Thursday, January 24, 2013

மனச்சுமை இறக்கிய மாநபி

மணவை முஸ்தபா அவர்கள் - 1998இல் - 'நம் பெருமானார்' பற்றி துபாயில் ஆற்றிய சொற்பொழிவிலிருந்து, நன்றியுடன்..

***

மற்றவர்களின் கஷ்ட நஷ்டங்களில் பங்கேற்பது மட்டுமல்ல, அவர்களின் மனச் சுமையை இறக்கிவைக்க சிறிதுநேர சுமைதாங்கியாக மாறுவதும் ஓர் உயர்ந்த மனித நேயப் பண்பாகும். இதனை விளக்கும் சம்பவங்கள் பெருமானார் பெருவாழ்வில் காணலாமாயினும் அவற்றில் ஒரு சிறு சம்பவத்தை உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

வயது முதிர்ந்த மூதாட்டியொருவர் குடும்பச் சுமைகளால் மிகவும் துவண்டு போய் நின்றார். தன் மனக் கவலைகளை யாரிடமாவது சிறிது நேரம் இறக்கிவைத்து இளளப்பாற விரும்பினார். இவரது மனக் கவலைகளைக் காதுகொடுத்துக் கேட்க யாருமே தயாராக இல்லை. இதனால் மன பார அழுத்தத்தால் மிகவும் சோர்ந்து போயிருந்த நேரத்தில் அவ்வழியாகப் பெருமானார் (சல்) அவர்கள் வந்துகொண்டிருந்தார்கள். அவரது நல்லியல்புகளை நண்குணர்ந்திருந்த மூதாட்டி, அவரையே தன் கவலைகளை - மன உளைச்சல்களை - இறக்கி வைக்க ஏற்றதொரு சுமைதாங்கியாகக் கருதி அவரிடம் தன் கவலைகளை விவரிக்கத் தொடங்கினார். வழி நெடுக அவைகளைப் பொறுமையோடு கேட்டதோடு அப்பிரச்சனை, கவலைகளுக்குத் தீர்வும் சொல்லிக்கொண்டு வந்தார். நீண்ட நேரம் தன் மனச்சங்கடங்களைப் பொறுமையாகக் கேட்டு தீர்வு சொன்ன அண்ணலாரின் செயல் அம் மூதாட்டிக்குப் பெரும் ஆறுதலாகவும் தேறுதலாகவும் இருந்தது. மனச் சுமைகளை இறக்கி வைத்தவராக, லேசான மனதுடன் நன்றி கூறிச் சென்றார்.

இதைக் கண்ணுற்ற நபித் தோழர்கள் 'இம் மூதாட்டியின் புலம்பல்களுக்கு இவ்வளவு பொறுமையோடு பதில் கூற வேண்டுமா?' என்றபோது, 'வயதான அம் மூதாட்டி தன் மனச்சுமைகளை இறக்கிவைக்கத் துடிக்கின்றபோது, அவள் சகோதரனாகிய நான் ஏன் இரு கரமேந்தி வாங்கிக் கொள்ளக் கூடாது? நம்மால் பிறருக்கு மகிழ்வும் மனச்சாந்தியும் தர முடியும் என்றால் நான் ஏன் அதை அவர்கட்கு வழங்கக் கூடாது?' எனக் கூறி மனித நேயத்தின் மாண்பைச் சுட்டிக் காட்டி, பின்பற்றத் தூண்டினார்கள்.

பிறருக்குத் துணையாக, ஆதரவாக இருப்பது மட்டுமே மனித நேயமாகிவிடாது. முஸ்லிமாக இருந்தாலும் முஸ்லிமல்லாதவராக இருந்தாலும் எந்நிலையிலும் யாருடைய மனமும் புண்படாமல் நடந்துகொள்வதும் மனிதநேயத்தின்பாற்பட்டதுதான் என்பது நபி வழியாகும்.

**

ஆபிதீன் குறிப்பு : அமீரகத்தில் 'விஸ்வரூபம்' சினிமா தடைசெய்யப்படதற்காக சார்ஜாவிலுள்ள 'இளைஞர்கள்' சிலர் பெரும் மனச்சுமையோடு இருக்கிறார்கள். அவர்களுக்கு மனச்சாந்தி தர என்னால் இயலாது என்பதை மனிதநேயமின்றி தெரிவித்துக்கொள்கிறேன்!

**

'எம்மா பெரிதான பிரச்சினைகள் என்றாலும் ஏற்புறத் தீர்த்த ஒளியை, எம்பரம் ஒளியான இறசூல் முஹம்மதை ஏத்திடு மோக னாநீ!' - வி.எம். இஸ்மாயிலின் நபிப்பத்திலிருந்து ஒரு முத்து.

1 comment:

  1. ['எம்மா பெரிதான பிரச்சினைகள் என்றாலும் ஏற்புறத் தீர்த்த ஒளியை, எம்பரம் ஒளியான இறசூல் முஹம்மதை ஏத்திடு மோக னாநீ!']

    நபியை அதுவும் அல்லாஹ்வின் ரசூலை ஒளி என்று எப்படி கூறலாம்? அது மட்டுமல்லாமல் மோகனா என்ற இந்துப் பெயரை எப்படி சொல்லலாம்? மேலும் முஹம்மது என்று மரியாதைக் குறைவாக சொல்லப்பட்டிருக்கிறது, முஹம்மது நபி(சல்)அவர்கள் என்று சொல்லவேண்டும் என்று நோட்டீஸ் அடித்து வெள்ளிக்கிழமை ஜும்ஆவில் நம்ம தளகீது சமாத்து வினியோகம் செய்யாமல் இருப்பார்கள் என்று என்ன நிச்சயம்?

    ReplyDelete