Monday, November 19, 2012

ஓவியர் ஜான் மீரோ - கவிஞர் சுகுமாரன்


“The painting rises from the brushstrokes as a poem rises from the words. The meaning comes later.” - John Miro

***
மதிப்பிற்குரிய பிரம்மராஜனின்  'மீட்சி' சிற்றிதழில் (மார்ச்-ஏப்ரல், 1984) நண்பர் சுகுமாரன் எழுதிய கட்டுரையை நன்றியுடன் பதிவிடுகிறேன். 'திசைகளும் தடங்களும்' தொகுப்பில் இந்தக் கட்டுரை இடம் பெற்றுள்ளது. எஸ்.வி. ராஜதுரை அவர்களுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்ட தொகுப்பு இது. வாசிப்பின் புதிய எல்லைகளை அறியத் தூண்டுதலாக இருந்திருக்கிறார் எஸ்.வி.ஆர் - நமக்கு சுகுமார் மாதிரி. ''இலக்கியமும் கலையும் இருத்தலியல் அனுபவங்கள். இருப்பிலிருந்து வாழ்வு நோக்கி உயர மனித மனம் கொள்ளும் வேட்கையின் வினையும் எதிர்வினைகளும்தான் அவற்றின் அடிப்படை' என்பார் சுகுமார் , தன் முன்னுரையில். இந்தத் தொகுப்பு பற்றி நண்பர் பி.கே.எஸ் எழுதிய விமர்சனம் காண இங்கே க்ளிக் செய்யுங்கள். ஏற்கனவே இந்தத் தொகுப்பிலிருந்து எடுத்த வான்காவின் கடிதங்களை நண்பர்கள் படித்திருக்கலாம்.  'முயற்சிகளின் முடிவில் மீரோ , மீரோவைக் கண்டடைந்தார்' என்று ஆன்மீகமாகச் சொல்லும் சுகுமாரனை இதிலும் காணலாம். கண்டடையுங்கள் - நேற்று கூகில்+-ல் மீரோவின் புகைப்படத்தை - பெயரைக் குறிப்பிடாமல் - போட்டு,  நாளை இவர் பற்றிய கட்டுரை வெளியாகும் என்று தமாஷ் செய்த சில நொடிகளில் ஐஃபோன் உதவியுடன் சித்தார்த்தும் ( 'ஐஃபோன்ல இருக்கற கூகுள் நிரல்ல கூகுள் காகில்ஸ்னு ஒரு விஷயம் இருக்கு. அத போட்டதும், எத தேடனும்? படம் பிடின்னு காமராவ ஆன் செஞ்சிது. இந்த புகைப்படத்த குறிப்பா அந்த முகத்த படம் பிடிச்சேன். சரியா 2 நொடிகள். பேர கொண்டு வந்து வந்துருச்சு!') images.google.com-ல் தேடி சென்ஷியும் கண்டடைந்தார்களே... அந்த மாதிரி..! - ஆபிதீன்

**
ஜான் மீரோ

சுகுமாரன்

யெஹான் மீரோ (John Miro 1893-1984) சென்ற ஜனவரியில் காலமானார். ஓவியக் கலையில் நவீன யுகத்தை நிறுவி வளர்ந்த முன்னோடிகளில் கடைசி நபரும் காட்சியரங்கிலிருந்து விடைபெற்றுக் கொண்டுவிட்டார்.

1893இல் ஸ்பானிய பிரதேசமொன்றில் பிறந்தார். கிராமிய வாழ்வின் உயிர்த்துடிப்புள்ள மனப்படிமங்களுடன் 1919இல் பாரிசில் குடியேறினார். மனிதனின் இளமை, மரபு ரீதியான பழக்கங்கள், புராணிகங்கள் மீரோவின் மூலமாக ஓவியங்களில் இடம்பெற்றன.

மீரோவின் படைப்புகள் அசாதாரண எளிமையும், அதேசமயம் நினைவுகளைத் தொந்தரவு செய்யக்கூடிய தீவிரத் தன்மையும் கொண்டவை. மீரோவின் இந்தத் திறன் ·ப்ராய்ட், யுங் ஆகிய உளவியலாளர்களின் சித்தாந்தங்களால் தூண்டப் பெற்று செயல்பட்டு வந்த அமெரிக்க ஓவியர்களான ஜாக்ஸன் பொல்லாக், ஆர்ஷெல் கார்க்கி, ராபர்ட்மதர்வெல் போன்றவர்களின் இயக்கத்தைத் திசை திருப்பியது. கட்டற்ற வர்ணப் பரப்புகளின் மீது புராணிக விஷயங்களை இணைத்து நவீனத்துவமான மதிப்பீடுகளை உருவாக்கும் முறையை இந்த ஓவியர்கள் மீரோவிடமிருந்து கற்றுக்கொண்டு பரவலாக்கினார்கள்.

பாரிஸை அடைந்த மீரோவின் ஆரம்பகாலப் படைப்புகளில் பிந்திய இம்ப்ரஷனிஸ ஓவியங்களின் செல்வாக்கு இருந்தது. தொடர்ச்சியான சோதனை முயற்சிகளின் முடிவில் மீரோ மீரோவைக் கண்டடைந்தார். மீரோ எந்தக் குழுவிலும் சாராமல் தணித்து நின்றார். எனினும் சர்ரியலிஸம் என்னும் இயக்கத்திற்கு மீரோ தேவைப்பட்டார். பெரும்பாலும் கவிஞர்களே நிறைந்திருந்த சர்ரியலிஸ இயக்கத்திற்கு மீரோவின் கான்வாசுகள் புதிய பரிமாணத்தை அளித்தன. 1926இல் முதலாவது சர்ரியலிஸ ஓவியக் கண்காட்சியில் மீரோ பங்கேற்றார். 'சர்ரியலிஸ்டுகளில் மிகப் பெரிய சர்ரியலிஸ்ட்' என்று சிறப்பிக்கவும்பட்டார்.

1930களில் இடைப்பகுதியில் மீரோவின் ஓவிய உலகம் மாறுதலடைந்தது. அடர்ந்த நிறங்களும் ராட்சச வடிவங்களும் அவரது திரைகளில் இடம்பெற்றன. தனது தாய்நாடாகிய ஸ்பெயின் மீது பாசிஸம் செலுத்திய ஆக்கிரமிப்பை வெளிப்படுத்துவதாக அவை அமைந்தன.

நிறங்களில் வெற்றுப் பரப்பில் நிறைய சிறிய உருவங்களைப் பரவவிட்ட பாணியை மீரோவின் படைப்புகளில் காணலாம். வயது ஆக ஆக மீரோவின் பாணி மாற்றமடைந்து வந்தது. பிற்கால ஓவியங்கள், வெறும் நிறப்பரப்பில் ஒற்றை உருவங்கள் கொண்டவையாக இருந்து, கடைசிக்கட்ட ஓவியங்கள் விரிந்த நிறப்பரப்பில் தீர்க்கமான தூரிகை வீச்சுக்களை மட்டுமே கொண்டிருந்தன.

யெஹான் மீரோவை, பாப்லோ பிக்காஸோவுடன் ஒப்பிடலாம். பிக்காஸோவைப் போலவே மீரோவும் ஸ்பானிய மரபிலிருந்து தோன்றியவர். எந்தக் குழுவிலும் அடைபடாமல் சுதந்திரமாகச் செயல்பட்டவர். தொடர்ந்து சோதனைகளை மேற்கொண்டவர். சமகாலக் கலைஞர்களிடம் வலுவான செல்வாக்குச் செலுத்தியவர். கிராபிக்ஸ், எட்சிங், சுவர் ஓவியங்கள், சிற்பம் என்று பல சாதனைங்களையும் வெளிப்பாட்டுக்குப் பயன்படுத்திக்கொண்டவர். பிக்காஸோவைப் போலவே தொண்ணூறுகளின் தொடக்க வயதில் இறந்தும் போனார்.

பிக்காஸோவுக்குக் கிடைத்த உலகளாவிய அங்கீகாரமும், புகழும் மீரோ என்ற சர்ரியலிஸ்டை அணுகவில்லை. எனினும், நவீன ஓவியக் கலைக்கு உயிர் கொடுத்ததில் யெஹொன் மீரோ வகித்த இடம் பிக்காஸோவுக்குச் சமமானது.

***
நன்றி : சுகுமாரன், மீட்சி, அன்னம் பதிப்பகம்
***

No comments:

Post a Comment