Sunday, May 13, 2012

கடலது அலையது (சிறுகதை) - எம்.ஐ.எம். றஊப்


இத்துடன் மர்ஹூம் எம்.ஐ.எம். றஊபின் கதையை அனுப்புகிறேன். சென்ற வருடம் மௌத்தாப் போன றஊபின் கதைகள் பெரும் பொக்கிஷங்கள். அவருடைய தகப்பனார் புகழ் பெற்ற கவிஞரும் கதாசிரியருமான மருதூர்க்கொத்தன் அவர்கள். எனது நீண்ட கால நண்பர்.  இன்ஷா அல்லாஹ், அடுத்து றஊபுடைய தகப்பனாரின் கதைகளில் ஒன்றை அனுப்பி வைப்பேன்.

அன்புடன்
ஹனீபா காக்கா

***

மாற்றுப்பிரதி : எண்பதுகளில் ஒரு கதைசொல்லியாக தனது இலக்கியச் செயற்பாட்டை ஆரம்பித்தவர் எம்.ஐ.எம். றஊப்.   தொடர்ச்சியான வாசிப்புகளும், அதனூடான தேடல்களுமாக தமிழின் சமகால இலக்கியப்போக்குகள்வரை அறிந்து செயற்பட்டவர். '' கனவும் மனிதன் '' என்ற இவரின் சிறுகதைத் தொகுதி ஒன்று வெளிவந்திருக்கிறது. 90 களின் பிற்கூற்றில் அல் புனைவுகளின் மீது தனது கவனத்தை திருப்பிக்கொண்டார். ஈழத்து இலக்கியப்போக்குகளின் செல்நெறிகளோடு ஒத்துப்போக மறுத்து, புதிய திசைகள் மற்றும் போக்குகள் பற்றி சிந்திக்கவும் எழுதவும் செய்தார். தமிமொழிச் சமூகங்களுக்கிடையிலான முரணும் முரணினைவும் தொடர்பில் மு.பொன்னம்பலத்தின் பிரதிகளை வாசித்துக்காட்டினார்.  எம்.ஏ.நுஃமானை முன்னிறுத்தி - தமிழ் புலமைத்துவத்திலிருந்து பிரிந்து செல்லும் முஸ்லிம் புலமைத்துவம் என்ற அரசியல் பிரதி ஆய்வை செய்துகாட்டியவர். அத்தோடு சுந்தர ராமசாமியின் நாவல்களை கவிதையியலாக வாசிக்க முற்பட்டவர்.இந்த ஒவ்வொரு வாசிப்புப் புள்ளியும் தமிழ் இலக்கியப்போக்ககளை உடைத்து,மறுத்து புதிய விவாதங்களை எழுப்பக்கூடியவை. அவை தொடரப்படாமலே போய்விட்டது. எம்.ஐ.எம்.றஊப் ஒரு மறுத்தோடிதான். வாழ்வையும் மறுத்து சுயமாகவே தனது வாழ்விற்கான முடிவைத் தேர்வுசெய்தவர். றஊபின் புனைவுகள் மற்றும் அல் புனைவுகள் தொகுக்கப்படவேண்டும். அவரின் எழுத்துக்கள் தொடர்பாக விரிவாக மிக விரைவில் எழுத உத்தேசமுள்ளது.

எம்.ஐ.எம். றஊப் அவர்களின் '' கனவும் மனிதன்'' புத்தகத்தை இங்கு வாசிக்கலாம்


***

கடலது அலையது

எம்.ஐ.எம். றஊப்

வழக்கத்தை மீறி நிறைய குடித்திருந்தான் மீரான். காக்காவின் நினைவு படரும் போதெல்லாம் நிறையக் குடிக்காமலிருக்க முடியாது அவனுக்கு. பணக்கஷ்டம் வரும் போதெல்லாம் அள்ளிக் கொடுத்த காக்காவை மிகவும் பூஷித்தான். காக்கா இல்லாதது பெரும் வேதனையாகிப் போனது அவனுக்கு. முருகையா ஊற்றிக் கொடுத்த ஒவ்வொரு கிளாஸ் சாரத்தையும் காக்காவை நினைத்தே குடித்திருந்தான் இன்று.

இன்று மாயவலைத் தோணிகள் எதுவும் கடலுக்குப் போகவில்லை. மீரானோடு மாயவலைக்கு வரும் பொடியன்கள் கரவலைக்குப் போயிருந்தார்கள். மீரானால் அப்படிப் போகமுடியவில்லை. சொந்தமாக கரவலை வைத்து தருவதாகச் சொன்ன காக்காவை நினைத்த கையோடு காலையிலேயே முருகையா வீட்டுக்குப் போயிருந்தான்.

சந்திக் கடையில் பீடிக்கு நெருப்பு வைக்கும் போது, சூரியன் உச்சியிலிருந்தது. மீரானுக்கு வெறி உச்சத்திலிருந்தது. உடல் தள்ளாட்டம் போட்டாலும் கண்டத்திலிருந்து குரல் ஆரோக்கியமானதாகவே பிறந்தது. பிசிறில்லாமல் வார்த்தைகள் நேர்த்தியாக வெளியாகின. சுருக்கென்று பாய்ந்து காக்காவின் நெஞ்சத்தைத் துளைத்த துப்பாக்கி ரவைகளின் கூர்மையைப் போன்று வாயாடினான். கூடி நின்றவர்களுக்கு புரியாத தத்துவம் பேசினான். ரஷ்யாவிலிருந்து வால்கா நதியினூடாக இந்துமா கடலில் வந்து கலந்தது மீரானின் தத்துவம்.

மாரிக்கடல் பொய்த்துப் போயிருந்தது. அடிவானத்தில் புகாரித்து எழும்பும் மேகக் காடுகள் இல்லாது கிடந்தது ஆகாசம். அதற்குக் கீழே கடைக் கண்கள் விரியும் அளவுக்கு நீட்டிக் கிடந்தது வங்காள விரிகுடாக் கடல். விம்மிப் புடைத்துப் புரளும் உக்கல்கள் இன்றில்லை. ஓங்காரம் காட்டி நிலத்தை அறையும் அலைகளில்லை. சித்திரத்தை மாதத்துக் கடலாய் தெப்பம் கட்டிக் கிடந்தது மார்கழிக் கடல். வெறி தணிய மாலையாகி விட்டது. உடலும் உள்ளமும் வெள்ளைக் காகிதம் போலானது மீரானுக்கு. எதற்கும் ஒரு முறியடி அடிக்கும் நினைப்பு வர, முருகையாவை எண்ணிக் கொண்டான்.

அலை நனைக்கும் தூரம் கடலோரம் நின்றான். ஆற்று வெள்ளத்தில் அள்ளுண்ட களச்சிக் கொட்டையன்று நுரை கட்டிப் புதைந்து கிடந்தது. கடலுக்கு அப்பால் பாரத தேசத்தில் காக்காவின் கபுறடியில் கொடி மல்லிகை பூத்துக் கிடந்தது. சுவனத்தில் நண்பர்கள் புடைசூழ ராஜபவனி வந்து கொண்டிருந்தான் காக்கா. நவீன ஆயுதங்கள் காவல் செய்ய துயில் செய்தான். பத்திரிகையாளர்களை அழைத்து மாநாடு நடத்தினான். பாசறையில் காக்கா வகுப்பெடுத்தான்.

மீரானின் உலகம் குறுகியது. தெற்கே திரும்பினால் சவக்காலை, வண்ணான் தோணா, சுப்பர் வாடி கடந்து பனைகளுக்கும் தென்னைகளுக்கும் மேலால் கல்முனைக் கடற்கரைப் பள்ளிவாசல் மினாரா தெரியும். வடக்கே திரும்பினால் கல்லாற்று ஓடை தாழை மரங்களின் அணிவகுப்பின் முடிவில் ஓந்தாச்சி மட முடக்குத் தென்னைகள் நன்றாகவே தெரியும். வண்ணான் தோணா மண் சரிவுகளில் கடம்பு பூத்துக் கிடக்கும். எருக்கலம் பத்தைகளில் பூக்கொன்னைகள் தோறும் கருவண்டுகள் ரீங்காரிக்கும். எருக்கலம் காய்கள் வெடித்து சிறு விதைகளுடன் பஞ்சுகள் மேலெழுந்து காற்றில் மிதக்கும். நொச்சுப் புதர்களில் எலி வேட்டை தொடரும். செல்லனின் காலைப் பனங்கள்ளுக்கு சுவையூட்ட நண்டுகள் தேடி, கடலோரம் பூத்த நெட்டிகள் மீரானின் கைகளிலிருக்கும். சின்னப் பிள்ளைக்கு ஆசை வரும் போதெல்லாம் மதியக் கடலில் மீரானின் கால்கள் பன்னல் தோண்டும்.

ஒரு முறை சித்திரக் கடல், நெத்தலிச் சிவப்பாய்க் கிடந்தது. கரவலை அனைத்துக்கும் பெரும் பெரும் மீன் பாடுகள். கால் வைத்து நடப்பதற்கு கடற்கரையில் நிலம் இல்லாது போனது. நெத்தலிக் கருவாடுகள் மணல் போத்து சுருண்டு கிடந்தன. நிறை வெயிலில் மணலை உதிர்த்துப் போட்டு தலையைக் கிள்ளி விட்டு தின்பதற்கு நெத்தலிக் கருவாடு நிறையக் கிடைக்கும். மதாளித்த பயித்தங் காய்களோடு நெத்தலிக் கருவாடு மீரானின் வாயில் மணக்கும். அப்படியரு பொழுதில்தான் சின்னப் பிள்ளை மீரானுக்கு கூட்டாளியானாள். கடல் பயித்தங் காய்களும் நெத்தலிக் கருவாடும் சின்னப் பிள்ளைக்காக மீரானின் சாரன் மடிப்புக்குள்ளிருக்கும். அநேகமான வேளைகளில் அவைகளோடுதான் அவளைச் சந்திப்பான். பெரிய மனுஷியாகி அவள் ஊட்டோடு தங்கிவிட்ட போதும் கடல் பயித்தங் காய்களும் நெத்தலிக் கருவாடும் கொண்டு கொடுப்பான் மீரான்.

இப்படியெல்லாம் இருந்தவனுக்கு இந்த வருடம் மாரி பொய்த்தாற் போலவே அவன் வாழ்வும் பொய்த்துப் போய்விட்டிருந்தது. சின்னப் பிள்ளையின் நினைவுகளுடன் அவளது தாயே அவனுக்கு மனைவியாகிப் போனாள்.

முருகையா வீட்டிலிருந்து வந்தவன் ஊட்டுக்குப் போகவில்லை. பெண்டாட்டி வந்து பகல் சோத்துக்கு அரட்டியும் எழும்பவில்லை என்று, புள்ளு அவனிடம் சொல்லிவிட்டுப் போயிருந்தான். தலைக்குக் கையால் முண்டு கொடுத்து கடலை ஒரு தரம் பார்த்தான். ஊத்து மணம் அவன் நாசிக்குள் நிறைந்து உணர்த்தியது. விடிபொழுதில் மாயவலைக்கு நிறைய மீன் படும் என்று அவன் மனது கூறியது.

எழும்பியிருந்து கொண்டான். ஊட்டுக்குப் போ வேண்டும் என்று நினைத்துக் கொண்டான். அதற்கு முன் ராசாக் காக்காவின் வாடிக்குப் போக வேண்டும். பதமாக கூட்டிய சிலும்பியில் இரண்டு "தம்" இழுக்க வேண்டும். புகையிலையும் முகிலியும் அளவோடு கலந்த கூட்டு வாசனை மீரானின் மனசை நிறைத்து கண் புருவத்தில் ஜில்லிட்டது.

கஞ்சா அடித்தால் நிறையக் கதைக்க வரும். மீரானுக்கு சில நாட்களில் விடிய விடியப் பெண்டாட்டியுடன் கதைத்துக் கொண்டிருப்பான். இறந்து போன உம்மாவை எண்ணி பெண்டாட்டியின் மடியில் முகம் புதைத்து விக்கி விக்கி அழுவான். ஆறுதலாக அவளது கைகள் அவன் முதுகைத் தடவிக் கொடுக்கும்.

வாப்பா மௌத்தான கையோடு, வாப்பா இருந்தவரை மீரானுக்கு கஷ்டம் அவ்வளவாய் இருக்கவில்லை, குடிவெறியில் அவன் புரியும் அட்டகாசங்களைத் தாங்கிக் கொண்டிருந்தான். கஞ்சாவுக்கு புகையிலை வாங்க சில்லறை பிடுங்கிக் கொள்வான். பெட்டிக்குள் வெளுத்த சாரனை எடுத்து உடுத்தி மனிசனாய்த் திரியச் சொல்வார். கஞ்சா குடியாதே, சாராயம் குடியாதே, ஒழுங்காக கடலுக்குப் போ, நேரத்துக்கு அம்புட்டதைத் தின்னு... என்பவரை முடிந்த மட்டும் காலால் உதைப்பான். அடி... நல்லா அடி.. வெதக் கொட்டயில மிதிச்சி என்னச் சாகடி என்றவரை ஒரு மதியம் குடித்து விட்டு வந்தவன், ஏறி மிதித்து துடிதுடித்து அவன் கண் முன்னேயே செத்துப் போனார் அவர். அதே வெறியுடன் சீதேவி வாப்பா, எங்களை உட்டுப் போட்டு போயிட்டாயே வாப்பா என்று தெருவெல்லாம் கத்தித் திரிந்தான் மீரான்.

வாப்பா இருந்தவரை மீரானைப் பற்றியே அநேகம் கதைப்பார். அவனை ஒரு ஒழுங்கான தண்டயல் ஆக்க வேண்டும்; சொந்தமாக தோணி வைத்துக் கொடுக்க வேண்டும் போன்ற நிரம்பிய ஆசைகளுடன் அவர் இருந்தார். சீக்குடம்பை வளைத்து முழங்கால்களைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருக்கும் அவர் ஆசைகள் கனவுகளாகவே போயிற்று. படுவான் கரைக் காடுகளிலும் பொத்துவில் காடுகளிலும் அரசியல் பேசித் திரிந்த மூத்த மகன், கண் காணா தேசத்தில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த உடம்போடு அவர் கனவில் வந்து போனான்.

ஊட்டில் பெண்டாட்டியைக் காணவில்லை. சின்னப் பிள்ளை மட்டுமே இருந்தாள். மீரானைக் காணும் போதெல்லாம் அவனைக் கொல்ல வேண்டும் போல் இருக்கும் அவளுக்கு. பன்னல் கெண்டித் தந்தவன், கடல் பயித்தை ஆய்ந்து தந்தவன், நிலாக் கால இரவுகளில் எலி வேட்டைக்குக் கூட்டிச் சென்றவன், எருக்கலப் பஞ்சில் ஆசைகளைக் கட்டித் தூது விட்டவன். மனசில் கலந்தவன், தன் தாய்க்கு மாப்பிள்ளையான விதந்தான் என்னவென்று சின்னப் பிள்ளைக்கு புரியாது போயிற்று. அவளது காக்கா பிறந்த நாற்பதன்றுதான் மீரான் பிறந்ததென்று தன் தாய் சொல்ல சின்னப்பிள்ளை கேட்டிருந்தாள். பிள்ளைக்குச் சமமானவன், தாய்க்கும் புருஷனான விதம் சின்னப் பிள்ளைக்குத் தாங்க முடியாததாகவே இருந்தது.

சின்னப் பிள்ளையின் வாப்பா காலமான பின்னர்தான் மீரானின் புழக்கம் அதிகரித்திருந்தது. இந்த ஊட்டுக்குள் உம்மா இருக்கும் போதெல்லாம் மீரான் சாதாரணமாக வந்து போய்க் கொண்டிருந்தான். நிலாக் கால இரவுகளில் முற்றத்துத் தென்னைகளுக்குக் கீழே, விடி பொழுது வரை சின்னப் பிள்ளையும் அவனும் கதைத்துக் கொண்டேயிருப்பாள். கிட்டவே கேட்கும் அலையின் ஒலி வாகம் ஓய்ந்த கணப் பொழுதுகளில் வடலித் தென்னையில் குருத்தோலைகள் இரண்டு புணர்ந்து கொள்ளும் சலசலப்பு இருவருக்கு மட்டும் கேட்கும். வானத்திலிருந்து ஓரம் சாய்ந்து விழும் எரிகற்களில் ஒலிக்கீற்றுகள் சிலவேளை காணக் கிடைக்கும்.

இத்தா ஊட்டுக்குள் இருந்தவளுக்கு நிசாம் கோப்பித் தூள் வாங்கிக் கொடுத்த தொடர்பு திருமணத்தில் முடிந்து போய் விட்டது. சின்னப் பிள்ளையின் உம்மா குடித்து விட்டுக் கொடுக்கும் எச்சில் கோப்பியில் மீரான் உலகையே மறந்திருந்தான். தினமும் கோப்பிக்காகவும் போய் வருபவனாக இருந்தான்.

நிதானம் வந்த போது, ரொம்பவும் இழந்து போயிருந்தான் மீரான். அவனது இளமையின் ஆரம்பம், சின்னப் பிள்ளையின் தாயோடு அனேகம் கலந்து போயிருந்தது. பொண்டாட்டி இல்லாத ஊட்டில் மிகுந்த நேரம் மீரானால் தாங்க முடியவில்லை. குசினியில் அவனுக்காக இருக்கும் சோற்றை எடுத்து சாப்பிடும் தைரியம் வரவில்லை. ராசா காக்காவின் வாடிக்கே மீண்டும் நடையைத் தொடங்கினான். மீரானின் வரவைக் காத்திருப்பது போல, சிவமுகிலிக் கூட்டு சிலும்பியில் அடைக்க அரிபலகையில் காத்துக் கிடந்தது. ராசாக் காக்கா மெச்சக் கல்லில் கடைந்தெடுத்த சிலும்பிச் சாவியை பழந்துணியால் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தார். அடை கல்லை எடுத்து, புகைக் கசறு போகும் வரை துடைத்தெடுத்தார். புள்ளு அணை சிலையை தண்ணீரில் நனைத்து விரல்களுக்குள் பிழிந்து கொண்டிருந்தான். சீந்தா கயிறில் வளையம் போட்டு நெருப்புச் செய்து கொண்டிருந்தான்.

லாவகமாக கூட்டு அடைக்கப்பட்டு வாயில் நெருப்பு வளையம் போடப்பட்டு ஈரச் சீலைத் துண்டு போர்த்தப்பட்டு, இழுப்புக்கு ஆயத்தமாகிக் கொண்டது சாவி. ராசாக் காக்கா மீரானிடம் நீட்டி இழுப்பைத் தொடங்கி விடச் சொன்னார்.

ராசாக் காக்காவின் வேண்டுதல்களை மீரானால் தட்ட முடியாது. சாவியை வாங்கி பெருவிரலால் மேல்பகுதியையும் மறு நான்கு விரல்களால் கீழ்ப்பகுதியையும் லாவகமாக இடுக்கி, உள்ளங்கையில் அணைத்துக் கொண்டு மூட்டிழுப்போடு இரண்டு தரம் நிறுத்தி, உள்ளிழுப்பாக இழுத்த போது, சாவி வாயில் நெருப்புத் தணல் சில கணங்கள் ஜுவாலித்து எழுந்தது.

மீரான் சகலதிலும் கைராசிக் காரன் என்று ராசாக் காக்காவின் வாதம். நீண்டு பரந்து கிடக்கும் வங்காள விரிகுடாக் கடலில் அவனுக்குத் தெரியாத இடமில்லை, பறட்டையன் கல்லில் வலைக்குச் சேதாரமில்லாமல் எப்படி வலை விட வேண்டும் என்பதும், ஆலடி வெட்டையில் பூக்கல்லுக்குள் வலை மாட்டிக் கொண்டால் ஒரு கண்ணும் பிசகாமல் எப்படிக் காப்பாத்த வேண்டும் என்பதும் மீரானுக்கு அத்துப்படி. நீலாவணைத் தோணா நேரே ஒன்பது பாகத் தாழ்வில் சீலா பிடிக்க கும்பிளா வலை விட்டேனேயானால், பொலுபொலுவென விடிவேளையில் தோணி முழுக்க சீலா அடுக்கப்பட்டிருக்கும்.

சுபஹுக்குத் தோணி தள்ளி பறட்டையன் கல்லுக்கு ஓரமாக வலை விட்டு ஒரு பீடி பத்த வைத்து முடிந்தவுடன் வலையைக் கிளப்பினானேயானால், பொக்குவாய்க்காரர்களும், குதிப்பான் குட்டிகளும் வலையில் பூத்துக் கிடக்கும். கரைநீர் தெளிவில்லாத போதும், பதினாலு பாகத்துக்கும் சாள வலை கொண்டு போனால், விடிய ஆறு மணிக்கெல்லாம் மாப்பிள்ளைக் கீரி தோணியில் நிரம்பிக் கிடக்கும்.

என்ன மீரான், யோசன போல? இந்தக் கிழம முழுக்கத் தொழிலில்ல. செலவுக்கும் காசில்ல. இண்டெக்கும் உனக்கு நல்ல வெறி. புள்ளக் கொண்டு சாளவல ஏத்தி வெச்சிருக்கன். விடிய சுபஹுக்கு கடலுக்குப் போ. ஆண்டவன் நமக்கு மொகம் பார்ப்பான். ராசாக் காக்காவின் பேச்சுக்கு மீறி மீரான் ஒன்றும் பேசவில்லை. இரவு வெகுநேரமாக ராசாக் காக்காவின் வாடியிலேயே இருந்தான். அவர் கொடுத்த பழஞ்சோத்தைத் தின்று கொண்டு அவர் வாடியிலேயே படுத்துக் கொண்டான்.

மீரானைப் பார்த்த வண்ணம் காத்துக் கொண்டிருந்த பொண்டாட்டி, எப்போது தூங்கிப் போனாளென்று அவளுக்கே தெரியவில்லை. அவனுக்காக வைத்திருந்த நிசான் கோப்பிக் கட்டு முந்தானைத் தலைப்பில் மணமெடுத்தது. மீரானை எண்ணும் போதெல்லாம் இப்பொழுது அவளுக்குப் பாவமாகத் தோன்றுகிறது. அவனோடு படுக்கும் ஒவ்வொரு வேளையும் மனசில் பாறாங்கல் அழுத்த துவண்டு போவாள். குமரியோடு படுத்து சல்லாபிக்க வேண்டியவனை தன் வழிப்படுத்திய விதம் என்னவென்று அவளுக்கு இன்னும் புரிவதாயில்லை.

மீரானின் தோணிக்கு நல்ல பம்பலாம். கண்ணுக்கொரு பொக்குவாய்க்காரரும் கீரியுமாம். வலையை முழுசா கொண்டு வர ஏலாமல், துண்டு துண்டாய் வெட்டி ஏத்தி கொண்டாரிக்கினமாம், இதற்கு மேலும் ஊட்டிலிருக்க பொண்டாட்டி பிரியப்படவில்லை.

மீரானைக் காணும் ஆவல் முனைப்பாக ராசாக் காக்காவின் வாடிக்குச் சென்றாள்.

சரியான மீன்பாடு. வியாபாரிகள் போட்டா போட்டி. பொன் கணக்கில் மீனை கச்சிதமாக ராசாக் காக்கா வித்துக் கொண்டிருந்தார். பத்துப் பதினைந்து படங்குகளில் மீன் பரவிக் கிடந்தன. தலைக்கு மேலால் காகமும் புள்ளுகளும் வட்டமடித்துக் கொண்டிருந்தன. தலை கழன்ற மீன்களுக்கு சிறுசுகள் சண்டையிட்டுக் கொண்டிருந்தார்கள். மீரானுக்கும் தண்டுக்காரப் பிள்ளைகளுக்கும் திறமான முகிலி வாங்க ராசாக் காக்கா ஆளனுப்பியிருந்தார். மீரானின் ஊட்டுக்கு நிறெஞ்ச கறியும் அனுப்பியிருந்தார்.

சகலதும் முடிந்து வாடியை விட்டு எழும் போது மதியமாகி விட்டது. மீரானின் மடிக்குள் காசு கனமாக இருந்தது. பெரிய உற்சாகத்துடன் ஊட்டுக்குப் போனான் மீரான்.

குளித்த கையோடு தலையைத் துவட்டி முடிந்ததும், பெண்டாட்டி கோப்பிக் கிளாசை நீட்டினாள். வாங்கிக் கொண்டு அவளைப் பார்த்து மெல்லியதாகச் சிரித்தான். அவளும் பதிலுக்குச் சிரித்து விட்டு குசினிக்குள் நுழைந்தாள்.

கீரி மீன் பொரியல், கீரி மீன் பால்ச்சொதி, மீரானின் விருப்பமான முருங்கைச் சுண்டல், ஒரு பிடி பிடித்தான். நிசான் லகரியில் பெண்டாட்டிக்கும் ஊட்டி விட்டான்.

பகல் தணிந்து மாலை தொடங்கிய நேரம், கடல் காத்தில் புலால் மணம் நாசியை நிறைத்தது. பெண்டாட்டி மடியில் மீரான் கிடந்தான். என்ட ராசா என்னால் இனிமேல் ஈடு தர ஏலாது, ஒரு கொமரியப் பாத்து தேடிக்க என்றாள். வாசலில் சின்னப்பிள்ளை கூட்டாளிகளுடன் கதைத்துக் கொண்டிருந்தாள். அவளின் உருவம் மீரானின் முன்வந்து அவனைப் பயமுறுத்தியது.

இனியெனக்கென்ன... யாரென்ன முடிப்பா... நான் இப்ப இருபத்தைந்து வயதுக்கெழவன் என்ற மீரானைக் கட்டியணைத்து உச்சி மோந்தாள் பெண்டாட்டி.

நீண்ட வெகு நாட்களுக்குப் பின்னர், முற்றத்து வடலித் தென்னையில் குருத்தோலைகள் இரண்டு சடசடத்து புணரும் சத்தம் சின்னக் கிளியின் செவிகளுக்கு மட்டும் கேட்டது.

***
நன்றி : ஹனீபாக்கா, றியாஸ் குரானா , ரியாஸ் அஹ்மத் 

2 comments:

  1. ம்...., கணக்கா எழுதியிருக்கார் எம்.ஐ.எம்.றஊப். ?நல்லா அடி.. வெதக் கொட்டயில மிதிச்சி என்னச் சாகடி என்றவரை ஒரு மதியம் குடித்து விட்டு வந்தவன், ஏறி மிதித்து துடிதுடித்து அவன் கண் முன்னேயே செத்துப் போனார் அவர். அதே வெறியுடன் சீதேவி வாப்பா, எங்களை உட்டுப் போட்டு போயிட்டாயே வாப்பா என்று தெருவெல்லாம் கத்தித் திரிந்தான் மீரான்.// பொறுமையா படிச்சிருந்த அவர் சு.ரா.வின் கதைகளில் கண்ட கவிதை நயத்தை இவரிடமும் கண்டிருக்கலாமோ என்றும் தோனிற்று. இன்னொரு முறை கட்டாயம் வாசிக்கணும். கிழக்கு இலங்கையில் நிறைய இஸ்லாமியர்கள் கைலி கட்டுவது மாதிரி கட்டாயத்துக்கு இலக்கியத்தை... அதுவும் நவீன இலக்கியத்தை கட்டிக் கொண்டு திரிவததை அறிய வருகிற போது.... ஒன்று நிச்சயம் தெரிகிறது..., ஹனிபாக்கா ரொம்ப மனுஷாலை கெடுத்திருக்கார். அதாவது இங்கே நான் செய்கிறப் பணி. இன்னொன்னும் நிச்சயம், ஹனிபாக்காவுக்கும் எனக்கும் சொர்க்கம் நிச்சயம். அப்ப ஆபிதீனுக்கு? போனாப் போகுது ஆண்டவனிடம் நாங்கள் சிபாரிசு செய்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் இரண்டுபேரும் சிபாரிசு செய்யாவிட்டால் சுவனம் எனக்கு நிச்சயம்.

      Delete