Tuesday, December 29, 2015

மாப்பிள்ளை வந்த புள்ள .. - ஷஹிதாவின் செம பதிவு!

'இலக்கியம்னா என்னான்னு தெரிஞ்சுகிட்ட பாவத்துக்கே நீங்கல்லாம் நிறைய எழுதணும் ஷஹி. ரொம்ப ஆதங்கமா இருக்கு, துப்பட்டிக்குள்ள இருக்கற உலகத்த யாரும் எட்டிப்பாத்துட முடியாது, சோ நீங்கதான் இதெல்லாம் பேசியே ஆகணும்.' என்று சகோதரி லட்சுமி பாராட்டும் எழுத்து ஷஹிதாவுடையது. தொடர்ந்து அவர் 'நல்லது செய்ய'  (சாதாரண அர்த்தம்தான்!) வாழ்த்துகள். -  ஆபிதீன்
*
மாப்பிள்ளை வந்த புள்ள .. - ஷஹிதா

என் வீட்டில் எனக்கு இருக்க இடமுண்டு , எழுத இடமில்லை என்று , எழுத்தார்வமும் திறனும் மிக்க , அனுமதி மறுக்கப்பட்ட பெண் ஒருவர் பேசியதாக எங்கோ படித்த நினைவு . அப்படியும் முழுமுற்றாக நானெல்லாம் சொல்லிவிட இயலாது . ஒரேயடியாகப் புகார் சொன்னாலும் அல்லாஹ் அடிப்பானா இல்லையா ? வேலைகள் அத்தனையும் ஓய்ந்து விட்டன என்று சமாதானப்படுத்திக் கொள்ள இயல்கிற , வீட்டில் எல்லோரும் இணக்கமான அமைதியில் இருக்க வாய்க்கிற , நேரங்களில் எல்லாம் .. எழுத வேண்டியது தானே ! அப்படியெல்லாம் அமையவில்லை என்றாலும் கூட , ஒரு முத்தத்துக்காக ஏங்கி அழும் சிநேகிதிகள் வாய்க்கப்பெற்ற துக்கம் தீர நிச்சயமாக எழுத்தத்தானே வேண்டும் .

எங்கள் வீட்டுக்கு எதிரில் இருக்கும் அடுக்ககத்தில் சில மாதங்கள் முன்பு வரையில் வசித்து வந்தவள் ஜமீமா. மகளுக்குத் திருமணம் நிச்சயமானதில் சற்றே பெரிய வீட்டுக்குக் குடி பெயர்ந்திருக்கிறாள் . ஒரே பெண் பிள்ளையும் , அடுத்தடுத்துப் பிறந்த நான்கு ஆண் மக்களுமாக , சிங்கப்பூரில் வேலையில் இருக்கும் கணவர் ஊர் வந்து போகும் ஒன்றிரண்டு மாதங்களுக்கு விசேஷப்பட்டுப் போகும் அவள் வீடு . எங்கள் அடுப்படி சன்னலுக்கு நேரெதிரில் அவள் வாசல் , விடியலில் நான் தேநீர் தயாரிக்க வரும் பொழுதிலேயே , அடர் ரோஜா நிற சமிக்கிப் பொட்டுக்கள் பாவிய , வெறிக்கும் மஞ்சள் நிறப் புடவை ,தகதகக்கும் தங்கப் பொட்டுக்களுடன் கூடிய பீட்ரூட் வண்ணச்சேலை என்று, முகத்திலும் உதட்டிலும் பூச்சுடன் , பார்க்கும் விழிகளை , சட்டென திடுக்கத்தில் விதிர்க்கச்செய்வாள் .

ஃபஜருலியே இப்புடியா பயமுறுத்தாட்டுவிய என்று யார் கேலி பேசினாலும் கிளுகிளு புன்னகை தான் ..

நான் மாப்புள வந்த புள்ளைலா ... இனி ரெண்டு வருசத்துக்கு இந்த ரெண்டு மாச வாழ்க்க தானே !

ரெண்டு வருஷம் அல்ல .. இந்த சபர் ஆறு வருடங்களாக நீண்டது , ஐந்தாவது குழந்தை பிறந்து , அவனுக்கும் ஐந்து பிறந்த நாட்கள் கடந்த பின்னும், ஜமீம் , மறுபடி , மாப்பிள்ள வந்த பிள்ளை ஆகவேயில்லை .

சேர்ந்து தேநீர் அருந்தவென ஒரு இளமாலையில் அழைத்து , அவுக இன்னொருத்திய கட்டிக்கிட்ட மாதிரி கனவு கண்டேன் சய்தா என்றாள் முகம் வீங்கி விம்ம .

பள்ளிப்படிப்பு கூட அற்றவள் , மக்களைப் பள்ளிக்கு அனுப்பி , வீட்டுக்குப் பொருட்கள் வாங்கி , நேரங்கெட்ட பொழுதுகளில் குழந்தைகளுக்கு ஏற்ப்பட்ட சுகக்கேடுகளுக்கு அலறிக்கட்டி அக்கம்பக்கத்தினர் உதவியோடு மருத்துவம் பார்த்து , மகளுக்கு மாப்பிள்ளை பேச , ஊர் ஊராகச் சென்றலைந்து , பொருத்தமானவனைத் தேர்ந்து , கல்யாணம் சொல்லி என்று அத்தனையும் தானே செய்தாள் .

பத்திரிக்கை கொடுக்க வந்த போதும் மிகு ஒப்பனையும் அவளுக்கே உரிய பளீர் ஆடைகளும் துப்பட்டியை மீறி தெரியத்தான் செய்தது .

இப்பவும் என்ன பட்டிக்காட்டு துப்பட்டி , மவ கல்யாணத்துக்கு ஆசாத் அத்தா வரயில நல்ல மாடர்னா புர்கா கொண்டாரச்சொல்லி போடுங்க - என்றதில் உடைந்தாள் .. அந்த ஆம்பள என்னைய மோசம் பண்ணிட்டாரு சய்தா , பொண்டாட்டி புள்ளையள மறந்து எங்கியோ மாட்டிக்கிட்டாரு , நிக்காவுக்கு வரலேண்டா நான் மவுத்தாப் போவேண்டு போன் பேசிருக்கேன் . பொண்ணுக்கு வாப்பா கல்யாணத்துக்கு வந்துருவாஹளாண்டு கேக்குற சம்மந்தபொரத்துக்கு யாரு ஜவாபு சொல்றது !

பிறந்ததில் இருந்து பார்த்தறியாத வாப்பாவுடன் ஒரே அப்பாக ஒட்டிக்கொண்டு , திருமணத்துக்கு வருபவர்களை வரவேற்றுக்கொண்டிருந்தான் ஆசாத் . நாங்கள் வீடுகட்டி குடி வந்த சமயத்தில் வாசலில் மீதமிருந்த மணலில் என் மகளோடு விளையாடிய குழந்தை , ரிஃபி . திருமணப்பட்டில் அத்தனை பெரியவளாகத் தெரிந்தவளை கண்களால் அள்ளிக்கொண்டேன் . நிக்காஹ் ஓதி , கருகமணி அணிவிக்கும் பொழுதில் எனக்குமே கொஞ்சம் சிலிர்த்துக்கொண்ட போது , மேலில் முழுதாகச் சாய்ந்து என் கழுத்தில் கண்ணீர் பெருக்கினாள் ஜமீம் .

இந்நேரத்துக்கு யாராவது அளுவாகளா ? எம்புள்ளைக்கி ஆயுச நீட்டிச்சிப் போட்டு , பெரு வாழ்க்கைய குடுடா அல்லாஹ்ண்டு துவாச் செய்யாமே ?

அவளுக்கு என்ன .. உள்ளூர்வாசி மாப்புள்ள தங்கமா அமஞ்சு போனான் . துவாச்செய்ய இம்புட்டு பேரு வந்திருக்கீக ..

பொறகென்ன ?

இவுக தேன் .. ஆசாதுக்கு அத்தா .. வந்தெறங்கி மூணு நாளாச்சு ..இன்னும் சூடா ஒரு முத்தங்கூட குடுக்கல ..

*
Thanks to : shahi da (fb)

Wednesday, December 16, 2015

'பதேமாரி' (தோணி) விமர்சனம் - போகன் சங்கர்

காட்சிப்பிழை இதழில் நண்பர் போகன் சங்கர் அருமையாக எழுதியிருக்கும் 'பரதேசிகள்' கட்டுரையிலிருந்து எடுத்துப் பகிர்கிறேன். மம்முட்டியின் 'பதேமாரி'யை நானும் பார்த்தேன். குஞ்சுமுஹம்மது இயக்கிய 'கர்ஷோம்' அளவுக்கு ஈர்க்கவில்லை. ஆனால் , அரபுநாட்டில் மனைவி மக்களுக்காக நெடுங்காலம் உழைத்த நாயகன், இனி ஊரோடு இருந்து விடும் திட்டத்தை மனைவியிடம் சொல்லும்போது, 'உங்களால் ஒண்ணுக்கும் பிரயோசனம் இல்லையென்றாலும் துபாய்க்காரனோட பெண்டாட்டி என்ற சின்ன பெருமையாவது இருந்தது. இப்ப அதுவும் போச்சா?' என்று அவள் சொல்வது (நான் புரிந்துகொண்ட மலையாளத்தில்) அமைதியாக அழ வைத்தது. அப்படியே அஸ்மாவின் குரல்!. - ஆபிதீன்

இனி போகன் சங்கரின் வரிகள்....

அடிப்படையில் ‘குடும்பத்துக்காக ஓடாய்த் தேய்கிற மனிதனை அவன் குடும்பம் மறப்பது அல்லது வஞ்சிப்பது ‘வகைக் கதைதான் எனினும் தேர்ந்த திரைக்கதை மற்றும் முதிர்ச்சியான நடிப்பின் மூலம் நடிகரும் இயக்குனரும் வேறு தளப் படமாக இதை ஆக்கிவிடுகின்றனர்.நீண்ட இடைவெளிக்குப் பிறகு மம்மூட்டிக்கு நிறைவான படம் இது.

படம் ஒரு மரணத்துடன் ஆரம்பிக்கிறது.துபாயில் ஒரு காலை அலாரம் ஒரு மனிதனை எழுப்ப முயன்று தோற்கிறது.பள்ளிக்கல் நாராயணன் என்கிற நாராயணப் பணிக்கர் .துபாய்க்கு கள்ளத் தோணியில் ஏறி வந்த முதல் மலையாளிகளுள் ஒருவர் .செய்தி கேரளத்தில் உள்ள அவரது அப்போதுதான் தூங்கி எழும் வீட்டுக்கு தெரிவிக்கப்படுகிறது .அங்கே கட்டப் பட்டுக்கொண்டிருந்த ஒரு வீட்டின் பணி உடனே நிறுத்தப்படுகிறது.(இவனுங்க சாகிறதுக்கு ஒரு சமயம் பார்க்கிறானுங்க பாரு )நிறைய அலைக்கழிப்புகளுக்குப் பிறகு அவரது உடல் நாட்டுக்கு கொண்டுவரப்படுகிறது.ஆனால் அவரது உடலை புதிய வீட்டில் ‘’வைக்க’’ வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறான் அவரது மூத்த மகன்.துபாயில் அவருடன் பணிபுரிந்த பழைய கூட்டுக்காரன் ‘இந்த வீட்டுக்காகத்தான் அவன் அங்கே குருதி சோர உழைத்தான்’என்று கலங்குகிறார்.(இப்போது கேரளத்தில் காலியாகக் கிடக்கும் பனிரெண்டு லட்ச வீடுகளைப் பற்றிய செய்தியின் பின்புலம் தெளிவாகுகிறதுதானே?)
மத்திய கிழக்கு வாழ்க்கையின் துயரங்கள் படத்தில் மிகையில்லாமல் காட்ட பட்டுள்ளன கல்யாணம் ,கருமாதி எல்லாவற்றையும் போனிலேயே கேட்டுத் தெரிந்துகொள்ளவேண்டிய அவர்களது அவல நிலைமை பற்றி..’இம்முறைதான் கடைசி ‘’என்று ஒவ்வொருதடவையும் நாடு திரும்பும்போதும் அவர்கள் நினைத்துக் கொள்வது பற்றி சொந்தங்கள் வலைப்பின்னல் போல உருவாக்கி வைத்திருக்கும் நிர்ப்பந்தங்களால் மீண்டும் மீண்டும் அந்த பாலைவனத்துக்கே திரும்ப நேர்வது பற்றியெல்லாம் நாடகத் தன்மையில்லாமல் காட்டப் பட்டுள்ளன

இவ்வளவு பிரச்சினைகளுக்கு நடுவிலும் நாராயணன் பணிக்கர் கசப்பில்லாத மனிதராகவே வருகிறார்.டிவி பேட்டியில் ‘தான் தோற்காத மனிதன் ‘’என்றே சொல்கிறார்.அவர் எதை இழக்கவில்லை என்பதை கனல் படத்தில் வருகிற பிரதாப் போத்தன் மற்றும் ஷாயாஜி ஷிண்டே பாத்திரங்களோடு பொருத்திப் பார்க்கையில் புரிகிறது.அவர்கள் ஆன்மாவை இழந்து கட்டிடங்களையும் கார்களையும் பெற்றார்கள்.அவற்றையும் கிறிஸ்டோபர் மார்லோவின் டாக்டர் பாஸ்டஸ் போல அவர்கள் இழந்தபோது அவர்கள் நிலைமை மிகப் பரிதாபகரமாக இருந்தது.

பதேமாரியின் நாயகன் அதை இழக்கவில்லை.அவன் கடைசிவரை அதற்காகவே உழைத்தாலும் அவன் பணத்துக்கு தனது ஆன்மாவை ரத்தைக் கையெழுத்திட்டுக் கொடுக்க சம்மதிக்கவேயில்லை. அவர் கடைசிவரை தனது நாட்டோடும் மக்களோடும் சிநேகம் உள்ளவராகவே இருந்தார்.அவர்கள் அந்த ஸ்நேகத்தைத் திருப்பி அளிக்காவிட்டாலும் அவர் இழக்காதது என்ன என்பதை படத்தில் வருகிற ஒரு காட்சி உணர்த்துகிறது.மூன்றாவது முறையாக துபாய் போவதற்கு முன்பு மும்பை விடுதியில் அவர் ஒரு சக மலையாளியைப் பார்க்கிறார் .இம்முறையும் அவர் பெற்றது எல்லாவற்றையும் இழந்துவிட்டுதான் திரும்புகிறார் .அந்த மலையாளியை அரபு நாடுகளுக்கு அழைத்துச் செல்வதாக யாரோ ஏமாற்றியிருக்க அவன் மும்பையில் தெருப்பணி செய்து திரிகிறான்.தான் அவ்வாறு திரிவதை வீட்டுக்குத் தெரிவிக்க விரும்பாமல் நாடகமாடிக் கொண்டிருக்கிறான்.சிறிய சிறிய பரிசுப் பொருட்களை அவர்களுக்கு அனுப்பிக் கொண்டிருக்கிறான்.எல்லாமே மும்பையிலேயே மலிவாகக் கிடைப்பவை.மம்மூட்டி அவனுக்கு தன கையிலிருந்த மிச்ச பணத்தையும் அளிக்கிறார்
நெகிழ்ந்து போன அவன் அவரது பெயர் என்ன என்று கேட்கிறான் .
‘’ஏன்?’’என்று கேட்கிறார் மம்மூட்டி
அவன் ‘’மதறாசாவில இறைவனுக்கு ஆயிரம் பெயர்கள் உண்டுன்னு படிச்சதுண்டு .அதான்’’என்கிறான்
மம்மூட்டி புன்னகையுடன் சொல்கிறார்
‘’நாராயணன்’.என் பெயர் பள்ளிக்கல் நாராயணன் ‘’
*

நன்றி : போகன் சங்கர்

Sunday, November 22, 2015

"Yaar Illahi" - செம கவ்வாலி : வாசு பாலாஜியின் தேர்வு!

"Yaar Illahi" Qawwali from Katyar Kaljat Ghusali in the magnificent voice of Arijit Singh, Divya Kumar & Arshad Muhammad. Lyrics : Sameer Samant. Music by Shankar Ehsaan Loy. Thanks to : Zee Studios & Vasu Balaji

Saturday, October 24, 2015

பென்னேஸ்வரனின் அற்புதமான பதிவு

வடக்குவாசல் இதழின் 'சனிமூலை'யில் ராகவன் தம்பி என்ற புனைபெயரில் வெளியான நண்பரின் இந்தப் பதிவை பாராட்ட வார்த்தையில்லை. அவசியம் வாசியுங்கள்.
*

நண்பர் ஒருவரிடம் இறைநம்பிக்கை குறித்துப் பேசிக்கொண்டிருந்த போது தான் கடவுள் நம்பிக்கையற்றுப் போனது குறித்து சில சமயம் வருத்தப் படுவதாகவும் பிரச்னைகள் தன்னை அழுத்தும்போது ஏதாவது கடவுளை நம்பி இருந்தால் தேவலையாக இருந்திருக்குமே என்கிற எண்ணம் தனக்குள் எப்போதாவது எட்டிப் பார்ப்பதையும் தான் உணர்வதாகச் சொல்வார். தன்னை ஒரிடத்தில் தனியாக நிறுத்தி வைத்து விட்டு சற்று எட்டி நின்று தன்னையே பார்த்து எதையும் அவதானிக்கும் அந்தப் போக்கு எனக்கு எப்போதும் பிடிக்கும். அது ஒரு சித்தரின் மனப்பாங்கு. இது எனக்கெல்லாம் இந்த ஜென்மத்தில் வாய்க்காது.
பொதுவாக சொல்வார்கள். ஒரு மனிதன் நாத்திகனாக மாறவும் சடங்குகளில் நம்பிக்கையற்றுப் போகவும் இங்கர்சால், பகத்சிங், தந்தை பெரியார், போன்றோரின் நூல்களைப் படிக்கத் தேவை இல்லை. ஹரித்வார், கயா, காசி போன்ற புனிதத் தலங்களுக்கு ஒருமுறைசென்று வந்தால் போதும். அதே போல மற்ற மதங்களிலும் அந்தந்த மதங்கள் உயர்வாகப் போற்றும் முக்கியமான ஸ்தலங்களுக்கு ஒருமுறை போய்வந்தால் போதும். தானாகவே இறைநம்பிக்கை சற்று தடுமாற்றம் காணும். சடங்குகள் மீதான நம்பிக்கை வலுவாக ஆட்டம் காணும்.
இப்படிக் கடவுள் நம்பிக்கை மற்றும் சடங்குகள் குறித்து சில நாட்களுக்கு முன்பு கூட ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த போது சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சம்பவம் மனதில் நிழலாடியது.
கிருஷ்ணகிரியில் அப்பா இறந்து போனார். பதின்மூன்று நாட்கள் காரியங்கள் நடந்தன. இறப்பு தொடர்பான மாத்வ பிராமணர்களின் சடங்குகள் மிகவும் கடுமையானவை. குளிரும் மழைச் சாரலும் நடுக்கித் துன்புறுத்தும் டிசம்பர் மாதத்தில் வெட்ட வெளியில் வயற்காட்டில் பத்து நாட்கள், ஒரு நாளைக்குக் குறைந்தது பத்துமுறை கிணற்று நீரில் முங்கிக் குளித்து ஈரத் துணி உடுத்திக் கொண்டு கடும் பட்டினியுடன் மாலை நான்கு மணி வரை தொடர்ந்த சடங்குகள். இப்படிப் பதின்மூன்று நாட்கள் காரியங்கள் முடித்து இரண்டாம் நாள் பால் ஊற்றும் போது ஒரு கலசத்தில் சேகரித்த அப்பாவின் அஸ்தியில் கொஞ்சம் தனியாக வைத்து இருந்ததை ஆச்சார் (புரோகிதர்) என்னிடம் கொடுத்தார். அஸ்திக்கு வேண்டிய மந்திரங்கள் சடங்குகளை செய்து முடித்து விட்டதாகவும் தில்லிக்கு அந்தக் கலசத்தை எடுத்துச்சென்று யமுனையிலும் கங்கையிலும் கரைக்க வேண்டும் என்றும் சொன்னார். அப்படிக் கரைக்கும் போதும் புரோகிதர் யாரும் தேவையில்லை என்றும் வெறுமனே எடுத்துச்சென்று ஆற்றில் கரைத்து விட்டு குளித்து விட்டு முடிந்தால் பிராமணர்கள் யாருக்காவது அன்னதானம் செய்து விட்டு வருமாறும் கூறியிருந்தார்கள்.
ஊரில் காரியங்கள் முடித்து தில்லி திரும்பி வந்ததும் முதலில் யமுனையில் அஸ்தியைக் கரைப்பதற்குக் கிளம்பினேன். இங்கே சாக்கடை கலக்காத யமுனையைக் கண்டுபிடிப்பது என்பது மிகமிகக் கஷ்டமான காரியம். ஸ்கூட்டர் எடுத்துக் கொண்டு பல இடங்களில் அலைந்து திரிந்தேன். இருபது ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுப்புறச் சூழல் அத்தனை கெட்டுப் போகத் துவங்காத தில்லியில் இந்த கதி என்றால் யமுனை இப்போது எப்படி இருக்கும் என்று சற்று கற்பனை செய்து பார்க்கலாம். எங்கெங்கோ தேடித் தடவி அலைந்து திரிந்து ஒரிடத்தை நானும் யதார்த்தா நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்த குணசேகரனும் தேடிக் கண்டுபிடித்தோம். அது தில்லி நகரிலிருந்து பலகிலோமீட்டர்கள் தள்ளியிருந்த ஒரு சிறு கிராமம். அங்கு ஓடும் யமுனையும் ஊருக்குள் ஓடும் யமுனையை விடப் பெரிய அளவில் ஒன்றும் சுத்தமாக இல்லை. எல்லா ஓடைப் பிரிவுகளிலும் சாக்கடை கலக்காமல் ஓரிரண்டு பிரிவுகளில் சற்றுத் தெளிவான நீர் பாய்ந்து கொண்டிருந்தது. ஆனால் ஒரேயடியாக சுத்தமான நீர் என்றும் சொல்ல முடியாது. அஸ்தியைக் கரைக்கலாம் என்னும் அளவில் தெளிவு. ஆனால் குளிக்கும் அளவுக்கு சுத்தமாக இல்லை. எனவே ஏகப்பட்ட ஆராய்ச்சி, பயணம் மற்றும் தேடல்களுக்குப் பிறகு கிட்டிய அந்த யமுனைத் தண்ணீரில் ஒரு பகுதி அஸ்தியைக் கரைத்து விட்டு பெயருக்குத் தண்ணீரைத் தலையில் தெளித்துக் கொண்டு வீட்டுக்கு வந்து குளித்தேன். யமுனை முடிந்தது. இப்போது இன்னும் ஒரு கலசத்தில் இருக்கும் அஸ்தியை கங்கையில் கரைக்க வேண்டும்.
மிச்சமிருந்த அஸ்தியைக் கரைக்க ஹரித்வார் தனியாகப் பயணப்பட்டேன். ஹரித்வார் அடைந்ததும் பேருந்து நிலையத்திலேயே ஒரு சைக்கிள் ரிக்க்ஷா பிடித்தேன். அஸ்தியைக் கரைக்க வைத்து குளிக்க வைத்து மீண்டும் பேருந்து நிலையத்தில் விடுவதற்கு இருபது ரூபாய் என்றான். ஒப்புக்கொண்டு ஏறி உட்கார்ந்தேன். ஹரித்வார் அநியாயத்துக்கு ஏற்ற இறக்கங்கள் நிறைந்த ஊர். ரிக்க்ஷா ஓட்டி என்னை உட்கார வைத்து அநேக தூரம் ரிக்க்ஷாவை நெட்டித் தள்ளிக் கொண்டே வந்தான். அப்படி உட்கார்ந்து வருவதற்கு மிகவும் கூச்சமாக இருந்தது. சுமார் இருபது நிமிட நெட்டித் தள்ளலுக்குப் பிறகு கங்கை ஆற்றின் ஒரு கரையில் நின்றது ரிக்க்ஷா.
ரிக்க்ஷாவில் இருந்து நான் இறங்குவதற்கு முன்பே குறைந்தது ஒரு நூறு பண்டாக்களாவது ஏறக்குறைய என்னைத் தாக்குவது போன்ற பாவனையில் சூழ்ந்து கொண்டார்கள். அஸ்திக்கலசம் வைத்திருந்த கிருஷ்ணகிரி ராணி சில்க் ஹவுஸ் மஞ்சள் துணிப்பையை ஆளுக்கொரு பக்கம் வலுவாக இழுக்கத் துவங்கினார்கள். 'யாரும் எனக்குத் தேவையில்லை' என்று உரக்க நான் போட்ட கூச்சலைக் கேட்க யாருக்கும் பொறுமை இல்லை. என்னை ஆக்ரோஷமான போட்டியின் ஒரு பொருளாக மாற்றி ஆளுக்கு ஆள் தங்கள் வலிமையைக் காட்டிக் கொள்ள யுத்தம் செய்வதைப் போன்ற ஒரு இரைச்சலில் தொடர்ந்து அவர்கள் ஈடுபட்டார்கள். நான் சளைக்காமல் அந்த மஞ்சள் பையை வலுவாக இழுத்து என்னிடம் வைத்துக் கொண்டு ஆற்றை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தேன். மஞ்சள் பையை என்னிடம் பறி கொடுத்த பண்டாக்கள் வேறு வகையான தாக்குதலில் இறங்கினார்கள்.
"அந்த ஆத்மா நேரா நரகத்துக்குத்தான் போகும்.''
"அநாதையா போகப்போகுது''
"வாரிசு இல்லாத ஆத்மாவா''
இப்படி காதுக்கு வெகு அருகாமையிலேயே கூச்சல் போட்டுத் தொடர்ந்து கொண்டிருந்தது ஒரு கூட்டம். தாங்க முடியவில்லை. இனி வேறு வழியில்லை. யாருக்காவது எதாவது கொடுத்தால்தான் அடுத்து நகர விடுவார்கள் என்கிற நிலையும் உருவானது. இருப்பவர்களில் சற்று பலசாலியாகத் தோற்றமளித்த ஒருவனைத் தேர்ந்தெடுத்தேன். அந்தப் பண்டா சற்று அருகாமையில் நெருங்கிப்பேசிய போது மட்டமான சாராயத்தின் வாடையும் பீடிப்புகையின் சருகு வாடையும் லேசாக அடித்தது.
அவனிடம் சொன்னேன்-
உனக்குக் கொஞ்சம் பணம் கொடுக்கிறேன். மற்ற எல்லோரையும் நிறுத்து. "எவ்வளவு வேண்டும் என்று சொல்.''
"ஆயிரம் ரூபாய் கொடு''
"ஆயிரம் ரூபாய்க்கு உனக்கு ஒரு வேலையும் கிடையாது. எல்லா மந்திரங்களும் சொல்லி இந்த அஸ்திக்கான சடங்குகளை ஊரிலேயே முடித்து விட்டோம். எனக்கு அஸ்தியை வெறுமனே கரைக்க வேண்டும். என்னைத் துரத்தி வரும் மற்றவர்களை நீ நிறுத்தினால் போதும். சும்மா கரையில் வந்து உட்கார்ந்து கொள். அதுபோதும். நூறு ரூபாய் வாங்கிக் கொள்'' என்றேன்.
சிறு தயக்கத்துக்குப் பிறகு சரி என்றவன் கூட்டத்தில் மற்றவர்களைப் பார்த்துக் கத்தினான்- "விலை படிந்து விட்டது. நீங்கள் போகலாம்.''
அடுத்த நொடியில் அந்தக் கூட்டம் சுத்தமாகக் கரைந்து போனது. அத்தனை கூட்டமும் எங்கே போனது என்று தெரியவில்லை. கரையில் அந்தப் பண்டாவும் நானும் தனித்து விடப்பட்டோம். கரையில் ஒருவன் இலைத் தொன்னையில் துலுக்க சாமந்திப் பூக்கள் வைத்து விற்றுக் கொண்டிருந்தான். அவனிடம் ஒரு தொன்னை பூ வாங்கச் சொன்னான் பண்டா. அவனிடம் நான் மீண்டும் உறுதிப் படுத்திக் கொண்டேன். "நீ மந்திரங்கள் எதுவும் சொல்லத் தேவையில்லை.''
நீ கொடுக்கும் வெறும் நூறு ரூபாய்க்கு நான் எதற்கு மந்திரங்கள் சொல்ல வேண்டும்?' என்று நிஷ்டூரியத்துடன் பதில் சொல்லிக் கரையில் அமர்ந்தான் பண்டா. துண்டு சுற்றிக்கொண்டு கங்கையில் கால் நனைத்தேன். கங்கை நீரின் முதல் ஸ்பரிசத்தில் ஒரு ஆயிரம் தேள்களின் கொட்டுக்கள். வலியக் காலைப் பின்னிழுத்து மீண்டும் தயக்கத்துடன் பின்னர் சற்றுத் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மீண்டும் கால் நனைத்து நின்றேன். அஸ்திக் கலசத்தைக் கையில் எடுத்து கரையில் வாங்கிய பூக்களுடன் சேர்த்துக் கரைக்க ஆயத்தமானேன்.
பண்டாவின் அவசரக் குரல் என்னை நிறுத்தியது. ஒரு நிமிஷம். நான் வேதப் பிராமணன். ஓரிரண்டு மந்திரங்களாவது சொல்லாமல் உன்கிட்டே காசு வாங்கினால் அது அதர்மமான காரியம். கலசத்தைக் கையிலே வைத்து சூரியனைப் பார்த்து நின்னு நான் சொல்ற ஒரு சின்ன மந்திரத்தை சொல்லு போதும் என்றான் அந்தப் பண்டா.
மந்திரம் எல்லாம் வேண்டாம்னு முன்னாடியே நான் சொல்லிட்டேன். பேசிய காசைத் தந்து விடுவேன்.
"அப்படி வெறுமனே காசு வாங்க மாட்டேன். நான் சொல்ற மந்திரத்தை திரும்பச் சொல்லு போதும்'' கொஞ்சம் தயங்கி விட்டு 'சொல்லு' என்றேன்.
"ஹே கங்கா மாதா''
"ஹே கங்கா மாதா''
யாருடையது என்று கேட்டான். அப்பாவின் அஸ்தி என்று சொன்னேன். அப்பா பெயர் மற்றும் கோத்திரம் கேட்டான். சமஸ்கிருதம் அல்லாத உள்ளூர் இந்தியில் மந்திரத்தைத் தொடர்ந்தான். "விஸ்வாமித்ர கோத்திரத்தை சேர்ந்த என் தகப்பனார் கிருஷ்ண ராவ் சர்மாவின் அஸ்தியை உன்னுடைய பாத கமலங்களில் சேர்ப்பிக்கிறேன்.''
நான் திருப்பிச் சொன்னேன்.
"நான் இந்த நாளில் பிராமணர்களுக்கு ஸ்வர்ணதானம் செய்வேன்.''
நான் பிரேக் போட்டேன் - "நஹி''
'பிராமணர்களுக்கு அன்னதானம் செய்வேன்'
"பில்குல் நஹி''
"சும்மா ஒரு பேச்சுக்கு சொல்லு''
"சொல்ல மாட்டேன்''
பரவாயில்லை. பிராமணர்களுக்கு போஜனத்துக்கு ஐந்நூறு ரூபாய்தான் ஆகும்.
"இல்லை. மாட்டேன்''
அடிச்சி கங்கையிலே தூக்கி எறிவேன்.
கண்பார்வை படும் தூரத்தில் ரிக்க்ஷாக்காரன் சாய்ந்து உட்கார்ந்து பீடி புகைத்துக் கொண்டிருந்தான்.
"தைரியம் இருந்தா கிட்டே வந்து பாரு. உன்னையும் இழுத்துக் கொண்டுதான் இந்த கங்கையிலே உயிர் விடுவேன்.''
"நீ அப்பா மேலே பாசம் இல்லாத பாவி. அந்த ஆளு நரகத்துக்குத்தான் போவான்.''
"அதைப்பத்தி நீ கவலைப்படாதே.''
ஒரு மாதிரி கைநடுக்கத்துடன் சற்று ஒதுங்கி நின்று பீடி புகைக்கத் துவங்கினான் அந்தப் பண்டா. அந்த நேரத்தைப் பயன்படுத்தி கங்கை பிரவாகத்தில் அஸ்தியைக் கரைத்துவிட்டு மூன்று முழுங்குப் போட்டுக் கரையேறினேன். அவன் முணுமுணுப்பான குரலில் கெட்ட வார்த்தைகளில் என்னைத் திட்டிக் கொண்டிருந்தான். துணி மாற்றிக் கொள்ளும்போது என்னருகில் வந்தான் பண்டா. நூறு ரூபாய் பத்தாது. முன்னூறாவது வேணும் என்றான்.
குடுக்கறதை வாங்கி இடத்தைக் காலி பண்ணு என்று சொல்லிக் கொண்டே பண்டா கையில் நூறு ரூபாயைக் கொடுத்து விட்டு ரிக்ஷாவில் ஏறினேன். அவன் ஆக்ரோஷத்துடன் என் சட்டையைப் பிடித்தான். நான் வலுவுடன் உதறிக் கொள்வதற்கு முன்பு ரிக்ஷாக்காரன் சடாரென்று இறங்கி வந்து அந்தப் பண்டாவைப் பிடித்து அவன் முகத்தில் மிகவும் வலுவாக ஓங்கிக் குத்தினான். அதை எதிர்பார்க்காத பண்டா ஆடிப்போனான். அதிர்ச்சியில் உறைந்த அவன் ஒரு நொடி சமாளித்துக் கொண்டு ரிக்ஷாக்காரனைப் பார்த்து ஆவேசத்துடன் கத்தினான்
"மாதர்சோத்''
ரிக்க்ஷாக்காரன் அவனை மீண்டும் ஆக்ரோஷத்துடன் இடுப்புக்குக் கீழே ஓங்கி எட்டி உதைத்தான். பண்டா வலியில் நெளிந்து கொண்டே தரையில் புரண்டான். அவன் முகத்தில் அதீதமான பீதி தெரிந்தது. ரிக்க்ஷாக்காரன் ஒன்றும் நடக்காதது போல என்னை ஏறி உட்காரச் சொல்லி விட்டு நெட்டித் தள்ளிச் செல்ல ஆரம்பித்தான். ரிக்க்ஷாவில் உட்கார்ந்து கொண்டு சற்று பயத்துடன் பண்டாவைத் திரும்பிப் பார்த்தேன். அவன் சுதாரித்து எழுந்து உட்கார்ந்து கொண்டு சிரமத்துடன் பீடியை எடுத்துப் பற்ற வைத்துக் கொள்ள ஆரம்பித்தான். ஒரு திருப்பத்தில் கண் பார்வையில் இருந்து மறைந்தான்.
காலையில் இருந்து ஒன்றும் சாப்பிடாததால் அசுரப்பசி எடுத்தது. பேருந்து நிலையத்துக்கு வந்ததும் ரிக்க்ஷாக்காரனை ஏதாவது சத்த சைவ உணவு விடுதிக்குப் போகச் சொன்னேன். காலையில் இருந்து என்னுடன் இருக்கிறான். அவனையும் என்னோடு சேர்ந்து சாப்பிடச் சொன்னேன். மிகவும் தயங்கினான். ஒன்றும் பிரச்னையில்லை. வந்து சாப்பிடு. சவாரிக்கான பணத்தைத் தனியாகக் கொடுத்து விடுகிறேன் என்று சொன்னேன். அழுக்கான துண்டினால் முகத்தையும் கைகளையும் துடைத்துக்கொண்டு என் எதிரே உட்கார்ந்து கொண்டான். ரொம்ப நேரமாக அவனுடன் ரிக்க்ஷாவில் சவாரியாக உட்கார்ந்தும் அவன் பெயர் கேட்காதது ஞாபகம் வந்தது.
"முஹமது அனீஸ்'' என்றான்.
வீட்டில் இருப்பவர்களுக்கும் சாப்பாடு வாங்கிக்கொள்வாயா என்று கேட்டேன்.
நீண்ட தயக்கத்துக்குப் பிறகு ஒப்புக் கொண்டான். வீட்டில் ஏழு பேர்கள் என்றான். ஓட்டல் காரரிடம் அவனுக்கு வேண்டிய அளவு ரொட்டி மற்றும் சப்ஜியைக் கட்டிக்கொடுக்கச் சொல்லிப் பணம் கொடுத்து விட்டு அவனுக்கும் சவாரிக்குப் பணம் கொடுத்து விட்டு பேருந்து நிலையத்துக்கு பஸ் பிடிக்க விரைந்தேன்.
இரவு தில்லி சேர்ந்ததும் ஊரில் இருக்கும் அண்ணாவை தொலைபேசியில் கூப்பிட்டு சொன்னேன்.
"அப்பாவோட அஸ்தியை கங்கையில் கரைச்சுட்டேன்.''
அக்கா குறுக்கிட்டுக் கேட்டாள் பிராமண போஜனம் ஏதாவது ஏற்பாடு பண்ணியா?
'ஆமாம். ஏழு பேர் சாப்பிட்டு இருப்பாங்க'.
*
நன்றி : வடக்குவாசல், Yadartha K Penneswaran & Majeed

Thursday, September 17, 2015

ரஸூல் மேஸ்திரி - பணீஷ்வர்நாத் ரேணு சிறுகதை

ரஸூல் மேஸ்திரி - பணீஷ்வர்நாத் ரேணு சிறுகதை (தமிழாக்கம் : டாக்டர் எச். பாலசுப்பிரமணியம்)

மிகக் குறுகிய காலகட்டத்திலேயே அந்தச் சிற்றூரில்தான் எத்தனை மாறுதல்கள்! நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு - தேவைக்கு அதிகமான மாறுதல்கள் என்று கூடச் சொல்லலாம். அதோ உயர்ந்து நிற்கிறது பள்ளிக் கட்டிடமும், மாணவர் விடுதியும் அவற்றின் முந்தைய உருவம் கற்பனைக்கும் எட்டாதது. ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு இந்தப் பள்ளியின் வகுப்புகள் பெரும்பாலும் ஆலமரத்தடியில்தான் நடந்தன என்றால் நீங்கள் நம்புவீர்களா? நல்ல மழைக்கால இரவுகளில் அந்தப் பக்கமாக நடந்தால் ஹாஸ்டல் மாணவர்கள் - 'கொட்டுதையோ வானம்,, சொட்டுதையோ விடுதி' என்று இரவெல்லாம் உச்சஸ்தாயியில் பாடுவதைக் கேட்கலாம்.

ஊர்ச்சனங்கள் குப்பைகளைக் கொட்டும் இடத்தில் இன்று விசாலமான டவுன்ஹால், கிளப், நூல்நிலையம் என்று வரிசையாக எழும்பியுள்ளன அழகழகான கட்டிடங்கள்.

கஃபூர் மியான் தோல் பதனிடும் கொட்டடி சினிமாக் கொட்டைகையாகி விட்டது. முன்பெல்லாம் அந்த வழியாகப் போகும்போது துப்புரவுத் தொழிலாளி பகியா கூட வாயைக் கோணிக் கொண்டு மூக்கை முந்தானையால் மூடிக்கொள்வாள். இன்றோ, சென்ட் வாசனை கமழ அங்கு நடைபயிலும் மிஸ்.சாயாதேவியின் உதடுகளில் மெல்லிய பாட்டு தவழுகிறது - 'சிங்காரத்தெருவிலே சுற்றி வர ஆசை!'

கலீஃபா பரீத்மியானின் கடையில் பழைய சிங்கர் தையல் மெஷின் கடபுடா என்று ஓடும் காலம் மலையேறிவிட்டது. 'பரக் பரக்' என்று துணியைக் கிழிக்கும் அவருடைய பழைய கத்தரியும் பழங்கதையாகி 
விட்டது. இப்போதெல்லாம் 'மாடர்ன் கட்ஃபிட் ' லத்தூ மாஸ்டர் போன்ற டிப்டாப் டெய்லர்களுக்குத்தான் காலம்.

'ரெஸ்டாரெண்டு'கள், 'டீஸ்டால்'கள் காய்கறிக் கடைகளைவிட அதிகமாகப் பெருகிவிட்டன. உலகப்போர் காரணமாக அகவிலை ஏகமாக ஏறிவிட்டாலும் தினமும் புதிய புதிய திட்டங்கள் உருவாகின்றன. உருக்குலைகின்றன. மொத்தத்தில் பட்டணமும், கடைத்தெருவும் அடையாள காண முடியாதபடி மாறிவிட்டன.

ஆனால் சதர் சாலையில் பழைய அரசமரத்தின் அருகே ரஸூல் மியானின் ரிப்பேர் கடை மட்டும் காலம் மாறியதை உணரவே இல்லை போலும்! கடுகளவாவது மாறுதல் வேண்டுமே, ஊஹூம், கிடையாது. ஒரு 
புதுமையும் வரவில்லை. இந்தக் கடையில் முன்போலவே ரஸூலும், அவரது மகன் ரஹீமும் பழைய சமுக்காளத்தில் அமர்ந்து ரிப்பேர் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் உட்காரும் இடம்கூட மாறவில்லை. அவர்களைச் சுற்றி மானாவாரியாகக் கிடக்கின்றன ரிப்பேருக்காக வந்த சாமான்கள் - பழைய சைக்கிள் சக்கரம், டியூப், சீட், பெடல், செயின், ப்ரேக், பெட்ரோமாக்ஸ் விளக்கு, ஸ்டவ், ஹார்மோனியம், கிராமஃபோன் இத்யாதிகள். இவற்றைச் சுற்றிலும் பணிக்கருவிகள், ஆயுதங்கள், திருகப்புளி, ஒரு பழைய மரப்பெட்டியில் பற்பல கருவிகளின் பகுதிகள், ரிஞ்ச், சின்ன ரம்பம், உளி, சுத்தியல், ஸ்க்ரூடிரைவர், உடைந்த ஸ்பிரிங்குகள், பக்கத்திலுள்ள சிறிய அலமாரியில் பழைய புதிய மாடல்களில் பழுதடைந்த கடிகாரங்கள், இரண்டு மூன்று காலி டன்லப்-ட்யூப் டப்பாக்கள், சிறிதும் பெரிதுமாக ஏதேதோ தட்டுமுட்டுச் சாமான்கள், ஆனால் ஒன்றும் உருப்படியாக இல்லை. எல்லாம் ஓட்டை உடைசல். அலமாரிக்கு மேலே ஒரு பழைய கிராமஃபோனின் துருத்தி போன்ற ஒலிபெருக்கி கவிழ்த்தியபடிக்கு இருக்கிறது. சுவரில் டன்லப், குட்இயர் மற்றும் வாட்ச் கம்பெனிகளின் 1934, 36, 38ஆம் வருடத்திய பழைய காலண்டர்கள், சினிமா நடிகை மிஸ். கஜ்ஜனின் கிழிந்த கலர்ப்படம் தொங்குகிறது. இரண்டு சுவர்க்கடிகாரங்கள் - ஒன்றில் டயல் இல்லை, மற்றதில் பெண்டுலம் இல்லை. பெண்டுலம் இல்லாத கடிகாரம் எத்தனையோ நாளாக மூன்று மணியையே காட்டுகிறது. இன்னொன்று எக்ஸ்ரே படம்போல தன்னுடைய உள்ளுறுப்புகளை வெளிக்காட்டிக் கொண்டிருக்கிறது. அதனுடைய 
ஸ்பிரிங்குக்கு அருகே சிலந்தியொன்று ஆனந்தமாக லைபின்னிக்கொண்டு குடும்பத்துடன் குடியிருக்கிறது. 

ரஹீம் இன்னொரு பக்கம் உட்கார்ந்து பேசாமல் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். தகர நாற்காலியில் அமர்ந்து வாடிக்கையாளர் தம்முடைய சாமான் பழுதுபார்க்கப்படுவதை உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்.

எதிரில் அரசமரத்தின்மேல் தினமும் புதிய கடைகளின் விளம்பரங்கள், டாக்டர் மற்றும் மருந்து விளம்பரங்கள், போர் அணிகளின் கோஷங்கள், சினிமா போஸ்டர்கள் எல்லாம் மாறி மாறி ஒட்டப்படுகின்றன. ஒரு தகரத் தகட்டின்மீது எழுதி மாட்டிய ஒரு விளம்பரம் மட்டும் எத்தனையோ வருடங்களாக அப்படியே தொங்குகிறது. அதில் கோணல் மாணலாக இவ்வாறு எழுதியிருக்கிறது - 'ரஸூல் மேஸ்திரி - இங்கு ரிப்பேர் செய்யப்படும்'. இந்த விளம்பரப்பலகை பலமுறை நகரத்துப் படிப்பாளிகளின் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அவர்கள் 
இதைப்பற்றி நையாண்டி செய்திருக்கிறார்கள். ரஸூல் மேஸ்திரி முன்னிலையில் எத்தனையோ முறை திருத்த மசோதாக்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆயினும், இன்றளவும் அது சற்றேனும் மாறாமல் அப்படியே தொங்குகிறது. அண்மையில், ஏதோ ஒரு பொல்லாத சிறுவன் இந்த விளம்பரத் தகட்டில் தன் கையால் ஒரு வாசகத்தை எழுதிச் சேர்த்திருக்கிறான். 'இங்கு முதுகும் ரிப்பேர் செய்யப்படும்' - ஆனால் அப்படி விஷமத்தனமாக எழுதிய வாசகத்தை அழிக்க வேண்டிய அவசியத்தையும் யாரும் உணரவில்லை போலும்.

ரஸூல் மேஸ்திரி
நடுத்தர உயரம், தொழிலாளிகளுக்கே உரித்தான உடற்கட்டு, நீண்ட கூர்மையான முகத்தில் கைப்பிடியளவு தாடி - கறுப்பு மயிரும் வெள்ளை மயிரும், எள்ளும் அரிசியும்போல கலந்த தாடி. அறுபது வயதை அடைந்த தளர்ச்சி உடலில் காணப்படவில்லை. என்ன சுறுசுறுப்பு, வேகம்! வாலிபர்கள் பிச்சை வாங்கவேண்டும். எளிமை என்றால் இதல்லவா எளிமை - கனமான துணியில் ஒரு லுங்கி, அதேபோல காடாத் துணியில் ஒரு ஜிப்பா. வெற்றிலை-பாக்கு, டீ, பீடி இத்யாதிகளின் புரவலர். நிமிட நேரமாவது கை சும்மா இராது. துருதுருவென்று ஏதோ வேலை செய்துகொண்டிருக்கும். 'சரடு' விடுவதில் மன்னன். அவர் 'ரீல்' விடுவதைக் கேட்டுக்கொண்டே இருக்கலாம். ஆனால் வாய்ச்சவடால் அல்ல. நாணயமானவர். பொறுப்பை தட்டிக்கழிக்க மாட்டார். கை வேலை 
செய்து கொண்டே இருக்கும். வாய் உலக நடப்புகளை அளந்து கொண்டிருக்கும்.

'டக்..டக்..டக..டக்.. டக்..டக..டக்..டக்..'

'அப்ப தெரிஞ்சுக்குங்க அண்ணே, 'தோஜக்- பஹிஸ்து! அதாவது சொர்க்கம் நரகம் எல்லாம் இங்கேயே இருக்கு. ஆமா, இங்கேதான் இருக்கு. நாம செய்யற நன்மை, தீமைங்களுக்கு இங்கேயே கூலி கிடைக்க்குது. நம்ம 
ராமச்சந்தர் பாபு இல்லை? - ஏ ரஹீம்! அந்த ஸ்க்ரூ டிரைவரை இந்தப் பக்கமா கடாசு.. அதான் ராமச்சந்தர் பாபு.. ஆமாம் தம்பி!.. அந்தக் குட்டையன்தான்.. கெட்டிக்கார ஆளு.. ஆமா, இதைத்தான் கேட்டேன்!"

ரஹீம்!
ரஸூல் மேஸ்திரியின் ஒரே மகன். மாநிறத்துக்கும் கொஞ்சம் கம்மி. கொழுகொழுவென்று இருப்பான். 'வாப்பாவிடம் ரொம்பவும் மரியாதை உள்ள பையன். அவசியத்துக்கு அதிகமாகவே பணிவும், அடக்கமும் 
உடையவன்.

அவன் தன்னுடைய தந்தையின் முன்னால் உரக்கப் பேசிச் சிரித்ததை யாருமே பார்த்ததில்லை. ரிப்பேருக்காக பழைய சாமான்களுடன் மூன்று நான்கு பேர் வந்துவிட்டால் போதும், ஆரம்பித்த்துவிடும் ரஹீமுக்கு சோதனைக் காலம்! சின்னச்சின்ன தவறுகளுக்குக்கூட ரஸூல்மியான் மகனைக் கடிந்துகொள்வார். பகல்பூராவும் குனிந்த தலைநிமிராமல் வேலை பார்த்தாலும்கூட 'சோம்பேறி, உதவாக்கரைப் பையன், ஊர்சுற்றிக் கழுதை' போன்ற வசவுமொழிகள் விழுந்துகொண்டே இருக்கும். ஆனால் ரஹீமின் முகம் கொஞ்சமாவது மாற வேண்டுமே! 

ரஸூல் மியான் பிதற்றிக்கொண்டே இருப்பார். ரஹீமோ அமைதியாக வாடிக்கையாளரிடம் பேசிக் கொண்டிருப்பான் - "பாருங்க, இதனோட ஸ்பிரிங் உடைஞ்சுபோச்சு.. அப்புறம் ஹோல்டிங் நட்டு.." ரஸூல்மியான் வாயைவைத்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார். குறுக்கே புகுந்துவிடுவார், "கொண்டு வா இங்கே.. என்ன ஆச்சுன்னு நானும் பாக்குறேன். ஓஹோ, போடா சின்னப்பயலே! ஸ்பிரிங் மட்டும்தானா 
போயிருக்கு. இதப்பாரு.. ஸ்பிரிங் மாத்திட்டேன்.. நீ சொன்னமாதிரி ஹோல்டிங் நட்டையும் பொருத்திட்டேன்.. எங்கே, மெஹினை ஓட்டி ரிகார்டைப் பாட வை பார்க்கலாம்! அப்பத்தான் நீ பக்கா மேஸ்திரின்னு 
சொல்லுவேன்.. அட மண்ணாந்தைப் பயலே! பாலன்ஸைப் பாத்தியா? பாலன்சு இல்லாமல் எப்படிடா ஓடும்?.." 

ரஹீம் சற்றே வெட்கம் கலந்த புன்னகையுடன் தரையைப் பார்த்துக்கொண்டே நிற்பான்.

ஊருக்குக் கிழக்கே இரண்டுமைல் தொலைவில் ஒரு சிறிய கிராமம். அங்கேதான் மேஸ்திரியின் வீடு இருக்கிறது. மேஸ்திரியின் மூதாதையர்கள் ஒரு காலத்தில் நிலம், நீச்சு என்று செழிப்பாக வாழ்ந்தவர்கள். இன்று மாடு, மனை, சொத்து, சுகம் என்ற பெயரில் எஞ்சியிருப்பது மூன்று குடிசைகளும், நாலைந்து ஆடுகளும், ஒரு 
சில சேவல் கோழிகளும் மட்டுமே. வருவாயைப் பற்றிக் கேட்டால், ரிப்பேர்க் கடை இல்லாத நாட்களில் வயிற்றுக்கும் விடுமுறை. செலவோ, நவாப் கணக்குதான்! மாதம் முப்பதுநாளும் சமையலில் கறி, ஈரல், 
ஹல்வா சேமியா இவை இடம்பெறாமல் இருக்காது. மகனும் மருமகளும் வாயே திறக்க மாட்டார்கள். கிழவி இருக்கிறாளே, அதான் ரஸூலின் பீபி, தன்னுடைய நல்லாகாலத்தில் எவ்வளவோ முயன்று பார்த்து விட்டாள் - 
வாயைக்கட்டி, வயிற்றைக்கட்டி நாலு காசு மிச்சம் வைக்க வேண்டும் என்று. ரஸூல்மியான் விட்டால்தானே! 

இப்போது அதெல்லாம் ஒன்றும் பிரயோசனம் இல்லை என்று விட்டுவிட்டாள். ரஸூல்மியான் உமர்கயாம்போல தத்துவம் பேசி அவள் வாயை அடக்கி விடுவார். ஆக, அவள் சொன்னது ஒருநாளும் எடுபட்டதில்லை. இருந்தாலும் , இன்றும், அவள் தன் கருத்தைச் சொல்லாமல் விடுவதில்லை. ரஹீமின் கையில் பொட்டலத்தைப் 
பார்த்துக் கேட்பாள் - "அந்தப் பொட்டலத்திலே என்னது ரஹீம்?"

"ஈரல்.." - ரஹீம் குழந்துகொண்டே பதில் கூறுவான்.

"எம்புட்டு இருக்கும்? ஒரு சேர் இருக்கும் போலிருக்குதே..என்ன விலை? ஏ அல்லா..! ரெண்டு ரூபா சேரா? இப்படித் துன்னாட்டி என்னா? அந்த நாக்கிலே தீயை வைக்க! ரெண்டு ரூபா சேர் ஈரலாம்! ரஹீம் உன்னைத்தான் கேக்குறேன் - அல்லாமியான் ஊருக்கெல்லாம் புத்தியும், அறிவும் குடுத்த நேரத்திலே எங்கேடா போய்த் தொலைஞ்சே? உங்க வாப்பா தலையிலே சைத்தான்தான் பிடிச்சிருக்கு! உன் வாயிலேயோ அல்லா பூட்டைப்போட்டு பூட்டி வெச்சிருக்காரு" கிழவி ரஸூல் மியானின் ஈரல் தின்னும் ஆசையை ஆசைதீரத் திட்டி 
நொறுக்குவாள். ரஹீம் அங்கிருந்து மெதுவாக நழுவிவிடுவான். கிழவியின் மடியில் உட்கார்ந்திருக்கும் பேரல் ஈரல் பொட்டலத்தைத் தாவித்தாவி எடுக்கப்பார்ப்பான். கிழவி குழந்தையைத் தடுப்பாள் - "அய்யோ ஆண்டவனே, என்னதான் செய்வேன், ஒண்ணும் புரிய மாட்டேங்குதே.." அங்கலாய்த்துக்கொண்டே அவள் முணுமுணுப்பாள், மணிக்கணக்காக..." அப்பன் , மகன் இரண்டு பேருக்கும் புத்தி மேயத்தான் போயிருக்கு. இப்படி வக்கணையாத் தின்னுக்கிட்டிருந்தா.. என்னைக்கும் இப்படியே நடக்குமான்னு யோசனை பண்ண வேண்டாம்?"

நாவின் ருசிக்கு அடிமையாகி நொடித்துப்போன சில குடும்பங்களின் கதைகளை எடுத்துக்காட்டி இவங்க செத்தா சவக்கோடிக்குக்கூட வக்கு இருக்காது என்பாள். இப்படி அவள் தன் விதியை நொந்துகொண்டிருக்கையில் ரஸூல்மியான் வந்து சேருவார். முதலில் ஈரல் பொட்டலம் பிரிக்கப்படாமல் ஏன் அப்படியே கிடக்கிறது 
என்பதற்கான காரணம் கேட்பார். கிழவியோ வாய்திறவாமல் முகத்தைத் தொங்கப்போட்டுக் கொள்வாள். 

ரஸூல்மியான் மேலங்கியைக் கழற்றி மாட்டிவிட்டு திண்ணையில் சென்று உட்கார்ந்துவிடுவார். மருமகள் ஹூக்கா தயாரித்து அவர் முன்னால் வைப்பாள். இரண்டு வயதுப் பேரன், சுட்டிப்பயல் கரீம் பாட்டியின் மடியை விட்டிறங்கி தாத்தாவின் மடியில் ஏறி அமர்ந்து கொள்வான். பிறகு பாட்டியை விரலாம் சுட்டிக்காட்டி மழலை மொழியில் கூறுவான் - "தொண.. தொண.. பாத்தி" தாத்தாவிடமிருந்து லெமன் மிட்டாயும், பிஸ்கட்டும் கிடைக்கும். இன்னும் உரத்த குரலில் பாட்டியை எரிச்சலூட்டுவான் - தொண தொண பாத்தி, தொண தொண பாத்தி."

ரஸூல் மேஸ்திரி ஹூக்கா புகையை இழுப்பார். முகத்தில் எப்போதும் காணும் இயல்பான சாந்தம் மாறும். 

சற்றே சினந்த குரலில் மனைவியிடம் கேட்பார். "உன்னைத்தான் கேக்குறேன் புள்ளே, நித்தநித்தம் தொணதொணக்குற இந்தக் குணம் இருக்கே, எப்ப மாறப்போகுது? எப்பப்பாரு இதே பாட்டுதான், எப்பக்கேளு 
இதே ராகம்தான். உனக்குக் கொஞ்சமாவது வெக்.."

"என்னோட வெக்கம், மானம் பத்தி இங்கே யாரும் பேச வேண்டியதில்லே" - கிழவி படபடப்பாள்.

ரஸூல்மியானுக்கும் சூடு ஏறும் - "இப்படிப் பேசினா என் வாயை அடக்கிடலாம்னு நெனப்பா? ஒருதரம் இல்லே, ஆயிரம் தரம் சொல்லுவேன், உனக்கு வெக்கம், மானம் இல்லேன்னு. எல்லாத்தையும் காத்திலே விட்ட்டாச்சு. 

உன்னால் மட்டும் முடிஞ்சா எங்க எல்லாரையும் பட்டினி போட்டே கொன்னிருப்பே. ஏதோ ஆசைப்பட்டு வாங்கிட்டு வந்திருக்கோம். தொணதொணக்காட்டி உனக்குப் பொழுது போகாது."

"தொண..தொண.. பாத்தி" - கரீம் பிஸ்கட்டைத் தின்றுகொண்டே கையைத் தட்டி ஆரவாரம் செய்வான். பாவம், கிழவி அழுது விடுவாள். அல்லா சீக்கிரம் தன்னை அழைத்துக்கொள்ளக்கூடாதா, என்ன சுகத்தைக் காண இப்படி என்ற பொல்லாப்பையும் கட்டிக்கொண்டேனே.. என்றெல்லாம் எண்ணமிடுவாள். மருமகள், ஈரலை எடுத்துக்கொண்டுபோய் அரியத் தொடங்குவாள். ரஹீம் மெதுவாக அறையிலிருந்து எங்கேயாவது 
போய்விடுவான். கிழவி உட்கார்ந்து விசும்பிக் கொண்டிருப்பாள்.

"ரஸூல் காக்கா இருக்காங்களா", வெளியிலிருந்து வருகிறது ஒரு குரல்.

"யாரு? ஃபக்ருதீனா? வாய்யா வா. சொல்லு. என்ன சேதி." ரஸூல்மியான் புகைக் குழாயிலிருந்து வாயை அகற்றியவாறு கேட்பார்.

"காக்கா, ரஷீதுக்கு இரண்டு நாளா வாந்தி, வயிற்றுப்போக்கு, மருந்து கேக்கவே இல்லே, உடம்பு வேறே சில்லிட்டுகிடக்கு.."

"எங்கேயோ எருமைமாட்டு மேலே எண்ணெய் மழை பெய்யுதுன்னு சும்மா இருந்தியாக்கும் ரெண்டுநாளா?" ரஸூல்மியான் இடைமறித்துக் கேட்டவாறு எழுந்து விடுவார்! "பார்க்கலாம் வா. பயப்படாதே ஒண்ணும் ஆகாது. கண்டதை கடியதைத் தின்னிருக்கும். எல்லாம் சரியாப்போகும்" என்றவாறு உள்ளே போவார்.

"இஸ்மைலு எப்படி இருக்கு ஃபக்ரு" கிழவி கேட்பாள்.

"உங்க ஆசியிலே இப்ப நல்லா இருக்கிறான், காக்கி. நீங்கதான் அந்தப் பக்கம் வர்றதே இல்லே. இஸ்மைலு அம்மா கேக்குது.. காக்கிக்கு ஏதானும் கோபமா நம்ம மேலே?" அப்படீன்னு."

"போடா பைத்தியக்காரா! நா எதுக்குக் கோவிச்சுக்குறேன்? இந்த துக்கிரி கரீமைப் பார்த்துக்கவே நேரம் சரியாப்போகுது."

ரஸூல்மியான் பையில் சிறியதும் பெரியதுமாக மருந்து சீசாக்களை அடைத்துக்கொண்டு கிளம்புவார் - "வா போகலாம்." கிழவி சொல்லுவாள் - "நல்லா ஆற அமர கவனிங்க. கையிலே இல்லாத மருந்துன்னா 
பட்டணத்திலேருந்து வாங்கிவரச் சொல்லுங்க."

தாத்தா புறப்பட்டுப்போனதும் கரீம் மெதுவாக பாட்டியின் அருகே வந்து சேருவான், அர்த்தமில்லாமல் சும்மா சிரித்துக்கொண்டு, சமாதான உடன்படிக்கைக்கு பேச வருவதுபோல. ஏதேதோ பேசி பாட்டியின் கோபத்தைத் தணிக்க முயலுவான். தான் பாதி தின்ற பிஸ்கட்டை பாட்டி தின்னால்தான் ஆயிற்று என்று அடம் பிடிப்பான்.

"போடா போக்கிரிப்பயலே, சைத்தான்! இங்கே ஒண்ணும் வர வேண்டாம். உங்க தாத்தாகிட்டேயே போ. பெரிசா வந்துட்டான் பிஸ்கட்டை எடுத்துக்கிட்டு சமாதானத்துக்கு போ போ. நான் தொண தொண பாட்டிதானே!" என்று சொல்லி கோபத்தைவிடாமல் நடிப்பாள். ஆனால் இந்த மாதிரி சந்தர்ப்பத்திலே எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கரீம்மியானுக்கு நன்றாகத் தெரியும். பலவந்தமாக பாட்டி மடியில் ஏறி உட்கார்ந்துகொண்டு தாத்தாவைக் குற்றம் சொலத் தொடங்குவான் - "தாத்தா பக்கி(ரி).. சட்டோ(ர்)" - (தாத்தா பக்கிரி - தாத்தா சப்புக்கொட்டி). 

அப்போது பாட்டியின் உதடுகளில் தவழும் புன்னகையைக் கவனித்துக் கொள்வான். பிறகு தனக்கே உரிய வினோதமான மழலை மொழியில் ஏதேதோ பேசி பாட்டியை வசப்படுத்துவான். மழலைப் பேச்சில் அவன் 
கூறுவதன் சாராம்சம் இப்படித்தான் இருக்க வேண்டும் - 'தாத்தா எப்பவாவதுதானே வூட்டுகு வர்றாரு. நான் அவருகிட்டே போறதெல்லாம் பிஸ்கெட் வாங்கிக் கொள்ளத்தான். அதுக்கு மட்டும்தான் அவருகிட்டெ சிநேகிதம். அவரை ஏமாத்தி எப்படி பிஸ்கெட் வாங்கினேன் பாத்தியா? இதுதான் பாட்டி நம்ம ராஜ தந்திரம்!"

ஈரலை அரிந்துகொண்டே கரீமின் அம்மா கண்களை உருட்டி அவனிடம் கூறுவாள் - "அப்படியா சேதி! தாத்தா வரட்டும். உன்னோட வண்டவாளம் எல்லாம் வெளியாகப் போவுதுபாரு."

கரீம் மியான் தன் தாயின் சொல்லை எப்படிப் பொறுத்துக்
கொண்டு சும்மா இருப்பான்? அம்மாதான் வீட்டிலேயே பலவீனமான பிராணி, வாயில்லாப் பூச்சி. கரீம் மியான் அம்மாவை ஒருபோதும் காக்காய் பிடித்ததில்லை; பிடிக்கவும் போவதில்லை. என்னைப் பயமுறுத்த அவளுக்கு இத்தனை துணிச்சலா? சிறிதுநேரம் மௌனமாக இருப்பான். அம்மா புன்னகை புரிவாள். உடனே அவளை ஏசுவான் - "பேசாம கிட.."

"தாத்தா வரட்டும் சொல்றேன்" - அம்மா மீண்டும் பயமுறுத்துவாள். இதைக்கேட்டு கரீம்மியான் வெகுண்டு எழுவான். அருகில் அடிக்க லாயக்காக ஏதாவது பொருள் கிடைக்குமா என்று நோட்டம் விடுவான். பெரிய தடிக்கம்பைத் தூக்க வலுவிருக்காது. வெறுங்கையை ஓங்கிக்கொண்டு அம்மாவை ஆக்கிரமிப்பான். தலைமுடியைப் பிடித்து இழுப்பான். அம்மா ஓலமிடுவாள் - "விடுடா சைத்தான், என்னை விட்டுடு. தாத்தாகிட்டெ சொல்ல மாட்டேன். விடுப்பா கண்ணு."

பாட்டி சிரித்துக்கொண்டே போய் அவனைப் பிடித்துக்கொண்டு வருவாள். கரீம்மியான் தன்னுடைய மொழியில் பயமுறுத்துவான் - "பக்கிரித் தாத்தாவையும் அப்பாவையும், உன்னையும் அடித்து துரத்திடுவேன், வீட்டைவிட்டு."

அம்மா திரும்பவும் கோபமடைந்தால் போர்க்களத்தில் இறங்கி விடுவான். ஆனால் பாட்டி தடுப்பாள். பல்லை நறநறவென்று கடித்துக்கொண்டு விறைப்பாக உட்காருவான். பாட்டிக்கும், அம்மாவுக்கும் இந்த சங்கேத மொழி தெரியும். பாட்டி சொல்லுவாள் - "இன்னிக்கு பால்குடிக்கும்போது உன்னை அழவிட்டுத்தான் மறுவேலை. உண்டு இல்லைன்னு பண்ணிடுவான். கவனமா இருந்துக்க."

கரீம் சில நாட்களாக ஒரு புது உத்தியைக் கண்டுபிடித்திருக்கிறான். பால் குடிக்கும்போது அதைக் கையாளுவான். தாய், 'அம்மாடீ' என்று கத்துவாள். அப்போது தன்னுடைய வெற்றியில் கரீம் பெருமிதம் கொள்ளுவான்.

சமையலறையில் மருமகள் ஈரல் கறி சமைத்துக்கொண்டிருப்பாள். அப்போது கிழவி உரக்கக் குரல் கொடுப்பாள் - "பாரும்மா, பதமாக இருக்கட்டும், இல்லேன்னா புயலைக் கிளப்பிடுவாரு." உப்பு, உறைப்பு, மசாலா போடுவதைப் பற்றி வெளியிலிருந்து ஓரிருமுறை எச்சரிக்கை விடுத்த பிறகு தானே சமையலறையில் புகுந்துவிடுவாள். 

மருமகள் மடியில் குழந்தையை விட்டவாறு கூறுவாள் - "கொஞ்சம் அம்மாகிட்டெ இரு, நான் போய்க் குழம்பைக் கவனிக்கிறேன்." மருமகள் முறுவலித்துக் கொண்டு சமையலறையிலிருந்து வெளியே வருவாள். 

அதற்குள் கிராமத்தை ஒரு சுற்று சுற்றிவிட்டு ரஹீம் திரும்பி வருவான். அப்பா, அம்மா, குழந்தை மூன்றுபேரும் சேர்ந்து பழைய ஜப்பானிய கிராமஃபோனில் கமலா ஜரியாவின் பாட்டைப்போட்டு ரசிப்பார்கள் - 'அதாஸே ஆயா கரோ பனகட் பர், ஜப்தக் ரஹே ஜிகர் மே தம்' (வந்திடுவாய் ஒயிலாக ஆற்றுது துறைப்பக்கம், அதுவரை துடிக்கட்டும் என் இதயம்).

ரஸூல்மியான் திரும்பும்போது கள்ளுக்குவளையும் இருக்கும். அடுத்த காட்சி - சாப்பாட்டுக்காக முற்றத்தில் விரிப்பு விரித்தல். கொட்டாவி விட்டுக்கொண்டே கரீம்மியானும் சாப்பிட எழுந்திருப்பான். தட்டு, கிண்ணம், கிளாஸ் இவற்றை ஒவ்வொன்றாக மெல்லத் தூக்கிக்கொண்டு தாத்தா பக்கத்தில் வருவான். மூன்று பேரும் சேர்ந்து திருப்தியாக சப்பாத்தி - ஈரல் கறியை ஒருகை பார்ப்பார்கள். நடுநடுவே மதுபானமும் நடக்கும். கிழவி பக்கத்தில் உட்கார்ந்து பரிமாறுவாள். "வாஹ், இன்னிக்கு குழம்பு வெகுஜோர்" என்று சொல்லிவிட்டால் போதும், உச்சி குளிர்ந்துவிடும் கிழவிக்கு.

கரீம் மியானும் ஒரு மிடறு குடித்துவிட்டு களியாட்டம் போடுவான். குவளையில் மீந்திருக்கும் கள்ளை கிழவியிடம் கொடுத்தவாறு ரஸூல்மியான் கூறுவார் - "ஒரு கிளாஸ் போல இருக்கும், மருமகளுக்குக் கொடு, உடம்பு வவ்வால் கணக்கா வத்திக்கிடக்கு. தினமும் ஒரு கிளாஸ் குடிச்சா, மதமதன்னு பழைய உடம்பு வரும். கள்ளாக்கும், சாராயம் இல்லே தெரிஞ்சுக்கோ. நீதான் குடிச்சதே இல்லையே.. உனக்கு எங்க தெரியப்போகுது!".

சற்று நேரத்துக்கெல்லாம் குடிசைகளில் நித்திரைக்கன்னி கோலோச்சுவாள். யாராவது வந்து கூப்பிட்டால் ரஸூல்மியான் இரவிலும் ஏதாவது நோயாளியைப் பார்க்கப் போய்விடுவார். ஒவ்வொரு சமயம் இரவெல்லாம் வைத்தியம் செய்யப்போக வேண்டியிருக்கும்.

காலைச் சிற்றுண்டிக்குப் பிறகு ரஸூல்மியான் பட்டணத்துக்குப் புறப்பட்டுவிடுவார். மதியச் சாப்பாட்டை ரஹீம் எடுத்துச் செல்வான். ரஸூல் மியான் காலையில் சரியான நேரத்துக்குக் கிளம்பிச் சென்றாலும், சாப்பாட்டை எடுத்துச் செலும் ரஹீம்தான் அநேகமாக முதலில் கடைக்குப் போய்ச்சேருவான். வீட்டிலிருந்து புறப்பட்ட பிறகு நாலெட்டுக்கு ஒருமுறை நின்று ஊர்க்காரர்களின் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டே போவார். எத்தனை விதமான பிரச்சினைகள்... திருமணம், அடிதடி, சண்டை, வழக்கு, பஞ்சாயத்து, வியாதி - வெட்டை, மருந்து - பத்தியம் என்று தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் ஆலோசனை கூறியவாறு கிராமத்திலிருந்து வெளிவரும்போதே மணி பன்னிரெண்டு அடித்துவிடும். பிறகு வயல் வரப்பு வழியாக நடக்கும்போது வயலில் வேலை செய்பவர்களிடம் 'விவசாய சம்பந்தமாக' இரண்டு வார்த்தை பேசாமல் நகர முடியுமா?

"அடே மஹங்கூ, நீ திருவிழாச் சந்தையிலே வாங்கினேல்ல, ஒரு கன்னுக்குட்டி, எங்கே அது?"
"என்னத்தைச் சொல்ல மாமா, ரெண்டு நாளா அது புல்லும் தின்னலே, தண்ணியும் குடிக்கலே, அதுக்கு என்ன ஆச்சோ, ஏதோ.. ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்!"

அவ்வளவுதான், ரஸூல்மியான் திரும்பிவிடுவார். கன்றுக் குட்டியைப் பார்த்து. என்ன நோய் என்று நிதானித்து. அதற்கு என்ன பச்சிலை மருந்து கொடுக்கவேண்டும், அந்தப் பச்சிலை யார் தோட்டத்தில், எந்த மரத்தடியில் கிடைக்கும் என்பதையும் விளக்குவார். அல்லது தானே போய்க் கொண்டுவருவார்.

கடைக்குப்போய் இருக்கையில் அமர்ந்ததும் சொல்லுவார் - "ஓ, இன்னிக்கு ரொம்ப நேரமாயிடுச்சி." பிறகு ரஹீம் செய்யும் வேலையை சிறிதுநேரம் உன்னிப்பாகக் கவனித்துவிட்டு, "இங்கே கொடு அதை, நான் பார்க்கிறேன். அது வரையிலும் நீ போலாவின் கடிகாரத்தைப் பாரு" என்பார்.

பழைய நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஆள், "யாரந்த போலா?" என்று கேட்டால் போதும் ஆரம்பித்து விடுவார் போலா புராணம்.. "அதாங்கறேன், அந்த போலாதான்.. தெரியலையா? காங்கிரஸ்காரன். இப்ப புரிஞ்சுதா? 
ஜெயில்லேயே பி.ஏ பரீட்சை தேறினான். பெயருக்கு ஏத்த மாதிரி நல்ல பையன்.. போலா..! இதப் பாருங்க, உங்க கடிகாரத்தின் இயர்ஸ்பிரிங் எவ்வளவு லோலமா இருக்கு. அதனாலேதான் சொல்றாங்க, மலிவாக்கிடைக்குதுன்னு வாங்கினா அடிக்க அழ வேண்டியதுதான்.. ஆனால், இந்த போலா இருக்கிறானே, கருத்தானவன், எதை 
நினைச்சாலும் செஞ்சு முடிப்பான். நானும்தான் எத்தனையோ பையன்களைப் பார்த்திருக்கிறேன்.."

கதை கேட்பவர், தனக்கு அறிமுகமில்லாத போலாவைப் பற்றிய கதையின் முகவுரை நீளுவதைக் கண்டு குறுக்குக் கேள்வி கேட்பார்.. "மியான், எந்த போலாவைப்பத்தி இவ்வளவு உசத்திப் பேசறீங்க? நீளமா தலைமுடியை வளர்த்திக்கிட்டிருக்கிறானே, அவன்தானே.."

"இல்லய்யா.. அவன் இல்லை.." ரஸூல் இடைமறிப்பார்.. "நீளமா தலைமுடி வளர்த்துக்கிட்டிருக்கிறது அவனிந்தர். அவன் போலாவுக்குச் சேக்காளிதான். அவனும் அமைதியான பையன். பாக்குறதுக்கு ஊர்சுற்றிப் பயல்போல தெரிகிறான், ஆனால்.."

"ஓ ரஸூல் காக்கா! இங்கே கொஞ்சம் வாங்க..பாருங்க இதை.." பால்காரப்பெண் விசும்பிக் கொண்டே வந்து நிற்பாள்.. "பாருங்க ரஸூல் காக்கா, பானையை உடைச்சுட்டு.. கையைப் பிடிச்சு இளுக்குறான்.."

"யார் அவன்?"

"சதீஷ்பாபு மகன்."

"சதீஸ்பாபுகிட்ட சொல்லலியா நீ?"

"சொன்னேன் காக்கா, அவரு, பையனைக் கண்டிக்கறதுக்குப் பதிலா என்னை விரட்டறாரு.. கெட்ட வார்த்தை சொல்லி திட்டறாரு" இதைக் கேட்டதும் ரஸூல்மியான் புருவத்தை நெரித்துக்கொண்டு எழுந்துவிடுவார். வேலையை 'அம்போ' என்று விட்டுவிட்டு கோபத்தில் கத்த ஆரம்பிப்பாரு.. :எவ்வளவு பெரிய பணக்காரனோ அவன்கிட்ட அந்த அளவுக்கு சின்னத்தனம் இருக்கும். ஒண்ணாம் நம்பர் சோட்டா, நீ போயி, சௌதாகர் சிங்கைக் கூட்டியா, சுதாமியா." பால்காரி சுதாமியா கண்ணீரைத் துடைத்துக்கொண்டு போவாள். ரஸூல்மியான் விடாமல் படபடப்பார்.. "காசு கொழுத்துப் போச்சு.. இவனுங்க பொம்பிளை கற்பிலேயே கையை வைக்கிறான் பிசாசு!.."

"மேஸ்திரி, இந்தப் பொம்பளைங்களை லேசுப்பட்டதுன்னு நினைக்காதீங்க. பலே கைகாரிங்க. ஆளைச் சொக்கவச்சு வம்புக்கிழுக்கும். ஆமா, இந்த மாதிரி வயசுப் பொண்ணுங்களை பட்டணத்துலே பால்விக்க அனுப்பாட்டி என்ன?"

"சும்மா இருங்க, நீங்க ஒண்ணு!" இந்தப் புள்ளே என் மகளைப் போல. கிராமத்துப் புள்ளங்களுக்குக் கள்ளம் கிடையாது, தெரிஞ்சுக்குங்க. உங்க பட்டணத்துப் பெண்களைப்போல இல்லே. பால் வித்துத்தான் சீவனம் நடக்கணும். இவ வீட்டிலே இந்தப் புள்ளையைத் தவிர எல்லாருக்கும் சீக்கு. வைத்தியரைக் கூப்பிடவும் பால் விக்கவும் இவ போகலேன்னா யார் போறது? சொல்லுங்க! பெண்களுடைய உண்மை நிலையை உணராமல் 
இந்த கயவாளிங்க அவளுடைய கஷ்ட நிலைமையத் தன்னுடைய சுயநலத்துக்குப் பயன்படுத்தறாங்க."

சுதாமியா வந்து கூறுவாள்.. "சௌதாகர் காக்கா வீட்டிலே இல்லே." ரஸூல் மியான் சுதாமியாகூஉட தனியாகவே கிளம்பிவிடுவார்.

பொழுது சாயத்தொடங்கும்போது கடைக்கு வந்துசேருவார். அப்போதும் படபடத்துக்கொண்டே வருவார்.. "நீயும் ஒரு நாளைக்குக் கிராமத்துப்பக்கம் வராமலா போவே? நடுரோட்டிலே நிக்க வச்சு உன் தோலை உரிக்காட்டி என் பேரு ரஸூலு இல்லே, ஆமா..."

பிறகுக் கடையில் ஓர் ஓரமாக உட்கார்ந்து கொண்டிருக்கும் கறிக்காரிகளை நோக்கிக் கேட்பார்.. "என்ன அப்துல்லா அம்மா, இப்பத்தான் பொழுது விடிஞ்சுதா?" இதைக் கேட்டதும் காய்கறிக்காரிகள் எல்லாரும் 
கோரஸ்போல ஒரே குரலில் பதில் சொல்லுவார்கள் "எப்பப் புடிச்சி காத்துக்கிட்டு கிடக்கோம்? கொஞ்சம் கணக்குப் பண்ணிச் சொல்ல்லுங்களேன்."

"பொறுங்க, பொறுங்க, ஒவ்வொருவரா வாங்க.. உங்கிட்டே எவ்வளவு பாவக்காய் இருந்திச்சு? ஹமீதன்..? பதிமூணு சேர்.. என்ன விலைக்கு வித்தே..? நாலணாவா..? ஆமா, பதிமூணு நாலு அய்ம்பத்தி ரெண்டு.. 
அய்ம்பத்திரெண்டு அணான்னு சொன்னா மூணேகால் ரூபா.. பைசா எங்கே? ஆங் சரிதான். அப்புறம்.. நீ கொண்டுபோனது என்ன பரவலா..? இந்தாயா, உள்ளே ரஹீம் கிட்டே போய்க் காட்டுங்க. பார்த்தா தெரியலையா? எனக்கு இதற்கெல்லாம் நேரமில்லை இப்போ."

கணக்கு பார்த்து செல்லாக்காசா, நல்லதா என்று சோதித்து முடிக்கும்போது பொழுது சாய்ந்துவிடும். ரஹீம் வேலையை முடித்துக்கொண்டு வீட்டுக்குப் போகத் தயாராகிவிடுவான். "இவங்களுக்குத் துணையாப் போயிட்டிரு, ரஹீம், இருட்டுதுல்லே? நான் கொஞ்சம் அந்தப் பக்கமா போய்விட்டு வர்றேன்" என்பார். காய்கறிக்காரிகள் கூட ரஹீம் நடப்பான். காய்கறிக்காரப் பெண்மணிகள் தேனுஷாவின் மிட்டாய்க் கடையைப் பார்த்ததும் இரண்டு பைசாவுக்கு ஜிலேபியும், சீனிப்பாராவும் வாங்குவதிலேயே ஒருமணி நேரத்தைக் கடத்தி விடுவார்கள். ரஹீம் எல்லாரும் வரும் வரையில் சாலையோரத்தில் பொறுமையாக நின்று கொண்டிருப்பான்.

என்ன சொன்னாலும் ரஸூல் மியான் கடையில் பழுது பார்க்கப்பட்ட பொருள் உறுதியாக இருக்கும். எல்லாரும் தங்கள் பொருள்களை ரஸூல்மியான்தான் ரிப்பேர் செய்யவேண்டும் என்று விரும்புவார்கள். ஆனால் எல்லாரும் பொதுவாகச் சொல்லக்கூடிஅய் குறை இதுத்தான்.."ஆனா அவரு கடையிலே அடங்கி உட்காருவது எங்கே? 
அப்படியே உட்கார்ந்தாலும் பாதி வேலையை மகன் தலைலே கட்டிட்டி ஓடிப்போயிடுவாரு." ரஸூல்மியானின் நாக்குக்குக் காரம் அதிகம். மனசுக்குத் தோன்றுவதைப் பட்பட்டென்று பேசி விடுவார். அதனால் 
வாடிக்கையாளர்கள் அவர் கடைக்கு அதிகம் வருவதில்லை. ரஸூல்மியான் கடையில் வேலைக்கு இருந்த ரகு இப்பொழுது சொந்தமாகப் பட்டறை வைத்து நூற்றுக்கணக்கில் சம்பாதிக்கிறான். ஆனால் ரஸூல்மியான் உலகம் அன்று போலவே இப்போழுதும் மாறாமல் இருக்கிறது.

பதினோரு வருடங்களுக்கு முன்னால் என்று நினைக்கிறேன். ஸ்டவ் ரிப்பேர் செய்ய ரஸூல் மியான் கடைக்குப் போனேன். ஸ்டவ்வைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கிராமத்து ஆசாமி, நடுத்தர வயது இருக்கும். வந்து தொண்டை இடற முறையிட்டான்.. "நகையைத் திருப்பிக் கொடுக்க மாட்டேங்குறான்... இன்னும் வட்டி வேணுமாம்.."

இதைக் கேட்டதுமே ரஸூல்மியான் வேலையை பாதியில் விட்டுவிட்டு எழுந்தார். நான் இடைமறித்தேம்.. "அப்ப, ஸ்டவ்?"

"நாளைக்குப் பார்க்கிறேன்."

"அப்படீன்னா நான் ஸ்டவை எடுத்திட்டுப்போகிறேன்" - சற்றே சினத்துடன் கூறினேன். "கொண்டுபோ தாராளமா!" ரஸூல் வெடுக்கென்று பதிலளித்தார். "இங்கே ஒரு மனுசனுடைய மானம் கப்பலேறிக்கிட்டிருக்கு. இன்னொருவருக்கு தன் வேலைதான் பெரிசுன்னு படுது. இவருடைய பெண்ணுக்கு இன்னிக்கு கௌனா (முதலிரவு) நடக்கணும். நகை பணத்திலே நிற்கிறது. லேவா தேவிக்காரன் நகையைக் கொடுக்க 
மாட்டேங்குறான்.. நீ என்னடான்னா.."

நான் என்னுடைய ஸ்டவ்வைக் கையில் எடுத்துக்கொண்டேன். இனிமேல் ரஸூல் கடைக்கு வருவதில்லை என்று சபதமும் எடுத்துக்கொண்டேன். நானும் வரமாட்டேன், என் தோழர்களையும் வரவிட மாட்டேன், ஆமாம்!ஆனால் இன்று ரஸூல்மியானை நான் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளேன். சின்ன வயதில் நான் செய்த தவறான சபதத்துக்காக வருந்துகிறேன். இப்போது ஒரு பழைய சைக்கிளை பழுதுபார்க்கக் கொடுத்திருக்கிறேன். பதினைந்து நாளைக்குப் பிறகு கிராமத்துக்குத் திரும்பி வந்தேன். ஆனால், ரஸூல்மியானைக் காணவே முடிவதில்லை, அவர் வந்தால்தான் நடக்கும் என்று ரஹீம் சொல்லிவிட்டான். எப்பொழுதாவது ரஸூலைச் சந்திக்கிறேன். என் சைக்கிளை ரிப்பேர் செய்வதைவிட முக்கியமான எத்தனையோ வேலைகள் அவர் கையில் இருக்கின்றன என்பதையும் கவனிக்கிறேன்.

"பாவம் இந்த ஏழைப் பெண்கள் க்யூவிலே நின்னு துணி கிடைக்காமெ திண்டாடுது. இதுங்களுக்கு உதவ வேண்டும்" என்பார்.

இன்னொரு நாள் செல்கிறேன், ரஸூலைக் காணவில்லை. விபரம் தெரிய வருகிறது - கிராமத்தில் மலேரியா பரவி இருக்கிறது. குனைன் கிடைப்பதில்லை. மேஸ்திரி பச்சிலை மருந்தைக்கொண்டு கஷாயம் வைத்து கிராமத்தில் எல்லாருக்கும் கொடுக்கிறார்.

தினமும் இந்த மாதிரி சால்ஜாப்புகளைக் கேட்டுக்கொண்டு மௌனமாகத் திரும்புகிறேன். தினமும் அரச மரத்தில் அந்த விளம்பரப் பலகையைப் படிக்கிறேன் - 'ரஸூல் மேஸ்திரி - இங்கே பழுது பார்க்கப்படும்'. சாக்கட்டியினால் யாரோ ஒரு பொல்லாத சிறுவன் அதன் கீழே எழுதிய வாசகமும் கண்ணில் படுகிறது - 'இங்கே முதுகும் ரிப்பேர் செய்யப்படும்!' இந்த வாக்கியத்தை முழுமனதுடன் வழிமொழிந்தவாறு வீடு திரும்புகிறேன். சைக்கிள் இல்லாமல் எனக்கு எவ்வளவு இடைஞ்சல் என்பதையும் மறந்துவிடுகிறேன்.

(1946)

*

'பணீஷ்வர்நாத் ரேணு கதைகள்' தொகுப்பிலிருந்து.. 
தட்டச்சு ஆபிதீன்
நன்றி : நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா

Sunday, September 6, 2015

நான் அறியாதவனென்றா நினைக்கிறீர்? - இஸ்லாமிய நீதிக் கதை!

அற்புதமான கதை இது . போர்வை பாயிஸ் ஜிப்ரி எழுதிய 'இஸ்லாமிய நீதிக் கதைகள்' என்ற நூலிலிருந்து பகிர்கிறேன். நம்ம ஊர் ஆலிம்ஷாக்கள் இம்மாதிரி கதைகளைச் சொல்வார்கள் என்றா நினைக்கிறீர்கள்?
*
முதியவருக்கு தாகத்துக்கு நீர் கொடுத்த கதை :

நபி இபுராஹிம் (அலை) அவர்கள் பாலைவனத்தில் தனது கூடாரத்தில் பரிவாரங்களோடு அமர்ந்திருக்கிறார்கள். அப்போது கடும் வெய்யிலில் மேனியெல்லாம் புழுதி படிந்த நிலையில் ஒரு வயோதிகர் ஒட்டகத்தில் அமர்ந்தவராக கூடாரத்தை நெருங்கி, குடிப்பதற்கு நீர் கேட்கிறார். நபி இபுறாஹிம் அவர்கள் ஒரு குவளையில் நீர் கொடுக்கிறார்.

நீரைப் பெற்றுக்கொண்ட முதியவர் முதலில் தனது ஒட்டகத்திற்கு நீர் புகட்டிவிட்டு,  சூரியனை வணங்கும் மதத்தவரான அவர் தண்ணீரை கைகளில் ஊற்றி சூரியனுக்கு அபிஷேகம் செய்கிறார். இதனைக் கண்ட நபி இபுறாஹிம் அவர்கள் வயோதிகர் கையிலிருந்த தண்ணீர் குவளையைப் பறித்தெடுக்கிறார். அத்தோடு சூரியனுக்கு அபிஷேகம் பண்ணவா உனக்கு நீர் கொடுத்தேன் என அந்தக் கிழவரையும் கடிந்து கொள்கிறார்.

கைக்கெட்டியது வாய்க்கெட்டாத நிலையில் வயோதிகர் மனம் வெதும்புகிறார்.

அவ்வேளை அல்லா(ஹ்) வானவர் மீக்காயீல் மூலம் நபி இபுறாஹிமை கடிந்து கொள்கிறான்: 'ஏ! இபுறாஹிமே! உமது செயலை நான் கண்டிக்கிறேன். இத்தனை வருட காலமாக நான் உணவும், நீரும், அந்த மனிதருக்கு கொடுத்து வருகிறேனே, அந்த மனிதர் சூரியனை வணங்குபவர் என்பதை நான் அறியாதவனென்றா நினைக்கிறீர்? 
எனது அருட்கொடைகளிலிருந்து அந்த மனிதருக்கு உம்மால் ஒரு மிடறு தண்ணீர் கொடுக்க முடியவில்லையே. அந்த மனிதரின் தயாள குணத்தைப் பார்த்தீரா? தான் தாகத்துடன் இருந்தும் முதலில் தன் ஒட்டகைக்கல்லவா நீர் புகட்டினார்' என இறைவன் அறிவித்தான். உடன் நபி இபுறாஹிம் அவர்கள் அந்த மனிதரிடம் மன்னிப்புக்கோரி போதிய உணவும், நீரும் கொடுத்து வழியனுப்பிவைத்தார்கள்.

தன்னை வணங்குபவர்களுக்கும் மற்றும் எல்லா ஜீவராசிகளுக்கும் பாரபட்சம் காட்டாது உணவு வழங்கும் வல்ல இறைவனிடம் நபியவர்கள் மன்னிப்பை வேண்டி நின்றார்கள்.
*
*
நன்றி : போர்வை பாயிஸ் ஜிப்ரி & நூலகம்

Thursday, August 20, 2015

Amazing Abheri ! - L. Shankar

எல். சங்கரின் வயலின் அழும், விழும், எழும் , தொழும்! ((Tabla : Zakir Hussain , Ghatam : Vikku Vinayakram). 'The 2nd piece is 'wandering saint' by Shankar's Legend brother Dr. L Subramaniam in the album Beyond' - Murugappan Thirugnana. Thanks to : tarak. & Lalitha Nandini.
*


Wednesday, August 12, 2015

இசை : சூர்யகாயத்ரி

வரம்வாங்கி வந்திருக்கிறாள்!


1
Sooryagayathri & Kuldeep M Pai - Obeisance to Lord Ganesha

**

2

Sooryagayathri & Kuldeep M Pai - Obeisance to Goddess Mahalakshmi

**

Thanks to : Kuldeep M Pai , Vasu Balaji

Sunday, June 21, 2015

இசை : உத்தமர் உஸ்மான் (ரலி) பொன்மொழிகள்

இஸ்லாமிய அரசின் மூன்றாம் கலிஃபாவான உஸ்மான் (ரலி) அவர்களின் பொன்மொழிகளை இணைத்து தம்பி நாகூர் சகீர் ஹூஸைன் எழுதிய இந்தப் பாடல் அற்புதமானது. அதுவும் 'உயர்ந்த ஆடை அணிய நினைத்தால் கஃபனை எண்ணிப் பார் ; உயர்ந்த வீட்டில் வாழ நினைத்தால் கபுரை நினைத்துப் பார்' என்று கடைசியில் வரும் வரிகள் நம்மை உலுக்கி அழ வைத்துவிடும். இசையமைத்துப் பாடிய சகோதரர் A.T. ஷெரீபும் தன் பங்குக்கு அந்த வரிகளை கனத்தோடு இருமுறை சொல்கிறார். வாழ்க. ஆனால் , குர்ஆன் என்று அழகாகச் சொல்லாமல் கம்பீரம் என்று நினைத்துக்கொண்டு 'கெர்ஆவ்ன்' என்று கொட்டாவி விடுவதை மட்டும் அவர் குறைத்துக்கொண்டால் கேட்பதற்கு இன்னும் இதமாக இருக்கும். நல்லது, ஆண்டிற்கு ஒருமுறைதான் இம்மாதிரி ஆன்மிகப் பதிவு போட முடிகிறது (விளக்கம் : பாடலில்!).  இருவருக்கும் இறைவன் நற்பேறு அளிப்பானாக, ஆமீன்.

*


பாடல் வரிகள் :


சுபசோபனம் உரைத்தார் நபிகள் நாயகம்
சுவனத்தில் என் தோழர் உத்தமர் உஸ்மான்
குர்ஆனைத் தொகுத்தவர் நாஸிருல் ஃபுர்க்கான்
அமீருல் மூஃமினின் ஹஜ்ரத் உஸ்மான் கனி

இனிமையான குணமும் வசீகரப் பேழகும்
அமைதியும் அடக்கமும் உறுதியும் ஈகையும்
வானவர்கள் நாணமுறும் மென்மையானவர்

சுபசோபனம் உரைத்தார் நபிகள் நாயகம்
சுவனத்தில் என் தோழர் உத்தமர் உஸ்மான்

கூர்மையான வாளின் வீச்சு உடலைக் காயமாக்கும்
கூறும் தீய வார்த்தைகள் உயிரைக் காயமாக்கும்
கால்கள் சருகினாலும் நாவு தவறக்கூடாது
- இது போன்ற பொன்மொழிகள் உலக மாந்தர்க்கு
உறுதியோடு சொன்னார்கள் முஸ்ஹபு உஸ்மான்
உறுதியோடு சொன்னார்கள் முஸ்ஹபு உஸ்மான்

ஆண்டிற்கு ஒரு முறையேனும் துன்பம் வரல்லையெனில்
அவனை விட்டு அல்லாஹ் விலகி விட்டான் என்று
உறுதியோடு சொன்னார்கள் உஸ்மான் கனி
உறுதியோடு சொன்னார்கள் உஸ்மான் கனி

உயர்ந்த ஆடை அணிய நினைத்தால் கஃபனை எண்ணிப் பார்
உயர்ந்த வீட்டில் வாழ நினைத்தால் கபுரை நினைத்துப் பார்
மண்ணுக்கு இரையாகும் மனிதா - நீ
சுவையை மறந்திடு

இது போன்ற பொன்மொழிகள் உலக மாந்தர்க்கு
இதமாக எடுத்துரைத்தார் முஸ்ஹபு உஸ்மான்
இதமாக எடுத்துரைத்தார் உஸ்மான் கனி

சுபசோபனம் உரைத்தார் நபிகள் நாயகம்
சுவனத்தில் என் தோழர் உத்தமர் உஸ்மான்
*


நன்றி : நாகூர் கவிஞர் சகீர் ஹூசைன்

Saturday, June 20, 2015

ருசிக்காலம் - ஆபிதீன்

என்னே இறைவனின் கருணை!    ரமலான் முதல்நாளன்று என்னுடைய வேர்ட்பிரஸ் 'ஆபிதீன் பக்கங்கள்' பக்கத்தை முற்றிலும் அழித்து விட்டான்! ஒன்பது வருட உழைப்பு...  எத்தனை ஆயிரம் லிங்க்'குகள்... முக்கியமான PDF கள்...  ஒருவேளை, அங்குள்ள சிலரின் (தாஜ் அல்ல!) கவிதைகளைப் படித்துவிட்டு யாராவது கம்ப்ளைண்ட் செய்துவிட்டார்களா? காரணம் தெரியவில்லை.  ஹூம்ம்... இனி ஒவ்வொன்றாக அங்கிருந்தவற்றை இங்கே கடத்த வேண்டி...
...

அட,   என்ன அதிசயம்!  என் வேண்டுகோளுக்கு உடனே பதில் வருகிறது வேர்ட்பிரஸ்ஸ்லிருந்து,  'Hi Abedeen, Your site was flagged by our automated anti-spam controls. We have reviewed your site and removed the suspension notice.'  என்று....

நன்றிங்க, இருந்தாலும் இங்கேயும் போடுறேன். தீனுக்காக, மன்னிக்கவும், தீனிக்காக வாழும் இந்த துனியாவில் யாரையும் நம்ப இயலாது - இறைவனைத் தவிர!

இனி வருவது ருசிக்காலம்...

***

’பாம்பு புடிக்கிறத விட நோம்பு புடிக்கிறது ஈஸி’ என்று என் செல்லமகனுக்கு சொல்வதுபோல - கடித வடிவில் - ஒன்று தயார் செய்திருந்தேன் , ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு.  தலநோன்பு (முதல் நோன்பு) பிடிக்கிறேன் என்று தானும் தவித்து எங்களையும் அவன் தவிக்க விட்டுக்கொண்டிருந்த சமயம் அது. அப்புறம் மறந்து விட்டது. ’அன்னம் ஒடுங்கினால் அஞ்சும் ஒடுங்கும்’ என்ற தலைப்பில் அஹ்மது மீரான் ஃபைஜி எழுதிய கட்டுரையை நேற்றிரவு படித்தபோது கடிதம் ஞாபகம் வந்தது. தேடி எடுத்து பதிவிடுகிறேன். ஓவராக இலக்கியம் கற்ற அன்பர்கள் உபதேசம் செய்து தொல்லை கொடுப்பதால் அந்தக் கடிதத்தில் இருந்த சில வார்த்தைகளை அடித்துவிட்டேன், போதுமா? எப்படிலாம் பயமுறுத்துறாஹா! ரமலான் (வரும்) நேரத்தில் வீண் விளையாட்டு, சிரிப்பு, நையாண்டி என நேரத்தை வீணாக்கும் கும்பலில் நான் சேர்வதே இல்லை. தெரியும்தானே?

***

அன்புள்ள மகனார் அனீஸுக்கு,

ரமலான் முபாரக்.

ஆசிகளுடன் வாப்பா எழுதிக் கொண்டது. உனது மற்றும் உம்மா, லாத்தா , இன்னாச்சிமா ஆகியோரின் நலமறிய ஆவலாக இருக்கிறேன். அத்துடன் நமது வீட்டிலுள்ள கண்ணாடி மீன்தொட்டியில் உள்ள கலர் மீன்களின் நலத்தையும் எழுதவும். சென்றமாதம் , உனக்கும் லாத்தாவுக்கும் அனுப்பிய விலை உயர்ந்த வாட்சுகள் (நாலு திர்ஹம்) கொடுப்பதற்காக நம் வீட்டிற்கு வந்த என் நண்பர் , உங்கள் வீட்டில் உள்ள மீன் தொட்டியில் தண்ணீரைவிட மீன்கள் அதிகமாக இருக்கின்றன என்று கடிதம் எழுதியிருந்தார்.

நம் சோத்தூர் யானையை விட்டுவிட்டேனே... மறக்காமல் எழுதவும். யானை பார்ப்பதென்றால் எனக்கு எவ்வளவு பிரியம் என்பதும் வழக்கமாக நோன்புப் பெருநாள் விடுமுறையில் ஊர்வரும் நான் , தர்ஹா முன் நிற்கும் யானையை அலுக்காமல் பார்த்தவாறு 'கவிக்கோ'வின் குருடர்களின் யானை என்ற  கவிதையை முணுமுணுப்பதும் உனக்குத் தெரியும். தெரியாதது ஒன்றுண்டு. உன் வாப்பா முதலில் எழுதிய கவிதையே யானை பற்றிதான். யுகயுகமாய் எரிகோளம் என்னின் அரையடிக்கு மேலே என்று தொடங்கும் அந்த கவிதை , யானைகள் மட்டுமே படிக்க முடிகிற ஒரு சிற்றிதழில் வெளிவந்தது.

பிறந்ததிலிருந்து நம்மூர் யானைகளைப் பார்த்து வருகிறேன். குளிக்கப்போய் , கானாமப் போச்சு என்று ஊரையே கலங்கடித்த முதல் யானையிலிருந்து  (ஊர் மரைக்கார்களெல்லாம் தங்கள் சட்டை ஜோப்பை உற்றுப் பார்த்துக் கொண்டார்கள் அப்போது) ஒரு சர்க்கஸ் ஒட்டகத்திற்கு பயந்து ஓட்டமெடுத்த இப்போதைய மூன்றாம் யானை வரை. கூடவே, அவைகளைப் பிச்சையெடுக்கவைக்கும் தர்ஹா டிரஸ்டிகளின் நலன்களையும்.

நானும் இங்கு நலம். அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் அப்படித்தான் கூற வேண்டும். உன் பாட்டனார் ஹஸனப்பா மலேசியாவிலிருந்து எங்களுக்கு அந்த காலத்தில் அப்படித்தான் எழுதிக் கொண்டிருந்தார்கள். நீயும் குடும்பத்தை விட்டு எங்கோ போய் அப்படி எழுதுபவனாக ஆகிவிடக் கூடாது என்ற அக்கறையில் நான் எழுதும் சில கடிதங்களை , இந்த வாப்பா சுத்த போர்.. பெருசு பெருசா எழுதுறாஹா என்று சொல்லிக் கிழித்து விடுகிறாய் என்று உன் உம்மா எழுதியிருந்த கடிதத்தை நான் கிழித்துப் போட்டு விட்டேன்.

ஆனாலும் நான் உபதேசிப்பதை நிறுத்திவிடக் கூடாது என்று தோன்றுகிறது. இப்போது உனக்கு வெறும் பத்து வயதுதான் ஆகிறது. இப்போது வளையாமல் எப்போது வளையப்போகிறாய்.

நீ வளைவதெல்லாம் நடனத்திற்காக அல்லவா. சென்ற வருடம் நான் விடுமுறையில் வந்திருந்தபோது , ஸ்கூல் ஆண்டுவிழாவிற்காக நீ ரிகர்ஸல் எடுத்த பாட்டை இப்போது நினைத்தாலும் நடுக்கம் வருகிறது. ஒத்த ரூவா சைஸில் ஒரு மேட்டர் இருக்கு என்ற பாட்டுக்கு நீ உன் வகுப்பு குட்டிப்பெண்ணுடன் ஆடப்போவதாகச் சொன்னாய்.  நான் உன் பள்ளி வகுப்பாசிரியையிடம் சென்று இந்த பாட்டு வேணாம் வல்கராக இருக்கிறது என்று சொன்னதற்கு , அப்ப..வெத்தலைக்கு சுண்ணாம்பு வக்கிற பாட்டு கொடுக்குறேன் சார் என்று அவள் அப்பாவியாகச் சொன்னாள்.

கடைசியில் அந்த பாட்டுக்குத்தான் ஆடியதாகக் கேள்விப்பட்டேன். இதில் உன்னைக் குற்றம் சொல்ல ஏதுமில்லை. தேர்ந்தெடுத்த, நடன அசைவுகளை கற்றுத்தந்த  உன் ஆசிரியைகளின் தவறென்றும் சொல்ல முடியாதுதான்...

கதை எழுதுவது போல எதையோ சொல்வதற்கு எங்கோ போகிறேன். இந்த கடிதம் நான் எழுத ஆரம்பித்தது வேறு ஒரு முக்கியமான விஷயத்துக்காக. நோன்பு மாதம் வரப் போகிறது என் செல்ல மகனே... அதைச் சொல்லத்தான் இந்த மடல். இந்த வருடம் நீ கண்டிப்பாக தலைநோன்பாவது பிடித்தாக வேண்டும். வயது வந்த பிள்ளைகளுக்குத்தான் நோன்பு கடமையென்றாலும் அதற்கு தயாராக முன்பே சொல்லிவைப்பது வழக்கம்தான். இதை ஒழுங்காகப் பிடித்தால் அடுத்தடுத்த வருடம் எல்லா நோன்புகளையும் உன்னால் பிடிக்க முடியும். இல்லாவிட்டால் அது ஓடி விடும்.

எனக்கு எடுத்துச் சொல்ல உன் பாட்டானாருக்கு வழியில்லை. அவர்கள் ஐந்தாறு வருடங்களுக்கு ஒருமுறைதான் ஊருக்கு வருவார்கள். ஊருக்கு வந்தாலும் தொழுவதும் இல்லை. ஜூம்-ஆக்கு மட்டும் வருவார்கள். ஆனால் அங்கே வந்து தலையை தொங்கப் போட்டு குத்பா பிரசங்கத்தை கேட்டுக் கொண்டிருப்பார்கள். அப்போதே தூக்கத்தில் தலை ஆடி ஆடி விழும். மலேயாவில் இப்படித்தான் தொழுவார்கள் போலும் என்ற நினைப்புடனேயே நான் அடிக்கடி திரும்பிப் பார்த்துக் கொண்டு என் தொழுகையை முடிப்பதுண்டு.

இந்த வாப்பாக்கு தொலுவவே தெரியலே போலக்கிது என்று குறைபடாதே. நான் எவ்வளவோ பரவாயில்லை. என் நண்பன் அஹ்மது மரைக்கான் , தொழும்போது தனக்கு முன்னால் - சுஜூதில் - குனிந்திருப்பவரின் கைலி வில்லங்கமான இடத்தில் கிழிந்திருப்பதைப் பார்த்து தன் கையால் அதை பொத்தினான். அந்த ஆள் ஊருக்குப் புதிது. இந்த ஊரில் இப்படித்தான் தொழுவார்கள் போலும் என்று தனக்கு முன்னால் குனிந்திருந்த , யாழ்ப்பாணம் தேங்காயை விடப் பெரிதான , இமாமின் 'தேங்கா'வை மெல்லப் பொத்த , துள்ளிக் குதித்து அவர் ஓடியது சுவாரஸ்யமான கதை. ஊர் வரும்போது விரிவாகச் சொல்கி... இல்லை, சில விஷயங்களை இப்போது நாம் பேசக் கூடாது. நீ என் தோள் உயரத்திற்கு வளர்ந்து தோழனான பிறகு சொல்கிறேன் - நீ கேட்டால்.

இந்தக் கடிதம் உபவாச நன்மை சொல்ல மட்டுமே.

என்னை நோன்பு பிடிக்க வைத்தது எனது தாயார், உன் பாட்டியா முத்தாச்சிதான். அவர்களும் திராவியா தொழுகைக்கு மட்டும்தான் ராவியத்தும்மா வீட்டுக்கு தோழிகளோடு போய் வருவார்கள் (இப்போதுதான் சங்கத்துப் பள்ளியில் திராவியா நடக்கிறது) . நீ தொழுவுக்கூட வாணாம்டா. சீராணி மட்டும் வாங்கிட்டு வந்துடு. பெரிய பெரிய ரஸ்தாலி பழம்டா.. என்பார்கள். திராவியா முடித்துவிட்டு உம்மா வரும்வரை பிள்ளைகள் நாங்கள் சுட்டாங்கி விளையாடிக் கொண்டிருப்போம். பேய்க்கதைகள் சொல்லிக் கொண்டிருப்போம். நோன்பு மாசத்தில் மட்டும் ஷைத்தான்களை அல்லா கட்டிவைத்து விடுவானாதலால் எங்களுக்கு பயமாக இருக்காது. ** வலிக்க வலிக்க இருட்டில் உம்மா-வாப்பா விளையாட்டு விளையாடுவோம்.* என் தோழிகளுக்கு சந்தோஷம் தாங்காது.

சீராணி வாங்கி முடித்ததும் காட்டுப் பள்ளிக்குப் போய் அங்கேயும் சீராணி. அதே வாழைப்பழம்தான்.  ஆனால் பூவன். எதுவானால் என்ன , சஹரில் , உறைத்த தயிரை சோற்றில் போட்டு , நிறைய சீணியும் போட்டு, அப்படியே பழங்களையும் பால்கோவாவையும் பிசைந்து தின்றால் வரும் ருசியே அலாதிதான். உருசைண்டா அதுதான் உருசை. சுள்ளாப்பு வேண்டுமானால் பொறித்த அல்லது பெரட்டிய கறி சேர்த்துக் கொள்ள வேண்டும். அம்மாதிரி சஹர் நேரம் இனி கனவு கண்டால் கூட வராது இங்கே.  ரசூலுல்லா புகழும், ரமலானனின் பெருமையும் பாடிக் கொண்டு தப்ஸ் அடித்தபடியே வரும் சஹர்பாவாக்களை இங்கே எப்படி காண்பது. நானே ஒரு பாவா அல்லவா.

என் நிலையை சொல்லி ஒன்றும் ஆகப் போவதில்லை உனக்கு. நீ ஒரு நல்ல வணக்கசாலியாக இருந்தால் உன் துஆக்களின்  வலிமையாலாவது துப்புகெட்ட எனக்கு நல்ல காலம் வராதா என்றுதான் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். படி நன்றாக. அவ்வளவுதான். மற்றபடி....இஸ்லாமியக் கடமைகள், அது சம்பந்தமான ஆயத்துகள் , நிறைவேற்றாவிட்டால் கிடைக்கும் நரகத்து தண்டனைகள் என்று உன்னை இப்போது ரொம்பவும் பயமுறுத்தப் போவதில்லை. போகப் போக நீயே பயந்து கொள்வாய். இப்போது வாப்பா சொல்வதைக் கேள்.

கடந்த இரண்டு வருடமாக நீ தலைநோன்பை அற்ப விஷயத்துக்காக விடுவது எனக்கு சரியாகப் படவில்லை. என் உம்மாவெல்லாம் எனது தலைநோன்பில் நான் எச்சில் முழுங்கியதற்காக ஏறி மிதித்தார்கள். மிதித்த மிதியில் வாந்தி வந்தது. அதுவும் கூடாதாம். முதல் தலைநோன்பில்தான் அப்படி தவறு செய்தேன். அடுத்த வருடம் என் ஸ்கூல் மேட் அப்துல்லா , ஒண்ணும் தெரியாதுடா...மறந்த மாதிரி திண்டுபுடனும் என்று , எச்சில் ஊற வைக்கும் எலந்தவடை கொடுத்து (காலையில் வரும்போதே அவன் சேதுராமாஐயர் கடையில் மாவுதோசை தின்றிருந்தான்) எவ்வளவோ முயற்சித்தும் நான் மசியவில்லை. பசியை அடக்கிக் கொண்டேன். தர்ஹா குண்டு போட்டதும் தலைநோன்பு திறக்க வகை வகையான பசியாற காத்திருந்தது. ஜாலூர் பராட்டாவும் லாப்பையும் தொட்டுக் கொள்ள இறைச்சி ஆனமும், வட்டலப்பமும்..... உயிர் கொடுப்பது தண்ணீர்தானென்று போட்டு மாட்டிய எல்லோரும் கடைசியில் சொன்னார்கள்.

நோன்பின் கட்டுப்பாடு என்பது நாம் சாப்பிடாமல் இருப்பது மட்டுமல்ல; மற்றவர்கள் சாப்பிடுவதைப் பார்த்து ஆசைப்படாமல் இருப்பதும்தான். அரபு நாடுகளில் ஏனோ இதை யோசிப்பதில்லை. சௌதியில்,  சகோதர மதத்தவர்களெல்லாம் நோன்பு நேரத்தில் வெளியில் சாப்பிடக் கூடாது; முத்தவாக்கள் சாட்டையால் அடிப்பார்கள். சில ஹோட்டல்கள் மட்டும் அந்த சகோதரர்களுக்கு பார்சல் சர்வீஸ் செய்யும் - வீட்டில் போய் சாப்பிட்டுக் கொள்ள. துபாய் அப்படி அல்ல. ரொம்பவும் கெட்டுப் போய் விட்டது. போகிற போக்கைப் பார்த்தால் நோன்பு நேரத்தில் நம்மைப் போன்ற அசல் முஸ்லீம்கள் வெளியில் சாப்பிடாவிட்டால் சாட்டையால் அடிப்பார்கள் போலிருக்கிறது.

பசியை அடக்குவது பற்றிச் சொன்னேன். அதற்கு மறுமையில் அல்லாஹ் கொடுக்கும் நன்மைகளை இருக்கட்டும். இம்மையிலேயே ஊரும் வீடும் கொடுக்கும் வெகுமதிகளை நினைத்துப் பார். எத்தனை விதவிதமான திண்பண்டங்கள், சாப்பாடு வகைகள்... நோன்பு வந்ததுமே முட்டை ஊற்றிய மஞ்சஆப்பமும் அதற்குத் தொட்டுக் கொள்ள கீரை பொருமாவும் வந்து விடுகிறது. ஊரெங்கும் இறால் போட்ட வாடா வாசம். குளிர்ச்சி தரும் கடப்பாசியை வண்ணவண்ணமாக காய்ச்சி ஊற்றிக் கொண்டிருக்கிறார்கள். பள்ளிவாசல்கள் எல்லாம் ஆட்டுத் தலைக்கறி போட்ட கஞ்சியில் மூழ்கிறது. மண்சட்டியில் ஊற்றிய சாதாரண நோன்புக் கஞ்சியானாலும் அதில் சமோசாவோ  சுண்டலோ போட்டால்தான் நோன்பு திறந்த வாய்க்கு ஒனவா இக்கிது. அதுதான் நோன்பாளிகளினுடைய சந்தன வாயை மேலும் மணக்க வக்கிது.

நான் இங்கு தங்கியிருக்கும் இடத்திலுள்ள பள்ளி அப்படியல்ல. மிகவும் சிஸ்டமடிக்காக செய்வார்கள். ஆளுக்கு ஒரு பேரீச்சம் பழம்.

'கீமான்' என்ற காக்கா கழகம் தடபுடலாக செய்கிறதுதான். ஆனால் ஒவ்வொரு பருக்கையிலும் இறைவனின் பெயருக்குப் பதிலாக தன் பெயரை அது போட்டுக் கொண்டு அலம்பல் செய்வதால் எனக்குப் பிடிப்பதில்லை.

இந்த தொந்தரவு வேண்டாமென்று , எந்த ஷேகா வீட்டில், பள்ளிகளில் பக்கா பிரியாணியும் ஹரீஷூம்ம் தக்குவா பண்டங்களும் கிடைக்குமோ அங்கே வண்டி எடுத்துக் கொண்டு போய் அமுக்கும் பகாசுரர்களுடன் இணைந்து கொள்வதுண்டு. அல்லது அரசாங்கக் கேரவான்களில் நுழைந்து மாட்டு மாட்டென்று - அநியாய விரயம் செய்வது எனக்குப் பிடிக்காததால் - மாட்டுவதுண்டு. அல்லது வேலையாகப் போகும் இடத்தில் , மூணு மடங்கு விற்பனை கூடிய சூப்பர் மார்கெட்களில் முடிப்பதுண்டு. அது பாயின் கடைதானா என்றெல்லாம் பார்ப்பதில்லை. பசிக்கும் நேரத்தில் கிடைக்கும் இரையைக் கொடுப்பது இறையென்று அறி என் மகனே...

எங்கள் கம்பெனி பட்டான் டிரைவர் மக்பூல் என்னிடம் மிகவும் குறைபட்டுக் கொண்டான் ஒருநாள் : இஃப்தார் சமயத்திலே போயும் போயும் ஒரு கா·பிர் - அந்த சிவ பர்பாத்-  எனக்கு ஆப்பிள் கொடுக்குறான்...

சிவப்ரஷாத்தைத்தான் அப்படி சொல்கிறான். பெயர்களை மாற்றிச் சொல்வது மக்குபூலின் வழக்கம் - என்னமோ இவன் பெயர் மஹா அழகு போல.

பட்டானின் இஸ்லாமிய பக்தியை நான் மெச்சுவேனாம். கம்பெனியில் இருக்கிற ஒரே ஒரு அடுத்த மதத்தவனையும் விரட்டி விட்டால் இன்னொரு மொம்மது முடிகான் வந்து சேர்வான். அந்தக் கொடுமை வேண்டாம். பாவம்...சிவப்ரஷாத் அப்பாவி. இன்று பிறை எத்தனை என்று சாதாரணமாக மேலாளர் ஒருநாள்  கேட்டதற்கு அவன் மிகவும் குழம்பிப்போய் அலுவலகத்துக்கு வெளியில் போய் நின்று ரொம்ப நேரம் வானத்தைப் பார்த்துக் கொண்டு ம்....சாந் ஏக்கி ஹைநா.. என்று குழம்பிப் போய் நின்றிருந்தான்.

பிறை பார்ப்பதில் நமக்கிருக்கும் பெரும் பிரச்சனைகளைச் சொன்னால் ஒருவேளை அவன் புரிந்து கொள்ளக் கூடும்தான். ஆனால் அப்போது சந்திரன் என்ற கிரகமே இருக்காது.

கொடுத்தால் என்னவாம்  என்று கேட்டதற்கு அந்தப் பட்டான் நான் இஸ்லாத்தின் விரோதி என்று கம்பெனி ஆட்களிடம் சொல்லிக்கொண்டு அலைகிறான். என் அரபியிடமும் சொன்னான். அவர் எனக்கு சம்பளம் கூடப் போட்டுக் கொடுத்தார்.

’தஅபான்’ என்று பட்டானை திட்டக்கூட செய்தாரே...

இந்த மாதத்தில் நன்மை செய்தால்தான் உண்டு. 1 X 70

அனீஸ், என் செல்ல மகனே , அந்தப் பட்டானைப் போல் நீ ஆகிவிடக் கூடாது. லகும் தீனுகும் வலிய தீன். இதன் அர்த்தத்தை , ஓதிக்கொடுக்க வந்து உன்னைக் காணாமல் ஒவ்வொரு நாளும் ஓடும் உம்மாத்தாவிடம் கேள். அதேசமயம் , இனிய இ·ப்தார்  நிகழ்ச்சி என்று பெரிய பெரிய போஸ்டர்கள் அச்சடித்து கைய்னாநதி, செய்லதாவெல்லாம் முசல்மான்களை அழைத்து திராவிடக் கஞ்சை திகட்டாமலூட்டி மகிழ்வதையும் முசல்களும் மான்களும் அவர்களை பதிலுக்கு அழைத்து தொப்பிக்கு மேல் தொப்பி போட்டு தோழமை கொள்வதையும் ஒரே கண்ணோடு ஜாக்கிரதையாகப் பார். அதற்காக நோன்பு திறக்க கோயிலுக்கோ சர்ச்சுக்கோ போவேனென்று அடம் பிடிக்காதே. எட்டென்றும் இருபதென்றும் ஏகத்திற்கு அடித்துக் கொண்டாலும் நலமிகு பள்ளி நம் பள்ளிதான் - ஆலிம்ஷாக்கள் சொல்கிறார்கள்.

எட்டு-இருபது (ரக்அத்) பேதமைகள் எனக்கு கிடையாது. ஒற்றுமை வேண்டி , பக்கத்தில் உள்ள எந்தப் பள்ளிக்கும் போவேன்- ஷியா பள்ளி தவிர.  ஆனால் ரமலானுக்குள் இறைவேதத்தை முழுக்க முடித்து விடவேண்டுமென்று புல்லட் ட்ரெயினை வாயில் ஓடவிட்டு ஓதும் பள்ளிகளில் மட்டும் தொழ முடிவதில்லை. நீண்ட நேரம் நின்றால் ஹைட்ரஸில் தொந்தரவு. இரண்டு பக்கத்திற்கு மேல் பண்ண வழியும் இல்லை. எனவே அப்படி சூழல் வந்தால் அறையிலேயே தொழுது விடுவது வழக்கம். எட்டுக்குக் குறையாத என் தொழுகை எட்டட்டுமாக, ஆமீன்.

மறுபடியும் எங்கோ போகிறேன். திராவியா தொழுகையெல்லாம் இருக்கட்டும். நோன்பு பிடிக்க கற்றுக்கொள். போன முறை உனது தலைநோன்பு நடுப்பகல் வரை தாக்குப் பிடித்ததாம்.  ஸ்கூலிலிருந்து திரும்பும்போதே பூனை போல மோப்பம் பிடித்துக் கொண்டு உம்மாவ்... எனக்கு டென் உல்லான்ஸ் என்று ஆர்டர் போட்டிருக்கிறாய் ஜோராக.

படுவா, நோன்புடா நீ.. சாயந்தரம் தொறக்கறதுக்குத்தானே செஞ்சிக்கிட்டிக்கிறேன்

எனக்கு இப்பவே தொறக்கனும்டி - பசியில் கத்தியிருக்கிறாய்.

வேறு வழியில்லாமல் சாவி கொடுத்த பாவத்தை அன்று உம்மாவும் உல்லானும் பங்கு போட்டுக் கொண்டார்கள். உன் லாத்தா எவ்வளவு பொறுமையாக அவளது தலைநோன்பின்போது இருந்தவள் - யாருக்கும் தெரியாமல் பிசின் போட்ட ரூஹாப்ஜா குடித்துக்கொண்டு. வாப்பாவெ அப்படியே உரிச்சி வச்சிக்கிறா என்று தெரியாமலா அவளைச் சொல்கிறார்கள்.

இந்த சாமர்த்தியங்களெல்லாம் வேண்டாம். ஏற்கனவே மேலத்தெருக்காரர்கள் நம் பக்கத்தில் தரிபியத் கிடையாது என்று ஏளனம் செய்கிறார்கள். இப்படிப்பட்ட இபாதத் திலகங்கள் நோன்பு முடிந்ததும் இம்மியும் மாறாமல் பழைய அதபு கெட்ட வேலைகளையெல்லாம் தைரியமாகச் செய்தால் நமக்கென்ன. இறைவேதம் அருளப்பட்ட  இனிய மாதமாவது இறைவனுக்கு பயந்து , மனிதனை நினைவு கூறச் சொல்லும் அற்புதக் கடமையான ஜகாத்ஐ  பசித்த ஏழைகளின் கண்ணில் காட்டுகிறார்களா இல்லையா. காட்டுவது சரியான கணக்கா என்று கேட்காதே.

முதலில் நீ தலைநோன்பு ஒழுங்காகப் பிடி. அது விரைவில் முழுமையடையும். இத்தனை கலவரங்களுக்குப் பிறகும் நம்மை உயிரோடு வைத்திருக்கிற அல்லாஹ்வுக்கு சுக்ர் செய்ய வேண்டாமா. வருடம் முழுக்க விதவிதமான பெயர்களில் நோன்பு பிடிக்கவோ அல்லது முக்கியமான நோன்பு மட்டும் ரமலானில் பிடித்தால் போதும் என்று சில ஆன்மீக அசிங்கங்கள் சொல்வது போலவோ செய்யத் தேவையில்லை. தலைநோன்பை 27-ம் கிழமை பிடித்தாலும் சிறப்புதான் என்றார் கோட்டபள்ளி ஆலிம்ஷா - சென்ற வருட விசேஷத்தின்போது. நீண்ட ’பயான்’ (பிரசங்கம்) செய்துமுடித்து , மைக்-ஐ ஆஃப் செய்யாமலேயே, ‘அப்பாடா..இன்னும் 3 நாள்தான் இருக்கு’ என்ற அவரது நிம்மதிப் பெருமூச்சு குறிப்பிட வேண்டியது.

சரி, நம் கொழுப்பைக் குறைக்கும் ரமலானால் உடல் இளைத்துவிடும் என்று கவலை உனக்கு வேண்டாம். பஞ்சம் , போர் என்று வதைபடும் இஸ்லாமிய நாடுகளைத்தவிர புனித ரமலானில் பசியால் ஒரு இஸ்லாமியன் கூட செத்ததில்லை. தைரியமாக ஒரு பிடி பிடி. உலக முஸ்லீம்களின் எடையும் தேஜஸும் கூடும் உன்னத மாதம் இது.

பதில் எழுதும்போது நம்மூர் யானை பற்றி எழுத கண்டிப்பாக மறக்காதே. சென்ற வருடம் , கண் கோளாறுக்காக ஊர்வந்து டாக்டர் யானகுட்டி ராவுத்தரைப் பார்த்தபோது சோத்தூர் யானை ஏன் இளைச்ச மாதிரி தெரியுது என்று கேட்டேன். மரைக்கா.. ஒம்ம கண்ணுலெ கோளாறே இல்லங்கனி என்றார் அவர்.

பிளிறலுடன்,

ஆபி வாப்பா | abedheen@gmail.com

***

*

போனஸ் 1 :

பிறையே பேசு ! - புலவர் ஆபிதீன்

பகலெல்லாம் பட்டினியாய்ப் படுத்துமிகத் தூங்கிவிட்டுப்
பண்பான நோன்பனைத்தும் பக்தியுடன் நோற்றதுவாய்
இகல்தாங்கிப் பேசுகின்ற இழிமாந்தர் தம்கூற்றை
இருணீக்கும் இன்னொளியே இளமதியே பார்த்தாயா?

சகியாமல் பசிக்கொடுமை சாப்பாடு தின்றுதின்று
சலியாது உடல்வளர்ப்பர் சற்றேனும் வெட்கமிலர்
முகிலாடை போர்த்தொளிந்து மெல்லவெளி வந்ததிரு
முழுமதியே தண்சுடரே மென்கதிரே பார்த்தாயா?

தொழுவதிலை ஏழைவரி தருவதிலை என்றாலும்
துணிமணியில் வெளிப்பகட்டில் தொங்குதவர் சன்மார்க்கம்
புழுதியுடை வாள்போலப் பூவைப்புரு வம்போலப்
புதிர்கொண்டு வளைவடிவே புதுப்பிறையே பார்த்தாயா?

பெருநாளை மட்டுமவர் பெருமைக்குக் கொண்டாடப்
புறப்பட்டார் சொகுசாகப் பள்ளிக்குக் காலிழுக்க
வருமின்பத் தென்றலுக்கு வழிகாட்டும் வட்டுருவே
வளர்ந்தேறு வென்ணிலவே வான்விளக்கே பார்த்தாயா?

உனதந்த லோகத்தில் உண்டோசொல் இத்தகைய
உரிமைகள் கொண்டாடும் உத்தமர்கள் பாதகர்கள்
எனதிந்த வையத்தில் எத்தனையோ எண்ணரிது
எழிலூட்டும் வெண்ணமுதே எம்பிறையே பார்த்தாயா?


('அழகின் முன் அறிவு' தொகுப்பிலிருந்து)

*
போனஸ் 2 :

2. யானைகளுடன் பேசுபவன் - அருணகிரி / சொல்வனம்
http://solvanam.com/?p=15916
*

வேர்ட்பிரஸ் பதிவு / கமெண்ட்களைப் பார்க்க :
https://abedheen.wordpress.com/2011/07/30/letter-ramalan/

Saturday, April 4, 2015

ஈரானிலிருந்து வரும் இசைக் காற்று

ஈரானிய சினிமாக்களை தொடர்ந்து பார்த்துவரும் நண்பர் கார்த்திக், பார்ஸி மொழியே கேட்பதற்கு இனிமையாக இருக்க இசை எப்படி இருக்கும் என்று தேடி, Rastak  எனும் ஈரானிய நாட்டுப்புற இசைக்குழுவின் நௌரோஸ் ( نوروز‎ ) - பாடலைப் பிடித்து கூகுள் ப்ளஸ்-ல் பகிர்ந்திருந்தார். செவிடனான என்னையே அது பரவசப்படுத்தியது. கேளுங்கள். Thanks to : iraninfo
*


Thursday, March 19, 2015

தனுவும் நிஷாவும் - சுந்தர ராமசாமி சிறுகதை

தாங்கள் ஆரம்பிக்க இருக்கும் புது கம்பெனியை நான் தான் திறந்து வைக்க வேண்டுமென்று திடீரென்று தனுவும், குட்டி நிஷி என்ற செல்லப் பெயரில் அழைக்கப்படும் நிஷாவும் என்னைக் கேட்டுக்கொண்டார்கள். அவர்கள் கிரான்பா என்றுதான் என்னை அழைப்பார்கள். தமிழோ, இங்கிலீஷோ தாத்தா என்று அழைப்பதைவிட எனக்குப் பிடித்திருந்தது. தாத்தா என்று அழைக்கிறபோது எனக்கு பொக்கை வாய் - உண்மையில் அப்படியில்லை - இருப்பது போன்ற எண்ணம், கிரான்பா என்று அழைக்கிறபோது ஏற்படுவது இல்லை.

தனுவுக்குப் பன்னிரெண்டு வயது. குட்டி நிஷிக்கு ஏழு வயது. கம்பெனியா? நான் திறந்து வைத்ததே இல்லையே என்று சொன்னேன். நமக்கு ஆகாத விஷயத்திற்குள் மாட்டிக்கொள்ளக் கூடாது. அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த குழந்தைகள். எப்படி எல்லாம் மூளைகள் வேலை செய்யுமோ? தனுவும் நிஷியும் இங்கிதமாகச் சிரித்தார்கள். அதன் பொருளை, என்னைப் பற்றி அவர்கள் மனதில் இருந்த அபிப்பிராயத்தை வைத்து ஊகிக்க முடிந்தது. அமெரிக்காவிலேயே கௌரவமான பணிக்கு அழைத்தால் இப்படிப் பதில் சொல்கிறவர்களும் இருப்பார்களா?

குட்டி நிஷ் அரை நிஜாரில் முக்கால் பங்கு வெளியே துருத்திக்கொண்டிருந்த பெரிய டிராயிங் தாளின் சுருளை மேஜை மீது விரித்து ஓரங்களைப் பிடித்துக்கொண்டாள். நான் குனிந்து பார்த்தேன். அவளுடைய கைவண்ணம்தான். வழக்கம் போல் அரூப ஓவியம். அவள் எந்த ஜீவராசிகளை வரைந்தாலும் சரி அவற்றிற்கெல்லாம் பாரபட்சமில்லாமல் சிறகுகளைப் போட்டு விடுவாள். முயல், எலி, மான், கட்டெறும்பு, நாய், பூனை எல்லாவற்றிற்கும். மரம் செடி கொடிகளின் சிறகுகளில்தான் இலைகள் முளைத்திருக்கும். சிறகுகளில் பழங்களும் தொங்கும். இவள் வரைவதற்கே அவசியமில்லாமல் பறவைகள் சிறகுகளுடன் இருப்பதில் அவளுக்கு ஏமாற்றமோ என்னவோ. இவளுடைய பங்காக அவற்றின் சிறகுகளைக் கண்டபடி பெரிதாக்கி விடுவாள். குருவிகள், கழுகுகளைவிட பெரிய சிறகுகளை வைத்துக்கொண்டிருக்கும்.

டிராயிங் தாளின் நாலு ஓரங்களிலும் பல தாவரங்களும் பல ஜீவராசிகளும் சிறகுகளின் களேபரத்தில் மூழ்கிக் கிடக்க, மையத்தில், Plants and Pets என்று நவீன கோணல் எழுத்துக்கள் பெரிதாகத் தெரிந்தன. பங்குதாரர்கள்: தனு ராம்; நிஷா ராம் என்றிருந்தது. தனுவின் பெயருக்கு முன் அவளுடைய புகைப்படமும், நிஷாவின் பெயருக்கு முன் அவளுடைய புகைப்படமும் ஒட்டப்பட்டிருந்தன. கம்பெனியைத் திறந்து வைக்கிறவர் பெயர் காலியாக விடப்பட்டிருந்தது. தனு அவளுடைய பாண்ட் பாக்கெட்டிலிருந்து என் புகைப்படத்தை எடுத்து, மென்மையாகச் சிரித்தபடி, ஒட்டிக்கொள்ளவா, கிரான்பா? என்று கேட்டாள். குழந்தைகளின் ஆசை, இரண்டு பேரின் வயதைக் கூட்டினாலும் கூட பத்தொன்பதுதான். என்ன தன்னம்பிக்கை! என்ன தைரியம்! மனசு தழுதழுத்தது. சரி என்று என் வாயே சொல்லிவிட்டது. இருவரும் உணர்ச்சிவசப்பட்டு என்னை அணைத்துக்கொண்டார்கள்.

காரியங்கள் மடமடவென்று நடந்துகொண்டிருந்தன. அழைப்பிதழ் ஒவ்வொன்றையும் சிறிய ஓவியங்களின் நடுவில் எழுதிதான் சிநேகிதிகள் எல்லோருக்கும் தரவேண்டுமே தவிர கணினியில் அச்சுப் போட்டுத் தரக் கூடாது என்பது அவர்கள் தீர்மானம். படங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமாக இருக்க வேண்டும் என்று குட்டி நிஷியிடம் சொல்லத் தேவை இல்லை. இரண்டு படங்கள் ஒரே மாதிரியாக வேண்டும் என்று சொன்னால்தான் அவளுக்குப் பிரச்னையே.

குழந்தைகளுக்கு நேரம் மிகக் குறைவு. பள்ளிக்கு அதிகாலையில் போய்விட்டு பின்மாலையில் களைப்பில் சுருண்டு போய் வருவார்கள். அதன் பின் வீட்டுப்பாடச் சுமைகள். தவிர வெவ்வேறு நாட்களில் வெவ்வேறு இடங்களுக்கு விளையாடச் செல்ல வேண்டும். ஸாக்கர், கூடைப் பந்து, நீச்சல், கராத்தே என்று வரிசையாக. தனுவுக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் வயலின். குட்டிக்கு வாரத்தில் மூன்று நாட்கள் பியானோ. எப்படித்தான் ஈடு கொடுக்கிறார்களோ. அவர்கள் ஒவ்வொரு வாரமும் செய்ய வேண்டிய பணிகளின் பட்டியலைக் குளிர்சாதனப் பெட்டியில் ஒட்டி வைத்திருப்பதைப் படித்தாலே எனக்குத் தலை சுற்றும். நல்ல வேளை, இந்தியாவில் பிறந்து வளர்ந்ததால் சாயம் வெளுக்காமல் எழுபத்திரெண்டு வயது வரையிலும் சமாளித்துக்கொண்டு வந்துவிட்டேன். எப்போதாவது குளிர்சாதனப் பெட்டியைப் பார்த்து, ஸாக்கர் 5 மணிக்கு, நேரமாகிவிட்டது. ஓடு, ஓடு என்று குட்டியை விரட்டும் போது என் மனசே வெட்கம் கலந்து சிரிக்கும்.

அது ஹைவேயை விட்டு ஒதுங்கியிருந்த தனி வளைவு. ஒரு குன்றும் அதைச் சுற்றியிருந்த பிரமாண்டமான சரிவுகளில் மரக்காடுகளும், ஆங்காங்கு வீடுகள் மொத்தம் பதினெட்டு. அதற்கு மேல் கட்ட கவுண்டி உரிமை அளிக்காது. அவ்வளவு பேரும் வெள்ளை அமெரிக்கர்கள். நாங்கள் மட்டும்தான் கறுப்பு இந்தியர்கள்.

தனுவும் குட்டியும் வீட்டுக்காரர்களின் சங்கக் கட்டிடத்தின் அறிக்கைப் பலகையில் பெரிய ஓவிய அழைப்பிதழை பின் பண்ணியிருந்தார்கள். நான் காலைநடை போகிறபோது கட்டிடத்தின் வராண்டாவில் ஏறி என் புகைப்படத்தைப் பார்ப்பேன். அமெரிக்க நீலக்கண்களுக்கு என் கறுப்பு மூஞ்சி எப்படிக் காட்சி அளிக்கும் என்று கற்பனை செய்து பார்ப்பேன். சிம்பன்சியை அளவுக்கு அதிகமாக நேசிக்கும் இவர்களுக்கு என் முகத்தை ஏற்றுக்கொள்ள எந்தத் தடையும் இராது என்றுதான் எனக்குத் தோன்றியது. அத்துடன் நான் லொடக்கு இந்தியக் கிழவனும் அல்ல. வளைவினுள் ஏகப்புகழ் பெற்றிருந்த தனுவுக்கும் நிஷிக்கும் கிரான்பா. தைலாவின் அப்பா. தைலா ஒருத்திதான் அந்த வளைவினுள்ளிருந்து பணிக்குப் போகிறாள். பிற பெண்கள் வீட்டு நிர்வாகத்தைதான் தேர்ந்தெடுத்திருந்தார்கள். டாக்டரான தைலாவின் நட்புக்கு அவர்கள் மனங்களில் மிகுந்த மதிப்பு இருந்தது. யார் வீட்டில் உடல் பிரச்சனை என்றாலும் அவசரத்திற்கு அவளிடம் ஒரு ஆலோசனை கேட்கலாம். அதற்கு மேலும் நெருக்கடி என்றால் தங்கள் வீட்டிற்கு உரிமையுடன் அழைத்துச் செல்லலாம். மேலும் தைலாவின் வீடுதான் குன்றின் ஆக உச்சியில் இருந்தது. நில நடுக்கத்தில் அந்த வீடு சிதிலம் அடைந்தபோது அதன் பழைய உரிமையாளர் அந்த வீட்டை ராம் - தைலா தலையில் கட்டிவிட்டுப் போய்விட்டார். அவர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அந்த வீட்டைக் கட்டி எழுப்பிக்கொண்டார்கள். இப்போது பதினேழு குடும்பத்தினருக்கும் மனதிற்குள் அந்த வீடுதான் வேண்டும். மீண்டும் நிலநடுக்கம் வந்து வீடு தங்கள் தலையில் சரிந்தாலும் பாதகமில்லை. அது தவிர தைலா வீட்டில் மூன்று கார்களும் இருந்தன. அவளுக்கு லெக்ஸஸ். ராமிற்கு நாவிகேட்டா. குழந்தைகளுக்காக க்ரைஸர் வான். கார்கள் எல்லாமே தெருவில் உருள்பவைதான். அமெரிக்காவில் தாய்பால் குடிக்கும் குழந்தைகளுக்குக்கூட இவை கார்கள் மட்டுமல்ல என்பது தெரியும்.

தனுவும் நிஷாவும் தங்கள் வீட்டு நீச்சல் குளத்தின் கரையில் வைத்துதான் கம்பெனியின் திறப்பு விழாக் கூட்டம் என்று சொன்னார்கள். கம்பெனியைத் திறந்து வைக்கப் போகிறவன் என்ற அளவில் என்னிடம் சில யோசனை கேட்பார்கள் என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருந்தது. ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லை. தைலாவிடமும் கேட்கவில்லை. ராமிடமும் கேட்கவில்லை. அவர்களுக்குள் விவாதித்து முடிவெடுத்துக் காரியம் செய்துகொண்டிருந்தார்கள். சூரியாஸ்தமனம் இரவு ஒன்பது மணி வாக்கில் ஆகிக்கொண்டிருந்ததால் எட்டு மணிக்குத் திறப்பு விழா, ஆனால் அவர்களுடைய சிநேகிதிகள் எல்லோரும் மாலை ஐந்து மணிக்கே வந்து விடுவார்கள்.

முதலில் நீச்சல் குளத்தில் அட்டகாசமான குளியல். அதன் பின் குளத்தின் கரையிலேயே எல்லோருக்குமாக எல்லோரும் சேர்ந்து உணவு தயாரித்தல். அதற்கு பார்பக்யு என்றார்கள் குழந்தைகள். அந்தச் சொல்லின் ஓசைக்காகவாவது ஒரு துண்டு இறைச்சியைத் தின்று பார்க்கலாமா என்று எனக்குத் தோன்றியது. என் சாகஸம் பற்றி குழந்தைகளுக்குத் தெரியாதா என்ன? உங்களுக்கு வெஜ் தனியாக என்று முதலிலேயே சொல்லி ஆசுவாசப்படுத்திவிட்டார்கள்.

டெக்கில் வைத்துதான் கூட்டம் என்றும், நான் எட்டு மணிக்கு வந்தால் போதும் என்றும் தனுவும் நிஷாவும் சொன்னார்கள். நான் டை கட்டிக்கொள்ள வேண்டியிருக்குமா? என்று கேட்டேன். இருவருக்கும் வந்த சிரிப்பை அடக்கத் தெரியவில்லை. வழக்கம் போல் வேஷ்டி கட்டிக்கொண்டு வந்தால் போதும், கிரான்பா என்றாள் தனு. அவர்களைச் சிரிக்க வைக்க நான் ஹாஸ்யம் எதுவும் சொல்லத் தேவையில்லை. வாயைத் திறந்து பேசினாலே போதும் என்றாகிவிட்டிருந்தது.

சிநேகிதிகள் வரவர ஒவ்வொருவரும் தங்களுக்குள் பேசிக்கொண்டு வேலைகளில் ஈடுப்பட்டார்கள். நாற்காலிகளை டெக்கில் கொண்டு வந்து போட்டார்கள். என் நாற்காலி சற்று கௌரவமானதாக இருக்கும் என்று நினைத்தேன். அப்படி எதுவும் இல்லை. அவற்றை வரிசைப்படுத்திப் போடாததும் எனக்குக் குறையாக இருந்தது. சொன்னால் சிரிப்பார்களோ என்ற எண்ணத்தில் நான் ஒன்றும் சொல்லவில்ல.

நான் மணியைப் பார்த்தபடி என் அறைக்குள் உட்கார்ந்து கொண்டிருந்தேன். என்னுடைய பேச்சு ஒன்னறை வாக்கியம்தான். அதை முப்பதாவது தடவையாக மனதில் மீண்டும் ஒரு தடவை சொல்லிப் பார்த்துக்கொண்டேன். ஒவ்வொருவராக ஏகப்பட்ட பெண்கள் வந்துவிட்டார்கள் போலிருக்கிறது. புதுப் புதுப் பெயர்களாக காதில் விழுந்துகொண்டே இருந்தன. சோபியா, அலெக்ஸி, கெல்ஸி, சிட்னி, நிக்கேல், நயோமி, மிஷல், சமைலறை ஜன்னல் வழியாகப் பார்த்தபோது பலரும் கரையிலிருந்து கரணமடித்து விழுந்து நீச்சல் குளத்தை இரண்டுபடுத்திக்கொண்டிருந்தார்கள். தலைகால் புரியாத சந்தோஷத்தில் கத்தினார்கள். ஈரத்தலையுடன் கரையில் டான்ஸும் நடந்தது.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் பார்த்தபோது பார்பக்யு ஆரம்பமாகிவிட்டிருந்தது. பார்க்கவே விசித்திரமாக இருந்த அடுப்பு கபகபவென்று எரிய காரியங்கள் வேகமாக நடந்துகொண்டிருந்தன. சாப்பிட்ட இடத்தை எல்லோரும் சேர்ந்து சுத்தப்படுத்தினார்கள். சமையல் செய்து சாப்பிட்ட இடமாகவே அது தெரியவில்லை. அதன் பின் டெக் ஏணியில் சாடிக் குதித்தேறி கோணல் மாணலாக உட்கார்ந்துகொண்டார்கள்.

கிரேஸியின் அக்கா சோபியா டெக்கின் விளிம்பில் மரக் கைப்பிடி மீது உட்கார்ந்துகொண்டிருந்தாள். சரி, அது அவள் விருப்பம். ஆனால் மேல் சட்டத்தைப் பிடித்துக்கொள்ளாமல் இரண்டு கைகளையும் விசிறியபடி பேசிக்கொண்டிருந்ததுதான் வயிற்றைக் கலக்கிற்று. என்னை அறியாமலேயே அவளை அடிக்கடி கவனித்துக்கொண்டிருந்தேன். பின் பக்கம் விழுந்துவிட்டால் உருண்டு குன்றின் அடிவாரத்திற்கே போய் சேர்ந்துவிடுவாள். திடீரென்று அந்தப் பெண் என்னிடம், என் சட்டை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா, கிரான்பா? என்று கேட்டாள். முன் பின் பேசியிராத பெண்ணிடம் எடுத்த எடுப்பிலேயே என்ன சகஜம். நான் அமெரிக்கப் பாணியில், இவ்வளவு அற்புதமான சட்டையை நான் வேறு எங்குமே பார்த்ததே இல்லை என்றேன். நீங்கள் அடிக்கடி கவனித்ததில் இருந்தே தெரிந்து கொண்டுவ்ட்டேன், கிரான்பா என்று தலையை உயர்த்திப் பெரிதாகச் சிரித்துக் கொண்டாள்.

கம்பெனியின் நோக்கத்தைப் பற்றி தனு சுமார் ஐந்து நிமிஷம் பேசினாள். நிஷாவின் பார்வை தனுவின் முகத்தின் மீது படிந்திருந்ததோடு அவளுடைய ஒவ்வொரு வாக்கியத்தையும் நிஷாவும் ஆமோதிப்பது போல் சுய நினைவின்றி அவளுடைய தலை அசைந்துகொண்டிருந்தது. நான் எழுந்திருந்து, கம்பெனியைத் திறந்து வைக்கிறேன். தனுவும் நிஷியும் ஆரம்ப்க்கும் இந்த கம்பெனி மிகச் சிறப்பாக வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றேன். இதைச் சொல்லி முடித்ததும் எல்லாப் பெண்களும் எழுந்திருந்து கையைத் தட்ட ஆரம்பித்தார்கள். தனுவும் நிஷாவும் கூட கரவொலியில் கலந்து கொள்வதைப் பார்த்ததும் நானும் கையைத் தட்டத் தொடங்கினேன். கைதட்டல் என் எதிர்பார்ப்புகளை மீறி நீண்டுகொண்டே போயிற்று. ஓசை தேய்ந்திறங்காமல் தாளகதியை எட்டிய போது பல யுகங்கள் அவை நீடித்து விடும் என்ற பிரமை மனதில் தோன்றியது.

சந்தேகங்கள் இருந்தால் கேட்கலாமா? என்று ஒரு பெண் கேட்டாள்.

தாராளமாக என்றாள் தனு.

எனக்கு தனு பிரச்சனையில் மாட்டிக்கொள்ளக் கூடிய கட்டம் முதலிலேயே உருவாகிவிட்டதே என்று தோன்றியது. பட்டுக்கொள்ளாமல் பதில் சொல்ல அவளுக்குத் தெரியும் வயதா?

மணிக்கு எவ்வளவு பணம்? என்ற அடிப்படையான கேள்வி முதலில் வந்தது.

ஒரு நபருக்கு ஒரு மணி நேரத்திற்குப் பன்னிரெண்டரை டாலர் என்றால் தனு.

நாய், பூனை போன்றவற்றிற்கு உணவு அளிப்பது, தோட்டத்திற்குத் தண்ணீர் பாய்ச்சுவது போன்ற பணிகளை கம்பெனி கவனித்துக் கொள்ளும் என்று சொன்னாய். செல்லப் பிராணிகளையும் கவனித்துக்கொள்ளுமா? என்னிடம் ஒரு வெள்ளைப் பன்றி இருக்கிறது என்றாள் ஒரு பெண்.

கினிபிக், வெள்ளை எலி, சுண்டெலி, கிளி, முயல், ஹாம்ஸ்டர் போன்ற கூண்டில் வளர்ப்பவற்றையும் கம்பெனி கவனித்துக்கொள்ளும். பாம்பு, பல்லி, இக்வானா, போன்ற ஒரு சிலவற்றை கம்பெனி இப்போதைக்கு எடுத்துக்கொள்ளாது. வினியோகிக்க இருக்கும் இந்த அறிக்கையில் எல்லாவற்றையும் விபரமாகச் சொல்லியிருக்கிறோம் என்றாள் தனு. ஒரு காகிதக் கட்டைத் தூக்கிக் காட்டினாள்.

பாம்புகளைக் கவனித்துக்கொள்வதில் என்ன பிரச்சனை? என்று கேட்டாள் மற்றொரு பெண்.

எந்தப் பிரச்சனையும் இல்லை. தகுதி வாய்ந்த நபர் இன்னும் அமையவில்லை. அத்துடன் மற்றொன்றும் நான் சொல்ல வேண்டும். கூண்டுப் பிராணிகளைக் கவனித்துக்கொள்ளத் தருகிறவர்கள் எங்கள் வீட்டில் கொண்டுவந்து அவற்றை, அவற்றின் உணவுகளோடு தரவேண்டும். வெளியூரில் இருந்து வந்ததும் அவர்கள் பொறுப்பில் பெற்றுக்கொண்டு போக வேண்டும் என்றாள்.

அக்கா நன்றாகவே விஷயங்களை விளக்குகிறாள் என்ற பாராட்டுணர்வு நிஷாவின் முகத்தில் தெரிந்தது.

தனு சொல்ல விட்டுப் போன ஒரு விஷயம் நிஷியின் நினைவுக்கு வந்தது. அவள் அவசரமாக, செல்லப் பிராணிகளைக் கொண்டு தருகிறவர்கள் அவற்றின் பொம்மைகளையும் கையோடு தந்துவிட வேண்டும் என்றாள்.

தனுவின் கை தன்னையறியாமலே நிஷியின் முதுகைத் தொட்டது. நிஷி என் முகத்தைப் பார்த்தாள்.

வெளியூர் போகிறவர்கள் எத்தனை நாட்களுக்கு முன்பாகத் தெரிவிக்க வேன்டும்? என்று ஒரு பெண் கேட்டாள். தனு ஒரு நிமிஷம் தயங்கினாள். அக்காவும் தங்கையும் விவாதித்து முடிவெடுக்காத விஷயம்போல் பட்டது. நிஷ், தனுவின் காதில் ஏதோ சொல்லிற்று.

குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்னர் என்றாள் தனு.

ஆமாம், குறைந்தது ஒரு வாரம் என்று நிஷியும் சேர்ந்து சொல்லிற்று.

கம்பெனியை ஆரம்பித்த பின் ஒரு சில மாதங்கள் சான்டாக்ரூஸிலேயே இருந்தேன். தனுவும் நிஷியும் கம்பெனியை மிக நன்றாக நடத்தினார்கள். சில சமயம் சண்டை போட்டுக்கொண்டு விடுவார்கள் இருவரும். நிஷ் முன் கோபக்காரி என்பதால், இனிமேல் உன்னிடம் பேசவே மாட்டேன் என்று சொல்லிவிட்டு புத்தகப் பையுடன் தனியாகப் போய் காரில் ஏறிக்கொள்வாள். தொழிலைக் கவனிக்க வேண்டிய நேரம் மாலை ஐந்தரை மணியிலிருந்து ஆறரை மணி வரையிலும். சரியாக தனு ஐந்தரை மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்து விடிவிடு என்று நடந்து போவாள். அவளுக்காக வெளி பெஞ்சில் காத்துக்கொண்டிருக்கும் நிஷா சோர்ந்து போன நடையில் அவள் பின்னால் போகும். இருவரும் ஒருவர் பக்கத்தில் ஒருவர் வந்ததும் தொழில் சம்பந்தமான விஷயங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பேசிக்கொள்ளத் தொடங்குவார்கள்  இது பற்றி ஒரு நாள் தனுவிடம் பேசிய போது அவள் நேரான அர்த்தத்திலேயே எடுத்துக்கொண்டு, கிரன்பா, ஒரு மணி நேரத்திற்கு இருபத்தைந்து டாலர் கம்பெனி பில். வாடிக்கையாளர்கள் நலங்களைக் கவனிக்கவில்லை என்றால் கம்பெனி மூழ்கிவிடும். இப்போதே என் சிநேகிதிகளில் பத்துப் பேருக்கேனும் இதே போல் ஒரு கம்பெனியை ஆரம்பிக்கலாமா என்ற யோசனை இருக்கிறது என்றாள்.

உனக்குப் போட்டியாகவா? என்று நான் கேட்டேன்.

அப்படி நான் அதை எடுத்துக்கொள்ளவில்லை, கிரன்பா யார் வாடிக்கையாளர்களின் நலங்களைப் பாதுகாக்கிறார்களோ அவர்கள் கம்பெனி தானே வளரும் என்றாள்.

மாலை நடை போகிறபோது எனக்குக் குழந்தைகள் செய்யும் காரியத்தைப் பார்க்க வேண்டும் என்று ஆசையாக இருக்கும். ஆனால் அவர்கள் கண்ணில் படுவது சுலபமாகவே இருக்கவில்லை. எந்த வீட்டைத் திறந்து எந்தப் பூனைக்கு அல்லது நாய்க்கு உணவு ஊட்டிக்கொண்டிருக்கிறார்கள் என்பது யாருக்குத் தெரியும்.

வெளியூரிலிருந்து வீடு திரும்புகிறவர்கள் தவறாமல் ஹனுவையும் நிஷாவையும் போனில் அழைத்து அவர்களைப் பாராட்டுவார்கள். அவர்கள் அம்மாவிடமும் தனியாகப் பாராட்டுவார்கள். ஒரு நாள் மிகுந்த வசதி படைத்த லோரா என்பவர் - வக்கீலாகக் கணவனுடன் சேர்ந்து தொழில் நடத்தி, குழந்தைகளைக் கவனித்துக் கொள்வதற்காகத் தொழிலை முற்றாக விட்டவர் - தைலாவை அழைத்து, உன் பெண்கள் என்ன செய்கிறார்கள் தெரியுமா, தைலா? ஒரு நாள் பள்ளியிலிருந்து டிராபிக் ஜாமினால் வீடு திரும்பப் பிந்திவிட்டதால் டைகருக்கு அரை மணி நேரம் பிந்தி உணவு தரவேண்டியதாகிவிட்டதாம். அதற்காக அவர்களாகவே பில்லில் ஐந்து டாலர்கள் குறைத்துப் போட்டிருக்கிறார்கள். என்ன பொறுப்பு! உணர்ச்சிவசப்பட்டதில் எனக்கு அழுகையே வந்துவிட்டது, தைலா என்று சொல்லியிருக்கிறார்.

தனுவும் நிஷாவும், தோட்டங்களில் ஸ்ப்ரிகலரைத் திறந்துவிட்டு செடிகளை நனைப்பதையும், சில வீடுகளில் ரப்பர் குழாய் வழியாகத் தண்ணீர் பாய்ச்சுவதையும், இரண்டொரு தடவை பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் நான் கண்ணில் பட்டால் முகத்தைத் திருப்பாமல் இடது கையை லேசாகத் தூக்கி ஒரு 'ஹை' மட்டும்தான் எனக்கு. அதற்கு மேல் பேச்சுக் கிடையாது.

வளைவிலேயே உருவத்திலும் மூர்க்கத்திலும் பெயர் பெற்ற நாயாக இருந்தது, டெரீஸா வீட்டு பாஞ்சாவைக் கவனித்துவிட்டு வரும் ஒவ்வொரு நாளும் ஒன்றிரண்டு விசயங்களையாவது என்னிடம் சொல்வாள். ஒரு ஜெர்ஸிப் பசுவின் கன்றுக்குட்டியின் உயரத்தில் இருக்கும் அது என்றார் ராம். அதற்கு தனியான அவுட் ஹௌஸ் இருந்தது. ஹீட்டரும் ஏர்கண்டிஷனரும் இருந்தன. அதற்கு உஷ்ணம் ஆகவே ஆகாது. அரை முழத்திற்கு தொங்கும் நாக்கிலிருந்து வெளியே வழியும் எச்சில் அறையை முழுக்க ஈரமாக்கிவிடும். ஆஸ்துமா நோயாளியைப் போல் மூச்சு இரைக்கும். ஆனால், எவ்வளவு கொடுமையான குளிரும் அதற்குப் பிடிக்கும். குளிர் பூஜியத்திற்கு கீழே போனால் மட்டும் டை இல்லாமல் கம்பளி கோட்டு போட்டுக்கொண்டிருக்கும். சங்கிலியில் கட்டிப் போட்டு தோலாலான வாய்க்கூடையும் அணிவித்திருந்தார்கள். சங்கிலியை அறுத்துக்கொண்டு காற்று வாங்கக் கிளம்பிற்று என்றால் எதிர்படும் முதல் மனிதரைக் குதறுகிற குதறலில் மண்டையோடு மட்டுதான் மிச்சமிருக்கும். இதெல்லாம் தெரிந்த போது இனிமேல் வாக்கிங்கை டெக்கிலேயே வைத்த்க் கொள்ளலாமா என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன்.

அந்த நாட்களில் தனு நிஷாவைப் பற்றி ராமிடம் ஒரு புகார் சொன்னாள். நீங்கள் சொல்லுங்கள் டாடி - நிஷ் ஒவ்வொரு நாளும் பாஞ்சாவை முத்தமிடுகிறாள். நிஷாவும் பக்கத்தி நின்றுகொண்டிருந்தது. ராம் நிஷியைப் பார்த்து, நாளொன்றுக்கு எத்தனை முத்தம்? என்று கேட்டார். ஐந்து அல்லது ஆறு, அதற்கு மேல் இல்லை என்றாள் நிஷா. பாஞ்சா இவளிடம் அதிக முத்தம் கேட்கிறது டாடி என்றாள் தனு. கொடுத்துப் பழக்கியிருக்கிறாள் என்றாள். ராம், நிஷியின் முகத்தை கூர்ந்து கவனித்தார். அதிகம் பேசுவதில் நம்பிக்கை இல்லாத நிஷி இமைகளைக் கொட்டாமல் மௌனமாக நின்றாள். முகத்தைப் பார்க்கப் பாவமாக இருந்தது. இவளைப் பார்த்ததும் பாஞ்சா மேலே பார்த்து மின் விசிறியைப் போடச் சொல்கிறது, என்று தொடர்ந்து முடுக்கினாள் தனு. ராமின் உள்சிரிப்பு முகத்தில் தெரிந்தது. இந்த வாரக் கடைசியில் எல்லோரும் உட்கார்ந்து பேசி நாம் ஒரு முடிவுக்கு வரலாம் என்றார் அவர்.

அன்று தனுவுக்குக் காய்ச்சல். எந்த உடல் கஷ்டத்தையும் வெளியே சொல்லும் பழக்கமே இல்லாத அவள் சோபாவில் சுருண்டு படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தாள்.

பாஞ்சாவுக்கு உணவு தர கிரான்பாவை அழைத்துக்கொண்டு போ, தனியாகப் போகக் கூடாது என்று நிஷியிடம் சொல்லிவிட்டு காரில் ஏறி மருத்துவமனைக்குப் போய்விட்டாள் தைலா. என்னிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலாம். என்னுடைய துரதிருஷ்டம் அவளுக்குக் கேட்கத் தோன்றவில்லை.

மாலையில் நிஷ் முன்னே போக நான் பின்னால் போய்க்கொண்டிருந்தேன். நிஷ் மிகத் தைரியமான பெண். அவளை நம்பி சிங்கத்தின் கூண்டுக்குள்கூடப் போகலாம் என்று மனதிற்குல் சொல்லிக் கொண்டேன். பஞ்சாவைச் சந்திக்க இன்னும் ஐந்து நிமிடங்கள் நடக்க வேண்டியிருந்த நேரத்திலேயே, அதன் குரைப்பு கேட்கத் துவங்கிற்று. நான் வருகிறேன் என்பது பஞ்சாவுக்குத் தெரிந்துவிட்டது என்றாள் நிஷ். கம்மிங் பாஞ்சா, கம்மிங் என்றாள் நிஷ் தனக்குத்தானே. பாஞ்சாவுக்குக் கேட்பது போல தொடர்ந்து பேசிக்கொண்டே போனாள். தனுவைப் பார்க்க முடியாததால் ரொம்பவும் வருத்தப்படும் கிரான்பா என்றாள்.

நிஷ் கதவைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்ததும் அவள் காலில் விழ்ந்து கெஞ்சத் தொடங்கிற்று பாஞ்சா. நான் ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தேன். நிஷா தியானம் செய்ய உட்காருவது போல் பாஞ்சா முன்னால் அமர்ந்து கொண்டாள். பாஞ்சா நிஷியின் காதை நக்கத் தொடங்கிற்று. வலது காதை நக்கிவிட்டு இடது காதை நக்க ஆரம்பித்தது. நிஷி அதன் கழுத்தை ஆவேசமாகக் கட்டிக்கொண்டு அதன் நெற்றியில் முத்தங்கள் சொரிந்தாள்

நான் ஜன்னலிலிருந்து கதவின் பக்கம் வந்து எட்டிப் பார்த்தேன்.

நிஷ் சுவரோரம் இருந்த பெரிய அலமாரியை மலக்கத் திறந்து போட்டிருந்தாள். ஏகப்பட்ட டப்பாக்கள். பெரிது பெரிதாக கண்ணாடிப் புட்டிகள். அலமாரியைத் திறந்ததும் பாஞ்சா சங்கிலியை அறுத்துவிடும் அளவுக்கு அதற்கு சாத்தியமான விட்டத்திற்குள் மாறி மாறிக் குதிக்கத் தொடங்கிற்று. பேபி, ஒழுங்காக நடந்து கொள்ளாவிட்டால் எனக்கு கெட்ட கோபம் வரும் என்று செல்லக் கோபத்தில் சொன்னாள் நிஷ். பாஞ்சா முன் காலை நீட்டிப் படுத்துக் கொண்டு அழுவது போல குரல் எழுப்பிற்று. ந்ஷ் என்னைப் பார்த்து சின்னக் குழந்தை என்றாள். குழந்தையா? என்று நான் கேட்டேன். குழந்தைதான், இன்னும் எட்டு மாதம்கூட ஆகவில்லை என்றாள். எனக்கு ஒரு மனிதக் குழந்தை தவழ்ந்து தவழ்ந்து வந்து எழுந்து உட்கார முயல்வது போல் ஒரு சித்திரம் மனதில் வந்து போயிற்று.

அந்த வருடம் நான் சற்று முன்கூட்டியே சாந்தா க்ரூஸில் இருந்து ஊருக்கு வந்துவிட்டேன். ஒரு நாள் தைலா போனில் அழைத்தபோது அவளிடம் பேசிய பின் தனுவிடமும் பேசினேன். நிஷியும் லைனில் இருந்தாள்.

கம்பெனி எப்படி நடக்கிறது அம்மா? என்று கேட்டேன்.

மிக நன்றாக நடக்கிறது கிரான்பா என்றாள் தனு.

முதல் ஆறு மாதத்தில் நல்ல லாபமா?

நல்ல லாபம், கிரான்பா என்று இருவருமே உரக்கச் சொன்னார்கள்.

தனு, என்னையும் ஒரு பார்ட்னராகச் சேர்த்துக்கொள்ள முடியுமா அம்மா ? என்று நான் கேட்டேன்.

சில வினாடிகள் மௌனம்.

உங்கள் சேவையைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் இன்னும் கம்பெனிக்கு வரவில்லை, கிரான்பா என்றாள் தனு.

சரிம்மா, உங்க விருப்பம்.

கிரான்பா , கம்பெனி கணக்கில் உங்க பெயரில் பன்னிரெண்டரை டாலர் வரவாக இருக்கிறது என்றாள் தனு.

அது ஏன் ?

பாஞ்சாவுக்கு உணவு கொடுக்க ஒரு நாள் எனக்குப் பதில் நீங்கள் போனீர்கள், நினைவிருக்கிறதா கிரான்பா ? ஒரு மணி நேரத்திற்கு பனிரெண்டரை டாலர்கள்.

கொஞ்சம் சேர்த்துப் போடக்கூடாதா, அம்மா ?

இருவரும் ஒரே நேரத்தில் சிரிக்கும் சத்தம் கேட்டது.

மிகக் கௌரமான சம்பளம் அது, கிரான்பா என்றாள் தனு.

சரி, உங்கள் இஷ்டம் அம்மா என்றேன் நான்.
------------------------------------------------------------
ஆகஸ்ட்டு - 2003 , கலிஃபோர்னியா

 
நன்றி : காலச்சுவடு பதிப்பகம் ( மறியா தாமுவுக்கு எழுதிய கடிதம் (சிறுகதைத் தொகுப்பு) ,  தாஜ் ( satajdeen@gmail.com )