Wednesday, May 22, 2013

ஓவியம் : 'ஆவிக்னான் இள மங்கையர்'

'யுனெஸ்கோ கூரியர்' பிக்காஸோ சிறப்பிதழிலிருந்து... (பிப்ரவரி 1981)

***

'1907இல் தீட்டப்பெற்ற 'ஆவிக்னான் இள மங்கையர்' எனும் ஓவியம் உலகைப் பற்றிய நம் நோக்கையே மாற்றிவிட்டது.' - சாண்டியாகோ ஆமோன்

தமிழில் : இரா. நடராசன்

**

பிக்காஸோ 1907இல் "ஆவிக்னான் மங்கையர்" என்ற ஓவியத்தைத் தீட்டி, கலையுலகில் ஒரு புதிய மரபையே தோற்றுவித்தார். பழைய மரபுகளிலிருந்து விலகிச் சென்று, உறுதியோடும் துணிவோடும் இவர் படைத்த இந்த ஓவியந்தான், தற்காலத்து நவீன பாணிக்கலை உருவாகக் காரணமாயிற்று. பிக்காஸோவுடன் புதிய மெய்யுணர்வு நயமும், உலகினை நோக்கும் புதிய வழியும், மனித வரலாறு பற்றிய புதிய மதிப்பீடும் பிறந்தன.

பிக்காஸோவின் கலைச்சிறப்பினை தகுதியினை மறுப்பவர்கள் இன்றும் உளர். வகுப்பறையில் -உணவு விடுதியில் - சிறப்பு அங்காடியில் - விமான நிலையத்தில் இருந்து கொண்டு "சக மனிதர்களைக் கேலி செய்யும் ஒரே குறிக்கோளுடன்தான் பிக்காஸோ பிறந்தார்" என்று ஏளனம் செய்யும் போது, அவர்கள் தாங்கள் இருக்கும் அந்த இடங்கூட ஏதோவொரு வகையில் பிக்காஸோ காட்டிய நெறிப்படி வடிவமைக்கப்பட்டதுதான் என்பதை உணர்வதில்லை. "பிக்காஸோவின் உயிரில் பொருள் ஓவியங்கள் தான் எனது சிறந்த கட்டடக் கலைப் படைப்புகளுக்கு ஆதாரம்" என்று இக்காலத் தலைசிறந்த கட்டடக் கலைஞராகிய ஸே கார்பூசியர் கூறவில்லையா?

"நவீனபாணிக் கலையால் பொது மக்களுக்கு உண்டாகும் திகைப்புக்கும் சினத்திற்கும்  இலக்காக அமைகிறார் பிக்காஸோ" என்று ·பிரெஞ்சு எழுத்தாளர் ஜூன் கேசு ஒருமுறை கூறினார். ஆனால், உண்மையில் பொது மக்கள் திகைப்பதுமில்லை; சினங்கொள்வதுமில்லை. புரையோடிய பழமைக்குப் புதிய பாணிக் கலையும் - அதன் சின்னமாகிய பிக்காஸோவும் சாவுமணி அடிப்பதையும், முற்போக்குப் பாதையில் வரலாறு முன்னேறுவதை இனியும் தடுக்க இயலாது என்பதைக் கண்ட பத்தாம்பசலிகள்தாம் ஆத்திரங்கொள்கின்றனர்.

இந்த எதிர்ப்பாளர்கள் சிறுபிள்ளைத்தனமாக இவ்விதம் சீற்றம் கொண்டு, நவீனபாணிக் கலையின் தந்தை பிக்காஸோவை ஏன் சபிக்கிறார்கள்? இதற்கு ஒரே காரணம்தான் இருக்க முடியும். நவீன பாணிக் கலைக்கும் (அதன் சின்னம் பிக்காஸோவுக்கும்) மக்களின் பேராதரவு கிடைத்து விட்டது. பழமைக்குத் திரும்பிவிட இயலாதபடிக்கு வீணாகப் பழம் பெருமை பேசமுடியாதபடிக்கு- நவீன சிந்தனைகளும் , வடிவங்களும் இன்றைய உலகில் பெருஞ்செல்வாக்கு பெற்றுவிட்டன. இதையெல்லாம் பொறாத எதிர்ப்பாளர்கள், இதற்கு மூலகாரணமான பிக்காஸோ மீது தங்கள் ஆத்திரத்தையெல்லாம் கொட்டுகிறார்கள்.

சமகால உலக நடப்புகளை நவீனபாணிக் கலை உள்ளபடியே பிரதிபலிக்கிறது. எனவேதான், சமகால வரலாற்றின் நாடித்துடிப்பினை அறியும் சாதனாமாக இப்புதிய கலை நிகழ்கின்றன. இதற்கு வழிவகுத்தது பிக்காஸோ தீட்டிய "ஆவிக்னான் நங்கையர்" என்ற ஓவியமாகும். அதுமுதல், ஒருசில முன்னோடிகளின் துணிவான முயற்சிகளால், புதுவகை உறவு முறையே உருவாகியது.

பிக்காஸோவும் அவரது ஓவிய நண்பர்கள் சிலரும் பெற்றிருந்த தீர்க்கதரிசனம் அதிசயமானது. பின்னர்த் தோன்றிய ரஷ்யப் புரட்சியால் ஏற்பட்ட புதுவகை வாழ்க்கை முறையினையும், புதுமையான நடப்புகளையும் இவர்கள் முன்கூட்டியே உணர்த்தினர். இப்புரட்சிக்குப் பத்தாண்டுகளுக்கு முன்பே "ஆவிக்னான் நங்கையர்" ஓவியத்தைப் பிக்காஸோ தீட்டினார். "இருபதாம் நூற்றாண்டின் உண்மை நிலவரத்திற்கும் 19ஆம் நூற்றாண்டு நிலவரத்திற்கும் சிறிதும் தொடர்பில்லை என்பதைப் பிக்காஸோ - பிக்காஸோ மட்டுமே - உணர்ந்து அதனைத் தமது ஓவியங்களில் சித்தரித்தார்' என்று ஜெர்ட்ரூடு ஸ்டெயின் அம்மையார் கூறியுள்ளார்.

மறுமலர்ச்சி யுகத்திற்கு காட்சியுருக் கொடுப்பதிலும் மனிதனையும் சமுதாயத்தையும் பற்றிப் புதிய கண்ணோட்டத்தில் சிந்திப்பதிலும் பிக்காஸோ முன்னோடியாகத் திகழ்ந்தார். இச் சிந்தனையை அவர் தம் ஓவியம் மூலம் பிரச்சாரம் செய்தார்.

"நற்சுவை நயப்பு நாசமாய்ப் போக!" என்று பிக்காஸோ ஒருமுறை உணர்ச்சிவேகத்தில் கூறினார். பின் இதனையே அவர் தமது வேதவாக்கியமாகவும் கொண்டார். "ஆவிக்னான் நங்கையர்" ஓவியத்தை அவர் தீட்டியது, கலை வரலாற்றிலேயே ஒரு புரட்சிகரமான செயலாகும். இது உருவாக்கியபோது காலங்காலமாய் மூடிமறைக்கப்பட்டிருந்த - அழகோ, அணி நலமோ, ஆடம்பரமோ, நாகரிகமோ இல்லாத - ஓர் அலங்கோல வாழ்க்கை அம்பலமாவதை அவர் கண்டார்.

"நற்சுவை நயப்பை" முதலில் புறக்கணித்தவர் பிக்காஸோதான். பின் வந்த தற்குறிப்பேற்றவாதிகளும், நுட்பவியலாளர்களும் , இயல்பு நவிற்சியாளர்களும், பிறரும் இவரைப் பின்பற்றினர். இந்தப் புறக்கணிப்பை அவர் பிரகடணம் செய்யவில்லை; கிளர்ச்சியிலும் இறங்கவில்லை. மாறாக அரும்பாடுபட்டு வ்ரைந்த "ஆவிக்னான் நங்கையர்" ஓவியம் வாயிலாக வெளிப்படுத்தினார். இந்நூற்றாண்டில், புரட்சி இயக்கங்களால் தோன்றிய எண்ணற்ற இலக்கியங்களை விட இந்த ஓவியம் மிகுந்த ஆவேசத்தையூட்டியுள்ளது.

"இவ்வுலகை அதிரடிக்கவும் அதனைத் தலைகீழாக மாற்றவும் - அதற்குப் புதிய கண்களைக் கொடுக்கவுமே பிக்காஸோ இங்கு பிறந்தார்" என்று ஸ்பானியக் கவிஞர் ர·பேல் ஆல்பர்டி எழுதினார். நாம் 'ஊன்றிவைக்கப்பட்டுள்ள' ஒரு புதிய உலகுடன் நாம் இணங்கிச்செல்கின்ற வரலாற்றில்தான் பிக்காஸோவின் வாழ்க்கை வரலாறும் அடங்கியிருக்கிறது.

ஸ்டெயின் அம்மையார் உருவப்படத்தை 1906இல் பிக்காஸோ வரைந்தார். அதற்காக அவரை 90 அமர்வுகளுக்கு வரவழைத்தார். ஓவியம் பூர்த்தியாகுந் தறுவாயில் , பிக்காஸோ பாரீஸ் சென்று விட்டார். பல மாதங்களுக்குப் பின் திரும்பியதும் அதனை முடித்தார். முடிவடைந்த ஓவியத்தைப் பார்த்த அம்மையாருக்கு அது தம் உருவந்தானா என்ற ஐயம் எழுந்தது. அவருக்கு, "கவலைப்படாதீர்கள். ஒருநாள் நீங்கள் இப்படித் தோன்றுவீர்கள்" என்று பிக்காஸோ ஆறுதல் கூறினாராம்.

பிக்காஸோ 1906இல் தீட்டிய மனித உருவங்கள் அனைத்திலும் காணப்படும் இவரது ஓயாத தேட்டாண்மையை ஒட்டுமொத்தமாக "ஆவிக்னான் நங்கையர்" ஓவியத்தில் காணலாம். இது பழமையை விலக்கிவிட்டு கூட்டு உருவங்களின் வடிவில் தோன்றிய புதிய சகாப்தத்திற்கு ஒளியேற்றி வைத்தது.

"ஒருநாள் இந்த உருவப்படத்தில் உள்ளதுபோல் நீங்கள் தோன்றுவீர்கள்" என்ரு 1906இல் பிக்காஸோ குறிப்பிட்ட அந்த நாளும் அடுத்த ஆண்டே வந்தது. அப்போது அவர் வரைந்த "நங்கையர்" ஓவியம் முந்திய மரபுகளையெல்லாம் தலைகீழாக மாற்றியது. இதில் அவர் தீட்டியிருந்த சோக உருவங்கள் அனைத்தும் பிக்காஸோவின் முகச்சாயலைக் கொண்டிருந்தன.  அதன்பின் அவர் வரைந்த எல்லா முகங்களிலுமே இந்த உருவங்களின் சாயலே அமைந்திருந்தன.

மனிதனின் முதுமை உருவத்தைத் திரித்துக் காட்ட விரும்பினார் என்றால் அதற்கு அவர் தமது சொந்த உருவத்தையே எடுத்துக் கொண்டார். எல்லா அவமதிப்புகளையும் தம் உருவத்திற்கே செய்தார். இந்த அவமதிப்புத்தான் பின்னர் ஒரு கழுவாயாக அமைந்து மனித வரலாற்றில் ஒரு புதிய சகாப்தத்தையே தோற்றுவித்தது. அப்போது, அவர் மேற்கொண்ட பெரும் சோதனைகளுக்கு, தாம் நன்கறிந்த தமக்கு மிகவும் அறிமுகமான, தம் சொந்த முகத்த்தை விடச் சிறாந்த முகத்தை வேறு எங்கு அவர் கண்டிருக்க முடியும்?

இதன்பின்பு, பழமையை வைராக்கியத்துடன் புறக்கணித்ததன் மூலமாகவும்  "ஆவிக்னான் நங்கையார்' ஓவியம் வாயிலாகவும் பழம் மரபுகளை உடைத்தெறிந்து , வருங்காலத்திற்கு தடையாக இருந்த முட்டுச்சுவரின் விரிசலை விரிவாக்கி வழியுண்டாக்கியதின் காரணமாகவும் , பிக்காஸோ தாமே வரலாறாகிவிட்டார். பிக்காஸோ தம் கடந்த காலத்தையும் எதிர் காலத்தையும் ஈவிரக்கமின்றி நோக்கினார். கரைபுரண்டு வரும் வரலாறு வெள்ளம் கண்டும் அவர் வெருளவில்லை. இறந்த காலக் கண்ணாடியைத் தூள்தூளாக்கிவிட்டு, அந்த உடைந்த கண்ணாடித்துண்டுகளைக் கொண்டே புதியதோர் எழிற்கோலத்தை - புதுமையான முகத்தைப் புனைந்தார். "ஒரு நாள் நீங்கள் இப்படித் தோன்றுவீர்கள்" என்று ஸ்டெயின் அம்மையாரிடம் அவர் சொன்னது , நம் அனைவருக்குங்கூடப் பொருந்தும். "ஆவிக்னான் நங்கையர்" ஓவியத்தில் காணும் கண்கவரும் கோணல் மாணல் கோடுகளுக்கடியில் அவர் படைத்த அம்சங்களில் நாம் ஒவ்வொருவருமே ஒத்திருக்கும் காலம் வரும்.

***

கட்டுரையாசிரியர்  சாண்டியாகோ ஆமோன் ஸ்பானிய கலை வரலாற்றறிஞர், திறனாய்வாளர், கவிஞர் , பிக்காஸோ (மாட்ரிட்) எனும் நூலின் ஆசிரியர். தியோட்டாவின் வாழ்க்கை வரலாறும் ஸ்பானியக் கலைஞர்களைப்பற்றிய பல ஆய்வுகளும் வெளியிட்டுள்ளார்.

***
Image (Les Demoiselles d'Avigno) courtesy :  Wikipedia

நன்றி : யுனெஸ்கோ கூரியர், இரா.நடராசன், மணவை முஸ்தபா

***


"மனிதனின் பழைய தோற்றத்தை அழிப்பதே நோக்கம்... பிக்காஸோ தமது தோற்றத்தை அழிப்பதிலே தொடங்கினார்". "ஆவிக்னான் நங்கையர்" ஓவிய நடு உருவங்களில் பிக்காஸோ தமது கூர் நோக்கையே பிரதிபலித்துள்ளார்.  மேலே : (1) 1955இல் பிக்காஸோவின் 74ஆம் வயதில் எடுத்த அவரது நிழற்படம். (2) ஓவியரின் தன்னோவியம் (1906), (3) "ஆவிக்னான் நங்கையர்" நடு உருவம் 1907.

***
தொடர்புடைய பதிவு : ‘குவர்னிக்கா’ – பிக்காஸோவின் ஒப்பாரிப் பாடல் 

No comments:

Post a Comment