காலச்சுவடு அக்டோபர் 2013 இதழில் வெளியான களந்தை பீர்முகமதின் 'இசுலாம் சில புரிதல்களை நோக்கி' எனும் கட்டுரைக்கு வந்த பதில்களில் கொள்ளு நதீமுடையதுதான் பிரமாதம். யார் இவர் என்று தெரியவில்லை; ஆனால் என் மகன் நதீம் அல்ல என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். எனக்கு அறிமுகமான எளிய ஆம்பூர் இஸ்லாமியப் பேராசிரியராகவும் இருக்காது. இந்த விவாதமும் கருத்தும் அவ்வளவு அருமையாக இருக்கிறது. எனவே இங்கும் பதிவிடுகிறேன். சுட்டி தந்த மானுடநேயரும் மசாலா எதிரியுமான சீயாளி சாதிக் அவர்களின் சமூகத்திற்கு நன்றி. - ஆபிதீன்.
***
கொள்ளு நதீம் (ஆம்பூர்) கூறியது:
அரேபியாவில் எனக்கு அமைந்த வேலை வாய்ப்பைப் பயன்படுத்தி தொடர்ச்சியாக (1997 - 2011) என மொத்தம் 14 ஆண்டுகளைச் சமூக ஆய்வு என்று சொல்லக் கூடிய அளவில் உலக நாடுகளைச் சேர்ந்த ஹாஜிகளின் மனவோட்டங்கள் நூறு விதமானது என்பதைப் நேரில் கண்டிருக்கிறேன். அவர்கள் எதிரும் புதிருமான மூன்று பெரும் சிந்தனையோட்டத்திற்கு மத்தியில் அல்லாடி கொண்டிருப்பதையும் காண்கிறேன்.
அதாவது
1. ஈராக்கின் பாக்தாத், இந்தியாவின் அஜ்மீர் என மண்ணுக்கேற்ற பண்புகளுடன் உருவான சூஃபிகளின் ‘Spiritual Islam - ஆன்மீக இஸ்லாம்’
2. பதினெட்டாம் நூற்றாண்டைய சவுதி அரேபியாவில் பிரபலமான வஹ்ஹாபிகளின் ‘Renaissance Islam - நவபிராமணிய(?) தூய்மைவாத, புத்தெழுச்சி இஸ்லாம்’
3. எகிப்தின் ஹசனல் பன்னா தொடங்கி நம் துணைகண்டத்தின் மௌதூதி வரை (அதன் தமிழக நீட்சி தமுமுக, பிஜெ போன்றவர்களின்) ‘Political Islam - அரசியல் இஸ்லாம்’
கடந்த ஆகஸ்ட் மாதம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற வந்த அமெரிக்க, கருப்பின, பெண்ணிய, முஸ்லிம், பேராசியர் ஆமினா வதூதைப் பேச விடாமல் துரத்தியடிக்கப்பட்ட சம்பவத்தை இஸ்லாமியப் பின்புலத் திலேயே ‘தி ஹிந்து’ ஆங்கிலப் பதிப்பில் சென்னை பைசுர் ரஹ்மான் எதிர்க்கேள்வி கேட்கிறார்.
முனைவர் வதூத் அவர்களின் புரிதலும் திருக்குர்ஆனுக்கு அவர் அளிக்கும் பொருள்களும் அளவுக்கு மிஞ்சியதாகவோ அவசரப்பட்டதாகவோ இருக்கலாம். ஆனால் திருக்குர்ஆனும் முஹம்மத் நபிகளின் வாழ்க்கையும் கருத்து சுதந்திரத்தை நேரடியாக உறுதி செய்கின்றன. திருக்குர்ஆனில் சந்தேகப்பட்டுக் குற்றம் கண்டுபிடித்தவரையும், தாம் ஆரம்பித்த சீர்த்திருத்த இயக்கத்திற்குள் ஊடுருவி குழப்பம் விளைவித்தவர்களுடன் முஹம்மத் நபி எப்படி நடந்து கொண்டார்? எளிமையான பதில் :
எதிரிகளை நபிகளார் கண்டுக்கொள்ளவில்லை, அலட்சியம் செய்தார், அவ்வளவே.
நட்பில்லாத பகை சக்திகளின் கருத்துக்களையும் கூட இஸ்லாத்துக்கான அச்சுறுத்தலாகத் திருக்குர்ஆன் பார்க்கவில்லை. அதற்கெதிராக வாய்ப்பூட்டு எதையும் போடவில்லை. எல்லாத் தத்துவப் போக்கின் சவால்களையும் எதிர்கொள்ளும் திறனைத் திருக்குர்ஆன் தன்னளவில் கொண்டிருக்கிறது.
முஹம்மத் நபிகள் இந்தத் தெய்வீகக் கட்டளைகளை மிகவும் கண்டிப்புடனும் தீவிர பற்றுடனும் பின்பற்றினார். தன்னுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்களை சட்ட ரீதியான நடவடிக்கைளாலோ அல்லது அதற்குப் புறம்பாகவும் மறைமுகமாகவும் எதிரிகளை வேட்டையாடினார் என்பதற்கான எந்த எடுத்துக்காட்டும் வரலாற்றில் இல்லை.
இன்று இஸ்லாத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நின்று செயல்படும் “மாற்று செயல்பாட்டாளர்”களைக் கலாச்சாரக் காவலர்களாகத் தாமாகவே பொறுப்பேற்று இருக்கும் இந்த “இஸ்லாமிய தூய்மைவாதி”கள் குறுக்கிடுவதும் அத்துமீறி நடந்துகொள்வதும் உள்ளபடியே திருக்குர்ஆனுக்கும் நபிகளாரின் நடைமுறைக்கும் எதிரானது. நபிகளாரிடம் நயவஞ்சகர்களின் தலைவரான அப்துல்லாஹ் இப்னு உபை மற்றும் அவரைச் சார்ந்தவர்களின் துரோகங்கள் அதிகரித்த போது அண்ணல் நபியின் நெருங்கிய தோழர் உமர் இவர்களை ‘அழித்தொழிப்பு’ செய்ய அனுமதி கோருகிறார். அதற்கு நபிகள் நாயகம் அவர்களோ ஏன் உமரே! மக்கள் முஹம்மத் தன்னைச் சார்ந்தவர்களையே கொன்று கொண்டிருக்கிறார் என்று சொல்ல வேண்டுமா எனத் திருப்பிக் கேட்கிறார். சிறிது காலத்தில் அந்த நயவஞ்சகர் இயற்கையாகவே மரணம் அடைந்தபோது எல்லாவற்றையும் மறந்துவிட்டு முஹம்மத் நபி இறுதி சடங்குடன் தொழுகையையும் நடத்தி வைக்கிறார்.
இஸ்லாமிய வரலாற்றில் ஆரோக்கியமான சர்ச்சைக்குரிய விவாதங்கள் நிறைய நிகழ்ந்து இருப்பதைக் காணலாம். உடனடியாக நம் நினைவுக்கு வருவது இரண்டு பெரும் தத்துவ மேதைகள். அல்கஸ்ஸாலி மற்றும் இப்னு ருஷ்த் ஆகியோர். அதில் கஸ்ஸாலி கிரேக்க நவ புளுடோனிய தர்க்கவியலைப் பற்றி பேசியதற்கு மறுப்பாக இப்னு ருஷ்த் தத்துவக் கோட்பாடு ஒன்றை அமைப்பு ரீதியாக உருவாக்கினார். அது இன்றைக்கும் மிகப்பெரும் செவ்விலக்கியம் என்று வகைப்படுத்தப்படுகிறது.
அப்பாசிய ஆட்சியாளர் ஃகலீஃபா மாமுன் முன்னிலையில் சீர்த்திருத்தவாதிகளுக்கும் பழமைவாதிகளுக்கும் இடையில் நிகழ்ந்த சர்ச்சையும் அந்த வகைமையில் சேர்ந்ததே. இஸ்லாத்தின் உள்ளே பகுத்தறிவாளர்(முஃஅதஸிலா)கள் உருவாகி இருந்ததைப் பிற்கால வரலாறு பதிவு செய்துவைத்து இருக்கிறது. ஆனால் அப்படியெல்லாம் இனி சாத்தியமே இல்லை என இன்று நம்மால் எண்ணத் தோன்றுகிறது.
முஸ்லிம்கள் ஓரளவு செல்வவளமும் செல்வாக்கும் பெற்று இருக்கும் பகுதியான (வேலூர் மாவட்ட) ஆம்பூரின் புத்தகக் கடையில் பெண்கள் உள்ளே வர அனுமதியில்லை என்று இன்றைக்கும் பகிரங்கமாக போர்ட் எழுதி மாட்டி வைத்திருப்பதும் மாணவிகளுக்கு ஆண் ஆசிரியர் துணி மறைப்புக்குப் பின்னால் நின்று பாடம் நடத்த வைத்திருப்பதும் உள்ளபடியே வெறுமனே ‘குறி’களையும் யோனிகளையும் சதா நினைத்துக் கொண்டிருக்கும் அழுகிப் போன மனங்களால் காலம் உறைந்து கிடக்கிறது.
நபியாகக் கடமையாற்றிய 23 ஆண்டுகளில் தம்முடைய எதிர்ப்பாளர்களுடன் அவர் வெறுமனே மூன்று (பத்ரு, உஹத் மற்றும் ஹுனைன் ஆகிய) இடங்களில் மட்டுமே போரிட்டார், அதுவும்கூடத் தவிர்க்க முடியாத சூழலாக இருந்தபோது மட்டுமே. இந்த மூன்று சந்தர்ப்பங்களில் போர் நீடித்த நேரம் என்பது வெறும் ஒன்றரை நாட்கள் மட்டுமே. இதன் பொருள் அவர் தன் வாழ்நாட்களில் ஒன்றரை நாட்கள் மட்டுமே போரிட்டார் என்பதும் இதனால் இறந்துபோனவர்களின் எண்ணிக்கை இரு தரப்பிலும் சேர்த்து 130 நபர்களுக்கும் குறைவாகவே கொல்லப்பட்டனர் என்பதும் கவனிக்கத்தக்கது. மூர்க்கத்தனமான ஆக்ரமிப்பாளர்களுடன் இவ்வளவு குறைவாக இரத்தம் சிந்தியதற்குக் காரணம் அவர் அமைதியின் ஆற்றலை நம்பி இருந்தார் என்கிற செய்தி சொல்லப்பட வேண்டும்.
நாம் கருத்து வேறுபாடுகளைச் சகிப்புத்தன்மையுடனும் நம்முடன் முரண்படுபவர்களுடன் இன்னும் அதிக பொறைமையுடனும் எப்படி நடந்துக் கொள்வது என்பதைக் கற்றுக்கொள்ள வேண்டும். எதிர்ப்புகளை ஜனநாயகத்துக்கு உட்பட்டும், இன்று பொதுச் சமூகம் ஏற்றுக்கொண்டிருக்கும் விழுமியங்களை மதிக்கப் பழக வேண்டும்.
சுதந்திரத்துக்குப்பிறகான இந்தியாவில் எப்பொழுதும் இல்லாத வகையில் வகுப்புவாத அச்சுறுத்தலை எதிர்நோக்கி இனி வர இருக்கும் பதிற்றாண்டுகள் அமையக்கூடும். ‘இந்துக்களை ஒன்றுபடுத்து- முஸ்லிம்களை பிரித்தாளு’ என்று மெத்த படித்த சுப்ரமண்ய சாமியே வெட்கம் கெட்டுச் சொல்லும் இந்த காலத்தில் முஸ்லிம்களில் உள்ள அறிவுஜீவிகள், நியாய உணர்வுடைய சக இந்துக்கள், இடதுசாரிகள், இதர சிறுபான்மையினர் என அனைவருடன் ஒருங்கிணைய வேண்டும்.
பள்ளிவாசல் மேடைகளை முல்லாக்களும் அரசியல், பொருளாதார நிறுவனங்களை மேட்டுக்குடி முஸ்லிம்ளும் கைப்பற்றிக் வைத்திருக்கும் இந்தச் சூழலில் எஞ்சியிருக்கும் சிந்தனையாளர்கள் காலச்சுவடு போன்ற பொது வெளிகளைப் பயன்படுத்திச் சமூக அசைவியக்கத்திற்குக் காரணியாகும் பொறுப்பைச் சுமக்க முன்வர வேண்டும். அந்த வகையில் கண்ணனும் பீர்முகம்மதும் நன்றியுடன் நினைக்கப்பட வேண்டியவர்களே.
***
நன்றி : கொள்ளு நதீம் , காலச்சுவடு