[லறீனா அப்துல் ஹக் எழுதிய நாவலான 'ஒரு தீப்பிழம்பும் சில அரும்புகளும்' மற்றும் அவரது ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பான 'பொருள் வெளி' ஆகிய இரண்டையும் முன்வைத்தே இந்த மதிப்பீட்டு முயற்சி.] -
தாஜ்
***
'ஒரு தீப்பிழம்பும் சில அரும்புகளும்' - நாவல்
இந் நாவலின் போக்கில் கதையாசிரியர் தன் வாழ்வின் நிலைப்பாட்டை நிறுவியிருக்கிறாரோ என்று தோன்றுகிறது. தலைப்பில் சுட்டியிருக்கும் 'தீப்பிழம்பு' கூட ஆசிரியரை அர்த்தப்படுத்துவதாக உணர்கிறேன்..
ரஹிமா டீச்சர், தனது பணிக்காலத்தில், தன் கண்முன்னே நிகழ்ந்தேறும் சிறார்களின் சிதைவுகளைக் கண்டு பொறுக்கமாட்டாதவராக இருக்கிறார். தன்னாலான உதவிகளையும் அச்சிறார்களுக்கு முன்வந்து செய்பவராக இருக்கிறார்!
அவ்வாறான சேவை மனப்பான்மைதான் வாழ்வை அர்த்தப்படுத்தும் என்றும் நம்புகிறார். தன்னுடைய உறவுகள் தன் கண்முன்னே சிதைவதைக் கண்டவர் அவர். அதனாலோ என்னவோ பிறர் நலன் பேணுதலில் நிம்மதி கொள்வதாக சிலருக்குத் தோன்றக்கூடும். நிஜத்தில் அப்படியல்ல என்பது திண்ணம். அவரது சிந்தையின்படிக்கு, உறவுகள் உயிரோடு வாழ்ந்திருக்கும் பட்சமும் தன் வாழ்வின் ஓட்டத்தில் அவர் இப்படியான பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவராகத்தான் இருந்திருப்பார். அவரது பிற எழுத்துக்கள் கிடைக்கப் பெற்று வாசித்திருக்கும் என்னையொத்த வாசகர்கள் என் கூற்றை எளிதில் அனுமானிப்பார்கள். .
போர்களில் ஈடுபடும் பூமியில், மக்களின் யதார்த்த வாழ்வுமாறி, நாசகாரச் சிதைவுகள் ஒருபாடு நடந்தேறும் என்பது தவிர்க்க முடியாத விதியாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட பூமியில் வாழநேரும் சிறார்கள், கல்வியில் தேர்ந்து, தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் பெருமை சேர்ப்பவர்களாக விளங்க வேண்டியவர்கள், இளம் பருவத்திலேயே கருகி மண்ணில் உதிர்வது கொடுமை. படைப்பாளியின் காலகட்டத்தில் அவரது மண்ணும் அப்படியான சாபத்திற்கு ஆட்பட்டுப் போனது என்பது சொல்லொண்ணா சோகம். ரஹிமா டீச்சரின் ஆளுமைக்கு உட்பட்ட பள்ளிவகுப்பில், அவரது கண்ணெதிரே சிதையும் சிறார்களுக்கான சேவையில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்திக் கொள்கிறார்.
இந்த நாவலில், ரஹிமா டீச்சர், தான் பயின்ற உளவியல் ரீதியான உதவியுடன் பிரச்சனைகளோடு பள்ளிக்கு வரும் மாணவ, மாணவிகளைத் தேற்றுகிறார். என்றாலும், அந்தச் சிறார்களின் வீடும் மக்களும் அவர்களை மீண்டும் சிதைத்து விடுகின்றார்கள். நேர்படுத்த முடிகிற சிறார்களுக்காக மனமகிழ்வு கொள்ளும் டீச்சர், முயன்றும் தன்னால் காபந்துசெய்ய முடியாமல் போகும் மாணவ மாணவிகளுக்காகத் துயரமும் கொள்கிறார். அதே கணம் வாசகனும் அப்படியொரு மகிழ்வையும், துயரத்தையும் அடைகிறான். நாவலின் வெற்றிகளில் இதுவும் ஒன்று! நாவல் எழுதுபவரின் மன நிலையை வாசக மனதில் ஏற்றிவைப்பது சாதாரணமானதல்ல!
நாவல் ஆசிரியரின் உரைநடை பெரிய பெரிய சங்கதிகளை எல்லாம் ரொம்பவும் லகுவாக, சர்வசாதாரணமாகச் சொல்லிக்கொண்டே போகிறது! இது அவரது முதல் நாவல். என்றாலும் அப்படித் தெரியவில்லை. அத்தனைக்கு வாசிப்பில் நம்மை ஒன்றவைக்கிறது. நதியோட்டமான, நளினமான, அர்த்தச் சுழிப்புகள் கொண்ட அவரது உரைநடை எவரையும் கவரும் மலைக்கவும் வைக்கும்!
நாவல் என்பது நிச்சயம் சிறுகதை வடிவமோ, குறுநாவல் வடிவமோ அல்ல. கதைக்குள் எடுத்தாளும் கதாபாத்திரங்களின் எல்லாப் பரிமாணங்களையும் துருவித் துருவி அதன் உச்சம் தொட்டுச் சொல்ல வல்லதே நாவல்! ஆசிரியர் இந்த நாவலில் பத்துக்கும் மேற்பட்ட சிறார்களது ஒடுக்கப்படும் சம்பவங்களையும் அவர்களது சிதைவுகளையும் சொல்ல முற்படுகிறார். என்றாலும், கதையோட்டம் அம்பாய்ப் பாய்ந்து விண்ணென நாவலின் முடிவை சடுதியில் எட்டவே நிற்கிறது.
ஒவ்வொரு கதாபாத்திரத்தின் மீதான நாலாபுறச் சங்கதிகளையும் அதனூடான சாதகப் பாதகங்களையும் சொல்ல முற்பட்டிருக்க வேண்டிய நாவல், தன்னை சட்டென முடித்துக் கொள்கிறது. என்றாலும், நாவலில் சுபா என்கிற இளம் பெண்ணின் செய்திகள் மட்டும் கூடுதலாக விசாலம் கொண்டு இருப்பதை. மறுப்பதற்கு இல்லை. பாத்துமாவின் சங்கதியும் கூடுதல் குறைவாய் சொல்லப்பட்டிருந்தாலும் அது இன்னும் சொல்லப்பட்டிருக்க வேண்டும்.
ரஹிமா டீச்சரின் மகன் கண்ணிவெடியில் சிக்கி அவரது கண்முன்னே சிதைவதையும்.. அவரது. கணவர் ஆயுதக் குழுக்களால் பலி கொள்ளப்படுவதையும் ஆசிரியர் கட்டாயம் விரிவாய் நாவலில் பதிந்திருக்க வேண்டும். இந்நாவலின் உயிர்ப்புக்கு அது எத்தனை உயிரோட்டமானதென ஆசிரியர் அறியாதவர் அல்ல. இன்னொரு பக்கம், இன்றையக் காலகட்டத்தில் அவரது மண்ணில் வாழ்ந்தபடிக்கு அப்படியெல்லாம் எதனையும் எளிதில் எழுதிவிட இயலாதென்பதும்
நிதர்சனம்.
தமிழக மண்ணில், பெண்மையைப் போற்றுகிற பேர்வழிகளாய் இந்துமதி, சிவசங்கரி, வாஸந்தி யென்று ஏகப்பட்ட எழுத்தாளர்கள் பிரபல வியாபார சஞ்சிகைகளில் ஒரு காலகட்டத்தில் கொடி போட்டவர்களாக இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு அவர்களின் எழுத்துக்கள் அவர்கள் வாழ்கிற காலத்திலேயே, அவர்களது கண்முன்னேயே காணடிந்து கொண்டே இருக்கிறது. ஒத்தைக் குறிக்கோளுடனும், கொள்கைவயப்பட்டும் பிடிவாதமாய் எழுதப்படும் எழுத்தின் நாளைய
நிலை என்பதும் இப்படித்தான்.
ஒரு எழுத்தாளன் தனது ஆக்கங்களில், அது சிறுகதையானாலும், குறுநாவல் ஆனாலும், நாவல், கவிதையென்றே ஆனாலும் தான் சார்ந்த கொள்கையினைத் தூக்கிப் பிடிக்கிற போது, அங்கே படைப்பு என்கிற நிலைமாறி, திரிந்தது பிரச்சாரமாக எதிரொலிக்கும். ஆனால், தான் சார்ந்த கொள்கையை நாவலின் விசாலப் பரப்பை பயன்படுத்தி கலைநேர்த்தியோடு இலைமறை காய்மறைவாய், பின்னலாய் எழுதப்படும் பட்சம் நாவல் பழுதில்லாமல் தப்பித்துவிடும். கொள்கை
கோட்பாடுகள் பேசும் பெரிய பெரிய நாவல்கள் எல்லாம் இப்படியான கலை நேர்த்தியிலேயே சிறப்பு கொண்டுவிடுகிறது.
நாவல் குறித்து நான் இத்தனை பேசினாலும் 'ஒரு தீப்பிழம்பும் சில அரும்புகளும்' எனக்கு இஸ்டமாகவே இருந்தது. போரினால் முகம்மாறிய அந்த மண்ணில் சிறார்கள் எதிர் கொள்ளும் சிதைவுகளை இறுகிய மனத்துடன் வாசித்தேன் என்பதே உண்மை.
***
'பொருள் வெளி' - ஆய்வுக் கட்டுரைகள்:
இந்தத் தொகுப்பில், ஏழு தலைப்பின் கீழ் ஆய்வு செய்திருக்கிறார் லறீனா அப்துல் ஹக். இந்த ஆய்வை எழுதியதற்காக அவர் நிரம்பப் பெருமை கொள்ளலாம். அத்தனைக்கு அடர்த்தியும் ஆழமும் வாய்ந்த ஆய்வாக இது இருக்கிறது.
எடுத்துக் கொண்ட ஒவ்வொரு தலைப்பின் கீழும் அவர் ஆய்வு செய்திருக்கும் விதம் மிகச் சிறப்பானது. ஒவ்வொரு படியாய் ஆய்வை மேலே நகர்த்திக் கொண்டே போகும் விதம் மெச்சத் தகுந்தது!
இதனை எழுத, அவர் வாசித்ததாக குறிப்பிட்டிருக்கும் புத்தகங்களின் எண்ணிக்கை கொஞ்சமல்ல!. இதற்கென நேரமும் காலமும் பிரத்தியேகமாக ஒதுக்கினாலொழிய இதனை எழுதியிருக்க இயலாது போயிருக்கும். இந்த ஆய்வில் சில கட்டுரைகளுக்காக அவர் பிறமொழிகளில் இருந்து நிறைய சங்கதிகளை சிரமம்பாராது மொழிமாற்றமும் செய்திருக்கிறார்!
1. கலை இலக்கியங்களில் 'பெண்' பற்றிய புனைவு: சில குறிப்புகள் / 2. கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளில் வெளிப்படுத்தப்படும் 'பெண்'ணின் விம்பம்: ஒரு பெண்ணியல் நோக்கு / 3. ஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புகளில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு / 4. கூண்டுப் பறவை பாடுவதேன் என நானறிவேன் / 5. போரும் கவிதையும்: மஞ்சுள வெடிவர்தனவின் மனிதத்தை நோக்கிய சகோதரத்துவக் குரல் / 6. கவிதை மொழியாக்கமும் மொழிபெயர்ப்புக் கோட்பாட்டுப் பிரச்சனைகளும்: சில அனுபவக் குறிப்புகள்/ 7. மொழிபெயர்ப்புத் துறையில் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு: சில குறிப்புகள், ஆகிய தலைப்புகளில் தன் ஆய்வை நிகழ்த்தி இருக்கிறார். குறிப்பாய், கலை இலக்கியங்களில் 'பெண்' பற்றிய புனைவு: சில குறிப்புகள் / கவிதை மொழியாக்கமும் மொழிபெயர்ப்புக் கோட்பாட்டுப் பிரச்சனைகளும்: சில அனுபவக் குறிப்புகள், இந்த இரண்டு தலைப்பின்கீழ அவர் செய்திருக்கும், ஆய்வு சபாஷ் போடவைக்கிறது.
1. கலை இலக்கியங்களில் 'பெண்' பற்றிய புனைவு: சில குறிப்புகள்
ஆய்வாளர் பார்த்த டி.வி. சிங்கள நாடகம் ஒன்றை நூல் பிடித்து இந்தத் தலைப்பின் கீழான ஆய்வை தொடங்குகிறார். அந்த நாடகத்தின் பெயர், 'பிய-செக்க-சாங்க்கா' இந்நாடகக்கதை புத்தரின் முற்பிறவிகள் பற்றிகூறும் '550 ஜாத்தக்க கதா' கதைகளில் 'சம்புலா ஜாத்தக்கய'-கதாவை கொண்டு தயாரிக்கப்பட்ட நாடகம் என்கிறார். அதில் குஷ்டரோகியான கணவன் ஒருவனுக்கு மனநிறைவோடு அவனது மனைவி பணிவிடை செய்கிற போதும், கணவன் அவளை சந்தேகிக்கிறான்
என்று தொடங்கி, சீதையை ராமன் சந்தேகம் கொண்டு தீக் குளித்து நிரூபி என்றதையும், மாதவியை கோவலன் சந்தேகம் கொண்டதையும் மேல் உதாரணமாய்த் தந்து, ஒவ்வொரு காலகட்டத்திலும் பெண் என்பவள் ஆண் இனத்தால் சந்தேகத்திற்கு இலக்காகி அவஸ்த்தை கொள்வதே நடப்பாக இருக்கிறது என்று கம்பனின், வால்மீகியின், இளங்கோ அடிகளின் கவிதை வரிகளை தாராளமாய் எடுத்துவைத்து, பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காகக் கொதித்திருக்கிறார்.
என்னைக் கேட்டால் அவர் அப்படி கொதித்திருப்பது சரி. ஆண்களில் பெரும்பாலோர் ஆணாதிக்க மனோபாவம் கொண்டவர்கள். கிருத்துருவம் பிடித்தவர்கள்!
2. கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளில் வெளிப்படுத்தப்படும் 'பெண்'ணின் விம்பம்: ஒரு பெண்ணியல் நோக்கு
"சமூகம் என்பது ஆணும் பெண்ணும் இணைந்த ஓர் அமைப்பாகும். இருபாலினருக்கும் தனித்தன்மையான இயல்புகள், திறன்கள் உள்ளன. காலங்காலமாக சமூகத்தினால் கட்டமைக்கப்பட்டுள்ள ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பால், 'மனித உயிரி' என்ற வகையில் இருபாலாரும் சமமானவர்களே." என்பதனை நிறுவ முனையும் ஆய்வுரையாளர், கௌரி கிருபானந்தனின் மொழிபெயர்ப்புச் சிறுகதைகளை கையில் எடுத்துக் கொள்கிறார்.
கௌரி கிருபானந்தன் அவர்களை தமிழ் வாசகர்கள் நன்கு அறிவார்கள். தெலுங்கில் இருந்து பிரபலமான சிறுகதைகளை குமுதத்திற்கு மொழிமாற்றம் செய்து தந்தவர். குமுதத்தின் வெற்றிகரமான மொழிமாற்றத் தொடர்களில் இதுவும் ஒன்று. இவரது மொழிமாற்றக் கதைகள் பலவற்றை முன்வைத்து ஆய்வாளர் இத்தலைப்பின் கீழ் ஆய்வை செய்திருக்கிறார். ஆய்வில் கிருபானந்தனின் சிறுகதைகளில் பலகூறுகளின் வழியே வெளிப்படும் பெண்ணிய நிலையின் சிதைவுகளை துல்லியமாக பதிந்திருக்கிறார். குறிப்பாய், ஆய்வாளர் இந்த ஆய்வை மிகுந்த ஆர்வமுடனும் சிரத்தையுடனும் செய்திருப்பதைக் காணமுடிகிறது! பெண்ணின் பிம்பத்தைத் தூக்கிப் பிடிக்கும் இப்படியான கதைகளை விடுத்து, யதார்த்தமாய்ப் பெண்ணியம் பேசும் நவீன கலை இலக்கியம் சார்ந்த கதைகளைத் தேடி எடுத்து அதனில் காணும் சாதக பாதகங்களை ஆய்வாளர் கண்டறிந்து, அதன் வழியே 'பெண்ணியல் நோக்கு' எழுதியிருக்கும் பட்சம், அந்தச் சவாலான பணியை எல்லோரும் வியக்க வழிவகுத்திருக்கும்.
3. ஈழத்துப் பெண் கவிஞர்களின் படைப்புகளில் பால்நிலை வெளிப்பாடு: ஒரு நோக்கு
"எண்பதுகளின் ஆரம்பத்தில் ஈழத் தமிழ்ச் சமூகத்தில் பெண்களின் நிலை, அவர்களின் பல்வேறு பிரச்சினைகள், பெண் விடுதலை, பெண்நிலைவாதம் முதலான அம்சங்கள் கூர்மையாக முனைப்புப் பெறத் தொடங்கின. இதனை ஈழத்துப்
பெண்களின் கலை இலக்கிய முயற்சிகளினூடே நாம் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது" என்ற பிரகடனத்துடன், ஆய்வாளர் இக்கட்டுரையில் ஏகப்பட்ட ஈழத்துப் பெண் கவிஞர்களின் பெயர்களைப் பட்டியலிட்டிருக்கிறார். அதனில்,
இஸ்லாமியப் பெண் கவிஞர்கள் வியப்பளிக்கும் விதத்தில் ஒருபாடு இருக்கிறார்கள்! அவர்களில் சிலரது கவிதைகளை தமிழகத்து சிற்றிதழ்களிலும், இணையப் பக்கங்களிலும் நான் வாசித்திருக்கிறேன். வியந்தும் இருக்கிறேன்.
இக்கட்டுரையில் சில ஈழத்து பெண்கவிஞர்களின் பால்நிலை வெளிப்பாட்டின் தலைப்புக்கு ஒப்ப கவிதைகள் சிலவற்றை உதாரணத்திற்குத் தந்திருக்கிறார். அதனில் பல சிறப்பாக இருக்கின்றன. பால்நிலை வெளிப்பாட்டை, கவிதைகளில்காண
ஈழத்துப்பெண் கவிஞர்களுக்குச் சொல்லவா வேண்டும்? உதாரணத்திற்கு, தங்கையும் கவிஞருமான
அனார் இஸ்ஸத் ஒருவரே போதுமே! கவிதையில் பால் நிலை வெளிப்பாட்டில் அவரை விஞ்ச தமிழகப் பெண் கவிஞர்களும்தான் ஏது?.
4. "கூண்டுப் பறவை பாடுவதேன் என நானறிவேன்"
இந்தத் தலைப்பின் கவிதை வரிகளுக்கு சொந்தமானவர் கவிஞர் '
மாயா அஞ்சலோ!'
அமெரிக்க கருப்பின மக்களில் ஒருவராக அறியப்படும் 'மாயா அஞ்சலோ' தன் மக்களின் விடுதலைக்காகத் தன்னை அர்ப்பணித்தவர். இவரது பிம்பம் மலைக்க வைப்பதாக இருக்கிறது. புகழ்பெற்ற கவிதாயினி, கல்வியாளர், நாவலாசிரியர், நாடகாசிரியை, நடனக் கலைஞர், நடிகை, படத் தயாரிப்பாளர், பத்திரிகையாளர், வரலாற்றாசிரியர், மனித உரிமைப் போராளி... என்று இப்படி நீள்கிறது அவரது கீர்த்தி. அவரது கவிதைகள் தன் மக்களின் விடுதலையைப் பற்றி பேசுகிறது.
அதாவது அதிகாரத்தை நோக்கி உரிமைப் போர் நிகழ்த்துகிறது.
இவரது கவிதைகளில் ஒன்றை மொழியாக்கம் செய்து தன் ஆய்வில் பதிந்திருக்கிறார் ஆசிரியர். அந்த மொழியாக்கக் கவிதை சிறப்பாகவே உள்ளது. வரலாற்று இழிவென்னும் / குடில்களைத் தாண்டி / நான் எழுவேன்! / வலிகளில் வேரோடிய / கடந்தகாலத் தடமிருந்து / நான் எழுவேன்! / நான் ஒரு கருங்கடல் / ஆழ்ந்து அகன்றவள் / பொங்கியே ஆர்த்தெழும் / பேரலை ஆவேன்! / பயமெனும் இருள்களைப் / புறந்தள்ளி எழுவேன்! - இப்படி போர் முழக்கமிடும் 'மாயா அஞ்சலோ' கவிதையினை அவரது ஆய்வினூடே ஆசிரியர் இங்கே பதிந்திருக்கிறார் என்பதை நாம் ஆய்ந்தால், 'அதிகாரத்திற்கு எதிரான தன் குரலை' மாயா அஞ்சலோவின் குரல் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் எனக் கொள்ளலாம்.
5. போரும் கவிதையும்: மஞ்சுள வெடிவர்தனவின் மனிதத்தை நோக்கிய சகோதரத்துவக் குரல்
சிங்கள கவிஞரான மஞ்சுள வெடிவர்தன-வை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டிருக்கும் ஆய்வாளர், அவரை மிகவும் மெச்சுகிறார். ஈழச் சகோதரர்கள் மீது சிங்கள அரசு நிகழ்த்திய யுத்தத்தை இந்தச் சிங்கள கவிஞர் சாடி பல கவிதைகள் எழுதியதின் பொருட்டு, அரசின் கோபப் பார்வை அவர் மீது விழ, அவர் தற்போது புலம்பெயர்ந்து வாழ்கிறார் என்றும், இன்னமும் அவர் தன் நிலையினை மாற்றிக் கொள்ளாது, சிங்கள அரசை எதிர்த்துக் கவிதைகள் எழுதிக் கொண்டிருப்பதாகவும் தகவல் பதியப்பட்டிருக்கிறது.
"பொதுவாகவே கலை இலக்கியவாதிகளுக்கு இன, மத, மொழி, பிரதேச வேறுபாடற்ற மனிதநேயமும் அநீதிக்கு எதிரான தார்மீகக் கோபமும் இரத்தத்திலேயே கலந்திருக்கும் என்பார்கள். அந்த வகையில், இலங்கை வாழ் தமிழ் மக்கள் இப் போரினால் அனுபவித்த துன்ப துயரங்கள் குறித்துப் பெரும்பான்மைச் சிங்கள இன ஊடகவியலாளரும், கலை இலக்கியவாதிகள் சிலரும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்துள்ளனர். அவர்களுள் 90-களில் தென்னிலங்கையில் இடதுசாரிச் செயற்பாட்டாளராக தீவிரமாய்ச் செயற்பட்ட மஞ்சுள வெடிவர்தனவும் ஒருவர்" என்பதாக ஆய்வாளரின் குறிப்பை வாசிக்கும்கால் நமக்கு மஞ்சுள வெடிவர்தன மீது தனியொரு மரியாதை துளிர்க்கத்தான் செய்கிறது. உதாரணம் காண்பிக்கப்பட்டிருக்கும் அவரது கவிதைகளும் புரட்சித் தீயாகத்தான் இருக்கிறது.
6. கவிதை மொழியாக்கமும் மொழிபெயர்ப்புக் கோட்பாட்டுப் பிரச்சனைகளும்: சில அனுபவக் குறிப்புகள்
இந்த தலைப்பின் கீழ் வெளிப்பட்டிருக்கும் கட்டுரையை உச்சி முகரலாம். ஆய்வாளரின் அனுபவக் குறிப்புகள் மெச்சத்தகுந்தவை. மொழியியல் குறித்து அவரது அறிவு பரந்துபட்டு இருக்கிறது. அறிதல் புரிதலிலான நுட்பமும், அதனை வெளிப்படுத்தும் மொழியின் கூர்மையும் வியக்கவைக்கிறது.
"காலத்துக்குக் காலம் அறிஞர்களிடையே கவிதை மொழிபெயர்ப்பு சாத்தியமா இல்லையா என்ற நீண்ட பல விவாதங்களும் மாறுபட்ட கருத்தாக்கங்களும் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கவிதை மொழிபெயர்ப்பின் போது கவித்துவம் இழக்கப்படுவதாகச் சிலர் கருதுகின்றனர்." என்று ஆய்வாளர் தனது கட்டுரையின் ஓரிடத்தில் குறிப்பிட்டிருப்பது மெத்த சரி. 'ஒரு கவிதை மொழியாக்கத்தின் போதுதான் மரணமடைகிறது' என்று ஒரு சொல் உண்டு. அது சரியே என்பது என் கட்சி..
தீர்க்கமான இன்னொரு மொழி கவிஞனின், பாங்கான கவிதையை மொழிமாற்றத்தில் சிதைவுகள் நிகழாது பிழைக்கவைத்துவிட முடியாது. பல மொழிக்காரர்களும் அக் கவிஞனின் கவிதையை வாசித்து பலன் அடையட்டுமே என்கிற சிந்தையில் தேர்ந்த மொழி மாற்றக்காரனால் மொழிமாற்றம் செய்கிற போது கூட அக்கவிதையின் சாரத்தைதான் தரமுடியும் என்கிற அளவில்தான் மொழிமாற்றம் அமைகிறது. அதுவும் அக்கவிதை இரண்டு மொழியை சுற்றிக் கொண்டு மூன்றாவது மொழியில் மொழிமாற்றம் கொள்கிற போது.., குற்றுயிரும் கொலையுயிருமாகப் பாவப்பட்டுவிடும்.
உரைநடையில் மொழிமாற்றத்தின் இழப்புகள் பெரும்பாலும் குறைவு. மூலமொழியை ஒத்த அழகியலோடு மொழிமாற்ற உரைநடை சங்கதிகள் சிலவற்றை நான் வாசித்திருக்கிறேன். கிளர்ச்சியும் கொண்டிருக்கிறேன். அத்தகையக் கிளர்ச்சி கவிதை மொழிமாற்றத்தில் சாத்தியமாகிக் கண்டதில்லை.
இக்கட்டுரையின் கீழ் ஆய்வாளர் பல குறிப்புகளை வைத்திருக்கிறார். பல்வேறு மொழிக் கவிதைகளை மொழிமாற்றித் தந்தும் இருக்கிறார். அது அவரின் அபரிமிதமான மொழிமாற்ற ஈடுப்பாட்டை நமக்குச் சொல்வதாக இருக்கிறது. இப்படி நான் சாதாரணமாகச் சொல்லிவிட்டாலும், மொழிமாற்றத்தை முன்வைத்து சகலவிதமான கோட்பாடுகளையும் அவர் குறையில்லாமல் சொல்லி இருப்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.
7. மொழிபெயர்ப்புத் துறையில் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு: சில குறிப்புகள்
'மொழிபெயர்ப்புத் துறையில் இலங்கை முஸ்லிம்களின் பங்களிப்பு' எனும் இக் கட்டுரையின் தொடக்கத்தில் ஆய்வாளர் இப்படிச் சொல்கிறார், "இலங்கை முஸ்லிம்களாகிய நம்மிடத்தில் உள்ள மிகப் பெரிய கொடை நமது பன்மொழி அறிவு என்றால் அது மிகையல்ல. அந்தக் கொடை மூலம் அன்றும் இன்றும் இலங்கை முஸ்லிம்களாகிய நாம், நம் தாய்த்திரு நாட்டிற்கு அபரிமிதமான சேவைகளை ஆற்றி வந்துள்ளோம்" என்று பெருமைப்பட்டிருக்கிறார். அந்தப் பெருமைக்கு ஏற்ப மொழிபெயர்ப்புத் துறையில் முஸ்லிம்களின் பங்களிப்பை நிறையவே பட்டியல் இட்டிருக்கிறார். இந்தப் பட்டியல் தமிழக முஸ்லிம்களை நிச்சயம் தலைகுனியச் செய்யும். பெருவாரியாக தமிழக முஸ்லிம்கள் இப்படியெல்லாம் ஈடுபாடு கொண்டதில்லை. எழுத்தும் அதனையொட்டிய சேவையும் இங்கே நம்மவர்களுக்கு ஹராம் , இரண்டு பேர்கள் நீங்கலாக. ஒருவர் பேராசிரியர்
நாகூர் ரூமி, இரண்டாம் நபர்
குளச்சல் மு. யூசுப்.
சமயநூல் மொழிபெயர்ப்பு, ஆக்க இலக்கிய மொழிபெயர்ப்பு, கவிதை மொழிபெயர்ப்பு, புனைகதை மொழிபெயர்ப்பு, சிறுவர் இலக்கியம், சமூகவியல் ஆய்வு, வரலாறு மற்றும் கலைத்துறை சார்ந்த மொழிபெயர்ப்புகள் என ஏராளமான மொழிபெயர்ப்புகளை இலங்கை இஸ்லாமிய வல்லுனர்கள் செய்திருக்கிறார்கள் என்பதை இக்கட்டுரையாளர் பெருமை பொங்கக் குறிப்பிட்டிருப்பதில் நமக்கும் பெருமையாக இருக்கிறது.
இந்த வரிசையின் தொடர்ச்சியாக மேலும் சில கீர்த்தி பெற்ற மொழிபெயர்ப்பாளர்களை ஆய்வாளர் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். இலங்கையின் தலைசிறந்த மொழிபெயர்ப்பாளர்களுள் ஒருவரான பண்ணாமத்துக் கவிராயர், 'சோவியத் நாடு' தமிழ்ச் சஞ்சிகைக்காக ஏராளமான மொழிபெயர்ப்புகளைச் செய்துள்ளார் என்றும், அபுதாலிப் அப்துல் லதீஃபும் பல்வேறு இடதுசாரிக் கொள்கை சார்ந்த கட்டுரைகளை மொழிபெயர்த்துள்ளதாய் அறியக்கிடைக்கின்றதெனவும் ஆய்வாளர் பெருமை கொள்கிறார்.
இந்தத் தலைப்பின்கீழ் ஆய்வாளர் செய்திருக்கிற ஆய்வின் கடுமையான முயற்சிகள் மலைக்கவைக்கிறது. தன்னார்வத்துடன் அவர் இதனை செய்திருப்பதாகவே யூகிக்க முடிகிறது.
தமிழில் பட்டப்படிப்பும், மொழிமாற்றத்திற்கான டிப்ளமோ மாணவர்களுக்கான கற்பித்தல் அனுபவமும் பெற்ற ஒருவரால் இந்த அளவில் இந்த ஆய்வை நிகழ்த்தி வெற்றி கொண்டிருப்பது விந்தை! கலை இலக்கியத்திலும், அதன் வாசிப்பிலும், ஆங்கில அறிவை வளர்த்துக் கொண்டமையிலும், மொழிமாற்றச் சிறப்பாலும், மேலாய் படைப்பில் சுய ஆர்வம் கொள்வதாலும் ஆய்வாளருக்கு இந்த வெற்றி இந்த அளவில் சாத்தியமாகி இருக்கிறது. இவரது குடும்பப்
பின்னணியைச் சுட்டி, இவரது கலை இலக்கிய வெற்றியோடு முடிச்சுப் போட்டு ஓரிடத்தில் ஒரு குறிப்பைக் கண்டேன். அது குறித்த மேற் தகவல்கள் இல்லை. இரத்த வழியிலான பின்னணி ஒருவரை இந்த அளவில் செயலாற்றும் படிக்கு வாய்ப்பு உண்டுதான். மறுப்பதற்கில்லை. இதனைக் கொண்டு ஆய்வாளரது சுய முயற்சியினை நாம் குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. இன்னும் அவர் இப்படியான பல ஆய்வுகளையும் தீர்க்கமான நாவல்களையும் கொண்டுவர வேண்டும்.
கொண்டுவரவும் வருவார். நம்புகிறேன்.
தமிழகத்து நவீன கலை இலக்கியத்தின் மூத்த விமர்சகரான
க நா சு அவர்கள் ஒன்றைச் சொல்வார்கள். தமிழின் நவீன படைப்புகளுக்கு முதல் எதிரி பல்கலைக்கழக தமிழ்த்துறை முதல்வர்கள்தான் என்று. தமிழில் நவீனம் பெரும் வளர்ச்சி கொண்ட பிறகும் அவர்கள் இந்தப் பக்கம் திரும்பியே பார்ப்பதில்லை என்பார். தீண்டாமை பாராட்டுகின்றார்கள் என்பார். தமிழ்ப் படிக்கும் மாணவர்களும் கூட பழந்தமிழ் ஒட்டியே சிந்திப்பவர்களாக, இயங்குபவர்களாக இருக்கின்றார்கள் என்றும் கைசேதப்படுவார். இங்கே ஆய்வு செய்திருக்கும் லறீனா அப்துல் ஹக் அவர்கள் தமிழ் படித்தவர். பல்கலைக் கழக்கத்தோடு நல்லுறவு கொண்டவர். அதனாலோ என்னவோ அவரது ஆக்கங்கங்களில் ஆங்காங்கே அந்தப் பழமை எதிரொலிப்பு இல்லாமலில்லை. குறிப்பாய் அவரது கவிதைகளில். அதனைக் காணமுடியும்.
ஆய்வாளர் இன்றைய தமிழ் வளர்ச்சியினை ஒட்டி நவீன கலை இலக்கிய வட்டத்திற்குள் நுழைந்து பார்க்கும் பட்சம் யாரும் சொல்லாமலேயே மொழியில் பல அற்புதங்களைத் தானே நிகழ்த்துவார் என்பது என் நம்பிக்கை. தமிழக நவீன கலை இலக்கியப் படைப்பாளிகளின் படைப்புகளின் மீதும், சிற்றிதழ்களின் மீதும், நவீன கலை இலக்கியப் படைப்புகளை வெளியிடும் வெளியீடுகளின் மீதும் அவருக்கு ஆர்வம் வாய்க்க வேன்டும். ஒரு நிமிட யோசிப்பில் அது அவருக்கு சரியெனத் தோணும் பட்சம் என் நம்பிக்கை வெல்லும்.
***
நன்றி :
தாஜ் ,
லறீனா அப்துல் ஹக்
**
சில சுட்டிகள் :
'துருவம்' நேர்காணல்
ஒவ்வொரு புள்ளியிலும் தொடங்கி... - பெண்ணியம் இதழில் வெளியான கட்டுரை
லறீனா ஏ. ஹக்கின் 'ஒரு தீப்பிழம்பும் சில அரும்புகளும்' நாவல்: சில குறிப்புகள் - எல். வஸீம் அக்ரம்
Crossing_fires-lareena (Youtube)