Sunday, June 2, 2013

சாதாரணர்கள் சாதாரணர்கள்தாமா? - வலம்புரி ஜான்

'என் பேச்சால் பலர் மாறாவிட்டால், ஒருவனாவது மாறட்டும். அதுவும் வலம்புரி ஜானாகவே இருந்துவிட்டால் நல்லதுதானே!'' என்று சொன்ன 'மேரி ஜான்'-ன் 'இந்த நாள் இனிய நாள்' ஒன்றாம் தொகுதியிலிருந்து...

***

சாதாரண மனிதர்கள் என்றும் சரித்திர மனிதர்கள் என்றும் நாம் பிரித்துப் பார்க்கிறோம். மனிதர்களில் அப்படிப்பட்ட பிரிவினை உண்டுதான்.

ஆனால் வரலாறு என்பதே மகத்தான மனிதர்களின் வாழ்க்கை வடிப்புத்தான் என்று கார்லைலே சொன்னாலும் அது முழுக்கவே ஏற்றுக் கொள்ளத்தக்கது அல்ல.

சாதாரண மனிதர்களின்  கூட்டு முயற்சிக்கு மாபெரும் தலைவர்களின் தனி முயற்சி ஈடானது அல்ல என்கிற கருத்து தவறானது. தனி மனிதர்களின் கூட்டு முயற்சியே தலைவர்களின் தனி முயற்சியைவிட அபாரமானது.

எல்லாச் சமயங்களும் ஒன்றுதான் என்று பேசுகிறோம்; எழுதுகிறோம். மேற்கோள் காட்டுகிற மேதைமை எல்லாம் இருக்கிறது. ஆனால் வாழ்க்கையில் இந்த நெறியைக் கடைப்பிடிக்கிறவர்கள் நம்மில் எத்தனை பேர்கள் என்று பார்க்க வேண்டும்.

எந்தப் பல்கலைக் கழகத்திலும் பயிலாத, நாம் சொல்லுகிற எந்தப் பாடங்களும் தேர்ச்சி பெறாத பலர் சில தத்துவங்களை வாழ்ந்து காட்டுவதன் வாயிலாக நமது பல்கலைக்கழகங்களை, கல்விச் சாலைகளை உள்ளீடற்றவைகளாக ஆக்கி விடுகிறார்கள்.

தஞ்சை மாவட்டம் வேளாங்கன்னியிலே சிவாலயத்துக் குருக்கள் ஒருவர் இருக்கிறார். ஒரு நாள் எங்கள் தலைவரின் பிறந்த நாள் வேண்டுதலுக்காக இங்கே போனேன். குருக்கள் அவருக்காக, எனக்காக அர்ச்சனை செய்தார்.

முடிந்ததும் நான் வேளாங்கன்னி ஆலயத்திற்குப் போனேன். அங்கே பாதிரியார் மூன்று பரிசுப் பொட்டலங்களை வைத்துக்கொண்டு என்னைத் தவிர வேறு எவரெவருக்குத் தரலாம் என்று தயங்கிக் கொண்டிருந்தார்.

நான் பின்னிட்டுத் திரும்புகிறபோது அதே குருக்கள் கால்கள் முழந்தாளில், கைகள் மெழுகுவர்த்தியோடு, அந்தப் பரிசுக்கு என்னிலும் அவர் தகுதியானர் என்பதால் அவருக்கே தாருங்கள் என்று பாதிரியாரிடம் சொன்னேன். அவரும் மிகுந்த வணக்கத்தோடு அதைப் பெற்றுக் கொண்டார்.

அடுத்து அதே ஊரில் உள்ள பள்ளிவாசலுக்கு அவர் எங்களோடு வந்தார். வந்த வேளையில் துவா நடந்தபோது கைக்குட்டையால் தலையை மறைத்துக் கொண்டார்.

இவர் எங்கே சமரசப்பாடம் படித்தார் என்பது தென்படவில்லை. ஆனால் பாடங்களில் காணப்பட்ட உயர்நெறி வாழ்க்கையை வாழ்ந்து காட்டுகிறவராக அவர் இருந்தார்.

ஊத்துக் கோட்டை தாலுக்காவில் சூளைமேனி என்கிற இடத்தில் பெருமாள் கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயில் பல ஆண்டு காலமாக முகம்மது யூசுப் என்ற இஸ்லாமியரின் பாதுகாப்பில் உள்ளது. பெருமாள் இந்த முஸ்லீமை இதுவரை முறைத்துவிடவில்லை.

திருமலைக்குப் பாதயாத்திரையாக சென்னையிலிருந்து போகிற ஒரு குழுவில் ஆண்டுதோறும் தவறாமல் இடம் பெறுகிறவர் வின்சென்ட் என்கிற கும்பகோணம் கிறிஸ்தவர்.

வில்லிவாக்கம் தேவகான இன்னிசைச் சங்கம் என்கிற இந்த அமைப்பு திருமலைக்குப் போகிறபோது வேறு மதத்தவர்களும் இவர்களுக்கு அன்பு பாரட்டுகிறார்கள்.

சேலத்தில் எனக்குத் தெரிந்த மீனாட்சி ஆச்சி இருக்கிறார்கள். இவர்களுக்குச் சொந்த இடம் சிறுகூடல் பட்டி. பக்கத்து வீட்டில் கிறிஸ்தவர்கள் உள்ளன்போடு பழகினார்கள்.

அந்த வீட்டுக் கிருஸ்தவச் சிறுவன் மீது அன்பு பாராட்டி வந்தார்கள். ஒருநாள் அந்தக் கிறிஸ்தவப் பெற்றோர்கள் மறைந்தார்கள்.

அன்பு காட்டிய கிறிஸ்தவக் குழந்தையை இந்த ஆச்சி எடுத்து வளர்த்தார்கள்,. பிறகு இவர்களுக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள். எங்கும் சென்று முறையான கல்வி கற்காத இந்த ஆச்சி , கிறிஸ்தவப் பிள்ளையை அந்தச் சமய முறைப்படி வளர்த்தார்கள்.

கேரளத்திற்குச் சென்று அவருக்குப் பெண் பார்த்து திருமணித்து, பிறந்த குழந்தைக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்கள்.

இவர்களது இல்லத்தில் இந்து சாமிகளும் , கிறிஸ்தவ சாமிகளும் உண்டு. வெள்ளிக்கிழமை மற்ற இரண்டு குழந்தைகளுக்காக கோயிலுக்குப் போவார்கள். ஞாயிற்றுக் கிழமை கிறிஸ்தவ மகனுக்காக தேவாலயத்திற்குப் போவார்கள்.

இப்படி வேதப் புத்தகங்களில் உள்ள தங்களது மேதமையைக் காட்டாமல் உண்மையான உயர்நெறி வாழ்க்கையை வாழ்ந்து காட்டுகிறாவர்களாக இருக்கிற பெருமக்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.

நிரம்பப் படித்தவர்களும், ஒன்றுமே படிக்காதவர்களும் இத்தகைய உயர்நெறி வாழ்க்கையைக் கடைப்பிடித்து வருகிறார்கள். ஆனால் அரைகுறையாகப் படித்தவர்கள் இந்தச் சமயத்திற்கும் அந்தச் சமயத்திற்கும் இது வேறுபாடு, அது வேறுபாடு என்று செயற்கையாகச் சுவர்களை எழுப்புவதிலேயே கவனம் செலுத்துகிறார்கள்.

ஆக, சாதாரணர்கள் சாதாரணர்கள் அல்ல. சரித்திரத்தில் இடம்பெறாத, ஆனால் பெறத்தக்க மாமனிதர்கள் இவர்களே!

**

நன்றி : ஆஸாத் பதிப்பகம்

**
+
ஓய்வெடுக்கிறார் வலம்புரி ஜான் - அண்ணாகண்ணன்

1 comment:

  1. //இப்படி வேதப் புத்தகங்களில் உள்ள தங்களது மேதமையைக் காட்டாமல் உண்மையான உயர்நெறி வாழ்க்கையை வாழ்ந்து காட்டுகிறாவர்களாக இருக்கிற பெருமக்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள்.//
    வலம்புரி ஜான்..
    அவர் பங்கிற்கு
    'இந்த நாள் இனிய நாளில்'
    என்னத்தையோ
    சொல்லிவிட்டு போய்விட்டார்.
    இன்றைய இனிய நாட்களைப் பற்றி
    சொல்லி அழக் கூட அவர் இல்லை!
    விதி வலியது.....
    -தாஜ்

    ReplyDelete