'அம்ருதா' இதழுக்கு இரண்டு சிறுகதைகள் அனுப்பியிருக்கிறார் ஸபீர் . ’பொய்முகங்கள்’, ’மனசு’ என்று. இரண்டையும் ஒன்றாக்கி ஒரே தலைப்பில் (பொய்மனசு?) வெளியிட்டு உலக சாதனை செய்திருக்கிறார்களாம். ‘என்னடா இது, பென்னம்பெரிய பின்நவீனத்துவமாக அல்லவா இருக்கு? படித்துப் பார்த்தார்களா இல்லையா? இலக்கிய உலகம், அரசியல் உலகம், வியாபார உலகம் இதில் எல்லாம் எப்படியும் நிகழும். போயும் போயும் ஸபீரின் கதைதானா இப்படியொரு சங்கதியில் மாட்ட வேண்டும்!' என்று புலம்பித்தள்ளிவிட்டார் குரு. ‘ஆமா காக்கா, ஏன் ரெண்டு அனுப்புனீங்க’ என்று கேட்டால், ‘ரெண்டுல ஒண்ணு போடுவாங்கன்னு நெனச்சோம் தம்பி’ என்கிறார். பேராசைதானே இது?! சரி, குழாயடிச் சண்டைகள் போடவேண்டாம். ஸபீர் எழுதியது என்று இருக்கிறதல்லவா, அது போதுமென்று சந்தோஷப்படுவோம்.
’மனசு’ அடுத்து வரும், இன்ஷா அல்லாஹ். - ஆபிதீன்
***
பொய் முகங்கள்
-
ஸபீர் ஹாபிஸ்
ட்ரைவரின் வருகை தாமதமானதால், அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சிகளை முடித்துக் கொண்டு குளித்து அவசர அவசரமாகத் தயாரானதில் அர்த்தமில்லாது போய்விட்டது சுமதிக்கு. அவளது கொழுத்த உடலில் கோபம் தளதளத்துக் கொண்டிருந்தது. டயறியைத் திறந்து இரவு கண் விழித்து எழுதி வைத்த இன்றைய ஷெட்யூலைப் பார்த்தாள். 6 மணி தொடக்கம் 7.30 வரை நகரின் மூன்று இடங்களில் தனது கம்பனி நிர்மாணித்து வரும் ஐந்தடுக்கு தொடர் மாடி வீட்டுத் திட்டத்தைப் பார்வையிடுதல், 7.30க்கு புதிய கொன்ட்ரக்ட் தொடர்பாக என்ஜினியர் வசந்தனுடன் டிஸ்கஷன், 8 மணிக்கு தொழிலதிபர் ராஜாராமின் புதிய நகைக் கடைத் திறப்பு விழாவில் பங்கேற்பு, 8.30க்கு தனது கம்பனிக்கான ரிவி விளம்பரத் தயாரிப்புக்காக ஸ்டைலிஷ் அட்வெர்டைசிங் கம்பனியுடன் ஒரு எம்ஓயூ கைச்சாத்து, 9 மணிக்கு கம்பனிக்கான கடன் திட்டம் தொடர்பாக கொமர்ஷல் வங்கியுடன் ஓர் உடன்படிக்கை, 9.30 தொடக்கம் 4.00 மணி வரை அரச அலுவலகப் பணிகள், 4.30க்கு முகுந்தனின் பேர்த் டே பார்ட்டி, 5.30 க்கு பியூட்டி பார்லர், 6.00 மணிக்கு எம்.சியில் ஷொப்பிங், 7 மணிக்கு ட்ரான்ஸ் ஏசியா ஹோட்டலில் அமைச்சர் ஹெட்டிகொடவின் டின்னர் பார்ட்டி... என ஷெட்யூல் நீண்டு சென்றது.
6.30 ஆகியும் பணிக்கு வராதிருக்கும் ட்ரைவரின் அலட்சியம், தனது எல்லாப் பணிகளையும் குழப்பி விடப் போதாக நினைக்கையில் சுமதிக்கு கோபத்தில் கண்கள் சிவந்தன. தாமதத்திற்காக அவன் கூறக்கூடிய எந்தக் காரணத்தையும் ஏற்பதில்லையென அவள் இறுக்கமாகத் தீர்மானித்துக் கொண்டாள். பணியில் அமர்ந்த இந்தப் பத்து மாதங்களில் அவன் ஒரு நாள் கூட லீவு எடுத்ததோ, தாமதித்து வந்ததோ, ஓவர் டைமுக்காக சம்பளம் கேட்டதோ இல்லை என்ற போதிலும், தற்போதைய தனது அவசர நிலையில் அவன் இவ்வாறு தாமதிப்பதை அவளால் பொறுக்கவே முடியவில்லை. ‘ஒரு செல்போன் வாங்கக் கூட வக்கில்லாதவனையெல்லாம் ரைவரா வெச்சது என்ட பிழதான்’ என முணுமுணுத்தாள். பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த காரை ஒரு முறை பார்த்து விட்டு வராந்தாவில் கிடந்த சோபாவில் உடல் புதைய அமர்ந்த போதுதான் வாயிற் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. ரைவர்தான் வந்து கொண்டிருந்தான். அவனது மெலிந்து தளர்ந்த உடலும் நரை எட்டிப் பார்க்கும் தலையும் முகத்தில் பற்றிப் படர்ந்திருக்கும் சாந்தமும் அவன் மேல் மரியாதை கொள்ளத் து}ண்டுபவை. எனினும் எவ்விதப் பதட்டமுமின்றி மிக இயல்பாக நடந்து வந்து கொண்டிருக்கும் அவனைப் பார்க்கப் பார்க்க சுமதிக்குப் பற்றிக் கொண்டு வந்தது. பல்லைக் கடித்துக் கொண்டு உயரமாக மூச்சு வாங்கிக் கொண்டிருந்தவள், “மேடம், சாவி...” என அவன் தன் முன்னால் வந்து நின்றதும், அடக்கி வைத்திருந்தவற்றையெல்லாம் மொத்தமாகக் கொட்டி விடுவது போல், வலது கையை ஓங்கி அவனது கன்னத்தில் பளாரென ஓர் அறை விட்டாள். “ஃபூல், ஏன் இவ்ளோ லேட்?” அவளது கேள்வியில் கோபம் உறுமியது.
ட்ரைவரின் முகத்தில் திடீரெனப் பற்றிய அதிர்ச்சி, அவனது மலர்ந்த முகத்தில் இருண்மையைக் கொட்டிற்று. கன்னத்தைத் தடவிக் கொண்டே, “கரெக்ட் டைம்தானே மேடம்!” என்றான் தயங்கித் தயங்கி. “என்ன...?” என மீண்டும் முறைத்தாள் சுமதி. நெற்றியைச் சுருக்கியவாறு, “ஏழு மணிக்குத்தானே மேடம் வரச் சொன்னீங்க” என்றவன், 6.45ஐக் காட்டிய தனது கைக்கடிகாரத்தை அவள் முன் நீட்டினான்.
சுமதிக்கு அப்போதுதான் சட்டென உறைத்தது. இரவு எட்டரை மணிக்கெல்லாம் ட்ரைவரை அனுப்பி விட்டு, பத்து மணிக்குப் பிறகு சாவகாசமாக இருந்து போட்டதுதான் இன்றைய அவளது ஷெட்யூல். ஏற்கனவே எடுத்திருந்த தீர்மானத்தின் படியே ஏழு மணிக்கு அவனை வரச்சொல்லியிருந்தாள். ஸ்டைலிஷ் அட்வெர்டைசிங் கம்பனியுடனான எம்ஓயூவும் கொமர்ஷல் வங்கியுடனான உடன்படிக்கையும் பின்னரே ஷெட்யூலில் இணைத்துக் கொள்ளப்பட்டமையால், புறப்படும் நேரத்தில் திருத்தம் செய்ய வேண்டியதாயிற்று அவளுக்கு. அதனை அவனுக்குத் தெரிவிக்க மறந்து போனாள். இருந்தாலும் அதைத் தன் தவறென அவள் காட்டிக் கொள்ள விரும்பவில்லை. “ஒரு செல்போன் வெச்சுக் கொள்ள மாட்டியா?” என எரிச்சல் பட்டுக் கொண்டே கார் சாவியை அவனிடம் து}க்கிப் போட்டாள். கார் வாங்கி ஐந்து வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் ட்ரைவிங் பழகாதிருக்கும் தன் பிசியான வாழ்க்கையை சலித்துக் கொண்டே பின் சீட்டில் ஏறி அமர்ந்தாள். கார் புறப்பட்டது. ஏசியின் கதகதப்புடனும் மேற்கத்தேய மெலடியின் வருடலுடனும் ஐந்து நிமிடங்களில் தனது முதலாவது சைட்டுக்கு வந்து சேர்ந்து விட்டாள் சுமதி.
அப்போதுதான் வந்திருந்த வேலையாட்கள் சிரிப்பும் கதையுமாக உடை மாற்றித் தயாராகிக் கொண்டிருந்தார்கள். தன்னைக் கண்டதும் அவர்களது செயற்பாடுகளில் புதவித வேகமொன்று தொற்றிக் கொண்டதை சுமதி உணர்ந்தாள். ஏற்கனவே அங்கு பிரசன்னமாகியிருந்த என்ஜினியர் வசந்தன் அவளை மரியாதையுடன் வரவேற்றான். கட்டடத்தில் இரண்டு மாடிகள் பூர்த்தியாகியிருந்தன. இன்னும் மூன்று மாதங்களில் முழு வேலையும் பூர்த்தியாகி விடும் என்று அவன் கூறுவதைக் கேட்க சுமதிக்கு சந்தோஷமாக இருந்தது. கொங்க்ரீட் கற்களும் சீமெந்தும் முறுக்குக் கம்பிகளும் மண்குவியல்களும் கட்டுமான உபகரணங்களும் சிதறிக் கிடந்த கட்டடச் சு10ழலை, தன் சாரியை சற்று உயர்த்திப் பிடித்துக் கொண்டே ஒரு தரம் சுற்றி வந்தாள் சுமதி. தேவையான ஆலோசனைகளையும் திருத்தங்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிப்பது போல் அவள் சொல்லச் சொல்ல, தலைமைப் பொறுப்பாளர் அவற்றைக் குறித்துக் கொண்டார்.
அதன் பின், வசந்தனை அழைத்துக் கொண்டு ஏனைய இரு சைட்டுகளையும் பார்வையிட்டு, அவனுடனான டிஸ்கஷனையும் முடித்துக் கொண்டு நகைக் கடைத் திறப்பு விழாவுக்கு வந்த போது நேரம் 8.30 ஆகியிருந்தது. திறந்து வைக்கப்பட்டு விட்ட கடை, தகதகவென ஜொலிப்பதை வெளியிலிருந்தே பார்த்தாள். ஓடி வந்து காரின் கதவைத் திறந்து விட்டவாறு, “வெல்கம் மேடம்” என வரவேற்றான் மனேஜர். சுமதி இறங்கவில்லை. தனக்காகக் காத்திராது திறப்பு விழாவை ஆரம்பித்து விட்ட ராஜாராம் மீது அவளுக்குக் கோபம் வந்தது. அடுத்த புரோகிராமுக்குரிய நேரம் ஆகிவிட்டிருந்ததையும் உணர்ந்தாள். கதவைச் சாத்தி விட்டு, “போ” என்றாள் ரைவரிடம். உள்ளேயிருந்து “மேடம்... மேடம்...” எனக் கூவிக் கொண்டு வரும் ராஜாராமை அவள் சற்றும் பொருட்படுத்தவில்லை.
சிக்னலில் கார் நிறுத்தப்பட்ட போது, நடை பாதையில் படுக்கையில் கிடந்த கிழவியின் மீது சுமதியின் பார்வை மொய்த்தது. கிழவியின் கசங்கிக் கிழிந்த ஆடைகள் துர்நாற்றம் வீசக்கூடியவை என்பதைப் பார்வையாலே கண்டுபிடித்து விட முடியும் போலிருந்தன. கலைந்து கிடந்த தலை பற்றியோ, உடல் முழுக்கப் பரவியுள்ள கொப்புளங்களிலிருந்து வழிந்து கொண்டிருக்கும் அழுக்குக் கழிவுகள் பற்றியோ, முற்றுகையிடத் துடித்துக் கொண்டிருக்கும் ஈப் பட்டாளங்கள் பற்றியோ அவள் கொஞ்சமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. வாய்க்குள் எதையோ போட்டு மென்று கொண்டிருந்தாள் கிழவி. அவ்வழியில் செல்வோர் அவளது துர்நாற்றத்திற்குப் பயப்படுகிறார்கள் என்பதை, அவர்கள் அவளிலிருந்து நன்கு ஒதுங்கித் தள்ளிச் செல்வதிலிருந்து உணர முடிந்தது.
அரண்மனை போன்ற தனது பெரிய வீட்டில், கணவனைத் துரத்திவிட்டுத் தனியாக வசிக்கும் சுமதி, அலுவலகத்திற்குச் செல்லும் போதும் திரும்பும் போதும் ஒவ்வொரு நாளும் இதே இடத்தில் அந்தக் கிழவியைப் பார்க்கிறாள். ஒருபோதும் காரிலிருந்து இறங்கிச் சென்று கிழவிக்கு உதவ வேண்டுமென அவள் நினைத்ததில்லை. ஆனாலும் கிழவியைப் பார்க்குந் தோறும் இனம் புரியாத நன்றிப் பெருக்கொன்று அவளது உடலெங்கும் உஷ்ணமாகப் பரவியோடும். அவள் பார்ப்பதற்கு தன்னைப் போன்ற முகவாக்குடன் இருக்கின்றாள் என்பதா அல்லது அவள் தன்னைப் பெற்றெடுத்த தாய் என்பதா இதற்குக் காரணம் என்பது மட்டும் சுமதிக்குப் புரிவதேயில்லை.
-------------------
காரில் ஏறும் போதுதான் ஃபைலை எடுக்க மறந்தது சலீமுக்கு நினைவு வந்தது. அலுவலக ஃபைல்களை அவன் பெரும்பாலும் வீட்டுக்கு எடுத்துச் செல்வதில்லை. அது தவறு என்பதற்காக அன்றி, வீட்டில் அடிக்கடி ஏற்படும் மனைவியுடனான சர்ச்சைகளில் அலுவலக ஃபைல்கள் பாதிப்புக்குள்ளாகி விடக்கூடும் என்ற அச்சமே அதற்குக் காரணம்.
கார்க் கதவைச் சாத்தி விட்டு வீட்டுக்குள் நுழைந்த போது, சோபா மூலைக்குள் ஒடுங்கியமர்ந்து விசும்பிக் கொண்டிருந்த மனைவியை மீண்டுமொரு முறை கோபம் முகிழ்க்கப் பார்த்து விட்டு, அறைக்குள் நுழைந்து ஃபைலை எடுத்துக் கொண்டு விறுவிறுவென நடந்து வெளியே வந்தான். காரினுள் ஏறி கதவைச் சாத்தி, ஸ்டார்ட் செய்து அங்கிருந்து விரைவாகப் புறப்பட்டான். காரின் வேகத்திற்கேற்ப தொல்லையும் எரிச்சலும் து}ரமாகிக் கொண்டிருப்பதாக உணர்ந்த போது, அமானுஷ்யமான ஆறுதலொன்று அவனை அரவணைத்தது.
வழியில் காத்து நிற்கும் தேவாவின் நினைவுகள் வந்தன. இரண்டு திருமணங்கள் புரிந்து இரண்டையும் உதறித் தள்ளி விட்டு சுதந்திரப் பறவையாகச் சுற்றித் திரியும் அவன் மீது சலீமுக்கு எப்போதுமே உள்@ரப் பொறாமையொன்றுண்டு. அதை அவன் வெளிப்படையாகவே பேசியுமிருக்கிறான்.
பல்கலைக்கழகத்தில் சீனியர் மாணவர்களின் பகிடிவதையிலிருந்துதான் அவர்களது நட்பு தொடங்கியது. கலைப்பீடத்தில் இணைந்து கொண்ட மூன்றாம் நாள், பாடங்களை முடித்துக் கொண்டு தரிப்பிடத்தில் பஸ்சுக்காகக் காத்து நின்ற போது சீனியர்களிடம் மாட்டிக் கொண்டான். அவர்கள் நீட்டிய வாழைப்பழத்தில் ஒரு துண்டைக் கடித்து விழுங்கி விட்டு மீதியை பக்கத்திலிருக்கும் மற்றொரு ஜூனியரிடம் கொடுக்க வேண்டும். பழத்தைப் பரிமாற கைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதுதான் நிபந்தனை. சலீம் கடித்துக் கொடுத்த மீதிப் பழத்தை தன் உதடுகளால் கவ்விப் பிடித்த போதுதான் தேவாவை முதன்முதலில் அவன் கண்டான். அதன் பிறகு நடந்த பெரும்பாலான எல்லா பகிடிவதைகளையும் அவர்களிருவரும் சேர்ந்து நின்றே அனுபவித்தனர். அடுத்த வருடம் ஜூனியர்களுக்கு அவற்றை சேர்ந்து நின்றே வழங்கினர். நட்பைத் தொடர்வதைச் சாத்தியமாக்குவதாக, அவர்கள் கற்ற பொருளியல் கற்கைக்குக் கொஞ்சமும் பொருத்தமில்லாத வகையில் உயர் அலுவலகமொன்றில் அவர்களுக்கு வேலையும் கிடைத்தது.
தேவாவின் இரண்டாவது திருமண வரவேற்பின் போதுதான், அவன் மீது முதன் முறையாக பொறாமை கொண்டான் சலீம். ஷீலா அவ்வளவு அழகாக இருந்தாள். வானிலிருந்து இறங்கி வந்த தேவதைகளின் ராணி என்று, தனது பழைய கவிதையொன்றை அவனது உதடுகள் முணுமுணுத்தன. சிரத்தையெடுத்து ஒப்பனை செய்யப்பட்ட சினிமா நடிகைகள் அவளது கால் து}சுக்கு ஈடாக மாட்டார்கள் என நினைத்தான். தள்ளி நின்று அவளை அள்ளி அள்ளிப் பருகிக் களைத்துப் போனான். தேவாவுடன் காரில் ஏறி புன்னகை வீசி அவள் அவனை விட்டும் பிரிந்து போனாள்.
அன்றிரவு அவனுக்குத் தூக்கம் தவறிற்று. பக்கவாட்டில் திரும்பிப் படுத்திருந்த மனைவியின் முகம் பார்த்துக் காறித் துப்ப வேண்டும் போலிருந்தது. தேவா இப்போது என்ன செய்து கொண்டிருப்பான்? உள்ளுக்குள் உஷ்ணம் பரவக் குப்புறக் கிடந்து கால்களைப் பரத்திய போது உணர்வுகள் முட்டின. வேறு வழியில்லாமல் கௌரவத்தை விட்டுக் கொடுக்க வேண்டியதாயிற்று அவனுக்கு. ஷீலாவை நினைத்துக் கொண்டே இயங்கி முடித்த போது, அவள் மறுபக்கம் திரும்பிப் படுத்துக் கொண்டாள்.
மறுநாள் காலையில் தேவாவின் வீட்டிலிருந்தான் சலீம். குளித்துத் தலை கட்டி, வெண் நீல நிறத்தில் சல்வார் உடுத்து கால் மேல் கால் போட்டு தன் முன்னால் அமர்ந்திருக்கும் ஷீலாவை அடங்காத உஷ்ணத்துடன் விழுங்கி விடுவது போல் பார்த்துக் கொண்டிருந்தான். சதைப் பிடிப்பான அவளது தொடைகளின் இடையே அவனது பார்வை குத்தி நின்றது. அவளது ஆடம்பரச் சிரிப்பில் மலரும் தெத்துப் பல்லும் கன்னக்குழியும் அவனைச் சுண்டியிழுத்தன. “ரெண்டு பேரும் ஒரே மாதிரித்தான் பேசுவீங்களா?” என்றாள் அவள், அழகாக இருப்பதாக அவன் கூறிய போது. அவளது குரல், அவளது தோற்றத்திற்குக் கொஞ்சமும் பொருந்தாதவாறு துருப்பிடித்த இரும்புத் துண்டுகளை உராய்வது போல் அவனது காதுகளை அறைந்தது. அவனது கண்களை அவள் ஆழமாக ஊடுருவினாள். அவளது பார்வையிலும் தன் மீதான ஈர்ப்பொன்று தெரிவதாக அவனது உள்ளுணர்வுகள் அவனை உற்சாகப்படுத்தின.
சலீமுக்கு கன்னிராசி என்றொரு பட்டப் பெயரும் பல்கலைக்கழகத்தில் இருந்தது. ஷீலா விடயத்தில் அது உறுதியாயிற்று. நண்பனுக்குத் துரோகம் செய்வதாக சலீம் ஒரு போதும் எண்ணியதில்லை. தேவாவுடனான நட்பும் ஷீலாவுடனான உறவும் தனித்தனியான இரு வேறு விவகாரங்கள் என அவன் கருதினான். எனினும், தேவாவுக்குத் தெரியாதவாறு ஷீலாவுடனான உறவைப் பேணிக் கொள்வதிலும் அவன் தோல்வியடைந்து விடவில்லை. தன் காரிலேயே இருவரும் அலுவலகத்திற்குச் செல்வதென்ற அவனது திட்டத்தை, அதன் பின்னணி தெரியாமலேயே ஏற்றுக் கொண்டிருந்த தேவாவின் மீது இன்னும் ஆழமான நட்பு கொண்டான்.
தேவா-ஷீலா விவாகரத்திலும் சலீமின் பங்கு முக்கியமானது. ஒரு வருடத்திற்கு மேல் ஒரே பெண்ணில் ஈர்ப்புப் பெற்றிருப்பது இருவருக்கும் சிரமமாக இருந்தது என்பதை விட, அவ்விருவர் மீதும் ஷீலாவுக்கு ஈடுபாடு குறைந்து போனதே உண்மையான காரணம். இப்போது ஷீலாவை விட அழகான பெண்ணை மணக்குமாறு தேவாவை வற்புறுத்தத் தொடங்கியிருந்தான் சலீம்.
காரை நிறுத்திக் கதவைத் திறந்து விட்டதும் வீட்டு கேட்டைப் பூட்டி விட்டு ஏறி அமர்ந்த தேவாவின் முகத்தில் கலவரம் தெரிந்தது. எக்சிலேட்டரை மிதமாக அழுத்திக் கொண்டே அவனை நோட்டமிட்டான் சலீம். “என்னடா மச்சான்?” என்று புருவங்களை நெறித்தான். பெரிதாக மூச்சு விட்டுக் கொண்டே மௌனமாக இருந்த தேவா, “எவ்ரிதிங் இஸ் பேட் ஃபோர் மீ” எனக் கவலையுடன் ஆரம்பித்து, வீட்டு வேலைக்கெனப் புதிதாக வந்து சேர்ந்த வறிய இளம் பெண்ணின் மீதான தனது முயற்சியையும், அவளது எதிர்ப்பையும், அயல்வீட்டாரின் ஆரவாரக் கூச்சலையும் அதனால் அடைந்த அவமானத்தையும் விரிவாகக் கூறி முடித்தான். அந்த சம்பவத்தை விட அந்த ஆரவாரத்தில் வீசியெறியப்பட்ட சில வார்த்தைகள்தான் தன்னை கலவரத்திற்குள்ளாக்கியதாகவும் குறிப்பிட்டான். “பொஞ்சாதி செஞ்ச வேலெய அவ போனதுக்குப் பொறவு புருஷன்காரனும் செய்யப் பார்க்கிறான்” என்பதுதான் அந்த வார்த்தைகள் என்றும் ஒளிவு மறைவின்றி சலீமிடம் கூறினான். இடையிடையே தனது அற்ப சபலத்தையெண்ணிக் கைசேதப்படவும் செய்தான்.
சலீம் எதுவும் பேசவில்லை. தேவா, தன்னுடன் எந்த இரகசியமும் பேணாதவன் என்பது சலீமுக்குத் தெரியும். ரேவதியினதும் ஷீலாவினதும் பாலுறுப்புகளின் பண்புகள் பற்றியும் கூட சலீமிடம் அவன் மனந்திறந்திருக்கிறான். ஷீலா தொடர்பான தனது மிகையற்ற வர்ணனைகள்தான் அவள் மீதான சலீமின் இயல்பான ஈர்ப்பை வெறியாக மாற்றின என்பதைக் கூடத் தெரிந்து கொள்ள முடியாத அப்பாவி அவன். ஷீலாவை வசீகரித்த அந்தக் கயவன் பற்றித் தெரிந்து கொள்ளாதிருந்து விட்ட தனது அறியாமை குறித்தே அவன் அவமானப்பட்டுக் கொண்டிருப்பதை சலீம் உணர்ந்தான். எக்சிலேட்டரை மேலும் அழுத்திக் கொண்டே சிகரட் ஒன்றையெடுத்துப் பற்ற வைத்து அவன் முன் நீட்டினான். “முதல்ல இத அடி, முடிஞ்சி போன விஷயத்தக் கதெக்கிறத்த விடு. இண்டைக்கி ஹாஃப் டே லீவு போட்டுட்டு எங்காவது போய் என்ஜாய் பண்ணுவம். எவ்வளவு குய்க்கா ஏலுமோ அவ்வளவுக்கு குய்க்கா அழகான குட்டியொண்டப் பாத்து மெரேஜ் பண்ணி வைக்க வேண்டியது என்ட பொறுப்பு, சரியா?” என அவனது கவனத்தை வேறுபக்கம் திருப்பவும் முயன்றான்.
அலுத்துக் கொண்டே சிகரட்டை வாங்கிய தேவா, திடீரெனக் கண்களை அகல விரித்து, “ஓ... பிரேக்கப் போர்ரா சலீம்” எனச் சத்தமிட்டுக் கத்தினான். சலீம் தன்னை சுதாகரித்துக் கொள்வதற்குள் அனைத்தும் நடந்து முடிந்து விட்டன. பழைய சைக்கிளில் வழிய வழிய விறகுக் கட்டைகளைக் கட்டிக் கொண்டு மஞ்சள் கோட்டின் வழியாக வீதியைக் குறுக்கறுத்த தொழிலாளியொருவன், காரின் டயர்களுக்குள் சிக்கி விறகுக் கட்டைகளுடன் நசிபட்டு நடுத்தெருவில் உடல் துடித்துக் கொண்டிருந்தான். பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே அதிர்ச்சியுடன் கண்ணாடிகள் சிதறிப் போயிருந்த காரை நிறுத்த முயன்றான் சலீம். மறுபடியும் தேவா கத்தினான். “சலீம், என்ன செய்றே? இப்ப காரை ஸ்டொப் பண்ணினா அவ்ளோதான். ரோட்ல நிக்கிறவன் அடிச்சி நொறுக்கிப் போட்டுருவான். எடு எடு குய்க்கா காரெ எடு”.
ஜனநடமாட்டம் வெகுவாகக் குறைந்திருந்த அந்தத் தெருவின் மத்தியில், கசிந்து பரவிய தன் சிவப்பு இரத்தத்தில் தலை வைத்துச் சோர்ந்து, தன்னைத் துவம்சம் செய்து விட்டுச் செல்லும் அந்த ஆடம்பரக் காரை வெறித்துப் பார்த்தவாறே உடல் குளிர்ந்து போய்க் கொண்டிருந்தான் அந்த கறுப்புத் தொழிலாளி.
--------------------
ஜெகனின் முப்பத்தைந்தாவது பிறந்த தின வைபவம் அடக்கமாகவும் எளிமையாகவும் இருப்பதாகப் பலரும் கூறிச் சென்ற போது, அதை பாராட்டா கிண்டலா எனக் கிரகித்துக் கொள்ள முடியாமல் அவன் தடுமாறிப் போனான். வழமைக்கு முரணாக வித்தியாசமாக முயற்சிக்கலாம் என வைபவத்தை தனது வீட்டில் ஒழுங்கு செய்தது தவறான தீர்மானமாகி விட்டதோ என அவனது உள்ளம் தவிக்கத் தொடங்கியிருந்தது. அந்தத் தவிப்பு சற்றைக்கெல்லாம் எரிச்சலாகவும் கோபமாகவும் பரிணாமம் பெற்றுக் கொண்டிருப்பதை தொலைவில் நின்றே மேரி கவனித்து விட்டாள்.
விசாலமான அந்த வீட்டுக்குப் பெயின்ற் பூசுவதற்கும், வைபவச் சோடனைகளுக்கும் மது போத்தல்களுக்குமென மிகப் பெருந்தொகைப் பணத்தை மேரி தனது சேமிப்பிலிருந்து அவனுக்கு வழங்கியிருந்தாள். பிறந்த தின வைபவத்தை வீட்டில் ஒழுங்கு செய்ய ஜெகன் கூறிய போதே, ஹோட்டல்களை விட இரு மடங்கு செலவாகும் என்பதை மேரி கணித்திருந்த போதிலும், அவனுடன் விவாதித்து முரண்படுவதைத் தவிர்ப்பதற்காகப் பேசாமலிருந்து விட்டாள். தவிரவும் தனது தீர்மானத்தை பிறரது எத்தகைய ஆலோசனைகளுக்காகவும் ஜெகன் விட்டுக் கொடுக்க மாட்டான் என்பது அவளுக்குத் தெரிந்ததுதான்.
வேலைக்காரச் சிறுவனுக்கும் சமையல்காரிக்கும் போனஸ், அநாதை இல்லத்திற்கு நன்கொடை, ஏழைக் குடும்பங்களுக்கு பகற்போசனம் போன்ற மேரியின் ஆலோசனைகள் எல்லாவற்றையும் நிராகரித்த அவன், எண்ணிக்கையை இரட்டிப்பாக்கி ஐநு}று பேருக்கு டின்னர் எனும் தனது தீர்மானத்தை தனது பிறந்த தின வைபவமாக அறிவித்தான். மேரிக்கு அது பிடிக்கவில்லை என்பதை அவன் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.
ஜோன், தனது வயதையும் மீறி எல்லா வேலைகளையும் பம்பரமாகச் சுழன்று செய்து கொண்டிருந்தான். பதினைந்தே வயதான அவன் மீது அவ்வளவு வேலைகளையும் சுமத்துவது மேரியைக் கடுமையாக வதைத்தது. அநாதை, வீட்டு வேலைக்காரன் என்பதற்காக இப்படி வேலை வாங்குவது சரியில்லை என்று மேரி ஆரம்பிக்கும் போதெல்லாம், முரட்டுப் பார்வையொன்றால் அப்பேச்சை நிறுத்தி விட்டுச் சென்று விடுவான் ஜெகன். சம்பளமாக மூன்று வேளைச் சாப்பாடும் சிற்றுண்டியும் பெறும் ஒருவன் சிறுவனாக இருந்தாலும் முழு வேலையையும் செய்துதான் ஆக வேண்டும் என்பது அவனது நியாயம். ஜோன் வீட்டுக்கு வந்த இரண்டே மாதங்களில் ஜெகனின் எரிச்சல்களைக் கொட்டித் தீர்ப்பதற்கான மைதானமாக மாறி விட்டான். அதிகாலையில் ஜோன் பொலிஷ் பண்ணி வைக்கும் அதே ஷ_ மாலையில் அவனது முதுகிலும் முகத்திலும் மிதிப்பது நாளாந்த நடவடிக்கையாக மாறிவிட்டிருந்தது. விபத்தொன்றில் அகாலமாகிப் போன தனது பெற்றோர் விட்டுச் சென்ற சொத்துகளும், மனைவி என்ற அடையாளமுந்தான் ஜோனின் நிலையிலிருந்து தன்னை வேறுபடுத்தித் தள்ளி வைத்துள்ளது என்பதையும் மேரி நன்கறிவாள்.
வைபவ ஏற்பாடுகளில் ஜெகனுக்குத் திருப்தியிருக்கவில்லை. தான் கூறிய எதையும் ஜோன் சரியாகச் செய்யவில்லை என்பது அவனுக்குப் பெரும் சீற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தது. மிக உயர்ந்த பதவியில் உள்ளவர்களும் சமூகப் பிரபலங்களும் செல்வந்தர்களும் மட்டும் அழைக்கப்பட்டுள்ள இவ்வைபவத்தை அவர்களெல்லோரும் வியக்கும் வகையில் ஆடம்பரமாகச் செய்து முடித்து விட வேண்டுமே என்ற தனது பதட்டத்தில் சிறுதுளியேனும் ஜோனிடம் இல்லையென்பது அவனுக்கு மேலும் எரிச்சலை ஏற்படுத்திற்று. வீட்டில் வேலைக்கு ஆளிருக்கும் போது வெளியிலிருந்து வேறு வேலைக்காரர்களைக் கொண்டு வருவது அநாவசியமானது என்று அவன் எண்ணினான். மேரியும் போதிய ஒத்துழைப்புத் தராமலிருப்பதற்கு, அவளது நிதி அனுசரணை பற்றிய கர்வமே காரணமாக இருக்கும் என்றும் நினைத்துப் பார்த்தான். சாப்பிட்டிலும் ருசி தெரியவில்லை. எல்லார் மீதுமிருந்த எரிச்சலையும் கோபத்தையும் ஜோன் மீதே கொட்டிக் கொட்டி அவனிடமிருந்து பலாத்காரமாக தனக்குத் திருப்தியான வேலைகளைப் பெற்றதில் நள்ளிரவுக்கு முன்னரே சோர்வுற்று அயர்ந்து தூங்கி விட்டான் ஜெகன்.
காலை பத்து மணிக்குக் கண் விழித்து எழுந்து வந்து பார்த்த போது வைபவ ஹோலில் மது போத்தல்களை வரிசையாக அடுக்கிக் கொண்டிருக்கும் ஜோனைக் கண்டான். எப்படியும் இன்று மாலை ஆறு மணிக்கு விருந்தினர் வரத் தொடங்கு முன்னர் வேலைகளையெல்லாம் ஜோன் முடித்து விடுவான் என்ற எளியதொரு நம்பிக்கை அப்போதுதான் அவனுக்கு ஏற்பட்டது. விலையுயர்ந்த அந்த மது போத்தல்களை உடைத்து விடாது சரியாக அவன் அடுக்கி வைத்து விடுவானா என்ற சிறிய சந்தேகமொன்று ஜெகனின் மூளைக்குள் தட்டுப்பட்ட அடுத்த கணமே ஜோனின் கையிலிருந்த போத்தல்களில் ஒன்று மிக இலாவகமாக அவனது ஏந்திய வலது கைக்கும் வயிற்றுக்கும் இடையே நழுவிக் கீழே விழுந்து களீரென உடைந்து சிதறிற்று. ஜெகனுக்கு கோபம் உச்சிக்கேறியது. இரண்டிரண்டு படிகளாகப் பாய்ந்து கீழிறங்கி ஓடி வந்தவன், தனது முழுப் பலத்தையும் வலது காலுக்குச் செலுத்தி, ஜோனின் நெஞ்சின் மையத்தில் ஆக்ரோஷமாகக் கத்திக் கொண்டே உதைத்துத் தள்ளினான். கையிலிருந்த எல்லா போத்தல்களும் கீழே விழுந்து உடைந்து சிதற அவற்றின் மத்தியில் பஞ்சுக் குவியலாய் பரந்து விழுந்தான் ஜோன். தனது முற்றிய கோபத்தை வார்த்தைகளாக்கி வாயிலிருந்து உதிர்த்த ஜெகன், உடைந்த கண்ணாடித் துண்டுகளிலொன்று காலில் தைக்கும் வரை, கண்களால் கெஞ்சிக் கதறிய ஜோனை, கோபம் கொப்பளித்த முகத்துடன் மிதித்துத் துவைத்தான். மேரியினதும் சமையல்காரியினதும் அனுதாபத்தினால் கண்ணாடித் துண்டுகளிலான அச்சிறையிலிருந்து ஜோன் மீள முடிந்தது.
மாலையில் முன்கூட்டியே அலுவலகத்திலிருந்து திரும்பி விட்ட ஜெகனின் பார்வை வைபவ ஹோலைத் துழாவியது. அவனுக்கு ஆச்சரியமாகவும் இருந்தது. இவ்வளவு விரைவாகவும் நேர்த்தியாகவும் ஹோலை எப்படி ஏற்பாடு செய்ய முடிந்தது இவனால்? தன்னுடைய தலையீடுதான் தாமதத்திற்குக் காரணமாயிருக்குமோ என்ற மனதின் குறுகுறுப்பை அவன் ஏற்கவில்லை. ஏற்பாடுகள் திருப்தியளிப்பதையும் அவனால் நம்ப முடியவில்லை. இனம் புரியாத ஏதோவொரு புளகாங்கிதம் மனமெங்கும் பரவியிருப்பதை உணர்வது அவனுக்குப் புதியதொரு அனுபவமாகவும் தெரிந்தது.
எனினும், வைபவத்திற்கு வருகை தந்து மது போத்தல்களை வெறுமையாக்கிச் செல்லும் பெரும்பாலான செல்வந்தர்களின் வெளிப்படையான வார்த்தைகளை பாராட்டா, கிண்டலா எனக் கண்டறிய முடியாமல் பரிதவித்த போது திடீரென அடியிலிருந்து பற்றிப் படர்ந்து உச்சிக்கு வந்து தகித்த எரிச்சலும் கோபமும் ஆக்ரோஷத்துடன் ஜோனைத் தேடிக் கொண்டிருந்தன.
வைபவம் முடிந்த சற்றைக்கெல்லாம் வாய் பேசாத ஜோன், அடிக்குரலில் அலறி ஓலமிட்டுக் கதறும் ஒலி, ஜெகனின் பூட்டப்பட்ட அறையுள்ளிருந்து கசிந்து வருவதை, பரிதாபம் தோய்ந்த முகத்துடன் ஹோலில் மேரி கேட்டுக் கொண்டு நின்றாள்.
-------------------
அதிபர் அஸ்ரப், பாடசாலையைப் பொறுப்பெடுத்து பத்து வருடங்களாகின்றன. நகரில் புதிதாக எழுந்த தனியார் பாடசாலைகளுடன் போட்டியிடுவதில் அவர் எவ்வித சிரமத்தையும் எதிர்கொண்டதில்லை. ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும், சிறந்த முகாமைத்துவமுமே இந்த அரசாங்கப் பாடசாலையின் வெற்றிக்குப் பிரதான காரணம் என, தான் அதிதியாக அழைக்கப்படுகின்ற எல்லா மேடைகளிலும் அவர் கூறி வந்தார். கல்வி மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த சில பிள்ளைகள், பாடசாலையின் தரத்தைப் பின்தள்ள முனைந்த போதெல்லாம் அச்சவாலைப் பெரும் சிரமத்துடன் அதிபர் வெற்றி கொண்டிருந்தார். இன்னும் நான்கைந்து மாதங்களில் ஓய்வு பெற இருக்கின்ற நிலையில், தன் முன்னால் அமர்ந்திருக்கின்ற மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளை அவர் கலவரத்துடன் பார்த்தார். பாடசாலை விடும் நேரம் பார்த்து அவர்கள் வந்திருப்பது அவரைச் சங்கடப்படுத்தியது.
“நேற்று எங்களுக்கு ஒரு கம்ப்ளெய்ன்ட் வந்தது. அதெப் பற்றி இன்குவாரி பண்றத்துக்காக வந்திருக்கிறம்” என்றார் அக்குழுவுக்கு தலைமை தாங்கி வந்தவர் போலிருந்த பெண்ணதிகாரி. சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க அவரது பார்வையில் மிகுந்த அழுத்தம் தெரிந்தது. அவரது இடதும் வலதுமாக மற்றும் இரண்டு அதிகாரிகள் அமர்ந்திருந்தனர். அவர்களது முகங்களும் இறுகிக் கிடந்தன.
“போன வீக், ஸ்கூலுக்கு லேட்டா வந்த கிரேட் சிக்ஸ் படிக்கிற ரஹீம் என்கிற மாணவன உங்கட ஸ்கூல் டீச்சர் அடிச்சி பனிஷ் பண்ணியிருக்கிறார். மாணவன்ட அப்பா குடுத்த கம்ப்ளெய்ன்டுதான் இப்போ எங்க கையில இருக்கிறது” என அப்பெண்ணதிகாரி தனது வலது கையிலிருந்த கடித உறையொன்றைக் காண்பித்தார்.
“டீச்சர்ர பேரு முகைதீன்” என வலது பக்கமாக அமர்ந்திருந்த அதிகாரி முதற்தடவையாகப் பேசினார். அவரது குரலின் கரடு முரடு அதிபரை மேலும் பயமுறுத்தியது.
முகைதீன் ஆசிரியர் பாடசாலையில் ஒழுக்கக் கட்டுப்பாட்டுக் குழுவுக்கு தலைமை வகிப்பவர். மாணவர்களின் வரவு, ஒழுக்க விடயங்களில் மிகுந்த பொறுப்புடன் செயற்படுபவர். தன்னைவிட, முகைதீன் ஆசிரியருக்குத்தான் மாணவர்கள் அதிகம் கட்டுப்படுவர் என்பது அதிபருக்கும் தெரியும். சிற்று}ழியனைக் கூப்பிட்டு, முகைதீன் ஆசிரியரை “அழைத்து வா” என்று கூறுவதைத் தவிர அவருக்கு வேறெதுவும் பேச நாவெழவில்லை.
எல்லோரும் முகைதீன் ஆசிரியருக்காகக் காத்திருந்தனர். இந்தப் பிரச்சினையை முகைதீன் எப்படி சமாளிப்பார், அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுப்பார்கள், தனக்கும் ஏதாவது கெட்ட பெயர் ஏற்பட்டு விடுமோ என்றெல்லாம் மனதுக்குள் குழம்பிக் கொண்டிருந்தார் அதிபர்.
“ஸ்டூடன்ஸ அடிக்க வேணாம்டு எவ்ளோ தரம் சொல்றது?” அமைதியாக இருந்த மற்ற அதிகாரி சினத்துடன் அதிபரைக் கடிந்து கொண்டார். “ஹியூமன் ரைட்ஸ கடுமையாப் புறக்கணிக்கிற நிலைமை, ஸ்கூல் டீச்சர்ஸ் மத்தியில இப்போ அதிகரிச்சி வருது...” அவர் தொடர்ந்தும் ஏதோ சொல்லத் தொடங்குமுன் அவரது செல்போன் சத்தமிட்டது. அதிகாரி தனது கையிலிருந்த ஆடம்பரமான செல்போனை எடுத்துக் காதில் பொருத்தினார். “எக்ஸ்கியூஸ் மீ” சொல்லிக் கொண்டு, கதிரையிலிருந்து எழுந்து சற்றுத் தள்ளி நின்று கொண்டு அடக்கமான குரலில் கதைக்கத் தொடங்கினார்.
“என்னடா தேவா?”
“ஸ்கூல் இன்குவாரிக்கு வந்திருக்கேன்”
“கூட, சுமதி மேடமும் ஜெகன் சேரும் இருக்கிறாங்க”
“யெஸ் யெஸ், ஈவ்னிங் போலாம்”
“ஓகே”
அந்த அதிகாரி கதிரையில் வந்து அமரவும் முகைதீன் ஆசிரியர் காரியாலயத்திற்குள் நுழையவும் சரியாக இருந்தது.
***