Thursday, May 2, 2013

யோசிக்கத் தெரிந்தவனும் யோசிக்கவே தெரியாதவனும் - தாஜ்

''ஃபேஸ்புக்குல நேத்து சின்னதா ஒரு ஸ்டேட்டஸ் போட்டேன்யா... அத உன் பக்கத்துல - நாம ரெண்டுபேரும் சேர்ந்து இருக்கிற ஃபோட்டோவோட - போடு" என்று நம்ம கவிஞர்திலகம் உத்தரவிட்டார். நாங்கள் ஒருமுறை வடலூர் சென்றபோது எடுத்த ஃபோட்டோ சிக்கியது. ஏன், எதற்கு? என்றெல்லாம் யோசிக்காமல் உடனே பதிவிடுகிறேன். - ஆபிதீன்

யோசிக்கத் தெரிந்தவனும்
யோசிக்கவே தெரியாதவனும்

-தாஜ்

யோசி. தெரிந்தவன்:
மேலப்பட்டு டவுனுக்கு
இப்ப எப்படி போகலாம்?

யோசி. தெரியாதவன்:
... ஏன் தம்பி, வெளிநாடு போயிட்டு வந்தா...
பக்கத்து டவுனு வழியும் கூடவா
மறந்து போயிடும்?

யோசி. தெரிந்தவன்:
அப்படி இல்ல. கீழப்பட்டு
ஆத்துப் பாலம் கட்டி திறந்தாச்சுல?
அந்த வழியா போகலாம்ல?

யோசி. தெரியாதவன்:
மேலப்பட்டு டவுனுக்கு இங்க பஸ் ஏறி
அந்த டவுன்ல போய் இறங்கத்தான்
எனக்குத் தெரிஞ்சு சுழுவான வழி.

யோசி. தெரிந்தவன்:
என்னங்க இப்படி சொல்றீங்க?

யோசி. தெரியாதவன்:
பின்னே எப்படி சொல்றது!?
அப்படித்தானே...
இங்கே எல்லோரும்
பஸ்செ புடிச்சு போறாங்க வராங்க!

யோசி. தெரிந்தவன்:
நான் பைக்குலலெ போறேன்...
யோசி. தெரியாதவன்:
ஏன் தம்பி... பஸ்ஸு போறப் பாதையில
பைக்கு போகலாமே?
யாரும் ஒண்ணும் சொல்லமாட்டாங்கப்பா!

யோசி. தெரிந்தவன்:
இல்ல பெரிசு... நான் பைக்குல
கீழப்பட்டு வழியா
மேலப்பட்டு டவுனுக்கு போனா
மூணு கிலோ மீட்டர்
கம்மியாகுமுன்னு யோசிக்கிறேன்!

யோசி. தெரியாதவன்:
அது என்னமோ சரிதான்.
பாலம் கட்டியதுல
அந்தப் பக்கத்து
ரோடெல்லாம் பாழாயி...
குண்டும் குழியுமா கெடக்கு!

யோசி.தெரிந்தவன்:
பைக்குல ஓரம் பார்த்து போனா போச்சு?
அந்த ரோட்லதான்... இரண்டுப் பக்கமும்
எத்தனையெத்தனை மரங்கள்!!!
வலது பக்கத்துல ஆறு வேறு!
அதுல தண்ணீ ஓடுற
அழகல்லாம் பார்த்தா
மனசுப் பூத்துடாதா?

யோசி. தெரியாதவன்:
எல்லாம் சரிதான் தம்பி...
அந்த ஆற்றுல இப்ப தண்ணீ ஏது?

யோசி. தெரிந்தவன்:
போன தடவ
அந்தப் பக்கமா போனபோ...
தண்ணீ இருந்ததே?

யோசி. தெரியாதவன்:
அது மழைத்தண்ணீ.. தம்பி!
அத்து மணலக் கூட விட்டுவைக்காம
அள்ளிட்டு போயிட்டானுவலா....
இப்ப அது காஞ்சி கருவாடா கிடக்கு.

யோசி. தெரிந்தவன்:
ஓ... அப்படியா?

யோசி. தெரியாதவன்:
என்ன ஓ.. அப்படியா?
ஆத்துலயெல்லாம் நிறைக்க
தண்ணீ ஓடினதெல்லாம் அந்தக் காலம்!
நீ பொறக்காததுக்கு முன்னால!
கிட்டத்தட்ட
நாற்பது வருஷ சங்கதியது!

யோசி. தெரிந்தவன்:
சரி... பெரிசு..
மரங்களாவது இருக்குமுல்ல
அதுங்க அழகெ...
அந்த கம்பீரத்தெ பார்த்தப்படிக்காவது
டவுனுக்கு போறேனே.
மூணு கிலோ மீட்டர் வேறு மிச்சம்!
வரட்டான்....!

யோசி. தெரியாதவன்:
தம்பி...
இன்னொரு செய்தி...
கீழப்பட்டுலென்னு மேலப்பட்டுக்கு
போற வழியில
ஆளு இல்லாத ரயில்வே கேட்
இருக்குத் தெரியுமுல்ல?

யோசி. தெரிந்தவன்:
ஆமாம் இருக்கு.
அதுக்கென்ன?
யோசி. தெரியாதவன்:
அதுல பைக் போறது கஷ்டம்.
இடைவெளியில பைக் சிக்கிக்கிச்சுன்னா...
தூக்கிவிட ஆளு வேற தேவையாபூடும்!
ஜாக்கிரதை.

யோசி. தெரிந்தவன்:
அதெல்லாம் நம்ம வண்டிக்கிட்ட நடக்காது.
பஸ்ட் கீரெ போட்டா
சல்லுன்னு கிளம்பிடும்.
வரேன் பெரிசு.

*
போற வழியில்
பெரிச யோசிக்கவே தெரியாதவர்கள் என்றும்
பயம் காட்டுவதே இவர்களது வேலைன்னும்
சபீத்துக் கொண்டே போனான்
யோசிக்கத் தெரிந்த அந்த இளைஞன்.
*

மறுநாளைக்கு...
பெரிசு
அந்த இளைஞனைப்
பார்க்க நேர்ந்தபோது...
மேலப்பட்டு டவுனுக்கு
பஸ்ஏற நின்றான்.
காலில்
பெரிய அளவில்
மாவுக்கட்டு போடப்பட்டு இருந்தது

***
நன்றி : நண்பர் தாஜ்| satajdeen@gmail.com

4 comments:

  1. நன்றி ஆபிதீன்.

    ReplyDelete
  2. IS THIS ENINTHA KAIKAL?

    ReplyDelete
  3. ஆமா.....யோசிக்கிறதுன்னா என்ன?
    இதைப்படிச்சதுல அது மறந்துருச்சு...������

    ReplyDelete
  4. காலையில் ஆபீஸ் போறதுக்கு சாயந்தரம் போலாமா ராத்திரி போலாமான்னு முடிவெடுக்கும் processதான் யோசிப்பது. - மக்குப்பீடியா :)

    ReplyDelete