகளைத்தவிர புனித ரமலானில் பசியால் ஒரு இஸ்லாமியன் கூட செத்ததில்லை. தைரியமாக ஒரு பிடி பிடி. உலக முஸ்லீம்களின் எடையும் தேஜஸும் கூடும் உன்னத மாதம் இது.

பதில் எழுதும்போது நம்மூர் யானை பற்றி எழுத கண்டிப்பாக மறக்காதே. சென்ற வருடம் , கண் கோளாறுக்காக ஊர்வந்து டாக்டர் யானகுட்டி ராவுத்தரைப் பார்த்தபோது சோத்தூர் யானை ஏன் இளைச்ச மாதிரி தெரியுது என்று கேட்டேன். மரைக்கா.. ஒம்ம கண்ணுலெ கோளாறே இல்லங்கனி என்றார் அவர்.

பிளிறலுடன்,

ஆபி வாப்பா | abedheen@gmail.com

***

*

போனஸ் 1 :

பிறையே பேசு ! - புலவர் ஆபிதீன்

பகலெல்லாம் பட்டினியாய்ப் படுத்துமிகத் தூங்கிவிட்டுப்
பண்பான நோன்பனைத்தும் பக்தியுடன் நோற்றதுவாய்
இகல்தாங்கிப் பேசுகின்ற இழிமாந்தர் தம்கூற்றை
இருணீக்கும் இன்னொளியே இளமதியே பார்த்தாயா?

சகியாமல் பசிக்கொடுமை சாப்பாடு தின்றுதின்று
சலியாது உடல்வளர்ப்பர் சற்றேனும் வெட்கமிலர்
முகிலாடை போர்த்தொளிந்து மெல்லவெளி வந்ததிரு
முழுமதியே தண்சுடரே மென்கதிரே பார்த்தாயா?

தொழுவதிலை ஏழைவரி தருவதிலை என்றாலும்
துணிமணியில் வெளிப்பகட்டில் தொங்குதவர் சன்மார்க்கம்
புழுதியுடை வாள்போலப் பூவைப்புரு வம்போலப்
புதிர்கொண்டு வளைவடிவே புதுப்பிறையே பார்த்தாயா?

பெருநாளை மட்டுமவர் பெருமைக்குக் கொண்டாடப்
புறப்பட்டார் சொகுசாகப் பள்ளிக்குக் காலிழுக்க
வருமின்பத் தென்றலுக்கு வழிகாட்டும் வட்டுருவே
வளர்ந்தேறு வென்ணிலவே வான்விளக்கே பார்த்தாயா?

உனதந்த லோகத்தில் உண்டோசொல் இத்தகைய
உரிமைகள் கொண்டாடும் உத்தமர்கள் பாதகர்கள்
எனதிந்த வையத்தில் எத்தனையோ எண்ணரிது
எழிலூட்டும் வெண்ணமுதே எம்பிறையே பார்த்தாயா?


('அழகின் முன் அறிவு' தொகுப்பிலிருந்து)

*
போனஸ் 2 :

2. யானைகளுடன் பேசுபவன் - அருணகிரி / சொல்வனம்
http://solvanam.com/?p=15916
*

வேர்ட்பிரஸ் பதிவு / கமெண்ட்களைப் பார்க்க :
https://abedheen.wordpress.com/2011/07/30/letter-ramalan/