Monday, April 15, 2013

அப்பன்மார்களும் அண்ணன்மார்களும் குதிப்பதில் அர்த்தம் என்ன இருக்கிறது?

பிரபஞ்சன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பான ‘தாழப் பறக்காத பரத்தையர் கொடி’ என்ற நூலிலிருந்து... (நன்றி : , வானவில் - இதழ் 27 )
 
"ஒரு அரவாணி உருவாவது என்பது பற்றிய விஞ்ஞானத் தகவல்கள் பல புதிர்களைக் கட்டவிழ்க்கின்றன. மகாராசன் தொகுத்த ‘அரவாணிகள்’ என்னும் மற்றும் ஒரு முக்கிய ஆவணமான நூலில் டாக்டர் சாலினி நமக்குப்  புதிய பல தகவல்களைச் சொல்கிறார். இந்தப் பூலோகத்தில் பிறக்கும் எல்லா ஜீவராசியும் ‘ஜனிக்கும்’ அந்தக் கணத்தில் பெண்பாலாய்த்தான் ஜனிக்கிறது. அந்த உயிர்க்கரு பெண்ணாகவே இருக்கிறது. அந்தக் கருவின் உடம்பில் ஒற்றை Y குரோமோசோம் வீற்றிருந்தால், அது கருவான ஆறாம் வாரத்தில் டெஸ்டோஸ்டீரோன் எனும் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. அந்த டெஸ்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன் அந்தக் கருவின் உடம்பு முழுக்கப் பரவி எல்லா செல்களையும் ‘ஆண்மைப்படுத்தி’ விடுகிறது. ஆறு வாரம் வளர முலைகள், மூளை நரம்புகள், கர்ப்பப்பையாக பிறகு வளரப்போகும் முலேரியன் குழாய்கள் என்று முழுவதுமாகப் பெண்பாலாய் இருந்த அந்த சிசு, டெஸ்டோஸ்டீரோனின் உபயத்தால் மெல்ல மெல்ல மாறுகிறது. அதன் இனப்பெருக்க உறுப்புகள் ஆண்மைப்படுத்தப்படுவதால் விரைப்புறுப்பு, விந்தகம் மாதிரியான புதுப்புது உறுப்புகள் உருவாகின்றன. அதேபோல, சிசுவின் மூளை நரம்புகளும் மாற்றி அமைக்கப்படுவதால் ‘ஆண்’ என்கிற உடல் உருவம் மூளையில் பதிகிறது. இதனை ‘பாடி இமேஜ்’ என்கிறோம். நம் எல்லோரின் மூளையிலும் நமது ஒவ்வொரு புற உறுப்பிற்கான உருவகமும் பதிந்திருக்கிறது.
 
‘நான் ஆம்பிளையாக்கும்’ என்று மீசை முறுக்கும் சண்டியர்கள் எல்லோருமே முதல் ஆறு வாரங்கள் பெண்ணாக இருந்து, ‘பெண்மயம்’ கருணையினால் ஆண்களாகப் பிழைத்தவர்கள்தான் என்பதை அறியும் போது மகிழ்ச்சி தோன்றுகிறது. அதோடு, மரபணுக்கள் கர்ப்பப்பைக்குள் செய்த யுத்தமும் மூன்றாம் பால் தோன்றக் காரணமாகிறது என்பது விஞ்ஞானம். இதற்கு அப்பன்மார்களும் அண்ணன்மார்களும் குதிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?”
***
நன்றி: பிரபஞ்சன், உயிர்மை

No comments:

Post a Comment