Saturday, November 3, 2012

சூஃபி ஞானி கச்சிப்பிள்ளையம்மாள்


’இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்' தந்த அப்துற்-றஹீம் அவர்களின் 'முஸ்லிம் தமிழ்ப் புலவர்கள்' நூலிலிருந்து ( இரண்டாம் பதிப்பு / 1980) பதிவிடுகிறேன். கீழக்கரை செய்யிது ஆசியா உம்மாள் , தென்காசி இறசூல்பீவியைத் தொடர்ந்து இப்போது  இளையான்குடி சூஃபி ஞானி கச்சிப்பிள்ளையம்மாள். நாகூர் சூஃபிமா அஸ்மா அவர்களைப் பற்றி , இன்ஷா அல்லாஹ், பிறகு எழுதுகிறேன் ;-) - ஆபிதீன்

**

சூஃபி ஞானி கச்சிப்பிள்ளையம்மாள்

இஸ்லாம் ஈன்ற பெண் புலவர் ஞானிகளில் இளையான்குடியில் தோன்றிய கச்சிப்பிள்ளையம்மாளும் ஒருவர். அவரின் தந்தையின் பெயர் லுக்மான். அவரின் சகோதரர் முஹம்மது மீறான் மஸ்தான் திருப்பரங்குன்றம் மலைமீது அடங்கப்பட்டிருக்கும் சிக்கந்தர் வலி அவர்கள் மீது அன்பு கொண்டவர் என்று கூறப்படுகிறது. கச்சியப்பிள்ளையம்மாள் பாடிய பாடல்கள் 'மெய்ஞ்ஞானமாலை' என்ற பெயருடன் கி.பி. 1918-ம் ஆண்டில் அச்சாகி 
வெளிவந்திருக்கின்றன.அதில் மெய்ஞ்ஞானமாலை, மெய்ஞ்ஞானக்குறவஞ்சி, மெய்ஞ்ஞான ஊஞ்சல், மெய்ஞ்ஞானக்கும்மி ஆகியவை அடங்கியுள்ளன. அதில் அவர் தம்மை 'கல்வி அறிவில்லாத கச்சிப்பிள்ளளை' என்று அடக்கமாகக் குறிப்பிட்டிருந்த போதினும் அவருடைய நூலுக்கு சாற்றுக்கவி வழங்கிய அவருடைய 
சமகாலத்துப் புலவர்கள் அவருடைய மாண்பினைப் பெரிதும் போற்றிப் புகழ்கின்றனர். புலவர் சீனியாவல் ராவுத்தரோ "நங்கை கச்சிப்பிள்ளையம்மாள் பாடல் மாயைத் துயிலகல மெய்ஞ்ஞான முறை புகட்டி வேதாந்தச் சோதிகாட்டக் கயிலுலவும் நவநீதமாகும்" என்று புகழ்கின்றார். பண்டித சையிது அப்துல்காதிரோ "அன்னையிலும் 
தயவு அதிகமுள்ள கச்சிப்பிள்ளையம்மாள் அன்புகூர்ந்து தன்னையும் தன் தலைவனையும் அறிவதற்கு முக்கிய சாதனமாய்ச் சாற்றும் இன்னமுத மனையதிரு மெய்ஞ்ஞான மாலையைப்போல் யார் சொல்வாரே" என்று அவரின் புகழ்பாடி அறைகூவல் விடுக்கின்றார்.

உண்மையிலேயே கச்சிபிள்ளையம்மாள் அத்துணை புகழுக்குரியவரா என்றால், 'ஆம்' என்று ஒரே சொல்லில் நம்மால் பதில் கூறிவிட இயலும்? காரணம், அவர் பெண்ணாய்ப் பிறந்தபோதினும் அழகிய கருத்துக்களை 
விழுமிய சொற்களால் எடுத்துரைப்பதேயாகும். எளிமை, எளிமை என்று கூறிக்கொண்டு வெள்ளைக்கவிதை பாடாது திண்மையான சொற்களால் தன்மையான, தகுதி வாய்ந்த கவிதை பாடும் அவர் எடுத்த எடுப்பிலேயே எவ்வாறு பாடுகின்றார் என்பதற்கு மெய்ஞ்ஞான மாலையின் காப்பு வெண்பாவே சிறந்த சான்றாகும். அவர் அதில் தம்முடைய மெய்ஞ்ஞான மாலையை அறுக்கும் வாள் என்று கூறியிருப்பது படித்து ரசிக்கத் தக்கதாகும். அந்த வெண்பா வருமாறு :

அல்லாஹு என்றே அகிலமெல்லாம் போற்றுகின்ற
வல்லானை எந்நாளும் வாழ்த்துவமே - பொல்லாத
அஞ்ஞான மாயை அறுத்தொதுக்கும் வாளனைய
மெய்ஞ்ஞான மாலைசொல்ல வே.

இவ்வாறு இறைவனைப் புகழ்ந்து அவனின் பேரருள் துணை வேண்டித் தம் நூலைத் துவக்கும் அவர் மெய்ஞ்ஞானக் குறவஞ்சியில் இறைவனைப் பாடும் பாடல்கள் அற்புதமாக உள்ளன. அவர் பாடுகின்றார்:

அண்டத்துக் கப்பால் அறிந்ததைச் சொல்லடி சிங்கி - அந்த
ஆகாயத்துள்ளே அரண்மனை தோன்றுமோ சிங்கா
அரண்மனைக்குள்ளிருந்(து) ஆளுவதாரடி சிங்கி- அங்கே
அருவுருவில்லாத அரசன் ஒருவனே சிங்கா
ஆளும் மகராஜன் அங்கே இருப்பானோ சிங்கி - அவன்
அங்கிமிருப்பதோ டெங்கும் பராபரம் சிங்கா
எங்கும் பராபரம் என்றான தென்னடி சிங்கி -அது
தங்கிய சோதியின் தன்மய மாகுமே சிங்கா
தன்மய மாகிய சங்கதி என்னடி சிங்கி -அது
தானே தானே நின்று தம்பிரானாச்சுது சிங்கா
அந்தப் பிரானைக் கண்(டு) அப்புறம் என்னடி சிங்கி - இனி
அப்பரத்துக்(கு) அப்பால் ஆருமில்லையடா சிங்கா
ஆனால் ஒருவரும் அவ்விடத்தில் இல்லையோ சிங்கி - அங்கு
தானா தனாதந்த னாதாந்த நாதமே சிங்கா

இவ்வாறு பாடும் அவர் ஞானிகளின் மரபுப்படி ஜீவாத்மாவை காதலானாகவும் பரமாத்மாவைக் காதலியாகவும் உருவகப் படுத்திப் பாடுகின்றார்.

உச்சித மூலத்திலே புவி
மெச்சிய வாலையடி அம்மணி
மெச்சிய வாலையடி

உச்சித ஊஞ்சலிலே அவள்
உட்கார்ந்ததைப் பாரடி - அம்மணி
உட்கார்ந்ததைப் பாரடி

நானாகித் தானாகி ஊமை
தான்வந்து நின்றதடி - அம்மணி
தான்வந்து நின்றதடி

அத்தானென் றூமைதன்னை வாலை
அழைத்து மகிழ்வுடனே அம்மணி
அழைத்து மகிழ்வுடனே

உத்தம ஊஞ்சலிலே ஊமையை
உட்கார வைத்தானடி - அம்மணி
உட்கார வைத்தானடி

செம்பிருந்த பாலை ஊமைக்கு
சிந்தாமல் ஊட்டினளே - அம்மணி
சிந்தாமல் ஊட்டினளே

இன்பம் மிகுந்தே இரு பேரும்
ஏகாந்த மாய்இருந்தே - அம்மணி
ஏகாந்த மாய்இருந்தே

அன்புடன் ஆடுகின்ற ஊஞ்சலில்
ஆட்டத்தைப் பாரடி நீ அம்மணி
ஆட்டத்தைப் பாரடி நீ

வாலையும் ஊமையாய் ஆடிய
வாஞ்சையைப் பாரடி நீ - அம்மணி
வாஞ்சையைப் பாரடி நீ

மெய்ஞ்ஞான ஊஞ்சலில் ஊமையாகிய இறைகாதலனும் இறைவனாகிய வாலையும் கலந்துறவாடிக் களித்ததை இவ்வாறு பாடும் அவர் மெய்ஞ்ஞானக் கும்மியில்,

கும்மியடி பெண்காள் கும்மியடி - எங்கள்
ஹூப்பான பெண்களே கும்மியடி

என்று பாடும் பொழுது நம் காதுகளில் இன்பத்தேன் வந்து பாய்வதுபோல் உள்ளது.

அதில் அவர் தாம் ஷரீஅத்தைப் பேணி நடப்பவர் என்பதை,

ஆதிமுதலோன் தனைநினைந்து - நிதம்
ஐந்தொகுத்தும் தொழுதே புகழ்ந்து
ஓதி முகம்மது பாதம் அனுதினம்
உகந்து கும்மி அடியுங்கடி - மிக
மகிழ்ந்து கும்மி அடியுங்கடி

என்று பாடியிருப்பதிலிருந்து நன்கு தெரியவருகிறது.

இவ்வாறு ஷரீஅத்தைப் பேணிநடந்த அவர் தரீக்கத், ஹகீகத் ஆகிய படித்தரங்களையெல்லாம் கடந்து மஃரிபத் என்ற படித்தரத்தை எய்தப் பெற்றார் என்பது,

பள்ளியில் வந்து தொழுதல்லவோ வானோர்
பாத்திஹா ஓதி துஆஇரப்பார்
பள்ளியை விட்டுமேல் பார்த்திடில் அங்கே
பரமசிவன் வீடு தோணுதடி - நேர்
திறமுடன் கும்மி அடியுங்கடி

ஈஸ்வரன் வீடங்கே தோணுமடி - அதில்
ஏகப்பயமாய் இருக்குமடி
ஆசைவைத்து பயமற்றுநீ சென்றிடில்
அந்த இருளும் மறையுமடி - இடை
வந்த திரையும் விலகுமடி

நானும் நீயுமே நேசமானார் - பர
நாதாந்த வீட்டிலே சேர்ந்திடலாம்
ஞான வீடாளும் அத்தானைக்கண்டு நாம்
நாடிக்கொள் காபகௌசியடி - சென்று
தேடியே கும்மியடிங்கடி

என்று பாடியிருப்பதிலிருந்து நன்கு தெரியவருகின்றது.

அவர் 'கத்தனருள் பெற்ற வித்தை அறிந்தவர்' என்பதற்கும் அதன் காரணமாக அவர் ஞானாந்த இரகசியங்களை நன்கு அறிந்தவர் என்பதற்கும்

வித்தை அறிந்திடில் வேருந்தெரியுமோ சிங்கி - அந்த
வேரும் அறியலாம் தூரும் அறியலாம் சிங்கா

என்று அவர் பாடியுள்ள அடிகளும் அவரின் ஏனைய பாடல்களும் சிறந்த சான்றுகளாக விளங்குகின்றன.ஆண்பாற் புலவர் பலரை ஈன்றெடுத்த இளசை மாநகர் தன்பெயருக்கேற்ப மற்ற எந்த ஊருக்கும் இளையாவண்ணம் 
கச்சிப்பிள்ளையம்மாள் என்ற ஒரு பெண்பாற் புலவரை, புலவர் ஞானியைப் பெற்றெடுத்திருப்பது அதன் நற்பேறே என்பதில் ஐயமில்லை. கச்சிப்பிள்ளையம்மாளின் வழித்தோன்றல்கள் இன்று இளையான்குடியில் சீருடனும் சிறப்புடனும் வாழ்ந்து வருகின்றார்கள்.

**

நன்றி : யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் 

1 comment:

  1. //நாகூர் சூஃபிமாப் பற்றி,
    இன்ஷா அல்லாஹ்,
    பிறகு எழுதுகிறேன்//
    மறந்துகிறந்து
    தொலைத்துவிடாதீர்கள்.
    -தாஜ்

    ReplyDelete