Sunday, January 12, 2014

ஆமையரப்பாவும் ஆட்டுக்குட்டியும் - எஸ்.எல்.எம். ஹனீபா

எல்லாம் பூந்து வால் மட்டும் இருக்கக்கொல ஹனீபாக்கா கதெ எழுதத் தொடங்கியிருக்காரு. - ஹனீபாக்கா!

***

01

என்டெ சின்ன வயசுக் கதெ. அப்பெ நான் படிக்கப் போகல்ல. ஆட்டுக்குட்டியக் கண்டா அதுக்குப் புறத்தால போயிருவன். மேய்ச்சலுக்கு வாற ஆட்டில எனக்கு விருப்பமான குட்டியப் புடிச்சி, வாழ நாரால கட்டி விளையாடுவென். திடீரெண்டு நாரப் பிச்சிட்டு குட்டி ஓடிடும்….

மனசும் கூடவே ஓடும்.

இப்படித்தான் ஒரு நாள் ஆமையரப்பா ஊட்ட வந்தாரு. நான் ஊராட்டு ஆட்டுக்குட்டியப் புடிச்சிட்டு…. கட்டி விளையாடுறதப் பார்த்திட்டாரு….

ஏன் வந்தார், எதுக்கு வந்தாரு எண்டெல்லாம் ஞாபகமில்லெ.

போறப்ப, “தம்பி சாய்ந்தரம் இவனக் கூட்டிட்டு வாடிக்கு வாங்க”

ஆமையரப்பா வாடிக்குப் பெய்த்தாரு.

ஆமையரப்பா அசல் ஆமையைப் போலான். மூணு முழ கொட்டான் மனுஷன். நல்ல கறுப்பு. கட்டையான பெரிய வவுறு. பழுப்புல அரக்கை வாலாமணி. வெள்ள தாடியும் தலையில தொப்பியும்.

ஆமையரப்பாட்ட ஒரு மாதிரியான உப்புத்தண்ணி வாசம் வரும். எங்க வாப்பாட்டயும் அந்த வாசந்தான். ஆத்தில, கடல்ல தொழில் செய்யிற எல்லாரிட்டயும் அந்த வாசந்தான்.

தடுமல் மூக்கோட வாப்பாவ கட்டிப் புடிச்சிக்கிட்டுப் படுத்தா நல்லாருக்கும். தலப்பாரம் குறெஞ்சிரும்.

மெய்தான், இது என்டெ கதெ மட்டுமில்லெ. ஆமையரப்பாட கதையுந்தான்.

ஐ.பி. ஆறுமுகமும் இதுக்குள்ள வருவாரு, ஆட்டுக்கள்ளன் ரமுழாரும் வந்து போவாரு. பழைய மனுசர்ர கதெ கேக்கப் புதுசா இருக்கும்.

ஆமையரப்பாக்கு ஏன் அப்படிப் பேரெண்டு இண்டைக்கும் விளங்கல்ல…

எங்கெட ஊர்ல அப்படித்தான் பேரு.

உம்மா, வாப்பா ஒரு பேரு வெப்பாங்க. பள்ளிக்கூடத்தில இன்னொரு பேரு. கூப்பிர்ர வேறொரு பேரு. பதிவுல, அது வேற. கடெசில ஆரோ ஒருத்தன் வெச்ச பட்டப்பேருதான் மௌத்தாகி மண்ணுக்குள்ள போன புறவும் நிலெச்சி நிக்கும்.

ஆமையரப்பா, வாப்பாக்கு மாமா. எனெக்கி மூத்தப்பா. அந்த நாளெய பேர நினெச்சா புதினமா கிடக்கு.

புகையிலயெரு, வத்தக்காயெரு, கொச்சிக்காயெரு, கத்தரிக்காயெரு, புடலங்காயெரு, கால்ராத்தலெரு, ஈக்கிலெரு, அரிப்பாரு, அதக்க விழுங்கியெரு, பூலாவெரு, புறப்பட்டாரு, மாலையெரு, கிராணம் பாத்தாரு, புக்கையெரு, சோவையெரு, களட்டிக்காயெரு, பனமரத்தாரு…

இத எழுதப்போனா பொழுது விடிஞ்சிடும்.

இண்டெக்கி யாரு இப்பிடி பேரு வெக்கிர, எல்லாம் அறபுப் பேரு.

அண்டெக்கி எல்லாம் மரக்கறிப் பேரு, சைவப் பேரு.

இண்டெக்கி அர்த்தம் பாத்து, கணக்குப் பாத்து வெக்கிற பேரு. முதலாம் நம்பர், அஞ்சாம் நம்பர், எட்டாம் நம்பர்… எல்லாம் அரசியலுக்கு வாசான பேராம். நம்பருக்கா எழுத்தெ மாத்தினா தலெயெழுத்தும் மாறுமாம்.

பேத்தி வாராள். என்ன காலையிலேயே எழுத்துக் கிறுக்கு.

முப்பது ரூபாய்க்கு பராட்டாவும் சம்பலும் வாங்கிட்டு வாங்க.

மெய்தான், இது ஆமையரப்பாட கதெ.

***


02

என்னைக் கூட்டிவரச் சென்ன கையோட, ஆமையரப்பா ஏறு கடப்பால ஏறி புறவளவுக்க போனாரு. பிலா மரம் காய்க்கத் தொடங்கினா, ஆரையும் அந்தப் பக்கம் வாப்பா போக உடமாட்டாரு. அடி மரத்திலயும் வேர்லயும் பிலா வடுக்கள்... கழுத்தில ஆலங்கா மணிக் கோர்வ போல வரிசையாக் கிடக்கும்.

வாப்பாவும் நானும் பிலா மரத்தச் சுத்தி பன மட்டயால வேலி கட்டுவம். மர ஊசால நான் குத்திக் குடுக்க வாப்பா சும்பாக் கவுறால இறுக்கிக் கட்டுவாரு.

பிலா மரத்துக்கு பாவாட தச்சாப் போல இருக்கும்.

வாப்பாட ஒவ்வொரு காரியமும் அழகா, நுப்பமா, கறாரா இருக்கும். வாப்பாட கைலெ இருக்கிற கத்தி பளபளன்னு மின்னும். என்னத் தொடவும் விடமாட்டாரு.

வேலி கட்டினா என்னெ, மீன் கூட பின்னினா என்னெ, காத்தாடிக் கம்பு கமுகு வைரத்திலெ சீவிச் சீவி...

அதுவும் ஒரு அழகுதான்.

அவங்கல்லாம் செய்ற தொழில செப்பமெண்டாக்கள், தெய்வமெண்டாக்கள். செப்பமெண்டாலும் தெய்வமெண்டாலும் அழகுதான.

அப்படித்தான் அந்தக் கால மனிசர்.

இவனுகளுக்கு கிழப்பிக் காட்டினாத்தான் அழகு. அவங்களுக்கு மூடிக் காட்டினாத்தான்...

அப்படித்தான் வாப்பா பிலா மரத்தெ மூடிக் காட்டினாரு.

ஆமையரப்பா, வேலிய நீக்கிப் பாத்த கையோட வானத்தெப் பாத்து மாஷா அல்லாஹ் எண்டு பிலா மரத்துக்கு துஆ கேட்டாரு.

நான் ஏறு கடப்பிலெ ஏறி நிண்டு இதெல்லாம் பாத்துக்கிட்டன்.

என்னெக் கைல புடிச்சிக் கூட்டி வந்த ஆமையரப்பா, "தம்பி! இந்த முறெயும் எனக்கொரு துண்டுப் பழம் அனுப்பணும்"

"கட்டாயம் மாமா"

"மெய்தான், புதுசா ஏதோ நெல்லு வந்திருக்காமே, என்னெயோ போர் ண்டானுகள். உங்கட கூட்டாளி கந்தையா ஓவிசர்தான் போடிமாருக்கெல்லாம் ஆளுக்கொரு பக்கெட்டுக் குடுத்தெயாம்"

"ஓம் மாமா எச்.ஃபோர்"

"ஓம் தம்பி, அதான் பேரு, எனக்கும் ஒரு சுண்டு நெல்லுத் தாங்களென். புட்டிக்குள்ளெ ஒரு வரவுத் துண்டு செரிக்கட்டி வெச்சிரிக்கென். கொத்து நெல்லா கொத்துவொம்"

"கட்டாயம் தாரன், தலெமழெயோடு வாங்கிட்டுப் போங்க"

"மாமா, உங்களுக்கிட்டெ சீனட்டி நெல்லு இருக்கா? வாப்பா கேட்டாரு"

"அதென்னத்துக்கு தம்பி, ரெண்டு மாசத்தில வெட்டணும், ரெண்டு நாள் பிந்தினாலும் வெறும் கதிர்தான் மிஞ்சும், எல்லாம் கொட்டிரும். சோத்துக்கு நல்லாருக்கும். நாம நாய் பாடா பட்டு வெள்ளத்திலெயும் தண்ணிலெயும் அழிய உடலாமா?

இளங்கலையென்ல விதைங்க. வெள்ளத்துக்கும் நிண்டு புடிக்கும், சோத்துக்கும் நல்லாருக்கும்"

ஆமையரப்பா தலையெ ஆட்டி ஆட்டி வாப்பாவோட கதெச்சாரு. வாப்பாவும் தலெய ஆட்டி ஓம் போட்டாரு.

வாசல்ல, பாயும் தண்ணிக் கோப்பெயும்.

"இரிங்க சாச்சா" உம்மா மண்டபத்துக்குள்ள இருந்து தேயிலெ ஊத்துற சத்தத்தோடு உம்மாட சத்தமும்...

உம்மாட ஒரு கைலெ தேயிலெயும் இடது கைலெ சீனி போத்தலும்.

அப்பா, வலது உள்ளங்கைலெ சீனியக் கொட்டி, நாக்கெ நீட்டி, நக்கி நக்கி - 'த்ச்' கொட்டி நாலு முடறு குடிச்சி, சீனிக்கையெ நல்லா நக்கி, வலது தொடெயிலெ தட்டி எழும்பிட்டாரு.

ஆத்துக்கு போற ஒழுங்கயிலெ ஆமையரப்பா. பொழுது பத்தெக்குள்ள இறங்கிட்டு.

***


03

விடிஞ்சா வெள்ளிக்கிழமெ.கொத்துவா நாள். வெள்ளிக்கிழமெண்டா எங்கட ஊர்ல பெருநாள்தான்.

கிழமெய்ல ஒரு நாள்தான் பகச்சோறு. அது வெள்ளிக்கிழமெய்ல. ஒவ்வொரு நாளா எண்ணியெண்ணி இருப்பெம்.

இறெச்சிக் கறியும் புளித்தண்ணியும் வயிறு முட்டப் புடிக்கலாம்.

வாப்பாக்கு வெள்ளிக்கிழமெயும் வேலதான். ஒரு வேலெ முடிஞ்சா இன்னொரு வேலெ. அவர்ர காலடியிலெ வேலெ காத்துக்கிட்டுக் கிடக்கும்.

போன கிழமெ தொடக்கம் கூட பின்னுற வேலெ.

கர வலெயில மீன் காலம்.

வாப்புமாமா, மலாயரு, மாத்தாண்டன் மாமா, சண்முகத்தாரு, கொல்லாவரு, பறங்கியரு ண்டு எல்லாருக்கும் வாப்பாதான் மீன் கூடெ பின்னிக் குடுப்பாரு.

கவுறு போட்டுப் பின்னிக் குடுக்க அஞ்சு ரூவா.

கவுத்திலெ உறியும் கூடெயும்.

எங்கட ஊர்ல மீன் கூட பின்றத்திலெ வாப்பாவ அடிக்க வேறாள் இல்லெ. நல்லா முத்தி விளெஞ்ச பிரம்புலெ அழகழகா இளெப்பாரு.

பிரம்படித் தீவுக்குப் போய், பிரம்பு வெட்டி வருவாரு. மத்தவங்க வெட்டிவாற பிரம்பு வாப்பக்குப் புடிக்காது.

நல்லா முத்தின பிரம்பு, சுரவணியம் பழத்தெப் போலெ மினுங்கும். அடிப்பிரம்பிலெ கறுப்புக் கறுப்பா பட்ட கிளெம்பும்.

எங்கட ஓதுற பள்ளி லெவ்வெட கைலயும் அப்படிப் பிரம்புதான்.

முரட்டுக் கைகள், முத்தின பிரம்பு, மனுசனுக்கு விசரு வந்து அடிச்சாருண்டா, முதுகத் தீச்சிட்டுப் போவும்.

வாப்பாட ஒவ்வொரு காரியமும் அவர்ர கையாலெ செஞ்சாத்தான் அவருக்குப் பத்தியம்.

உம்மாவ கையுதவிக்குக் கூப்பிட்டா… வாப்பா ஒண்டெச் செல்ல உம்மா வேறொண்டெச் செய்வா. ஒரே சண்டெதான்.

உம்மா-வாப்பா சண்டெ எப்பான் முடியுமோ. அல்லாவுக்கு வெளிச்செம்.

இப்பெல்லாம், உம்மாவ, வாப்பா ஒண்டுக்கும் கூப்பிட மாட்டாரு. நான் பெரியாளாப் போனென். என்னெத்தான் கூப்பிடுவாரு. வாற வருசம், அரிவரி படிக்க ராத்தாவோட பள்ளிக்கூடம் போவப்போறென்.

சொண்டுக் கத்தியெ எடுத்திட்டு வா, மர ஊசியும் சணலும் கிடக்கிறெ கடவத்தக் கொண்டா…

உம்மாட்ட முட்டித் தண்ணில வாங்கிட்டு வா

பொழுது விடிஞ்சா வாப்பா ஒவ்வொண்டா செல்லுவாரு. நானும் ஓடியோடி ஒவ்வொண்டாச் செய்வென்.

வாப்பாக்கு என்னில சரியான இரக்கம்.

ஆமையாரப்பா ஊட்ட வந்து போய், விடிஞ்சா ஒரு கிழமெ.

இன்னும் அப்பாட ‘புட்டி’க்க என்னக் கூட்டிட்டுப் போகெல்ல.

“ஆட்டுக்குட்டிக்கு முதல்ல கால கட்டணுண்டா மன, அதுக்குப் புறவுதான் ஆட்டக் கொண்டு வரணும். மழைல ஆடு நனெஞ்சா செத்துப் போவும்”.

“நாளெக்கி ராத்தாவும் நீயும் ஓடக்கரெ மாமிட்ட போய், பத்து கிடுகு மட்ட வாங்கிட்டு வரணும்”.

மாமிட்ட போரெண்டா எனக்கி இல்லண்டெ கொண்டாட்டம். போற வழியெல்லாம் வாக மரக் காடுதான். நாம எண்ணிக்கிட்டு இரிக்கெம், காடுண்டா மரங்களெண்டுதான், காட்டுக்குள்ள விதம் விதமான குடும்பங்கள். மனிசரில்லாத குடும்பங்கள்.

ஒவ்வொரு மரத்திலெயும் பொன்னி வண்டுகள் ஆட்டுக்குட்டிகளெப் போல மேஞ்சிக்கிட்டுக் கிடக்கும். மேலெல்லாம் தங்கத் தண்ணிலெ போட்டு எடுத்தாப் போல மினுமினுக்கும்.

பெரிய ஈக்கில்ல பொன்னி வண்டுற தலெய நூலால கட்டி. – ரெண்டு கையாலெயும் சுத்தச் சுத்த வண்டு சிறகெ விரிச்சி விரிச்சி மூச்சு விடாம, ஈக்கில சுத்திச் சுத்திப் பறக்கும்.

பாக்கிறதுக்கு பெருநாளைல அலிக்குட்டி ஓடாவியார்ர தொட்டி ஊஞ்சல் போல இருக்கும்.

ஓடக்கரையெல்லாம் வாக மரமும் புங்க மரமுந்தான். புங்க மரம் நல்ல கறுப்பு. வண்ணார வெட்டைல காச்சலுக்கு ஊதிப் பாக்கிற சீனியன் கட்டாடியன் போல.

வாக மரம் நல்ல வைரமெண்டு வாப்பா செல்லுவாரு. கிறுக்கூஞ்சல் செய்ய நானும் மச்சிட காக்கா உசன் மச்சானும் வாக மரத்திலெதான் அச்சுச் செய்வம்.

ஒரு மரத்த ஒரு நாளெக்கெல்லாம் கிடந்து தறிப்பெம். மரத்திலெ கத்தி ஏறாது. அப்பிடி வைரம். கசறுக் கட்டி போல…

உசன் மச்சான் படிக்கப் போகல்லெ. மாமாவோட ஆத்துக்குப் போற. மாமா வீச, மச்சான் தொடுப்பான்.

அணியத்திலெரிந்து – அவன் சவளை, தோணிய அணைச்சாப்லெ – திடீரென ஆத்துக்குள்ள சவளெக் குத்தி… ஆறு குழிவிட்டு குழிவிட்டு சிரிக்கிறாப் போலெ இருக்கும். அழகா இருக்கும்.

கையெ ஆத்துக்குள்ள விட்டா, சிரிப்பூ அகப்படாது, சிதறிப் போகும்.

ஆத்துக்குள்ள சவளெப் போட்டு – சின்னச் சின்ன தண்ணி மடுவெத் தோண்டித் தோண்டி உசன் மச்சான் தோணி உடுவான். நான் தோணிட தொங்கல் அணியத்திலெரிந்து பாத்துக்கிட்டு இருப்பென்.

தலை சுத்தும்.

(ஆமை நகரும்)
***

No comments:

Post a Comment