Saturday, May 4, 2013

அழைக்கின்றார் மிஸ்டர் பீன்...! - தாஜ்


தா.தோ.தி.தோ.மா.கோ.க.:

அழைக்கின்றார் மிஸ்டர் பீன்...

-தாஜ்

நூற்றுக் கணக்கான
அரசியல் கட்சிகளை கண்ட நம் தமிழகம்....
வெகு விரைவில் இன்னொரு
புதிய அரசியல் கட்சியின்
துவக்கத்தையும்
அதன் மாபெரும் வெற்றியினையும்
காணப் போகிறது!

'தா.தோ.தி.தோ.மா.கோ.க.'
இதுவோர்
வித்தியாசமான கட்சி!
இதன் ஆதாரக் கொள்கைகள்
மிகவும் வித்தியாசமானது! சிரிப்பானது!
உங்களை சிரிக்கச் சிரிக்க வைத்து
சிந்திக்கத் தூண்டுவது!

"கட்சியின் பெயரை...
'தா.தோ.தி.தோ.மா.கோ.க.!'
என்றிருக்கின்றீர்களே....
அப்படி என்றால்
என்ன அர்த்தம்?" என்கிறீர்களா..
யாருக்குத் தெரியும்!

தமிழகக் கட்சிகளின்
பெயர்கள் குறித்த
சுலோக எழுத்துக்களை ஒட்டி
சும்மா ஜாலியா ராகவடிவா
தேர்வு செய்யப்பட்ட
சுலோக எழுத்துக்கள்தான் இவை!
நல்லா இருக்குல...!?

கட்சியின் பெயர்தான் என்ன? என்று
மண்டையை உடைத்துக் கொள்பவர்கள்
கொஞ்சம் முயன்று
இந்தச் சுலோக எழுத்துக்களுக்கான
வார்த்தைகளை அர்த்தப்படுத்தி
இஸ்டத்துக்கு
எங்க கட்சியின் பெயரை கண்டெடுங்கள்!
முடியுமானால் அப்படியே
எங்களுக்கும் தெரியப் படுத்துங்கள்.

*
நம் தாய் தமிழகத்தின்
அதி அவசியத் தேவைகளான...

1. காவேரியில் தண்ணீர்

2. மின்சாரம்

3. சுபீட்ச வாழ்வு!           

- இம் மூன்றையும்
தனது திறமையால்
மக்களின் நல் ஆதரவோடு
இனிதே நிறைவேற்றித் தருவதாக
வீர சபதம் பூண்டிருக்கிறார்...
நம் தானைத் தலைவர் மிஸ்டர் பீன்!

காவேரியில் தண்ணீர்:

இறைவனிடமே நேரிடையாக
கோரிக்கையினை வேண்டி பணிந்து வைத்து
அவனது தலையில் உள்ள
ஆகாசக் கங்கையை
வான் வீதியின் வழியே
தங்கு தடையில்லாமல்
கிராஃபிக் உதவியோடு
காவேரிக்கு கொண்டுவந்து
வருடம் பூராவும்
பாசனத்திற்கு வற்றா நீர் வழங்கத்
திட்டமிடப்படிருக்கிறது!

மின்சாரம்:

அதிகம் மின்சாரம் உற்பத்தியாகும்
நாடுகளில் இருந்து
கடல் மார்க்கமாய்
கப்பல் கண்டெய்னர்கள் மூலம்
சக்திவாய்ந்த மின்சாரத்தை
மாதத்திற்கு மூன்று முறை
தமிழகத்திற்கு கொண்டு வரவும்
இறக்குமதி செய்து
தடையற வழங்கவும்
திட்டமிடப்பட்டிருக்கிறது!

தவிர,
நம் நாட்டில் வற்றாது மண்டும்
குப்பைகளில் இருந்தும்,
மனிதக் கழிவுகளில் இருந்தும்
மின்சாரம் தயாரிக்கும் திட்டமும்
பரிசீலிக்கப்பட இருக்கிறது!

சுபீட்ச வாழ்வு!:

மக்கள் சுபீட்சமாக வாழத் தேவைப்படும்
பணம் குறித்த தேவையை
மிக எளிதாக
நிவர்த்திச் செய்ய திட்டமிட்டிருக்கிறார்
மிஸ்டர் பீன்!

தேர்தல் வாக்குறுதியாக
75 ரூபாய் அச்சடிக்கும்
கையடக்கமான மிஷின் ஒன்றை
எல்லா குடும்ப அட்டைத்தாரார்களுக்கும்
தங்குத் தடையின்றி
வழங்கத் திட்டமிடப் பட்டிருக்கிறது.

மத்திய அரசு 75 ரூபாய் அச்சடிக்கும்
மெஷினுக்கு அனுமதி தர மறுக்குமானால்..
40 ரூபாய் அல்லது 30 ரூபாய் அச்சடிக்கும்
சிறிய மிஷின் வேண்டி பெற்றுதரப்படும்!

*

இத்தகைய முன்னுரிமைத் திட்டங்களைத் தாண்டி
இன்னும் பிற தேவையான திட்டங்களையும்
அறிவிக்க இருக்கிறார் மிஸ்டர் பீன்.

1.நம் நாட்டில் லஞ்சம் அங்கீகரிக்கப்படும்.
அரசியல்வாதிகளில், போலீஸ்காரர்கள் தொட்டு
நம் ஜட்ஜ்கள் வரை யாரும் தடையின்றி
லஞ்ஜம் வாங்கலாம்.

2.கருப்பு பணத்தை வெள்ளைப் பணமாக மாற்ற
அரசே....,
சிறப்பு வெள்ளை பெயிண்ட் ஸ்பிரே ஒன்றை
தயாரித்து வெளியிடத் திட்டமிட்டிருக்கிறது.
உங்களது கருப்பு பணத்தை எளிதாக
வெள்ளையாக மாற்றிக் கொள்ள முடியும்!

3.மாணவர்களின் நலன் வேண்டி
ஒண்றாம் வகுப்பில் இருந்து
கல்லூரி உயர் கல்விவரை
தேர்வு என்பதே கிடையாது.

"எங்களுக்கு தேர்வு வேண்டும்" என்று
மாணவர்கள் போராடினால்..,
அது மிகப் பெரிய குற்றமாக கருதப்படும்.

4.கல்லூரிவரைப் படித்த
மாணவர்கள் அனைவருக்கும்
வேலை வழங்கப்படும்.
கௌரவப் பணியாக அது இருக்கும்!
ஊதியமற்று
நாட்டின் நலனுக்காக
பணியாற்றும் சீரிய பணியாக அது இருக்கும்.
ஆண்டுதோறும்
விசேச
பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படும்!

5.அரசின் எல்லா பொறுப்பான
உயர் அந்தஸ்து பணிகள் அத்தனையிலும்
நவீன ரோபோக்கள் அமர்த்தப்படும்.
ரோபோக்களுக்கு லஞ்சம் தர விரும்புகிறவர்கள்
அரசு கருவூலத்தில் பணத்தை செலுத்தி
ரசீது பெற்றுக் கொள்ளலாம்.

6.மிஸ்டர் பீன்...
விவசாயிகளின் நலன் கருதி
அவர்களுக்காக நவீன திட்டமென்றை
நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருக்கிறார்.
அதன் படிக்கு
மந்திரத்தால்
மூன்றே நாட்களில் தானிய உற்பத்தியை
உருவாக்கி பலன் கண்டுவிட முடியும்!
இதன்படிக்கு
வருடத்திற்கு சுமார் 50 தில் இருந்து 60 முறை
விவசாயம் செய்ய முடியும்!
மலையாள மாந்திரீகர்களிடம்
தேர்வு ரகசியமான முறையில் நடக்கிறது.

*
இத்தகைய முக்கியப் பிரச்சனைகளுக்கான
தீர்வு மட்டுமல்லாது...
கொதிக்கும் பிரச்சனைகளான...

1.தமிழீழப் பிரச்சனைக்கும்

2.கூடங்குள அணுஉலைப் பிரச்சனைகளுக்கும்

நிரந்தரத் தீர்வு காணப்படும்.

தமிழீழம்:

பசிபிக் மஹா சமுத்திரத்தில் காணும்
ஏதேனும் ஓர் பெரிய தீவை
விலைக்கு வாங்கி
அதனை தமிழீழமாக அங்கீரிக்கப்படும்.
அங்கே, சம்பந்தப்பட்ட தமிழீழ மக்கள்
ஆட்சி புரிய வழிவகையும் காணப்படும்!
ஐக்கிய நாட்டு மக்கள் நல்வாழ்வு அமைப்போடு
இதற்காக பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

கூடங்குளம்:

இந்துமஹா சமுத்தில்,
சில நூறு கிலோ மீட்டர் தூரத்தில்
காணும்
ஏதேனும் பாறை போன்ற ஓர் தீவில்
கூடங்குள அணுவுலை நகர்த்திப் போய்
நிலைநிறுத்தப்படும்!

கடலில் அதனை நகர்த்திக் கொண்டுப் போக..
அங்கே நிலை நிறுத்த தேவைப்படும்
தக்க உபகரணங்களை
வெளிநாடுகளில் இருந்து பெறப்படும்!.

இப்படி இன்னும்
பலநூறு திட்டங்கள்
தலைவர் மிஸ்டர் பீன்...
திட்டமிட்டிருக்கிறார்.
அறிவிப்பு விரைவில் வெளிவரக் கூடும்.

இந்தப் புதியக் கட்சி ஜெயிக்குமா?
என்கிற கவலையே மக்களுக்கு வேண்டாம்.
தமிழத்தில் இன்றைக்குப் பெயர் போட்டிருக்கும்
கட்சிகளின் A to Z நடவடிக்கைகளை
மக்கள் கண்டு சலித்து போய் இருப்பதால்
இப் புதியக் கட்சியை
நம் மக்கள் இருகரம் நீட்டி வரவேற்பார்கள்..
என்பது 100 சதம் நிச்சயம்.

இந்த இயக்கத்தில்
சேர விரும்புகின்றவர்கள்
www.mrbeen.com - ல்
அப்ளிகேஷனை நகலெடுத்து
கட்சித் தலைமைக்கு அனுப்பி வையுங்கள்.
கட்சித் தலைமையின் முகவரி அறிவிக்கப்படும்.

வெற்றி நமதே
வாழ்க தலைவர் மிஸ்டர் பீன்.

***

நன்றி : கவிஞர் கவுண்டமணி

No comments:

Post a Comment