Thursday, September 25, 2014

ஔரங்கசீப்பின் இசை ஞானம்!

மாடபூசி கிருஷ்ணஸ்வாமி கோவிந்தகுமார் (அட, நம்ம மதன்தான்) எழுதிய 'வந்தார்கள் வென்றார்கள்' புத்தகத்தில் சுவாரஸ்யமான  ஒரு குறிப்பு இருக்கிறது. எளிமையின் வடிவமாக இருந்தாலும் இசையை எப்படி வெறுத்தார் ஔரங்கசீப் என்பது பற்றிய கதை. வரலாற்றில் கதையை சேர்ப்பது எதை வெல்ல? ஆனாலும் வாசிக்கலாம் புன்முறுவலோடு.

***
ஒருமுறை டெல்லியில் இருந்தபோது ஔரங்கசீப் யானை மீது அமர்ந்து ஆக்ராவுக்குக் கிளம்பினார். அப்போது செங்கோட்டைக்கு வெளியே, ஜூம்மா மசூதி அருகில் கூட்டமாகப் பலர் 'ஓ'வென்று வாய்விட்டு அழுதவண்ணம் நிற்பதைக் கண்டு ஆர்வமிகுதியால் யானையைவிட்டுக் கீழே இறங்கி அங்கே சென்றார் பாதுஷா. கொடும்பாவி ஒன்று பிணம் போல மலர்கள் தூவப்பட்டுக் கீழே இருத்தப்பட்டிருந்தது. நகரத்தின் இசைக் கலைஞர்கள் பலர் அங்கே கூடியிருந்தனர்.

"என்ன இது ஏன் அழுகிறீர்கள்?" என்று பாதுஷா வினவ, 'சக்கரவத்தி! நாங்கள் எல்லாரும் இசைக் கலைஞர்கள். இதோ கீழே கிடப்பது இசை. தங்கள் ஆட்சியில் அதன் உயிர் போய்விட்டதால் அதை நல்லடக்கம் செய்யக் கிளம்பிக்கொண்டிருக்கிறோம்" என்று ஒரு போடு போட்டார்கள்.

வந்த புன்னகையை அடக்கிக்கொண்ட ஔரங்கசீப், முகத்தில் துளியும் சலனம் காட்டாமல் "ஓ! இசை இறந்துவிட்டதா?" அதில் எனக்குச் சற்று சந்தேகம் இருந்தது. இறந்தது உண்மை என்பது மகிழ்ச்சியான செய்தி. அதன் ஆத்மா சாந்தியடைய நாம் எல்லோரும் இறைவனை வேண்டிக் கொள்வோம்" என்று சொல்லிவிட்டுச் சென்ற சக்கரவர்த்தி திரும்பிப் பார்த்து "மறுபடியும் உயிர் வந்து தொலைக்கப்போகிறது. ஆகவே எதற்கும் சற்று ஆழமாகவே அடக்கம் செய்யுங்கள்!" என்றார். இசைக் கலைஞர்கள் வெறுத்துப்போய் உட்கார்ந்து விட்டார்கள்.

***
அவ்வளவுதான் கதை. மதனுக்கு நன்றி. ஔரங்கசீப்பின் வாரிசுகள் திருந்த 'லால்குடி'யை அர்ப்பணம் செய்கிறேன்.

**
Thanks to : vamsi krishna

No comments:

Post a Comment