Thursday, April 5, 2012

நரகத்தை நிரப்புவதே நம் பணி!

இணையத்தை நிரப்புவதே ஆபிதீன் பணி!

***
மகாகவி இக்பால் அவர்கள் எழுதிய 'இபுலீஸின் சபை' எனும் கவிதையில் தலைமை இபுலீஸ் (ஷைத்தான்) தன் சீடர்களுக்கு மொழிவதைப் பகிர்கிறேன். தமிழாக்கம் : தாழை மதியவன்.  ('காஷ்மீர் பெண்ணின் கவலைகள்' நூலிலிருந்து)

***

நரகத்தை நிரப்புவதே நம் பணி

எக்காளம்,  எக்காலம் ஊதப்படுமோ
அக்காலம் வரை - மக்களெல்லாம்
அடிமைப்பட்டே - கிடக்கட்டும்
ஆமைகளாய் நடக்கட்டும் -

முக்காலம் உணர வேண்டாம்
முன்னேறிச் செல்ல வேண்டாம்
முதுகெலும்பை மறக்கட்டும்
முடுக்குகளில் முடங்கியே இருக்கட்டும் -

உலக வாழ்வில்
ஒன்றும் இல்லையென ஒதுங்கட்டும்
ஒன்றுமே இல்லாத பிரச்சினைகளுக்கெல்லாம்
ஒளிந்து ஒளிந்து பதுங்கட்டும் -

அவ்வண்ணம் அவர்கள் அழுக்கைப் புனுகாக
அர்த்தமாக்கிக் கொள்ளும் போதுதான்
நமக்கு வெற்றிகள் கிட்டும்
நன்மைகள் பலவும் கொட்டும் -

அரைகுறை ஆசான்கள் ஆன்மீகத்தில் மூழ்கி
புரையேறி வேதங்களுக்கான விளக்கங்களை வில்லங்கமாகத்
திரித்துக்கூறும் போதுதான் வீரியம் நமக்குச்சேரும்
நினைத்த காரியம் நடக்கும் நாளும் -

ஒடுங்கிக் கிடப்பவர்கள் - எங்கே உத்வேகத்தோடு
விழித்து எழுந்து விடுவார்களோ என வினாடிக்கு வினாடி
உள்ளுக்குள் பயப்படுகிறேன் - தினம்
உடைந்தே சந்தேக வயப்படுகிறேன் -

உலக உண்மைகளை ஓர்மனப்பட்டு ஆய்வதுதான்
உயர்நிலை மார்க்கம் என மக்கள்
உணர்ந்து கொள்வார்களோ? என விசனப்படுகிறேன் ஒவ்வொரு முறையும்
உலகை உற்று உற்றுப்பார்த்து வேதனைப்படுகிறேன் -

அவர்கள் அறியாமையிலேயே
மூழ்கிக் கிடக்கட்டும்
கடமையேதும் செய்யாமல்
கவலையின்றிக் களிக்கட்டும் -

உலகவாழ்வின் ஒவ்வொரு பங்கையும்
உதறித் தள்ளிய அவர்கள்
தோல்விகளைத் தழுவட்டும் - தங்களைத்
தொலைத்துவிட்டு அழுவட்டும் -

கவிதைகளில் மூழ்கட்டும்
கற்பனையால் சூழட்டும்
கண்கள்மூடி துறவறத்தில் அமரட்டும்
கருத்தெல்லாம் கயமையே நிலவட்டும் -

ஊண் உறக்கமின்றி மயங்கி
உலகினையே மறக்கட்டும்
தெருவோர மடங்களெல்லாம்
திக்ருசெய்து கிடக்கட்டும் -

கரத்திலுள்ள தஸ்பீஹ்
கணக்கின்றி புரளட்டும்
நூறு நூறு கிரகங்களும்
நூலினிலே உருளட்டும் -

சொன்னதெல்லாம் நடக்கட்டும்
சொர்க்கம் காலியாகவே இருக்கட்டும்.


***

நன்றி : தாழை மதியவன் (எஸ். எம். அலி)
நன்றி : ஷார்ஜா ஷைத்தான்!

1 comment:

  1. அப்பன்னா அப்பயிலேர்ந்தே அது காலியாத்தான் கிடக்குதா? ஹய்யோ ஹய்யோ

    ReplyDelete