தான் எழுதிய கதைகளிலேயே இதுதான் மிகவும் பிடித்திருக்கிறது என்று கோபி கிருஷ்ணன் குறிப்பிடுகிறார் - யூமா.வாசுகியுடனான நேர்காணலில். சைஸும் ஒரு ஜட்டிக்குள் அடங்கக்கூடியதாக சின்னதாக இருந்ததால் உடனே பிடித்து... , தட்டச்சு செய்துவிட்டேன். அரசியல் அடிதடிகளில் ஈடுபடுவதில்லை, 'நானுண்டு என் ஜட்டியுண்டு!' - ஆபிதீன்
***
மிகவும் பச்சையான வாழ்க்கை - கோபி கிருஷ்ணன்
இளமைக்காலம் முதற்கொண்டே நான் ஜட்டிதான் அணிபவனென்றாலும் அது ஒரு பிரச்சனைக்குரிய விஷயமாகிவிடும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இதுவரை வாடகை வீடுகளிலேயே இருந்திருக்கிறேன். காயப்போட அனைத்துக் குடித்தனக்காரர்களுக்கும் ஒரே மொட்டை மாடிதான் இருப்பதால் சிறு துணிவகைகைகள் - கைக்குட்டை போன்றவை - வேறு குடித்தனக்காரர்களுக்குச் செல்லும்; பிறகு திரும்பி வரும்; சில வேளை காணாமல் போகும். ஜட்டிகளுக்கும் இதே கதிதான்.
ஜட்டியோ, ப்ராவோ காணாமல் போனால் பக்கத்து போர்ஷன்காரர்களிடம் கேட்பது மிகவும் சிரமமான விஷயம். எனது ஜட்டிகளில் நிறைய தொலைந்திருக்கின்றன. நான் வாய்விட்டு அடுத்த வீட்டுக்காரர்களைக் கேட்டதில்லை.
இந்த வீட்டில் வாழ்க்கை சப்பென்று சுரத்தே இல்லாமல் போய்க்கொண்டிருக்கிறதே என்று விசனப்பட்டுக் கொண்டிருந்த சமயம், ஒரு மாலை வீட்டுக்கார அம்மாள் என் மனைவியிடம் கேட்டுக் கொண்டிருந்தாள். "முரளி ஜட்டி ஒங்கதுல கலந்திருக்கான்னு பாரேன்" என்று. அவள் "இல்லை" என்று சொல்ல வீட்டுக்கார அம்மாள் மீண்டும் வலியுறுத்த, பெட்டியில் இருந்த எல்லாத் துணிகளையும் அலசி அவள் மீண்டும் "இல்லை" என்று வீட்டுக்கார அம்மாளிடம் சொல்ல அப்படியே இழுத்துக்கொண்டு போனது விவகாரம். முரளி வீட்டுக்காரர்களின் ஒரே வாரிசு. நல்ல பையன். ஆனால் ஜட்டி அணிபவன் என்பது அப்பொழுதுதான் தெரிந்தது. அது ஒன்றும் தவறில்லை என்றாலும்.
கடைசியாக, என் மனைவி அடித்துச் சொல்லிவிட்டாள், நான் பிறர் ஜட்டியை அணிவதில்லை என்றும் , நான் நானுன்னு என் ஜட்டியுண்டு என்று என் பாட்டுக்குக் கிடப்பவன் என்றும், யார் ஜட்டிக்கும் ஆசைப்படாதவன் என்றும், பிறர் ஜட்டி விஷயத்தில் தலையிடாதவன் என்றும். வீட்டுக்கார அம்மாள் எங்கள் பகுதியை விட்டுச் சென்றாள் ஒருவழியாக. அடுத்த பகுதிக்காரப் பெண்மணியிடம் விசாரணையைத் துவக்கினாள்.
புதுக் கருக்குக் கழியாத புத்தம்புது ஜட்டி, விலை சுளையாக முப்பத்தெட்டு ரூபாய். பச்சைப் பசேல் என்ற நிறம். ஒரே முறையாதான் முரளி அணிந்திருந்தான். அதற்குள் யார் கண்பட்டதோ இப்படி ஆகிவிட்டது. புலம்பல், சாபம் இப்படியாக ஒரு வாரம் கழிந்தது. ஒருமுறை நான்கூட நினைக்கும்படி ஆகிவிட்டது. இந்த வீட்டில் இருக்கும் வரை இனி ஜட்டியே உபயோகிக்கக்கூடாது என்று.
காலப் போக்கில் எல்லாம் சரியாகிவிட வேண்டும்தானே? ஆனால் ஜட்டி விஷயத்தில் அப்படி ஆகிவிடவில்லை. சம்பவம் நடந்து இரண்டாவது வார ஞாயிறு. குடித்தனக்காரர்கள் அல்பங்கள், திருட்டுப் புத்தி உடையவர்கள், ஜட்டி திருடின கை அழுகும். இப்படி வாய்க்கு வந்தபடி ஏதேதோ வசவு மீண்டும். கடைசியாக ஒரு போடு, "இருக்கிற ஆம்பளைங்க லுங்கியத் தூக்கியா பாக்க முடியும்?"
அந்த அம்மாளிடமிருந்து இதைச் சற்றும் எதிர்பார்க்காத நான் மிகவும் அதிர்ந்தேன். ஒருவேளை அந்த மாதிரி நடவடிக்கை ஏதாவது மேற்கொள்ளப்பட்டு விடுமோ என்று நடுக்கமாக இருக்கிறது. ஒருவிதக் கலவரத்துடன்தான் வீட்டில் இருக்கவேண்டி வருகிறது. மிகவும் பாதுகாப்பாகப் பச்சை நிற ஜட்டிகளை வாங்குவதில்லை.
**
நன்றி : நற்றிணை பதிப்பகம், சி. மோகன் தொகுத்த 'கோபி கிருஷ்ணன் படைப்புகள்' இரவல் தந்த "சாத்தான்"
***
தொடர்புடைய சுட்டி :
மகான்கள் – கோபிகிருஷ்ணன்