Thursday, April 26, 2012

மூட்டைப்பூச்சியும் கடவுளும் - தி.ஜ.ர.

சுதேசமித்திரன் தீபாவளி மலரில் (1972) வெளியான சிறுகதை. தி.ஜ.ர. அவர்கள் பற்றி மலர்மன்னன் எழுதிதைப் பார்க்க இங்கே சொடுக்கவும்.

***



மூட்டைப்பூச்சியும் கடவுளும்
 தி.ஜ.ர.

எங்கள் வீட்டுப் பையனுக்குத் திடீர் திடீர் என்று பெரிய சந்தேகங்கள் வரும். பாடங்களில் சந்தேகம் கிடையாது. படித்தால்தானே சந்தேகம் வர? 'படி படி' என்று பாட்டியும் அம்மாவும் மண்டையை உடைத்துக் கொள்வார்கள். 'படிக்காவிட்டால் காபி இல்லை; சாப்பாடு இல்லை' என்பார்கள். காபிக்காகக் கொஞ்சம் சாப்பாட்டுக்காகக் கொஞ்சம் படிப்பான். என்ன படிப்பான்? தமிழுக்குக் கோனார் நோட்ஸ்; இங்கிலீஷ¤க்கு ஏதோ நோட்ஸ்; பாடங்களை மட்டும் படிக்கவே மாட்டான். பரீட்சையில் சுழிதான். ஆனாலும் என்னவோ 'பாஸ்' செய்து விடுவான். அது என்ன மாயமோ! ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம். அது எப்படியோ போகட்டும்.

அவனுடைய சந்தேகங்களை இல்லையா சொல்ல வந்தேன்!

ஒரு நாள் திடுதிப்பென்று அவன் கேட்டான். 'இந்த மூட்டைப்பூச்சி நம்மை ஏன் கடிக்கிறது, தாத்தா?'

'பசி தீர்த்துக் கொள்ளக் கடிக்கிறது' என்றேன் நான்.

'நம்மைக் கடித்தால் பசி தீருமா?'

'நம் ரத்தம் அதன் உணவு. நம்மைக் கடித்து ரத்தத்தை உறிஞ்சுகிறது. அதன் பசி தீர்கிறது.'

'நம் ரத்தம் அதற்கு ஏன் உணவாயிருக்கிறது? எறும்பு மாதிரி அரிசி, பருப்பு, சர்க்கரை இப்படி ஏதாவது அது தின்னக்கூடாதோ?'

'தின்னலாம். ஆனால் எறும்பின் பிறவி அப்படி; மூட்டைப் பூச்சியின் பிறவி இப்படி.'

மேலும் மேலும் கேள்வி மேல் கேள்வி கேட்டுக்கொண்டேயிருந்தான் பையன்.

தொண தொணப்புப் பொறுக்காமல் கடவுளைத்தான் நான் சரணடைய  வேண்டியதாயிற்று.

'மனித ரத்தம் உன் உணவு' என்று மூட்டைப்பூச்சிக்குக் கடவுள் வரங்கொடுத்திருக்கிறாராம் என்பதாகச் சொன்னேன். அதற்கு மேல் தத்துவ சாஸ்திரி மாதிரி கடவுளைப்பற்றிச் சரமாரியாகக் கேள்விகள் கேட்கப் பையன் தொடங்கி விட்டான். கடவுளே இல்லையாமே, கடவுள் என்பதே கட்டுக்கதை என்கிறார்களே, கடவுள் என்பது சுத்த மோசடியாமே, சமயக் கதைகளெல்லாம் ஒரே புளுகு மூட்டையில்லையா, அறிவியலை நம்பினால் கடவுளை நம்ப இடமே இல்லையாமே என்றெல்லாம் பல கேள்விகளைப் போட்டு என்னைத் தொளைத்து விட்டான். நானே இந்த ஐயங்களால் திணறிப் போனேன். கடவுளை யாராவது கண்டதுண்டா? கண்டிருந்தால் அது உரு வெளி மயக்கமாய்த்தான் இருக்கும். அல்லது கடவுளின் இலக்கணப்படி அது கடவுளாயிருக்க முடியாது. கலப்பற்ற நிர்க்குணப்பிரம்மமே கடவுள் என்கிறார்கள், அப்படியென்றால் அந்தக் கடவுளால் நமக்கென்ன பயன்? கடவுள் என்ற பெருங்கடலில் நாமெல்லாம் நீர்க்குமிழிகளா? அல்லது தனித் தனி ஜீவன்களா? எல்லாம் பழைய பெரியவர்கள் செய்த விசாரணைகள்தான். என் புதிய சிந்தனை ஒன்றுமில்லை. ஆனாலும் எண்ண எண்ண மனத்தைக் குழப்புகிறது. பையனின் மூட்டைப் பூச்சிக் கேள்விகள் இப்படித் தத்துவ
விசாரணையில் என்னை இறக்கி விட்டன.

என்ன தத்துவ சிந்தனை செய்தாலென்ன? உருவக் கடவுள் இருக்க முடியாது; அருவக் கடவுளை மனனம் செய்ய முடியவில்லை. ஆகவே வாழ்வுத் தொல்லைகளில் விளைவான மனச் சங்கடங்களிலிருந்து விடுபட உருவக் கடவுள்தான் வேண்டியிருக்கிறது. நம்பாவிட்டாலும்  உருவக் கடவுளையே தியானிக்கிறேன். அதுதான் , திருப்தியில்லாவிட்டாலும், ஏதோ ஆறுதல் தருகிறது. அது என்னவானாலும் சரி; கடைசியில், 'யார் என்ன சொன்னாலும் சரி;
என்ன நினைத்தாலும் சரி; கடவுள் இருக்கத்தான் இருக்கிறார்' என்று பையனிடம் அடித்துச் சொன்னேன்.

'அப்படியானால் அவருக்கு அறிவு உண்டா? மனிதனைப் படைத்து, அவனுடைய ரத்தத்தை நீ குடி' என்று மூட்டைப் பூச்சிக்கு ஏன் வரம் கொடுத்தார்?'

பையன் கேட்டது சரியான கேள்வி. என்னால் ஏற்ற பதில் சொல்ல முடியவில்லை. என்னவோ மழுப்பினேன்.

அடுத்து அவன் சொன்னது என்னைத் திடுக்கிட வைத்தது. 'நான் கடவுளாயிருந்தால் என்ன செய்திருப்பேன் தெரியுமா?' என்றான்.

'என்ன செய்திருப்பாய்?'

'மனிதனையும் படைத்திருக்க மாட்டேன்; மூட்டைப் பூச்சியையும் படைத்திருக்க மாட்டேன்.'

'சரி. சரி; மகா புத்திசாலி. பாடத்தைப் படி. இல்லாவிட்டால் உதைப்பேன்'

பையன் ஓய்ந்து விட்டான். ஆனால் படிக்கவில்லை.

'படிடா'

'என்ன படிப்பது?'

'இங்கிலீஷ் படி; தமிழ் படி.'

'இரண்டு பரீட்சையும் ஆகிவிட்டது'.

'நாளைக்கு என்ன பரீட்சையோ?'

'கணக்கு'

'கணக்குப் புத்தகத்தை வைத்துக்கொண்டு கணக்கைப் போடு.'

கணக்குப் புத்தகத்தை அவன் எடுத்துப் பிரித்தான். ஆனால், கணக்குப் போடுவதாகத் தெரியவில்லை. கன்னத்தில் கை வைத்துக்கொண்டு புத்தக
ஏடுகளைப் புரட்டியபடி ஏதோ ஆழ்ந்த யோசனை செய்யலானான். 'எக்கேடு கெட்டுப் போகட்டும்' என்று அதோடு விட்டுவிட்டு என் ஜோலிகளை
கவனிக்கத் தொடங்கினேன்.

அதன்பின் சில நாள் ஆயின. கடவுளையும் மூட்டைப் பூச்சியையும் பையன் மறக்கவேயில்லை. அதே சிந்தனையாயிருந்திருக்கிறான். பரீட்சை எல்லாம் முடிந்து விட்டது.

'எல்லாப் பரீட்சையும் தீர்ந்தது' என்று உற்சாகமாய்ச் சொன்னான்.

'எல்லாம் சுழிதானே?'

'படிக்குப் பாதி மார்க் வரும்.'

'பார்க்கலாம். இதுவரையில் வந்ததில்லை.'

'இந்தத் தடவை வருகிறது பார், என்ன பந்தயம்? வந்தால் பதினைந்து பைசா தருவாயா?'

'வந்தால் நான் தருகிறேன். வராவிட்டால் நீ தரவேண்டும்.'

'நான் எங்கேயிருந்து தருவேன். நானா சம்பாதிக்கிறேன்?'

இதேபோல் கொஞ்சநேரம் சம்வாதம்; பிறகு பழைய மூட்டைப் பூச்சியைத் தொடர்ந்தான் பையன்.

'ஏன் தாத்தா, இந்த மூட்டைப் பூச்சிக்கு எத்தனை கால்?'

'தெரியாது, நான் எண்ணவில்லை.'

'மனிதனுக்கு இரண்டு கால், மாட்டுக்கு நாலு கால், ஈக்கு ஆறு கால், சிலந்திக்கு எட்டு கால்..'

'பூரானுக்கு ஆயிரங்கால். ஆதிசேஷனுக்கு ஆயிரந் தலை; காலே இல்லை.'

'சரி தாத்தா, மூட்டைப் பூச்சிக்கு இரண்டாயிரம் காலா?'

'துளியூண்டு மூட்டைப் பூச்சிக்கு எப்படி இரண்டாயிரம் கால் இருக்க முடியும்?'

'பின்னே எத்தனை கால்தான்? சொல்லேன்.'

'உன் சின்னம்மாவைக் கேட்டுப் பார். தெரியலாம். அவள்தான் பூதக் கண்ணாடியை வைத்துக்கொண்டு மூட்டைப் பூச்சியின் மேல் பிடித்து அதை ஆராய்கிறாள்.'

'அவள் கொலைகாரி. சூரிய வெயிலில் பூதக்கண்ணாடிகொண்டு அதைத் துடிதுடிக்கச் செய்து அதைக் கொல்லுவாள். நான் கேட்டால், சொல்ல மாட்டாள். என்னை அடிப்பாள்.'

'மூட்டைப் பூச்சிக்கு எத்தனை கால் இருந்தால் உனக்கென்ன? உனக்கு இந்தச் சந்தேகம் ஏன் வந்தது?'

'ராத்திரி தாங்க முடியாமல் கடிக்கிறது. விளக்கைப் போடுவதற்குமுன் அதிவேகமாய் ஓடி மாயமாய் மறைந்துவிடுகிறதே, அது எப்படி?'

ஆமாம், உண்மை. பையன் சொல்வது உண்மை. கடவுளைப் போல் மூட்டைப் பூச்சி அந்தர்த்தானம் ஆகி விடுகிறது. ஒன்றோ இரண்டோ மட்டுமே கண்ணில் படும். மற்றவை எல்லாம் போன இடம் தெரியாமல் போய்ப் பதுங்கி விடுகின்றன. கண்ணில் பட்ட ஒன்றிரண்டும் கூடக் கையில் பிடிபடாமல் ஓடித் தப்பி விடுகின்றன. அடுத்து விளக்கை  அணைத்தால் போதும். முலு முலு என்று ஒரு பெரிய பட்டாளமே வந்து சுள்சுள் என்று பிடுங்குகின்றன. இந்த மூட்டைப் பூச்சிக்குதான் எவ்வளவு சாமர்த்தியம்! இது பதுங்காத இடமில்லை. மேஜை, நாற்காலி, புத்தகங்கள், சுவர் வளைவுகள், கதவிடுக்கு, சுதிப்பெட்டி, பாய், படுக்கை எங்கும் சர்வ வியாபியாய் ஒளிந்து கொள்கிறது. இதை நினைக்கும்போது ஆயிரம் சந்தேகங்கள் தோன்றின. இதற்கு அறிவு உண்டா? எல்லாம் உள் உணர்வுதானா? வெளிச்சத்தைக் கண்டால் இதற்குக் கண் கூசுமா? கண்தான் உண்டா? இந்திரனைப்போல் உடம்பெல்லாம் கண்ணா? மாட்டு வண்டியைவிடக் குதிரைவண்டி வேகம்; குதிரைவண்டியைவிட ரெயில்வண்டி, மோட்டார்கார் இவை வேகம். ஏரோபிளேன் அதைவிட
வேகம். ஜெட்பிளேன் மேலும் வேகம்; காற்று இன்னும் வேகம்; வாயுவேக மனோவேகம் என்று எல்லாவற்றையும்விடப் பெரும் வேகத்தைச்
சொல்வார்கள். என்னைக்கேட்டால் மூட்டைப் பூச்சியின் வேகத்தைத்தான் இணையற்றதாக்ச் சொல்வேன்.  இந்தப் பூச்சியைப் பற்றி எந்த உயிரியல்
நிபுணராவது ஆராய்ச்சி செய்திருக்கிறாரா? ஒருநாளில் நூற்றுக்கணக்கான் மூட்டைப்பூச்சிகளைக் கொல்கிறோம்.; மறுநாளூம் அதற்குமேல் பூச்சிகள்
வந்து பிடுங்குகின்றன.  யாரோ ஒரு அசுரனின் ரத்தத்தைச் சிந்தினால்  அத்தனை சொட்டு ரத்தத்திலிருந்தும் புதிய அசுரர்கள் தோன்றுவார்களாம்.  இந்த மூட்டைப்பூச்சியும் சாகச்சாக புதிய மூட்டைப்பூச்சிகள் தோன்றிக்கொண்டேயிருக்கின்றன. இதுவும் அந்த அசுரப் பிறவியா? அவனைப்போல் வரம் வாங்கி வந்ததா? மூட்டைப் பூச்சியில் ஆண், பெண் உண்டா? பிரதம மந்திரி தொடங்கி எல்லாரும் குடும்பக்கட்டுப்பாட்டுப் பிரசாரம் புரிகிறார்கள். மூட்டைப் பூச்சிக்கு இந்தப் பிரசாரம் செய்வோர் யாராவது உண்டா? இதற்கு எந்தக் கட்டுப்பாடும் கிடையாதா? கொசுவைக்கூட உலகெங்கும் ஒழித்துவிடப் போவதாக ஐ.நா. நிபுணர்கள் சொல்கிறார்கள்.; இந்த மூட்டைப் பூச்சியை ஒழிக்கும் முயற்சியில் யாருமே இறங்கவில்லையே, ஏன்? இந்த மூட்டைப்பூச்சியின் விஷயம் அத்தனையும் பெரிய புதிராய்த்தான் இருக்கிறது. கடவுளின் விஷயம் எவ்வளவு பெரிய புதிரோ அவ்வளவு பெரியது இந்தப் புதிரும். கடவுளைப் பற்றி ஆராய்வோரெல்லாம் இனி இந்த மூட்டைப்பூச்சியைப் பற்றியும் ஆராய்ந்தாக வேண்டும். இல்லையேல் எங்கள் வீட்டுப் பையனின் கேள்விகளுக்கு யாருமே பதில் சொல்ல முடியாது. முடியுமென்று யாராவது சொன்னால் முடியாதென்று நான் சவால் விடத் தயார். கடவுள்
உண்டு என்று சொல்வோருக்கு மட்டும் அல்ல; இல்லையென்று சொல்வோருக்கும் கூடத்தான் இந்தச் சவால்.

***

நன்றி : தாஜ்

2 comments:

  1. தாழ்மையான கருத்து:

    மறைந்த பெரியவர் தி.ஜ.ர.
    தனது குழப்பமான பொழுதுகளில்..
    அல்லது....
    விசமமான பொழுதுகளில்...
    இந்த
    'மூட்டைப்பூச்சியும் கடவுளும்' கதையை
    எழுதியிருக்க வேண்டும்.

    கதையில்
    கீழ்கண்ட சாராம்சத்தை முன் நிறுத்திதான்
    நகைச்சுவையுடன்(?)
    தன் கதையை நிமிர்த்திக் காட்டியிருக்கிறார்.

    "இந்த மூட்டைப்பூச்சியின் விஷயம்
    அத்தனையும் பெரிய
    புதிராய்த்தான் இருக்கிறது.
    கடவுளின் விஷயம்
    எவ்வளவு பெரிய புதிரோ
    அவ்வளவு பெரியது இந்தப் புதிரும்.
    கடவுளைப் பற்றி ஆராய்வோரெல்லாம்
    இனி இந்த மூட்டைப்பூச்சியைப் பற்றியும்
    ஆராய்ந்தாக வேண்டும்."

    மூட்டைப்பூச்சி கண்ணுக்குத் தெரிகிற உயிர்.
    கடவுள்,
    முப்பாட்டனுக்கு முப்பாட்டனில் இருந்து
    என் தந்தை வழியாக
    என்னை வந்தடைந்ததோர்
    அழுத்தமானதோர் நம்பிக்கை!
    இரண்டையும் முடிச்சுப் போடுவதில்
    அவரது போதாமைத்தான்
    பளீச்சென்று தெரிகிறது.

    பெரியவர் தி.ஜ.ரமஞ்சரி என்கிற
    விஞ்சான பத்திரிக்கையின் ஆசிரியர் வேறு!
    அதனால்தான்...
    பேரனைத் துணைக்கு
    அழைத்துக் கொண்டிருக்கிறார்!

    அன்றையக் காலக்கட்டத்தில்
    தி.ஜ.ர.வைச் சேர்த்து பலருக்கு...
    'பெரியார்' ஓர் மூட்டைப் பூச்சி!
    (இன்றைக்கு என் நண்பர்களுக்கு
    நான் அடையாளப்படுவது மாதிரி!)
    'பெரியாரின்' நடவடிக்கைகள் எல்லாம்
    மேல்வர்க்கத்தினருக்கு
    பொறுக்க முடியாத
    மூட்டைப் பூச்சி கடி..
    அவரை எப்படியேனும் சீண்டவேணும்
    கதையெழுதும் திறனும்(?)
    கற்பனை வளமும்(?) கொண்ட தி.ஜ.ர......
    'கடவுளும் கந்தசாமியும்' ரேஞ்சுக்கு
    எழுத விரும்பி
    இப்படியொரு கதையை
    எழுதித் தீர்திருக்கிறார்!

    *
    பின்குறிப்பு:
    ----------------

    இரவில்
    மனிதர்களின் தூக்கத்தைக் கெடுக்கும்
    கொசுக்கடியைப் பற்றி....
    பெரியார் அவர்களின் 'கேலியான'
    பேச்சு ஒன்று உண்டு.

    "இறைவன் என்று ஒருவன்
    இருப்பானேயானால்
    இப்படி கொசுவைக் கடிக்கவிட்டு
    மனிதத் தூக்கத்தை கெடுப்பானா?" என்று.

    இந்தப் பேச்சை...
    பெரியார் ஒரு உரையில் படித்திருக்கிறேன்.
    இந்தச் சம்பவம்
    இக்கதையில்
    வேறு தொனியில்
    எதிரொலித்து இருப்பதாகவே கருதுகிறேன்.

    இப்படிக்கு உங்கள்...
    சீர்காழி மூட்டைப்பூச்சி
    ***

    ReplyDelete
  2. சபாஷ் ! சரியான சவால்.

    ReplyDelete