Tuesday, February 7, 2012

வறட்டுச் சொறி - பஷீரின் கடிதம்

சொறிந்துகொள்ள சுகமான பதிவு...!  கண் அறுவைசிகிச்சைக்காக காத்திருக்கும் ஹனிபாக்கா, 'பள்ளிப்பருவத்தில் பார்த்த பாவங்களெல்லாம் பழுத்த பருவத்தில் பதம் பார்க்கிறது' என்கிறார். இந்த நிலையிலும்  - ஆபிதீன் பக்கங்களூக்காக - பஷீரின் கடிதத்தை கஷ்டப்பட்டு அனுப்பியிருக்கிறார் - தம்பி ஸபீரின் உதவியுடன்.  எனக்கும்தான் வலது புருவத்தில் பெரிய கட்டி வந்து வலி தாங்க இயலவில்லை. (ஏற்கனவே மொகம் ’கட்டி’ லட்சணம்!). ’இதுக்குத்தான் ரொம்ப உத்துப் பார்க்கக்கூடாதுங்குறது...’ என்கிறாள் என் அஸ்மா. அதாவது, கம்ப்யூட்டரை. எல்லா வேதனைகளையும் பொறுத்துக்கொண்டு  நண்பர்களுக்காக அவ்வப்போது பதிவிடுகிறேன். ஆமாம், இதெல்லாம் எதற்கு? மேலும் சில பாவங்களைப் பார்க்கத்தான்! -  ஆபிதீன்


***

அருமை ஆபிதீன்,

வைக்கம் முகம்மது பஷீரின் ’உண்மையும் பொய்யும்’ நூலின் ஒவ்வொரு பக்கத்திலும் ஏன், ஒவ்வொரு எழுத்திலும் பஷீரின் விஸ்வரூபம் நம்மை ஆட்கொள்ளும் விந்தை அலாதியானது. பஷீருடைய கதைகளைப் போலவே அவரின் கடிதங்களையும் வேகத்துடனும் சுவாரசியங்குன்றாமலும்  நம்மால் வாசிக்க முடிகிறது. எட்டுத் தினங்களில் மூன்று தடவைகள் இந்நூலைப் படித்து சாதனை படைத்திருக்கிறேன்.

பேப்பூர் சுல்தான், சூபி ஹஸரத் தமது கடிதங்களின் மூலமாக துயரம் சூழ்ந்த காரிருளில் நம்மைத் தள்ளிவிட்டு கைகொட்டிச் சிரிக்கிறார். அவரின் சிரிப்பில் நமது துயரம் கானல் நீராகிறது. நாமும் களிகொண்டாடுகிறோம். நாளை மறுமையில் அவரைக் காணும் பாக்கியத்தை ஏக இறைவன் எழுத்தாளராகக் கோலம் போடும் நம்மனைவருக்கும் நசீபாக்குவானாக.

அன்புடன் ஹனீபா காக்கா.


***



வறட்டுச் சொறி

எரணாகுளம்
09.08.1955
பத்திரிகை அதிபர் கே. பாலகிருஷ்ணன்
கௌமுதி
திருவனந்தபுரம்

மரியாதைக்குரிய தலைவரே!

ஒரு நிம்மதியுமில்லை. காய்ச்சல், ஜலதோஷம், பெருண்ண தாமஸ், எம்.பி. கிருஷ்ணபிள்ளை, தங்களுடைய கடிதங்கள், பால்யகால சகி, ராமு காரியாத், ஆண்டவா, இனி என்னவெல்லாம் வியாதிகள் ஒரு மனிதனுக்கு வரவேண்டும். போதாக்குறைக்கு அந்த வறட்டுச்சொறியும் வந்து விடுமோ என்ற பயமும் வந்துவிடுமோ என்ற பயம் வேறு! என்னைத் தொந்தரவு செய்வதற்கு தங்களது நிரந்தர ஊழியரான பெருண்ண தாமஸ் மட்டும் போதாது. எதற்குத் தாங்கள் ராமு காரியாத்தையும் எம்.பி. கிருஷ்ணபிள்ளையையும் அனுப்பி வைத்தீர்கள்?

எனக்கு இப்போதும் புக் ஸ்டால் பக்கம் போகவே முடியவில்லை. அங்கே எம்.பி கிருஷ்ணபிள்ளை இருக்கிறார். "எழுதியனுப்பி விட்டீர்களா?" நான் தங்கியிருக்கும் இடத்தில் நிரந்தரமாகவே ராமு காரியாத் தங்கியிருக்கிறார். "எழுதி அனுப்பி விட்டீர்களா?" எதை எழுதி அனுப்பச் சொல்கிறார்களோ? கதை, கவிதை போன்றவற்றின் காலம் முடிந்து விட்டதாக ஞானிகள் ஸ்தாபிதம் செய்து சொல்லி விட்டார்கள். உண்மையின் காலம் முடிவடைந்து போய்விட்டதாக ஏதாவது ஞானிகள் சொல்லியிருக்கிறார்களா? சொல்லவில்லையென்றால், இங்கே இரண்டு உண்மைகளையும் போட்டு உடைத்து விடலாம் என்று நினைக்கிறேன். அப்படியாக இருக்கும் வேளையில், எனக்கு உடல் பூராவும் பயங்கரமாக ஊரல் எடுப்பது போல் தோன்றும். கைவிரல்களின் இடையில்தான் அதிகமான உணர்வு. ஆனால் சொறிந்து கொள்ளத் தேவைப்படாது. உண்மையில் அரிப்பே கிடையாது. வெறும் நமைச்சல், சும்மா தோன்றுகிறது.

இது எப்படி வந்தது என்பதையும் சொல்லிவிடுகிறேன். நூற்றாண்டு காலப் பழக்கம் உள்ளதும், பயங்கர அரிப்பெடுப்பதுமான வறட்டுச்சொறியுடன் கொல்லத்திலிருந்து ஒரு கம்யூனிஸ்ட் நாயர் என்னைத் தேடி வந்தார். தங்களைப் போல், ஒரு விசேஷ பதிப்பு வெளியிடுபவர். தங்களைப் போன்ற ஒரு பத்திரிகை அதிபர். பத்திரிகையின் பெயர் ஜனயுகம் என்று நினைக்கிறேன். அவரது பெயர், வைக்கம் சந்திரசேகரன் நாயர். உடல் முழுவதையும் ரசனையுடன் சொறிந்து கொண்டே வந்தேறினார். நான் அப்போது பஷீர் புக்ஸ்டாலில் உட்கார்ந்திருந்தேன். கொஞ்சம் புத்தகங்களெல்லாம் விற்ற பணத்துடன் அப்படியே ஸ்டைலாக உட்கார்ந்திருந்தேன். உலகத்தில் யாரோடும் எந்தப் பிணக்கமும் இல்லை. ஆனால், மேற்சொன்ன சந்திரசேகரன் நாயரைக் கண்டதும் லேசான பதற்றம் என்னைத் தொற்றிக் கொண்டது.

ஒரு, இரண்டோ மூன்று கடிதங்களை மேற்படி வறட்டுச் சொறியன் எனக்கு அனுப்பி வைத்ததாக நினைவு வந்தது. கதை சம்பந்தமாகத்தான். நான் பதிலெதுவும் அனுப்பவில்லை. இப்போது ஐயா நேரடியாகவே வந்து விட்டார். நான் எதுவும் பேசாமல் அப்படியே அமர்ந்திருந்தேன். வ.சொ.ச. நாயர் (வறட்டுச் சொறியன் சந்திரசேகரன் நாயர்) முதலில் சிரித்தார். பிறகொரு காகிதத்தை விரித்து புக் ஸ்டாலின் நட்டநடுவில் திண்ணையில் அமர்ந்து பொதியை அவிழ்த்து, வெற்றிலை போடுவதற்கான ஆயத்தத்தில் இறங்கினார். நான் சொன்னேன். "கண்ட கண்ட நாயர்கள் வந்திருந்து வெற்றிலை போடுவதற்கான மடம் ஒன்றுமில்லை இது".

"நாயர் ஒரு புத்தகம் வாங்க நினைத்திருக்கிறார்"

நான் சொன்னேன். "இருக்கட்டும். ஆனாலும் இங்கே உட்காரக் கூடாது".

வறட்டுச் சொரியன் சந்திரசேகரன் நாயர் அசைந்து கொடுக்கவில்லை. அப்போது எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. புக் ஸ்டாலின் பக்கத்தில் நான்கைந்து தொலைபேசிகள் இருக்கின்றன. நான் தங்கியிருக்கும் இடத்திலும் தொலைபேசி வசதி இருக்கிறது. இதெல்லாம் இருப்பதால், வாழ்க்கை கொஞ்சம் அசௌகரியமாகத்தான் இருந்தது. வறட்டுச் சொரியன் சந்திரசேகரன் நாயரிடம் சொன்னேன்;

"இப்பொ வந்துர்ரேன்"

தொலைபேசி அழைப்பு பிரபாத் புக் ஸ்டாலிலிருந்து. கம்யூனிஸ்ட் தலைமையகம். அங்கேயுள்ள உன்னிராஜாவாக இருக்குமென்று தோன்றுகின்றது. அவர் சொன்னார் : "வைக்கம் சந்திரசேகரன் நாயர் எனும் பெயரில் கொல்லத்திலிருந்து ஒரு வறட்டுச் சொறியன் பஷீரைத் தொந்தரவு செய்வதற்காக அங்கே புறப்பட்டிருக்கிறார். கதை எழுதிக் கேட்பதற்காக இருக்குமென்று நினைக்கிறேன். வேண்டுமென்றால் தலைமறைவாகி விடுங்கள்"

நான் சொன்னேன் : "அந்த வறட்டுச் சொறியன் நாயர், ஒரு பேப்பரை விரித்து புக் ஸ்டால் திண்ணையில் குந்தியிருக்கிறார். என்ன செய்யலாம்? அடித்துக் கொன்று வண்டியில் போட்டு ஆற்றில் கொண்டு தள்ளிவிடவா?"

"எங்களுக்கு அதில் எந்த ஆட்சேபனையும் இல்லை. இங்கே ஒரு கயிற்றுப் பாயில் உட்கார்ந்து உடல் முழுவதும் வறட்டுச் சொறியுடன் பல்லிளித்துக் கொண்டிருப்பார். நாங்கள் யாருமே அவரைத் தொடுவதில்லை"

"தொடாமல் எப்படிக் கொல்வது?"

நான் திரும்பி வரும் போது, தோழர் வறட்டுச் சொறியன் சந்திரசேகரன் நாயர் ஒரு சேரை எங்கிருந்தோ தேடியெடுத்துக் கொண்டு வந்து, மேஜையின் பக்கத்தில் போட்டு அமர்ந்திருந்தார். கடையின் முன்புறம் எங்கும் வெற்றிலையைத் துப்பிச் சிவப்பாக்கியிருந்தார்.

"ஒரு யோக்கியன் இப்போது இங்கே வந்திருப்பதாக ஆட்கள் புரிந்து கொள்வார்கள்" வறட்டுச் சொறியன் சந்திரசேகரன் நாயர் சொல்கிறார்.

நான் சொன்னேன்:  "எனக்கு உடல்நிலை மோசமாக இருக்கிறது. கே.பாலகிருஷ்ணன், பெருண்ண தாமஸ், எம்.பி. கிருஷ்ணபிள்ளை, ராமு காரியாத், பால்ய காலத் தோழியின் ஸ்கிரீன் பிளே, இப்படியாகப் பல நோய்கள்" பிறகு எல்லாவற்றையும் விளக்கமாகச் சொன்னேன்.
வறட்டுச் சொறியன் நாயர், "நான் தொந்தரவு செய்ய மாட்டேன். உடனடியாக இடத்தைக் காலி செய்து விடுகிறேன். அந்த இரண்டு பக்கங்களுக்கான இடத்தை மட்டும் எழுதித் தந்து விடுங்கள். போதும்"

நான், "நேரமில்லை"

"ஏதாவது எழுதுங்கள் பஷீர்" என்றபடி வறட்டுச் சொறியன் நாயர் என்னைத் தொட்டு விட்டார்.

தொட்டார் என்று கூடச் சொல்லிவிட முடியாது. தாடையைப் பிடித்துத் தடவி விட்டார். பல தடவைகள். வறட்டுச் சொறியன் நாயர் என்னை விடுவதாக இல்லை. சாப்பாடும் தூக்கமும் எல்லாமே என்னிடந்தான். கூடவே சம்பாஷனை வேறு. இதனிடையே வேறு ஒரு ரகசியத்தையும் சொன்னார். அவரும் மனைவியுமாக பாலனின் வீட்டுக்கு வரப் போகிறார்களாம். மரியாதைக்குரிய விருந்தினர்களாகத்தான். வறட்டுச் சொறியன் நாயரின் மனைவிக்கும் வறட்டுச் சொறி இருக்கிறது. இதை மேற்படியானே என்னிடம் சொன்னார். எதையோ ஒன்றை எழுதிக் கொடுத்தேன். ஒரு நல்ல பாய், ஒரு தலையணை, ஒரு பெட்ஷீட், இவ்வளவையும் பிறகு நான் எரித்து விட்டேன். கார்பாலிக் சோப் போட்டு நான் பல தடவை குளித்தேன். ஒன்றிருந்து ஊசியும் போட்டுக் கொண்டேன். இருந்த  பிறகும் எனக்கு இப்போதும் சொறியத் தோன்றுகிறது. அவரும் அவரது மனைவியும் உங்களது வீட்டுக்கு மரியாதைக்குரிய விருந்தினர்களாக வந்தால், என்னைப் பற்றிய பொய்கள் சொல்வார்கள். மேற்படியானும் நானும் கடையில் இருக்கும் போது ஒரு சம்பவம் நடந்தது. அன்றைய தபால்கள் வந்த போது, அதில் கௌமுதியும் இருந்தது. நான் அதன் கவரைப் பிரித்து, கசங்கியிருந்த பகுதிகளைச் சரிசெய்து மேஜையின் மீது வைத்தேன். உடனே ஒரு ஆள் வந்து மூன்றணா தந்து கௌமுதியை வாங்கிக் கொண்டு போனார். இது ஒவ்வொரு வாரமும் நடப்பதுதான். இதுதான் உண்மை. நான் கௌமுதியை வாசிக்க வேண்டுமென்றால், எனக்கு ஆறு பிரதிகளையாவது இலவசமாக அனுப்பித் தர வேண்டும்.

நான் இதையெல்லாம் எழுதுவதற்கு மற்றொரு காரணமும் இருக்கிறது. வறட்டுச் சொறியன் நாயருக்கு நான் எழுதிக் கொடுத்தது ஒரு கடிதந்தான். அதில் நான் தங்களை உடல் ரீதியாகத் தொந்தரவு செய்யப் போவதாக எழுதியிருந்தேன். திருவனந்தபுரத்துக்கு வந்தல்ல. நீங்கள் எரணாகுளத்துக்கு வரும்போது, உங்களின் கையைப் பற்றி நெரிப்பேன். அவ்வளவுதான். இது சும்மா ஒன்றுமல்ல. ஐக்கிய கேரளம் சம்பந்தமான கை நெரிப்பு. நியாயமான காரணத்துடன்.

ஐக்கிய கேரளத்திற்கு ஒரு தலைநகர் வேண்டுமல்லவா. அது திருவனந்தபுரமாக இருக்கட்டும் என்று தாங்கள் கௌமுதியில் எழுதியிருந்ததாக நம்பகத்தகுந்த ஒருவர் சொன்னார். இதைக் கேட்ட போது, லேசான கோபமும் வந்தது. பஷீர் புக் ஸ்டால் எரணாகுளத்தில் இருப்பதால், கேரளத்தின் தலைநகர் எரணாகுளத்தில்தான் அமைய வேண்டும். இதுதான் சரியான நியாயமும் கூட. இத்துடன் மற்றும் நூறு வித சரியான நியாயங்கள் என்னிடமிருப்பதாகவும் சொல்லியிருக்கிறேன். ஆனால், அதிலொரு நான்கை இப்போது மறந்து விட்டேன். அந்த நான்கையும் நினைவுபடுத்த முயற்சி செய்து கொண்டிருக்கும் போது, வேறு சில பிரச்சினைகள் உருவாகின. திருவனந்தபுரத்திலிருந்து ஒரு மானிய மாது இங்கே வந்தார். பெண் நாயர். கே. சரஸ்வதி அம்மா. அவர் சினிமா பார்க்கச் சென்றார். மார்னிங் ஷோ. பொதுவாக எரணாகுளத்து வாசிகளான நாங்கள் மார்னிங் ஷோ பார்க்கப் போவது கிடையாது. அந்த நேரக் காட்சி, வந்தேறிகளுக்கானது. மேற்படி திருவனந்தபுரவாசியான மானிய மாது, அரங்கத்திற்குள் நுழைந்ததும் பெரிய கூக்குரல்கள் கேட்டிருக்கின்றன. அரங்கு முழுவதும் மாணவர்களும் மாணவிகளும் நிறைந்திருந்தார்கள். அவர்கள் அமைதி காக்கவில்லையா. உதவாக்கரைகள் போல் கூச்சலிட்டார்களா? எல்லாம் முடிந்து மானிய மாது புக் ஸ்டாலுக்கு வந்த பிறகு, பேச்சினூடே ஐக்கிய கேரளத்தின் தலைநகரமாகப் போகும் அழகான நகரம் எரணாகுளம்தான் என்று நான் குறிப்பிட்டேன். அவருக்குக் கோபம் வந்து விட்டது. "துக்கிரிகளின் தேசம் இந்த எரணாகுளம். திருவனந்தபுரத்தைப் போன்ற அழகும் பண்பாடுகளும் நிறைந்த ஒரு பெரிய நகரம் இருக்கும் போது, இந்த சப்பைத்தனமான நகரை ஏன் ஐக்கிய கேரளத்தின் தலைநகராக்க வேண்டும்?"

எரணாகுளம் துக்கிரிகளின் தேசம், சப்பைப்பட்டணம், திருவனந்தபுரத்திலிருந்து வந்த அந்த மானிய மாது மற்றொரு குற்றமும் கண்டுபிடித்தார். கொசுவும் தமிழர் குஷ்டரோகிகளும் இந்த இரண்டு கூட்டமும் எரணாகுளவாசிகள் அல்லவே. திருவனந்தபுரத்துக் காரர்கள், எரணாகுளத்துக் காரர்களைப் பற்றி இப்படி நூற்றுக்கணக்கான குற்றங்களைச் சொல்கிறார்கள். போகப்போக கள்ள நோட்டு அடிப்பவர்கள், எரணாகுளத்துக் காரர்கள்தான் என்றும் சொல்லிவிடுவார்கள். பெரியோர்களே, ஆகவே எங்களை விட்டு விடுங்கள். ஐக்கிய கேரளத் தலைநகரை எரணாகுளத்தில் அமைக்க வேண்டாம்.

எச்சரிக்கை, திருவனந்தபுரத்திலிருந்து இனி யார் வந்தாலும் உதைப்போம்... இந்த விஷயத்தில் கொஞ்சம் யோசித்து முடிவெடுக்க வேண்டிய தேவையும் இருக்கிறது. திருவனந்தபுரத்தில் தடியன்களும் பயில்வான்களும் நிறையப் பேர் இருப்பதாக அறிகிறோம். ஆகவே, திருவனந்தபுரத்துக்காரர்களை உதைப்போம் என்பதை எந்த நிபந்தனைகளும் இன்றி வாபஸ் பெறுகிறோம். என்னை விடப் பலவீனமானவராக அங்கே இருக்கும் ஒரேயொரு ஆள் பாலன் மட்டுந்தான். எனவே, பாலன் எரணாகுளத்துக்கு வரும் போது கையை நெரித்துக் குலுக்குவேன். அப்படியெல்லாம் செய்ய வேண்டாம் என்று பிகே. பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டிருக்கிறார். என்ன காரணத்துக்காக என்றா கேட்கிறீர்கள்? அவர் தங்களிடம் ஒரு விஷயம் சொல்ல என்னிடம் சொல்லியிருக்கிறார். கௌமுதி விசேஷ பதிப்பில் அவரது கட்டுரையுடன் வழக்கமாக ஒரு படத்தையும் வெளியிடுவீர்களல்லவா? அதை இந்தத் தடவை போடக்கூடாது. படத்தில் இருப்பதை விட அவர் அழகானவர். திருமணமாகாதவரும் கூட.... இது ஆழ்ந்து சிந்திக்கப்பட வேண்டிய விடயம் என்பதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். தங்களுக்கு நல்ல வரலாறு ஒன்றினை நான் எழுதியனுப்புகிறேன். விசேஷ பதிப்பிற்கு அல்ல. விசேஷ பதிப்பை வாசித்து நான், ஞானியாக வேண்டுமென்று நீங்கள் விரும்பினால், ஒரு ஆறு பிரதியையாவது இலவசமாக அனுப்பித் தாருங்கள். அந்தப் பழைய சந்திரிகாதான் இப்போதும் தங்களுடைய மனைவியென்று நம்புகிறேன். தாங்களும் பிள்ளைகளும் பிள்ளைகளின் தாயும் நலமுடன் வாழப் பிரார்த்திக்கிறேன்.

இப்படிக்கு
பஷீர்

பிற்குறிப்பு: மரியாதைக்குரிய கேசவனை நான் விசாரித்ததாக சொல்லவும். அவருடைய வாழ்க்கைப் போராட்டம் சுறுசுறுப்பாக செல்கிறது. பஷீர் புக் ஸ்டாலில் அவர் பெரிய இலக்கியவாதியாக இடம்பிடித்திருக்கிறார். தங்களது "நிறமில்லாத வானவில்" சை! அது போன்ற கச்சடா புத்தகங்களை மூலையில் குவித்துப் போட்டிருக்கிறேன். சாதாரணமாக பஷீர் புக் ஸ்டாலில் ஒரு ஆளை இலக்கியவாதியாக அங்கீகரிக்க வேண்டுமென்றால், அவருடைய பெயரில் மூன்று புத்தகங்களாவது வெளி வந்திருக்க வேண்டும். தாங்கள் வேகமாக இன்னும் இரண்டு புத்தகங்களை உருவாக்கி விடுங்கள். புத்தக அலுமாரிகளில் ஒவ்வொன்றுக்கும் ஒரு இடம் தருகிறேன். நூலாசிரியர்களை இங்கே அப்படித்தான் வரிசையாக அடுக்கி வைத்திருக்கிறேன். இரண்டு மூன்று, நான்கு வரிசைகளைக் கைப்பற்றியிருப்பவர்கள் எஸ்.கே. பொட்டேகாட், தகழி, பொன்குண்ணம்வாக்கி, கேசவதேவ், காரூர் நீலகண்ட பிள்ளை போன்றவர்கள்தான். நமது டிசி கிழக்கமூரி, வெட்டூர் ராமநாயர் ஆகியவர்கள் ஒரு அகில இந்தியச் சுற்றுலாவுக்குச் சென்றிருக்கிறார்கள். வெட்டூர்சிங், டிசி சிங் என இவர்கள் பெயர்களை மாற்றிவிட்டதாக வர்க்கி சொன்னார். இங்கே எரணாகுளத்துக் காரர்களின் பெரும்பாலானவர்களும் ரஷ்யா, ஹெல்சிங்கி, சீனா போன்ற நாடுகளுக்குப் போயிருக்கிறார்கள். வேறு விசேஷங்கள் எதுவும் இல்லை. மற்றவை, தாங்கள் எரணாகுளத்துக்கு வரும்போது நேரில்.

இப்படிக்கு
வைக்கம் முகம்மது பஷீர்.

***
நன்றி: காலச்சுவடு பதிப்பகம், குளச்சல் மு. யூசுப் , எஸ்.எல்,எம். ஹனிபா (( E-Mail : slmhanifa22@gmail.com )
***
Image Courtesy : http://en.wikipedia.org/wiki/File:Basheer.jpg
***
போனஸ் சொறி :
போர் முடியவேண்டுமென்றால்...! - வைக்கம் முஹம்மது பஷீர்

1 comment:

  1. குறை சுட்டும்போது
    நக்கலிலும் நளினம் நடனமாடுகிறது
    உண்மையால் குட்டும்போது
    எகத்தாளம் பொங்கி வழிகிறது -
    வைக்கம் எழுத்தில்.

    ஹனிபாக்கா இன்னும்
    தந்துகொண்டே இருக்கணும்
    இதுபோலத் தேர்ந்தெடுத்த
    முத்துக்களை

    வியக்க வைக்கிறது
    காக்காவின் ரசனை நுட்பம்

    ReplyDelete