Monday, June 30, 2014

கிளிநொச்சியில் வண்ணத்துப்பூச்சிகள் - ஷீலா டோமி சிறுகதை (தமிழில்: ஆசிப் மீரான்)

கேரள மாநிலம் வயநாட்டில் பிறந்த ஷீலா டோமி வசிப்பது கத்தர் நாட்டின் தோஹா நகரத்தில். மலையாள ஏடுகளில் நிறைய சிறுகதைகளும் கவிதைகளும் எழுதியிருக்கும் இவர் வானொலி நாடகங்கள், தொடர்களுக்கும் பங்காற்றியிருக்கிறார். இவரது சிறுகதைகளுக்காக புழா.காம், அரங்கு  உள்ளிட்ட இலக்கிய அமைப்புகளிடமிருந்து பரிசுகளை வென்றிருக்கிறார். - ஆசிப் மீரான்

***

கிளிநொச்சியில் வண்ணத்துப்பூச்சிகள்
மலையாளத்தில்: ஷீலா டோமி, 
தமிழில்: ஆசிப் மீரான்
----------------------------------

2009 மே மாதத்தில் ஒரு மாலைப் பொழுது இடம் துபாயில் ஒரு 20 மாடி அடுக்ககக் கட்டடத்தில் ஒரு வீடு

”அம்மா டிவியில் நியூஸ் போடலாமா?” அதைச் சொன்னது லட்சுமி

லச்சு என்றுதான் அப்பா அவளை அன்போடு அழைப்பார். அவளுக்கு அம்மா இல்லை. அவள் குழந்தையாயிருக்கும்போதே அம்மாவை இழந்து விடடாள். தன் வீட்டின் அறையில் தொங்கும் புகைப்படத்தில் மடியில் தன்னை வைத்திருக்கும் தாயின் முகத்தில் பூத்திருக்கும் புன்னகையை அவள் மனதின் ஓரத்தில் எங்கோ பத்திரமாகக் காத்து வைத்திருக்கிறாள். அப்பாவின் நெஞ்சின் சூட்டின் கதகதப்பில் படுத்துறங்கிய குளிர்கால இரவுகளில் அம்மா அவளது கனவில் வந்து அவளுக்கு முத்தம் கொடுத்ததுண்டு.

இதுபோக இருப்பது ஒரு அண்ணன். லச்சுவின் அன்பான அண்ணன். அவனையும் அப்பா கஷ்டப்பட்டுத்தான் படிக்க வைத்தார். ஆனால் என்ன செய்வது? அவனும் அப்பாவைப் போல கூலி வேலைக்குத்தான் போக வேண்டிவந்தது. படித்தவர்களுக்கு மட்டும் இலங்கையில் வேலை எங்கே கிடைக்கிறது? லட்சுமி வீட்டு பணிப்பெண் விசாவில் வளைகுடா வந்து விட்டாள். இப்போது அவள் இந்துவின் வேலைக்காரி.

அலுவலில் இருந்து வந்து வரவேற்பறையில் ஓய்வாக அமர்ந்து கொண்டு லட்சுமி தந்த தேநீரை சுவைத்துக்கொண்டே, ’ஆன் ஃப்ராங்கின் டயரிக் குறிப்புகளை’ப் புரட்டிக் கொண்டிருந்தாள் இந்து.

”அம்மா டிவியில் நியூஸ் போடலாமா?”
லட்சுமி இரண்டாம் முறையும் கேட்டதும் புத்தகத்திலிருந்து தலையுயர்த்தினாள் இந்து. தொலைக் காட்சியில் யுத்தக் காட்சிகள். லட்சுமியின் முகம் வாடியது. இலங்கையில் யுத்தம் தீவிரமான நாளில் இருந்தே அவள் அப்படித்தான். எதிலும் உற்சாகமில்லை. எப்பொழுதும் ஒரே சிந்தனைமயம்தான். இந்து வீடு திரும்பினால் காணக் கிடைப்பது அடுக்களையில் கழுவாமல் குவிந்து கிடக்கும் பாத்திரங்களும், துடைத்து கழுவப்படாமல் அழுக்காகவே இருக்கும் தரையும்தான் - லட்சுமியின் மனதைப் போல.

”எனக்கு ஒரு வேலையும் ஓடலம்மா. எனக்கு ரொம்பப் பயமா இருக்கு. எங்கப்பாவும் அண்ணனும் கிளிநொச்சியில் இருக்காங்க” அவளது மனது நெறிகட்டியிருந்தது.
“ஒண்ணும் ஆகாதும்மா. கவலைப்படாதே. எல்லாம் அந்த கடவுள் காப்பாத்துவார்”

மனதை மரக்கச் செய்யும் காட்சிகள். நூல் பாலங்கள் வழியாக அகதிகளின் பிரவாகம். வெயிலிலும் யுத்தத்திலுமாக காய்ந்து கிடக்கும் மனிதச் சடலங்கள். தெருவோரங்களில் கூட்டியிட்டிருப்பது ஜீவனுள்ளவர்களா? ஜீவனற்றவர்களா? மீதியிருப்பவர்கள் கதறி அழுகின்றனர். வேறு சிலர் மரத்துப் போய் அமர்ந்திருக்கின்றனர். அவர்களுக்கிடையில் தேம்பி அழுது கொண்டு காலை இழுத்து நடந்து செல்லும் ஒரு பெண் குழந்தை. பாவம்! காலில் காயம்பட்டிருப்பது போலத் தோன்றுகிறது.

அருகிலிருந்த மகள் மீனுக்குட்டியை தன் மார்போடிழுத்து அணைத்துக் கொண்டாள் இந்து ஒரு நடுக்கத்துடன்.

“அம்மா, அந்த பாப்பா ஏம்மா அழுவுது?”  தொலைக்காட்சியை நோக்கிக் கையைக் காட்டி மீனுக்குட்டியின் கேள்வி. என்ன சொல்வது? என்ன சொல்லாமலிருப்பது? குழந்தைகளுக்கு இதுபோன்ற காட்சிகளைக் காட்டாமலிருப்பதுதான் நல்லது.

“அந்த பாப்பா அவங்க அம்மாவைத் தேடுதுடா செல்லம்”
“நோ.நோ.நோ. இல்ல. அந்த பாப்பாவோட அம்மா அங்க இருக்காங்க. பாருங்க” - சரிதான். மீனுக்குட்டியின் யூகம் சரியென்றால் அங்கே இறந்து கிடக்கும் தனது பிரியப்பட்டவனின் மார்பில் சாய்ந்து அழும் எலும்பும் தோலுமான அந்தப் பெண் தான் அந்தக் குழந்தையின்  அம்மாவாக இருக்கும். அப்படியானால் இறந்து கிடப்பது அந்தக் குழந்தையின் தகப்பனாக இருக்கலாம். கஷ்டம்! எந்தப் போராட்டத்தின் மீதியும் இப்படித்தானோ?

”அவங்க கொன்னுடுவாங்க. எல்லாரையும் கொன்னுடுவாங்க.. கொலைகாரப் பாவிங்க எல்லாரையும் கொன்னுடுவாங்க” லட்சுமியிடமிருந்து அலறல் வெளிப்பட்டது. ஒருபொழுதும் மழைபெய்யாத பாலைவனத்தின் சூடான காற்றாக மாறினாள் லட்சுமி

“லட்சுமி, ராணுவமா அல்லது புலிகளா யார் அவங்களைக் கொன்னதுன்னு நமக்கெப்படி தெரியும்? புலிகளும் பொதுமக்களோடு சேர்ந்து ஒளிஞ்சிருக்காங்க இல்லையா? தப்பிக்க நினைக்குறவங்களை அவங்களும்தான்  சுடுவாங்க”

இந்து பேசுவதைக் கேட்டு லட்சுமியின் முகம் சிவந்து விரிந்தது. கண்களில் தெரிந்த முகபாவனை வெளிப்படுத்துவது கோபமா அல்லது சங்கடமா என்பது இந்துவால் வாசிக்க முடியாததாக இருந்தது. அடக்கி வைத்த தெல்லாம் அணை உடைந்து ஒழுகுவது போலானது

“சோஸலிஸ்டுகள்ம்மா அவங்கள்லாம். புரட்சிக்காரரகள். நீங்க புலிகள்ன்னு சொல்லி அவங்களை  பயங்கரவாதிகளாக்குறீங்க. அடக்கியாண்டதும், தொடர் இம்சைகளும் தொந்தரவும் தாங்காமதான் அவங்க இயக்கமானாங்க. அடிமையாக்கப் பட்டதாலத்தான அவங்க ஒண்ணா சேர்ந்தாங்க. அவங்களைக் கொன்னு ஒழிச்சுட்டா தீர்ந்திடுமா தமிழங்க பிரச்னை?”

இந்து அப்படியே ஆடிப் போனாள். யாரிவள்? சோஸலிசத்தையும், புரட்சியையும் பற்றிப் பேசுகிறவள்? லட்சுமியின் இந்த முகம் இந்துவுக்குப் புதிதாக இருந்தது. லட்சுமிக்குத் தேவையானஅளவு படிப்பும், புத்திசாலித்தனமும் இருக்கிறதென்பதை அவள் ஏற்கெனவே அறிவாள். இல்லாவிட்டால் இந்தச் சில மாதங்களுக்கிடையில் இந்தப் பெண்ணால் இப்படி சரளமாக மலையாளம் பேச முடியுமா? மட்டுமில்லாமல் ஆங்கிலப் பத்திரிகைகளை அவள் வாசிப்பதையும் காணலாம். ஒரு பாடலை முணுமுணுத்துக் கொண்டு கறுப்பு வண்ணத்துப்பூச்சியாக சிறகடித்த அவளை எல்லாருக்கும் பிடித்திருந்தது.

என்றாலும், சொந்த லாபங்களுக்காக நிரபராதிகளான மக்களைச் சுட்டுக் கொல்லும் புலிகளை இவள் நியாயப்படுத்துவது ஏன்? ராஜீவையும் இன்னும் சில இலங்கைக்காரர்களையும் கொன்றவர்களை அங்கீகரிக்கும் மனதில்லை இந்துவுக்கு. ஆயுதப் புரட்சிகளேதும் தலையிலேறாத பெரும் காந்தி பக்தையாயிருந்தாள் இந்து. தன்னால எடுத்தெறிய முடியாதபடி என்னவோ லட்சுமியின் மனதில் ஆழ வேரூன்றியிருக்கிறது என்று தோன்றியது அவளுக்கு.அல்லது திருத்தப்பட வேண்டியது தன்னுடைய முடிவுகளா?

சாப்பாட்டு வண்டி வரும்போது ஒரு துண்டு ரொட்டிக்காக போட்டி போட்டுக் கொண்டு ஓடுபவர்கள். தாகம் நீக்க குடிநீர் கூட இல்லாமல்... மருந்தில்லாமல்... துணிகள் இல்லாமல்.... பாவப்பட்டவர்கள்!!

உண்மையில் சொல்வதென்றால் சாத்தானுக்கும் கடலுக்கும் நடுவில்.. உயிரைப் பணயம் வைத்து அவர்கள் நடமாடுகிறார்கள். இந்துவுக்கு ஒரு பைபிள் கதை நினைவுக்கு வந்தது. இஸ்ரேல்காரர்களின் கதை. தெய்வத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள். முன்பக்கம் செங்கடல். பின்பக்கம் ஃபிர் அவுணின் படைகள். அன்று செங்கடல் பிளந்து அவர்களைக் காப்பாற்ற தெய்வம் அவர்களோடிருந்தது. இன்று?!

“இன்று ரகசியமா தப்பிக்க நினைக்குறவங்களுக்கு உதவாம, யார் அடிக்கிறாங்களோ அவங்களுக்குத்தான் கடவுள் துணையா இருக்கிறாரென்று தோன்றுகிறது லட்சுமி.. ஆகாயத்திலிருந்து ’மன்னா’ இறங்குவதற்குப் பதிலாக ‘ஷெல்கள்’ அல்லவா வீழுகின்றன?”

இந்து சொல்லி முடிக்குமுன்னரே லட்சுமி புகையத் துவங்கினாள்

“அம்பத்தெட்டில் தமிழர்களைச் சிங்களவர்கள் சுட்டுக் கொன்றபோது தெய்வம் எங்கேயிருந்தது? தூங்கிட்டு இருந்ததா? அன்னைக்கு அனாதையானவர்தான் எங்கப்பா” லட்சுமி ஒரு பேரழுகைக்குத் தயாரானாள். ஒருபோதும் உறங்காத தெய்வத்தைப் பற்றிப் பேசி இனி அவளுக்கு ஆறுதல் சொல்ல முடியாதென்று இந்துவுக்குத் தோன்றியது. அவளுடைய சங்கடங்களையெல்லாம் கொட்டித் தீர்க்கட்டும். இந்து கேட்டுக் கொண்டிருந்தாள்

"முன்னால.. ரொம்ப வருசங்களுக்கு முன்னால.. பற்றியெரியும் நெருப்புக்கு இடையிலிருந்து ஒரு பத்து வயசுப் பையன் இறங்கி ஓடினான். கொளுந்து விட்டெரியும் வீட்டுக்குள் அகப்பட்டுக்கொண்ட தந்தையையும் தாயையும் அழைத்துக் கதறினான் அவன். அக்கிரமக்காரர்களின் அட்டகாசங்களுக்கு இடையில் தனது தங்கையின் கையைப் பற்றிக் கொண்டு அவன் ஓடினான். பின்னாலேயே துரத்தி வந்தவர்கள் அவனது கையிலிருந்தும் அவனது தங்கையைப் பறித்தெடுத்தார்கள். அவளது பிஞ்சு உடலில் செய்யக் கூடாததையெல்லாம் அவர்கள் செய்தபோது அவன் பயந்து உறைந்து ஒளிந்து கொண்டான். பாதி உயிர் போன நிலையில் தனது தங்கையை கொதிக்கும் தாரில் அவர்கள் வீசியெறிந்ததைக் காண நேர்ந்தபோது  அவன் சுயநினைவை இழந்தான்.

பின்னர் அவன் கண்விழித்தது ஒரு சிங்களப் பெண்ணின்  மடியில். அந்த விதவைப் பெண் அவனுக்கு மறு உயிர் கொடுத்தாள். உறக்கத்தில் அவன் அம்மாவை நினைத்துக் கதறும்போது, ’நான் உன் அம்மாதான்’ என்று சொல்லி அவனைக் கட்டியணைத்துக் கொள்வாள். ஆனால், அங்கேயும் அவனுக்குப் பாதுகாப்பில்லை. தன்னால் அந்த சிநேகவதியின் உயிருக்கும்  ஆபத்து என்பதை உணர்ந்து கொண்ட அவன் ஒரு இரவில் அவளது கால்களைத் தொட்டு வணங்கி அங்கிருந்தும் ஓடினான். தூரமான இடத்திற்கு. ரத்த தாகம் கொண்டவர்களின் கண்களுக்கு அகப்படாத தூரத்திற்கு. அப்படித்தான் லட்சுமியின் தகப்பனும் தெருமக்களில் ஒருவனானான்”

லட்சுமியின் கண்கள் நிறைந்து ஒழுகியது. பாசத்தை அள்ளி நிறைத்து தன்னை வளர்த்த அப்பாவின் நினைவுகள் அந்தக் கண்ணீரால் நிறைந்தது. தொலைவில், கிளிநொச்சியில் ஒரு துண்டு நிலத்தை வைத்துக்கொண்டு மகள் திரும்பி வரும் நாளையெண்ணி அப்பா காத்துக்கொண்டிருப்பாராக இருக்கும். பல சமயங்களிலும் அவள் தன்னருகில் இல்லாத அப்பாவோடு கதைத்தும் பேசியும் நடப்பதைக் காணலாம். தவிப்பாள். பிணங்குவாள். அதைக் கண்டு மீனுக்குட்டி கேலி செய்வாள் “ லச்சுவுக்கு பைத்தியம் பிடிச்சிருக்கு. தன்னால பேசிக்கிட்டு நடக்குறா”

”அம்மா.. சானல் மாத்தலாமா? இன்னைக்கு ஐ.பி.எல் மேட்ச். சச்சினும் ஜெயசூர்யாவும் அடிச்சு கலக்குவாங்க. நீங்க வேணா பாருங்க” - அது இந்துவின் மகன். எட்டாம் வகுப்பு படிப்பவன். காயமேற்றவர்களின் துடிப்போ எல்லாம் இழந்தவர்களின் கண்ணீரோ அவனுக்குப் பொருட்டில்லை அவனை அழ வைப்பதுமில்லை. போர், புரட்சி எதுவும் தெரியாமல் அவன் கம்ப்யூட்டரில் நண்பர்களோடு ‘சாட்’ செய்து கொண்டிருப்பான். அவனுக்கும் நண்பர்களுக்கும் பாலிவுட்டும், கிரிக்கெட்டும் மட்டுமே தாராளம். அதற்கிடையில் என்ன இலங்கை பிரச்சனை?

“மகனே, இந்த செய்தியைக் கொஞ்சம் பாருடா. இலங்கையிலே பிரச்னைகள்”
“ஓ.. லங்காவா? ஒரு காலத்துல ராவணன் சீதையை கடத்திக்கொண்டு போய் வச்சிருந்த இடம்தானேம்மா? அங்கே இன்னமும் யுத்தம் முடியலியா? வானர சேனை ஜெயிச்ச நாட்டுல புலிகள் சேனை ஜெயிக்குமா இல்லை  ..” அவன் வாய்விட்டுச் சிரித்தான். அவன் சிரித்தபோது அவன் கன்னத்தில் விழுந்த குழியைப் பார்த்தாள் இந்து

“சரித்திர புஸ்தகத்தில் இருக்கும்மா. அசோக சக்கரவர்த்தியோட மகள் சங்கமித்ரா போதி மரக்கம்பு நட்டு வச்ச நாடு... எனிவே.. ட்ரபுள் அண்ட் பெய்ன் எவ்ரிவேர்! ஐ டோண்ட் வாண்டு வேஸ்ட் மை டைம் ஆன் திஸ் அக்ளி மேட்டர்ஸ். ஸோ, லெட் அஸ் திங் ஆஃப் ஸம்திங் ப்ளெசண்ட். நல்ல பிள்ளையா சானலை மாத்துங்கம்மா” அவனிடம் என்ன சொல்வது?  கரிந்து விழுந்த நூறாயிரம் போதிமரக் கம்புகள் இந்துவின் மனதில் இற்று வீழ்ந்தன. எங்கேயோ நஷ்டப்பட்டுப்போன  அறிவுரைகள்!!

ஜெயசூர்யாவின் சிக்ஸ்ர்கள் உயரத்தில் பறக்கின்றன. மும்பை இந்தியர்கள் வெற்றி பெறப் போகிறார்கள். மகன் கை தட்டினான். உயர்ந்து எழுந்த பந்தோடு அவனும் குதித்துத் துள்ளினான்.
“சிக்ஸ்.. சிக்ஸ்” அவன் உரக்கச் சப்தமிட்டான்
லட்சுமியின் செல்பேசி சிணுங்கியது. “ஹலோ அண்ணா” பேசிக் கொண்டே அவள் உள்ளே சென்றாள். முகம் பார்த்தாலே தெரிந்தது அவள் காத்திருந்த அழைப்பு என்று

இந்து மீண்டும் ’ஆன் ஃபிராங்கின் டயரிக்குறிப்புகளோ’டு பயணம் துவங்கினாள். வெஸ்ட்போர்க், ஓஷ்விட்ஸ், ஜெர்மன் கான்செண்ட்ரேஷன் கேம்ப்கள். கேம்புகளுக்குள் நுழையும் அடைத்து நிறைக்கப்பட்ட கால்நடை வண்டிகள். அந்த வண்டிகளில் ஒன்றில் ஆன்ஃபிராங்க் என்ற சிறுமியும் இருந்தாள். ஜெர்மன் பட்டாளத்தின் பிடியில் அகப்படுவதற்கு முன்பாக ஒளிந்திருந்த இடத்திலிருந்து அவள் எழுதிய டயரிக் குறிப்புகள். வேட்டையாடப்பட்ட ஒரு சமூகத்தின் வேதனை. இந்த கான்செண்ட்ரேஷன் கேம்புகளுக்கும் அகதி முகாம்களுக்குமிடையில் என்ன வித்தியாசம்? சிந்தனைகள் தடைப்பட்டது.

மீனுக்குட்டி அழுது கொண்டு ஓடி வந்தாள். ”அம்மா.. வாங்கம்மா சீக்கிரம் வாங்கம்மா. லச்சு கதவைத் திறக்க மாட்டேங்குறா. அவ அழுதுக்கிட்டிருக்கா”

கதவுக்கு இந்தப் புறத்திலிருந்து லட்சுமியின் தேம்பல்களைக் கேட்க முடிந்தது. ஊரிலிருந்து ஏதோ துக்க செய்தி வந்திருக்க வேண்டும். ’கடவுளே! அவளுடைய அப்பாவுக்கேதாவது?’. அவளால் அதை சகித்துக்கொள்ள முடியாது. சங்கடத்தில் அவள் ஏதாவது அவிவேகமான செயலைச் செய்துவிட்டால்?? பூட்டிய கதவுக்கு இந்தப் பக்கம் இந்து பதறிப்போய் நின்றாள்.. அரபு நாடுகளின் சட்டங்கள் கடுமையானவை. வீட்டை விட்டு ஓடிப்போன பணிப்பெண்ணின் உடல் அனாதைப் பிரேதமாகக் கண்டெடுக்கப்பட்டதும், அந்தப் பெண்ணுக்கு வேலை கொடுத்தவர்கள் செய்யாத குற்றத்துக்காக ஜெயிலுக்கு அனுப்பப்பட்டதும் நடந்து அதிக நாட்களாகி விடவில்லை.

நடுங்கும் குரலுடன் இந்து அழைத்தாள்
 “லட்சுமி கதவைத் திற”
கதவு திறக்கப்படவில்லை
இந்துவின் சப்தம் உயர்ந்தது. ” கதவைத் திறன்னு சொன்னேன்”
“வேண்டாம்மா. லச்சுவை திட்டாதீங்கம்மா. லச்சு பாவம்தானே?” அம்மாவின் குரல் மாற்றத்தைக் கண்டு மீனுக்குட்டி அழத் தொடங்கினாள்

அழுகைக்கிடையில் அவள் அழைத்துக் கொண்டிருந்தாள் “லச்சு.. வெளில வா லச்சு.. இல்லேன்னா மீனுக்குட்டி உன்கூட பேசமாட்டேன்.. லச்சு வெளில வந்து எனக்கு வானம்பாடி கத சொல்லித்தா லச்சு” மீனுக்குட்டியின் அழுகையைத் தாங்க முடியாமல் லட்சுமி கதவைத் திறந்தாள். அந்தக் கண்களில் துக்கத்தின் கடலலை வீசிக் கொண்டிருந்தது - கடல் அலைகளில் ஆடி அலையும் தோணி. நிலைகுத்திய பார்வையுடன் அவள் நின்று கொண்டிருந்தாள்

“என்னாச்சு லட்சுமி, உங்க அண்ணன் போன்தானே வந்தது?”
“அவங்க கொன்னுட்டாங்க. என்னுடைய செல்வத்தை அவங்க கொன்னுட்டாங்க” சூறாவளிக் காற்று இதயத்திலிருந்தெழுந்து வந்தது போன்ற அலறலாக இருந்தது அவளது குரல். கடல் பொங்கியெழுகிறது. தோணி மூழ்கத் துவங்குகிறது. தோணிக்காரனும் கூடவே.. காப்பாற்றச் சொல்லி முறையிடும் கைகள் மேலெழுந்தும் கீழ் விழுந்தும்.. மேலெழுந்தும் கீழ் விழுந்தும்..

”செல்வம் யாரு? யாரு அவனைக் கொன்னது? புலிகளா?  அல்லது அவனே புலியாயிருந்தானா?” தெரியாமல் இந்து ஏதேதோ கேட்டு விட்டாள். லட்சுமிக்குள்ளிருந்த நெருப்பு பெரும் அனலாய் மாற அது போதுமானதாக இருந்தது

”பேசாதீங்க. நீங்க பேசாதீங்க. செல்வம் புலிதான். ஏன் நானும் புலிதான். ஏன் என்னைக் கொல்லணும்னு தோணுதா உங்களுக்கு?”

”லச்சு..சண்டை போடாதே லச்சு” மீனுக்குட்டி சிணுங்கத் துவங்கினாள். அவளைக் கட்டிப்பிடித்து லட்சுமி அழுதாள். அழுது முடித்ததும் அவள் ஒரு கதை சொன்னாள். வானம்பாடியின் கதை அல்ல. என்றைக்காவதொரு நாள் சுதந்திரத்தின் பொழுது விடியும்போது அவளருகில் வந்து சேருவதாகச் சொல்லிப் போனவனின் கதை. கடைசியில் ராணுவத்தின் குண்டு துளைத்த படகிலிருந்து கரையொதுங்கிய சவங்களில் ஒன்றாக மாறிப் போன அவளது செல்வத்தின் கதை..

கடல் பொங்கிப் பெருக்கெடுத்துக் கொண்டிருந்தது மீண்டும்.. மீண்டும்..
லட்சுமியின் கண்ணீரில் இலங்கை மூழ்கிவிடுமோவென்று இந்துவுக்குத் தோன்றியது. இங்கே ஜெயிப்பவர்கள் யார்? தோற்பவர்கள் யார்?

கண்ணீரில் மூழ்கியவாறே தனது நாட்குறிப்பில் லட்சுமி எழுதினாள். “இன்று மே 20. என் செல்வம்....”
அதை எழுதி முடிக்க அவளால் முடியவில்லை. அதற்கு முன்னரே இந்த பூவுலகப் பந்தங்களையெல்லாம் கடந்து போகும் ஏதோ ஒரு அகதிக் கூட்டத்தில் ஒருவளாக அவள் மாறிப் போயிருந்தாள் மண்ணில்லாதவளாக, மனதும் மரத்துப் போனவளாக.

இந்துவின் மகன் அப்போதும் துள்ளிக்குதித்துக் கொண்டிருந்தான். அதோ ஜெயசூர்யா அடித்த சிக்ஸர் பறந்து பறந்து உயர்கிறது. அப்போதும் கிளிநொச்சியில் வண்ணத்துப்பூச்சிகளின் ரகசியப் பயணம் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
***

நன்றி : ஷீலா டோமி, ஆசிப் மீரான்

Thursday, June 26, 2014

வானவில்:- - ஸ்ரீதர் நாராயணன் சிறுகதை

'திண்ணை'யில் வெளியான என் 'கதை'கள் சிலவற்றின் சுட்டி சரியாக வேலை செய்யாததால், சொடுக்கினால் 'ivalid story' என்று வேறு இணையமும் சொல்வதால்,  இணையற்ற சோகத்தில் இருந்தேன். (நல்லவேளையாக தாஜின் தமிழ்ப்பூக்களில் என் 'குழந்தை' பத்திரமாக இருக்கிறது  இந்த நொடி வரை) . இந்தப் பக்கங்களிலேயே அவைகளை பதிவேற்றலாம் என்றால் வாசகர்களின் நிலை நினைத்து ஒரே கவலை. அப்போதுதான் 'நான் உதவுகிறேன் சார்' என்று தன் சிறுகதையுடன் வந்தார் சகோதரர் ஸ்ரீதர் . காமெடியாக சொல்கிறேனே தவிர தவறாமல் நான் பார்க்கும் தளம் அவருடையது. அமீரகத் தமிழர்களுக்கு ஆபிதீனைக் காட்டிய அமெரிக்கத் தமிழரும் கூட. இவர் வெளியிட்ட பண்புடன் சிறப்பிதழுக்குப் பிறகுதான் இங்குள்ளோர் என்னை கண்டுபிடித்தனர் - 24 வருடங்களுக்குப் பிறகு (' சீறா-புறா-ஆனம் எழுதுனது நீங்கதானேன்னே..?' - சென்ஷி). ஸ்ரீதரின் சிறுகதைகளை விட அவரின் பதிவுகள் எனக்கு பிடிக்கும். 'காமோஷி பாணி', 'The Stoning of Soraya' என்று தேர்ந்தெடுத்து விமர்சித்த சினிமாக்களில் அவர் பக்கத்து 'கரிசனத்தை'யும் கண்டிருக்கிறேன். இந்தச் சிறுகதை பற்றி நாலு வரி எழுதச் சொன்னார். அதற்கெல்லாம் நான் தகுதியானவனல்ல என்பதால் ஒரே வரிதான்:  அனலடிக்கும் ஜூரம் அதிகமானது; கல்கி எஃபக்ட்! - ஆபிதீன்
***

வானவில்:-  - ஸ்ரீதர் நாராயணன்.
------------------------------------------------

'இன்டி...இன்ட்... இண்ட்ரா.... ஷேங்கர்.... ' கையிலிருந்த பேப்பரைப் பார்த்துக் கொண்டே கண்ணாடியை தூக்கிவிட்டுக் கொண்டு படித்த அம்மையார், சட்டென தலைநிமிர்ந்து, கொஞ்சம் கூச்சத்துடன் 'சரியாக உச்சரித்தேனா தெரியவில்லை' என்றார்.

பதினைந்து நிமிடமாக செல்ஃபோனை நிமிண்டிக் கொண்டு உட்கார்ந்திருந்த மனோகரி, சற்றே விடுதலையான உணர்வுடன், உற்சாகமாக எழும்பி கைகளை நீட்டிக் கொண்டு 'ஓ! சரியாகவே உச்சரித்தீர்கள் மிஸ். ரிட்டர். நான் மனோகரி ஷங்கர். இந்துவின் தாயார். இது ஷேங்கர்' 

மிஸஸ் ரிட்டர் என்றழைக்கப்பட்ட அம்மையார் சட்டென இணக்கமான பாவத்துடன் அப்படியே மனோகரியின் கையைப் பற்றிக் கொண்டு 'பிரமாதம்! உங்களை நன்றாக நினைவிலிருக்கிறது வாருங்கள் இப்படிப் போகலாம்' என்று அழைத்துக் கொண்டு போனார்.

இப்பொழுதெல்லாம் மனோகரியால் சட்டென அமெரிக்கர்களோடு ஒட்டிக் கொள்ள முடிகிறது.  எட்டு ஆண்டுகளுக்கு முன்னால் இந்திராவை இப்பள்ளியில் சேர்க்கும் எண்ணத்துடன் வந்தபோது, மருள் பார்வையும், குழறிய சொற்களுமாய் தடுமாற்றமாய் இருந்தவளா இவள்?  அதுவரை வேலூருக்கு வடக்கே பெங்களூரைத்தாண்டி சென்றவளில்லை.  அமெரிக்காவில் கால் பதித்த நாளிலிருந்து திருவிழாவில் தொலைந்து போன குழந்தை போல எப்போதும் தவிப்போடு காணப்படுவாள்.  ஒரு தொலைபேசி அழைப்பைக் கூட எதிர்கொள்வதில் அவ்வளவு பதட்டம்.  அக்செண்ட் பாதிப்பில்லாத ஆங்கில ரிக்கார்ட்டட் பதிலுக்கும் 'என்ன சொல்றான்னே புரியலியே' என்று பதைபதைப்பாள்.  இப்போதூ தோளிறக்க சட்டையும், லெக்கின்ஸும், ஸ்ட்ரெய்டனிங் கூந்துலும் வழுக்கும் ஆங்கிலமுமாக பளபளவென மாறிவிட்டாள்.  சமயத்தில் அவளே 'ய்யிண்டு' என்று அழைக்கும்போது சங்கருக்கு வியப்பாக இருக்கும்.

நேர்மாறாக சங்கர் கல்லூரிக் காலத்தில் காப்பாற்றி வைத்திருந்த முடியழகை எல்லாம் துறந்து முன்வழுக்கையை மறைக்க மொட்டை அடித்துக் கொண்டு, தாடையில் மடிப்புகளுடன், பியர் தொப்பையுடனும், பட்டைக் கண்ணாடியுடனும் மலச்சிக்கலுக்கு மருந்து சாப்பிட்டுக் கொண்டு நடுத்தர வயதை படுவேகமாக கடந்து கொண்டிருந்தான்.  பெண்கள்தான் எவ்வளவு வேகமாக வேரூண்றி கிளைபரப்பி நிலைபெற்று விடுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டான்.  மிஸஸ் ரிட்டர் அவர்கள் இருவரையும் பள்ளி முதல்வரின் அறைக்கு வழிநடத்தி சென்றார்.

'இதைப் பாருங்க' என்று மிசஸ். பர்னர் கையை நீட்டியபோதும் அந்த வியப்பு தொடர்ந்தது. சொல்லப்போனால் 'பெற்றோர் இருவரும் என்னை சந்திக்க வரவும்' என்று பர்னர் கையெழுத்திட்ட கடிதம் கிடைத்த போதே அவனுக்கு அந்த வியப்பு தோன்றியிருந்தது.. இத்தனை வருடங்களில் அவ்வப்போது சிற்சில விழாக் கொண்டாட்டங்களுக்கு எட்டிப் பாத்ததற்கு மேல் சஙகருக்கும் பள்ளிக்கும் எந்தவித தொடர்பும் இருந்ததில்லை.  மனோகரிதான் பெரும்பாலும் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு, கிறிஸ்துமஸ் கிஃப்ட், நூறாவது நாளுக்கு பிராஜெக்ட் என்று பள்ளிக்கான எல்லாவித சாங்கியங்களும் செய்து கொண்டிருப்பாள்.  இப்பொழுது கூட 'இண்டு சேங்கர் பேரண்ட்ஸ்?' என்று கேட்டு வரவேற்பறையிலிருந்து ப்ரின்சிபால் அறைக்கு இட்டு வந்தபோது கூட பர்னர் படக்கென எழுந்து வந்து மனோகரியை கட்டிப்பிடிக்காத குறையாக வரவேற்று குசலம் விசாரித்துக் கொண்டிருந்தார். சங்கரன் பக்கம் ஒரு தலையசைப்பு, அரை சிரிப்பு, பட்டும் படாமலும் ஒரு கைகுலுக்கல்.  

'என்னது இது?' என்று கேட்டவாறே மனோகரி வாங்கியபோதுதான் சங்கரன் கவனித்தான் பர்னர் கொடுத்தது ஒரு செல்ஃபோன்.  அதில் ஏதோ ஒரு வீடியோ படம் ஓடிக்கொண்டிருந்தது.  ஓடிக்கொண்டிருந்தது என்று சொல்ல முடியாது.  ஆடிக் கொண்டிருந்தது.  இருவர் ஆடிக் கொண்டிருந்தார்கள். ஓரிரு நொடிகள் கழித்துதான் சட்டென உறைத்தது.  ஆடிக்கொண்டிருந்த இருவரும் ஏடாகூடமாய் ஆடிக்... இல்லை.. இது வேறெதோ சமாச்சாரம் என்று உணர்ந்தபோது மனோகரி சுதாரித்து போனை உதறித் தள்ளியவாறு 'என்ன மிஸஸ். பர்னர் இது' என்று வீறிட்டாள். 

பர்னர் படக்கென அந்த போனை எடுத்து அங்கே இங்கே என்று தேடி அதை ஆஃப் செய்தார்.  'மன்னிக்கவும்.  உங்களை நிலைகுலைய செய்வது என் நோக்கமில்லை.  இது மிஸஸ் வாரனுடைய ஃபோன்.  அவர் குறிப்பிட்ட ஒரு சம்பவத்தை... உங்கள் பெண் இண்ட்டு  சம்பந்தப்பட்ட சம்பவத்தை உங்களிடம் விளக்கவே இதைக் காட்ட வேண்டியதாகப் போய்விட்டது'

அந்த ஏடாகூடமான வீடியோ பாடலுக்கும் பதினான்கு வயதுப் பெண் குழந்தைக்கும் என்ன சம்பந்தம்.... என்று உறைந்து போய் இருக்க பர்னர் விளக்க ஆரம்பித்தார்.

கடந்த வாரம் மிசஸ் வாரன் கைமறதியாக வைத்துவிட்ட போனைத் தேடி க்ளாஸ் ரூமுக்கு திரும்பி வந்தபோது இந்துவும் இன்னொரு பையனும் அந்த ஃபோனை வைத்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்களாம். அப்படி என்ன விவாதித்துக் கொண்டிருந்தார்கள் என்று சோதனையிட்டால் இந்தத் தளம் 'பார்வையிடப்பட்டதாக' காட்டியதாம்.  

'மிஸஸ் வாரன் சார்பாக நான் முதலில் மன்னிப்பு கோருகிறேன். இம்மாதிரியாக செல்ஃபோனை விட்டுப் போகும் தவறு இன்னொருமுறை நிகழாது.  அதே சமயம் நீங்களும் உங்கள் குழந்தைகள் பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.  இவையெல்லாம் பக்குவமாக கையாளப்பட வேண்டிய விஷயங்கள்.  எதுவும் தீர்மானமாக தெரியாத வகையில் நாங்கள் குழந்தைகளிடம் எதையும் விசாரித்து அவர்களை கூச்சப்பட வைப்பது முறையல்ல.  சம்பந்தப்பட்ட பையனின் பெற்றோரிடமும் யார் பெயரையும் குறிப்பிடாமல் பேசியிருக்கிறோம்'

மனோகரிதான் முதலில் சுதாரித்துக் கொண்டாள் 'ஹ... அவள் சிறு குழந்தை மிஸஸ் பர்னர்.  ஏதோ கவனப்பிசகு என்றே நினைக்கிறேன்.  மிஸஸ் வாரனை சந்திக்க முடியுமா?  முழுவிவரத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும் எனக்கு' என்றாள்.

'கண்டிப்பாக மேனோ.  எதிர்பாராவிதமாக மிஸஸ். வாரன் உடல்நலமின்றி விடுப்பில் இருக்கிறார்.  குழந்தைகளின் உலகம் மிகவும் எளிமையானது. மென்மையானது.   நாம் அனுமானிக்க முடியாத வேகத்தில் மாறக்கூடியதும் கூட.  நீங்கள் எவ்வளவு பொறுப்புமிக்க பெற்றோராக இருந்து வருகிறீர்கள் என்று எங்களால் நன்றாகவே அவதானிக்க முடிகிறது.  இது போன்ற நிகழ்வுகளை உங்களுக்கு தெரியப்படுத்துவது மூலம் குழந்தையை நீங்கள் சரியானபடி வழிநடத்த முடியும் என்றே நம்புகிறோம்'

அந்த சம்பவத்தின் முழு தாக்கத்தையும் உள்வாங்க சங்கருக்கு சில நிமிடங்கள் பிடித்தன.  இந்து, அவனுடைய சின்னஞ்சிறிய இளவரசி.  அவளைப்பற்றியா பேசுகிறான் இந்த ஓட்டைப்பல்லு வெள்ளைக்காரி? வேலூர் அப்பல்லோவில் ஒரு வெள்ளிக்கிழமை பின்னிரவில்தான் இந்து பிரசவமானாள்.  அந்நேரத்திலும் ஆஸ்பத்திரியின் அத்தனை நர்சுகளும், டாக்டரும் அவள் பிரசவத்தை கொண்டாடினார்கள்.  'உங்களுடைய பழைய துக்கத்தை போக்கும் வண்ணமாக வானவில் உதித்து விட்டாள்' என்று வாழ்த்துகள் குவிந்து கொண்டிருந்தன.  அதற்கு இரண்டு வருடங்கள் முன்னால் 6 மாத கர்ப்பம் தவறியபோது மனோகரிக்கு ஆறுதல் சொன்ன டாக்டர் திலகவதிதான் அந்த பிரசவத்தையும் பார்த்தார்.  'புயலுக்கு பின்னே தோன்றிய வானவில் இவள்'' என்று குறிப்பிட்டார்.  மருத்துவ உலகின் வழக்கில் ரெயின்போ சைல்ட் என்று குறிப்பிடுவார்களாம்.   

துடைத்த மெழுகு பொம்மையாக துணிப்பொதியில் சுருட்டின குழந்தையை கொண்டுவந்து சங்கரின் அம்மா மடியில் போட்டார்கள்.  'டாக்டர் சொன்ன மாதிரி இந்திர தனுசுடா இவ.  இந்திரா... உங்களுக்கான வசந்தம் இவதான்'  என்று சந்தோஷக் கண்ணீரோடு அம்மா சொன்னாள்.  

சங்கருக்கு இப்போதே அம்மாவை போய்ப் பார்க்க வேண்டும் போலிருந்தது.  

'என்னை லிண்டென் டெர்மினல் கிட்ட விட்ருங்க.  நான் பஸ் புடிச்சிப் போயிக்கிறேன்.  இன்னிக்கு ரிலீசுக்கு இருந்தே ஆகனும்னுட்டான் ஹெய்ன்ஸ்.  ஈவ்னிங் சீக்கிரம் வந்திடறேன்.  லெட்ஸ் டாக் அபவுட் திஸ் லேட்டர்'

மனோவை இறக்கிவிட்டதும் பெரிய வெற்றிடத்தில் நிற்பது போல் உணர்ந்தான்.  அலுவலகத்தை தவிர்த்து வீட்டுக்கு வந்து அம்மாவுக்கு தொலைபேசும் உந்துதலில் ஃபோனை எடுத்தான்.  அத்தனை இராத்திரியிலும் வேலூரின் சந்தடியற்ற மூலையில் ஆழ்ந்த  துயிலை உதறிவிட்டு அவனுடன் பேசுவதற்கு அவள் தயாராகவே இருப்பாள் என்ற உணர்வே அவனை சற்று அமைதி கொள்ளச் செய்தது.  இந்து அப்படியே அம்மாவின் உருவத்தை புதியதாக உண்டாக்கியபடிக்கு வளர்ந்து கொண்டிருந்தாள் என்றுத் தோன்றியது.  கூடத்தின் கணப்பிற்கு மேலே அம்மாவின் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது.  அவளுடைய கல்யாணத்துக்கு ஒரு மாதம் முன்னால் பூ தைத்துக் கொண்ட ஜடையுடன் கண்ணாடி பீரோ முன்னாடி வைத்து எடுத்த புகைப்படம் அது.  அப்போதுதான் எஸ்ஸெஸெல்சி பரீட்சை முடித்திருந்தாளாம்.  எழுதிவைத்த ஓவியம் போல அகண்ட விழிகளுடன் அம்மாவும் வேலூர் வீடும் அப்படியே அந்தப் படத்தில் உறைந்து இருந்தார்கள்.  இந்துவின் சமீபத்திய படமொன்றை எடுத்து அம்மாவின் படத்தின் பக்கத்தில் மாட்டி வைத்தால் கறுப்பு / வெள்ளைப் படத்தை, வண்ணத்தில் மீள்-உருவாக்கம் செய்தது போலத்தான் இருக்கும்.   

மூன்று வருடங்களுக்கு முன்னால் அம்மாவுக்கு ஹிஸ்டெரெக்டோமி செய்தபோது போனில் 'எனக்கென்னப்பா பிரச்னை.... தொ... பேத்தி குதிர்ந்திட்டா.  அவளுக்கு ஒரு கல்யாணங் காச்சின்னு ஆகி கொள்ளுப் பேத்தியயும் பாத்திடனும்.  அதுவரை தாக்குப்பிடிச்சாப் போதும்ங்கிறேன்' என்று பொங்கி பொங்கி சிரித்தபடி சொன்னாள்.  உயிர்த்தலின் தொடர்ச்சி இப்படிதான் நிகழ்கிறது போல.  

'மனோ, இன்னிக்கு பேசலாம்னு சொல்லிட்டிருந்தியே' பின்மாலை முழுவதும் கம்ப்யூட்டரோடு போராடிக் கொண்டிருந்த மனோகரியை மெள்ள வினவினான்.  

'எதுப்பா?'

'இந்து ஸ்கூல் மேட்டர் பத்தி'

'ஹ... இரு வர்றேன்.  இன்னிக்கு தலைபோற அவசரம்.  ரிலீஸ் தள்ளிப் போயிருமோன்னு எல்லாரும் மண்டயப் பிச்சிட்டு இருக்கோம்.  இன்னொரு கால் முடிச்சிட்டு வர்றேன்.'  என்று சொல்லியவள் தலையைத் திருப்பி 'லெட்ஸ் நாட் ஓவர் ரியாக்ட்.... ரொம்பவும் டெலிகேட்டான விஷயம்' என்றாள்.

'அந்த் ஓட்டைப்பல்லி சொல்றதிலெல்லாம் எனக்கு சுத்தமா நம்பிக்கயில்ல.  மொதல்ல அவ நம்மள கூப்பிட்டிருக்கவே கூடாது.  சுத்த நான்சென்ஸ் இது' சங்கருக்கு படபடவென்றிருந்தது..

'என்னயக் கேட்டா.... ஒரு நா இல்ல ஒரு நா இந்தமாதிரி ஏதாவது எதிர்நோக்கித்தான் ஆகனும்.  குழந்தைகிட்ட நாம பேசிடறது பெட்டர்.  வசந்திகிட்ட பேசினபோது இதயேதான் சஜஸ்ட் பண்ணாங்க'

'நீயே எல்லார்கிட்டயும் போய் தண்டோரா போடுவ போலிருக்கே.  இதெல்லாமா வசந்திகிட்ட டிஸ்கஸ் பண்றது.... வீ நோ அவர் சைல்ட் பெட்டர் தென் எனிபடி.  ஸ்கூலை மாத்திடறதுதான் சரி.  இல்ல பேசாம ஊருக்கு திரும்பிடலாம்.  வேலூர் இப்ப எவ்ளோ டெவலப் ஆயிடுச்சு.  வீட்ல அம்மா.... உடனே போயிட்டு வர்றதுக்கு அத்தை மாமான்னு எத்தனயோ சொந்தங்கள்.  இந்துக்கு அதான் சேஃப்.  இதெல்லாம் புல்ஷிட்.  எவளோ ஒரு கேணச்சி என் பொண்ணு கேரக்டரை பத்தி தப்புத்தப்பா பேசினா நீ அதப்போய் ஊரெல்லாம் சொல்லி திரிஞ்சிட்டு இருக்கியா...'

இறுதி வரிகளின் போது சங்கரின் கண்கள் எல்லாம் தெறித்து விழுந்துவிடுவது போல தொண்டைநரம்புகள் புடைத்தெழ அவனறியாமல் கத்திக் கொண்டிருந்தான்.

பார்த்துக் கொண்டிருந்த வேலையை முழுமையாக நிறுத்திவிட்டு அவனை நோக்கி திரும்பிய மனோகரி, கண்ணாடியை கழட்டிவிட்டு தீர்க்கமாகப் பார்த்தாள்.

'ஊருக்குப் போயிட்டா மட்டும் பொண்ணு வளராம குழந்தையாவே நின்னுடப் போறாளா? பீ சென்ஸிபிள்ப்பா.  ப்ளீஸ் பொறுமையா யோசி.  இப்படி கத்தறதில ஒரு பிரயோஜனமும் இல்ல.  வசந்தியோட ரெண்டு பொண்ணுங்களும் காலேஜுக்கு போயாச்சு.  இதெல்லாம் அவங்க கடந்து வந்ததுதான்.  இதை நாம முதல்ல நல்லா டிஸ்கஸ் பண்ணிட்டு குழந்தைகிட்ட பேசுவோம்.  இந்த கத்தல் கீச்சல் எல்லாம் அவகிட்ட செய்யாதே ப்ளீஸ்'

சங்கர் அவளைப் புறக்கணித்துவிட்டு படுக்கையறைக்கு சென்றான். வசந்தியின் இரண்டாவது பெண் போனவருடம்தான் பள்ளிப்படிப்பை முடித்திருந்தாள்.  ஹை ஸ்கூல் ப்ரோம் (Prom)க்காக அலங்கரித்துக் கொண்டு பெரிய லிமோவில் மூன்று ஜோடிகளாக ரோஸ் கார்டன் பார்க்குக்கு சென்றதை எல்லாம் பார்த்தவன்தான்.  மறுநாள் ஈஸ்டன் நகர நாளிதழின் சைட்டில் முழுவதுமாக ப்ரோம் படங்கள் போட்டிருந்தார்கள்.  மொத்தம் நூற்று பதினாறு படங்கள்.  எத்தனை ஜோடிகள் கையைக் கொர்த்துக் கொண்டு, இடுப்பைப் பிடித்துக் கொண்டு, தழுவிக்கொண்டு... நல்லவேளை முத்தம் கொடுக்கிற போஸெல்லாம் இல்லை.  ஒருவேளை போட்டோவை போடாமல் தவிர்த்து விட்டார்களோ..  

நடுநிசியில் நினைத்தாற்ப்போல விழித்துக் கொண்டவன், கதவைத்தட்டிவிட்டு இந்துவின் அறையில் நுழைந்தபோது அவள் அறை விளக்கை அணைக்காமலே தூங்கிக் கொண்டிருந்தாள்.  படுக்கையின் மேல் திறந்தபடிக்கு ஒரு லாப்டாப் பாட்டரி பவர் தீர்ந்துபோய் உயிரை விட்டிருக்க, கட்டிலுக்கு கீழே கவிழ்த்தபடிக்கு ஒரு ஐபேட் கிடந்தது. படுக்கையைச் சுற்றி பல்வேறு பொம்மைகள்.  குள்ளநாய்க்குட்டி, நீளக்காதுகளுடன் ப்ளூட்டோ,  அரையடி உயர கரடிக்குட்டி... ஒவ்வொரு பொம்மையும் வீட்டுக்கு வரும்போதே ஒரு பெயருடன்தான் வந்தது.  ஸ்க்ரஃப்ஃபி, டீனா, நோஸி என்று ஏதேதோ பெயர்கள் இந்துவால் சூட்டப்பட்டிருந்தன.  ஆரம்பத்தில் சங்கர் ஒவ்வொரு பெயரையும் நினைவு வைத்துக் கொண்டுதான் இருந்தான்.  இப்போது எல்லாமே அந்நியமாக இருப்பது போல் தெரிந்தது.  எதையுமே தொடுவதற்கு பயமாக இருந்தது.  கொஞ்ச நேரம் கட்டில் காலில் சாய்ந்து உட்கார்ந்தபடிக்கு அந்த அறையையே மனதால் உற்று உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.  

மீண்டும் அவர்களின் அறைக்கு திரும்பி வாயைத்திறந்தபடி தூங்கிக் கொண்டிருந்த மனோகரியின் தோளைப் பிடித்து

'மனோ... மனோ... என்று உலுக்கினான்.

'ஹா... என்ன... என்ன என்று குழறலோடு விழித்தவளின் கண்களில் ஏதோ தேடியவனாக,

'ஒண்ணுமில்லம்மா.  நீ தூங்கு' என்று புரண்டு படுத்துக் கொண்டான்.

'இதென்ன கூத்து.  தூக்கத்திலிருந்து எழுப்பிட்டு தூங்குன்னு' எரிச்சலோடு சிடுசிடுத்தவள் கொஞ்சம் நிதானித்து

'நீ தூங்கவேயில்லயாப்பா' என்றாள்.

மனோகரியின் முகத்தை பார்க்காமல் அறையின் மூலையைப் பார்த்தபடி படுத்துக் கொண்டு பேசுவது சற்று சௌகரியமாகவே இருந்தது சங்கருக்கு.

'பயமா இருக்கு மனோ. சாக்லேட் கறையக் கூட துடைக்கத் தெரியாம தூங்கிட்டிருக்கா குழந்தை.  அவளை நாம சரியா பாத்துக்காம, அவளோட இன்னொசென்ஸை கொன்னுப் போட்டுடுடவமோன்னு பயமா இருக்கு.'

'ஓஹ்ஹ்! இன்னும் ஸ்கூல் மேட்டரையே நினச்சு உழப்பிட்டிருக்கியா நீ?' மனோகரி முதுகுபக்கமாக தலையணையகளை சரியாக உயர்த்தி வைத்துக் கொண்டு சாய்ந்தபடி

'டீன் ஏஜ் வயசுப்பா.  எல்லாத்தையும் க்யூரியசா பாக்கத் தொடங்கிற வயசு.  நீதானே சொல்லியிருக்க... உங்கம்மாவுக்கு பதினேழு வயசில கல்யாணமே ஆயிடுச்சுன்னு.  இந்த செப்டம்பர் வந்தா இந்துவுக்கு பதினஞ்சு'

'என்ன செய்யலாம்கிறே'

கொட்டாவியை மென்று விழுங்கிக் கொண்டே 

'நா மட்டுமென்ன பத்து புள்ளயா பெத்திருக்கேன்.  எனக்கும் குழப்பமாத்தான் இருக்கு.  வசந்தி என்ன சொன்னாங்....'  நிறுத்திக் கொண்டாள் மனோகரி.

'சொல்லு' 

'பொறுமையாப் பேசனும்கிறாங்க.  இது சாதாரண ஆர்வக் கோளாறு சமாச்சாரமா இருக்கலாம்.  இருந்தாலும் இதுதான் சரியான வயசு.  விளக்கமாப் பேசிடற்து பெட்டர்.'

சட்டென பொறுக்க முடியாமல் எழுந்து உட்கார்ந்தவன் 'இந்த பார்.  அவகிட்ட அதை இதைப் பெசி மேலும் குழப்பாத.  நீங்கள்லாம் என்ன ரொம்ப பயமுறுத்தறீங்க.  நீயு, அந்த ஸ்கூலு, பர்னர், வசந்தி.... எல்லாரும் ரொம்ப மிகைப்படுத்தறீங்க'

ஆதுரத்துடன் அவன் தோளைப் பிடித்து சாய்ந்துகொண்ட மனோகரி 'புரியுதுப்பா.  நீ கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணி தூங்கு.  எல்லாம் சரியாப் போயிரும்.  நான் பாத்துக்கறேன்'

சங்கர் எதிலும் நம்பிக்கை இல்லாத ஒரு மனநிலைக்கு வந்துவிட்டிருந்தான்.  

'பதினஞ்சு வயசில உனக்கு என்ன மனோகரி தெரிஞ்சிருந்தது? ' மனோகரியைப் பார்த்து அந்தக் கேள்வியைக் கேட்கும்போது அதே கேள்வி தன்னுள்ளும் ஓடுவதை உணர்ந்து கொண்டான்.

பத்தாவது பரீட்சை முடித்த சம்மர் விடுமுறைகளில்தான் பிரபு, ரஞ்சித் மற்றும் சில பையன்களுடன் கூட்டணியாக சில சாகசங்களில் ஈடுபட்டிருக்கிறான்.  அந்தக் கால சாகசங்கள் பெரும்பாலும் நாலுதெரு தள்ளி சைக்கிள்கடையில் சிகரெட் இழுப்பது. அரைநிமிட முத்தக்காட்சிக்காக ஆங்கிலப் படங்கள் பார்ப்பது என்று சிறிய வட்டத்தில் முடிந்துவிடும்.  

'தேவி காலேஜ் சேந்த சமயம் அது.  நாலஞ்சு வாட்டி பிளாங்க் கால் வந்ததுன்னு வீட்டு ஃபோனையே சரண்டர் பண்ணிட்டார் அப்பா.  ஆறுமாசத்துக்கு ஒரு சினிமா, குமுதம் கூட வீட்டுல வாங்க மாட்டார்' 

மனோகரி மெல்ல சிரித்தபடி

'சஞ்சய்ன்னு ஒரு பையன்.  இந்திக் கிளாஸ்ல கூப்பிட்டு கூப்பிட்டு பேசுவான்.  அவன் ஃப்ரென்ட்ஸ்கிட்ட கெத்து காட்டிக்கிறதுக்கு.  ஆனா டீசன்ட்டான பையன்தான்.  இஸபெல்லா அதுதான் லவ்வுன்னு புக்கெல்லாம் கோட் பண்ணுவா.  அதென்ன எமிலி எலியாட் புக்குன்னுல்லாம் வருமே.  அட்டைப்பட படங்களைப் பாத்தாலே உதறலா இருக்கும்.  படிச்சாலும் பாதி புரியாது.  ப்ச்... பெருசா எதுவும் நினைப்பிலயே இல்ல இப்ப'

'இட் வாஸ் அ ஹார்ம்லெஸ் லைஃப்... மனோ... பேசாம நாம ஊருக்குப் போயிரலாம்.  மீனாட்சிசுந்தரம் புதுசா டேட்டாமார்ட் சர்வீஸ் ஆரம்பிச்சிருக்கான்.  கூப்பிட்டுட்டே இருக்கான்.  இங்க நாய்படாதபாடு சீப்பட்டு கிடக்கிறதுக்கு அங்க பிரமாதமான எதிர்காலம் இருக்கு.  இந்துவுக்கு மிகவும் பாதுகாப்பான இடம்.'

தோளில் சாய்ந்திருந்த தலையைத் தூக்கிப் பார்த்த மனோகரி 'இது ரொம்ப அதிகம்ப்பா.  இந்த டீனேஜ் பிரச்னைகள் எல்லா சூழலிலும் எதிர்கொள்ளத்தான் வேணும்.  நீ இப்பத் தூங்கு.  சனிக்கிழமை நானே அவகிட்ட பேசறேன்.  பேசினா எல்லாம் க்ளியராயிடும் பாரு'

அதுக்கப்புறமும் சங்கர் உறங்கவில்லை.  வெளியே பெருமழை கொட்டத்தொடங்கியிருந்தது.  இலக்கில்லாமல் இணையத்தின் வலைப்பின்னலில் சறுக்கிக் கொண்டிருந்தான்.  கைக்கு அடக்கமான ஒன்பது மிமீ பெரட்டாவா,  தோளில் தூக்கிவைத்துக் கொண்டு சுடும்படியான இருபத்தாறு இஞ்ச் கேன்வாஸ்பேக் எம்சியா என்று படித்துக் கொண்டிருந்தபோது அவனுக்கே அவனைப் பார்த்து பயமாக ஆகிவிட்டது.  அதிகாலை நான்கு மணிக்கு சங்கர் மீனாட்சிசுந்தரத்திற்கு நீள மடல் எழுதினான்.  அவனுடைய புதிய கம்பெனியின் வளர்ச்சியைப் பற்றி விசாரித்து எல்லா நலனும் பெற வாழ்த்திவிட்டு, அடுத்த திட்டங்கள் பற்றி தான் தெரிந்து கொள்ள ஆர்வமாக இருப்பதாக கடிதத்தை முடித்திருந்தான்.  நிச்சயம் ரோஜாக்கள் நிறைந்த பாதையாக இருக்காது.  ஆனால் அதுதான் மனோகரிக்கு, இந்துவிற்கு, அம்மாவிற்கு எல்லாருக்கும் நலம் தரக்கூடியது.  அவர்களுக்கு தன்னால் அளிக்கக் கூடிய சிறந்த பாதுகாப்பு அதுதான். சேஃப்டி.  

'கீச் கீச்' என பறவை ஒலிகள் காதுக்கு மிக அருகே ஒலிப்பதை உணர்ந்து விழித்துப் பார்த்தபோதுதான் கூடத்து சோஃபாவிலேயே அவன் கண்ணயர்ந்து விட்டதை உணர்ந்தான்.  கூடத்து பின்புறம் பால்கனி கதவு திறந்திருந்ததால் விடியலை வரவேற்கும் பறவைக் கூச்சல்கள் அவ்வளவு உரக்கக் கேட்டுக் கொண்டிருந்தது.  பால்கனியில் எட்டிப் பார்த்தால், வீட்டின் பின்புற நெடிய புல்வ்ளியைத் தாண்டி தூரத்து மலை முகட்டை பார்த்தபடிக்கு இந்து நின்றிருந்தாள்.  முதல்நாள் இரவின் சுவடு முற்றிலும் விலகி தெளிந்த புத்துணர்ச்சி வானமெங்கும் பரவியிருந்தது.   தனக்கு சூடாக ஒரு கப் காப்பியும், இந்துவிற்கு ஒரு ப்ரோட்டின் பானமும் கோப்பையில் ஊற்றி எடுத்துக் கொண்டு, முந்தைய நாளின் அத்தனை உணர்ச்சிப் போராட்டங்களையும் துடைத்துவிட்டாற்ப் போன்ற மனதோடு, மகிழ்ச்சி ஊற்றெடுக்க

'என்னடா பாக்கிற அங்க' என்றுக் கேட்டுக்கொண்டே இந்துவின் அருகில் போய் நின்றுகொண்டான்..

மின்னல் கீற்றாக சிரித்தபடி 'ரெய்ன்போ' என்று தூரத்தே சுட்டிக் காட்டினாள்.  'பாட்டி போன் பண்ணிருந்தாங்க.  அங்க இப்பதான் ரெயின்போ வந்திருக்காம்.  உடனே என் நினைப்பும் வந்திடுச்சாம்'

'அதுக்காக நீயும் வந்து தேடினியாக்கும்.  அங்க மழை பெஞ்சிருக்குமா இருக்கும்'

'அங்க பாதிதானே தெரியும்.  மீதி பாதி ஹொரைசானுக்கு கீழே போயிரும் இல்லியா. அது இங்க தெரியனுமே'

'ஹ... அப்டி இல்ல.  ரெயின்பொங்கிறது டிஸ்பெர்ஷன்தானே. ' சங்கர் விளக்க வாயெடுக்கும் முன்னர் 'ஐ வாஸ் கிட்டிங் டாடி.  வட்டமான ரெயின்போ பத்தி ட்யூக்கோட ஒரு பிராஜெக்ட் செஞ்சிட்டிருக்கேன். அதான்.... .' மீண்டும் மின்னல் மின்னி மறைந்தாற்ப்போல சிரிப்பு.

காப்பியை உறிஞ்சுக்கொண்டே சிரித்தான். ''யார் ட்யூக்? அந்த டெவெரெக்ஸ் ஃபேமிலியா?  அந்த ஃப்ளோரிடாவிலிருந்து வந்தவங்கன்னு சொன்னியே' திரும்பிப் பார்த்தால் மனோகரியும் அவர்களுடன் சேர்ந்து கொண்டிருந்தாள்.  அதிகாலையின் புத்துணர்ச்சி அத்தனை பேரையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது.  'மனோ! உங்கிட்ட ஒண்ணு சொல்லனும்.  அப்புறமா பேசுவோம்' என்றான்.

அவன் கையிலிருந்த காப்பி கோப்பையை வாங்கிக் கொண்ட மனோகரி 'நீ இன்னொண்ணு போட்டுக்கோ போ' என்றாள். 

'ஆமாம்மா.  நானும் அவனும் நிறைய ஸ்டோரிஸ் டிஸ்கஸ் பண்ணோம்.  ரெய்ன்போ தீம் ரெண்டு பேருக்கும் ரொம்பப் புடிச்சது.  செம தீம் இல்ல... சர்க்கிளா ஒரு ரெய்ன்போல அப்படியே ஸ்விங் பண்ணீட்டே கலர் கலரா பெயிண்ட் பண்ண... சூப்பர் சாங் ஒண்ணு கம்போஸ் பண்ணிருக்கான்... ;

'ஓ! கிளாஸ் ரூம்லயா பண்ணப் போறீங்க? இடம் பத்துமா?' மனோ கேட்டாள்.  சங்கர் யார் அந்த டெவெரெக்ஸ் என்று தன் நினைவடுக்குகளில் வேகவேகமாக புரட்டிக் கொண்டிருந்தான்.

'ஆடிட்டோரியம்.  மிஸஸ் வார்னர் பர்மிஷன்லாம் வாங்கிட்டாங்க.  ட்யூக்தான் நெட்ல நிறைய தேடி கலெக்ட் பண்ணான்.  யூ வோண்ட் பிலீவ் இட்...' என்று சொல்ல வாயெடுத்தவள் சற்றே தயங்கினாற்ப் போல நிறுத்தினாள்.  பிறகு நிமிர்ந்து பார்த்தவள் 'இட் வாஸ் க்ரோஸ் மம்மி.  நெட்டெல்லாம் ஒரே குப்பை.  ரொம்ப ரொம்ப....'  இந்துவின் அந்த சிலநொடி கூச்சத்தை தாங்க முடியாமல் மனோ முன்னே சென்று அவள் தோளைப் பற்றிக் கொண்டாள்.  சங்கர் என்ன செய்வது என்று புரியாமல் உறைந்து நின்று கொண்டிருந்தான்.  தரையில் தடுக்கி விழுந்த குழந்தையை சமாதானபடுத்த தரையை அடிப்பது போல ஏதாவது அபத்தமாக உளறிவிடுவோமோ என்று பயந்தான்.  

வழக்கம்போல மனோகரிதான் முதலில் சுதாரித்துக் கொண்டு, இந்துவை சுற்றி அணைத்துக் கொண்டு 'ஓ... அப்படி என்னதாம்மா இருந்தது.... எதுவானாலும் எங்ககிட்ட சொல்லு.  வீ வில் எக்ஸ்ப்ளெய்ன்... இட்ஸ் ஓக்கே டா, செல்லம்...'

தலையை நிமிர்த்தி மீண்டும் அதே மின்னல் சிரிப்புடன் 'ஓ!  அதொண்ணும் அவ்ளோ முக்கியமில்ல மம்மி.  முதல்ல கொஞ்சம் ஷாக்கிங்கா இருந்தது.  பட் ட்யூக் கூட இருந்ததால மேனேஜ் பண்ணிட்டோம்.  சம்திங் யக்கி... ஜஸ்ட் நீட் டு ஃபர்கெட் இட்'  

அந்த சில கணங்களை நெருப்பாற்றில் நீந்தி மீண்டு வந்தது போலதொரு பிரயாசையை அவள் அனுபவித்திருந்தா புரிந்தது.  சங்கரனுக்கு தொண்டை அடைத்துக் கொள்ள கண்கள் தளும்பிவிடாமல் இருக்க வேறுபக்கம் திரும்பிக் கொண்டான்.

அம்மா நிமிர்ந்து பார்ப்பது போலவே இருந்தது சங்கருக்கு.

'முழு ஸ்க்ரிப்ட்டும் நேத்தே முடிச்சிட்டோம்மா.  பாட்டி ஃபோன் வரதுக்கு முந்திதான் பாட்டு ட்யூன் போட்டு மெயில் அனுப்பியிருந்தான்.  Path on the rainbow கேக்கறியா மம்மி?'

'நேத்து ஹம் பண்ணிட்டிருந்தியே அந்த ட்யூன்தானே....... ' என்றாள்.

The baby moon, a canoe, 
a silver papoose canoe, 
sails and sails 
in the Indian West...

தூரத்து மலைமுகட்டின் புகை மேகங்களின் பின்னணியில் மனோகரியும் இந்துவும் தோளோடு தோள் அணைத்தபடி பாடியோவில் (patio) பாடிக் கொண்டிருக்க, சங்கர் தன் காமிராவோடு திரும்பி வந்தான்.  

'அப்படியே லைட்டா ரைட் சைடு பாருங்க' என்றபடி போட்டோ எடுக்க ஆரம்பித்தான்.  கணப்பு அடுப்புக்கு மேல் அம்மாவின் புகைப்படத்தின் பக்கத்தில் இதையும் மாட்டி வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.  
***

Thursday, June 19, 2014

சினிமா : பரத் கோபியின் 'அக்கரெ'

அருள்வாக்கி அப்துல் காதிறுப் புலவர் அவர்களின் 'அடைக்கலமாலை'யில் உள்ள

'பொல்லாங் கொருவ ரெனக்கே செயினும் புகலரிய
நல்லாங் கொருவ ரெனக்கே செயினு நலமிகுந்த
வல்லாளர் போற்றினுங் கல்லார்க டூற்றினு மாட்சியுனை
யல்லாம லொன்று மறியேன் குத்தூஸூன் னடைக்கலமே'

என்ற அரிய பாடலுடன் அரபுநாட்டு சபராளிகளுக்கு இந்த சினிமாவை அர்ப்பணிக்கிறேன்!. ...'still we see the same Gopis in our society, who are never satisfied with what they have and always in search of something else'. - Sandeepvarma

**
**
Thanks to : Biscoot Malayalam , bharatgopy.com , இளம்பிறை 1972 இதழ் (pdf)


Sunday, June 15, 2014

அமீத் திர்வேதியின் 'சௌத்ரி' பாட்டு

'Roothe khaabon ko mana lengeபாட்டை சிலாகித்து  ப்ளஸ்-ல் இணைத்திருந்தேன். 'coke studio Amit trivedi'நு தேடுங்க இன்னும் சூப்பராய் ஸொ ல ஐட்டம்ஸ் கிடைக்கும்' என்று சொன்னார் நண்பர் டைனோ. அரபுநாட்டில் அவதிப்படுகிற எனக்குத்தான் வேறு வேலையே இல்லை அல்லவா? உங்களுக்காக தேடினேன். Mame Khan (எப்படி சொல்வது, மாமே கானா மாமி கானா?) பாடிய ராஜஸ்தான் சுளை கிடைத்தது. எடுத்துக்குங்க!. Lover asks her beloved "Chaudhary" (a title of a man from ethnic clans of Rajasthan/Haryana who owns lands) to not test her patience anymore, but to meet her soon...
***
***
Thanks to : Coke Studio @ MTV & டைனோ.

Sunday, June 1, 2014

அடிவாரத்தில் - தாஜ் கவிதை

அடியிலே தாஜ் என்று சொல்வது அத்தனை சரியில்லை :)) - ஆபிதீன்

***

அடிவாரத்தில்  -  தாஜ்
----------------------------
எதிரே சிரஞ்சீவி மலை
சிகரத்தில்தான்
அந்த மூலிகை
செங்குத்தான அதன் பாதை
வளைந்து நெளிந்து மிரட்ட
இடையிடையேயான
குகைப்பாதைகளும்
பயம்தர உண்டு.

முயற்சிகளின் பாடம்
பச்சைக் கொடி காட்ட
கைவிரிக்கிறது அனுபவம்
வாழ்ந்தாகணும்
யோசனையோடு
அடிவாரத்தில்தான் நிற்கிறேன்.

***

நன்றி : தாஜ்