Thursday, January 31, 2013

டே, இது நம்ம மன்னாடே!

‘ஒரே.. சங்கீதமா போட்டு அறுக்குறாடா நீ’ என்று அலுத்துக்கொள்ளும் ரியாத் நண்பன் ஒருவனுக்காக  இந்தப் பதிவு. இருவரும்தான் நாகப்பட்டினம் பாண்டியன் தியேட்டரில் ’மெஹ்பூபா’வைப் பார்த்தோம் அப்போது. பாட்டு முடிந்ததும் ‘நல்லா ஆடுறாள்ல?’ என்று கேட்டதற்கு ‘நல்லா ஆடுனிச்சி!’ என்றான்!

**

'பண்புடன்’ சில கருத்துகள் :

‘மன்னாடேயை தெரியாதென்றால் அவர்களுக்கு இசையில் பரிச்சயமில்லை எனலாம்.  செம்மீன் படத்தில் சலீல் ச்வுத்ரி இசையில் ' மானச மயிலெ வ்ரு ' பாடலை பாடியவர். ஷோலேயில் ' யே தோஸ்தி' பாடலை பாடியவர். இவரின் ' லாகா சுன்ரி மே தாக் சுபாவும் கெய்சே '  தனிச்சிறப்பு வாய்ந்தது. துபாயில் இவரின் கச்சேரியை தவற விட்டு விட்டு பின்னர் Al Mansoor Video வில் ஒளி நாடா வெளியிட்டதை வாங்கினேன்.  கவிதா கிருஷ்ணமூர்த்தியுடன் சேர்ந்து கலக்கியிருக்கிறார். ‘ - அண்ணன் சடையன் அமானுல்லா

**

"ஆனந்த்" படத்தில் வரும் "ஜிந்தகி கைஸி ஹை பஹேலி ஹாயே" என்ற பாடல் எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. தமிழில் வந்த "அடுத்த வீட்டுப் பெண்" படம் ஹிந்தியில் "படோசன்" ஆனபோது, அதில் கிஷோர்தா, மெகமூத் இருவருடன் சேர்ந்து மன்னாடே கலக்கிய 'ஏக் சதுர நார்," என்ற கலக்கலான நகைச்சுவைப் பாட்டு எத்தனை தடவை பார்த்தாலும் சிரிப்பை வரவழைத்து விடும். பாருங்களேன், இதில் மெகமூத்துக்கு பின்னணி பாடியவரும் மன்னாடே தான்! :-))

இந்தப் பாடலை ஒலிப்பதிவு செய்ய 12 மணி நேரமானதாம். - தமிழன் வேணு

**

காதலிக்க நேரமில்லையோட இந்திப் பதிப்பு 'ப்யார் கியே ஜா'வுல மனமென்ற கருவண்டு பறக்கட்டும் பாடுனது மன்னாடேதான். ஐ.யய்.யோ. ஐயய்யோன்னு வரும். அதுல நாகேஷ் ரோல்ல ஆடுனது மெஹ்மூத்தான்.கூட ஆடுனது நம்ம பேவரிட் மும்தாஜ். தமிழ்ல ஆடுனது சச்சு. தமிழ்ல எம்.ஜி.ஆர். பாடுன 'மேரா நாம் அப்துல் ரகுமான்' (சிரித்து வாழவேண்டும்) பாட்டோட இந்தி வடிவம் ப்ரானுக்காக பாடுனதும் மன்னாடேதான்.'யாரீ ஹை ஈமானு மேரா யாரு மேரி ஸிந்தகீ' (ஸ்ஞ்ஜீர்) ஆத்தண்டிக் பஷ்தூனியன் வே ஆப் எக்ஸ்ப்ரசிங் பீலிங்ஸ் பாக்கணும்னா இந்தப் பாட்டப் பாக்கலாம். - நண்பர் ஆசாத்

Wednesday, January 30, 2013

மனுஷ்யபுத்திரன்


காலம்’ இதழிலிருந்து (1998), நன்றியுடன்...
**

இக்கோடையில்...  - மனுஷ்யபுத்திரன்

போகும் வழி நெடுக
மதில்களில் மினுங்கும்
கண்ணாடிச் சில்லுகள்
கிழியும் தசை வேண்டி
வேட்கையுடன் அழைக்கின்றன

பார்க்கப் பார்க்க
கைகளில் துளிர்த்துவரும்
உதிரத் துளிகள்
உறைய முடியாமல்
ஆவியாகின்றன இக்கோடையில்.

***

Tuesday, January 29, 2013

சுவாமிஜி, தாங்கள் எந்த மதத்தை சேர்ந்தவர்?


வேதாத்ரி மகரிஷியின் பதில்:

நான் எந்த மதத்தையும் சேர்ந்தவன் அல்ல, உலகப் பொது அருள்நெறி சமயத்தைச் சேர்ந்தவன். கர்மயோக நெறியே அதன் வேதமாகும். மனிதன் உடல் நலம், மனநலம் காத்து செயல் விளைவை மதித்து எவ்வுயிர்க்கும் துன்பம் இழைக்காமல் வாழ்வதே கர்மயோக நெறியாகும். இந்து மதத்திலுள்ள நம்பிக்கை, இஸ்லாமிய மதத்தில் உள்ள தொழுகை முறை, கிறிஸ்துவ மதத்தில் உள்ள தொண்டு, புத்த மதத்தில் உள்ள ஆராய்ச்சி, ஜைன மதத்தில் உள்ள ஜீவகாருண்யம் இவை எல்லாம் எனக்குப் பிடிக்கும்.
***
நன்றி : மேலுலகம் போனால் மகரிஷியை சந்திரிக்க விரும்பும் ஒரு கவிஞர்

Saturday, January 26, 2013

வண்டிச் சில்லுக்குக் காத்துப் பத்தாது!

புலவர் மாமாவின்  இன்னொரு வேடிக்கை - ஹனீபாக்காவின் எழுத்தில். ஓவியம் வரைந்தவர் -ஆதிமூலத்தை விரும்பும்  இளைஞர் நளீம். ஆதிமூலத்தின் கோட்டோவியங்களின் பெரும் தொகுப்பு நூல் அவரிடம் இருக்கிறதாம். அமுக்கிட வேண்டியதுதான்! . ’இப்ப வரைந்திருப்பது யாரை? ’கம்பின்’ சைஸையும் அதைப் பிடித்திருக்கும் விதத்தையும் பார்த்தால் நம்ம காக்கா மாதிரி இருக்கிறதே என்று கேட்டேன் . அவரை இப்படியெல்லாம் கிண்டல் செய்யக்கூடாது என்று உத்தரவு வந்துவிட்டதால் அதற்கு மேல் கேட்கவும் முடியாது.. ‘சாச்சா இளமையில் செய்ததையெல்லாம் என்னாலோ, அரபாத்தாலோ செய்யமுடியாமல் போயிட்டு’ என்று சொல்லும் வருத்தப்படும் நளீம் , புலவர் மாமாவைத்தான் வரைந்தாராம் -  ஒரு நரைத்த, கறுத்த முதியவர் என்பது மட்டும் நினைவில் இருப்பதால். அவருக்கு என் ஸ்பெஷல் நன்றி. - ஆபிதீன்

***



ஊரிலிருந்து பத்து மைல்களுக்கு அப்பால் புலவர் மாமாவின் வயல் வாடி. ஒரு நாள் கருக்கலில் மாமா வாடியிலிருந்து ஊருக்குக் கிளம்பினார். வரும் வழியில் சைக்கிள் முன்ரோதைக்குக் காத்துப் போய் விட்டது. எங்கள் வயல் நிலங்களில் நாலாம் முச்சந்தி பிரபல்யமானது. மாலை வேளையில் ரொம்பக் களைகட்டும். போடிமார்களும் கமக்காரர்களும் கூடும் சிறியதோர் தேநீர்க்கடை அங்குண்டு. சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்த மாமா கடையின் சுவரில் சாய்த்து விட்டு ஒரு பிளேன் ரீ குடித்துக் கொண்டிருக்கும் பொழுது, மர்ஹூம் அபூபக்கர் ஹாஜியார் அவருடைய ட்ரக்டர் வண்டியில் வாடிச் சாமான்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். ட்ரக்டருக்குக் கை போட்ட மாமா என்னையும் எனது சைக்கிளையும் ஏற்றிக் கொள்ளுங்கள் என்றார். போடியாரோ பெருமனது கொண்டு, "மாமா பெட்டியில் இடமில்லை" என்று சொன்னார்.

ஒரு வருடம் கழித்து, அதே இடத்தில் மாமாவின் வண்டில் ஊருக்குப் போக வந்து கொண்டிருந்தது. ஹோட்டலின் முன்னால் ட்ரக்டரின் பென்னம்பெரிய டயருடன் மர்ஹூம் அபூபக்கர் ஹாஜியார் நின்று கொண்டிருந்தார். மாமாவிடம் சென்று மிகப் பவ்யமாக, "மாமா, டயர் உடைந்து போய் விட்டது. எப்படியாவது ஊருக்குக் கொண்டு வந்து தாருங்கள். அதற்குரிய சம்பளத்தை நான் தருவேன்" என்றார்.

வண்டிலை விட்டுக் கீழே இறங்கிய மாமா, மெதுவாக நடந்து போய் வண்டிச் சில்லை பெருவிரலைக் கொண்டு நசித்துப் பார்க்கிறார். "ஹாஜியார், மனம் பொறுக்கணும், சில்லுக்குக் காத்துப் பத்தாது" என்றார்.

மாமாவின் காளை விட்டு வண்டில் ஜல்ஜல்லென்று அந்த வீதியால் போவதை போடியார் வெறித்துக் கொண்டு நின்றார்.

**
நன்றி : எஸ்.எல்.எம். ஹனிபா அவர்கள்

Thursday, January 24, 2013

மனச்சுமை இறக்கிய மாநபி

மணவை முஸ்தபா அவர்கள் - 1998இல் - 'நம் பெருமானார்' பற்றி துபாயில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து, நன்றியுடன்..

***

மற்றவர்களின் கஷ்ட நஷ்டங்களில் பங்கேற்பது மட்டுமல்ல, அவர்களின் மனச் சுமையை இறக்கிவைக்க சிறிதுநேர சுமைதாங்கியாக மாறுவதும் ஓர் உயர்ந்த மனித நேயப் பண்பாகும். இதனை விளக்கும் சம்பவங்கள் பெருமானார் பெருவாழ்வில் காணலாமாயினும் அவற்றில் ஒரு சிறு சம்பவத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

வயது முதிர்ந்த மூதாட்டியொருவர் குடும்பச் சுமைகளால் மிகவும் துவண்டு போய் நின்றார். தன் மனக் கவலைகளை யாரிடமாவது சிறிது நேரம் இறக்கிவைத்து இளளப்பாற விரும்பினார். இவரது மனக் கவலைகளைக் காதுகொடுத்துக் கேட்க யாருமே தயாராக இல்லை. இதனால் மன பார அழுத்தத்தால் மிகவும் சோர்ந்து போயிருந்த நேரத்தில் அவ்வழியாகப் பெருமானார் (சல்) அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். அவரது நல்லியல்புகளை நண்குணர்ந்திருந்த மூதாட்டி, அவரையே தன் கவலைகளை - மன உளைச்சல்களை - இறக்கி வைக்க ஏற்றதொரு சுமைதாங்கியாகக் கருதி அவரிடம் தன் கவலைகளை விவரிக்கத் தொடங்கினார். வழி நெடுக அவைகளைப் பொறுமையோடு கேட்டதோடு அப்பிரச்சனை, கவலைகளுக்குத் தீர்வும் சொல்லிக்கொண்டு வந்தார். நீண்ட நேரம் தன் மனச்சங்கடங்களைப் பொறுமையாகக் கேட்டு தீர்வு சொன்ன அண்ணலாரின் செயல் அம் மூதாட்டிக்குப் பெரும் ஆறுதலாகவும் தேறுதலாகவும் இருந்தது. மனச் சுமைகளை இறக்கி வைத்தவராக, லேசான மனதுடன் நன்றி கூறிச் சென்றார்.

இதைக் கண்ணுற்ற நபித் தோழர்கள் 'இம் மூதாட்டியின் புலம்பல்களுக்கு இவ்வளவு பொறுமையோடு பதில் கூற வேண்டுமா?' என்றபோது, 'வயதான அம் மூதாட்டி தன் மனச்சுமைகளை இறக்கிவைக்கத் துடிக்கின்றபோது, அவள் சகோதரனாகிய நான் ஏன் இரு கரமேந்தி வாங்கிக் கொள்ளக் கூடாது? நம்மால் பிறருக்கு மகிழ்வும் மனச்சாந்தியும் தர முடியும் என்றால் நான் ஏன் அதை அவர்கட்கு வழங்கக் கூடாது?' எனக் கூறி மனித நேயத்தின் மாண்பைச் சுட்டிக் காட்டி, பின்பற்றத் தூண்டினார்கள்.

பிறருக்குத் துணையாக, ஆதரவாக இருப்பது மட்டுமே மனித நேயமாகிவிடாது. முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் எந்நிலையிலும் யாருடைய மனமும் புண்படாமல் நடந்துகொள்வதும் மனிதநேயத்தின்பாற்பட்டதுதான் என்பது நபி வழியாகும்.

**

ஆபிதீன் குறிப்பு : அமீரகத்தில் 'விஸ்வரூபம்' சினிமா தடைசெய்யப்படதற்காக சார்ஜாவிலுள்ள 'இளைஞர்கள்' சிலர் பெரும் மனச்சுமையோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு மனச்சாந்தி தர என்னால் இயலாது என்பதை மனிதநேயமின்றி தெரிவித்துக்கொள்கிறேன்!

**

'எம்மா பெரிதான பிரச்சினைகள் என்றாலும் ஏற்புறத் தீர்த்த ஒளியை, எம்பரம் ஒளியான இறசூல் முஹம்மதை ஏத்திடு மோக னாநீ!' - வி.எம். இஸ்மாயிலின் நபிப்பத்திலிருந்து ஒரு முத்து.

Monday, January 21, 2013

சரி வந்தாப் பாருங்க, இல்லெண்டா... - வீல் ஓடாவியார் ஜோக்

அன்புள்ள ஆபிதீன்,

இப்படி நூறு கதைகளாவது ஊரின் வயல் வெளிகளிலும் பள்ளிவாசல் விறாந்தாக்களிலும் சலூன் கடைகளிலும் சந்து பொந்துகளிலும் உலா வருகிறது. கதைக்குரிய மனிதர்களெல்லாம் மர்ஹூம்களெல்லாம் அவர் தம் கதைகள் உயிர்பெற்று உலா வருவது நமக்கெல்லாம் பெரும் கொண்டாட்டமல்லவா? ஏதோ அடுத்த தலைமுறையினர் நம்மளைப் போன்ற லூசுகளெல்லாம் வாழ்ந்த காலம் பார்த்து மனம் நொந்து போவார்கள்.
அன்புடன்
ஹனீபாக்கா

***

நறுக்கென்று பேசுவதிலும் ஜோக்கடிப்பதிலும் புலவர் மாமாவுக்கு கொஞ்சமும் சளைக்காதவர் எங்களூரில் புகழ்பெற்ற வீல் ஓடாவியார். புலிகளின் கெடுபிடிகளின் போது பெரிய பள்ளி மரைக்கார் மார்கள் ஊரை விட்டு ஓடிப்போக வீல் ஓடாவியார், புலவர் மாமா போன்ற சான்றோர்கள் பள்ளிவாயல் மத்திச்சம் ஆனார்கள்.

வருடந்தோறும் புஹாரி மஜ்லிஸ் வைபவத்தில் பலரும் நேத்திக் கடனை நிறைவேற்றவும் புதிய புதிய நேத்திக்கடன்களுடனும் மஜ்லிசுக்கு வருகை தருவார்கள். ஒரு நாள் நடுத்தர வயதில் ஒரு பெண் ஒரு தென்னம்பிள்ளையுடனும் சேவலுடனும் புஹாரி மஜ்லிசுக்கு வருகை தந்தார்.

"என்னம்மா நேத்திக்கடன்?"

"எனக்கு கல்யாணமாகி பத்து வருஷமாகியும் வவுத்துல புள்ளெ பூச்சி ஒண்டுமில்ல. புள்ளெ கிடைக்க வேண்டி இந்தக் காணிக்கை. அடுத்தவருஷத்துக்குள்ள புள்ளெப் பாக்கியம் கிட்டினால் உசிருக்கு உசிராக ஒரு ஆட்டுக்கிடா கட்டுவேன்" என்றார் பெண்.

மத்திச்சம் வீல் ஓடாவியார் மிகவும் நிதானமாக இப்படிச் சொன்னார்:

"வீட்ட போங்க, மாப்பிள்ளையோட மனம் விட்டுக் கதைங்க. சரி வந்தாப் பாருங்க, இல்லெண்டா வந்து செல்லுங்க, ஆள் போட்டு அடிப்பம்”

***

நன்றி : ஹனீபாக்கா | E-Mail : slmhanifa22@gmail.com

Saturday, January 19, 2013

புலவர் மாமா கதைகள் - எஸ்.எல்.எம். ஹனிபா

ஜாஃபர்நானாவுடயத பாத்துட்டு நம்ம ஹனீபாக்காவுக்கும் ரொம்ப சின்னதாயிடுச்சி.. எல்லாம் வயசுதான் காரணம்டு நெனைக்கிறேன். அல்லா போதுமானவன். இன்று காக்கா அனுப்பியிருக்கும் கதைகள் இவை. என்ஜாய்!

***

அன்புள்ள ஆபிதீன்,

நலமாக இருக்கிறீர்களா?

ஜாஃபர் நானாவின் கதைகளைப் படித்த போது ஊரில் உலா வரும் புலவர் மாமாவின் கதைகள் ஞாபகத்திற்கு வந்தன. எனது ஊர் மீராவோடையில் புலவர் மாமாவைத் தெரியாதவர்கள் யாருமில்லை. கருங்காலி போல் உடம்பு வாகு. கட்டை மனிதர். எண்பது வயது வரையிலும் வாழ்ந்தார். அவ்வப்போது அவர் வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் எங்களூரில் எல்லோர் மனத்திலும் ஈரங்காயாமல் இன்னும் ஒட்டிக் கிடக்கிறது. அப்படி ஏராளம் கதைகள். இதோ இப்போதைக்கு இரண்டு கதைகள்:

கதை 01:

எழுபது வயதை நெருங்கிக் கொண்டிருந்த புலவர் மாமாவுக்கு இடது கால் ஓயாத தொந்தரவைக் கொடுத்துக் கொண்டிருந்தது. மூட்டு வலி. டாக்டரைப் பார்க்க மாமா போனார். காலைப் பரிசோதித்த டாக்டர், "வயசு போற காலத்தில இப்படியெல்லாம் காலுக்கு வருத்தம் வரும். இதைப் பற்றியெல்லாம் கவலைப்படக்கூடாது" என்றார். உடனே மாமா, "நீங்க சொல்வது பொய், என்ட இடது காலுக்கும் வலது காலுக்கும் ஒரே வயசுதானே" என்றார்.

நான் நம்புகிறேன், சிரித்துக் கொண்டு பதில் சொன்ன நோயாளியை தன் வாழ்நாளில் டாக்டர் அன்றுதான் பார்த்திருப்பார் போலும்.

கதை 02:

புலவர் மாமாவின் வீட்டு முற்றத்தில் தென்னைகள் குலை குலையாய்க் காய்த்துத் தொங்கின. கவனித்திருந்த யாரோ இரவோடிரவாக தேங்காய்களைப் பறித்துப் போய்விட்டார்கள். சுப்ஹு தொழுது விட்டு கடைக்கு சீனி, தேயிலை வாங்கப் போன மாமாவின் முகத்தைப் பார்த்த கடைக்காரர், "என்ன புலவரின் முகம் இப்படிக் கிடக்கிறது?" என்றார். "டே தம்பி, ராவு யாரோ வந்து தேங்காயெல்லாம் ஆஞ்சிட்டுப் பெய்த்தானுகள்". கடைக்காரர், "உங்கட தோட்டத்திலதான் நாலு நாய்கள் கிடக்கிற எண்டு கதைக்கானுகளே" என்று கேட்டார். "கள்ளன் வந்த நேரம் நாய்கள் எங்க போன? தேங்கா பறிக்க உயரம் பத்தாத போது, குறட்டை விட்டுத் தூங்கிய எனது நாய்களை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி நாய்க்கு மேல் ஏறி நின்று தேங்காயைப் பறித்துக் கொண்டு போயிருக்கான்" என்றார் புலவர்.

கடைக்காரர் வயிறு குலுங்கச் சிரித்திருப்பார் போலும்.


அன்புடன்
ஹனீபாக்கா (E-Mail : slmhanifa22@gmail.com)

Thursday, January 17, 2013

அப்துல் காதரும் ஐந்து ஈக்களும்! - ஹமீதுஜாஃபரின் ‘மைக்ரோ’ கதைகள்

பெருசு பெருசா (அருட்கொட்டையாளர்களை) காட்டிக்கிட்டிருந்த நம்ம நானா, இப்ப அவரோட சின்னத காட்டுறாரு.. நல்லா பாத்துட்டு , நல்லாயில்லேன்னா நாகரீகமா அவர திட்டுங்க. உருப்படியான ஒரிஜினல் துளிக்கதைகள் வேணுமின்னா இங்கே போங்க. (நானாவுடயத ’ஒரு மார்க்கமா’ பாத்துட்டு அந்த காரைக்குடி கலாட்டா பேர்வழி புதுசா ஏதும் காட்டாம இரிக்கணும்). ஒண்ணு புரியுது... இந்தியா-பாகிஸ்தான் உறவுக்கு நானாவின் முயற்சி நிச்சயம் உதவும்! - ஆபிதீன்
 
***
 
1. தம்பிட வாப்பா பேரு!
 
’பெயரைச் சொல்லலாமா கணவன் பெயரைச் சொல்லலாமா ஊரைச் சொன்னாலும் உறவை சொன்னாலும் உற்றவரிடத்தில் எதனை சொன்னாலும் ...’   என்று கண்ணதாசன் வாயிலாகச் சொல்கிறது தமிழ் பண்பாடு.
 
அந்தப் பண்பாட்டில் நாங்கள் எந்தவிதத்திலும் சளைத்தவரல்ல என்பதில் ரஹமத்துல்லாவின் மனைவி ஜொஹரம்மா ஒர் உதாரணம். தன் கணவன் பெயரை எந்த சந்தர்ப்பத்திலும்கூட உச்சரித்ததே இல்லை. தொழுகையில் தன் கணவன் பெயர் வருவதால் பெயரை மாற்றிக்கொள்ளும்படி பலமுறை சொல்லிப்பார்த்தாள்.  ரஹமத்துல்லா என்ற பெயரை மாற்றுவதாக அவள் புருசன் இல்லை. அதனால் தொழுதுவிட்டு சலாம் கொடுக்கும்போது ’அஸ்ஸலாமு அலைக்கும் ரஹமத்துல்லா’ என்று சொல்லணுமே அதற்கு பதிலா “அஸ்ஸலாமு அலைக்கும் தம்பிட வாப்பா பேரு, அஸ்ஸலாமு அலைக்கும் தம்பிட வாப்பா பேரு” என்றுதான் சொல்லுவாள்.
 
ஒரு முறை பக்கத்துவீட்டு கொலுசம்மா கேட்டதற்கு, ’அஹ பேரை சொல்றது மருவாதை கொறைவுல, அதனாலெதான் அஹ பேரு வர்ற எடத்துலெ தம்பிட வாப்பா பேருன்னு சொல்றேன் அல்லா ஒன்னும் கோவிச்சக்கமாட்டான்’ என்று ஒரு போடு போட்டாள்.
 
***

2. நூர் கணக்கு!
 
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்துக்கொண்டிருந்தது. ஒவ்வொரு வீடாக ஏறி இறங்கி விலாவாரியா விசாரிச்சு எழுதுறது லேசுபட்ட வேலையல்ல. அதிலும் முஸ்லிம் தெரு கொஞ்சம் கஷ்டம். பெயர் உச்சரிப்பு சரியாக எழுதவராது என்று தெரிந்தே வேலையை ஒப்புக்கொண்டிருந்தார் வடிவேல்சார்.
 
ஒரு வீட்டில் கணக்கெடுக்கும்போது, உங்க புருசன் பேர் என்னம்மா என்று கேட்டார் வாத்தியார். புருசன் பேரை சொல்லக்கூடாது இல்லையா? அது நமது தமிழ் பண்பாடாச்சே! அந்த பண்பாட்டை அப்படியே கடைபிடித்துக் கொண்டிருந்தது அந்த அம்மாவும். அதனால் இப்படி சொன்னது செந்தமிழ் தாய், “முப்பது முப்பது மூணு முப்பது, ஒரு பத்து, அதுகூட முகம்மது.” 
 
எதோ விடுகதை மாதிரி இருக்கே என்று தோன்றியது வாத்தியாருக்கு. கணக்கு வாத்தியாராச்சே எண்ண ஆரம்பித்துவிட்டார். மூணு முப்பது தொன்னூறு அதோட ஒரு பத்து நூறு. “நூர் முஹம்மதாம்மா உங்க வீட்டுக்காரர் பேரு” என்றார். ஆமாம் என்று தலையை ஆட்டியது அந்த தமிழ் தாய்.
 
***
 
3. செந்தமிழ் தாய்!
 
அழுதுகொண்டே வந்த அஹமது மரைக்கான், அம்மாவிடம் ’வாத்தியார் காதை திருகிட்டார் வலிக்கிறது’ என்றான். உம்மாவின் ஒரே செல்லப்பிள்ளை எப்படி அவர் திருகலாம் என்று பையனையும் அழைத்துக்கொண்டு ஸ்கூலுக்கு புறப்பட்டுவிட்டாள் சபியா.
 
“ஓய் வாத்தியாரே! கறவு போல முறுவு இருக்க காறெ புடிச்சு ஏங்கனி திருவுனியும்” என்று ஏக வசனத்தில் கேட்க, வாத்தியாருக்கோ ஒன்றும் புரியவில்லை.
 
அது ஒன்னுமில்லெ சார், “கதவுபோல முதுகு இருக்க காதை ஏன் திருகுனீங்க”ண்ணு கேட்கிறாங்க என்றான் பக்கத்து வீட்டு சித்தீக்.
 
***

4. அப்துல் காதரும் ஐந்து ஈக்களும்
 
’மூனு பொம்பளை ஈ யும் ரெண்டு ஆம்பளை ஈ யும் அடிச்சுட்டேன்’ என்று பெருமையாக சொன்னான் அப்துல் காதர்.
 
’அது என்ன ஆம்பளை ஈ பொம்பளை ஈ, உங்களுக்கு எப்படி தெரியும்?’ என்று கேட்டாள் சுபைதா.
 
’ரொம்ப ஈஸி, டிவி மேலே உட்கார்ந்திருந்தது பொம்பளை ஈ, ஒரு இடத்துலெ ஒழுங்கா உட்காராமெ பறந்துக்கிட்டிருந்தது ஆம்பளை ஈ’.
 
***
 
நன்றி : நானாக்கு அல்ல, மஞ்சக்கொல்லை மக்களுக்கு!

Wednesday, January 16, 2013

Why is the Sky Dark At Night?

பிரியத்திற்குரிய நண்பரும் 'பதிவுகள்' இணைய இதழின் ஆசிரியருமான வ.ந.கிரிதரன் , கீழ்க்கண்ட சுட்டியைக் கொடுத்து  தாஜின் கவிதைக்கு விளக்கம் அளித்திருந்தார் - ஃபேஸ்புக்கில். மகிழ்வோடு வாசித்தேன். 

http://www.deepastronomy.com/why-is-the-sky-dark-at-night.html


சுடர்கள் இருக்கும் காலம் ஒளியின்
வேகத்தால் ஒன்றென இருப்ப தில்லை.

வெளி விரிந்துகொண்டிருக்கிறது. சுடர்கள் வெவ்வேறு ஒளியாண்டுத் தொலைவுகளில் இருக்கின்றன. எமக்கு ஒரே நேரத்தில் அவை சுடர்வதாகத் தெரிந்தாலும் வெவ்வேறு காலகட்டங்களிலிருந்து அவை சுடர்ந்துகொண்டிருக்கின்றன. விரியும் வெளியினூடு எம்மை வந்தடையும் அவற்றின் ஒளியும் நீர்த்துப் போய்விடுகின்றன. இது போன்ற காரணங்களினாலே இவ்வளவு சுடர்களிருந்தும் இரவு வான் ஒளிராமல் இருண்டு கிடக்கின்றது.

நண்பர் தாஜின் கவிதையின் வரிகளான //பொழுது போன நேரம்
எத்தனை விளக்குகளை
ஒளிர விட்டென்ன?
இரவுதான் நட்சத்திர நாயகன்// என்பதை நான் புரிந்து கொண்டதன் அடிப்படையில் என் கருத்தினை முன் வைத்தேன். பொழுது போன நேரம் எத்தனை விளக்குகளை ஒளிரவிட்டென்ன என்பதிலுள்ள விளக்குகளை நான் நட்சத்திரங்களாகக் கருதினேன். அவ்விதம் அவை பல ஒளிர்ந்தாலும் இரவுதான் நட்சத்திர நாயகன் என்பதை நான் இருண்டிருக்கும் இரவுதான் அந்த ஒளிரும் நட்சத்திரங்களின் நாயகனென்று கருதிக்கொண்டேன். ஏனென்றால் இவ்வளவு சுடர்கள் (நட்சத்திரங்கள்) இருந்தும் , ஒளிர்ந்தும் அவற்றால் இரவின் கருமையினை நீக்க முடியவில்லை. இரவின் ஆதிக்கத்தை நீக்க முடியவில்லை. அதனால் இரவுதான் நட்சத்திரங்களின் நாயகன் என்று புரிந்துகொண்டதன் அடிப்படையில்

//இத்தனை சுடர்கள் இரவினில் சுடர்ந்தும்
இரவின் ஆதிக்க மிருப்பது எதனால்?
இரவு கருமையில் இருப்ப தெதனால்?
இதற்கொரு காரணம் அறிவிய லுலகினில்
உண்டு. விரியும் வெளியில் தெரியும் //

என்று என் கருத்தினை முன் வைத்தேன்.

ஒருவேளை கவிஞர் இவ்விதம் எண்ணாமல் இன்னுமொரு அர்த்தத்தில் கூறியிருக்கலாம். அவ்விதமிருந்தாலும் நான் இவ்விதம் விளங்கிக்கொண்டதற்கேற்ப கவிஞரின் சொற்கள் விழுந்திருக்கின்றன. நல்லதொரு கவிதை. வாழ்த்துகள். 

***

நன்றி : தாஜ், வ.ந.கிரிதரன்
 

Monday, January 14, 2013

ஆர்மோனியச் சக்கரவர்த்தி காதர் பாட்ஷா



விரலாலும் குரலாலும் வித்தை - ஆர்மோனியச் சக்கரவர்த்தி என்ற அதிசய மனிதர்

தினகரன் வசந்தம் . 13.1.2013

ஸ்வரக்கட்டைகளில் நர்த்தனமாடும் விரல்கள்.. காற்றில் மிதந்தலையும் அதன் இசையோடு கலந்து வரும் கம்பீரமான குரல்.. உள்ளத்தை உருக்கும் இசையில் மெய்மறந்து கிடக்கும் ரசிகர்கள்... அப்படி ஓர் அற்புத நிகழ்வை நிகழ்த்திக் காட்டியவர் ஆர்மோனியம் காதர் பாட்ஷா!

திரைப்படம் தமிழகத்தில் கால் பதிக்காத காலம் அது. இசைத்தட்டுகளின் வருகைக்குப் பிறகு பாடகர்களையும் நாடக நடிகர்களையும் மேடையில் பார்க்க நாடகைக் கொட்டகைகளை தேனீக்களைப் போல மொய்த்தார்கள் ரசிகர்கள். அப்படிப்பட்ட காலத்தில் புகழ்பெற்ற நாடகநடிகர், நடிகைகளுக்கு இணையாக மக்களால் ரசிக்கப்பட்டவர் ஆர்மோனியம் காதர் பாட்ஷா. தமிழ் நாட்டில் முதன்முதலில் மக்கள் மத்தியில் பிரபலமான ஆர்மோனியக் கலைஞர் என்கிற பெருமையும் இவருக்கு உண்டு. அவரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன்.

“ கே.எஸ். தேவுடு அய்யர், கே.எஸ். செல்லப்பா அய்யர், எஸ்.ஜி. கிட்டப்பா, டி.எம். மருதப்பா, பி.எம்.ரத்னா பாய், ஸ்த்ரீபார்ட் எஸ்.எஸ். சாரதாம்பாள், கே.பி. சுந்தராம்பாள் போன்றோர் வாய்ப்பாட்டில் சாதனை படைத்துக்கொண்டிருந்த காலத்தில் கையாலும் காலாலும் இசைக்கக்கூடிய ஆர்மோனியம்தான் இவர்வாத்தியம். அதீதமான உயரம், திடகாத்திரமான உருவம், முறுக்கிய மீசை.. இப்படி ஒரு இசைக்கலைஞனுக்கு தொடர்பே இல்லாத தோற்றத்துடன் இருந்தார் காதர் பாட்ஷா. அவர் பிறந்த ஆண்டு பற்றிய தகவல் இல்லை. பிறந்த இடம்: திருச்சியில் உள்ள உறையூர். திருச்சியும் தஞ்சாவூரும் அப்போதெல்லாம் நாடகத்தின் சொர்க்கபூமி. அந்த பூமியின் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தவர் காதர்பாட்ஷா. அவரது பெயருக்கு முன்னால் குறிப்பிடப்படும் ‘சக்கரவர்த்தி’ என்ற பட்டப் பெயரும் கடைசி வரை இருந்தது.

நாடகங்களில் ஆர்மோனியம் வாசிப்பவர்கள் மேடையின் ஓரத்தில் அமர்ந்திருப்பார்கள். அவர்களை மறைத்து கீற்றுத்தட்டி கட்டி வைத்திருப்பார்கள். அதனால் அந்தக் கலைஞர்கள் மக்களுக்கு தெரியாமலேயே போனார்கள். முதன்முறையாக கீற்றுத்தட்டிக்கு வெளியே வந்த ஆர்மோனிய கலைஞர் காதர் பாட்ஷா. ஒலிபெருக்கி இல்லாத காலத்திலேயே ஐந்தரை கட்டையில் இவர் பாடும் பாட்டும் ஆர்மோனிய இசையும் அரங்கத்தின் கடைசி வரிசையில் இருப்பவருக்கும் தெளிவாகக் கேட்கும். அப்போது புகழ்பெற்றிருந்த இசைக்குழுக்கள் எல்லாம் காதர் பாட்ஷாவின் ஆர்மோனியத்துக்காக காத்திருந்தன. அவர் இடம் பெற்றால் ‘சக்கரவர்த்தி காதர் பாட்ஷாவின் ஆர்மோனிய இசையுடன்...’ என்று விளம்பரம் செய்வார்கள். அதற்காகவே கூட்டம் கூடும்!

யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளைக்கு ’மதுரை பாலகான சபா’ என்ற நாடகக் கம்பெனி இருந்தது. இதில்தான் வி.கே.ராமசாமி நடித்துக் கொண்டிருந்தார். திருப்பத்தூரில் யுத்த நிதிக்காக நாடகம் போட்டார்கள். அப்போது அவர்கள் நாடகத்துக்குப் போதிய வரவேற்பு இல்லாமல் இருந்தது. அதனால் வி.கே.ராமசாமியும் டி,கே. ராமச்சந்திரனும் திருச்சி சென்று காதர் பாட்ஷாவை சந்தித்தார்கள். நிலைமையச் சொல்லி, ‘நாடகத்துக்கு இடையே உங்கள் ஆர்மோனிய கச்சேரி நடக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்கள். ‘யுத்த நிதிக்காக நடத்துறீங்க..கண்டிப்பா வர்றேன். லாபம் வந்தா சம்பளம் கொடுங்க. இல்லேண்ணா போக்குவரத்து செலவு மட்டும் கொடுங்க’ என்று சொன்னார். அவர் ஒப்புக்கொண்ட பிறகு, ‘நாடகத்தின் இடையில் சக்கரவர்த்தி ஆர்மோனியம் காத பாட்ஷாவின் ஆர்மோனிய இசை நிகழ்ச்சி உண்டு’ என்று விளம்பரம் செய்தார்களாம். இதை வி.கே. ராமசாமி ‘எனது கலைப் பயணம்’ நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.

காதர் பாட்ஷாவின் பாடல்களில் தேசபக்தி மிகுந்திருக்கும். இஸ்லாமிய பாடல்களை பாடியிருக்கிறார். இந்து-முஸ்லிம் ஒற்றுமை குறித்து நிறைய பாடியிருக்கிறார். பாஸ்கரதாஸும் சூளை மாணிக்கநாயக்கரும் காதர் பாட்ஷாவுக்குப் பாடல் எழுதிக் கொடுத்திருக்கிறார்கள். பாடல் எழுதுபவர்களுக்கு சன்மானத்தை பணமாக கொடுக்கும் வழக்கத்தை ஏற்படுத்தியவர் காதர் பாட்ஷா. ஒரு பாடலுக்கு 10 ரூபாய் சன்மானம் கொடுத்திருக்கிறார். அப்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை 6 ரூபாய்!

1930கள் காதர் பாட்ஷாவின் காலம். இவரின் 70 பாடல்களை எச்.எம்.வி. இசைத்தட்டுகளாக வெளியிட்டிருக்கிறது. அவை எதுவும் இப்போது கிடைப்பதில்லை. சில கிராமபோன் தட்டுகள் மட்டும் என்னிடம் பாதுகாப்பாக இருக்கின்றன. இலங்கை, மலேசியா நாடுகளுக்குச் சென்று பாடியிருக்கிறார். flipbooth, youtube இணையதளங்களில் அவர் பாடிய சில பாடல்களைக் கேட்கலாம்.

காதர் பாட்ஷாவின் முழுமையான வாழ்க்கை வரலாறு கிடைக்கவில்லை. அவர் சுதந்திரப் பாடல்களைப் பாடியதால் ஆங்கிலேயே அரசு ஒருமுறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது. அவருக்கான அபராதத் தொகையை எஸ்.வி.சுப்பையாவும் எம்.கே. தியாகராஜ பாகவதரும் செலுத்த முன்வந்ததை ஏற்காமல் 6 மாத காலம் சிறையில் இருந்திருக்கிறார்.

காதர் பாட்ஷாவின் கடைசி காலத்தில் அவர் மீது ஆங்கிலேய அரசு கொலை வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தது. வழக்கின் முடிவில் அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அந்த வழக்கு பற்றிய விபரம் எதுவும் தெரியவில்லை. அவரை தூக்கில் போடும் முன் அவரது கடைசி ஆசை என்ன என்று சிறை அதிகாரிகள் கேட்க, அவர் தன் ஆர்மோனியத்தை இசைத்துப் பாட விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார், சிறை அதிகாரிகள் அதற்கு அனுமதி கொடுத்திருக்கிறார்கள். அவர் பாட ஆரம்பித்ததும் மெய்மறந்து கேட்டிருக்கிறார்கள். இதில் தூக்குக் தண்டனை நிறைவேற்றும் நேரத்தை அதிகாரிகள் தவற விட்டதாகவும், குறிப்பிட்ட நேரம் தவறினால் ஒருவரை தூக்கில் போட முடியாது என்பதால் அவர் விடுதலை அடைந்ததாகவும் ஒரு தகவல் உண்டு. கடைசி காலம் வரை சிறையிலேயே கழித்தார் என்ற தகவலும் இருக்கிறது. எது உண்மை என்று தெரியவில்லை. காதர் பாட்ஷா மகத்தான இசைக் கலைஞர் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மை!”
***

நன்றி : தினகரன், பேராசிரியர் வா. பாலகிருஷ்ணன், அசனா மரைக்காயர்

***
'A rare Gramaphone recording of Uraiyur T.M. Khader Batcha. He was a Harmoinium Vidwan and he like many others including K.S. Devudu Iyer, Madurai M.R. Vasavambal, Perur Subrahmania Dikshitar and Alathur Venkatesa Iyer helped establish a place for the harmonium in Carnatic music. However for many, their careers were restricted to the drama stage. The role of the harmonium in Camatic music diminished when the musical theatre went into oblivion' - Lakshminarayanan Sriram

***
Uraiyur Kather Batcha - Saravana Bhava Guhane Vaa



***
'Another good song sung by the great Uraiyur T.M.Kather Batcha. There is Bhakthi in each line as he sings with with devotion asking Muruga for Deliverance.'

 

Saturday, January 12, 2013

அறிஞர் அல்-அஸ்மாய், ஒரு கதையுடன்...

’உங்க அஸ்மா அல்ல, இது அஸ்மாய்!’ என்று என்னைக் கிண்டல் செய்தபடி ஹமீதுஜாஃபர் அனுப்பிய கட்டுரை. (முந்தைய அருட்கொடையாளர்கள் வரிசை (1 to 12) பார்க்க இங்கே சொடுக்கவும்). அஸ்மா(ய்)ன்னாலே ஒரு கதை இருக்குமே.. அதை கடைசியில் சேர்த்திருக்கிறார் நானா.
***

(பாகம் 2. , அருட்கொடையாளர் - 13) 
அல் அஸ்மாய் (கிபி 740-828)
இங்கிலாந்தில் தொழிற்புரட்சி தொடங்கி உலகில் இயந்திரமயமாக்கலுக்குமுன் மனித வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தது கால் நடைகள். விவசாயம் முதல் போக்குவரத்து வரை அவற்றின் பங்கு இன்றியமையாததாக இருந்ததை யாரும் மறுக்கமுடியாது. இன்றைய நவீன உலகிலும் அவற்றின் பங்கு தொடராமல் இல்லை. இன்று கூட அவற்றின் வளர்ச்சிக்கு பெரிய அளவில் முயற்சிகள் இல்லாவிட்டாலும் அரசு சிலபல நல்ல திட்டங்களை உருவாக்கினாலும் அது உரியமக்களிடம் சென்றடைகிறதா என்பது கேள்விக்குறி. என்றாலும் ஒரு மூலையில் ஆய்வுகள் நடந்துக்கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இதை ஆய்வு செய்து நூல் வெளியிட்டிருக்கிறார் ஒரு அரபு விஞ்ஞானி. வியப்பாக இருக்கிறது இல்லையா? அல் அஸ்மாய்  என்ற பெயருடைய அவர், விஞ்ஞானி மட்டுமல்ல புலவரும் கூட.

அல் அஸ்மாய்

இஸ்லாமிய உலகில் விலங்கியல், தாவரவியல், கால்நடை வளர்ப்பு ஆகிய துறைகளில் சிறந்த முதல் விஞ்ஞானியான இவரது முழுப் பெயர் அப்துல் மாலிக் பின் அல் குரைப் அல் அஸ்மாய். கிபி 740ல் புகழ்பெற்ற நகரமான பஸராவில் பிறந்து கிபி 828ல் அங்கேயே மரணமடைந்தார்.

இவரது பின்புலம் பற்றிய குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால் பஸராவில் கல்விக்கூடம் நிறுவியவரான அம்ரு பின் அல் அலாஃ என்பரிடம் கல்வி பயின்ற தலைசிறந்த மாணவர்களில் இவரும் ஒருவர் என்பது தெரியவருகிறது.

மாணவப் பருவத்திலேயே இறைவேதத்தையும் நபி போதத்தில் பெரும்பாலனவற்றையும் மனனம் செய்தார். அதல்லாமல் பழம் பெரும் அரபு காப்பியங்களையும் மனனம் செய்திருந்தார். அரபு மொழி இலக்கண இலக்கியங்களில் பாண்டித்தியம் பெற்றிருந்த இவர் பழமை வாய்ந்த அரபு செய்யூள்களை சேகரித்து வைத்திருந்ததோடு மொழி இயலில் திறனாய்வளாராக இருந்த இவர் தமது காலத்தில் வாழ்ந்தவரும் சக மாணவருமான அபு உபைதா வுக்குப் போட்டியாளராக இருந்தார்.

அபு உபைதாவுடன் போட்டி மனப்பாண்மை கொண்டிருந்ததிற்கு வேறொரு காரணமும் இருந்தது. அக்காலகட்டத்தில் அரபிகளுக்கும் அரபியல்லாதவர் (பாரஸீகர்)களுக்கும் இடையே ஏற்றத்தாழ்வு நிலவியது. அரபிகளே மற்ற மக்களைக் காட்டிலும் உயர்ந்தவர்கள் என்ற எண்ணம் கொண்டிருந்தவர்களில் ஒருவராக அல் அஸ்மாயி இருந்தார். ஆனால்  அபு உபைதா, அதற்கு மாறான இயக்கமான ஷுஃஊபியா ( الشعوبية‎)வை ஆதரித்தார்.

இளமைக் காலத்தில் வறுமையில் வாடிய இவரின் அறிவாற்றலைக் கேள்வியுற்ற பஸராவின் கவர்னர் கலிஃபா ஹாரூன் ரஷீதிடம் அறிமுகப்படுத்தினார். இவரது அசாத்திய அறிவாற்றலையும் புலமையையும் கண்ணுற்ற கலிஃபா தனது மகன்களுக்கு கல்வி பயில்விக்க ஆசிரியராக நியமித்தார். அதன்பிறகே இவரது வாழ்வு வளம் பெற்றதாகக் கூறப்படுகிறது.

அரபு மக்களிடையே மிகவும் பிரதானப்பட்டவையாக விளங்கியது ஒட்டகமும் குதிரையும். முந்திய காலங்களிலேயே அவற்றின் பராமரிப்புகளையும், வளர்க்கும் முறையையும் அம்மக்கள் அறிந்திருந்தனர். என்றாலும் அஸ்மாய் அவற்றினை விரிவாக ஆய்வு செய்து இனவிருத்தி முறையையும் தெளிவுபடுத்தி விளக்கமாக எழுதியுள்ளார். அதுபோல் தாவரஇயலில் அவற்றை வகைப்படுத்தி தன்மைகளையும் பயிரிடும் முறையையும் விளக்கியுள்ளார்.

மொழி இயலில் வல்லுனராக இருந்தாலும் இயற்கை அறிவியலுக்கும் மிருகவியலுக்கும் முன்னோடியானவர் என்று கருதப்படுகிறது.இவர் எழுதிய 60க்கும் மேற்பட்ட நூற்களில் மிகவும் குறிப்பாக விளங்குவது கித்தாப் அல் ஃகைல்(The Book of Horse), கித்தாப் அல் இபில்(The Book of Camel), கித்தாப் அல் ஃபர்க்(The Book of Rare Animals), கித்தாப் அல் வுஹுஷ்(The Book of Wild Animals), கித்தாப் அல் ஷா(The Book of Sheep). கித்தாப் அல் ஃஹலக்கல் இன்சான்(The Book of Humanity). இதல்லாமல் மனித உடற்கூறு பற்றிய தகவல்களையும் விரிவாக எழுதியுள்ளார்.

இவர் செய்த அனேக ஆய்வுகளைப் பற்றி நூல் விற்பனையாளர் இப்னு அல் நதீம் தனது ஃபிஹ்ரிஸ்த்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் சுமார்  அரை டஜன் நூல்களே கிடைத்துள்ளன. அவற்றுள் கித்தாப் அல் ஃகைல், கித்தாப் அல் ஷா, கித்தாப் அல் வுஹுஷ் அடங்கும்.


கதை

இவரது புலமையைப் பெருமைப் படுத்தும் வகையில் ஒரு கதை உண்டு. அவர் காலத்தில் ஆட்சிபுரிந்த அரசன் கல்வி ஞானமும் அசாத்திய நினைவாற்றலும் உள்ளவன் இருந்தான். ஆனால் கொடுங்கோலன். தன்னிடம் வரும் புலவர்கள் எந்த பாடல் பாடினாலும் ஒருமுறை கேட்டால் அதை திருப்பி சொல்லக்கூடியவன். அவன் பணியாள் இருமுறை கேட்டால் திருப்பி சொல்லக்கூடியவன். பணிப்பெண் மூன்று முறை கேட்டால் திருப்பி சொல்லக்கூடியவள். எனவே எந்த புலவரும் இது தன்னுடையப் பாடல் என்று சொல்லமுடியவில்லை. இந்நிலையில் அவ்வரசன் ஒரு போட்டி வைத்தான். யார் ஒருவர் புதிதாக பாடல் ஒன்றை இயற்றிக்கொண்டுவந்தால் அவருக்கு அவர் எழுதிய சுவடியின் எடைக்கு எடை தங்கம் பரிசளிப்பதாக அறிவித்தான். பல புலவர்களும் தோற்றுப்போனார்கள்.

இதை கேள்வியுற்ற அல் அஸ்மாயும் ஒரு பாடலை இயற்றி மனனம் செய்து அரசவைக்குச் சென்றார். முன்பின் எங்கும் செல்லாத இவர் அரசவையின் அலங்காரங்களைக் கண்டு பிரமித்தவராக அவற்றை பார்த்துக் கொண்டிருந்தார். அரசவைக் கூடியதும் தான் இயற்றிய பாடலை இராகத்துடன் பாடினார். இது உன் பாடல் அல்ல நான் இயற்றியது, இதோ நானே பாடுகிறேன் என்று அரசன் பாட முற்பட்டான். இடையில் வார்த்தைகள் வரவில்லை. தன் பணியாளைப் பாட உத்திரவிட்டான். பணியாளுக்கும் அதே நிலை, பணிப்பெண்ணிற்கும் அதே நிலை. மூவருமே தடுமாறினர். தனது தோல்வியை ஒப்புக்கொண்ட அரசன் நாணி, இது நீர் இயற்றிய கவிதைத்தான் எங்கே அதை எழுதிய காகிதத்தைக் கொண்டுவாரும் அதன் எடைக்கு தங்கம் பரிசளிக்கிறேன் என்றான் மன்னன். அல் அஸ்மாய் பணிவுடன், மன்னா நான் இதை காகிதத்தில் எழுதவில்லை மாறாக எங்கள் ஊர் கல்குவாரியிலுள்ள சலவைக்கல்லில் பொறித்துள்ளேன். தாங்கள் அங்கு வந்தால் காணலாம் என்றார். வேறு வழி இல்லாமல் கல்லின் எடைக்கு மன்னன் பரிசளித்ததாக ஒரு கதை உண்டு.


Sources:

Encyclopaedia Britannica Ultimate Reference Suite

***
 நன்றி : ஹமீது ஜாஃபர் ( http://hameedjaffer.blogspot.com/ ) | E-Mail : manjaijaffer@gmail.com

Thursday, January 10, 2013

முதுகு சொறியும் கம்பு விற்பவனின் விளம்பரப் பாடல்! - மேமன்கவி

நவம்பர்’2011-ல் இந்தப் பாடலை எழுதியிருக்கிறார் நண்பர் மேமன்கவி. ஆனால் இப்போதுதான் பார்த்து சிரிக்க முடிந்தது. காரணம், வேறொரு கம்பு விற்கப்போயிருந்தேன் நான். பாவனையாளர் வழிகாட்டி இங்கே இருக்கிறது! (ஜாக்கிரதை. சிறியவர்களின் கைக்கு எட்டும் வகையில் வைக்காதீர்கள். எதையுமே உடைக்க அவர்கள் இதை பயன்படுத்தலாம்!)

***

 முதுகு சொறியும் கம்பு விற்பவனின்  விளம்பரப் பாடல்!


முதுகு சொறிதலுக்கென்றே
எடுத்த ஜென்மம் இது!.
முதுகு  சொறிக்கும்
கம்பு இது!

ஆதிக்காலம் தொடக்கம்
பழகிப் போன
முதுகு சொறிதல் பணியினை
நவீன யுகத்தில்
தொடர்ந்து செய்யும்
கருவி இது.!

வீண் தொல்லை
ஒன்றும் கொடுக்காது
வீட்டுச் சுவரில்
தன்பாட்டில் தொங்கிக் கிடக்கும்.
உங்கள் முதுகு
சொறிதலுக்கு மட்டுமல்ல
நண்பர்களின் முதுகுகளையும்
சொறிந்து கொடுப்பதற்கு
உதவி 'கரமான' கம்பு இது!

சொறியும் இடத்தை
'காட்டி' கொடுக்கும்
விசுவாசமான  கம்பு இது!
சொறியும் இடத்தை
நாம் 'காட்டி' கொடுத்து
விட்டால் போதும்
தன் பாட்டில்
தன் பணி செய்யும்!
வம்பு தும்பு
இல்லாத கம்பு இது!

உடலில் கரம் நீளாத
பிரதேசங்களுக்கு நீளுவதனால்
இது- மூன்றாம் கை!

முதுகு சொறிதலே
இதன் பிறப்பின்
நோக்கம் என்றாலும்,
உச்சந்தலை முதற்கொண்டு
உள்ளங்கால் வரை
சொறிந்து கொள்வதில்
எந்த வித பக்க விளைவுமில்லை.

தலைசொறிதல்’ எனும்
(குறிப்பாக பின் தலை)
பழக்கமிக்கவர்களுக்கு
பிடித்தமான கம்பு இது.
பாவிக்கும்
 ‘அப்’ பாவி  யாருக்கும்
அடிமைப்பட்டு விடும்,
புத்தி கொண்ட,
அப்பாவி யாரையும்
அடிமைப்படுத்தி விடும்
சக்தி கொண்ட

கம்பு இது!

காட்டு மூங்கிலிலான-அதை
காணும் வேளையெலாம்-அதனை
பிடித்து
முதுகை சொறிய வேண்டும்
என்ற உணர்வினை
தானாய் ஏற்படுத்தும்
வசியம்மிக்க மந்திரகோல் இது!

விலையை  பற்றி யோசிக்காதீர்கள்!
சொறிதல் நோய்
பரவாது தடுத்து
மருத்துவச் செலவினை
மிச்சப்படுத்தும் ஒளடத கம்பு இது.!

மூங்கிலிலான
புல்லாங்குழல் இசை
சுகமான அனுபவம் போல்
முதுகு சொறிதலை
சுகா அனுபவ சொறிதலாய்
உணர வைக்கும்
மூங்கிலாலான
மசாஜ் கம்பு இது!

இது பழுது அடைவதில்லை.
கண்ணுக்கு தெரியாத ஆபத்து
ஒன்றும் இதில்லை.
பகிரங்கமாகவே முதுகு சொறிதலை
தன் கைங்க(கா) ரியமாக செய்யும்
மூங்கில் கை இது!

உங்கள் தேவைக்கு ஏற்ப
அதன் வர்ணத்தை
மாற்றிக் கொள்ளலாம்!

வர்ணம் எதுவானாலும்;
அதன் பிரதான பண்பான
முதுகு சொறிதலை
அது நிறுத்தி கொள்ளாது என்பதை
உறுதி அளிக்கிறோம்.!

சிவப்பு நிறம் பூசுவது சிறப்பு.!
சொறிதலில் அது
தோல்நிற-பால்நிலை
இன-மத பேதம் பாராது
எல்லா முதுகுகளையும் சொறியும்.
சமத்துவ உணர்வுமிக்க
கம்பு இது!

இறுதியாய் ஒரு அறிவிப்பு!
சர்வதேச வியாபார குறிகள்  
பதிவுச் சட்டத்தின் கீழ்
இதன் வடிவம்
பதிவுச் செய்யப்பட்டிருக்க கூடும்
என்பதனால்
எந்தவொரு அமைப்பும்
தனக்கான சின்னமாக
இதன் படத்தை பயன்படுத்துவது
சட்டபடி குற்றமாகும்.

குறிப்பாக-
முதுகு சொறிவோர் சங்கம்’ 

***

நன்றி : மேமன்கவி

Wednesday, January 9, 2013

பொடுபொடுத்த மழைத்தூத்தல் - அனாரின் புதிய தொகுப்பு

அன்பின் ஆபிதின் நாநா அவர்களுக்கு..

பொடுபொடுத்த மழைத்தூத்தல் - எனும் எனது புதிய தொகுப்பு (கிழக்கிலங்கை நாட்டார் காதல் பாடல்கள்), க்ரியா பதிப்பகத்தினரால் எதிர்வரும் 2013 ஜனவரி 11ஆம் திகதி, சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளிவருகின்றது. புதியதொரு அமைப்பில் இந்நூலைத் தொகுத்திருக்கிறேன். மிகுந்த நிறைவும் மகிழ்ச்சியும் தரும் வகையில் க்ரியா பதிப்பகத்தினர் மிக நேர்த்தியாகவும் அழகாகவும் இத்தொகுப்பை  வடிவமைத்திருக்கிறார்கள். என்னுடைய புதிய தொகுப்பின் வரவை உங்களுக்கு சொல்வதில் மகிழ்ச்சியடைகிறேன். என்னுடைய கிராமிய நாட்டுப்புறப்பாடல்களை வாய்ப்பிருந்தால் வாசித்துச் சொல்லுங்கள்.

அன்புடன்
அனார்


 அவன் :     வயிறு பசித்தால்
                      வாயால கேட்டிருவன்
                      என்டெ கண்ணின் பசியால
                      கதறினன்கா நாள்முழுதும்

அவள் :      வண்டறுத்த சோலையிலே
                      மரமழுது போறதுபோல்
                      நின்டழுவன் மச்சான்
                      உங்கெ நினைவுவாற நேரமெல்லாம்

***


 நன்றி : அனார் (http://www.anarsrilanka.blogspot.com/)

***

தொடர்புடைய பதிவு:
அனார்: பச்சை வான உடலும் கவிதை முகமும் – கநாசு.தாஜ்

Tuesday, January 8, 2013

ஓஷோ, துணிவு என்பது என்ன?

'துணிவு' என்னும் சொல்லை நான் பயன்படுத்தும்போது படைவீரனின் துணிவை குறிப்பதில்லை. அது துணிவல்ல, சுத்த மடத்தனம். அது வெறும் மூர்க்கம்; துணிவல்ல. அது வெளியில் இருந்து திணிக்கப்பட்டதே. அவன் மந்தமாகுமாறு அவனை நீங்கள் பயிற்ற வேண்டி உள்ளது. அது புத்தியின்மை; புத்தி அல்ல. எனவேதான் படைவீரர்கள் மடையர்களாக இருக்கிறார்கள். அதிக பதக்கங்கள் பெறப்பெற அதிக மடையர்களாக அவர்கள் ஆகி இருக்கிறார்கள் என நீங்கள் உறுதியாக அறிய முடியும். அவர்கள் தோளில் இருக்கும் விருதுகளை எண்ணியே அவர்கள் எத்தனை முட்டாள்கள் என நீங்கள் அறியலாம்.

படையின் மொத்த வேலையுமே புத்திசாலித்தனத்தை நாசமாக்குவதுதான். ஏனெனில் புத்தியுள்ள மனிதனால் கொல்ல முடியாது. காரணமே இல்லாமல் ஒருவரைக் கொல்ல வேண்டி வரும்போது புத்திசாலி 1001 கேள்விகளைக் கேட்பான்.

ஒரு இந்தியன் ஒரு பாகிஸ்தானியை கொல்லுகிறான். அவனை அதற்கு முன் சந்தித்ததே இல்லை. அவனை அதற்கு முன் பார்த்ததே இல்லை. அவனுடன் அவனுக்கு எந்த பகைமையும் இல்லை. அவ்வாறே ஒரு பாகிஸ்தானியும் இந்தியனைக் கொல்கிறான். எந்தக் காரணமும் இல்லாமலேயே.. அவனுக்கு எந்த தீங்கும் செய்யாதவனைப் போய் கொல்கிறான்...

கொஞ்சமாவது அறிவிருந்தால் அவர்களால் அதை செய்ய முடியுமா? தன் மனைவி தனக்காக வீட்டில் காத்துக்கொண்டிருப்பது போலவே அவன் மனைவி அவனுக்காக அவன் வீட்டில் காத்துக் கொண்டிருப்பாள் என்பதையும், தன் குழந்தைகள் தன்னை எதிர்பார்த்திருப்பார்கள் என்பது போலவே அவன் குழந்தைகளும் அவனை எதிர்பார்த்திருப்பார்கள் என்பதையும் தன் வயதான தாய்தந்தையர் தன்னைச் சார்ந்திருப்பது போலவே அவனுடைய தாய் தந்தையர் அவனைச் சார்ந்திருக்கிறார்கள் என்பதையும் எண்ணிப் பார்த்தால் எந்த இந்தியனோ பாகிஸ்தானியோ அதை செய்ய முடியுமா? கொல்லவோ கொல்லப்படவோ செய்கிற இந்த மடமையை செய்ய முடியுமா?

படைவீரர்கள் நுண்ணறிவுள்ளவர்களாயிருக்க அனுமதிக்கப்பட்டால் பூமியிலிருந்து போர்கள் மறைந்து விடும்.

- ஓஷோ -  'ஸென்னுடன் நடந்து ஸென்னுடன் அமர்ந்து' நூலிலிருந்து (தமிழாக்கம் : சிங்கராயர்)

***

குறிப்பு : துணிவு பற்றி விரிவாக ஓஷோ சொல்வதை பிறகு தொடர்கிறேன். உஷார், அரபியிடமிருந்து ·போன் வருகிறது...! என்ன, ஓஷோ ஜோக் உடனே வேண்டுமா? ஒரேயொரு வெஜிடேரியன் ஜோக்தான் கைவசம் இருக்கிறது, பரவாயில்லையா?

'நுண்ணறிவுள்ள' சிறுவன் (நதீம்?)  தன் நண்பனிடம் சொல்லிக்கொண்டிருந்தானாம் : 'பெற்றோர்கள் இவ்வளவு தொல்லையானவர்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள முடிந்திருந்தால், ஒரு போதும் அவர்களைப் பெற்றிருந்திருக்க மாட்டேன்!'

**

நன்றி : கவிதா பப்ளிகேஷன்

Tuesday, January 1, 2013