Saturday, January 26, 2013

வண்டிச் சில்லுக்குக் காத்துப் பத்தாது!

புலவர் மாமாவின்  இன்னொரு வேடிக்கை - ஹனீபாக்காவின் எழுத்தில். ஓவியம் வரைந்தவர் -ஆதிமூலத்தை விரும்பும்  இளைஞர் நளீம். ஆதிமூலத்தின் கோட்டோவியங்களின் பெரும் தொகுப்பு நூல் அவரிடம் இருக்கிறதாம். அமுக்கிட வேண்டியதுதான்! . ’இப்ப வரைந்திருப்பது யாரை? ’கம்பின்’ சைஸையும் அதைப் பிடித்திருக்கும் விதத்தையும் பார்த்தால் நம்ம காக்கா மாதிரி இருக்கிறதே என்று கேட்டேன் . அவரை இப்படியெல்லாம் கிண்டல் செய்யக்கூடாது என்று உத்தரவு வந்துவிட்டதால் அதற்கு மேல் கேட்கவும் முடியாது.. ‘சாச்சா இளமையில் செய்ததையெல்லாம் என்னாலோ, அரபாத்தாலோ செய்யமுடியாமல் போயிட்டு’ என்று சொல்லும் வருத்தப்படும் நளீம் , புலவர் மாமாவைத்தான் வரைந்தாராம் -  ஒரு நரைத்த, கறுத்த முதியவர் என்பது மட்டும் நினைவில் இருப்பதால். அவருக்கு என் ஸ்பெஷல் நன்றி. - ஆபிதீன்

***



ஊரிலிருந்து பத்து மைல்களுக்கு அப்பால் புலவர் மாமாவின் வயல் வாடி. ஒரு நாள் கருக்கலில் மாமா வாடியிலிருந்து ஊருக்குக் கிளம்பினார். வரும் வழியில் சைக்கிள் முன்ரோதைக்குக் காத்துப் போய் விட்டது. எங்கள் வயல் நிலங்களில் நாலாம் முச்சந்தி பிரபல்யமானது. மாலை வேளையில் ரொம்பக் களைகட்டும். போடிமார்களும் கமக்காரர்களும் கூடும் சிறியதோர் தேநீர்க்கடை அங்குண்டு. சைக்கிளை உருட்டிக் கொண்டு வந்த மாமா கடையின் சுவரில் சாய்த்து விட்டு ஒரு பிளேன் ரீ குடித்துக் கொண்டிருக்கும் பொழுது, மர்ஹூம் அபூபக்கர் ஹாஜியார் அவருடைய ட்ரக்டர் வண்டியில் வாடிச் சாமான்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தார். ட்ரக்டருக்குக் கை போட்ட மாமா என்னையும் எனது சைக்கிளையும் ஏற்றிக் கொள்ளுங்கள் என்றார். போடியாரோ பெருமனது கொண்டு, "மாமா பெட்டியில் இடமில்லை" என்று சொன்னார்.

ஒரு வருடம் கழித்து, அதே இடத்தில் மாமாவின் வண்டில் ஊருக்குப் போக வந்து கொண்டிருந்தது. ஹோட்டலின் முன்னால் ட்ரக்டரின் பென்னம்பெரிய டயருடன் மர்ஹூம் அபூபக்கர் ஹாஜியார் நின்று கொண்டிருந்தார். மாமாவிடம் சென்று மிகப் பவ்யமாக, "மாமா, டயர் உடைந்து போய் விட்டது. எப்படியாவது ஊருக்குக் கொண்டு வந்து தாருங்கள். அதற்குரிய சம்பளத்தை நான் தருவேன்" என்றார்.

வண்டிலை விட்டுக் கீழே இறங்கிய மாமா, மெதுவாக நடந்து போய் வண்டிச் சில்லை பெருவிரலைக் கொண்டு நசித்துப் பார்க்கிறார். "ஹாஜியார், மனம் பொறுக்கணும், சில்லுக்குக் காத்துப் பத்தாது" என்றார்.

மாமாவின் காளை விட்டு வண்டில் ஜல்ஜல்லென்று அந்த வீதியால் போவதை போடியார் வெறித்துக் கொண்டு நின்றார்.

**
நன்றி : எஸ்.எல்.எம். ஹனிபா அவர்கள்

3 comments:

  1. ஹனிபாக்கா...
    சங்கதி ரொம்ப சின்னதா இருக்கே?
    உடல் நலம் தேவலாம்தானே?
    -தாஜ்

    ReplyDelete
    Replies
    1. ஹனிபாக்காவின் ‘சங்கதி’ சின்னதா?!

      Delete
    2. ஹாஸ்பெட்டல்
      போய் திரும்பியதால்..
      சங்கதி இப்படி
      சின்னதாகிவிட்டதோண்ணு
      நினைச்சிட்டேன்.
      மற்றப்படிக்கு
      அவருக்கென்ன?
      சளைத்தவராகவோ குறைந்தவராகவோ கருத முடியுமாயென்ன?

      Delete