Sunday, April 28, 2013

சாபம் - கோ.ராஜாராம்

1979-ல் வெளியான 'இழந்து போன ஆகாயம்' தொகுப்பிலிருந்து, எனக்குப் பிடித்த 'நெறிகள்' இதழ் சிறுகதை, நன்றியுடன்...

***
சாபம்
கோ.ராஜாராம்

நான் மல்லாந்து படுத்திருந்திருந்தேன். மனோவுக்காக காத்திருந்த என் அருகாமை விரிப்பும் என்னோடு சேர்ந்து மல்லாந்தவாறாய் ஓர் எண்ணம். மனோ வர இன்னும் நேரமாகும். அக்கா வந்திருக்கிறாள். அக்காவின் இரண்டு குழந்தைகள் இங்கேயே மூன்று உள்ளன. தங்கை சிங்காரிக்கும், அக்காவிற்கும் இடையில் மனோதான் எல்லா வேலைகளையும் செய்ய வேண்டி வரும். கொல்லைப் புறத்தில் பேச்சுச் சத்தம் கேட்டது. அம்மா, அக்கா, சிங்காரி என்று மாறி மாறிக் குரல். ஒன்றையொன்று இடைவெட்டும் குரல்கள். மனோவின் குரல் எப்போதாவது தான் கேட்டது. அவள்தான் பாத்திரம் துலக்கிக் கொண்டிருக்க வேண்டும். பயல்கள் ஒருவனோடொருவன் கட்டி புரண்டபடி 'சளசள'வென்று பேச்சுக் கொட்டியவாறு, புதிய நண்பர்கள் தந்த குதூகலத்தில் அமிழ்ந்து ஒலிகள் எழுப்பிக் கொண்டிருக்கிறார்கள். இன்று அவர்கள் கூடத் தூங்க கொஞ்சம் நேரந்தான் ஆகும். குழாயிலிருந்து தொட்டிக்குள் விழுகிற நீரின் சீரான ஒலி கொல்லைப் புறத்திலிருந்து. இந்த மனோ எப்போதுதான் வந்து தொலைவாள்? வந்தவுடன் அவள் என்ன செய்வாள் என்று பழகிப் போய்விட்டது. விளக்கை அணைத்துவிட்டு தாழிடுவாள். ஏன் இதை மாற்றிச் செய்ய மாட்டாள் என்று யோசித்திருக்கிறேன். முதலில் விளக்கைத்தான் அணைத்திருக்கிறாள். பின், என் அருகில் என் இடக்கைப் புறமுள்ள வெற்றிடத்துக்கு வந்து மெல்ல உட்கார்வாள். உட்கார்ந்தபடியே என் இடது தோளைத் தொடுவாள். எப்பவுமே கை ஜில்லிட்டுப் போய்த்தானிருக்கும். அவ்வளவு நேரம் தண்ணீரில் கைகளை அலம்பி, பாத்திரம் துலக்கியிருப்பாள். அதன் மென்மை மிக அதிகமாய்த் தெரியும். 'நெழுநெழு'வென்று உணர்வேன். நுனிவிரல்கள் உட்புறமாகச் சிலவேளை குழிந்துகூடப் போய்ச் சுருக்கங் கொண்டிருப்பதைக் கண்டிருக்கிறேன். அவள் கை மெள்ள என் இடது தோளிலிருந்து பயணமாகி என் இடது மார்பில் ஊர்ந்து, கழுத்து வழியே பயணமாகி என் இடது மார்பில் ஊர்ந்து, கழுத்து வழியே உதடுகளை வழியும். என்னுள் சலனம் அப்போதுதான் ஏற்படும். பழக்கத்தை மாற்ற வேணும், நான் அதற்கு முன்பே சலனப்பட முயன்றிருக்கிறேன். ஆனால் அவள் விரல்களின் குளுமை என் உதடுகளை வருடும் வரையில் என் உறைவு குலைந்ததேயில்லை. இதென்ன பழக்கத்தின் அடிமையாய்ப் போய், என்னையே, இயந்திரமாக்கி, என் உயிர்ப்புகளிளை இழந்து வருகிறேன் என்று தோன்றியிருக்கிறது.

மனோவின் உடல், மனோவின் அசைவுகள், நெளிவுகள், எந்த நேரத்தில் அவள் எங்கே தொடுவாள், எங்கே முத்தமிடுவாள் என்றெல்லாம் ஒரு கணிப்பும், இயந்திரமயமான எதிர்பார்ப்பும் எனக்கிருந்தது. எங்கே கை வைத்தால் எலும்பு தட்டுப்படும், எங்கே கை வைத்தால் சதை தட்டுப்படும், என்றெல்லாம் எனக்குப் பழக்கமாகியிருந்தது. எந்த ஸ்பரிசம் அவளைக் கிளர்ந்தெழச் செய்யும் என்றெல்லாம் மனனமாகியிருந்தது. அவளுக்கும்தான் இப்படி இருக்கும். இந்த உணர்வுகள், பழக்கப் படிவுகள் என்னைத் திடமாக்கி விடுகின்றன. சில சமயம், உயிரிழந்த பொம்மைகள் இரண்டின் கழைக்கூத்து போல, எந்தப் புதுமையும் அற்ற ஒரு செயல்பாடு. சில சமயம் உரக்கக்கத்த வேண்டும் போல் இருக்கும். முடிந்ததில்லை. எங்கள் எல்லாச் செயல்களுக்கும் சாட்சியமாய் அருகில் அறையில், ஒரு சுவர் இடைவெளிக்கப்பால் என் அம்மா, தம்பி, தங்கையர் என என்னைக் கூசச் செய்யும் பார்வை வீச்சுக்களுடம், என் ஒலிகளை உணர்ந்து கேலி செய்கின்ற விஷப் படுக்கைகள் என அவர்கள். அவர்கள் மீதிருந்த என் பாசம் சிறிது சிறிதாகக் கூச்சம் நிறைந்த ஒரு பயமும் வெறுப்புமாய் ஆகிவிட்டிருக்கிறது. முழுமை பெறுகிற உச்சநிலைகளிலும்கூட எங்கள் முனகல்கள் அமுங்கித் தேய்ந்து பக்கத்து அறையிருப்பின் சுமையேறி நசுங்கிப் போய்ச் சோர்ந்து ஒலிக்கையில் என் அடிமைத்தனம் மட்டுமே விஸ்வரூபமேடுத்து என்னை உறையவைக்கும். ஐயகோ! என் மனைவிக்குக் கூட முழுமையாக, ஒலிரூபமாக நான் சொந்தப்படவில்லையா? பின், இதென்ன உறவுகளின் சமுத்திரத்தில் என்னை மூழ்கடித்துக் கொள்கின்ற முட்டாள்தனமான பொறுப்புணர்ச்சி?

இன்னமும் கொல்லைப்புறம் சப்தங்கள் ஓயவில்லை. இந்த எதிர்பார்ப்புக்கு விரைவில் பூர்த்தி செய்யப்படவிருக்கிற விழைவின் உச்ச்சக்கட்ட எக்களிப்பிற்கு, உலர்ந்துபோன ஒரு சலிப்பு மிக்க பின் விளைவான அயர்ச்சிக்கும், அந்த வேளை மனம் நிரம்பிப்பொய், உடை குலைந்த நிலையில், எந்த பாலிணைவு விழைவுமின்றி, அவள் மார்பையும் கூந்தலையும் வருடுகின்ற, உணர்ச்சிகள் வரண்ட, ஒரு மகிழ்ச்சியற்ற மனவெளிக்கு என்ன அர்த்தம்? இந்த எதிர்ப்பும் பழக்கமாய்ப் படிந்துபோன ஒன்றெனினும் அந்தச் சிறையைத் தவிர்தெறிந்து விட முடிந்ததில்லை. அக்காலத்திலிருக்கின்ற இன்றுகூட, என் இரவுப் பொழுது இப்படித்தான் கழியவேண்டும் போல. ஒரு களிப்பு அற்ற கடமைப்பாங்கு மட்டும்... நான்சென்ஸ்!

தினமும் இவளேதானா , எனச் சலிப்படைந்து, அவளுடைய infinite variety என்று ஏதோ ஒற்றைக் கற்பனை செய்துகொண்டு, வேறு விதம ¡கமுயன்றபோதுங்கூட;  அவள் அந்த வழி தப்புதலை உணர்ந்து, மென்மையாக,  பழக்கமாகிப்போன பாதையிலெயே என் கைகளை நகர்த்தி வைத்து விடுவாள். என்னால் எதிர்க்குரல் தரமுடியாது, இதுதான் சரியென்பது போல அவளுக்குள் நினைப்போ? அவளுக்கு ஏன் சலிப்பே தோன்றினதில்லை. முதலில் விளைக்கை அணைத்து விட்டுக் கதவைச் சாத்துவதில் தொடங்கி அயர்ச்சியுடன் என் கைகளைத் தன் மீது ஊர அனுமதித்தபடி, தன் ஆடைக்குலைவை ஒதுக்குவதுபோல, என் மேற்காலில் கைகளை வைக்க முற்படுவதுவரை ஏன் இவள் வேற்றுமை காட்டுவதில்லை. மனதுக்குள்ளான என் இறைஞ்சுதல்கள், மனோ, நீ சற்றே மாறேன். உன்னைச் சிறிது நேரம் எனக்கு உடைகள் இன்றி காட்டி விடேன். மனோ, நீ ஸ்பரிசத்தல் மட்டுமே என்னுடன் உறவு கொள்வதை முடித்துக்கொண்டு சற்றே தனிமை கொண்டு, காட்சியில், ஒலியுறவில் என்னுடையவளாய் ஆகப்பாரேன். இல்லை, நீ மாறத்தான் வேண்டும். உன் சிறிய மார்பகங்கள், கை வைத்தால் எலும்பைத் தெரிவிக்கிற பின்னணியில் கொண்டு செல்லும் மார்பகங்கள் - ஐயோ¡ சற்று எனக்கு எங்கே சதைப்பற்று வேண்டு,. உன் பின் பகுதியிலிருக்கிற சதைப் பற்று போல - நான் ஒரே ஒரு முறை தொட்டு ரசித்த, அதற்கு மேல் செல்ல பயந்ததுபோல் என்னுள் முடங்கிப்போன அந்தக்கணத்தின் மகத்துவத்தின் சதைப்பற்றுத் திமிறுகிற என் கல்லூரித் தோழி ஜானுவினுடையது போல, சரி உன் பௌதீக அமைப்பை இனி மாற்றுவதென்பதில்லை. தொலைகிறது. உன் பழக்கத் தொற்றுதல்கள்? Infinite Variety வேண்டாம் - கொஞ்சம் போல மாறுதல். இந்த என் இறைஞ்சுதல்கள் உன் காதுகளில் விழாத ஒலியலை வடிவில் எனக்குள்ளேயே தங்கி விடுகின்றன. நான் உன்னுடன் பேசும்போதுகூட  என் தேவைகளை மறந்து, உன் உறவுகளை, என் உறவுகளை உறவுகள் என்ற சொல்லின் குறிப்பைத் தவிர வேறு தொடர்பற்ற silly உறவுகள். அவர்கள் பலங்கள் / பலவீனங்கள், மகிழ்ச்சிகள் - உனக்கும் எனக்கும் எந்த விதத்திலும் உறவில்லாத அந்த உறவினர்களைப் பற்றியா நாம் பேச வேண்டும்? பேச்சு என்ற சொல்லுக்கு நியாயந்தராத, உதடுகளில் கூட உருப்பெறாத காற்றோடு கலந்தலிலே முடிகின்ற பேச்சுக்கள்... நான்சென்ஸ்.

கொல்லைப் புறத்தில் பாத்திரமெல்லாம் கழுவியாகி விட்டது போல உணர்வு. பேச்சுச் சத்தம் குறைந்திருக்கிறது. முழுக்க நின்று விடவில்லை. பெண்களுக்கு பேசுவதற்கு ஏதோ ஒரு விஷயம் கிடைத்த்துக் கொண்டேதான் இருக்கிறது. இந்த அறையின் நான்கு சிமிண்ட் சுவர்களுமே சரசரவென்று நகர்ந்து பென்ணுருவாகி, மனோவாகி விளக்கை அணைத்து விட்டுக் கதவைச் சார்ந்திவிட்டு என்னருகில் படுத்து, தன் பழக்கத்தைப் பிரயோகம் செய்கின்ற மாதிரி ஓருணர்வு. ஆனாலவள் இன்னமும் வரவில்லை. அடுத்த அறையில் குழந்தைகளின்  ஒலி சற்றுக் குறைந்திருந்தது. அக்கா அதட்டிக்கொண்டிருந்தாள். 'படுங்கடா படுங்கடா' பயல்கள் சத்தம் இன்னமும் குறைந்தது. என் பெயரைச் சொல்லி அக்கா கூப்பிட்டாள் 'சத்தத்தைக் காணோமே தூங்கிட்டான் போலிருக்கு. நாளெல்லாம் வேலை, பாவம்' ஆனால் நான் தூங்கவில்லை. இந்த அறைக்குள் ராத்திரியில் ஒலியெழுப்புவது, ஒரு முரண்பாடு போலாகிவிட்டது. சாத்தியமற்ற, பொருந்திவராத ஒரு முரண்பாடு இந்த அறை அந்த ஒரு செயலுக்கே ஆனதுபோல.

சுற்றுலாவில் சென்ற நாட்களில் நானும் மனோவுமாய் ஓர் இரவு, ஒரு படுக்கையைப் பகிர்ந்து கொள்ள நேர்ந்தது. மகாலிபுரத்தின் கடலொலி 'ஹோ'வென்று, லாட்ஜ் சுவர்களை மீறி ஒலியெழுப்பியது. சுற்றுலாக் களைப்பில் படுத்தவன் வீட்டின் அறையில் செய்வது போலவே மனோ இங்கே விளக்கு அணைந்து விட்டுக் கதவைச் சாத்தியவுடன்  உள்ளூர 'திக்'கென்று எரிச்சல் பட்டு, என்னை அவளுக்குத் தரமால் முழுக்கவும் மறைந்து குறுகி ஜடமாய்க் கிடந்தேன். தோளிலிருந்து தொடங்கி என் உதட்டுக்கு வந்த கைகள் என் திடத்தைக் கண்டு தயங்கின. ஏதோ தூக்கம் நெருங்கினாற்போலிருந்தது. என் அடுத்த விழிப்பில் என்னருகில் கண்ணயர்ந்த மனோ தெரிந்தாள். பின் சட்டென்று என் காதில் ஒலித்துச் 'சர சர'வென்று வடிந்து போகிற, பெரிய அலைகள். 'என்னைக் கொண்டு விடும்மா' என்று நடுஇரவில் எழுந்து கொண்டு பாத்ரூம் போவதற்குள் அம்மாவை அழைக்கின்ற தம்பியின் நினைவுதான் வந்தது. அந்தத் தனியறை இங்குமா, இன்னுமா துரத்துகின்றது என்று எண்ணி என் படுக்கையிலிருந்து இறங்கி விளக்கைப் போட்டேன். அவளின் அலங்கோலம் அவள் அரை விழிப்பில் அசைந்து 'என்ன' என்றாள். 'ஒன்றுமில்லை'யென்று சொல்லிவிட்டுப் பின் பாத்ரூம் சென்று திரும்பினேன். அவள் எழுந்து உட்கார்ந்திருந்தாள். பாவாடை, ஜாக்கட் மட்டும். அரைத் தூக்கக் கலக்கத்தில் சோர்ந்த முகம், நான் அவளருகில் உட்காராமல் கீழேயோ சுவற்றில்சாய்ந்து கொண்டு உட்கார்ந்தேன். அவள் அந்த அசாதரணமாகப் பட்ட செயலினால் சட்டென்று எழுந்து கொண்டாள். 'என்னங்க' 'ஒண்ணுமில்லை' அவள் அருகில் வந்து உட்கார்ந்தாள். பக்கவாட்டில் திரும்பி சட்டென்று அவள் முகத்தை அழுந்தப் பற்றி என் உதடுகளைப் பதிந்தேன். ஒரு நிமிஷம் அதிர்ந்து போனது போல் தெரிந்த அவள் அடுத்த நிமிஷம் தன் கைகளை என் மேல் படரவிட்டு - வழக்கம்போலவே - இடது கையை என் இடது தோளிலும், வலது கையை முதுகெலும்பிலும் படர விட்டாள். சட்டென்று எல்லாமே, என் முயற்சிகளே ஒன்றுமில்லாததான உணர்வில் என்னைத் தளர்த்திக் கொண்டேன். 'என்னங்க' 'ஒன்ணுமில்லை' சட்ட்டென்று அவள் மடியில், பாவாடை மெலிதான தன்மையில் நுணுக்கமாய்த்தெரிந்த அவள் அங்க அமைப்புகள் என் முகத்தில் அழுந்த நான் குலுங்கினேன். கண்ணில் நீர் வந்து விடுமோ என்றொரு பயம். அந்த உள்ளாடையில் நாற்றம் நாசியிலேறியபோது இன்னமும் என் முகத்தை அவள் மடியில் பதித்துக்கொள்ளத் தோன்றியது.அந்த உடை, அப்போது, அவளுக்கும் எனக்கும் இடையில் ஒரு தடையாய் இல்லை.  ஒரு தொடர்புக்கருவி போலிருந்தது. அதன் மூலமாய்த்தான் அவளை கட்டவேண்டுமது போல. அழுத்தத்தில் அவளின் உள் உறுப்புகளின் உருவக்கேந்திர ஸ்தாபன விஸ்தீகரனம் அருகாமைப் பட்டது. சட்டென்று என் முகத்தை விலக்கிக்கொண்டு விட்டேன். விம்மியழுதுவிடுவேனோ? என்றொரு அச்சம். 'என்னங்க' 'ஒண்ணுமில்லை'. அவள் கையில் வழக்கமான ஜில்லிப்பு இன்று இல்லை என்று ஆறுதலான நினைவு வந்தது. அவளுடைய விரல்களை நான் வருடினேன். தினம் ஒரு பாணியாக, தினம் ஒரு அமைப்பாக இந்த விரல்கள் இருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று எண்ணிக் கொண்டேன். இயலாததை எண்ணிக் கொள்வதில் ஒரு அசட்டு சந்தோசம். குளிர்ச்சியின்மையைத் தவிர ஒரு மாற்றமும் அந்த விரல்களில் இல்லையென்ற உணர்வு வந்தவுடன் விரல்களைப் பிடியிலிருந்து நழுவ விட்டுடேன். 'எண்னங்க' 'ஒண்ணுமில்லை' அன்று வெறும் உடனிருப்பாக, நிகழ்வின்றிக் கழிந்தது. ஆனால் காலையில் எழுந்ததும் வழக்கம்போலவே அவள் குளித்து விட்டாள்.

அருகிலிருந்த அறையில் விளக்கு அணைக்கப்பட்டு விட்டது. புத்தகம் படிப்பதற்காக என்றெண்ணிக்கொண்டு எரியவிட்ட மின் விளக்கு என் அறையில், மனோ உள்ளே வந்து விளக்கை அணைத்து வீட்டுக் கதவைச் சாத்தலானாள். என் காத்திருப்பு ஒரு பொருளுமற்றதென்று எண்ணி இருட்டினூடே என்னை நோக்கி வருகிற என் மனோவைப் பார்க்கலானேன். ஒருவருக்கொருவர் வரமாக வேண்டிய நாம், சாபமாகி போனதெந்தவிதம்? உன் அம்மா, என் அம்மா, என் தங்கை, தம்பி  இந்த ஒலிகளை கடத்துகிற நான்கு சுவர்கள், என் முன்னும் தளராத உன் உடைகள், தவறான இடங்களில் எலும்பாகியும் சதையாகியும்போன நீ , பொறுப்பேற்க முடியாத  உன் உடல் அமைப்பு மோக நிழல் தீண்டுதல்களிலும் சிலிர்ப்பேறாத உன் வெறுமையான கடமையுணர்ச்சி, நீ தோளில் தொடங்குகிற பிரயாணம், எல்லாம் ஏன் இன்று வெறும் தேவையாக மட்டுமே மாறி விட்டன?

மனோவின் கையை என் இடது தோளில் உணர்ந்தேன்.

***
நன்றி : கோபால் ராஜாராம்

No comments:

Post a Comment