Thursday, December 6, 2012

வாப்பாவின் மடி - ஹெச்.ஜி.ரசூலின் கவிதை

’கனவில் வந்த அப்பா’ என்ற தலைப்பில் நண்பர் தாஜ் முன்பு ஒன்று எழுதியிருந்தார். பிடித்த கவிதை அது. வாப்பாவைப் பற்றி யார் எழுதினாலும் எனக்குப் பிடிக்கும். இந்தக் கவிதை நண்பர் ஹெச்.ஜி. ரசூல் அவருடைய ஃபேஸ்புக்கில் இட்டிருந்தது. இன்றுதான் பார்த்தேன். ஒரு மாதிரியாகிவிட்டது மனசு... பகிர்கிறேன், நன்றியோடு... - ஆபிதீன்

****


வாப்பாவின் மடி - ஹெச்.ஜி.ரசூல்

எனக்குத் தொப்புள் கொடியறுத்த
அம்மச்சியை இன்றுவரை பார்த்த்தில்லை.
கர்ப்ப பையிலிருந்து கிழித்தெடுக்கப்பட்டு
பூமியின் முதல்காற்றை சுவாசித்தபோது
என் காதுகளில் பாங்கு இகாமத் சொன்ன
எலப்பையின்குரல் ஓர்மையில் இல்லை.
சுட்டுவிரலால்
சேனைத்தண்ணி தொட்டுவைத்தபோது
அந்த முதல்ருசி எப்படி இருந்திருக்கும்..
நோட்டுப் புத்தகங்களின் பக்கங்களில்
பாதுகாத்து வைத்திருந்த மயிலிறகு
இன்னமும் குட்டி போடவில்லை.
நாலெழுத்து படிக்கவும்
நாலணா சம்பாதிக்கவும் சொல்லித்தந்த வாப்பா
ஒரு துறவி போல
உறவுகடந்து கடல்கடந்து
கண்ணுக்கெட்டாத தொலைதூரத்தில்
என்றேனும் ஒரு நாள்
வாப்பாவின் மடியில் தலைவைத்து
ஒரு இரவு முழுதும் தூங்க வேண்டும்.

***

போனஸ் : இன்னொரு கவிதை...

தனது அறைக்கு தனது வந்திருந்த வாப்பா - ஹெச்.ஜி.ரசூல்

எல்லோரும் தூங்கிக் கொண்டிருந்த
நள்ளிரவில்அது நடந்தது.
சுவரில் மாட்டப்பட்டிருந்த
சட்டகத்தின் கண்ணாடி வழியாக
புகைப்படத்திலிருந்த வாப்பா மெதுவாக வெளியேறி
தனது அறைக்கு வந்திருந்தார்.

அறுபத்தாறுஆண்டுகள் தான் தூங்கிய கட்டிலில்
மூத்தமகன் தூங்கிக் கொண்டிருந்தான்.
அவன்மீதுகாலைத்தூக்கிப் போட்டு
பேத்தியும் படுத்திருந்தாள்.
பேத்தி நிரம்ப பாசம் வைத்திருந்தவள்
பிறரின் அந்தரங்கமான அறையில்
அத்துமீறி நுழைவது என்னவோ
வாப்பாவின் மனசுக்கு பிடிக்கவில்லை.
தனது மனைவியை அந்த அறையில்
தேடிவந்தவர் என்பதால் அதிகமொன்றும்
குற்ற உணர்ச்சி ஏற்படவில்லை

பீரோ பூட்டப்படாமல் திறந்திருந்தது.
கதவைத் திறந்துபார்த்தபோது
தான்முன்பு போட்டிருந்த வேட்டியும் சட்டையும்
கீழடுக்கு மூலையில்
அடுக்கு குலைய வைக்கப்பட்டிருந்தது.
துவைத்து வெளுத்திருந்தாலும் அதில்
தன்வியர்வையின்மணம் தங்கியிருந்ததை
அவரால் உணர முடிந்தது.
அறையின் ஒவ்வொரு பொருட்களும்
இடம் மாறிப் போயிருந்தன.

தானிருந்த வீடுபோல்தெரியவில்லை
தன் அனக்கம் கேட்டும்
உறக்கத்திலிருந்து விழித்து தன்னை யாரும்
ஏறிட்டு பார்க்காத வருத்தத்தில்
விரக்திமேலிட நின்ற வாப்பா
புகைப்படத்திற்குள்
திரும்பிச் செல்லமுயற்சித்தபோது
உள்ளே நுழையமுடியவில்லை.
மின்சார முள்வேலி போடப்பட்டிருந்தது.
வெளியேறிய வாப்பா
இப்போது வெளியேற்றப்பட்டுவிட்டார்.


***

No comments:

Post a Comment