Tuesday, May 7, 2013

ஒற்றுமைக் கனிகள்

தன் வாழ்நாள் முழுதும் மதநல்லிணக்கத்திற்காக பாடுபட்ட 'சொல்லரசு' மாமாவை (மர்ஹூம் ஜாஃபர் முஹ்யித்தீன் அவர்கள்) அதிகாலைக் கனவில் கண்டேன். 12-2-2003 அன்று நாகை இஸ்லாமிய கல்விமையம் நடத்திய ஈத்மிலன் பெருநாள் சந்திப்பிற்கான அழைப்பிதழை அவர்கள் கொடுத்ததும் சிறப்பு விருந்தினராக ஜஃபருல்லாநானா கலந்துகொள்கிறாரே.. மதக்கலவரம் வந்துவிடாதா மாமா என்று நான் கேட்டதும் ஞாபகம் வந்தது. சிரித்துக்கொண்டே, சுவாமிஜி ரிஷி ஷைதன்யா அவர்களும் சுவிசேஷ திருச்சபை சபைகுரு ஜெ.ஜெபகுமார் அவர்களும் அந்த கூட்டத்தில் கலந்துகொள்வதால் கண்டிப்பாக கலவரம் வராது என்று உறுதிகூறிய மாமா, 'அன்னைக்கி மட்டும்' என்று அன்று கூறத் தவரவில்லை! - ஆபிதீன்

***
நாம் மதத்தால், மொழியால், இனத்தால் பல்வேறுபட்டவர்களாக இருப்பினும் - நாம் அனைவரும் மனிதர்கள். நமது உடலமைப்பும், தேவைகளும், உணர்வுகளும் ஒரே மாதிரியானவை. நமது மதத்தைப் பழித்தால் நமக்கு வருத்தம் ஏற்படுவது போல அடுத்தவருக்கும் ஏற்படும். எனவே தனக்கு விரும்புவதை பிறருக்கும் விரும்புவதே நல்லிணக்கத்தின் துவக்கமாகும்.

எல்லா சமயத்தவர்களின் உணர்வுகளையும் மதிக்கக்கற்றுக்கொள்ள வேண்டும். "பிறர் வணங்குகின்ற அல்லாஹ் அல்லாதவற்றை திட்டாதே!" (குர் ஆன் 6:108) என இஸ்லாமும் "எல்லா தர்மங்களையும் சமமாக பாவிக்க வேண்டும்" (சர்வதர்ம சம்பாவ்) என இந்து சமயமும் வலியுறுத்துகின்றன. சமய உணர்வுகளைக் காயப்படுத்துவதன் மூலமே கசப்புணர்வு உருவாகின்றன.

நமது நாடு நீண்ட காலமாக அமைதிமிக்க பன்மை சமூகமாக திகழ்ந்து வந்துள்ளது. ஆனால் ஆதிக்க சக்திகள் பிரித்தாளும் சூழ்ச்சிகள் மூலம் தமது ஆதிக்கத்தை நிலை நாட்டிக்கொள்ள முயற்சி செய்கின்றன. ஆனால் நாம் விழிப்புணர்வுடன் செயல்பட்டால் எந்த சக்தியாலும் நம்மை பிரிக்க முடியாது. மனிதநேயமே நம் உள்ளங்களை இணைக்கும் பாலமாகும் மனித் நேயத்தை வளர்க்க எல்லா வகையிலும் முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

மனித நேயம் வீட்டிலே விதைப்பட வேண்டும். கல்வி கூடங்களில் நீர் பாய்ச்சப்பட வேண்டும். தலைவர்களும், ஆன்மீகவாதிகளும்,அறிவு ஜீவிகளும் அதற்கு உரமிட வேண்டும். வகுப்புவாதிகளை இனம்கண்டு களை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்தால் ஒற்றுமை எனும் கனிகளை உண்டு மகிழலாம். வலிமையான , வளமையான ஒற்றுமையான பாரதத்தை உருவாக்கலாம்.

மதவெறி சாய்ப்போம் ! மனித நேயம் காப்போம்!

(தினகரன் ரம்ஜான் மலர் - 2002 பக்கம் 168லிருந்து)

No comments:

Post a Comment