ஒரு நாள் காலையில் நானும் சண்பகக் குற்றாலக் கவிராயரும் வேறு சிலரும் குற்றால மலைக் காட்சிகளைக் கண்டு மகிழ்ந்து வரப் போனோம். மலையின் வடபாலுள்ள சோலை வழியே செல்லும்போது எங்கிருந்தோ இனிய சங்கீத ஒலி வந்தது. நாங்கள் அது வந்த வழியே சென்றபோது ஒரு மாளிகையை அடைந்தோம். அதன் வாசலில் ஒரு சிறிய திண்ணையில் தனியாக உட்கார்ந்து ஒருவர் உரத்துப் பாடிக்கொண்டிருந்தார். தாமே பாடுபவராயின் அவ்வளவு பலமாகப் பாட வேண்டிய அவசியம் இல்லை.
நாங்கள் அவரை அணுகியவுடன் அவர் பாட்டை நிறுத்திவிட்டு, “நீங்கள் யார்?” என்று எங்களைக் கேட்டார். சுப்பிரமணிய தேசிகர் அங்கே வந்து தங்கியிருப்பதையும், நாங்கள் அவருடன் வந்திருப்பதையும் தெரிவித்தோம். அவர் வேம்பத்தூர்ப் பிச்சுவையருடைய தம்பி என்பதும் அவர் பெயர் சர்க்கரை பாரதி என்பதும் தெரிந்தன.
நாங்கள் பேசும்போதே உள்ளே யிருந்து, “பலே! ஏன் பாட்டு நின்றுவிட்டது?” என்று அதிகாரத் தொனியோடு ஒரு கேள்வி வந்தது. “புத்தி” என்று சொல்லியபடியே ஒரு வேலைக்காரன் உள்ளேயிருந்து ஓடி வந்து பாரதியாரை விழித்துப் பார்த்தான். அவர் நடுங்கி மீண்டும் தாளம் போட்டுப் பாடத் தொடங்கினார்.
எங்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “நீங்கள் இங்கே உள்ள
திருவாவடுதுறை மடத்திற்கு வாருங்கள். அங்கே விரிவாகப் பேசலாம்.
ஸந்நிதானம் உங்களைக் கண்டால் ஸந்தோஷமடையும்” என்று சொன்னோம். அவர் பாடிக்கொண்டே இருந்தமையால் “ஆகட்டும்” என்று சொல்ல இயலாமல் தலையை அசைத்தார். நாங்கள் விடைபெற்று வந்தோம்.
அன்று மாலை சர்க்கரை பாரதியார் மடத்திற்கு வந்து தேசிகரைப் பார்த்தார். அவர் சொன்ன விஷயங்களைக் கேட்டு நாங்கள் அவர் நிலையை அறிந்து இரங்கினோம். அவர் ஒரு ஜமீன்தாரோடு சில மாதம் இருந்தார். அந்த ஜமீன்தார் தம் மாளிகையினுள்ளே தமக்கு மிகவும் வேண்டிய ஒருவரோடு சீட்டாடிக் கொண்டிருந்தாராம். பாரதியார் அவர் காதில் படும்படி வெளியிலிருந்தபடியே பாடினாராம். உள்ளே ஜமீன்தாரோடு சீட்டாடினவர் ஒரு பெண் பாலாதலின் பாரதியார் உள்ளே போகக் கூடாதாம். பாட்டை நிறுத்தியது தெரிந்து ஜமீன்தார் அதட்டின குரலைத்தான் நாங்கள் கேட்டோம்.
இவ்விஷயங்களைக் கேட்டு நாங்கள் வருந்தினோம். “வெறும்
சோற்றுக்குத்தான் இப்படித் தாளம் போட வேண்டியிருக்கிறது” என்று அவர் சொன்னார். பிறகு அவர் சுப்பிரமணிய தேசிகருடன் பேசி இன்புற்றார். பல அரிய பாடல்களையும் கீர்த்தனங்களையும் பாடினார். இயலும் இசையும் அவரிடம் இசைந்திருந்தன. அவ்விரண்டிலும் விருப்பமுள்ள தேசிகர் கேட்டுப் பேருவகை அடைந்தார். அந்த வித்துவானுக்கு பதினைந்து ரூபாய் பெறுமான சரிகை வஸ்திர மொன்றை அளித்தார்.
பாரதியார் அவ்வளவு சம்மானத்தை எதிர்பார்க்கவே இல்லை. “இந்த மாதிரி தாதாக்களும் சம்மானமும் கிடைத்தால் என் ஆயுள் முழுவதும் அடிமையாக இருப்பேனே!” என்று அவர் கூறினார். “நீங்கள் எப்போது வந்தாலும் நமக்கு ஸந்தோஷமே, திருவாவடுதுறைக்கும் வாருங்கள்” என்று தேசிகர் சொன்னார்.
“அருமை தெரியாத முரடர்களுடன் பழகும் எனக்கு அதிருஷ்டம்இருக்க வேண்டுமே! இருந்தால் அவசியம் வருவேன்” என்று கண்கலங்கியபடியே சொல்லி அவர் விடைபெற்றுச் சென்றார்.
(அத்தியாயம்-75 )
***
மகாமகோபாத்தியாய தாக்ஷிணாத்ய கலாநிதி டாக்டர் உ.வே.சாமிநாதையரவர்களின் 'என் சரித்திரம்' ஆன்லைனில் வாசிக்க:- http://www.tamilvu.org/library/lA471/html/lA471cnt.htm
** PDF - என் சரித்திரம் http://www.mediafire.com/?ejtzqzmotzd